Sunday, October 17, 2010

உள்ளே வரலாமா


விவாகாரத்துப் பெறவுள்ள தன் தாயுடன் வாழ்ந்து வருகிறான் 12 வயது சிறுவன் ஓவன். நண்பர்கள் யாருமற்ற ஓவன், மாலைநேரங்களில் தனியாக தன் பொழுதை பனிபெய்யும் கணங்களில் கரைக்கிறான். பாடசாலையில் அவனை துன்புறுத்தும் முரட்டு மாணவர்களை எதிர்த்து ஏதும் செய்ய அவனிடம் தைரியம் என்பது இல்லை. இந்நிலையில் அவன் பக்கத்து வீட்டிற்கு ஆபி எனும் சிறுமி குடிவந்து சேர்கிறாள். முதலில் ஓவனுடன் நண்பியாக மறுத்த சிறுமி ஆபி, பின் அவனுடன் நட்பாக ஆரம்பிக்கிறாள். ஆனால் ஓவன் வாழும் நகரத்தில் மர்மமான முறையில் திடீரென மனிதர்கள் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள்….

நட்பு குறித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துவிடுவதுண்டு. அதிலும் தனிமையில் வாடும் சிறுவன் ஒருவன் கொள்ளும் நட்பு என்பது நிச்யமாக உள்ளத்தை தொட்டுவிடும். இங்கு சிறுவன் ஓவன் சிறுமி ஆபியுடன் கொள்ளும் நட்பு படம் நெடுகிலும் மனதை நெகிழ வைக்கிறது. சிறுமி ஆபி ஒரு ரத்தக் காட்டேரியாக இருந்தாலும் கூட.

சுவீடன் நாட்டுத்திரைப்படமான Morse என்பதன் ஆங்கில ரீமேக்தான் இயக்குனர் Matt Reeves இயக்கியிருக்கும் Let Me In. நீயு மெக்சிக்கொவிலுள் லாஸ் பலாமோஸின் பனிபெய்யும் புறநகர்பகுதிகளிற்கு திரைப்படம் பார்வையாளனை அழைத்து செல்கிறது. அங்கு தீவிர மதபக்தி நிறைந்த ஒரு தாயுடன் தனிமை உணர்வுடன் வாழும் சிறுவன் ஓவன் அறிமுகமாகிறான். அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையை மிகவும் சிறப்பாக திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர். அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரையாடுபவனாகவும், பள்ளியில் சக மாணவர்களிடம் அடிவாங்குபவனாகவும் ஓவன் வலம் வருகிறான்.

LET ME IN அதேபோல் ஒவனிற்கும் ஆபிக்கும் உருவாகும் நட்பையும் அற்புதமாக இயக்குனர் திரைப்படுத்தியிருக்கிறார். ரத்தக் காட்டேரிக்கு வயதாவதில்லை. தான் ஒரு ரத்தக் காட்டேரி என்பதை ஓவனிற்கு கூற விரும்பாத சிறுமி ஆபி, அவனை விலகி செல்லவே விரும்புகிறாள். ஆனால் அவன் தனிமையும் அவள் காலகாலமாக வாழ்ந்திருக்கும் தனிமைக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. அவர்களிற்கிடையில் மெல்ல மெல்ல நட்பு முளைவிட ஆரம்பிக்கிறது ரூபிக்ஸ் க்யூப்பில் ஆரம்பமாகும் நட்பு படிப்படியாக ஊர் சுற்றல், ரோமியோ யூலியட் நாடக வாசிப்பு என நகர்ந்து வீட்டு சுவர்களின் வழியாக மோர்ஸ் சங்கேத பாஷையில் உரையாடுவது வரை வளர்வது அவர்கள் வீட்டை சுற்றி வீழ்ந்து கொண்டிருக்கின்ற பனியைவிட மென்மையாக இருக்கிறது.

ஒரு காட்டேரிப்படத்திற்குரிய திகிலும், பயங்கரமும், ரத்தமும் திரைப்படத்தில் இருந்தாலும் கூட ஒவனிற்கும் ஆபிற்குமிடையில் உருவாகும் நட்பே படத்தை ரசிகனுடன் கட்டிப் போடுகிறது. இந்த விந்தையான நட்பு அந்த இரு சிறுவர்களையும் ரத்தத்தை தாண்டி பிணைத்துவிடுகிறது. ஓவனாக வரும் Kodi Smit McPhee யும் ஆபியாக வரும் Chloe Mortez ம் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள். படத்தை விறுவிறுப்பாகவும் நெகிழ்வுடனும் சலிப்பின்றி நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் மாட் ரீவ்ஸ். சுவீடன் திரைப்படமான Morseஐ நான் பார்க்கவில்லை எனிலும் இத்திரைப்படம் என் மனதை திருப்தி செய்தது.

பொலிஸ் விசாரணையின் நெருக்கம், இனியும் ஓவனிற்கருகில் வாழ முடியாத நிலை. சிறுமி ஆபி என்ன செய்தாள்? சிறுவன் ஓவன் தனித்து விடப்பட்டானா? மனதை நெகிழவைக்கும் முடிவுடன் நிறைவடையும் இத்திரைப்படம் நட்பு என்பது நல்லவர்களையும், நல்லவற்றையும் மட்டும் சார்ந்தது அல்ல அது உறவையும் அன்பையும், தீமையையும் தாண்டி நித்தியத்தின் சாத்தியங்கள் வரை நிலைபெறச் செய்வது என்பதை அழகாகக் கூறுகிறது. காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. [***]

ட்ரெயிலர்

22 comments:

 1. //அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரையாடுபவனாகவும்// கவிதனம் அதிகம் இருக்க வாய்ப்புண்டு .//அழகான கவிதை //..தேடிபிடித்து விரைவில் பார்த்துவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி. ஆங்கிலத்திலேயே இப்படியென்றால் சுவிடனில் இன்னும் touchable -ஆக எடுத்துருப்பார்களோ நண்பரே.

  ReplyDelete
 2. இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொழியில் பேசுவதைத் தான் morse என்று வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  இதயத்தில் நுழையலாமா எனக் கேட்கும் இந்த தலைப்பும் அழகே!

  ReplyDelete
 3. அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

  http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 4. ணா..
  நா உண்மைய சொல்லிறேன்..உங்க எல்லா பதிவுகளையும் நான் படிக்கும் போது உங்க தமிழ் நடையை மீறி அதிலுள்ள விஷயங்களில் கவனம் செலுத்த சிரமாகயிருக்கு.வலையுலகில் நான் படித்த வரை இருக்கும் மிகச்சிறந்த தமிழ் நடைகளில் உங்களிதும் ஒன்று.

  நன்றி...உங்களின் தமிழ் பிரயோகத்திற்கு.

  ReplyDelete
 5. //இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொழியில் பேசுவதைத் தான் morse என்று வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்//

  எப்படி ஒரு குரூப்பா உக்கார்ந்து யோசிப்பீங்களோ..

  ReplyDelete
 6. உள்ளே வரலாமா மனதின் உள்ளே வந்துவிட்டது!

  ReplyDelete
 7. நன்றி..நண்பரே..அழகுதமிழில் சினிமா பற்றிய உங்கள் பதிவு என்றுமே கோவை அன்னபூர்ணா காபிதான்[30 வருடமாக ஒரே டேஸ்ட்]

  ReplyDelete
 8. ரத்தக் காட்டேறி மர்மம் ?? :-)

  ReplyDelete
 9. //30 வருடமாக ஒரே டேஸ்ட்//

  காதலர் பதிவு எழுத வந்து 30 வருடங்கள் ஆனது குறித்து மகிழ்ச்சி :-) .. இன்னும் 60 வருடங்கள் எம்மை அவர் மகிழ்விக்க வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 10. நண்பர் வேல்கண்ணன், சுவீடிய திரைப்படம் இதனைவிட சிறப்பாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, என்ன நடந்தது :) கவிதையாய் பொழிகிறீர்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. இலுமினாட்டி பிறவிக் கவிஞராக்கும் ஆனால் ரூம் போட்டால் அவர் நடாத்தும் அதிரடிகள் ஆண்டவனிற்கே வெளிச்சம் :)

  நண்பர் எஸ்.கே, மிக்க நன்றி.

  நண்பர் உலக சினிமா ரசிகரின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், நிச்சயமாக என் தொல்லை தொடரும் :) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 11. // காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. //

  நீங்கள் சொல்லும்போது இன்னமும் கவித்துவமாக தெரிகிறது காதலரே :)
  .

  ReplyDelete
 12. நண்பர் ஈரோடு தங்கதுரை அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

  நண்பர் சிபி, நன்றி.

  ReplyDelete
 13. //என்ன நடந்தது :) கவிதையாய் பொழிகிறீர்கள்.//

  ஹிஹி,இருக்கிற இடம் சத்தியமா காரணம் இல்ல. ;)
  எழவு,ரெண்டு இடத்துல மட்டும் தான் இப்படி உளறித் தள்றேன்.ஒண்ணு,உங்க ப்ளாக் இன்னொன்னு என் ப்ளாக். :)

  //இலுமினாட்டி பிறவிக் கவிஞராக்கும் ஆனால் ரூம் போட்டால் அவர் நடாத்தும் அதிரடிகள் ஆண்டவனிற்கே வெளிச்சம் :)//

  முன்னது பொய் என்றும்,இரண்டாவது மகாப் பெரிய பொய் என்றும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

  ReplyDelete
 14. நண்பர் இலுமினாட்டி, என்ன இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது. அதை இந்தப் புவி தாங்காது :)

  ReplyDelete
 15. புவின்னா யாருங்க? ;)

  ReplyDelete
 16. நல்லதொரு கவித்துவமான பகிர்வு :)

  ReplyDelete
 17. நண்பரே இலுமினாட்டி, புவியைத் தெரியாதா!! பெரிசா இருக்குமே :))

  நண்பர் மரா, உயிருடன் இருக்கிறீர்களா!! :)

  ReplyDelete
 18. மனிதனிற்கு அடிபணியாத,யார் கையிலும் சிக்காத,பரந்து விரிந்த புவியை பற்றி தானே சொல்கிறீர்கள்? ;)

  ReplyDelete
 19. ஹிஹி,ஒன்லி சிங்கள் மீனிங்.. ;)

  ReplyDelete
 20. நண்பர் இலுமினாட்டி, உம் கையில் இன்னமும் சிக்கவில்லை என்று சொல்லும் :)

  ReplyDelete
 21. கைக்கு அடங்காததே புவி என்று சொல்லிவிட்டேனே? :)
  என்னதான் தன் ஆளுமையின் கீழ் அடக்க நினைத்தாலும்,புவியை முழுதாக கைகொள்ள முடிந்தவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு சொல்கிறது. (நெப்போலியன்,சீசர்,செங்கிஸ் கான்...இப்படி. ;) )

  ReplyDelete