Friday, October 22, 2010

ரேப் ட்ராகன் - 24


1008 நைட்ஸ்

- பின்பு என்ன நடந்தது? சிந்துபாத்திடம் இருந்து வந்த கேள்வி உவர்ப்பு பூசிய கடல் காற்றோடு வந்து புரட்சிக்காரன் ரஃபிக்கை மெதுவாக தீண்டியது. கப்பலின் மேற்தளத்தில் கயிற்றுச் சுருள்கள் மத்தியில் அமர்ந்திருந்த ரஃபிக்கின் கண்கள் முடிவற்று பரந்திருந்த கடலை நோக்கிய வண்ணமிருந்தன.

கடல் வழமைக்கு மாறாக அன்று அமைதியுடன் இருந்தது. ரஃபிக்கின் மனம், அமைதியை கடலில் கரைத்து விட்டிருந்தது. அந்தி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையின் சூரியன், அடிக்கும் செவ்வண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தான். காற்றின் இசையும், அலைகளின் சங்கீதமும் அந்தக் கணத்திற்கு மேலும் ரம்யம் சேர்த்தன.

- புரட்சிக்காரா, உன்னிடத்தில் நானிருந்தால் சிந்துபாத்திடம் கதைகள் கூறுவதில் எச்சரிக்கையாக இருப்பேன்… தன் மொட்டைத் தலையை தடவியபடியே கூறினான் அவர்களை நெருங்கிய சீனன்.

- சீனா, என்ன இது! ஏன் இப்படிக் கூறுகிறாய்! நான் என்ன தவறு செய்தேன்.. சிந்துபாத் சற்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான்.

- இப்படியாக நீ கேட்ட கதைகளைத்தான் சிந்துபாத்தின் சாகஸங்கள் என்ற வகையில் 1008 நைட்ஸ் தொகுப்பிற்கு நீ விற்றுவிடவில்லையா, சாகசங்களை செய்தது வேறொருவர் ஆனால் காலத்திற்கும் நிலைத்திருக்கும் பெயரைப் பெறுபவர் வேறொருவர். ஏன் காமா ஜோஸின், முன்னைநாள் கன்னிகளின் தீவு சாகஸத்தைக்கூட உன் அதிரடியென நீ அளந்து கட்டி விற்கவில்லையா.

- சீனா, புகழின் போதைக்கு அடிமையாகாத உயிர்கள் இங்கு உண்டா, பிறந்த குழந்தையிலிருந்து தள்ளு வண்டியில் மரணத்தின் இதழ் முத்தம் காத்து நிற்கும் முதியவர்வரை அதனை யாசிக்கிறார்களே. மேலும் இந்த வகையிலாவது இந்த சாகசங்கள் காலத்தில் என்றென்றைக்கும் பதியப்பட்ட கணங்களாகுமே. இந்த நல்லெண்ணத்தில்தான் என் பெயரில் ஏனையோர் சாகசங்களை கதையாக்கி விடுகிறேன்.

- சிந்துபாத், நீ கூறுவதுபோல் புகழ் உயிரின் பின்னும் நிலைத்திருப்பதுதான். ஆனால் பிறரை நாம் முட்டாள் ஆக்குகிறோம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆனால் நீ என்ன செய்ய முடியும், தாம் படிப்பதை எல்லாம் அசல் என்று நம்பிவிடும் அப்பாவி உலகம் இது…என்று கூறியவாறே மேற்தளத்தின் ஒரு பகுதியில் அந்திச் சூரியனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த பச்சைக் கண்ணனை நோக்கி நகர்ந்தான் சீனன்.

- காமா… தன் அழைப்பிற்கு பச்சைக் கண்ணனிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காததால் சீனன் தன் பேச்சைத் தொடர்ந்தான்… கைகூடமுடியாக் காதலை நினைத்து உருகுவதில் என்ன பயன். இனியாவது நீ அவளை உன் இதயத்தின் துடிப்புகளிலிருந்து உதறிவிட்டு உன் வாழ்கையில் இன்பத்தின் தழுவல்களை அனுமதிக்க வேண்டும். இந்தக் குறுகிய வாழ்க்கையில் நீ அனுபவிக்க தவறுவதையெல்லாம் சற்று எண்ணிபார் காமா. காலம் முழுவதையும் இப்படியே கரைக்கப் போகிறாயா. போகிற போக்கில் காதலிற்காக கோவில் ஒன்றை கட்டினாலும் கட்டுவாய் போலிருக்கிறதே.

- சீனா, நீ காதலித்திருக்கிறாயா?

- அந்தக் கருமாந்திரம் எனக்கெதற்கு. காமம் அறிந்தவன் காதலை தேடுவதில்லை, காதலை தேடுபவன் தன் காமத்தை உரைப்பதில்லை. மேலும் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் என் இதயத்தில் இடம் தருமளவிற்கு கஞ்சனல்லவே நான்.

- என்னால் அவளை மறக்க முடியவில்லையே சீனா. என் உறக்கத்தினுள் சூரியனாக விடிகிறாளே அவள். என் விழிப்பிலே உயிரென துடிக்கிறாளே அவள். அவள் கண்ணீரிற்கு காரணம் அவள் என்மேல் கொண்ட திவ்ய காதல் அல்லவா. ஒரு வேளை அவள் என்னுயிரை எடுத்துக் கொண்டாள் எனில்..ஹாஆஆஆ…. இப்போது மட்டும் அவள் என்னுயிரை எடுத்துக் கொள்ளவில்லையா என்ன… என் மனம் அதன் அமைதியின் கருவறையை கண்டு கொள்ளும்.

- காமா என்ன உளறுகிறாய், காதலிற்காக உயிரை விடுவது முட்டாள்தனம்.

- இருக்கலாம். காதலில் வீழ்ந்தபின் எவன் புத்திசாலியாக இருக்கமுடியும். அவளிற்காக நான் முட்டாளாகவே இருந்துவிடுகிறேன் என்று கூறிய பச்சைக் கண்ணன் தன் வலது கையைத் திறந்தான். அந்திச் சூரியனின் கதிர்களின் ஜாலத்தில் ஒரு சிறிய தீப்பிழம்பாய் அவன் உள்ளங்கைகளில் எரிந்தது அந்த சிவப்பு முத்து.

- புரட்சிக்காரனே உன் கதையைத் தொடர்ந்து கூறு, பின்பு என்ன நடந்தது என்பதை அறிந்தால்தான் இக்கதையை நான் யாரிடமாவது விற்கலாம் என்றான் சிந்துபாத்.

புரட்சிக்காரன் ரஃபிக்கின் எண்ணங்கள் சொகுசு விடுதியின் அறையை நோக்கி நீந்தின. இதோ இந்தக் கொள்ளையர் கப்பலில் அவன் வந்து சேர்ந்திருக்க காரணமான நிகழ்வுகள் ஆரம்பித்த அந்த அறையை அவ்வளவு இலகுவாக அவனால் மறந்துவிடமுடியுமா என்ன.

- என் கண்களை நான் மீண்டும் திறந்து மேலே பார்த்தபோது, இரு ராட்சத ஆமைகள் அந்த அறையை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. ஆனால் அவை ஆமைகள் அல்ல….

ஆமை ஒட்டு வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கவசங்கள் இரண்டும் அந்த அறையின் கூரையினை உடைத்த வண்ணம் பலத்த சப்தத்துடன் தரையில் மோதின. மோதிய வேகத்தில் பாதுகாப்புக் கவசத்தின் காற்றுப்பைகள் வெடித்து வீங்கின. கவசம் பாதியாக திறந்தது. முதலாவதாக திறந்து கொண்ட கவசத்திலிருந்து வெளியேறிய உருவம் எழுந்து நின்று, விழுந்த அதிர்வால் சற்று தள்ளாடியது. சிறிது கணத்தின்பின் தன்னிலைக்கு வந்த அந்த உருவம் தன் உடலில் வழிந்த பாதுகாப்பு நுரையை வழித்துவிட்டபடியே… ராஜமாந்தீரிகன் கருந்தேளின் கண்டுபிடிப்பு அற்புதம். புஷ்பக் விமானத்தை எவ்வளவு சிறப்பாக அவன் ஓட்டி வந்தான். ஆனால் இந்த இலுமினாட்டிக்குதான் வாய் ஓயாத பேச்சு. யாரையாவது வெட்ட வேண்டும் என்ற வெறி, விதேசி மோகம்..என்று புலம்ப ஆரம்பித்தது. அறையினுள் தன் பார்வையை ஓட விட்ட அந்த உருவம் அங்கிருந்த அழகுகளை கண்டதும் உடனே உஷாரானது. தன் சிரிப்பு வகைகளில் ஓடித் தேடி மன்மத சிரிப்பை கண்டுபிடித்தது. அதனை அறைக்குள் நுரைகளுடன் தூவியவாறே… அழகுச் சிலைகளே தங்கள் அந்தரங்க நாடகத்தில் அத்துமீறி கூரையை உடைத்து நுழைந்ததிற்காக என்னை மன்னியுங்கள் என்றவாறே அறையிலிருந்த பெண்களை நோக்கி நாடக பாணியில் சலாம் வைத்தது மொட்டைத் தலை சீனன் ஷங்லிங்கின் உருவம்.

12 comments:

  1. கலக்குறீங்க போங்க

    ReplyDelete
  2. சிந்துபாத் இங்கே... ஆனால் லைலா எங்கே? தினத்தந்தியிலா?

    ReplyDelete
  3. அழகிய ஃபிகர்களின் உருவத்தை விடுத்து, அசிங்கம் பிடித்த மண்டையோட்டை இங்கே வைத்ததற்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டு, ரேப் டிராகன் அத்தனை பகுதிகளையும் மீண்டும் ஒருமுறை படிப்பேன் என்று கூறிக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. சனி ரத்னம்October 22, 2010 at 2:12 PM

    அடடே.. இந்தக் கதையையே படமா எடுத்துரலாம் போல இருக்கே.. படத்தின் பெயர், ‘இருடா இருடா’..

    ReplyDelete
  5. சனி ரத்னம்October 22, 2010 at 2:13 PM

    ஆரம்பிங்க...

    ஷூட்டிங்கை..

    கூப்புடுங்க..

    குஹ்மானை..

    எடுக்கணும்..

    முடிக்கணும்..

    ஓடணும்..

    அஜக்..

    ReplyDelete
  6. //இந்த இலுமினாட்டிக்குதான் வாய் ஓயாத பேச்சு. யாரையாவது வெட்ட வேண்டும் என்ற வெறி, விதேசி மோகம்..//

    லிஸ்ட்ல இன்னும் நிறைய குறையுது. :)

    //அழகிய ஃபிகர்களின் உருவத்தை விடுத்து, அசிங்கம் பிடித்த மண்டையோட்டை இங்கே வைத்ததற்கு எனது கண்டனங்களை//

    அக்காங்! ;)

    ReplyDelete
  7. தல...
    வழக்கமான Feel இல்லையே...

    ReplyDelete
  8. அதாவது உணர்ச்சிமாயமான காட்சிகள்.....அதாவது வீரமான காட்சிகள்....பொறி பறக்கும் வசனங்கள்

    ReplyDelete
  9. அய்யா,

    உங்களின் கதை இரமணி சந்திரனின் நாவல் ஒன்றிலிருந்து திருடப்பட்டுள்ளது என்பதை அறிகிறேன். (தலைப்பு "காஞ்சனா கொஞ்சம் காப்பியை எடுத்து வாம்மா" சொந்தமாக எழுத தெரியாதவர் ஏன் அய்யா எழுதுகிறீர்கள்? எங்காவது லத்தீன் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டியதுதானே?
    - இப்படிக்கு பெயர், ஊர் தெரிவிக்க விரும்பாத அனானி.

    ReplyDelete
  10. நண்பர் எஸ். கே, நன்றி.

    நண்பர் கவிதைக் காதலன், நன்றி.

    நண்பர் கருந்தேள், நீங்கள் கேட்பது எந்த லைலாவை :) மண்டையோடு கடற்கொள்ளையர்களின் இலட்சினை அல்லவா எல்லாம் ஒரு குறீயீடுதான் :) கருத்துக்களிற்கு நன்றி.

    இயக்குனர் சனிரத்தனம் அவர்களே, நண்பர் ஜோஸ் எழுதியிருக்கும் கருத்தைப் படியுங்கள் அதன் பின் உங்கள் இஷ்டம்.

    நண்பர் இலுமினாட்டி, லிஸ்டே ஒரு தனிப்பதிவாக வரும் அளவிற்கு இருக்கிறதே :) கபாலர் கழகம் சார்பில் உங்களிற்கும், நண்பர் கருந்தேளிற்கும் என் கண்டனக் கனைகளை அனுப்பி வைக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, புரட்சிக்காரர் தன் எதிர்காலத்தை எண்ணி மருள்கிறார், பிரபல கடற்கொள்ளையர் காமாஜோஸ் அவர்கள் தன் காதலை எண்ணி உருகுகிறார்.... சோகம் உங்கள் நெஞ்சைத் தொடவில்லையா, கண்ணீர் உங்களை மூழ்கடிக்கவில்லையா.... ஓ என் கண்கள் அருவியாகிவிட்டன...புயலிற்கு முன்பாக வருமே ஒரு அமைதி அது இதுதானா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ஜோஸ், உண்மைதான் ஆனால் கதையின் தலைப்பு குலக்கொடியை மேய்ந்த கொடுந்தென்றல் என்பதாகும். லத்தீன் அமெரிக்காவிற்கு செல்ல விசா தரமறுத்துவிட்டார்கள் என்பதால் என் இலக்கிய தீயை இப்படியாக எரிய விட்டிருக்கிறேன். காமாஜோஸின் காதல் வரிகள் கல்லையும் கண்ணீர் சொரிய வைக்குமே, உங்கள் நெஞ்சம் கல்லைவிடக் கொடியதா என்ன :) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. பி.கு இந்த அத்தியாயம் ரமணிசந்திரன் அவர்களிற்கே சமர்ப்பணம்!

    ReplyDelete