Thursday, July 8, 2010

காணாமல்போன ஆலிஸ்


சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்தபோது தமக்குள் பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட டேனியும், விக்டரும், ஆட்கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்க ஆவலாக உள்ளனர். ஆட்கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணத்தில் தமது அடிமட்ட வாழ்க்கையை மாற்றிக் கொள்வது என்பது இரு முன்னாள் சிறைக்கைதிகளின் விருப்பமாகவுமிருக்கிறது.

இதற்காக டேனியும், விக்டரும், நகரின் பணக்காரர்களில் ஒருவனின் மகளான ஆலிஸை திட்டமிட்டு கடத்தி வருகிறார்கள். கடத்தி வந்த ஆலிஸை கட்டிலில் கட்டி, விலங்கிட்டு, நிர்வாணமான நிலையில் அவளை போட்டோக்கள் பிடித்து, அப்போட்டோக்களை ஆலிஸின் தந்தையிடம் அனுப்பி வைத்து, ஆலிஸினை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தை அவள் தந்தையிடம் கேட்கிறார்கள்.

இரு கடத்தல்காரர்களின் திட்டமும் அவர்கள் எதிர்பார்த்த திசையில் நகர ஆரம்பிக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட பெண்ணான ஆலிஸ் குறித்த ஒர் உண்மையை விக்டரிற்கு தெரியாது தன் மனதில் புதைத்து வைத்திருக்கிறான் டேனி. மேலும் தன்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் விக்டர் அறியாது பிறிதொரு திட்டத்தையும் செயற்படுத்த விரும்புகிறான் அவன்….

வெற்றிகரமான முறையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கடத்தல் திட்டம், அதில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் எதிர்பார்த்திராத வகையில் வேறு திருப்பங்களை நோக்கி நகர்வதை விறுவிறுப்பாக சொல்கிறது The Disappearance of Alice Creed எனும் பிரிட்டிஷ் திரைப்படம். சிறப்பாக கதையை எழுதி, திரையில் கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் J Blakeson .

திரைப்படத்தின் ஆரம்பத்தில், முதல் பத்து நிமிடங்களிற்கு ஒரு வார்த்தைகூட இல்லாது காட்சிகள் நகர்ந்து செல்கின்றன. அக்காட்சிகளே திரைப்படம் எவ்வகையானது என்பதற்கு கட்டியமாக அமைந்து விடுகின்றன. திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியானது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூடிய கதவுகளின் பின்னே நிகழ்வதாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டேனி, விக்டர், ஆலிஸ் ஆகிய மூவரைத் தவிர திரைப்படத்தில் வேறு பாத்திரங்கள் கிடையாது.

la-disparition-d-alice-creed-2010-17002-1269238574 எனவே இம்மூன்று பாத்திரங்களின் உறவுகள் மற்றும் உணர்வுகள் மீது திரைக்கதை வலிமையாக காலை ஊன்றிப் பயணிக்கிறது. நம்பிக்கையும், துரோகமும் இம்மூன்று பாத்திரங்களிற்கு இடையிலும் ஒரு நாணயத்தின் பூவாகவும், தலையாகவும் மாறி மாறி விழுந்து கொண்டேயிருக்க அதன் வழியே பரபரப்புடன் கதையை நகர்த்துகிறார் இயக்குனர். நம்பிக்கைக்கும், துரோகத்திற்குமிடையில் பாத்திரங்களின் முகங்களும் தொடர்ந்து மாறிக் கொண்டே செல்கின்றன.

கடத்தியவர்கள், கடத்தப்பட்டவள்; இவர்களிற்கிடையில் உள்ள ரகசியங்கள் பார்வையாளர்களை எட்டும்போது படத்தின் மிக முக்கிய பாத்திரமான துரோகம் தன் முகத்தை காட்ட ஆரம்பிக்கிறது. படுக்கை அறையில் அடைபட்டுக் கிடக்கும் ஆலிஸைப் போலவே துரோகமும் தன் வெற்றியைத் தேடி தந்திரமாக நகர்கிறது.

டேனியின் திட்டங்கள் தெரிய வரும்போது, டேனியின் திட்டங்கள் வெற்றி பெறுமா இல்லை திறமைசாலியான விக்டரிடம் அவன் மாட்டிக் கொள்வானா எனும் பதட்டம் உருவாகிறது. பின் டேனியின் உண்மை முகம் தெரியும்போது, டேனியின் திட்டத்தை விக்டர் கண்டு பிடிக்க வேண்டுமே என்ற ஆவல் எழுகிறது.

இந்த இரு கடத்தல்காரர்களிற்கிடையில் மாட்டிக் கொண்ட ஆலிஸ், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எவ்வழியிலாவது தான் தப்பிக்க வேண்டுமென்று துடிப்பவள். இரு கடத்தல்காரர்களின் பலவீனங்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் ஆலிஸ் தயங்குவதில்லை. இரு ஆண்களையும் வீழ்த்தி ஆலிஸ் வெற்றி காண்பாளா என்ற கேள்வியும் ஒரு தருணத்தில் எழுகிறது. இவ்வாறாக தருணத்திற்கு தருணம் ஒவ்வொரு பாத்திரத்தின் பக்கமாக பார்வையாளனை தற்காலிகமாக சாய்த்து விடுவதில், கதையை திரையில் கூறியவிதமானது வெற்றி காண்கிறது.

திரைப்படத்தில் ஆலிஸாக வேடமேற்றிருக்கும் நடிகை Gemma Arterton சிறப்பாக தன் வேடத்தை செய்திருக்கிறார். கடத்தல்காரர்களின் கண்களிற்கு முன்பாக தன் உடல் உபாதைகளை தீர்க்கும் வேளையில் அவர் வேதனையாலும், அவமானத்தாலும் குறுகுவது மனதை உருக்கிவிடுகிறது. கடத்தப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை தன்னால் இயன்றளவு திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெமா. இந்த இளம் நடிகையை இவ்வாறன ஒரு வேடத்தில் காண்பது ஆச்சர்யமே. அதேபோன்று அவர் பாத்திரமும் இறுதிவரை பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

la-disparition-d-alice-creed-2010-17002-1967197939 நம்பிக்கைத் துரோகி டேனியாக வேடமேற்றிருக்கும் நடிகர் Martin Compston தன் திட்டங்களை பச்சோந்திபோல் நகர்த்திச் செல்லும் நடிப்பில் கவர்கிறார். விக்டரிடம் தன் ரகசியங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் செய்யும் தகிடுதித்தங்கள் பல சமயங்களில் விறுவிறுப்பு, சில சமயங்களில் சிரிப்பு. இருப்பினும் அவர் நடிப்பில் முழுமையற்ற தன்மையொன்றை உணர முடிகிறது என்பதே உண்மை.

படத்தின் பார்வையாளனை, தான் தோன்றும் முதல் வினாடியே கவர்ந்து, அந்தக் கவர்ச்சியை படத்தின் இறுதித் தருணம் வரை வெற்றிகரமாக கடத்திச் செல்கிறது விக்டர் பாத்திரம். மிக இயல்பாக, ஒரு அவதானம் நிறைந்த, திறமையான கடத்தல்காரனை திரையில் நடித்துக் காட்டியிருக்கிறார் நடிகர் Eddie Marson. அவர் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளே பார்வையாளனை கதையின் பிடியை உணர வைத்து விடுகின்றன. அட்டகாசமாக செய்திருக்கிறார் எடி என்றால் அது மிகையில்லை.

படத்தில் குளோஸ் அப் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. பாத்திரங்களின் உணர்வுகளையும், கதையின் பதட்டத்தையும், அழுத்தத்தையும் பார்வையாளன் பக்கம் சிறப்பாக எடுத்துவர அக்காட்சி அமைப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில் வரும் பின்னனி இசையில் பியானோவும், வயலினும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டேனியும், விக்டரும் சம்பந்தப்பட்ட அக்காட்சியின் பின்னனி இசையானது மனதை தொட்டு, திரையில் ஓடும் காட்சிக்கு மேலும் உயிர்ப்பை வழங்குகிறது. உச்சக்கட்டக் காட்சிகளில் திருப்பத்திற்கு மேல் திருப்பம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, பார்வையாளனை இருக்கைகளில் கைகளைக் கசக்கிய நிலையில் கட்டிப் போடுகிறது. இருப்பினும் இறுதி முடிவை ஏற்கனவே பார்த்தது போல் மனதில் தோன்றும் எண்ணத்தை விலக்கி விட முடியவில்லை.

குறைந்த செலவில், சாமார்த்தியமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தேவையற்ற மிகைப்படுத்தல்களை புறந்தள்ளி ஒரு சிறப்பான த்ரில்லரை ரசிகர்களிற்கு வழங்குகிறது. இதன் வழி தரமான த்ரில்லர்களின் வரிசையில் தன் இடத்தை தேடிக் கொள்ளவும் அது முயல்கிறது. [***]

ட்ரெயிலர்

20 comments:

  1. அடடா... இந்த சிபி, அங்க போனாலும் அங்க வந்து மீ த ஃபர்ஸ்ட் போடுறாரே . . ;-)

    ReplyDelete
  2. ’அங்க’ய , ‘எங்க’ன்னு படிச்சிக்கவும்...

    ReplyDelete
  3. இதோ படித்துவிட்டு வருகிறேன் .. காதலரே.. கொஞ்ச நாளாகவே, படுபயங்கர வேலை.. அதனால், உங்கலது சில முந்தைய பதிவுகளைப் பார்க்கவில்லை.. இன்றிரவு படித்துவிடுகிறேன் அத்தனையையும்... ரைட்டா?

    ReplyDelete
  4. // தரமான த்ரில்லர்களின் வரிசையில் தன் இடத்தை தேடிக் கொள்ளவும் அது முயல்கிறது //

    கண்டிப்பா பார்த்துடுவோம்

    ReplyDelete
  5. // அடடா... இந்த சிபி, அங்க போனாலும் அங்க வந்து மீ த ஃபர்ஸ்ட் போடுறாரே //

    ச் சூ கண்ணு வைக்காதீங்க பாஸ் எல்லாம் விஸ்வா அண்ணனோட ஐடியா தான்

    ReplyDelete
  6. தல.. இங்கிலிபீஜு படத்தைப் பத்தி எழுதும் போது, தலைப்பைத்தான் கவிதையா வைக்கறீங்க சரி.

    அட்லீஸ்ட் போஸ்டரையாவது ஆங்கிலத்தில் போடுங்களேன். பாருங்க.. இப்ப முழு பதிவையும் படிக்க வேண்டியதா போச்சி. இல்லைன்னா வழக்கமா கடைசி லைனை காப்பி-பேஸ்ட் பண்ணி.. ‘பார்த்துடுவோம்’, ‘கலக்கல்’, ‘அடப்பாவமே’-ன்னு எழுதிட்டு போயிருக்கலாம்.

    எல்லாருக்கும் என்னை மாதிரியே ஃப்ரெஞ்ச் தெரியும்னு நீங்க நெனைக்கறது தப்பில்லைங்களா? ;)

    ReplyDelete
  7. ///// தரமான த்ரில்லர்களின் வரிசையில் தன் இடத்தை தேடிக் கொள்ளவும் அது முயல்கிறது //

    கண்டிப்பா பார்த்துடுவோம்
    /////////

    சத்தியமா.. சிபி-யை நினைச்சி அந்த பின்னூட்டம் எழுதவில்லை என்பதை, கிங் விஸ்வா தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.

    ReplyDelete
  8. // கிங் விஸ்வா தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்//

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. காதலரே,

    கொடுமையான விஷயம் என்னவெனில் இந்த படங்கள் எல்லாம் இங்கே ரிலீஸ் ஆகாது. டிவிடியில் பார்க்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

    நீங்கள் என்னடாவென்றால் வாரம் ஒரு முறை இப்படி பதிவிட்டு பொறாமை கொள்ள வைக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. போஸ்டரில் இருக்கும் அந்த பெண்ணின் கண்களே ஆயிரம் கதை சொல்கிறது.

    ReplyDelete
  11. எனக்கு புரை ஏறினப்பவே ஒரு டவுட்டு யாரோ நம்மள இழுக்குறாங்க அப்புடின்னு நெனைச்சேன் அதே மாதிரி நம்ம பாலா அண்ணன் போட்டு தாக்கி இருக்கிறார்

    // கிங் விஸ்வா தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்//

    ஏன் இந்த கொல வெறி
    புட்டு சாப்பிடும் போராட்டத்துக்கு உங்கள துணைக்கு கூப்பிடலன்னு கோவமா

    அதனால என்ன விடுங்க பாஸ்

    நம்ம கூட லட்டு சாப்பிடும் போராட்டத்துக்கு
    வாங்க வாங்க என்று உங்கள் எல்லோரையும்
    அன்புடன் அழைக்கும்
    உங்கள் சிபி

    ReplyDelete
  12. // போஸ்டரில் இருக்கும் அந்த பெண்ணின் கண்களே ஆயிரம் கதை சொல்கிறது //

    எனக்கு என்னவோ சந்திரமுகி படத்து ரா ரா....... பாட்டு தான் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  13. //நம்ம கூட லட்டு சாப்பிடும் போராட்டத்துக்கு
    வாங்க//

    அட.. ஏங்க.. லட்டு, புட்டு-ன்னு எங்க ஊர்ல கிடைக்காத மேட்டரா பேசி பசியை கிளப்புறீங்க. என்னை விட்டுட்டு இதை சாப்பிடுற அத்தனை பேருக்கும் பேதியாகக் கடவ.

    ReplyDelete
  14. //நம்பிக்கையும், துரோகமும் இம்மூன்று பாத்திரங்களிற்கு இடையிலும் ஒரு நாணயத்தின் பூவாகவும், தலையாகவும் மாறி மாறி விழுந்து கொண்டேயிருக்க அதன் வழியே பரபரப்புடன் கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.//

    //படுக்கை அறையில் அடைபட்டுக் கிடக்கும் ஆலிஸைப் போலவே துரோகமும் தன் வெற்றியைத் தேடி தந்திரமாக நகர்கிறது.//

    காதலர் டச்.. :)

    இந்தப் படம் கூடிய சீக்கிரம் பார்க்கப்படும்.

    ReplyDelete
  15. வழக்கம்போல அருமையான எழுத்து நண்பரே.

    பாத்துருவோம். (பாலாண்ணே, நெசமாத்தான் சொல்றேன்)

    ReplyDelete
  16. // அட.. ஏங்க.. லட்டு, புட்டு-ன்னு எங்க ஊர்ல கிடைக்காத மேட்டரா பேசி பசியை கிளப்புறீங்க //

    கவலையே படாதீங்க நம்ம விஸ்வா அண்ணன் உங்களுக்கும் பார்சல் அனுப்புவார்

    // என்னை விட்டுட்டு இதை சாப்பிடுற அத்தனை பேருக்கும் பேதியாகக் கடவ. //

    சின்ன வயசுல நிறைய மாயா ஜால கதைகள் படிச்சு இருப்பீங்க போல இருக்கிறதே

    .

    ReplyDelete
  17. நண்பர் சிபி, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. வாய்ப்புக்கிடைத்தால் தவறாது பார்த்திடுங்கள். லட்டு சாப்பிடும் போராட்டத்திற்கு என் வாழ்த்துக்கள் :)) அதே சமயம் பாண்டிச்சேரி ஜெமா ரசிகர் வட்டம் சார்பாக முட்டைக் கண் ஜோதிகாவுடன் எங்கள் ஆருயிர் ஜெமாவின் கண்களை ஒப்பிட்டதற்காக கண்டனங்களையும் முன்வைக்கிறேன்.

    நண்பர் கருந்தேள், நிதானமாக உங்களிற்கு நேரம் கிடைக்கும்போது படியுங்கள். ஒய்வையும் அனுபவிக்க மறக்காதீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஹாலிவுட் பாலா, நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே பிரெஞ்சுப் போஸ்டரை ஒட்டுகிறேன் :) பிரெஞ்சு கற்க விரும்பும் சிட்டுக்கள் ஹாலிவுட் பாலாவை அணுகவும். வகுப்புகள் இலவசம் [ பிரெஞ்ச் கிஸ் பாடத்திற்கு சலுகைகள் உண்டு] :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, ஆங்கிலப் படங்கள் இங்கு வெளியாகும் முன்பே இந்தியாவில் வெளியாகிவிடும் காலமிது. இது ஒரு விதிவிலக்கு. டிவிடி உங்களிற்கு விரைவில் கிடைத்திடும் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    இலுமினாட்டி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சரவணக்குமார், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  18. வழக்கம்போல அருமையான எழுத்து நண்பரே.

    பாத்துருவோம். (பாலாண்ணே, நெசமாத்தான் நானும் சொல்றேன்)

    ReplyDelete
  19. நண்பர் மயில்ராவணன் அவர்களே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete