Wednesday, January 20, 2010

தோற்கடிக்க முடியாத ஆன்மா

ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றை தன்னகத்தே பாரிய பிரச்சினைகளாகக் கொண்டிருந்தது.

பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர்கள், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மண்டேலாவின் ஆட்சியில் தாங்கள் யாவரும் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்ற அச்சமும், மண்டேலாவின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கறுப்பின மக்களின் மனங்களிலும், தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையால் உருவாகிய வெள்ளையர்கள் மீதான கோபம் இன்னமும் தணியாத சூட்டுடன் இருக்கிறது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற மண்டேலா, தனக்கு முன்பாக சாவாலாக குவிந்து கிடக்கும் பிரச்சினைகளை கண்டு அஞ்சிடாது அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார். அவர் கட்டியெழுப்ப விரும்புவது பல்வேறு இன மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சத்துடனும் வாழக்கூடிய ஒரு வானவில் தேசம்.

இதற்காக மண்டேலா, தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தவரின் நம்பிக்கையை தான் வென்றெடுக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறார். தனது அலுவலகத்தில் வெள்ளையர்களை தொடர்ந்து பணியில் பேணுகிறார். கறுப்பினத்தவர்களை மட்டுமே கொண்டிருக்கும் தன் மெய்காவலர் குழுவில் வெள்ளையர்களையும் அங்கம் வகிக்கச் செய்கிறார். மக்களுடன் நெருங்கியிருக்க இயலுமானவரை முயல்கிறார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டபின் முதன்முதலாக ஒரு ரக்பி மேட்ச்சிற்கு செல்கிறார் மண்டேலா. அந்த மேட்சில் இங்கிலாந்து ரக்பி அணியும், தென்னாபிரிக்காவின் ரக்பி அணியும் மோதவிருக்கின்றன.

தென்னாபிரிக்காவின் ரக்பி அணியானது Springboks எனவும் அதன் ஆதரவளார்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. [ஸ்பிரிங்பொக் என்பது தென்னாபிரிக்காவின் ஒரு வகை மானினத்தைக் குறிக்கிறது.] கறுப்பின மக்களிற்கு அந்த அணியானது ஆண்டாண்டு காலமாக அவர்கள் அனுபவித்த நிறவெறியின் அடையாளமாகவே தெரிகிறது. இதனால் தென்னாபிரிக்க ரக்பி அணியை அவர்கள் வெறுக்கிறார்கள். ரக்பி அணியிலும் ஒரே ஒரு கறுப்பினத்தவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்.

invictus-2010-15450-351972636 இங்கிலாந்திற்கும், தென்னாபிரிக்காவிற்குமிடையிலான மேட்ச் ஆரம்பமாகிறது. தென்னாபிரிக்கா அணியானது மிகவும் வலுவிழந்த அணியாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி இலகுவாக புள்ளிகளை ஈட்டிக் கொள்கிறது.

மைதானத்தில் இருக்கும் கறுப்பர்கள் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டுமே தென்னாபிரிக்கா அணிக்காக உற்சாக குரல் எழுப்புவர்களாக இருக்கிறார்கள். ஆட்டத்தின் முடிவில் பரிதாபமான ஒரு தோல்வியைத் தழுவுகிறது தென்னாபிரிக்கா அணி.

ஒரு நாட்டின் மக்கள் விளையாட்டு மைதானத்தில் இரு வேறு நாடுகளாகப் பிரிந்து கிடப்பதை அவதானிக்கும் மண்டேலாவின் உள்ளத்தில் ரக்பி விளையாட்டை வைத்தே இரு இனங்களிற்கு இடையிலும் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. உடைந்து போய்க் கிடக்கும் ரக்பி அணிக்கு புத்துயிர்ப்பு அளிப்பதற்கு தன் மனதில் தீர்மானம் கொள்கிறார் அவர்.

நடந்து முடிந்த மேட்சில் தென்னாபிரிக்க அணி சந்தித்த தோல்வியை அடுத்து அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் வரவிருக்கும் உலகக் கோப்பை ஆட்டத்திற்கு தென்னாபிரிக்கா அணியானது அதன் கனவில் கூட தெரிவாகாது எனக் கணிக்கிறார்கள் வல்லுனர்கள்.

தென்னாபிரிக்க ரக்பி அணியின் நிர்வாகம், மற்றும் அதன் கேப்டன் பிரான்சுவாவைக் குறி வைத்து விமர்சனங்கள் பாய்கின்றன. இந்நிலையில் வெள்ளை இனத்தவர்களின் நிறவெறியின் அடையாளமாக திகழும் தென்னாபிரிக்க ரக்பி அணியைக் கலைத்து விடவேண்டுமென தீர்மானம் கொண்டு வருகிறது கறுப்பர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய விளையாட்டுக் கவுன்சில்.

தேசிய விளையாட்டுக் கவுன்சிலின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் மண்டேலா அதற்கு குறுக்கே நிற்கிறார். தனது முப்பது வருட சிறை வாழ்க்கையில் வெள்ளையர்களையும், அவர்கள் நூல்களையும் தான் நன்கு கற்றறிந்ததை தேசிய விளையாட்டுக் கவுன்சில் அங்கத்தினர்களிடம் அவர் நயமாக எடுத்துக் கூறுகிறார்.

invictus-2010-15450-958563979 எதிரியை மன்னிப்பதன் மூலமே எங்கள் ஆன்மாக்களைச் சுதந்திரமாக்கமுடியும், இனங்களிற்கிடையில் வாழ்ந்துவரும் அச்சத்தை உடைக்க முடியும், வானவில் தேசத்தை பல இனங்ளாக சேர்ந்து உருவாக்க முடியும் என்றும் விளக்குகிறார். ஆனால் மண்டேலாவிற்கு அதிகம் நெருங்கியவர்கள் கூட ரக்பி விளையாட்டின் மூலம் தேச மக்களை ஒன்றிணைக்கமுடியும் என்ற மண்டேலாவின் ரகசியத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாது இருக்கிறார்கள்.

ஸ்பிரிங்பொக்ஸ் மீதான கடுமையான விமர்சனங்களின் பின் அந்த அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறார். பிரான்சுவா அணியின் தலைவனாக நீடிக்கிறான். தனது பரபரப்பான நேர அட்டவணைக்கு மத்தியிலும் ஸ்பிரிங்பொக்ஸை சிறப்பான அணியாக மாற்றிட விரும்பும் மண்டேலா, அணியின் காப்டன் பிரான்சுவாவை தன் அலுவலகத்தில் வரவேற்று அவனுடன் உரையாடுகிறார்.

தன் சிறை வாழ்க்கையில் தான் உடைந்து போய்விடாது தனக்கு ஊக்கம் தந்தது ஒரு கவிதை என்பதை பிரான்சுவாவிற்கு தெரிவிக்கும் மண்டேலா, வாழ்க்கையில் மகத்துவங்களை வெல்வதற்கு அவனும் எதிலிருந்தாவது ஊக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவனுடன் ஆதரவாக உரையாடுகிறார். மண்டேலா, தனது அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை தன்னிடம் மறைமுகமாகக் கேட்கிறார் என்பதை மெல்லப் புரிந்து கொள்கிறான் பிரான்சுவா.

தென்னாபிரிக்க அணியின் பயிற்சிகள் கடுமையாகின்றன. மண்டேலாவின் வேண்டுகோளிற்கிணங்க ரக்பி பற்றி அதிகம் அறிந்திராத, அலட்டிக் கொள்ளாத கறுப்பின மக்கள் வாழும் வறிய பகுதிகளிற்கு சென்று அங்குள்ள சிறுவர்களிற்கு ரக்பி விளையாட்டை அறிமுகம் செய்கிறது பிரான்சுவாவின் அணி. இது அணியினர்க்கு ஒரு புது அனுபவமாக அமைகிறது.

இவ்வகையான நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் ரக்பி அணி குறித்த நல்லெண்ணத்தை உருவாக்கும் அதே வேளையில் வெள்ளை இன மக்களின் பெருமையும், உயிருமான ரக்பி மீது மண்டேலா காட்டும் அக்கறை, அவர் மீது வெள்ளையர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை விலக்கி கொள்வதற்கும் உதவுகிறது.

தென்னாபிரிக்க மக்களின் ஆதரவும், கடுமையான பயிற்சிகளும், ஊக்கமான விளையாட்டும் தென்னாபிரிக்க அணியை உலக கிண்ணப் போட்டியின் கால்சுற்றுக்கு எடுத்து வருகின்றன. கால்சுற்றுப் போட்டியில் அவர்கள் அவுஸ்திரேலிய அணியுடன் மோதியாக வேண்டும்.

invictus-2010-15450-1276228227 அவுஸ்திரேலிய அணியுடன் மோத கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் தென்னாபிரிக்க அணியை தானே நேரில் வந்து சந்திக்கும் மண்டேலா, அவர்களுடன் அன்பாக உரையாடி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். பிரான்சுவாவுடன் தனிமையில் உரையாடும் மண்டேலா விடைபெறுவதற்கு முன்பாக அவனிடம் ஒரு கடித உறையைத் தந்து செல்கிறார். அன்றிரவு தனது அறையில் அந்த உறையைப் பிரிக்கும் பிரான்சுவா, Invictus எனும் கவிதையை அதனுள் காண்கிறான். அந்தக் கவிதை தனக்காக மண்டேலாவின் கைகளால் பிரதி செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் அவன் அறிந்து கொள்கிறான்.[ Invictus கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 1875ல் எழுதப்பட்டது]

அடுத்த நாள் இடம்பெறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை அட்டகாசமாகத் தோற்கடிக்கிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தென்னாபிரிக்கா தேசமே களிப்பாகிறது. தாம் கண்ட வெற்றியைக் கூட முழுமையாகக் கொண்டாடாது கடுமையான பயிற்சிகளில் இறங்குகிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தெருவில் ஓடிச் செல்லும் அவர்களைக் காணும் மக்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களைப் பாராட்டுகிறார்கள்.

கடுமையான பயிற்சிகளின் மத்தியில் கிடைக்கும் ஒரு ஓய்வு நாளில், மண்டேலா தன் தண்டனையைக் கழித்த Robben Island சிறையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு தென்னாபிரிக்கா அணியினர்க்கும், அவர்கள் துணைவிகளிற்கும் கிடைக்கிறது. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்கும் பிரான்சுவா, மண்டேலா அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிடுகிறான்.

மிகக் குறுகலான சிறு அறை. ஒரு சிறிய ஜன்னல், ஒரு மேசை, ஒரு கதிரை, தரையில் படுத்துக் கொள்ள ஒரு விரிப்பு. அறையின் மத்தியில் நின்று தன் கைகளை விரிக்கிறான் பிரான்சுவா. அவன் இரு கைகளின் விரல்களும் அந்த சிறு அறையின் ஒடுக்கு முறை எல்லைகளை தொடுவதற்கான இடைவெளி அதிகம் இருக்கவில்லை.

பிரான்சுவாவின் காதுகளில் மண்டேலா சிறையில் படித்து ஊக்கம் பெற்ற Invictus கவிதையின் வரிகள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அவன் மனதில் சிறையில் கல்லுடைத்துக் கடூழியம் செய்யும் நெல்சனின் உருவம் தோன்றுகிறது. முப்பது வருடங்களாக ஒரு குறுகிய அறையில் தன்னை அடைத்துவைத்து ஒடுக்கிய மக்களை நேசத்துடன் அணைத்துக் கொள்ளும் ஒரு மாமனிதனை அவன் உணர்ந்து கொள்கிறான்.

invictus-2010-15450-657749166 தொடரும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை தோற்கடிக்கிறது தென்னாபிரிக்கா [ யார்தான் அவர்களை தோற்கடிக்க தவறினார்கள்!]. இறுதிப் போட்டியில் அவர்களுடன் மோதவிருப்பது வெல்லவே முடியாத அணியெனப் பெயர் எடுத்த நியூசிலாந்தின் All Blacks. தென்னாபிரிக்காவிற்கு தோல்வி நிச்சயம் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.

தென்னாபிரிக்க அணியானது, நியூசிலாந்தை எப்படிக் கவிழ்க்கலாம் என வியூகம் வகுக்க, ஓய்வில்லாத கடும் வேலையால் மயங்கி விழுந்து தன் வீட்டில் கட்டாய ஓய்விலிருக்கும் மண்டேலா, நியூசிலாந்து அணி கலந்து கொண்ட போட்டிகளில் அவர்களின் தீவிரமான விளையாட்டைப் பார்த்து சிறிது அச்சம் கொள்கிறார். அவர் எதிர்பார்த்திருப்பது வெறும் ஆட்டமல்ல, ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கப் போகும் ஆட்டமல்லவா அது.

இறுதி ஆட்டம் நிகழும் நாள் வருகிறது. மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே நாடு, ஒரே அணியென தென்னாபிரிக்காவின் கொடிகள் காற்றில் உற்சாகமாய் அசைகின்றன. தென்னாபிரிக்க வீரர்கள் அணியும் மேற்சட்டை அணிந்து மைதானத்திற்குள் நுழையும் மண்டேலா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மதுபான விடுதிகள், வீடுகள், கடைகள் என எங்கும் தொலைக்காட்சியின் முன்பாக எல்லா இன மக்களும் குழுமியிருக்கிறார்கள். மைதானத்தில் நீயுசிலாந்து வீரர்கள் தங்கள் எதிரிகளைப் பயமுறுத்தும் போர் நடனத்தை ஆடுகிறார்கள். நடுவர் விசிலை ஊதுகிறார். ஆட்டம் ஆரம்பமாகிறது…. அந்த ஆட்டத்தின் முடிவு விளைவித்த மந்திரக் கணங்களை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Jhon Carlin, என்பவர் எழுதிய Playing The Enemy எனும் நாவலைத் தழுவி Invictus எனும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் மதிப்பிற்குரிய ஹாலிவூட் பெருசு Clint Eastwood ஆவார்.

பிளவு பட்டுக்கிடந்த ஒரு நாட்டின் மக்களை, ஒரு விளையாட்டு அணியின் வெற்றி மூலமாக ஒன்றிணைப்பதில் வெற்றி கண்ட மண்டேலாவின் கதையை உணர்ச்சி ததும்பக் கூறுகிறது திரைப்படம். பொருளாதாரப் பின்னடைவில் இருந்த தென்னாபிரிக்காவை முன்னேற்றுவதற்கு அவர் மேற்கொண்ட ஓய்வற்ற முயற்சிகளையும், வெள்ளை இன மக்களை தன் மேல் நம்பிக்கை கொள்ள வைக்க அவர் எடுத்த நடவடிக்கைகளையும் திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது.

உறக்கம் விழித்து எழுந்து, கலைந்திருக்கும் தன் படுக்கையை தானே ஒழுங்குபடுத்தும் ஆரம்பக் காட்சிகளிலேயே மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறார் ஜனாதிபதி மண்டேலா.

அவரது ஒவ்வொரு செயல்களும் வியக்க வைக்கின்றன. ஆபிரிக்காவின் முன்னேற்றத்திற்காக அயராது ஓய்வின்றி உழைப்பதிலும், ஒரு சிறுவனைப் போல் தென்னாபிரிக்க ரக்பி அணியின் தகவல்களை அறிந்து கொள்ள விழைவதிலும், தன்னை நெருங்கியுள்ள மனிதர்களுடன் அவர் பழகும் கண்ணியமான விதத்திலும் இப்படி ஒரு மனிதர் இருப்பது சாத்தியமா என ஆச்சர்யப்படவைக்கிறது அப்பாத்திரம் .

வெள்ளையர்களை எதிரிகளாகக் கருதாது, அவர்களையும் நேசத்துடன் அணைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர் காட்டும் அக்கறை, எப்படி முப்பது வருட ஒடுக்குமுறையின் பின்னால் இவரால் இதை சாத்தியமாக்க முடிகிறது எனும் கேள்வியினை மனதில் ஓயாது எழுப்புகிறது.

திரைப்படத்தில் மண்டேலாவைப் போலவே காட்சிகளும் எளிமையாக இருக்கின்றன. இது பார்வையாளர்களை காட்சிகளுடன் இலகுவாக ஒன்றிவிடச் செய்கிறது. படத்தில் இடையிடையே பொழியும் பியானோ இசை, இனிமையான ஒரு சாரல்.

invictus-2010-15450-1472055972 மண்டேலா பாத்திரத்தில் Morgan Freeman. தன் சிறப்பான, மென்மையான நடிப்பால் ரசிகர்களை இலகுவாகக் கவர்கிறார் ஃப்ரீமேன். பிரான்சுவா வேடத்தில் Matt Damon. திரைப்படத்தில் அவரின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம் அவரிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அடக்கமாக, அழகாக நடித்துச் செல்கிறார்.

மண்டேலாவின் இரு இன மெய்ப்பாதுகாவலர்கள் மத்தியில் ரக்பி மூலமாக துளிர்விடும் நட்பு இயல்பாக சொல்லப்படுகிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் கறுப்பின பணிப்பெண்ணிற்கும் சேர்த்து ரக்பி ஆட்டத்திற்கு டிக்கட் வாங்கி வரும் பிரான்சுவா, இறுதி ஆட்டத்தின்முடிவில் மண்டேலாவின் கறுப்பின மெய்ப்பாதுகாவலரை கட்டியணைத்து உற்சாக கூச்சல் போடும் வெள்ளையர் என மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம். மண்டேலாவின் தனிமை நிறைந்த வாழ்க்கையின் சோகமும், தென்னாபிரிக்காவே தன் குடும்பம் என்று அவர் கூறுவதும் மனதைக் கலங்கடிக்கின்றன.

இருப்பினும் பெருசு க்ளிண்ட், வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள் ஒன்றிணைவதை ஆழமாகக் காட்டவில்லை என்பது என் கருத்து. பிரான்சுவா குடும்பம் மூலமாக ஒரு வெள்ளை இன குடும்பத்தை அவர் முன்னிறுத்துகிறார். ரக்பி அணி வீரரொருவரின் குடும்பத்தை தவிர்த்து பிறிதொரு குடும்பத்தை அவர் காட்டியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போன்று ரக்பி அணியில் இடம்பெறும் சில வீரர்களின் இன வெறித் தன்மை எவ்வாறு மாற்றம் கொள்கிறது என்பதை அவர் விரிவாகக் காட்டவில்லை. எல்லாம் கலந்ததுதான் உலகம் என்று கூறுகிறாரோ பெருசு!!

நடிகராக க்ளிண்டை எனக்கு சிறு வயது முதலே பிடிக்கும். ஆனால் இயக்குனர் க்ளிண்டை இன்று எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் இயக்கும் படங்களில் மனித நேயம் என்பது உணர்வுபூர்வமாகவும், மென்னழகுடனும் வெளிப்படுகிறது என்று நான் உணர்கிறேன். Invictus திரைப்படம் மூலம் Clint Eastwood, ரசிகர்களின் மனங்களை இலகுவாக வென்று விடுகிறார். [***]


Invictus

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.


ட்ரெயிலர்

32 comments:

  1. அண்ணே..., என் டாப் டென்னில் இருக்குன்னு சொல்லியிருந்தனே!!

    இனிமே... நான் எப்படி எழுதுவேன்! :( :(

    --

    சோழ மன்னா... நீதி கொடு!!!

    ReplyDelete
  2. படம் பார்த்த பின்னாடி.. எனக்கு மண்டேலாவோ முகம் மறந்தே போச்சி!!! இனிமே.. மோர்கன் தான்...!!!

    ReplyDelete
  3. நண்பர் ஹாலிவூட் பாலா, நீங்களும் இதற்கு விமர்சனம் கட்டாயமாக எழுத வேண்டும், தயவு செய்து நான் எழுதியதற்காக நீங்கள் எழுதாது தவிர்க்க வேண்டாம், உங்கள் விமர்சனத்தைக் காண நான் ஆவலாக உள்ளேன்.

    சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இரு படங்களையும் 50 தடவை பார்த்துக் களிக்க வேண்டும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. நண்பர் பாலா, கோல்டன் குளோப் விருது மோர்கனிற்கு வழங்கப்படவில்லை என்பது எனக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு சோழ மன்னனின் தீர்ப்பு என்னவோ!!

    ReplyDelete
  5. //Matt Damon. திரைப்படத்தில் அவரின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம் அவரிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை////

    நானும் இதையே தாங்க நினைச்சேன்!

    இன்ஃபார்மெண்ட் பார்த்துட்டீங்களா தல?

    ReplyDelete
  6. க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அளவுக்கு வேகமா யாராவது படம் இயக்க முடியுமான்னு தெரியலை.

    வருசத்துக்கு 2-3 படத்தை கொடுத்துகிட்டே இருக்கார் இந்த இளைஞர். ஆச்சரியம்!

    ReplyDelete
  7. பாவம்.. நீங்க எனக்கு பதில் கமெண்ட் போட்டு டயர்ட் ஆகிடப் போறீங்க. பொழச்சிப் போங்க! :) :)

    ReplyDelete
  8. மார்க்ன் ப்ரீமேன், மேட் டில்லான், கிளின்ட் ஈஸ்ட்வுட் இப்படி மெகா கூட்டணியில் ஒரு படமா... உடனே பார்த்து விட வேண்டியது தான்.

    மண்டேலாவாக மார்கன் ப்ரீமேன் தேர்வே ஒரு சிக்ஸர் அடித்த மாதிரி தான். பதிவை படித்து விட்டு திரும்ப வருகிறேன், காதலரே.

    ReplyDelete
  9. நண்பர் பாலா, இன்பார்மண்ட் பார்க்கவில்லை அதில் மாட் டாமொன் அற்புதமாக விளையாடியிருப்பதாக கூறினார்கள். நேரமின்மையால் பார்க்கத் தவறிய படமது. ஸ்டீவன் சொடெர்பெர்க் கூட முன்பு வேகமாக படங்களை இயக்கித் தள்ளினார். ஆனால் அவர் இளைஞர். க்ளிண்ட் என்ன லேகியம் சாப்பிடுகிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

    ரஃபிக், பதிவைப் படித்து விட்டு வாருங்கள் நண்பரே.

    ReplyDelete
  10. நல்லா இருக்கு..பார்க்கனும்னு நினைக்கிறேன்..
    Morgan&Matt ரெண்டு பேருமே பிடிக்கும் வேற..

    ReplyDelete
  11. காதலரே ,
    அருமையான அறிமுகம் பத்துர வேண்டியதுதான்..

    ReplyDelete
  12. சில நாட்கள் முன் இந்த படதின் டொரென்ட் பார்த்தேன்... ஆனால் பார்க்க விருப்ப படவில்லை... உங்களின் கருத்திற்கு பிறகு பார்க்க முடிவு செய்து விட்டேன்..... நன்றி ......நன்றி.....

    ReplyDelete
  13. நண்பர் வினோத் கெளதம், பாருங்கள் நல்லதொரு படம். கருதுக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி லிமட், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ரமேஷ், உணர்சிகரமான, மென்மையான படம், பார்த்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  14. காதலரே,

    தேசங்களுக்கு இடையே விளையாட்டு, பகமையும் வளர்க்கலாம், நேசபாவத்தை துளிர்க்க செய்யலாம் என்று காட்டியிருக்கிறது போல, இந்த படம்.

    வானவில் தேசம், வெள்ளையர், கருப்பினர் ஒற்றுமை கோட்பாடு என்று நெல்சன் மண்டேலா உண்மையில் வாழ்ந்து காட்டியதை, மார்கன் அருமையாக படத்தில் நடித்து காட்டியிருக்கிறார் போல. மார்கனின் நடிப்பில் எப்போது குற்றம் காண முடியும், அது இப்படத்திலும் நிதர்சனம்.

    கூடவே கிளின்ட் ஈஸ்ட்வுட் போன்ற ஒரு பெரிசு, மைக் பக்கத்தில் நின்று காரியம் வாங்கும் போது, படம் எவ்விதம் வந்திருக்கும் என்பதை தங்களின் 3 ஸ்டார் ரேட்டிங் தெளிவுபடுத்துகிறது.

    ட்ரெயிலரில் ஒரு வெள்ளை இன பயிற்சியாளர் அவரின் குழுவிற்கு, Remember this day boys, this is the day when our country went to the dogs என்று கூறுவதிலேயே, அப்படிபட்ட எண்ணத்தை எப்படி ஒரு விளையாட்டு மாற்றி காட்டும் என்று எதிர்பார்க்க வைத்து விடுகிறார்கள்.

    படத்தை பற்றி படிக்க படிக்க எனக்கு சில காலம் முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ஷாருக் கானின் சக் தே படத்தை நியாபகபடுத்திற்று... அதே வெற்றி பெற வேண்டிய எண்ணம்... ஒரே மாற்றம் நாட்டின் தலைவர் என்ற முறையில் இல்லாமல், அணியின் தலைவர் (கோச்) என்று விலகியிருக்கும். என்ன அந்த படத்தில் இறுதி ஆட்டத்தில் நமது அணி வெற்றி பெருவது போல சினிமாத்தனமாக முடித்திருப்பார்கள் (அதை தானே நமது ரசிகர்கள் விரும்புவார்கள்), ஆனால் ஆங்கில படம் என்பதால் Invictus ல் அப்படி இராது என்று நம்பலாம். சரி படத்தை பார்த்து முடிவை தெரிந்து கொள்கிறேன் :)

    // அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை தோற்கடிக்கிறது தென்னாபிரிக்கா [ யார்தான் அவர்களை தோற்கடிக்க தவறினார்கள்!]//

    உங்கள் ஆதாங்கம் புரிகிறது...கூடவே நக்கல் தொனியும். கவலை படாதீர்கள் நமது தவளை கையன் ஹென்றி இருக்கிறார். சாதித்து காட்டி விடுவாரில்ல... :)

    ReplyDelete
  15. மிக அருமையான விமர்சனம் நண்பரே.

    ReplyDelete
  16. ஆஹா . .அருமை . . மிக அழகான முறையில் ஒரு விமர்சனம் . . கண்ணை எடுக்கவே முடியவில்லை. அட்டகாசம்! மனமார்ந்த பாராட்டுக்கள் !!! இப்படம், நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். பார்த்தே தீருவேன்.

    க்ளிண்ட் - என்ன சொல்வது? அவரது மனதிற்குள் ஒரு குழந்தை இருக்கிறதோ என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் செம கெத்து. இப்பொழுது, இயக்கத்தில், அடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

    அப்புறம், ஃப்ரான்ஸ் பற்றி.. அது என் கனவு தேசம். அங்கு வந்து செட்டில் ஆகவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. கண்டிப்பாக வருவேன்.

    //சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இரு படங்களையும் 50 தடவை பார்த்துக் களிக்க வேண்டும்.//

    ஆஹா . . இதுக்கு நம்மூரு பேரரசு படங்களே எம்பூட்டோ பரவாயில்லையே. . நாட்டாம . . அடச்சீ.. சோழமன்னா . . தீர்ப்ப மாத்தி சொல்லு . . .

    ReplyDelete
  17. //சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இரு படங்களையும் 50 தடவை பார்த்துக் களிக்க வேண்டும்.//

    என்னது பார்த்துக் 'களிப்பதா'? குறும்ம்ம்ம்ம்பு . . . :-)

    ReplyDelete
  18. அப்புறம், மார்கன் ஃப்ரீமேன் பற்றி - எனது மனம் கவர்ந்த நடிகர். அவரது நடிப்பில் எனக்கு மிகப்பிடித்த படங்கள்: செவன் மற்றும் ஷஷாங்க். குறிப்பாக செவன். என்ன வேடம் கொடுத்தாலும் பிய்த்து உதறக்கூடிய 'தல' அது. அவருக்கு ஷஷாங்கிற்காக ஆஸ்கர் வழங்கப்படாதது கொடுமை. அந்த விருதிற்கே அவமானம் அது. வாழ்க மார்கன்!!

    ReplyDelete
  19. ரஃபிக், இப்படத்தில் மார்கனின் நடிப்பை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது படத்தினைப் பாருங்கள், முடிவும் உங்களை சற்று ஆச்சர்யப்பட வைக்கலாம். தவளைக் கை ஹென்ரி கதை ஓய்ந்து விட்டது போல் தெரிகிறது. இனி அடுத்த ஆட்டத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். வெள்ளை இனப் பயிற்சியாளர் அவ்வசனத்தைக் கூறும்போது சிறையிலிருந்து மண்டேலா விடுதலையாகி அந்த தெரு வழியாக காரில் பயணித்திருப்பார். எவ்வளவு வன்மமான வசனம், ஆனால் மண்டேலா தன் அன்பால், இவ்வாறான கருத்துக்கள் கொண்டிருந்த பலரை மாற வைத்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.விரிவான கருத்துப் பகிர்விற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் சரவணக்குமார் அவர்களே உங்கள் கனிவான கருத்துகளிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், கண்டிப்பாக வாருங்கள் நண்பரே.வாழ்க்கையைக் கொண்டாடலாம். பேரரசு தமிழக டாரண்டினோ என்று அழைக்கப்படுகிறார் அவரின் படங்களை இப்படிக் கூறுவது சரியா!! ஆம் அது அரச கட்டளை. அப்படங்களைப், பார்த்துக் களித்து இன்புற்று இருக்குமாறு சோழ மாமன்னர் உத்தரவு. இளவரசியையும் அனுப்பி வைத்தார் எனில் அவரிற்கு ஒரு கல்வெட்டு வைக்க நான் தயார். செவன் அருமையான ஒரு த்ரில்லர். ஷஷாங் உணர்சிகளை மெல்ல மெல்ல உருக வைக்கும். விரைவில் உங்களிடமிருந்து இப்படங்களிற்கான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  20. அன்பு நண்பரே,

    முரட்டு கௌபாயாக நடிக்க ஆரம்பித்து வெகுசில கதாபாத்திரங்களே ஈஸ்ட்வூட்டால் நடிக்க முடிந்தது. கௌபாய், டர்ட்டி ஹாரி என்ற இரு பாத்திரங்களை தவிர ஆரம்ப வருடங்களில் சாதிக்க முடியாதவர் பிரமிக்க வைக்கும் அளவில் சிறந்த இயக்குநராக எவ்வாறு ஆனார் என்பது ஆச்சரியம். இது குறித்து ஏதேனும் சுய வரலாறு ஏதேனும்இருக்கின்றதா என பார்க்க வேண்டும். இருந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகமாக அது இருக்கும்.

    மற்ற கருப்பின நடிகர்களை விட தனி உச்சரிப்பு கொண்டவர் மோர்கன் ஃப்ரிமேன். எவ்வித பாத்திரத்தையும் பின்னியெடுக்கக் கூடியவர். ராபின் ஹுட் (கெவின் காஸ்ட்னர்) படத்தில் ஆப்பிரிக்க அடிமை கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். அதிலும் தனது தனித்தன்மையை காட்டியிருப்பார். இப்படிப்பட்டவருக்கு இக்கதாபாத்திரம் கனவு வேடமாகவே இருந்திருக்கும். உங்கள் விமர்சனத்தை பார்க்கும்போது உடனே பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. தற்சமயத்திற்கு அது சாத்தியமில்லை என பெருமூச்சு விடத்தான் முடிகிறது

    வெல்ல முடியாதவன் தன் உடலில் ஒரு தீராத வலியைக் கொண்டு அதையும் மீறி சாதித்து காட்டியவரின் கவிதை. கவிதை எழுதியதோடு நின்றுவிடாமல் கவிஞரும் சாதித்துக் காட்டியிருக்கின்றார். மிகச் சிறந்த கவிதை. மொழி விளையாட்டுடன் நிற்காமல் ஆன்மாவை கொண்டுள்ள வெகு சில கவிதைகளில் இதுவும் ஒன்று.

    மிகச் சிறப்பான விமர்சனம். இத்திரைப்படத்தின் முழு உணர்வையும் இந்த விமர்சனத்தில் காண்கின்றேன். க்ளின்ட்வூட்டின் அடுத்த படத்திற்கும் ஆவலாய் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  21. மிக அருமையான விமர்சனம்... படத்தை பார்த்தது போல இருந்தது. என்ன க்ளைமாக்ஸ் சொல்லி இருந்தால் முழு படமும் பார்த்த மாதிரி இருந்திருக்கும்.
    :)

    ReplyDelete
  22. வோல்டேர் ஜோஸ், க்ளிண்ட் இயக்கிய படங்களைப் பார்க்கும் போது ஒரு நடிகன் அவன் நடிக்கும் படத்தினால் மசாலா நாயகன் என்று முத்திரை குத்தப்பட்டாலும், தனது தேடலால் அவன் கண்டடைவதும், அதனைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதும் அவனை வேறிடத்திற்கு கொண்டு செல்லும் என்பதைக் காணமுடிகிறது.

    சீன் பென்னிடமிருந்து யார்தான் இன் டு த வைல்ட் எனும் திரைப்படத்தை எதிர்பார்த்திருக்க முடியும்! இவையே ஒரு ரசிகன் பெறும் இனிய ஆச்சர்யங்கள்.

    ஆனால் தமிழ் ரசிகர்கள் மனம் வெதும்ப வேண்டியதில்லை. அகில உலக தீவிராவாதிகளின் ஜிம்ம ஜொப்பனம், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படம் ஒன்றை இயக்கப் போவதாக நான் அறிகிறேன். அந்தப் படமானது ஒட்டு மொத்த தமிழ் உலகையும் ஆச்சர்ய சமுத்திரத்தில் முக்கி மூழ்கடித்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆங்..

    கவிதைகளில் வார்தைகள் ஆன்மாவைத் தொட வேண்டும்.வெறும் வார்த்தை வித்தைகள் பயனற்றவை. இன்விக்டஸ் கவிதை நல்லதொரு கவிதை. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் ரகுநாதன், சில விமர்சனங்களில் முடிவையும் சேர்த்தே எழுதுகிறேன். இப்படத்திற்கு அதனை எழுதாமல் விடுவதே பதிவிற்கு சரியாக அமைந்தது. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  23. நண்பா,
    படத்தை நேற்று தான் பார்த்தென்
    க்ளிண்டின் படைப்பில் மீண்டும் ஒரு வைரம்,உணர்ச்சி காவியம்,மண்டேலாவுக்கு இருந்த மன்னிக்கும் குணம் பெருந்தன்மையை ரக்பி விளையாட்டில் அவருக்கிருந்த ஈடுபாட்டுடன் இணைந்து பயணைக்கும் இப்படம் அனைவரையும் கவரும்.புத்தகம் ஏற்படுட்த்திய தாக்கம் படமும் ஏற்படுத்த தவற்வில்லை,மார்கனுக்கும் மேட்டெமானுக்கும் இந்த படம் நிச்சயம் நல்ல போர்ட்ஃபோலியோ,படம் கல்லையும் கரைக்கும்

    ReplyDelete
  24. நண்பர் கார்த்திகேயன் உங்களின் சிறப்பான கருத்துக்களிற்கு நன்றி. படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்பது உங்கள் கருத்துக்களில் இருந்தே தெரிகிறது.

    ReplyDelete
  25. நண்பரே
    //படம் பார்த்த பின்னாடி.. எனக்கு மண்டேலாவோ முகம் மறந்தே போச்சி!!! இனிமே.. மோர்கன் தான்//
    நானும் வழிமொழிகிறேன். இந்த படம் கிடைப்பதற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது. உங்களின் வரிகளில் படித்து விட்டு படம் பார்க்காமல் இருக்க முடியுமா கண் துயிலுமா ?

    ReplyDelete
  26. கனவுகளின் காதலரே,

    தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய பயண களைப்பும், இணைய இணைப்பான் செய்த சதியாலும் என்னால் கமெண்ட் இட இயலவில்லை.

    சென்றவாரம் நீங்கள் படம் பார்த்த அன்றுதான் நானும் இந்த படத்தை பார்த்த்தேன். சமீப காலங்களில் ஈஸ்ட்வுட் படங்களில் கிரான் டொரினோ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த படத்தை பின்னுக்கு தள்ளிய படம் இது தான். ஷாஷன்க் ரெடம்ப்ஷன் படத்திற்கு பின் பிரீமேனின் மிகச்சிறந்த நடிப்பு பல படங்களில் வெளிப்பட்டு இருந்தாலும், இதன் மூலம் அவர் அந்த படத்தையும் முந்திவிட்டார்.

    ReplyDelete
  27. நண்பர் வேல்கண்ணன், கருத்துக்களிலும் கவிதை வரிகள். கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    விஸ்வா, மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. உங்களிற்கு எப்போது இயலுமோ அப்போது பதிவு குறித்த உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். மோர்கனின் நடிப்பு உங்களை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை, திறமை மிகுந்த கலைஞர் அவர். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  28. காதலரே,

    நேரம் இருந்தால் (நீங்கள் ஆக்க்ஷன் படங்களை ரசிப்பவர் என்பதால் சொல்கிறேன்) தி டோர்னமென்ட் மற்றும் ஆர்மர் ஆகிய இரண்டு படங்களையும் பாருங்கள்.

    ReplyDelete
  29. விஸ்வா, தி டோர்னமெண்ட் பார்க்கவில்லை, ஆனால் ஆர்மர்ட் பார்த்தேன். மோசமான திரைக்கதை, திறமையற்ற இயக்கம், மாட் டிலொன், ஜான் ரெனோ, லாரன்ஸ் பிஸ்பேர்ன் போன்ற நல்ல நடிகர்களின் திறமைகளின் வீணடிப்பு என்பவற்றின் கூட்டணியாக படம் அமைந்திருந்தது. அதிலும் இப்படி ஒரு சோப்ளாங்கி கதாநாயகனை அண்மைக் காலத்தில் நான் கண்டதில்லை. இப்படத்தைக் கண்டால் கவச வாகனத்திற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். அதனாலேயே படம் குறித்த பதிவையும் தயாரிக்கவில்லை. மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  30. ஆர்மர்ட் படம் நான் இதுவரை பாதி தான் பார்த்து உள்ளேன்.உங்கள் கருத்தை படித்தவுடன் அதன் ஸ்கிரிப்ட் நன்றாக கையாளப்பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  31. காதலரே, நான் பெரும்பாலும் ட்ரைலர் பார்த்தோ அல்லது நடிகர்/இயக்குனர் பார்த்தோ தான் படங்களை பார்ப்பேன். அதனால் தான் இந்த படத்தின் ஸ்டார் காஸ்ட் என்னை கவர்ந்தது. ஜான் ரெனோ இந்த படத்திலுமா வீணடிக்கப்பட்டு இருக்கிறார்?

    ReplyDelete
  32. விஸ்வா, உங்களைப் போலவே நானும் இப்படத்தின் ட்ரெயிலரால் கவரப்பட்டு ஏமாந்தேன். ஜான் ரெனோ குறித்து நீங்கள் கூறுவது உண்மையே. இவ்வளவு நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே என்று படத்தைப் பார்க்க வந்த பலர் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

    ReplyDelete