Friday, October 2, 2009

உன் விழிகளில் என் கண்ணீர்


மெல்போர்னில் அமைந்திருக்கும் ஆர்வங்கள் இறந்த புறநகரான மவுண்ட் வெவெர்லியில் தன் பெற்றொருடன் வாழ்ந்து வருகிறாள் சிறுமி மேரி. மேரியின் நெற்றியில் ஒர் பெரிய மச்சம், முகமெல்லாம் கோலமிட்டிருக்கும் புள்ளிகள், வெட்கத்திற்கிடையில் வெளிவரத் துடிக்கும் ஒர் புன்னகை என அவசர மனிதர்கள் நாள் தோறும் அவதானிக்கமால் கடந்து செல்லும் சிறுமிகளில் அவளும் ஒருத்தி.

மேரியின் தந்தை நோர்மன் ஒர் தொழிற்சாலையில் தேனீர் பைகளிற்கு நூல்களை இணைப்பவராக வேலை பார்த்து வருகிறார். வேலை நேரம் போக அவரின் மீதி நேரங்களில் தெருக்களில் இறந்து கிடக்கும் பறவைகளின் உடல்களை பாடம் செய்வது அவரின் பொழுது போக்கு.

மேரியின் தாயான வேரா, ஒர் மதுப் பிரியை. தேனீரில் செரி மதுவைக் கலந்து சுவைத்தபடியே, வானொலியில் ஒலிபரப்பாகும் கிரிக்கெட் வர்ணனைகளை ரசித்தபடியே, மதுவின் போதையில் மயங்கிப் போவது அவள் வாடிக்கை.

பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத மேரிக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இல்லை. அவள் பிரியம் கொண்டிருந்த தாத்தாவின் மரணம் அவளைத் தனிமையில் தள்ளுகிறது. நொப்லெட்ஸ் எனப்படும் கார்ட்டூன் தொடரின் பாத்திரங்களிற்கு அவள் ரசிகையாகவிருக்கிறாள்.

ஒரு நாள் தபால் அலுவலகம் ஒன்றிற்கு தன் தாயுடன் செல்லும் மேரி, அங்கிருக்கும் தொலைபேசி புத்தகம் ஒன்றில் காணப்படும் அமெரிக்க வாழ் மனிதர்களின் வித்தியாசமான பெயர்கள் குறித்து ஆச்சர்யம் கொள்கிறாள்.

Mary---Max---Image-01

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் பீர் கிண்ணங்களின் அடியிலிருந்து உருவாகின்றன என்று தன் தாத்தா கூறியதை நினைவு படுத்திப் பார்க்கும் மேரி, அமெரிக்காவில் குழந்தைகள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய ஆவல் கொள்கிறாள்.

தொலைபேசிப் புத்தகத்தின் ஒர் பக்கத்தின் சிறு பகுதியை கிழித்து தன்னுடன் வீட்டிற்கு எடுத்து வரும் அவள் மாக்ஸ் ஹாரோவிட்ஸ் எனும் நபரிற்கு ஒர் கடிதத்தை எழுதி அனுப்புகிறாள்.



மாக்ஸ், நீயூயார்க்கில் வசித்து வரும் 44 வயது நிரம்பிய, உடல் எடை கூடிய, ஒர் யூதன். Asperger Syndrome எனப்படும் ஒர் வகை மதி இறுக்க குறைபாட்டால் பீடிக்கப்பட்டவன். அதிகம் சாப்பிடுபவர்கள் சங்க கூட்டங்களிற்கு சமூகமளிப்பவன். சைகைகளையும், அறிகுறிகளையும் அவனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. சிரித்தல், பயம் போன்ற தன் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு உதவியாக படங்கள் கொண்ட ஒர் சிறு புத்தகம் அவனிடம் இருக்கிறது. எதிர்பாராத புதிய சம்பவங்கள் அவனை அதிக பதட்டத்துக்குள்ளாக்கி அவன் மன நிலையை பாதிப்படைய செய்து விடும்.

mary-et-max-45553 தன் தபால் பெட்டியில் மேரியின் கடிதத்தைக் காணும் அவன் திகைத்துப் போகிறான், அக்கடிதத்தைப் படிப்பதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாது திணறுகிறான். மறு நாள் காலை மேரியின் கடிதத்தை திறந்த்து பார்க்கும் மாக்ஸ், அதனுள் ஒர் சாக்லேட்டும் இருப்பதைக் காண்கிறான். நண்பர்கள் யாருமில்லாத மாக்ஸ் மேரியை தன் நண்பியாகக் கொண்டு அவளிற்கு பதில் எழுத ஆரம்பிக்கிறான்.

மேரியின் சந்தேகங்களிற்கு பதிலையும், அவள் பிரச்சினைகளிற்கு ஆலோசனைகளையும் எழுதி அனுப்புகிறான் மாக்ஸ். கடிதங்களுடன் சாக்லேட், கேக், கெட்டிப்பால் போன்ற அவரவர் நாட்டில் கிடைக்காத புதிய சுவைகளும் நட்புடன் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

தங்கள் எண்ணங்கள், வேதனைகள், கனவுகள்,ஆசைகள்,தோல்விகள் என அவர்கள் வெறுமையான வாழ்வினை எழுத்துக்களால் பகிர்ந்து கொள்கிறார்கள் இருவரும். அவர்களிடையே நட்பு மிக இயல்பாக உருவாகி இறுக்கமாக வேர் கொள்ள ஆரம்பிக்கிறது.

இயல்பாக அழும் ஆற்றல் தனக்கு இல்லை என்று ஒர் கடிதத்தில் மேரிக்கு எழுதுகிறான் மாக்ஸ், தான் அழுவதில் வழியும் தன் கண்ணீர் துளிகளை ஒர் சிறிய போத்தலினுள் சேகரித்து அவனிடம் அனுப்பி வைக்கிறாள் மேரி. மேரியின் கண்ணீர் துளிகளை தன் விழிகள் மீது ஊற்றி தான் அழுதால் எப்படி இருக்கும் என்பதைக் கண்ணாடியில் காண்கிறான் மாக்ஸ்.

தன் அயல் வீட்டுப் பையனான டேமியன் மீது காதல் கொள்ளும் மேரி, காதல் குறித்து தன் எண்ணங்களை மாக்ஸிற்கு கடிதத்தில் எழுதுகிறாள். வாழ்க்கையில் காதல் எனும் உணர்விலிருந்து அச்சத்தினால் ஒதுங்கியே இருக்கும் மாக்ஸிற்கு மேரியின் கடிதம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விட, அவன் மனநிலை தீவிரமான பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக மனநிலை மருத்துவ மனை ஒன்றில் அவன் அனுமதிக்கப்படுகிறான்.

எட்டு மாதங்களிற்கு மேலாக மாக்ஸிடமிருந்து கடிதங்கள் எதுவும் வராததால் கோபம் கொள்ளும் மேரி, அவன் தனக்கு அனுப்பிய கடிதங்களை எரித்து விடுகிறாள். மாக்ஸ் தனக்கு கடிதம் எழுதாமலிருப்பதற்கான காரணம் தானாகவே இருக்க வேண்டுமெனக் கருதி தன் மேலான வெறுப்பை அவள் வளர்த்துக் கொள்கிறாள்.

mary-et-max-45537 மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் மாக்ஸ், மேரியின் கடிதங்களினால் மீண்டும் தன் மன நலம் பாதிக்கப் படலாம் எனும் அச்சத்தில் அவளிற்கு கடிதங்கள் எழுதுவதை நிறுத்தி விடுகிறான். பல வருடங்களாக அவன் விளையாடி வரும் லொட்டோ எனும் விளையாட்டில் பெரும் தொகைப் பணத்தை வெல்கிறான் அவன்.

கிடைத்த பணத்தின் மூலம் தன் கனவுகள் சிலவற்றை அவன் நிறைவேற்றிக் கொண்டாலும் அவன் வாழ்க்கை முழுமை அடையாது இருக்கிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஒர் நாள் நன்கு முடிவெடுத்தவனாக தன் நிலை என்ன என்பதை விளக்கி மேரிக்கு ஒர் கடிதத்தை எழுதுகிறான் மாக்ஸ்.

பல காலங்களின் பின் மாக்ஸின் கடிதம் கண்ட மேரி மகிழ்சியில் திளைக்கிறாள். நண்பர்களிடையே மீண்டும் கடிதங்கள் சென்று வர ஆரம்பிக்கின்றன. மேரியின் கடிதங்களை பதட்டமில்லாது படிக்கப் பழகிக் கொள்கிறான் மாக்ஸ்.

காலத்தின் ஓட்டத்தில் தன் அயலவனான டேமியனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் மேரி. அவள் பெற்றோர்கள் எதிர்பாராத சம்பவங்களால் இறந்து போகிறார்கள். கல்வியில் சிறப்பாக செயற்படும் மேரி, தன் உயர் கல்வி ஆராய்ச்சியை மாக்ஸையும் அவன் மனநிலைக் குறைபாட்டையும் மையமாக கொண்டு அலசி, அது குறித்த ஒர் புத்தகத்தையும் வெளியிட ஆயத்தமாகிறாள். இதனை மாக்ஸிற்கு ஒர் ஆச்சர்யமாக தர அவள் விரும்புகிறாள்.

புத்தகம் வெளியாவதற்கு முன்பாக மாக்ஸிற்கு அதில் ஒரு பிரதியையும் அனுப்பி வைக்கிறாள். மாக்ஸை சந்திப்பதற்காக தான் நீயுயார்க் நகரிற்கு வரவிருப்பதையும் அவள் மாக்ஸிற்கு அறியத்தருகிறாள்.

மேரி அனுப்பிய புத்தகத்தை பெற்றுக் கொள்ளும் மாக்ஸ் அதிர்ந்து போய் விடுகிறான். மேரி தனக்கு துரோகமிழைத்து விட்டதாக கருதும் அவன், தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலாத நிலையில் கோபத்தின் உச்சத்தில் தான் கடிதங்களை எழுதும் தட்டச்சு இயந்திரத்தில் M எனும் எழுத்திற்குரிய அச்சுக் கம்பியை ஆவேசமாக முறித்து எடுத்து விடுகிறான்.

நியூயார்க் பயணத்திற்காக தன் வீட்டை விட்டுக் கிளம்பும் மேரியின் கைகளில் மாக்ஸின் கடிதம் கிடைக்கிறது. அதனைத் திறந்து பார்க்கும் அவள் அதனுள்ளே தட்டச்சு இயந்திரத்தின் M எழுத்தின் உடைக்கப்பட்ட அச்சுக் கம்பி மட்டும் இருப்பதைக் காண்கிறாள்.

mary-et-max-45547 மாக்ஸிடம் தன் மன்னிப்பை ஒர் கெட்டிப்பால் ரின்னின் மீது எழுதி அனுப்பி வைக்கிறாள் மேரி. தான் வெளியிட இருந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அவள் அழித்து விடுகிறாள். மீண்டும் அவள் மீதான வெறுப்பு அவள் மேல் குடி கொள்கிறது. எதைக் குறித்தும் அக்கறை இல்லாதவளாக குடிப்பழக்கத்திற்கு மெதுவாக அடிமையாக ஆரம்பிக்கிறாள் அவள்.

அவள் வாழ்க்கை சீர் குலைய ஆரம்பிக்கிறது. அவள் கணவன் டேமியன் வேறொரு காதலிற்காக அவளை விட்டு பிரிந்து செல்கிறான். ஒவ்வொரு நாளும் போதையின் மயக்கத்தின் பிடியில் தன் தபால் பெட்டியினை மாக்ஸின் கடிதத்திற்காக திறந்து பார்க்கும் மேரி தபால் பெட்டியினுள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தைகளை மட்டுமே கண்டு கொள்கிறாள்.

நீயூயார்க்கில் மாக்ஸ் மனிதர்களின் வேடிக்கையான நடத்தைகளை அவதானித்து பொழுதைப் போக்குகிறான். நகர மேயரிற்கு கண்டனக் கடிதங்கள் எழுதுகிறான். வெறுமையான மனத்துடன் தெருக்களில் அலையும் அவன் பிச்சைக்காரன் ஒருவனுடன் ஏற்படும் அசம்பாவிதத்தின் போது, பிச்சைக்காரன் அவனிடம் கேட்கும் மன்னிப்பு அவன் மனதின் விழிகளைத் திறந்து விடுகிறது. மேரி தன்னிடம் கேட்ட மன்னிப்பை புரிந்து கொள்கிறான் மாக்ஸ்.

தன் வீடிற்கு வரும் மாக்ஸ் மேரிக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறான். அக்கடிதத்துடன் கூடவே தன் சேகரிப்பில் இருந்த நொப்லெட்ஸ் பாத்திரங்களின் உருவ பொம்மைகளையும் அவளிற்கு அனுப்பி வைக்கிறான்.

மேரியின் வீட்டிற்கு மாக்ஸ் அனுப்பிய பொதியை எடுத்து வரும் தபால்காரர், அவள் வீட்டுக் கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் பொதியை வீட்டின் வாசலில் வைத்து விட்டு சென்று விடுகிறார். வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையின் சிறு துளிகள் அப்பொதியை ஈரம் செய்து ஆனந்தம் கொள்கின்றன.

தன் வீட்டினுள் போதை மயக்கம் கலைந்து எழும் மேரி, எதையாவது சாப்பிடுவதற்காக அலுமாரி ஒன்றைத் திறக்கிறாள். அலுமாரியினுள் அவள் தாயார் வேரா உபயோகித்து வந்த தூக்க மாத்திரைகள் அவள் கண்களில் படுகிறது.

வீட்டினுள் தூக்குப் போடத் தயாராகும் மேரி தன் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொள்கிறாள், அவள் நிற்கும் கதிரை மெதுவாக ஆட்டம் போடுகிறது. கிடைத்த தூக்க மாத்திரைகள் யாவையும் விழுங்கி மதுவைக் குடிக்கிறாள் மேரி, அவள் வீட்டு வாசலில் மாக்ஸின் கடிதம் மெளனமாக அவளிற்காக காத்திருப்பது தெரியாமலே……

mary-et-max-2009-17596-425126402 பின்பு நடக்கும் மனதை உடைக்கும் தருணங்களை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரு புதியவர்களிற்கிடையில் ஒர் கடிதத்தின் மூலம் ஆரம்பிக்கும் இருபது வருடங்களிற்கும் மேலான உண்மை நட்பின் கதையை அற்புதமாக கூறுகிறது Mary And Max எனும் இந்த அனிமேஷன் திரைப்படம்.

Plasticine எனப்படும் விசேடக் களியில் உருவாக்கப்பட்ட உருவ பொம்மைகளை கொண்டு படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவுஸ்திரேலிய இயக்குனர் Adam Elliot. காமெடிக்குள் ஒளிந்திருக்கும் காமெடி, அருமையான கதை சொல்லல், மனதைப் பிழிந்து விடும் முடிவு என பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் அவர். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் காட்சிகள் Sepia வண்ணத்திலும், நியூயார்க்கில் இடம்பெறும் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

மேரியின் முதல் கடிதத்திற்கு மாக்ஸ் பதில் எழுதும் காட்சி அருமையான இசையுடன் ஒர் நடனம் போல் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதம் மனதைக் கொள்ளை செய்கிறது. தன் வீட்டு வாசலை தாண்டி வெளியே வர பயம் கொண்ட லெனின், திக்குவாய் டேமியன், கண்பார்வை குறைந்த இவி, குடி மற்றும் திருட்டுப் பழக்கம் கொண்ட வேரா என திரைப்படத்தில் வரும் துணைப்பாத்திரங்களையும் அவர்களிற்குரிய குறைகளைக் கொண்டே பார்வையாளர்களை கவரச் செய்து விடுகிறார் இயக்குனர்.

மனிதர்களிடம் இருக்கும் சில குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழியே இல்லாமல் இருக்கலாம், சில மனிதர்களின் வாழ்வின் பாதைகளும் அதன் ஓரங்களும் மலர்களால் அழகூட்டப்படாது கஞ்சல்களால் நிறைந்திருக்கலாம் ஆனால் மனிதர்கள் தம்மைத் தாமே வெறுத்து வாழ்வை சீரழித்தல் ஆகாது என்பதை நட்பின் மகத்துவத்துடன் எடுத்துக் கூறுகிறது திரைப்படம். அனிமேஷன் திரைப்படங்களில் இப்படம் ஒர் அரிய முத்து.

நண்பர்களே, உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களிற்காக நீங்கள் காத்திருந்திருக்கிறீர்களா? எதிர்பார்த்த கடிதங்கள் வராத போதும் உங்கள் உயிர் நண்பன் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்ட போதும் ஏற்படும் வேதனையை உங்கள் மனம் உணர்ந்ததுண்டா? உங்களுடன் மனம் திறந்து பேசுவதற்கு யாருமே இல்லாத வலியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்களிற்கு ஒர் நண்பன் இருந்தால், உங்கள் நட்பு உண்மையாகவே உண்மையான நட்பாகவிருந்தால் உங்கள் நண்பணின் விழிகளில் வழிவது கூட உங்கள் கண்ணீர்தானே! [*****]

ட்ரெயிலர்

8 comments:

  1. விரிவான விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மையான நட்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த அனிமேஷன் படம் உள்ளது. நன்றி நண்பரே. படத்தின் சோகம் இழையோடும் இடம் பற்றிய வார்த்தைகள் என் தனிமையின் வலியை உணர்த்தியது....

    ReplyDelete
  3. தலைப்பே ஒரு கவிதை. இதுக்கு மேல வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  4. //உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களிற்காக நீங்கள் காத்திருந்திருக்கிறீர்களா? எதிர்பார்த்த கடிதங்கள் வராத போதும் உங்கள் உயிர் நண்பன் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்ட போதும் ஏற்படும் வேதனையை உங்கள் மனம் உணர்ந்ததுண்டா?//

    காதலரே, நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் ஏற்படுத்தும் வலி ஆழமானது.

    உணர்ந்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.

    ReplyDelete
  5. படம் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை
    இறுதி பத்தியில் உங்களது வரிகள்
    நெஞ்சை பிசைக்கிறது. (எப்படியும்
    அடுத்த வாரத்திற்குள் பார்த்து விடுவேன்)

    ReplyDelete
  6. ரமணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் டைகர் அவர்களே உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே மனம் திறந்த உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே, படத்தின் பிரதி கையில் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். படத்தின் இறுதிக் காட்சியின் முன் என் வரிகள் ஒன்றுமேயில்லை நண்பரே.

    ReplyDelete
  7. நன்றி நண்பர் பின்னோக்கி அவர்களே.

    ReplyDelete