Sunday, September 27, 2009

பாக்தாத்தில் பறக்கும் பட்டம்


பாக்தாத்தில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் ஒர் பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது Bravo அணி. ப்ராவோ அணியின் பணி நகரத்தில் எதிரிகளால் வைக்கப்படும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதாகும். ப்ராவோ அணியின் தலைவனாக தாம்சன்(Guy Pearce) என்பவனும் அவனின் தலைமையின் கீழ் சான்போர்ன் (Anthony Mackie) மற்றும் எல்ரிட்ஜ் (Brian Geraghty) என இருவரும் கடமையாற்றி வருகிறார்கள்.

நகரில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைக்கும் தருணத்தில் நிகழும் எதிர்பாராத ஒர் திருப்பத்தினால் அவ்வெடிகுண்டு வெடித்துவிட சம்பவ இடத்திலேயே தாம்சன் இறந்து போகிறான். தாம்சனின் மரணம் எல்ரிட்ஜின் மனதில் ஒர் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ப்ராவோ அணியில் தாம்சனின் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்படுகிறான் வில் ஜேம்ஸ். ப்ராவோ அணியின் சேவைக்காலம் பாக்தாத்தில் நிறைவு பெறுவதற்கு இன்னமும் 39 நாட்களே பாக்கி உள்ள நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதை ஒர் பந்தயமாகக் கொண்டு அது தரும் தீவிர உணர்விற்கு சற்று அடிமையாகி விட்ட ஜேம்ஸின் செயல்கள் ப்ராவோ கம்பனியின் மற்ற இரு வீரர்கள் மனதிலும் திகிலை ஏற்படுத்துகின்றன. தாம் உயிருடன் வீடு திரும்புவோமா என்ற ஐயம் அவர்கள் மனதில் கேள்வியாக ஆரம்பிக்கிறது…..

அந்நிய நாடு, அங்கு தங்கள் நிலை கொள்ளலை தீவிரமாக வெறுக்கும் மக்கள், கிடைக்கும் தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு கச்சிதமான வெடிகுண்டுகளைத் தயாரித்து அதனைப் பொறியாக்கி விடும் எதிரிகள், இவ்வகையான சூழ்நிலையில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ள மூன்று ராணுவ வீரர்களை சுற்றி சுழல்கிறது கதை.

hurtlocker_haut23 சான்போர்னும், எல்ரிட்ஜும் எப்படியாவது 38 நாட்களையும் சேதங்கள் எதுவுமின்றி கழித்து, பாதுகாப்பாக வீடு திரும்பி விட வேண்டும் என விரும்புகையில், அவர்களின் மனக்கனவுகளை கலைப்பது போல் வெடிகுண்டுகளுடன் கில்லி விளையாட்டு விளையாடுகிறான் ஜேம்ஸ்.

அவன் செயலிழக்கச் செய்யும் ஒவ்வொரு வெடிகுண்டும் அவனிற்கு ஒர் வெற்றிக் கேடயமே. தான் செயலிழக்க செய்யும் வெடிகுண்டுகளின் ட்ரிக்கர் பகுதிகளை ஞாபகப் பொருளாக சேகரிக்கும் வழக்கம் கொண்ட வெடிகுண்டுக் காதலன் அவன். வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல் எனும் செயலில் கிடைக்கும் தீவிர உணர்ச்சிக்கு அடிமையான அவன், தன் பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப் படதாவன். அவனின் இவ்வகையான செயல்கள் ஏனைய வீரர்களையும் ஆபத்தின் எல்லைக்குள் பதட்டப்பட வைப்பதை அவன் உணராதவனாகவிருக்கிறான்.

தாம்சனின் மரணத்தின் பின், தீவிரமான சந்தர்பங்களில் கூடுதலாக பதட்டம் கொள்பவனாக இருக்கிறான் எல்ரிட்ஜ், அவன் மனநிலையை உணர்ந்தும் அவனை பிடிவாதமாக போரிற்குள் தள்ளி விடுவதில் கவனமாக இருக்கிறது அதிகாரம்.

எதிர்காலக் கனவுகள் குறித்து அதிக அக்கறை இல்லாத சான்போர்ன், தன் அணியின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒர் நேர்மையான வீரன்,அந்த உறுதியான வீரனைக்கூட உடைந்து சிறு பிள்ளை போல அழவைத்து விடுகிறது ஒர் மனித வெடிகுண்டு ஏற்படுத்தும் பயங்கரம்.

படபடவென சீறிப்பாயும் துப்பாக்கி வேட்டுக்கள், ராக்கெட்டுகள், அதிர வைக்கும் விமானத் தாக்குதல்களை சற்று ஓய்வாக இருக்க வைத்து விட்டு, வெடிகுண்டுகளை பேச வைத்திருக்கிறது The Hurt locker எனும் இத்திரைப்படம்.

hurt_locker_24 வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்படும் தருணங்களை அதன் தீவிரம் குறையாது அப்படியே காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். வெடிகுண்டை சுற்றிப் போடப்படும் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும், வெளியேயும் செயற்படும் வீரர்களின் பதட்டத்தையும், அவர்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் பயத்தையும் திரையைக்கடந்து பார்வையாளனிடம் கடத்தி விடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் Kathryn Bigelow.

வீரர்கள் தங்கள் உயிர் மேல் கொண்டுள்ள ஆசை, அவர்களின் பயங்கள், உளவியல் பாதிப்புக்கள், தீவிர செயல்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள போதை, பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான ஏக்கம், இதை எல்லாம் அலட்டிக் கொள்ளாது தம் வாழ்வைப் பார்க்கும் பாக்தாத் வாழ் மக்கள், ஓயவே போகாத எதிரிகள் [ யார் எதிரி? யார் நண்பண் என்பதும் ஒர் பெரிய கேள்வியாக வீரர்கள் முன் நிற்கிறது] என இயலுமான வரை உண்மை நிலையைக் காட்ட முயன்றிருக்கிறார் பிஜ்லோ, இருந்தாலும் வெடிகுண்டுக் காட்சிகள் முன் இவை இலகுவாக மறக்கடிக்கப்படுகின்றன என்பதால் பார்வையாளன் மனதில் இவை அதிகம் பதிய மறுக்கின்றன. இதுவே படத்தின் பலவீனமாகி விடுகிறது.

2009-demineurs கார் வெடிகுண்டு, பிரேத வெடிகுண்டு, மனித வெடிகுண்டு, குப்பைகளிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு என வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் காட்சிகள் மிகத் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உடலில் அதிரினலின் ஓட்டத்தை அதிகரிக்கும் காட்சிகள் இவை. பிஜ்லோவிற்கு இதற்கு சொல்லித்தர வேண்டியதில்லை என்பதை Point Break படத்தினை ரசித்தவர்கள் கூறுவார்கள்.

போர்க் களத்தை விட்டு பாதுகாப்பாக வீடு திரும்பி உறவுகளை அணைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள் மத்தியிலும், போர் எனும் போதைக்கு அடிமையாகி, சாதாரண வாழ்வை வாழமுடியாத வேதனையான நிலையில் போரை நோக்கி விரைந்து ஓடும் பரிதாபமான வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறார் பிஜ்லோ.

வெடிகுண்டுகளை உருவாக்குவதும், செயலிழக்க செய்வதும், அதற்குப் பலியாவதும் மனிதர்கள்தான் இருப்பினும் பாக்தாத் நகரின் மீதாக சிறுவன் ஒருவன் ஆசையுடன் ஏற்றிய பட்டம் ஒன்றும் காற்றில் அலைந்தவாறே அதன் அழகுடன் பறந்து கொண்டுதானிருக்கிறது. வெடிகுண்டுகள் தாக்கி விடாத உயரத்தில். [***]

ட்ரெயிலர்

7 comments:

 1. அன்பு நண்பரே

  இப்படத்தை பற்றி விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளார்கள். மற்ற யுத்தம் தொடர்பான படங்களை விட வித்தியாசமாக உள்ளது என. யுத்தம் தொடர்பான படங்களை பொதுவாக ஆண் இயக்குநர்களே இயக்கியிருக்கின்றார்கள். விதிவிலக்கு இருந்தாலும் விமர்சகர்களின் பாராட்டை இந்தளவுக்கு பெற்றதில்லை.

  உண்மையான மனித உணர்ச்சிகளை வைத்து எந்த களத்தில் திரைப்படத்தை இயக்கினாலும் வெற்றி பெறும் என்பதை ஹாலிவூட் மீண்டும் நிருபித்திருக்கிறது.

  படத்தின் ஆங்கில தலைப்பிற்கும் ப்ரென்ஞ் தலைப்பிற்கும் வித்தியாசம் இருக்கின்றதே? வெடிகுண்டு எடுப்பவர்கள் என்ற அர்த்ததில்தானே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது?

  ஆங்கில படங்களின் இணை வார்த்தைகளும் (டெக் லைன்ஸ்) நன்றாகவே இருக்கும். அந்த வார்த்தைகளும் அப்படியே ப்ரென்ஞ்சிலும் மொழி பெயர்க்கப்படுமா?

  நடுநிலையான விமர்சனம். இது போல் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. ஜோஸ், நீங்கள் குண்டை அகற்றுபவர்கள் என்று கூறிய அர்த்ததிலேயே பிரெஞ்சு மொழியில் இத்திரைப்படம் தலைப்பிடப்பட்டிருக்கிறது. சில படங்களின் தலைப்பை அப்படியே விட்டு விடுவார்கள்.

  வீரர்களின் உணர்சிகளை இன்னமும் சற்று ஆழமாகக் காட்டியிருக்கலாம், இருப்பினும் காட்டிய அளவில் வெற்றி பெற்றதே மகிழ்ச்சிதான்.

  ஊடகங்களில் காணக்கிடைக்கும் வீண் வீரப் பேச்சுக்களை ஒர் வகையில் இப்படம் ஒர் ஓரமாக தூக்கி எறிந்து விடுகிறது என்பதுதான் படத்தில் எனக்குப் பிடித்த அமசம்.

  டெக் லைன்ஸ் பெரும்பாலும் பிரெஞ்சிலேயே மொழிபெயர்க்கப்படும், சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளபடியே இடம்பெறும், உச்சரிப்பை நீங்கள் அறிவீர்கள்தானே.

  கிண்டி பேருந்து நிலையத்தில் மெகான் ஃபாக்ஸிற்கும் ஏவா மெண்டஸிற்கும் இடையில் நடந்த மோதலிற்கு நீங்கள் காரணமாகவிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 3. முதல் பத்து நிமிட படம்..சூப்பர்... ரியலிஸ்டிக்கான படம்..

  ReplyDelete
 4. நான் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை நண்பரே. விரைவில் பார்க்க வேண்டியதுதான். இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ம்.. டோரண்டே துணை!

  விமர்சனத்திற்கு நண்றி நண்பரே

  ReplyDelete
 5. நண்பர் பின்னோக்கி, உண்மைதான் ஆரம்ப கட்டங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். படத்தில் இடம் பெறும் ஸ்னைப்பர் மோதல் காட்சியும் நன்றாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ஜே, டோரண்ட் துனையுடன் தவறாது பார்த்திடுங்கள். தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, உங்களின் பதிவை படித்துவிட்டு படம்
  பார்ப்பதற்கு முதல் பத்து நிமிடத்தில் மூச்சே நின்று விடும் அளவிற்க்கு
  அருமையான காட்சிகள்.
  //உண்மையான மனித உணர்ச்சிகளை வைத்து எந்த களத்தில் திரைப்படத்தை இயக்கினாலும் வெற்றி பெறும் என்பதை ஹாலிவூட் மீண்டும் நிருபித்திருக்கிறது.//
  Josh சொன்னதை வழிமொழிகிறேன்
  //சிறுவன் ஒருவன் ஆசையுடன் ஏற்றிய பட்டம் ஒன்றும் காற்றில் அலைந்தவாறே அதன் அழகுடன் பறந்து கொண்டுதானிருக்கிறது. வெடிகுண்டுகள் தாக்கி விடாத உயரத்தில்.// பட்டம் போல் பறவையை போல் விட்டு விடுதலை ஆகத்தான் மனம்
  ஏங்குகிறது நண்பரே!

  ReplyDelete
 7. நண்பர் வேல்கண்ணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. பட்டமும், பறவையும் ஆகிடுவோம்.

  ReplyDelete