Sunday, September 20, 2009

தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்


இருபது வருடங்களிற்கு முன்பாக தென்னாபிரிக்காவின் ஜோகானாஸ்பெர்க் நகரத்தின் மீது செயலிழந்து விடுகிறது வேற்றுக் கிரகவாசிகளின் ஒர் விண்கலம். செயலிழந்த விண்கலத்தின் உள்ளே நுழையும் அதிகாரிகள் அங்கு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும், இறால் போல் தோற்றமளிக்கும் வேற்றுக் கிரகவாசிகளைக் காண்கிறார்கள்.

வேற்றுக் கிரகவாசிகளின் கலம், அது அந்தரத்தில் நிற்குமிடத்தை விட்டு நகர முடியாததால், அதன் கீழே இருக்கும் ஒர் நிலப்பகுதியில் இறால்களை அடைக்கலம் தந்து தங்க வைக்கிறார்கள் அதிகாரிகள். அந்த முகாம் டிஸ்டிரிக் 9 என அழைக்கப்படுகிறது.

இருபது வருடங்களின் பின்பாக டிஸ்டிரிக் 9 ஒர் தகரக் கொட்டகைச் சேரியாகவே மாறிவிட்டிருக்கிறது. இறால்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இறால்கள் முகாமை விட்டு வெளியேறி விடாத வண்ணம் பலத்த காவல் அங்கு நிலவுகிறது. முகாமினுள் புகுந்து விட்ட கொடிய நைஜீரிய ஆயுதக் கும்பல் ஒன்று இறால்களின் அப்பாவித்தனத்தினால் பூனை உணவு வியாபாரத்தில் கொழித்து வளர்கிறது.

கால ஓட்டத்தில் இறால்கள் குறித்த நகர மக்களின் அபிப்பிராயம் இரக்கத்திலிருந்து இனவெறுப்பாக மாறிவிட்டிருக்கிறது. இறால்கள் நகரத்திலிருந்து வேறு எங்கேயாவது சென்று தொலையட்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறார்கள் அவர்கள்.

எனவே இறால்களை டிஸ்டிரிக் 9லிருந்து வெளியேற்றி, வேறு ஒர் பகுதியில் தங்கவைக்கும் பொறுப்பை MNU எனும் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அந்நடவடிக்கைக்கு தலைமை தாங்க Wikus Van Der Merwe எனும் அதிகாரியையும் நியமிக்கிறது.

District600 MNUவின் ஆயுதப் பிரிவு, மற்றும் சில அதிகாரிகள் துணை வர டிஸ்டிரிக் 9க்குள் நுழையும் விக்கஸ், அங்கு பரிதாபமான நிலையில் வாழும் இறால்களிடம் அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போகும் தகவலைக் கூறி அவர்களை அதற்கு இணங்க வைக்க முயல்கிறான்.

ஒர் இறாலின் தகரக் கொட்டகையில் நடக்கும் தேடலில், இறால்கள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த திரவக் குடுவையொன்றைக் கண்டெடுக்கும் விக்கஸ், அதனை திறந்து பார்க்க முயல்கையில் அதிலிருந்த திரவத்தை தன் முகத்தின் மீது தவறுதலாக தெளித்துக் கொள்கிறான்.

4a681f124e226 டிஸ்ரிக் 9 ஐ விட்டு வெளியேறும் விக்கஸின் உடல் மாற்றம் காண ஆரம்பிக்கிறது. மருத்துவமனையில் தன் உடலை பரிசோதித்துப் பார்க்கும் விக்கஸ் தான் ஒர் இறாலாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான்.

விக்கஸின் நிலை பற்றி அறிந்து கொள்ளும் MNU அவனை தன் பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்து வந்து, அவன் விருப்பத்திற்கு எதிராக அவன் மேல் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது.

விக்கஸின் உடலில் வேற்றுக்கிரக உயிரினதும், விக்கஸினதும் மரபணுக்கள் சமனிலை அடைந்திருக்கும் தருணத்தில் அவன் உடல் உறுப்புக்களை அகற்றி கொள்ளை லாபம் பார்க்க விரும்புகிறது MNU. MNUவின் காவலிருந்து தப்பும் விக்கஸ், செல்ல வேறு இடம் எதுவுமின்றி அடைக்கலம் தேடிச் செல்லும் இடம் டிஸ்டிரிக்ட் 9 ஆகவிருக்கிறது..

ஒர் விபரணக்கதை போல், பேட்டிகள் மற்றும் ஆவண ஒளிப்பதிவுகள் வழி தம் பரிதாபமான நிலைகளிலிருந்து விடுதலை பெற விரும்பும் விக்கஸ் மற்றும் கிறிஸ்டோபர் எனும் இறால் ஆகியோரின் போரட்டத்தை திறம்பட திரையாக்கியிருக்கிறார் இயக்குனர் Neill Blomkamp.

நட்புக்கரம் நீட்டும் வேற்றுக் கிரக உயிர் அல்லது மனித குலத்தை அழிக்க வந்த வேற்றுக் கிரக உயிர் எனும் வழக்கத்தினை தவிர்த்து, மனிதருக்கு அடங்கிப் போய், அடக்கு முறைக்குள்ளாகும் வேற்றுக் கிரகவாசிகளை அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.

அவர்களிற்குரித்த தகுதியான வாய்ப்புக்கள் வழங்கப்படாது அவலத்தில் விடப்படும் ஒர் இனமானது தன் விடுதலைக்கு வழி தேடுவது இயல்பானது, இதில் விக்கஸும் தன் சுய நலம் கருதி இணைந்து கொள்வதை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறார் ப்லம்காம்ப்.

வேற்றின வெறுப்பு, அகதி முகாம்களின் உள்ளே தனி ராச்சியம் நடத்தும் வன்முறைக் கும்பல், அகதிகளைக் தன் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பு போன்ற சமகால விடயங்களை திரைக்கதையில் நேர்த்தியாக சேர்த்திருக்கிறார் அவர்.

டிஸ்டிரிக்ட் 9க்குள் விக்கஸ் நுழைந்தபின் படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது. சிறப்பான திருப்பங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகளும் இடையே வந்து படத்தினை கூடுதலாக ரசிக்க செய்து விடுகின்றன.

ஆரம்பத்தில் இறால்களை ஏமாற்றி, பின்பு அவர்களிடமே தஞ்சமடைந்து தன் சுயநலத்திற்காக எதையும் செய்ய தயாராகவிருக்கும் பாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் நடிகர் Sharlto Copley. ஆரம்பத்தில் பார்வையாளனின் வெறுப்பையும், பின்பு இரக்கத்தையும் சம்பாதிக்கும் அவர் இறுதியில் மனங்களை நெகிழச் செய்து விடுகிறார்.

d9-christopher வேற்றுக்கிரக இறால்கள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை என்று நம்புவது சிரமம். அவ்வளவு இயல்பாக [நடித்து] இருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கூட உணர்சிகளைக் காட்டி விடும் நுட்பம் பாராட்டுக்குரியது.

ஆகாயத்தில் ஒரு கமெரா, தோளில் பயணிக்கும் ஒர் கமெரா என வேகமான கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவும், எடிட்டுங்கும் சிறப்பாக இருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டாலும் தன் தரத்தினால் ரசிகர்களை அசத்திப்போட்டு விடும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் தான் ஒருவராக இருப்பதில் பீட்டர் ஜாக்சன் பெருமைப்படுவார் என்பது நிச்சயம்.

தன் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாத இனங்களின் வேதனைகளை வேலிகள் கொண்டோ, எல்லைகள் மூலமோ தணித்திட முடியாது. இருக்கும் நிலத்திலேயே வேர் பிடித்து விருட்சமாகி விடும் வேதனையது. இறால் ஒன்று, குப்பைகளில் தேடி எடுத்த தகரங்களில் உருவாக்கும் ரோஜாக்களில் கூட தன் துணையின் மீதான அன்பும், அவளை அணைக்க முடியவில்லையே ஏக்கமும் கலந்தேதான் இருக்கிறது. (****)

நண்பர்களிற்கு என் ரம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள்.

15 comments:

 1. நண்பர் மாயூரேசன் முதன்முதலில் இதனைப் பற்றி கூரியவுடனே தேடித் பிடித்து பார்த்து விட்டேன். கதைக் களம் ஒரு யூ டர்ன் எடுத்ததால் ஆர்வத்தை தூண்டியது.

  நல்லதொரு படத்தை பற்றிய நல்ல பதிவு.

  ReplyDelete
 2. //தன் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாத இனங்களின் வேதனைகளை வேலிகள் கொண்டோ, எல்லைகள் மூலமோ தணித்திட முடியாது. இருக்கும் நிலத்திலேயே வேர் பிடித்து விருட்சமாகி விடும் வேதனையது.//

  இதன் உண்மையை அந்த வழியை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.

  நிதர்சனமான உண்மை.

  ReplyDelete
 3. தலைப்பின் மூலமே ஒரு கவிதையை படைத்து விட்டீர்கள்.

  என்னுடைய கணிப்பின் படி இந்த படத்தை இரண்டாவது முறை பார்த்தால் இன்னும் சில நுண்ணிய பின்புல கருத்துக்கள் சிறப்பாக விளங்கும்.

  ReplyDelete
 4. காதலரே,
  இப்படத்தை நானும் பார்த்தேன் மற்ற Alien படங்களில் இருந்து மாறுபட்டு Aliens ஐ அகதிகள் போல் காட்டி இருப்பார்கள்.வித்தியாசமான அதேசமயம் ரசிக்க வைத்த படம் . climax மறக்கமுடியாத ஒன்று . அருமையான பதிவு நண்பரே

  அன்புடன்,
  லக்கி லிமட்

  ReplyDelete
 5. நண்பர் ரமேஷ், உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், கருத்துக்களிற்கு நன்றி.

  காமிக்ஸ் பிரியரே, உங்கள் உள்ளம் தொடும் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ஜாலிஜம்ப்பர் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் லக்கிலிமட், ஆம் நண்பரே மனதை நெகிழச் செய்யும் இறுதிக்காட்சி. கிளைமாக்கிஸிலிருந்து உதித்ததே பதிவின் தலைப்பும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. நண்பரே அருமையான விமர்சனம். ஆரம்பத்தில் அந்த இரால்களை வெறுத்தாலும், தந்தையைத் தேடும் குட்டி றால் என்னை கலங்க வைத்துவிட்டது.

  3 வருடத்தின் பின்னர் கிருஸ்தோபர் வந்து உலகை பழிவாங்குவானா???? பாகம் இரண்டு வருமா???

  ReplyDelete
 7. excellent is the only word that i have for this post.

  nothing more, nothing less.

  Vedha
  Actually You Can Skip These Pages

  ReplyDelete
 8. நண்பரே நீங்கள்
  பதிவிட்ட உடனே தேடிபிடித்து பார்த்தேன்
  அருமையான விமர்சனம் படம் பார்ப்பதற்கு
  எளிதானது. முக்கியமாக
  //வேற்றுக்கிரக இறால்கள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை என்று நம்புவது சிரமம். அவ்வளவு இயல்பாக [நடித்து] இருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கூட உணர்சிகளைக் காட்டி விடும் நுட்பம் பாராட்டுக்குரியது. //
  என்பது உண்மைதான்.
  வேல் கண்ணன்

  ReplyDelete
 9. காதலரே,

  டிஸ்ட்ரிக் 9 வெளிவந்த தருணத்திலிருந்து அதன் விமரிசனங்களை பலதரபட்ட தளங்களில் ரசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் அதை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்.

  // நைஜீரிய ஆயுதக் கும்பல் ஒன்று இறால்களின் அப்பாவித்தனத்தினால் பூனை உணவு வியாபாரத்தில் கொழித்து வளர்கிறது. //
  பூனைக்கு தீனியா... அது அப்பாவபட்ட இறால்கள் அல்லவே...

  //அங்கு பரிதாபமான நிலையில் வாழும் இறால்களிடம் அவர்களை ... மனிதருக்கு அடங்கிப் போய், அடக்கு முறைக்குள்ளாகும் வேற்றுக் கிரகவாசிகளை அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.//
  // அவர்களிற்குரித்த தகுதியான வாய்ப்புக்கள் வழங்கப்படாது அவலத்தில் விடப்படும் ஒர் இனமானது தன் விடுதலைக்கு வழி தேடுவது இயல்பானது, //
  தன் தேசத்தை விட்டு பிரிந்து அன்னிய மண்ணில் நேசத்திற்காக வாடும் ஜீவன்களின் உணர்வுகளை இதை விட சிறப்பாக விவரித்து விட முடியாது. அதில் உங்களை விட சிறந்தவர் இருக்க முடியுமா...

  வழக்கமாக அண்டகிரகவாசிகள் பூமியை தாக்கி அழிக்கும் வேலையில் தான் சித்தர்கள் என்று படங்கள் வரிசை கட்டும் போது, அவர்களை ஒரு தனிமைப்படுத்தபட்ட, அடங்கி போன சமூகமாக சித்தரிப்பதில் இயக்குனர் சாதித்து காட்டியிருக்கிறார். இதன் மூலம் நிகழ்வாழ் அகதிகளின் நிலையை மறைமுகமாக பார்ப்போர் நெஞ்சங்களில் விதைக்க முயன்றிருக்கிறார் போல... படத்தின் விமர்சனங்கள் அதில் அவர் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே பறை சாற்றுகிறது.

  ஆனால், ஒன்று. அண்டை கிரக வாசிகள் ஏன் நம்மை விட உருவத்தில் கேவலமாக தான் இருக்க வேண்டும் என்று படாதிபதிகள் நினைக்கிறார்களோ... நம்மை விட சிறந்த முக மற்றும் அகத்தோற்றம் படைத்தவர்களாக அவர்கள் இருக்க கூடாதா ? இல்லை அழகு என்ற அளவுக்கோளிற்கே நாம் நம்மையே உருவகபடுத்தி பார்ப்பதினால் எழும் பார்வை கோளாறா.? பதில் அண்டசராசரங்களில் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறதோ :)

  உங்கள் பதிவு, படத்தை சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகபடுத்துகிறது. விரைவில் தரமான பிரதியில் பார்த்து விட்டு கருத்து பதிகிறேன்.

  தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்... அருமையான தலைப்பு. தொடர்ந்த பிய்த்து உதருங்கள்.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 10. நண்பர் ஜே, இப்படத்தின் இரண்டாவது பாகம் வருமா என்பது தெரியாது, ஆனாலும் முதல் பாகமே நிறைவாகத்தான் உள்ளது என்று கருதுகிறேன். கருத்துக்களிற்கும் தொடரும் உங்கள் ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் வேதா அவர்களே, மனம் குளிர்விக்கும் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் வேல்கண்ணன் அவர்களே, நீங்கள் படத்தினை ரசித்திருப்பது எனக்கு மகிழ்சியே, கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ரஃபிக், அண்டைக்கிரக வாசிகளிற்கு நாம் எப்படி தெரிகிறோம் என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

  சில வேளைகளில் அழகென்பதன் அர்த்தம் அங்கு வேறாக இருக்கலாம். அல்லது அதற்கு அர்த்தமே இல்லாமல் இருக்கலாம்.

  அன்பை வெளிப்படுத்துவதில் தான் அழகு ஒளிந்திருக்கிறதோ என்னவோ. அப்படிப் பார்த்தால் நீங்கள் பேரழகன் அன்பு நண்பரே.

  நீங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு தீவிர பயிற்சி எடுப்பதாக வரும் செய்திகள் உண்மைதானா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே[ பாலிருக்கும்...ம்ம்ம், பழமிருக்கும்..ம்ம்ம்]

  ReplyDelete
 11. One of the best Alien movie in all time.
  Pathivitku Nantri Nanbarey.

  ReplyDelete
 12. அன்பு நண்பரே,

  நிறைவான விமர்சனம். ஹாலிவூட் படங்களிலும் இது ஒரு வித்தியாசமான ஒன்றே என விமர்சகர்கள் சொன்னார்கள். விமர்சனதை ரபீக் அலசிவிட்டதால் அதை அப்படியே வழிமொழிகிறேன்.

  ஆனால் இந்தியாவில் இப்படம் வந்தாலும் சில நாட்களே ஒடுமென்ற நிலைமை. முதலில் வரட்டும். பார்க்கலாம். எங்கள் கதாநாயகர்கள் ஒரு ஆயுததாங்கிய பட்டாலியனையே நிராயுதபாணியாக வீழ்த்துபவர்கள். ஏலியன்கள் எப்போதுமே வில்லன்கள்தான். அதனை கதாநாயகன் ஒரு அழகிய பெண்ணுடன் (குறிப்பு அவள் எப்போதுமே ஒரு டாக்டர்) சேர்ந்து அதன் தாக்குதலை முறியடித்து, பின்னர் தன்னங்தனியாக துவந்த யுத்தம்செய்து அதனையும் முறியடிப்பார்.

  பீட்டர் ஜாக்சன் ஹாபிட் ப்ரொஜெக்ட்டிலிருந்து விலகிவிட்டது வருத்தமளித்தது. அவரின் அடுத்த படம் ஒரு சூப்பர் நேச்சுரல் படமென்றார்கள். பார்க்கலாம்.

  ReplyDelete
 13. அனானி அன்பரே, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ஜோஸ், பீட்டர் ஜாக்சன் அவர்கள் ஹாபிட்டிலிருந்து விலகியது ஒர் இழப்புத்தான். அவருடைய அடுத்த படமான The Lovely Bones நீங்கள் கூறியபடியே வித்தியாசமான ஒரு கதை கொண்ட படமாகத்தான் இருக்கிறது. ஆனால் பீட்டர் ஜாக்சன் கல்யாண ராமன் படத்தை பார்திருப்பாரோ எனும் சந்தேகம் எழாமல் இல்லை :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 14. மீண்டும் ஒரு நல்ல விமர்சனப் பதிவை பிரசுரித்ததற்கு நன்றி. நானும் இப்படத்தை பார்தேன். இன்னொரு தடவை பார்க்கலாம். சிற்ந்தபதிவு. ‍‍‍- தாரணி

  ReplyDelete