Friday, September 11, 2009

கலீஃபோட 1001 ராவுகள்


izno2 மாண்புமிகு கலீஃப் ஹரூன் எல் புஷா அவர்களின் நல்லாட்சியில், மாதம் நான்கு வாரங்களுடன் அழகு கெடாது இருக்க, வார இறுதிகளில் ராஜ்ஜியத்தின் பதிவர்கள் பதிவுகளை இயற்ற, இதனையெல்லாம் பொருட்படுத்தாத கலீஃப், தன் அண்டை நாட்டு ஜனாதிபதியான ஹாமையும், ஹாமின் சகோதரரும் முதல் மந்திரியுமான ரிக்கையும் வரவேற்க தன் மாளிகையுடன் விழாக்கோலம் பூணுகிறார்.

ஹாம், மற்றும் ரிக்கிற்கு விமரிசையான வரவேற்பு அளிக்கிறார் கலீஃப். ஜனாதிபதி ஹாமுடன் அவர் செல்லப்பிராணியான நோலூஸும், ஜனாதிபதியின் பிரம்மாண்டமான தலைப்பாகையும் கூடவே வருகின்றன. போக்கேமோன் போன்ற தோற்றம் கொண்ட விசித்திரப் பிராணியான நோலூஸ், விசீர், கலீஃப் ஆகிய சொற்களை கேட்டால் தன்னிலை இழந்து, அது என்ன செய்கிறது என்பது அதற்கும், மற்றவர்களிற்கும் தெரியாத ஒர் நிலையை அடைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கலீஃப்பும், ஜனாதிபதியும் வழமையான உரையாடல்களை முடித்தபின், ஜனாதிபதி ஹாம், தங்கள் நாட்டு வழக்கப்படி இன்னமும் ஒன்பது நாட்களில் தான் தன் பதவியை தங்கள் நாட்டின் முதல் மந்திரியான தம்பிற்கு அளித்துவிட்டு, தம்பியின் முதன் மந்திரி பதவியை தான் ஏற்றுக் கொள்ளப் போவதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஒவ்வொரு 1001 இரவுகளிற்கும் ஒரு முறை இந்தப் பதவி மாற்றம் தொடர்ந்து இடம் பெறும் என்பதனையும் அவர் அறியத் தருகிறார்.

தன் ராஜ்ஜியத்திற்கு வருகை தந்த விருந்தினர்களை மசாலா மீன் விருந்து தந்து அசத்துகிறார் கலீஃப். உணவு உண்ணும் வேளையில் இடம்பெறும் உரையாடல்கள் வழி தங்கள் ராஜ்ஜியத்திலும் கூட 1001 இரவுகளிற்கு ஒர் முறை பதவிகளை மாற்றிக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கலீஃபும் அவர் பேரன்பிற்குரிய மந்திரி இஸ்னோகுட்டும் அறிந்து கொள்கிறார்கள்.

மிகக் கடினமான பணிகள்!!! நிறைந்த தன் கலீஃப் பதவியை தன் அன்பிற்கும், நம்பிக்கைக்குமுரிய மந்திரி இஸ்னோகுட்டிற்கு தந்துவிட்டு தான் சற்று இளைப்பாறலாம் என மனதில் திட்டம் போடும் கலீஃப், ரகசியமாக அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

கலீஃபின் மனதை அறியாத இஸ்னோகுட், மாளிகை நூலகத்தில் சட்டப்புத்தகம் ஒன்றை தேடி எடுத்து, 1001 இரவுகள் தோறும் பதவியை மாற்றிக் கொள்வதற்கான சட்ட நுணுக்கங்களை ஆராய்கிறான். ஏற்கனவே ஒர் முறை கலீஃப் பதவியில் இருந்திருந்தால் மட்டுமே 1001 இரவுகள் முறையில் தான் கலீஃபாக பதவியேற்கலாம் என்பதை அறிந்து கொள்ளும் இஸ்னோகுட் மனதில் புதிய திட்டம் ஒன்று பாலைவனத்தில் தோன்றிய பம்ப் செட்டாக உருவெடுக்கிறது.

izno3 தன் மனதில் ரகசியத் திட்டத்தை அடைகாத்துக் கொண்டிருக்கும் கலீஃப்பை அணுகும் இஸ்னோகுட், கலீஃபின் ராஜ்ஜியத்தை சற்று விரிவு படுத்த வேண்டிய அவசியத்தை அவரிற்கு விளக்குகிறான். இஸ்னோகுட்டின் விளக்கங்களால் திருப்தி அடையும் கலீஃப், அவன் புதிய நாடுகளை வெல்வதற்கு அவனிற்கு அனுமதி வழங்குகிறார்.

கலீஃபின் ராஜ்ஜிய உளவுத்துறையில் பணியாற்றும், வரைபடங்களை படிப்பதிலும், மொழிபெயர்ப்பதிலும் வல்லவனான!! மலிக், பறக்கும் கம்பள ஓட்டியும், தீர்க்கதரிசியுமான!! டிராடமுஸ், தம்மை சுற்றியிருக்கும் சூழலில் கலந்து மறைந்து கொள்வதில் எத்தர்களான!! காம் மற்றும் லியோன் [ லியோன் பறவைகளைக் கொலை செய்யும் பித்துப் பிடித்தவன் ] ஆகிய நால்வருடன், தன் வலது கையான டிலா லாரத், ஜனாதிபதி ஹாமின் செல்லப் பிராணியான நோலூஸ் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு புதிய நாடு ஒன்றைப் பிடித்து விடக் கிளம்புகிறான் இஸ்னோகுட். கலீஃபின் மனதில் இஸ்னோகுட் ஒன்பது நாட்களிற்குள் திரும்பிவிட வேண்டுமே எனும் பதட்டம், இஸ்னோகுட்டின் உள்ளத்தில் ஒன்பது நாட்களிற்குள் கலீஃபாகி திரும்ப வேண்டுமே எனும் உதறல், இவர்கள் ஆசைகள் நிறைவேறுமா?

1962ல் கொச்சினியுடன் ஆரம்பித்த இஸ்னோகுட் எனும் உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் நாயகனின் சாகசப் பயணத்தை தன் வாரிசுகளிடம் பொறுப்பாக கையளித்திருக்கிறார் ஜான் தபாரி. வாரிசுகளின் கூட்டணி முயற்சியில் இஸ்னோகுட்டின் இருபத்தியெட்டாம் ஆல்பமான Les Mille Et Une Nuits De Calife [ கலீஃபின் 1001 இரவுகள் ] அக்டோபர் 2008ல் வெளியாகியது.

தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது, தங்களின் பெயர்களையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்பது வாரிசுகளிற்கு சவால்தான். ஆனாலும் கொஞ்சம் சாதித்திருக்கிறார்கள். ஆகா, ஒகோ என்று வியந்து பாராட்ட முடியாவிடிலும் கூட தங்களிடமும் சிறிதளவு சரக்கு இருக்கிறது என்று காட்டியிருகிறார்கள்.

ஜனாதிபதி ஹாம், கலீஃபின் ராஜ்ஜியத்திற்கு வருகை தரும் ஆரம்பக் காட்சிகள் ஆமைகளே நாணம் கொள்ளும் வேகத்தில் நகர்கின்றன. இப்பக்கங்களில் நகைச்சுவையை தேட வேண்டியுள்ளது. ஆனால் பறக்கும் கம்பளத்தில் நாடு பிடிக்க கிளம்பும் இஸ்னோகுட் குழுவினரின் அட்டகாசங்களை ரசிக்க முடிகிறது.

izno4 இந்த நாடு பிடிக்கும் வேட்டையில் கொரில்லா ராணுவத்தை தன்வசம் கொண்ட ஒர் தனியரசன், தென்னமரிக்க காடு ஒன்றில் இருக்கும் விந்தையான கேள்வி கேட்கும் மரம், சூதாட்ட விடுதிகளின் சொந்தக்காரனாகிய இத்தாலிய காட்ஃபாதர் ஒருவன், பிரான்சில் வாரம் ஒரு முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தல் போன்ற சவால்களை இஸ்னோகுட் குழுவினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தருணங்களில் இஸ்னோகுட் குழுவினர் அடிக்கும் கூத்துக்கள்தான் வாசகனை சிரிக்க வைக்கின்றன.

இஸ்னோகுட் நாடு பிடிக்க ஓடிவிட, அரண்மனையில் அவனை வரவேற்பதற்கு தடபுடலான ஆயத்தங்களை செய்கிறார் கலீஃப். நகைச்சுவையின் வறுமையை இப்பகுதிகளில் தாராளமாக சுவைத்திடலாம்.

இறுதியில் யாருமே எதிர்பார்த்திராத ஒர் புதிய கலீஃபுடன் இஸ்னோகுட் மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. இறுதிக்காட்சிகள் சற்று வேகம் கொண்டவையாக இருக்கின்றன. சஸ்பென்ஸையும் ஒரளவு பேணியிருக்கிறார்கள் கதாசிரியர்கள். எதிர்பாராத ஒர் முடிவுடன் நிறைவு பெறுகிறது கதை.

ஆல்பத்தின் சித்திரங்களிற்கு பொறுப்பேற்றிருப்பவர் Nicolas Tabaray[1966], தந்தையின் நுட்பம் இன்னமும் முழுமையாக கைகூடவில்லை எனிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரம்ப பக்கங்களின் பின் இஸ்னோகுட்டின் உலகில் இயல்பாக இணைய வைத்து விடுகிறார். இவ்வகையான தொடர்களில் தன் பாணியையோ, புதுமைகளையோ ஒர் ஓவியர் நுழைத்திட முடியாதது என்பது ஒர் சாபக்கேடாகும்.

izno1 கதை இலாகாவை கையில் எடுத்து இருப்பவர்கள் Muriel Tabary [1965], மற்றும் Stéphane Tabary[1971]. சிறப்பாக செய்ய வேண்டும் என விரும்பி, மிகையாக செய்து சறுக்கியிருக்கிறார்கள். கதையில் இடம்பெறும் நீண்ட உரையாடல்கள் கதையின் வேகத்திற்கு எதிராக செயற்பட்டுவிடுகிறது. நகைச்சுவைக்கு பக்கம் பக்கமாக டயலாக் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

ஆச்சர்யம் என்னவெனில் ஆல்பம் ஜான் தபாரியின் மேற்பார்வையில்தான் உருவாகியது என்பதாகும். வழமை போலவே காதாசிரியர்கள், ஓவியர் கதையின் நடுவில் வந்து போகிறார்கள். இது அளவிற்கு மீறும் போது எரிச்சல்தான் உண்டாகிறது. இந்த ஆல்பம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பையோ, பாராட்டுக்களையோ பெருமளவில் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக கொச்சினியினதும், இஸ்னோகுட்டினதும் தீவிர ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை இது பெற்றிருக்கிறது.

தரம் குறைந்த சொல் விளையாட்டுக்கள், “நாற்றமடிக்கும்” நகைச்சுவை, சலிக்க வைக்கும் பாத்திரபடைப்பு போன்றன, மேலுலகில் இருக்கும் கொச்சினி, இவ்வால்பத்தை படித்தால் இஸ்னோகுட் என்பார் எனக் கிண்டல் பண்ணுகிறார்கள் விமர்சகர்கள். இறுதிப் பக்கத்தில் தங்கள் திறமைகளை தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள் வாரிசுகள். என்ன ஒர் தீர்கதரிசனம். அவர்களே தங்களைப் பாராட்டிக் கொள்ளாவிட்டால் வேறு யார் பாராட்டுவதாம். ஆனால் நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அடுத்த தடவை இதனை விடச் சிறப்பாக செய்யுங்கள் என்று.

ஆல்பத்தின் தரம் **

ஆர்வலர்களிற்கு

ஏனைய ஆல்பங்கள்

ரஃபிக்கின் அட்டகாசமான பதிவுகள்

காமிக்ஸ் பிரியரின் திரைப்பார்வை

11 comments:

  1. காதலரே... வாக்களித்தபடி... 1001 இரவுகள் இஸ்னோகுட்டின் விருந்தா.... நன்றி நன்றி... இந்த புத்தகத்தை இந்தியாவில் அல்லது ஆங்கிலத்தில் பார்க்கும் வாய்ப்பு தற்போது இல்லையென்பதால், உங்கள் பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

    உங்கள் மொழியாக்க பக்கங்களில் கூட சிரிப்புக்கு பஞ்சம் தெளிவாக தெரிகிறது... அதை வைத்து பார்க்கையில் பிரஞ்ச் மூலத்தில் இன்னும் எவ்வளவு வருமை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மூலம் கோணலாக இருந்தால் படைப்புகள் எம்மொழியிலும் மட்டமே என்பதை உணர்த்தி இருக்கிறார்கள், தபாரியினி வாரிசுகள்.

    கோசினி பாவம்... தான் கஷ்டப்பட்டு உழைத்த அனைத்து படைப்புகளும், அவரின் சீக்கிர காலத்தால், இப்போது பிய்த்து கிழிக்கபடுவதை பார்த்து கண்டிப்பாக மனம் வருந்துவோர், மேலோகத்தில் இருந்தும்... ஒன்றா, இரண்டா..... லக்கிலூக், ஆஸ்டரிக்ஸ், இப்போது இஸ்னோகுட், அனைத்தும் புதிய படைப்பாளர்கள் கைகளில் சிதைந்து கொண்டிருக்கிறதே.

    ஆனால் ஒன்று, கதைகளம் எப்படியோ, ஆஸ்டரிக்ஸ், மற்றும் லக்கி தொடரில் சித்திரங்களின் தரம் இன்றும் கெடவில்லை. முந்தைய ஒன்றில் உடர்சோ இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறார், பிந்தையதில் புதிய ஓவியர்கள் மூல சார்பாக திறம்பட வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தபாரியின் வாரிசு நிக்கோலஸ் சேர அவர் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். புத்தகம் முழுவதும் தபாரியின் கைவண்ணம் சற்றும் வெளிபடாத வகையில் வரைந்திருக்கிறார், அதுவே முதல் தோல்வி.

    கூடவே, இது வரை இஸ்னோகுட்டை அவரின் ட்ரேட்மார்க் அங்கியில் இருந்து வேறுபட்டு நான் பார்த்த நியாபகமில்லை, ஆனால் அவரை கூட ஏதோ வேட்டையர் உருவத்திற்கு மாற்றி புதுமை செய்ய முயற்சித்திருக்கிறார்.... தேவையா என்று கேட்க தோன்றுகிறது.

    தன் பிள்ளைகளை குறை சொல்ல முடியாத கட்டத்தில் தன் மேற்பார்வையில் தபாரி சற்று தவறி இருக்கலாம். ஆனால் கதைகளத்தை சரிகட்ட, அவரால் நினைத்தாலும் முடிந்திருக்காது... ஏனென்றால் கோஸினியின் இழப்பை அவரே 40 பக்கங்களுக்கு ஒரு கதை என்ற விகிதத்தில் தானே சமாளிக்க முயன்றார்.... அப்போது வாரிசுகளை எப்படி குறை சொல்ல.

    நீங்கள் அளித்தபடி 2 ஸ்டார்கள் ரேட்டிங்க சரியானது தான் போல. கோஸினி மற்றும் தபாரியின் பெயரை காப்பாற்ற அடுத்த ஆல்பத்திலாவது மூவர் வாரிசு கூட்டணி சாதிப்பார்கள் என்று நம்புவோம்.

    பி.கு.: கோழி உரு கொண்ட தலைவரை, கந்தசாமியுடன் ஒப்பிடுவது.... சாப்பாட்டு பாட்டில் கற்பனையை உலவ விடுவது என்று உங்கள் முயற்சி மொழியாக்க பக்கங்களை சற்று சிறிப்புடன் கடத்த முடிந்தது.... நன்றி காதலரே.

    ReplyDelete
  2. அன்பு நண்பர் ரஃபிக்,

    உங்கள் கருத்துக் களத்தில் நீங்கள் இந்த ஆல்பத்தை குறித்து வினவியபோது என்னிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை, எனினும் இதனைப் பற்றி பதிவாகவே இட்டு விடும் வாய்ப்பு உண்டு என்பதை பின்பு உங்களிற்கு தெரிவித்திருந்தேன். ஆர்வத்துடன் காத்திருந்து, விழி பூத்திருந்து முதன்மைக் கருத்துக்களைப் பதிந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். ஆமா நீங்க முதன்மைக் கருத்துக்களை பதிந்து ரொம்ப நாளாச்சு கொக்...

    என்னால் இயன்றவரை சிரிக்க வைக்க முயன்றிருக்கிறேன், கதையை ஆங்கிலத்தில் வெளியிடும் போது உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ரஃபிக், ஒர் விமர்சகர் கொச்சினியின் பெயரை இப்போது அவர் பணியாற்றாத ஆல்பங்களில் உபயோகிப்பது மோசமான வியாபாரத் தந்திரம் என கொதித்திருக்கிறார்.

    நண்பரே அந்த வேட்டையர் வேறு யாருமல்ல இண்டியானா ஜோஸ் கொக்.. மன்னிக்கவும் ஜோன்ஸ் தான் அவர், இது மட்டுமல்லாது அஸ்டெரிக்ஸ், சார்கோஸி போன்றவர்களின் கெட்டப்புகளையும் இஸ்னோகுட் இக்கதையில் வரித்துக் கொள்கிறார்.

    நண்பரே தபாரியின் வாரிசுகள் இஸ்னோகுட்டின் ரசிகர்களிற்காக சாதித்தே ஆக வேண்டும், இல்லாவிடில் வேறு கலைஞர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    கந்த்சாமி, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்று எப்படியோ அடித்து விட்டிருக்கிறேன் உங்கள் பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே. ஒரு விடயம் வழமை போலவே கொக் எனும் சொல்லில் இரட்டை அர்த்தம் எதுவும் கிடையாது :))

    தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை அன்பு நண்பரே.

    ReplyDelete
  3. தோழரே அருமையான பதிவு. ஆங்கிலத்தில் வந்தாலும் இந்தப் புத்தகத்தை அடியேன் வாங்கப் போவதில்லை. நகைச்சுவையின் வறுமை அப்படியே அப்பட்டமாகத் தெரிகின்றது. உங்கள் Rating பார்த்தாலே தெரியுது எந்தளவிற்கு பாத்திரத்தை நாறடித்திருக்கின்றார்கள் என்று. மொழிபெயர்ப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  4. இந்த பக்கங்களை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்த உங்களின் உழைப்பு கண்கூடாக தெரிகிறது. நன்றி.

    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
    எதிரிகள் ஜாக்கிரதை

    ReplyDelete
  5. காதலரே,

    இந்த புத்தகம் தானே லேட்டஸ்ட் ஆக சென்ற ஆண்டு டிசம்பரில் வந்தது?

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  6. நண்பர் ஜே, ஆல்பத்தை வாங்காவிடினும் கூட வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள். நாடு பிடிக்கும் படலம் ரசிக்க கூடியதாக இருக்கிறது. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    காமிக்ஸ் காதலரே, ஒர் நகைச்சுவை கதையின் பக்கங்களை மொழி பெயர்ப்பது எப்போதும் இலகுவான காரியமாக இருப்பதில்லை. நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்தும் போது உண்மையிலேயே மனம் லேசாகி விடுகிறது. கருத்துக்களிற்கு நன்றி.

    காமிக்ஸ் பிரியரே, இந்த ஆல்பம் குறித்து உங்கள் இஸ்னோகுட் பதிவில் கூட என் கருத்துக்களை பதிந்து இருக்கிறேன். இக்கதை சென்ற வருடம் அக்டோபரில் வெளியாகியது. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  7. சரியானவற்றை அடையாளம் காட்டுவதிலும்
    அதே சமயத்தில் மோசமானவற்றை சுட்டி
    காட்டுவதிலும் விமர்சகர்களை சிறத்தவர்
    ஆக்குகிறது. அவ்வண்ணமே சிறந்த விமர்சகர் நீங்கள் நண்பரே.

    ReplyDelete
  8. நண்பரே,

    உங்களின் விமர்சனம் மிகவும் அருமை. ஆனாலும் ஒரு விடயத்தை நாம் நோக்கில் கொள்ள வேண்டும். இந்த கதையின் கர்த்தாக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதாலேயே இதனை ஒரு புகழ் பெற்ற பாத்திரமாக உருவாக்க முடிந்தது.

    காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையின் நியதி என்பதும் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் வாரிசுகள் அவர்களின் முன்னோர்களின் மிகச் சிறந்த படைப்புகளை கொண்டே கணிப்பிடப்படுவது சற்றே சிரமமான ஒன்றாகும்.

    இந்த இளைய தலைமுறைக்கு இன்னும் சிறிது வாய்ப்பு அளித்து பார்ப்போம் என்றே தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் புதிய ஒன்றை நாம் ஏற்கனவே கண்ட பழைய சிறந்த ஒன்றுடன் ஒப்பிட்டே மதிப்பிடுகிறோம். அதனாலேயே இதன் தரம் சற்று மதிப்பிழந்து விடுவது உண்மை.

    காலம்தான் என்னுடைய கருத்துக்கு பதில் சொல்லும், அல்லது வாரிசுகள் அடுத்த ஒரு சிறந்த பதிப்பின் மூலமும் சொல்லலாம். அதுவரை உங்களின் சிறந்த பதிவுகளை படித்தவாரே நேரத்தை கழிப்பதே எங்களின் கடமை.

    ReplyDelete
  9. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கும் தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் புலாசுலாகி அவர்களே,இஸ்னோகுட்டின் ரசிகர்களை தபாரியின் வாரிசுகள் நிச்சயம் மகிழ்விப்பார்கள் என்றே நம்புகிறேன். நீங்கள் கூறுவது போல் திறமைவாய்ந்த கலைஞர்களால் உருவாக்கம் பெற்ற ஒர் பாத்திரம், புதிய கைகளிற்கு மாறிவிடும் போது நாங்கள் எதிர்பார்த்திருந்தது கிடைக்காவிடில் போட்டுத்தாக்கி விடுகிறோம். வருகைக்கும் சிறப்பான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே. [ பதிவுகள் இடுவதையும் தொடருங்கள் நண்பரே]

    ReplyDelete
  10. indiaplaza.in ல இப்பத்தான் இந்த புஸ்தகம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. எந்த எந்த டைட்டில் நல்லா இருக்குன்னு சொன்ன உங்களுக்கு புண்ணியமா போகும்..

    ReplyDelete
  11. நண்பர் பின்னோக்கி அவர்களே,

    இஸ்னோகுட்டின் ஆரம்ப கால டைட்டில்கள், கொச்சினி மற்றும் தபாரியின் கற்பனை மற்றும் உழைப்பில் வந்தவை. அதில் ஏதாவது ஒர் ஆல்பத்தை[கிடைத்தால்] மட்டும் வாங்கி முயன்று பாருங்கள். ஆனால் சிரிப்பீர்கள் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. உங்கள் நண்பர்கள் யாரிடமாவது இஸ்னோகுட்டின் தமிழ் வெளியிடுகள் இருந்தால் அவர்களை மிரட்டி வாங்கிப் படித்துப் பாருங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete