Showing posts with label Stéphane Tabary. Show all posts
Showing posts with label Stéphane Tabary. Show all posts

Friday, September 11, 2009

கலீஃபோட 1001 ராவுகள்


izno2 மாண்புமிகு கலீஃப் ஹரூன் எல் புஷா அவர்களின் நல்லாட்சியில், மாதம் நான்கு வாரங்களுடன் அழகு கெடாது இருக்க, வார இறுதிகளில் ராஜ்ஜியத்தின் பதிவர்கள் பதிவுகளை இயற்ற, இதனையெல்லாம் பொருட்படுத்தாத கலீஃப், தன் அண்டை நாட்டு ஜனாதிபதியான ஹாமையும், ஹாமின் சகோதரரும் முதல் மந்திரியுமான ரிக்கையும் வரவேற்க தன் மாளிகையுடன் விழாக்கோலம் பூணுகிறார்.

ஹாம், மற்றும் ரிக்கிற்கு விமரிசையான வரவேற்பு அளிக்கிறார் கலீஃப். ஜனாதிபதி ஹாமுடன் அவர் செல்லப்பிராணியான நோலூஸும், ஜனாதிபதியின் பிரம்மாண்டமான தலைப்பாகையும் கூடவே வருகின்றன. போக்கேமோன் போன்ற தோற்றம் கொண்ட விசித்திரப் பிராணியான நோலூஸ், விசீர், கலீஃப் ஆகிய சொற்களை கேட்டால் தன்னிலை இழந்து, அது என்ன செய்கிறது என்பது அதற்கும், மற்றவர்களிற்கும் தெரியாத ஒர் நிலையை அடைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கலீஃப்பும், ஜனாதிபதியும் வழமையான உரையாடல்களை முடித்தபின், ஜனாதிபதி ஹாம், தங்கள் நாட்டு வழக்கப்படி இன்னமும் ஒன்பது நாட்களில் தான் தன் பதவியை தங்கள் நாட்டின் முதல் மந்திரியான தம்பிற்கு அளித்துவிட்டு, தம்பியின் முதன் மந்திரி பதவியை தான் ஏற்றுக் கொள்ளப் போவதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஒவ்வொரு 1001 இரவுகளிற்கும் ஒரு முறை இந்தப் பதவி மாற்றம் தொடர்ந்து இடம் பெறும் என்பதனையும் அவர் அறியத் தருகிறார்.

தன் ராஜ்ஜியத்திற்கு வருகை தந்த விருந்தினர்களை மசாலா மீன் விருந்து தந்து அசத்துகிறார் கலீஃப். உணவு உண்ணும் வேளையில் இடம்பெறும் உரையாடல்கள் வழி தங்கள் ராஜ்ஜியத்திலும் கூட 1001 இரவுகளிற்கு ஒர் முறை பதவிகளை மாற்றிக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கலீஃபும் அவர் பேரன்பிற்குரிய மந்திரி இஸ்னோகுட்டும் அறிந்து கொள்கிறார்கள்.

மிகக் கடினமான பணிகள்!!! நிறைந்த தன் கலீஃப் பதவியை தன் அன்பிற்கும், நம்பிக்கைக்குமுரிய மந்திரி இஸ்னோகுட்டிற்கு தந்துவிட்டு தான் சற்று இளைப்பாறலாம் என மனதில் திட்டம் போடும் கலீஃப், ரகசியமாக அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

கலீஃபின் மனதை அறியாத இஸ்னோகுட், மாளிகை நூலகத்தில் சட்டப்புத்தகம் ஒன்றை தேடி எடுத்து, 1001 இரவுகள் தோறும் பதவியை மாற்றிக் கொள்வதற்கான சட்ட நுணுக்கங்களை ஆராய்கிறான். ஏற்கனவே ஒர் முறை கலீஃப் பதவியில் இருந்திருந்தால் மட்டுமே 1001 இரவுகள் முறையில் தான் கலீஃபாக பதவியேற்கலாம் என்பதை அறிந்து கொள்ளும் இஸ்னோகுட் மனதில் புதிய திட்டம் ஒன்று பாலைவனத்தில் தோன்றிய பம்ப் செட்டாக உருவெடுக்கிறது.

izno3 தன் மனதில் ரகசியத் திட்டத்தை அடைகாத்துக் கொண்டிருக்கும் கலீஃப்பை அணுகும் இஸ்னோகுட், கலீஃபின் ராஜ்ஜியத்தை சற்று விரிவு படுத்த வேண்டிய அவசியத்தை அவரிற்கு விளக்குகிறான். இஸ்னோகுட்டின் விளக்கங்களால் திருப்தி அடையும் கலீஃப், அவன் புதிய நாடுகளை வெல்வதற்கு அவனிற்கு அனுமதி வழங்குகிறார்.

கலீஃபின் ராஜ்ஜிய உளவுத்துறையில் பணியாற்றும், வரைபடங்களை படிப்பதிலும், மொழிபெயர்ப்பதிலும் வல்லவனான!! மலிக், பறக்கும் கம்பள ஓட்டியும், தீர்க்கதரிசியுமான!! டிராடமுஸ், தம்மை சுற்றியிருக்கும் சூழலில் கலந்து மறைந்து கொள்வதில் எத்தர்களான!! காம் மற்றும் லியோன் [ லியோன் பறவைகளைக் கொலை செய்யும் பித்துப் பிடித்தவன் ] ஆகிய நால்வருடன், தன் வலது கையான டிலா லாரத், ஜனாதிபதி ஹாமின் செல்லப் பிராணியான நோலூஸ் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு புதிய நாடு ஒன்றைப் பிடித்து விடக் கிளம்புகிறான் இஸ்னோகுட். கலீஃபின் மனதில் இஸ்னோகுட் ஒன்பது நாட்களிற்குள் திரும்பிவிட வேண்டுமே எனும் பதட்டம், இஸ்னோகுட்டின் உள்ளத்தில் ஒன்பது நாட்களிற்குள் கலீஃபாகி திரும்ப வேண்டுமே எனும் உதறல், இவர்கள் ஆசைகள் நிறைவேறுமா?

1962ல் கொச்சினியுடன் ஆரம்பித்த இஸ்னோகுட் எனும் உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் நாயகனின் சாகசப் பயணத்தை தன் வாரிசுகளிடம் பொறுப்பாக கையளித்திருக்கிறார் ஜான் தபாரி. வாரிசுகளின் கூட்டணி முயற்சியில் இஸ்னோகுட்டின் இருபத்தியெட்டாம் ஆல்பமான Les Mille Et Une Nuits De Calife [ கலீஃபின் 1001 இரவுகள் ] அக்டோபர் 2008ல் வெளியாகியது.

தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது, தங்களின் பெயர்களையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்பது வாரிசுகளிற்கு சவால்தான். ஆனாலும் கொஞ்சம் சாதித்திருக்கிறார்கள். ஆகா, ஒகோ என்று வியந்து பாராட்ட முடியாவிடிலும் கூட தங்களிடமும் சிறிதளவு சரக்கு இருக்கிறது என்று காட்டியிருகிறார்கள்.

ஜனாதிபதி ஹாம், கலீஃபின் ராஜ்ஜியத்திற்கு வருகை தரும் ஆரம்பக் காட்சிகள் ஆமைகளே நாணம் கொள்ளும் வேகத்தில் நகர்கின்றன. இப்பக்கங்களில் நகைச்சுவையை தேட வேண்டியுள்ளது. ஆனால் பறக்கும் கம்பளத்தில் நாடு பிடிக்க கிளம்பும் இஸ்னோகுட் குழுவினரின் அட்டகாசங்களை ரசிக்க முடிகிறது.

izno4 இந்த நாடு பிடிக்கும் வேட்டையில் கொரில்லா ராணுவத்தை தன்வசம் கொண்ட ஒர் தனியரசன், தென்னமரிக்க காடு ஒன்றில் இருக்கும் விந்தையான கேள்வி கேட்கும் மரம், சூதாட்ட விடுதிகளின் சொந்தக்காரனாகிய இத்தாலிய காட்ஃபாதர் ஒருவன், பிரான்சில் வாரம் ஒரு முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தல் போன்ற சவால்களை இஸ்னோகுட் குழுவினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தருணங்களில் இஸ்னோகுட் குழுவினர் அடிக்கும் கூத்துக்கள்தான் வாசகனை சிரிக்க வைக்கின்றன.

இஸ்னோகுட் நாடு பிடிக்க ஓடிவிட, அரண்மனையில் அவனை வரவேற்பதற்கு தடபுடலான ஆயத்தங்களை செய்கிறார் கலீஃப். நகைச்சுவையின் வறுமையை இப்பகுதிகளில் தாராளமாக சுவைத்திடலாம்.

இறுதியில் யாருமே எதிர்பார்த்திராத ஒர் புதிய கலீஃபுடன் இஸ்னோகுட் மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. இறுதிக்காட்சிகள் சற்று வேகம் கொண்டவையாக இருக்கின்றன. சஸ்பென்ஸையும் ஒரளவு பேணியிருக்கிறார்கள் கதாசிரியர்கள். எதிர்பாராத ஒர் முடிவுடன் நிறைவு பெறுகிறது கதை.

ஆல்பத்தின் சித்திரங்களிற்கு பொறுப்பேற்றிருப்பவர் Nicolas Tabaray[1966], தந்தையின் நுட்பம் இன்னமும் முழுமையாக கைகூடவில்லை எனிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரம்ப பக்கங்களின் பின் இஸ்னோகுட்டின் உலகில் இயல்பாக இணைய வைத்து விடுகிறார். இவ்வகையான தொடர்களில் தன் பாணியையோ, புதுமைகளையோ ஒர் ஓவியர் நுழைத்திட முடியாதது என்பது ஒர் சாபக்கேடாகும்.

izno1 கதை இலாகாவை கையில் எடுத்து இருப்பவர்கள் Muriel Tabary [1965], மற்றும் Stéphane Tabary[1971]. சிறப்பாக செய்ய வேண்டும் என விரும்பி, மிகையாக செய்து சறுக்கியிருக்கிறார்கள். கதையில் இடம்பெறும் நீண்ட உரையாடல்கள் கதையின் வேகத்திற்கு எதிராக செயற்பட்டுவிடுகிறது. நகைச்சுவைக்கு பக்கம் பக்கமாக டயலாக் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

ஆச்சர்யம் என்னவெனில் ஆல்பம் ஜான் தபாரியின் மேற்பார்வையில்தான் உருவாகியது என்பதாகும். வழமை போலவே காதாசிரியர்கள், ஓவியர் கதையின் நடுவில் வந்து போகிறார்கள். இது அளவிற்கு மீறும் போது எரிச்சல்தான் உண்டாகிறது. இந்த ஆல்பம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பையோ, பாராட்டுக்களையோ பெருமளவில் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக கொச்சினியினதும், இஸ்னோகுட்டினதும் தீவிர ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை இது பெற்றிருக்கிறது.

தரம் குறைந்த சொல் விளையாட்டுக்கள், “நாற்றமடிக்கும்” நகைச்சுவை, சலிக்க வைக்கும் பாத்திரபடைப்பு போன்றன, மேலுலகில் இருக்கும் கொச்சினி, இவ்வால்பத்தை படித்தால் இஸ்னோகுட் என்பார் எனக் கிண்டல் பண்ணுகிறார்கள் விமர்சகர்கள். இறுதிப் பக்கத்தில் தங்கள் திறமைகளை தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள் வாரிசுகள். என்ன ஒர் தீர்கதரிசனம். அவர்களே தங்களைப் பாராட்டிக் கொள்ளாவிட்டால் வேறு யார் பாராட்டுவதாம். ஆனால் நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அடுத்த தடவை இதனை விடச் சிறப்பாக செய்யுங்கள் என்று.

ஆல்பத்தின் தரம் **

ஆர்வலர்களிற்கு

ஏனைய ஆல்பங்கள்

ரஃபிக்கின் அட்டகாசமான பதிவுகள்

காமிக்ஸ் பிரியரின் திரைப்பார்வை