Sunday, January 18, 2009

உப்புக் கடல் பாடல்

வணக்கம் நண்பர்களே,பொங்கல் விழாவினை குடும்பத்தினருடன் இனிதே கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். சென்ற பதிவான மங்கா காமிக்ஸூக்கு நீங்கள் தந்த வரவேற்பிற்கு நன்றி.இருப்பினும் கருத்துக்கள் எழுத ஏன் தயக்கம். பதிவினைப்படித்த பின் தயங்காது உங்கள் மனதில் தோன்றுவதை எழுதிடுங்களேன்.உங்கள் மனதில் தோன்றுவதனை எழுதிட நீங்கள் பதிவு எழுதப்பட்ட காமிக்ஸை படித்திருக்க வேண்டும் என்பது ஒர் கட்டாயம் அல்ல. நீங்கள் படித்த பதிவில் உங்களிற்கு பிடித்தது, பிடிக்காதது எது என தயங்காது உங்கள் எண்ணங்களை பகிர்ந்திட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மான்ஸ்டரின் 18 பாகங்களையும் டவுன்லோட் செய்திடும் வசதியை ஏற்படுத்தி சென்ற அனாமியாரே, நன்றி.தொடர்ந்து வாருங்கள் உங்கள் அட்சய பாத்திரத்துடனும்,பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களுடனும்; நண்பர்களே,சென்ற பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் அப்பதிவிற்கான கருத்துப்பெட்டியில் இருக்கிறது.

கடந்த பல சில வருட காமிக்ஸ் பொங்கல்களை ஒன்று சேர்த்து மெகா பொங்கல் விருந்து படைத்து அசத்தியிருக்கிற்றார் ஒப்பற்ற பயங்கரவாதி டாக்.செவன். காமிக்ஸ்பொங்கல்

XIII எனப்படும் ரத்தப்படலத்தினை முன்பதிவு செய்வது ஆமைவேகத்தில் நகர்கிறது என தன் அன்பான கோபத்தினை வெளிப்படுத்தி, தன் பதுக்கு காமிக்ஸ் அட்டைகளை பிரசுரித்து, காமிக்ஸ் வேட்டையர்களின் நாவில் ஜலம் ஊறச் செய்துள்ளார் வயதில் முதிர்ந்த இளங் காளை. XIIIமுன்பதிவு

செய்வன திருந்தச் செய் என்பதனை இடைவிடாது நிரூபித்து வரும் நண்பர் ரஃபிக் 2008 அனிமேஷன் மூவி ரவுண்ட் அப்பை திருஷ்டி சுத்தி போடுமளவிற்கு பதிவிட்டுள்ளார். அவர் வழங்கியுள்ள ரேட்டிங்குகளை காணத் தவறாதீர்கள். மூவிரவுண்டப்2008

பிரபல எழுத்தாளர் எஸ்ரா அவர்கள் ஒர் சித்திர நாவலைப்பற்றி எழுதியுள்ளார், கட்டாயாமாகப் படியுங்கள், பொய்சொல்லும்பூனை

உப்புக்கடல் பாடல் பதிவு, கோடிகளின் நாடோடிக்குப் பின் என்னால் எழுதப்பட்ட இரண்டாவது பதிவு ஆகும். அகொதீகவிற்காகத்தான் இது எழுதப்பட்டது,டாக்.செவன் இதனை முன்னமே படிக்கும் பாக்கியம்!!! பெற்றவர். தன் தாராள மனத்துடன் என்னை இப்பதிவினை பதிவிட அனுமதித்தற்கு என் நன்றிகள் கோடி. ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! என்பது தான் தெரியவில்லை.

சற்று நீண்ட பதிவு இது. நண்பர்கள், உங்கள் பொன்னான நேரத்தின் சில நிமிடங்களை இதற்காக தியாகம் செய்திட வேண்டுகிறேன். கடல் காற்று வீசும் ஒலி காதில் விழுகிறதா,அக்காற்றில் தவழும் ஒர் பாடல் உங்களிற்கு கேட்கின்றதா..... அப்படியானால் நண்பர்களே பதிவினை நீங்கள் அண்மித்து விட்டீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.





















1.

தென்பசுபிக்கடல், சீறும் காற்று, ஆர்ப்பரிக்கும் அலைகள் , முதல் நாள் வீசிய புயலிலிருந்து தப்பி, பிஜி பூர்வகுடி மாலுமிகளுடன் கடலோடிக்கொண்டு இருக்கிறது காப்டன் ராஸ்புடினின் படகு. உப்புக் கடல் பாடல், 1913ம் ஆண்டு ஆச்சர்யங்களின் நாளென அழைக்கப்படும் நவம்பர் மாதத்தின் 1ம் நாள் ஆரம்பமாகிறது.

கடலில் மிதந்து வரும் சிறு படகொன்றில் நினைவற்ற நிலையில் இருக்கும் ஒர் இளைஞனையும், இளைஞியையும் மீட்கும் மாலுமிகள் அதை ராஸ்புடினிற்கு தெரிவிக்கிறார்கள். ஆத்திரமடையும் ராஸ்புடின் காப்பாற்றப்பட்டவர்கள் செல்வந்தக் கப்பல் ஒன்றை சேர்ந்தவர்கள் எனக் கண்டு கொள்கிறான். அவர்கள் பெற்றோரிடமிருந்து பணயப்பணம் கறக்கும் ஆசையில் அவர்களை குணப்படுத்த உத்தரவிடுகிறான். படகு கைசரின்(KAISERINE) எனும் ஜெர்மனிய தளத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது.

நினைவு திரும்பும் இளம் பெண், தன்னுடன் தவறாக நடக்க முயற்சிக்கும் ராஸ்புடினை தாக்குகிறாள்.கடலில் கை , கால்கள் கட்டப்பட்டு மரத்துண்டங்களோடு இணைக்கப்பட்டு மிதந்து வரும் மனிதனை காணும் தலைமை சிப்பந்தி கிரானியோ (CRANIO), ராஸ்புடினை அழைக்கிறான். அந்த மனிதன் கார்ட்டோ மால்ட்டேஸ்(CORTO MALTESE) என கண்டுகொள்ளும் ராஸ் அவனை அங்கேயே தொலைத்துக்கட்ட நினைத்தாலும் கடற் கொள்ளையர் தலைவனான '' துறவி'' மேல் கொண்டுள்ள அச்சம் காரணமாக அவ்வெண்ணத்தை கைவிடுகிறான்.


கப்பலில் ஏற்றப்பட்ட கார்ட்டோ தன் கப்பல் பறிபோன கதையை கூறுகிறான். வொன்ஸ்பீக்(VON SPEEK) என்பவன் பற்றி ராஸிடம் விசாரிக்கும் கார்ட்டோ, நிலக்கரி ஏற்றி செல்லும் ஒல்லாந்துக் கப்பல் ஒன்றை கடத்தும்படி அவனிடம் கேட்கிறான். போர் பிரகடணமானால்தென் பசுபிக் தள ஜெர்மானியர்களிடம் நிலக்கரிக்கு நல்ல கிராக்கி நிலவும் எனவும் அதனை அதிக விலைக்கு விற்கலாம் எனவும் கூறும் கார்ட்டோ திரைச்சீலை ஒன்றின் பின் மறைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்ணை கண்டு கொள்கிறான்.

இளம் பெண் தன்னை பன்டோரா குருவ்ஸ்னொர் (PANDORA GROOVESNORE) என அறிமுகப்படுத்தி கொள்கிறாள். கார்ட்டோ அவள் சிட்னியை சேர்ந்த பிரபல கப்பல் கட்டுனனான தடியோ குருவ்ஸ்னோரின்(TADDEO GROOVESNORE) மகள் என தெரிந்து கொள்கிறான். குறிவைத்து காத்திருக்கும் நிலக்கரி கப்பலை கைப்பற்றும் ராஸ், எதிர்க்கும் ஒல்லாந்து காப்டனையும், கப்பல்
சிப்பந்திகளையும் சுட்டுக்கொல்கிறான். இதனை எதிர்க்கும் கார்ட்டோவை அடித்து மயக்கமுற செய்யும் கிரானியோவை, கார்ட்டோவிற்கு நினைவு திரும்பியதும் அவனை, கப்பலின் கொதிகலன் பகுதியில் வேலையிலீடுபடுத்தவும் பணிக்கிறான்.

இதே வேளை நினைவு திரும்பும் இளைஞனான கெய்ன்(CAIN) ற்கு நடந்தேறிய சம்பவங்களை கூறும் பண்டோரா கைப்பற்றப்பட்ட நிலக்கரியை வொன்ஸீபிக்கிடம் ராஸ் விற்கப்போவதை தெரிவிக்கிறாள். வொன்ஸீபிக் ஒர் ஜெர்மனிய அட்மிரல் என்கிறான் கெய்ன். கெய்ன், பண்டோராவின் குடும்பத்தினன் என்பதும் தெரியவருகிறது.

கொதிகலன் பகுதியில் வேலையில் வேகும் கார்ட்டோவை அழைத்து வரச்சொல்லும் ராஸ், கைசரின் தளத்தை கப்பல் நெருங்கும் போது பணயக்கைதிகள் இருவரையும் கார்ட்டோ தன் பொறுப்பில் எடுத்து ஒர் ஆற்றங்கரைக்கருகில், தனக்காக காத்திருக்கும்படி வேண்டுகிறான். கைதிகள் இருப்பு தெரிய வரின் ஜெர்மனிய அதிகாரிகள் அவர்களை விடுவித்து விடுவார்கள் எனவும்அஞ்சுகிறான். பணயப்பணத்தை துறவிக்கு தெரியாது தாங்களிருவரும் பங்கு போட்டுகொள்ளலாம் என ஆசை காட்டுகிறான்.


ஜெர்மனிய தளத்தை அண்மித்ததும் பணயக்கைதிகளை தான் கூறிய இடத்திற்கு எடுத்து செல்லும்படி கார்ட்டோவிடம் கேட்கும் ராஸ் அவ்வாற்றங்கரையின் அருகில்
வாழ்கின்ற, நரமாமிச உண்ணிகளும்,
திருட்டிற்கு பேர் போனவர்களுமான செனிக் பூர்வகுடிகள் (SENIK) பற்றி எச்சரிக்கிறான். 3 தினங்களிற்குள் தன் வேலையை முடித்துக்கொண்டு பின் அவர்களுடன் இணைவதாக கூறுகிறான். கிரானியோவையும் தன்னுடன் அழைத்து செல்கிறான் கார்ட்டோ.

ராஸ் ஜெர்மனியர்களிற்கு செய்யும் உதவிக்கு பதிலாக நடுநிலை வகிக்கும் நாடொன்றின் வங்கிக் கணக்கில் அவர்களிற்காக தங்கம் வைப்பிலிடப்படுமெனவும்,அவனுடன் இணைந்து பணியாற்ற ஸ்லட்டர்(SLUTTER) எனும் அதிகாரியை ராஸ் கூட அனுப்புவதாகவும்,உதவிக்கு ஒர் சிறிய நீர்மூழ்கி கப்பலும், இரண்டு சிறு பீரங்கி படகுகளும் வழங்கப்படுமெனவும் ஒப்பந்தமாகிறது. இதனை மனமின்றி ஏற்றுக்கொள்கிறான் ஸ்லட்டர். நிலக்கரி கப்பலிற்குரிய தங்கம் அன்றே கைமாறுகிறது.

இதேவேளை கார்ட்டோவின் காவலில் இருந்து தப்பி ஜெர்மனியர்களிடம் தஞ்சம் புக விரும்பும் கெய்னை தடுக்கிறாள் பண்டோரா. தற்போது தங்களை விட கடற் கொள்ளையர்களே ஜெர்மனியர்களிற்கு உபயோகமானவர்கள் என்றும் கூறுகிறாள்.எனினும் தப்ப முயற்சிக்கும் கெய்னை கிரானியோ பிடித்துவிடுகிறான். இரு கைதிகளையும் எச்சரிக்கும் கார்ட்டோ, ராஸ் கூறிய இடத்திற்கு படகை செலுத்த உத்தரவிடுகிறான்.

வழியில் கடற்கொந்தளிப்பினால் படகு கவிழ கெயினும் படகிலிருந்த பூர்வகுடி இளைஞனான தராவோவும் (TARAO) ஒர் கரையில் ஒதுங்கி குகையொன்றில் பதுங்கிக்கொள்கிறார்கள். குகையை, புதிய குரல்கள் அண்மிக்கின்றன.


2.
கடல் மணலில் தெரியும் காலடித் தடங்களைக் கொண்டு இளைஞர்கள் இருவரினதும் மறைவிடத்தை கண்டு கொள்கிறார்கள் புதிய குரல்களிற்கு சொந்தக்காரர்களான செனிக் பூர்வகுடிகள். இளைஞர்கள் இருவரும் செனிக்குகளின் கிராமத்திற்கு இட்டுச் செல்லப் படுகிறார்கள்.








இக்காட்சியை மறைந்திருந்து காணும் கார்ட்டோ, பண்டோராவை அலைகளில் இருந்து காப்பாற்றும் வேளையில்,கிரானியோ கரையை நோக்கி நீந்தியதை நினைவு கூருகிறான் . ராஸ் தேடி வரும் வரையில் காத்திருப்பதே நல்லது என தீர்மானிக்கும் அவன் தான் பண்டோராவுடன் ஒளிந்திருக்கும் குகைக்கு திரும்புகிறான். தான் கெயினை பார்க்கவில்லை என பண்டோராவிடம் சொல்கிறான். இதனை நம்பாத பண்டோரா கார்ட்டோ அசந்த தருணம் பார்த்து அவன் துப்பாக்கியை கைப்படுத்தி அவனை சுட்டுவிடுகிறாள். வெடிச்சத்தத்தை கேட்கும் செனிக்குகள் அவர்களின் ஒளிவிடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள்.



பண்டோராவை சிறைப்பிடித்து வரும் செனிக்குகள் அவளை கெயினுடனும் தராவோவுடனும் ஒர் குடிலிற்குள் அடைத்து வைக்கிறார்கள், காயமடைந்து நினைவிழந்த நிலையில் இருக்கும் கார்ட்டோ வேறொர் குடிலிற்கு தூக்கிசெல்லப்படுகிறான்.


இவர்கள் அனைவரிற்கும் முன்னதாகவே கரையை அடைந்திருக்கும் கிரானியோ கிராமத்தின் மதகுரு ஒருவனை ரகசியமாக கொன்று அவன் முகமூடியை தான் அணிந்து கொள்கிறான். செனிக்குகளின் மொழி பேசத் தெரிந்த அவன் ரகசியமாக பண்டோராவை சந்தித்து கிராமத்தை விட்டு தப்பிப்போவதற்கான திட்டத்தை விபரிக்கிறான். தக்கசமயத்தில் கிரானியோ குடில் ஒன்றிற்கு தீ வைக்கிறான். கிடைக்கும் குழப்பமான தருணத்தை பயன்படுத்தி தங்கள் குடில் காவலனை வீழ்த்தி விட்டு மூன்று இளைஞர்களும் ஏற்கனவே கிரானியோ தயார் செய்து வைத்துள்ள படகொன்றில் கார்ட்டோவுடனும் கிரான்னியோவுடனும் தப்பி செல்கிறார்கள். பின்தொடரும் செனிக்குகளின் கப்பல்களை விட்டு நீண்டதூரம் ஒடி கடல் பயணத்தை தொடரும் அவர்களின் வழியை மறித்துக்கொண்டு அவர்கள் முன் எழுகிறது ஒர் சிறிய நீர்மூழ்கி.

ஜெர்மனியர்களால் வழங்கப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கியில் வரும் ராஸ் தப்பியவர்களை அதில் ஏற்றிக்கொள்ள, சிறுபடகானது ஜெர்மனிய பீரங்கிகளால் தகர்க்கப்படுகிறது. நீர்மூழ்கிப்பயணத்தின் போது ஸ்லட்டரிடம் தங்களைப்பற்றிய உண்மைகளை கூறிவிடுகிறான் கெய்ன். இதனை அறியும் ராஸ் நீர்மூழ்கியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கிறான். அவனை தடுக்கும் கார்ட்டோ, துறவி ஜெர்மனியர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மதிக்குமாறு கேட்கிறான்.
கெயினையும் பண்டோராவையும் தான் பாதுகாப்பதாக ஸ்லட்டர் அவர்களிடம் சொல்கிறான். நீர்மூழ்கி துறவியின் கடற்தளமான எஸ்கொண்டிடா (ESCONDIDA) தீவை நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது.


தீவை வந்தடையும் பிரயாணிகளிற்கு தங்குமிட வசதிகளை ஏற்ப்படுத்தித் தரும் பூர்வகுடிகள், துறவி இரண்டு நாட்களில் தீவிற்கு திரும்புவான் எனத் தெரிவிக்கிறார்கள். துறவியின் இல்லத்தில் தங்கியுள்ள பண்டோராவை தீவைச் சுற்றிக்காட்ட ஒர் காரில் அழைத்துச் செல்கிறான் கார்ட்டோ. வழியில் மறைந்திருக்கும் ஓர் உருவம் துப்பாக்கியால் கார்ட்டோவை சுட, குறி தவறி காரோட்டி பலியாகிறான். பாதையை விட்டு விலகி உயரத்திலிருந்து கடலை நோக்கி விழுகிறது கார். மின்னல் வேகத்தில் செயற்படும் கார்ட்டோ, கடலில், ஆழத்தில் மூழ்கிய பண்டோராவைக் காப்பாற்றுகிறான்.
தன்னை குறி வைத்தது ராஸ் எனச் சந்தேகிக்கும் கார்ட்டோ, அவனுடன் மோதுகிறான். ராஸ் இதனை மறுக்கிறான். இவ்வேளை துறவி தீவை வந்தடைகிறான். அனைவரையும் அழைக்கும் துறவி இங்கிலாந்து ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவிப்பு செய்துவிட்டதை தெரிவிக்கிறான். வொன்ஸ்பீக்கிற்கு தான் இரண்டு தீவுகளை அவன் கப்பல்களின் பாவனைக்காக ஒதுக்கியுள்ளதையும் அவர்களிடம் கூறுபவன், இரண்டு நாட்களில் தான் ஸ்லட்டரினுடன் கடலிற்கு செல்லப்போவதாக கூறுகிறான்.

இதேவேளை தான் தீவிலிருந்து தப்பி செல்ல உதவுமாறு தராவோவிடம் கேட்கிறான் கெய்ன். தன் துப்பாக்கியை உபயோகித்து கார்ட்டோவை சுட முயற்சித்தது கெய்ன் என அறியும் ராஸ் அவனைத் தாக்குகிறான். துறவி மோதலை தடுத்து விடுகிறான். இதன் பின் கெய்னிடம் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்து அறிய முயல்கிறான் துறவி. குறிப்பாக கெய்னின் மாமனான தாமஸ் குருவ்ஸ்னோர் பற்றி ஆவலுடன் வினவுகிறான். தாமஸ், பண்டோராவின் தாயார் திருமணத்தில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் இறந்து விட்டதாக சொல்கிறான் கெய்ன். பண்டோரா உறங்குவதை பார்வையிடும் துறவி பதட்டம் அடைகிறான். தன் பயணத்தை உடனே ஆரம்பிக்க விரும்பும் அவன் ராஸை தீவிற்கு பொறுப்பாக விட்டு கார்ட்டோவை தன்னுடன் வரும்படி அழைக்கிறான். இதன் காரணத்தை அறிய அவனுடன் வாதிடும் கார்ட்டோவை தாக்கி உயரத்திலிருந்து எறிந்துவிடுகிறான் துறவி. பின் ஸ்லட்டருடன் அவன் நீர்மூழ்கியில் கிளம்பிச் செல்கிறான்.

ஸ்கொண்டிடா தீவிலிருந்து வெகு தொலைவில் நண்டு பிடிப்பதற்காக தங்கள் கப்பலை விட்டு கரைக்கு வரும் ஆங்கிலேய வீரர்களால் கண்டெடுக்கப்படும் போத்தல் ஒன்றினுள் இடப்பட்டுள்ள தகவலை கொண்டு,தென்பசுபிக்கடலில் கொள்ளையில் ஈடுபடும் ஜெர்மனிய நீர்மூழ்கிபற்றி தெரிந்து கொள்கிறார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். நீர்மூழ்கிக்கு எரிபொருள் எவ்வாறு கிடைக்கிறது என கேள்வியைஎழுப்புகிறார் கப்பற்படை அதிகாரி ரீனல்ட் குருவ்ஸ்னோர் .



3.
எஸ்கொண்டிடா தீவில் பண்டோராவுடன் உலாவும் கிரானியோ தான் கார்ட்டோவை காப்பாற்றி தன் பாதுகாப்பில் வைத்திருப்பதை கூறுகிறான். இதே வேளை ஜெர்மனிய நீர்மூழ்கியை தேடித்திரியும் ஜப்பானிய கடற்படைக் கப்பல், தீவை அண்மிக்கிறது. தீவை வேவு பார்க்க தன் வீரர்களை அனுப்புகிறது. ஜப்பானிய வீரர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து விடுகிறாள் பண்டோரா இதனால் தீவிலுள்ள பீரங்கிகள் ஜப்பானிய கப்பலை தகர்க்கின்றன.கரைக்கு வந்தவீரர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணமான பண்டோராவை தன்னிடம் ஒப்படைக்க மறுக்கும் கிரானியோவை சுட்டுக்கொல்கிறான் ராஸ்.








இந்த தருணத்தை பயன்படுத்தி கைதிகள் இருவருடனும் தப்பி போக விரும்புகிறான் தராவோ. பண்டோராவை அவனுடன் அனுப்பி வைக்கும் கெய்ன் தான் தனியனாக கார்ட்டோவை தேடிச்செல்கிறான். தன்னை கெய்ன் தேடி வந்ததையிட்டு மகிழ்வுறுகிறான் கார்ட்டோ. மூன்று நாட்களாக கிரானியோ தன்னை தீவிலிருந்து தொடர்பு கொள்ளவில்லை என்பதினால் எஸ்கொண்டிடா தீவை நோக்கி நீர்மூழ்கியை செலுத்துமாறு ஸ்லட்டரிடம் கூறுகிறான் துறவி. இதேவேளை பண்டோராவுடன் வுரானியா(BURANEA) தீவை அடையும் தராவோ அவளை அங்குள்ள ஆங்கிலேய அதிகாரிகளிடம் கையளிக்கிறான்.
தீவிற்கு திரும்பிவிட்ட துறவியை ரகசியமாக சந்திக்கும் கார்ட்டோ நடந்த விபரங்களை கூறுவதுடன் தீவை விட்டு உடனே கிளம்புவது நல்லது என ஆலோசனை கூறுகிறான். தீவிலிருந்து தென்திசையில் தரித்துள்ள ஒர் கப்பல் தீவை வேவு பார்க்கிறது. இதேவேளை ஆங்கிலேய கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் தராவோவின் வழிகாட்டலுடன் எஸ்கொண்டிடா தீவிற்கு விரைகின்றன. பண்டோராவும், ரீனல்ட்குருவ்ஸ்னோரும் உடன் வருகிறார்கள்.
தீவில் கெய்னை தனியே சந்திக்கும் துறவி அவனிடம் இளமையில் தான் பண்டோராவின் தாயை காதலித்த தகவலை கூறுகிறான். ஆங்கிலேயர்கள் தீவைக் கைப்பற்ற முன் தீவைவிட்டுத்தப்பி செல்வோம் என்கிறான். தீவை நெருங்கி விட்ட ஆங்கிலேய கப்பல்கள் வானில் ஒளி பரப்பும் குண்டுகளை எறிகின்றன.
இதனை கண்டுவிடும் கார்ட்டோ துறவியைத்தேடி ஓடுகிறான், ஆனால் துறவியோ நீர்மூழ்கியை தனதாக்கி தப்பும் நோக்கத்தில் ஸ்லட்டரை சுட்டுவிட்டு தீவிலிருந்து தப்பி விடுகிறான். காயமடைந்த ஸ்லட்டரை காப்பாற்றி மறைத்து வைக்கிறான் கார்ட்டோ. தீவிற்குள் தராவோவின் வழிகாட்டலில் நுழையும் வீரர்கள், கார்ட்டோ, ராஸ் என அனைவரையும் கைது செய்கிறார்கள்.



ஸ்லட்டரை தங்களிடம் ஒப்படைத்தால் நிறையப்பணமும் தந்து கார்ட்டோவை விடுதலையும் செய்வதாக ஆசைகாட்டும் ஆங்கில அதிகாரிகளிடம் அது முடியாது எனக் கூறிவிடுகிறான் கார்ட்டோ. இதற்கிடையில் நீயுசிலாந்து வீரன் ஒருவனின் சீருடையை அணிந்து கொண்டு சென்று இரண்டு ஆங்கிலேய கடற்படை கப்பல்களை தகர்த்து விடுகிறான் ஸ்லட்டர் . கைது செய்யப்படும் அவனிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
ஸ்லட்டரின் மரண தண்டனையின் பின்அவன் தங்கியிருந்த குடிலிற்கு செல்லும் கெய்னும், தராவோவும் ஸ்லட்டர் ஒர் கடிதத்தினை கார்டோவிற்கு விட்டுச் சென்றிருப்பதை கண்டு கொள்கிறார்கள்.







கடிதத்தை படிக்கும் கார்ட்டோ துறவிதான் பண்டோராவின் உண்மையான தகப்பன் என அறிந்து கொள்கிறான்.அதிகாரி ரீனல்ட் குருவ்ஸ்னோரிடம் செல்லும் கார்ட்டோ ,ரீனல்ட்டின் சகோதரன் தாமஸ் குருவ்ஸ்னோரே கடற்கொள்ளையர் தலைவனான துறவி என்பதை போட்டு உடைக்கிறான், இவ்வுண்மையை மறைக்க விரும்பும் ரீனல்டினை, மிரட்டி ராஸிற்கும், தனக்கும் விடுதலையை விலையாக பெறுகிறான் கார்ட்டோ.
தீவிலுள்ள தன் நண்பர்களிடம் விடை பெறுகிறான் கார்ட்டோ. அவனுடன் பயணத்தில் இணைந்து கொள்கிறான் தராவோ.தன் வீட்டின் கதவுகள் கார்ட்டோவிற்கும் அவன் நண்பர்களிற்குமாக எப்போதும் திறந்திருக்கும் என நெகிழ்கிறான் கெய்ன்.

" உன்னைப்போல் யாரும் என் கண்களிற்கு தெரிவதில்லை எனவேதான் நான் செல்லுமிடம் எங்கெங்கும் உன்னைக் காண விழைகிறேன்'' என கூறி பண்டோராவை பிரிகிறான் கார்ட்டோ. என்றும் வீசும் காற்றில் பறக்கும் வெள்ளை கடல் பறைவகளுடன் கடலில் தூரமாக செல்கிறது கார்ட்டோவின் படகு.

கதையை முடித்து ஆல்பத்தை மூடும்போது, கார்ட்டோவின் படகு எங்கள் மனங்களில் ஓடத்தொடங்கியிருக்கும். எமக்கு தமிழில்அறிமுகமாகியுள்ள டம் டமால், டும் டுமீல்,இந்தா வாங்கிக்கோ வகை சித்திரக்கதைகளில்இருந்து , வேறுபட்டு ஒர் புதிய,உன்னதமான ரசனைக்கு வழி சமைக்கிறது ''உப்புக்கடல் பாடல்'' . ஒர் வேகக்கதை ரசிகனை எளிதில் ஏமாற்றம் அடையச் செய்துவிடும் இந்நாவல், காலத்தின் களைப்புறா அலைகளால் அவன் இழப்பை எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கும்.

கடல் முன் அமர்ந்து கண்களை மூடி நாம் வேறெங்கோ செல்ல முயல்தல் போல், கதையினுள் இறங்கினால், அது எங்களை படிப்படியாக தன் கட்டங்களினுள் இறக்கி , கதையில் கண்கள் காணவியலாத பாத்திரங்களாக எங்களை உருமாற்றிவிடும். தென் பசுபிக் கடலிலுள்ள தீவுகளில் வாழும் பூர்வகுடிகள் கடலோடும் போது பாடும் பாடல்கள் கதையில் இடம்பெறுகின்றன. பாடல்களில் மயங்கிய கதாசிரியர் நாவலிற்கு இத்தலைப்பை வழங்கியிருக்கலாம். அல்லது தென்பசுபிக் கடல்மேல் தங்கள் வாழ்க்கைப்பாடலை மெளனமாக பாடிச்செல்லும் இக்கதையின் நாயகர்களின் வேறுபட்ட,உப்புச்சுவை செறிந்த பாடல்களையும் அது குறிக்கலாம். பூர்வகுடிப்பாத்திரங்களை, கோமாளிகளாக சித்தரிக்காதுஅவர்களின் தனித்தன்மைகளுடனும் பெருமையுடனும் உலவ செய்துள்ளார் நாவலாசிரியர்.

பின்பு வரவுள்ள கதைகளின் பிரபல நாயகனான கடலோடி கார்ட்டோ, இந்நாவலிலேயே அறிமுகம் ஆகிறான். நாம் பொதுவாக பார்த்துப் பழக்கப்பட்ட, பார்க்க விழைகின்ற,
எம் ஆழ்மனக் கனவு நிரப்பி நாயகனிலிருந்து வேறுபட்டவனாய் கார்ட்டோ காட்டப்படுகிறான். கதையின் பெரும் பகுதியில் கார்ட்டோ இரண்டாம் நிலையிலேயே வைக்கப்படுகின்றான். அவனின் இறுதி வெற்றி என்பது அவன் மிரட்டிப்பெறும் விடுதலையே. கொடியவனாகத் தெரியும் ராஸ்புடின் தனக்கு நல்ல நண்பன் ஒருவனைத்தேடி ஏங்குகிறான், கார்ட்டோ அவன் நட்பை உதாசீனம்செய்யும் போதெல்லாம் நாங்கள் ராஸ்புடினிற்கு நண்பர்களாகி விடுவோம். அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் துறவி பாத்திரம் இறுதியில் ஏமாற்றம் அடையவைக்கிறது. கிரானியோ தன் மூதாதையர்கள் வழங்கிய உலகம் கண்முன் அந்நியர்களால் சிதைக்கப்படுவதை எண்ணி வேதனை அடைபவனாகவும், தென்பசுபிக் தீவுகளின் பூர்வகுடிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென வேட்கை கொண்டவனாகவும் இருக்கிறான். தராவோ ஒர் தேர்ந்த கடலோடி, கடலில் வழி காட்டலிற்கு நட்சத்திரங்களையும், சுறாக்களையும் துணைக்கழைப்பவன். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட மனதில் ஒட்டிக்கொள்பவன் ஜெர்மனிய அதிகாரி ஸ்லட்டர். அதிகாரத்தின் முன் தன் கருத்துக்களும், கனவுகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் சிதறிப்போகும் அவன் உப்புக்கடல் பாடலின் மிகச்சிறந்த வரிகளாகிறான். கவலையில் தேயும் அவனிற்கு கார்ட்டோ சொல்வதை பாருங்கள்,

'' நண்பனே, கடந்த காலத்தில் நிலைப்பதென்பது கல்லறையொன்றை
பார்த்துக்கொண்டிருத்தல் போன்றது. இதோ ,இந்த இலைகளை ஆடையாக கொண்ட இளம்பெண்களுடன் நேரத்தை செலவிடு ஆனால், இலையுதிர் காலம் வரும் வரையில் காத்திருக்காதே"

உலகின் தரம் வாய்ந்த ரசனைக்குரிய சித்திரக்கதை நாவல்களில் (THE BALLAD OF THE SALT SEA) உப்புக்கடல் பாடலானது முதல் பத்து இடங்களிற்குள் வரும் என்பதில் ஐயமில்லை. ஏறக்குறைய 170 பக்கங்களை கொண்ட உப்புக்கடல் பாடலின் ஓவியரும் கதாசிரியரும் இத்தாலியை சேர்ந்த கியூகோ பிராட் ஆவார் ( HUGO PRATT). 1967-1969 வரையில் சர்ஜண்ட் கிர்க்(SERGENT KIRK) எனும் இத்தாலிய சஞ்சிகையில் இக்கதை தொடராக வெளியானது. பின் 1973ல் பிரான்சின் மாலைத் தினசரியான பிரான்ஸ் சுவாரில் (FRANCESOIR) இது தொடராக வெளி வந்தது. கியூகோ பல கதைகளை உருவாக்கியுள்ளார் ஆயினும் உப்புக்கடல் பாடல் அவரை கடல்கள் கடந்து உலகப்பிரபலமாக்கியது. சித்திரங்களில் அவரிற்கேயுரிய பிரத்தியேகப் பாணியும், கறுப்பு, வெள்ளை நிற வண்ண செறிவுகளில் அவர் மேற்கொண்ட ஜித்து விளையாட்டுக்களும், கவித்துவமான கதை சொல்லலும், இன்று கியூகோ இறந்து 13 வருடங்கள் ஓடிவிட்டாலும் , அவரிற்குரிய தேர்ந்த ரசிகர்களின் வரவை உறுதிப்படுத்தி கொண்டேயுள்ளன.






1975ல் பிரெஞ்சு மொழியில் ஆல்பமாக உப்புக்கடல் பாடல் வெளியானது . 1976ல் பிரான்சின் ''அங்குலெம்''(ANGOULEME) சித்திரக்கதை விழாவில் சிறந்த அயல் நாட்டு யதார்த்த படைப்பிற்கான பரிசினை வென்றது. அக்காலத்திற்கே உரிய வீர சாகச கதைகளில் இருந்து வேறுபட்டு, நிதானமான வாசிப்பிற்கும், உன்னதமான ஒர் அனுபவத்திற்கும் இட்டு செல்லும் இந் நாவல் இது வரை 7 பதிப்புகள் கண்டுள்ளது. இன்றும் உலகின் எதோ ஒர் பகுதியில் ஒரு வாசகனாவது உப்புக்கடல் பாடலை, அதன் அலைகளின் பூரணமான அழகுடன் ரசித்துக் கொண்டிருப்பான்.





விரைவில்.......



- நாவலின் ஆங்கில பதிப்பு NANTIER BEALL MINOUSTCHINE PUBLISHING ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
-உப்புக்கடல் பாடல் சித்திர சலனப்படமாக (animation film) YOU TUBEல் இத்தாலிய மொழியில் பத்து சிறிய பகுதிகளாக உள்ளது ஆர்வமுள்ள நண்பர்கள் பதிவின் 1ம் பகுதியினை, படத்தின் 1,2,3 ம் பகுதிகளிற்கும், பதிவின் 2ம் பகுதியினை படத்தின் 4,5,6ம் பகுதிகளிற்கும்,பதிவின் 3ம் பகுதியினை படத்தின் 7,8,9,10,ம் பகுதிகளிற்கு துணையாக கொண்டால் கதையினை புரிந்து கொள்ள சிரமம் இருக்காது. இப் படம் தொலைக்காட்சிக்காக 2002ல்எடுக்கப்பட்டது , கியூகோவின் நாவலுடன் இதனை ஒப்பிட முடியாது என்பது என் கருத்து. நேரம் கிடைத்தால் அதனைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதிந்திடுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****


ஆர்வலர்களிற்கு

இது சித்திரசலனப்படத்தின் 1ம் பகுதிக்கான சுட்டி

கார்டோவின் பிற ஆல்பங்களிற்கு




ஒர் சில பக்கங்களிற்கு

31 comments:

  1. நண்பரே,

    கடல் சார் சாகசங்கள் மீதும், வனம் சார் சாகசங்கள் மீதும் எனக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. இந்த பதிவில் நீங்கள் எடுத்துக் கொண்ட சித்திர கதை சாகசமும் எனக்கு உடனே பிடித்துப் போனது.

    வாசகரின் விருப்பம் என்று இருந்தால் அடுத்தது வனம் சார்ந்து ஒரு பதிவு போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த கதையின் சித்திரங்கள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்லும் வண்ணம் இல்லையென்பது என்னுடைய கருத்து. ஆனால் கதையொட்டத்தில் மூழ்கி விட்டால் அவை தெரியாது என்பது தங்களின் சென்ற பதிவான மான்ஸ்டரை படிக்கும் போது உணர்ந்துக் கொண்டேன்.

    முதலில் சித்திரங்கள் ஒரு மாதிரியாக இருந்தாலும் போகபோக கதையொட்டம் மனதை கவ்விக் கொண்டது.

    மிக அருமையான பதிவு. ஒரு பெண்ணின் சித்திரத்தை வெளியிட்டு எதையும் பார்க்காதே என்று எச்சரிக்கை வெளியிட்டீர்களே-அந்த பதிவு என்ன ஆயிற்று என நம் நண்பர் காமிக்சு ‘பெருசு’ விஸ்வா உங்களை கேட்க சொன்னார். மேலும், அவர் உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொண்டு இன்னும் அந்த சித்திரத்தை பார்க்காமலே இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.

    ReplyDelete
  2. நண்பரே,

    உங்கள் பதிவு தமிழ் மணம் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளதை தற்போது தான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அயல் நாட்டு தலைவரே,

    நீங்கள் என் இப்படி செய்தீர்கள் என்பது எனக்கு சற்றும் புரியவில்லை. ஒரு வேளை, நானும் எனது சகாக்களும் செய்த கும்மி தான் அதற்க்கு காரணமா? மன்னிக்க வேண்டுகிறேன்.

    ஆனாலும் நீங்கள் இந்த பதிவை 23ம தேதியே வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த கதையை ஆற அமர படித்து விட்டு வருகிறேன். (மினி லயன் காமிக்ஸ்'ல் வந்த ஒரு கதையை அலசி ஆராய்ந்து கொண்டு இருப்பதால் நேரமில்லை - மன்னிக்கவும்).

    மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்ததில் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதுவும் அந்த பெயர் "PanDora" .இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆங்கில, கிரேக்க கவிதைகளையும், இதிகாசங்களையும் என்னுள் புகுத்தி கொண்டு இருந்த என்னுடைய வாழ்கையில் நான் மறக்க இயலாத ஒரு பெயர் அது.

    கிரேக்க இதிகாசத்தில் வரும் அந்த பெண் தான் மனித இனத்தின் முதல் பெண் (ஏவாள் போல). அவள் மேல் பொறாமை கொண்ட மாற்ற கடவுளர் சூது, வாது இல்லாத இந்த உலகிற்கு அவை அனைத்தையும் ஒரு பெட்டியில் அடக்கி 'இதனை திறக்க வேண்டாம்' என்று கூறி கொடுக்கின்றனர். மனித வழக்கப் படி அவளும் அதனை திறக்க, மனிதர்கள் சூது, வாது போன்ற அனைத்தையும் பெற்று விடுகின்றனர். (Pan = All, Dora = Gifts). அந்த பெட்டியையே "PanDora's Box" என்று அழைப்பர். ஆனால் அந்த பெட்டியில் ஒரே ஒரு நல்ல விஷயமும் ப்தூமிக்கு வந்து விடுகிறது.

    அந்த ஒரு நல்ல விஷயத்தால் தான் நாம் இன்னமும் தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த நல்ல விஷயம், நம்பிக்கை = Hope.

    தொடர்ந்து இது போன்ற அருமையான பதிவுகளையே எமக்கு தருவீர்கள் ஈன்ற நம்பிக்கையுடன் என்னுடைய இந்த பின்னுட்டத்தை முடித்து கொள்கிறேன்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  4. வணக்கம்,

    இந்த அருமையான பதிவை ஒரு மாதத்திற்கு முன்பே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஆனால் எனது உலகறிந்த சோம்பேறித்தனத்தால் இத்தனை நாளாய் இருளில் கிடந்தது. அனைவரும் மன்னிக்கவும்! வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கனவுகளின் காதலருக்கு நன்றி!

    கதையின் விமர்சனத்தைப் படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் கடற்கொள்ளையர் சாகஸக் கதைகள் தான். 'KIDNAPPED', 'TREASURE ISLAND' முதலிய கதைகளை மறக்க முடியுமா?

    இதன் ஆங்கிலப் பதிப்பைப் படிக்க ஆவல் மேலிடுகிறது. இந்தியாவில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.

    தமிழில் கார்டோ ‘கேப்டன் பிரின்ஸ்’ விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கலாம். பதிப்பாசிரியர்கள் யாரேனும் (இருப்பது ஒருவர்தானே) மனம் வைப்பார்களா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. கனவுகளின் காதலனே,

    ஏனோ தெரியவில்லை. இந்த பதிவை படிக்கும் பொது எனக்கு தமிழில் வெளி வந்த இந்திரஜால் காமிக்ஸ் புத்தகத்தில் வந்த புஸ் சாயரின் "அறுந்த நரம்புகள்" என்ற கதையில் வரும் ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது: (நீண்ட நாட்களுக்கு முன்னர் படித்தது - பிழை இருப்பின் மன்னிக்கவும்).

    கடற்காற்று விசிக்கிறதே,
    காக்கை குஞ்சு அழுகின்றதே,
    அருகில் அம்மா இல்லையே...... என்று செல்லும் இந்த பாடல்.

    அந்த கதையை படித்தவர்களுக்கு மட்டுமே அந்த வரிகளின் வேதனையும் வலியும் தெரியும். ஜோஸ், விஸ்வா போன்றவர்கள் இதனை கிண்டல் செய்தாலும் அந்த ஒரு கதை என்னில் நீங்கா பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மிகவும் அருமையான அந்த கதை புத்தகம் கிடைத்தால் வாசிக்கவும். மிக மிக சிறப்பானதொரு கதை அது.

    இந்த பதிவில் இதனை இட்டதற்கு என்னை மன்னிக்கவும். ஏனோ, தோன்றியது.

    செழியன்.
    (என்னுடைய ஜி மெயில் பாஸ்வோர்ட் மறந்து விட்டதால் இப்படி பின்னுட்டம் இட வேண்டி இருக்கிறது).

    ReplyDelete
  6. செழியன்,

    எனக்கு கடல் சார் சாகசங்கள் பிடிக்கும் என்று தானே சொல்லியிருந்தேன். நம் மூத்தவர் விஸ்வாவும் இதை கிண்டல் செய்யவில்லை. இதுவரை.

    வாழ்வில் ஒருமுறையாவது கடலோடியவர்கள் வாழ்க்கையில் தோற்றதே இல்லை யென ஒரு சிறந்த சிந்தனைவாதி (நாந்தேன்) சொல்லியிருக்கிறார்.

    ரஸ்புடின் என்ற பெயரும் கூட சாதாரணமான பெயர் அல்ல. இரஷ்யாவை கைக்குள் வைத்திருந்த ஒரு ம(த)ந்திர வாதி.

    அன் ரைஸ் என்ற எழுத்தாளர் பன்டோரா ஒரு Vampire என ஒரு நாவல் எழுதியிருப்பார். Vampire பற்றிக் கூட சில நல்ல சித்திர கதைகள் வந்துள்ளன. அதைப் பற்றியும் நீங்கள் பதிவு போடலாமே?

    டாக்டர், புதையல் தீவு என்றென்றும் என் மனதை கவர்ந்த கதை. ராபின்ஸ்ன் க்ரூஸோவும்.

    Fifteen men on a dead man's chest
    Yo ho ho and a bottle of rum
    Drink and the devil had done for the rest
    Yo ho ho and a bottle of rum.

    செழியன், நாங்களும் பாட்ட போடுவோம்ல.

    ReplyDelete
  7. நண்பர்களே, என் பங்கிற்கு இதோ ஓர் பாடல்

    புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே
    கட்டு வலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே

    கடல் கடந்து செல்வதற்கு தோணியும் உண்டு-மச்சான் தோணியும் உண்டு

    கட்டை சுறா உழுவ மீன் கடலில உண்டு-மச்சான்
    கடலிலே உண்டு....

    இது எப்டி இருக்கு மச்சான்ஸ்

    ReplyDelete
  8. நிலா நிலா ஓடி வா.
    நில்லாமல் ஓடி வா.
    மலை மேலே ஏறி வா.
    மல்லிகை பூ கொண்டு வா.

    தலைவர் வீரத் தளபதி ஜே.கே. ரித்தீஷ் நடித்து வெள்ளிவிழாவை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் நாயகன் படத்தில் இருந்து இந்த ஹிட் பாடல்.

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  9. கனவுகளின் காதலரே,

    மிக நீண்ட ஒரு பதிவின் மூலம் இன்னொரு அரிய கிளாசிக் காமிக்ஸ் (இம்முறை, உப்புக் கடல் பாடல் - THE BALLAD OF THE SALT SEA) பற்றி அறிமுகம் செய்ததற்கு நன்றி. எது மாதிரியும் இல்லாமல் ஒரு புது மாதிரியாக கடலை சுற்றி இந்த கதை பின்னபட்டுளது தனி சிறப்பம்சம். கடல் சார்ந்த நகர வாசியான எனக்கும் பிடித்து இருப்பதில் ஆச்சர்யம் என்ன. தங்கள் பதிவை படித்து விட்டு அந்த காமிக்ஸ் கதையை சீக்கிரம் படித்து பார்க்க மனம் லயித்து விட்டது. சீக்கிரத்தில் படித்து விட்டு கருத்தை பதிகிறேன்.

    சித்திரங்கள் தீட்ட பட்டு இருக்கும் பாங்கு, இதாலிய காமிக்ஸ்களுக்கே உண்டான தனி சிறப்பை மீண்டும் பறை சாற்றுகிறது. வெள்ளை-கருப்பு சித்திரங்களின் பொர்காலமாயிற்றே அது.

    // இந்த இலைகளை ஆடையாக கொண்ட இளம்பெண்களுடன் நேரத்தை செலவிடு ஆனால், இலையுதிர் காலம் வரும் வரையில் காத்திருக்காதே //
    உங்கள் கைதேர்ந்த மறுமொழி கலைக்கு இன்னும் ஒரு சான்று. கலக்கி விடீர்கள் காதலரே.

    // நேரம் கிடைத்தால் அதனைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதிந்திடுங்கள். //
    கண்டிப்பாக.

    // ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! //
    அதான் சென்ற பதிவில் கூறினேனே, அவர்கள் இருவருக்கும் உள்குத்து உண்டு என்று :)

    // "முதிர்ந்த இளங் காளை", "காமிக்சு ‘பெருசு’", //
    விஸ்வா தன் பதிவில் சான்று அளிக்க முடியாத வயது விவாதத்தை கிளப்பி விட்டதுக்கு, என்ன பதில்கள்... இன்னும் வெகு காலம் இது தொடரும் என்று எண்ணுகிறேன். யோவ் விஷ்வா... இது உங்களுக்கு தேவையா ஐயா :)

    பதிவை படித்து விட்டு, கருத்து கூறாமல் போவதற்கு காரணம் கேட்டால் நம் மக்கள் சொல்லும் நொண்டி சாக்கு, "நான் அந்த புத்தகத்தை படித்தது இல்லை என்று". ஒரு புத்தகத்தை படித்ததை தம்பட்டம் அடிக்கவா நாம் அதை பற்றி பதிகிறோம். மற்றவர்களுக்கு அதை பற்றி ஒரு அறிமுகம் கொடுக்கவும் தானே. அதை புரியாமல், பதிவை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிக்காமல் செல்பவர்களை, Torrents பாஷையில் "லீசெர்ஸ்" என்று கட்டாயம் அவதரிக்கலாம். அதை சுட்டி காட்டி தாங்கள் பதிந்து இருபது மேன்மை காதலரே.

    எல்லாரும் கடல் சம்பந்த பட்ட பாடல் ஒன்றை எடுத்து விட்டு இருப்பதால், என் பங்குக்கு... (சரியான சொற்கள் உபயாக படுத்தி இருகிறேனா என்று ஒரு சந்தேகமே)

    "கரை நக்குற போனோரீ,
    காண நிங்க போனோரீ,
    போய் வரும் போது என்ன கொண்டு வரும்....
    கை நிறைய போய் வரும் போது என்ன கொண்டு வரும் :)"

    வெகு நாட்களாக எண்ணி வரும் ராணி காமிக்ஸ் வலைபூவுக்கான முதல் இதழ் விமர்சனத்தை எழுதியே தீருவதற்காக கண் முழித்து உக்காந்து இருந்தேன்... ஆனால் சென்ற வாரம் போல இந்த முறையும் தங்கள் பதிவினை படித்து, கருத்து பதிந்து இரவு 3 மணி ஆனதை இப்போது தான் உணர்கிறேன். நாளை அலுவலகத்தில் எனக்கு தூக்க கலக்கத்தில் குட்டு விழுந்தால் அதற்கு நீர் காரனமையா :) ராணி காமிக்ஸ் வலைபூவுக்கு ஒரு பதிவு இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளி போன குற்றத்துடன் சேர்த்து :)
    தன் சோம்பேறித்தனத்திற்கு, அடுத்தவர்கள் மீது பழி போடுவதில் தான் என்ன ஒரு ஆனந்தம் :) ஹி.ஹீ.ஹி.ஹீ.ஹீ..

    பின்னோட்டதையே பதிவு போடுவது போல பதியும், என்னை எப்படி தடுப்பது என்ற எண்ணத்துடன், விடை பெறுகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    அப்புறம், சென்ற பதிவின் பின்னோட்டத்தில் நான் போகேமொன், பிளேடு போன்ற சப்பை கதைகள், காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் மங்கா காமிக்ஸ் மேல் உண்டான தப்பான அபிப்ராயத்தை சுட்டி காட்டவே கூறினேன், அதன் மீதான உங்கள் பதிவை எதிர்பார்த்து அல்ல. தங்களை போல எனக்கும் அவ்வகை கதைகளில் நாட்டம் இல்லை. அதை பற்றி நீங்கள் பதியாமல் இருப்பதே சரி.

    ReplyDelete
  10. கனவுகளின் காதலனே
    //ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! என்பது தான் தெரியவில்லை// கனவுகளின் காதலனே, தொலைபேசியில் நாம் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் உரையாடும்போது நீங்கள் தான் இந்த பதிவை பற்றியும் GUNM என்ற மாங்கா காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களையும் என்னிடம் கூறினீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போதே நான் இதனை பற்றி சுட்டி சேகரித்து படித்து இருந்ததால் இந்த கதையை பற்றி சற்று எனக்கும் தெரியும். ஆகையால் இந்த குற்றசாட்டை நான் மறுப்பதோடு (வயது முதிர்ச்சியால்) நீங்கள் மறந்த இந்த சம்பவத்தை மன்னிக்கவும் செய்கிறேன்.

    //அதான் சென்ற பதிவில் கூறினேனே, அவர்கள் இருவருக்கும் உள்குத்து உண்டு என்று// மேலும் அ.கொ.தீ.க.வின் தலைவர் என்னுடைய நண்பர் என்பதால் நான் அவருடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வேன். ஆனால் அவரிடம் நான் நேற்று பேசும்போது இந்த பதிவுதான என்று உருதிபடுதினேனே ஒழிய வேறு எந்த "உள்-குத்து"ம இல்லை என்பதை இங்கு அனைத்து வலைப்பதிவர்களுக்கும் தெரிய படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

    இந்த வலையுலகம் பல வேடிக்கையான சம்பவங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், இது போன்ற ஒரு வேடிக்கையான விஷயம் இதுவரை நடந்தது இல்லை. சாதாரண ஒரு Guess செய்யும் விஷயதிற்க்கா இத்தனை ரகளை?. அதனால் இதன் மூலம் வேறு எந்த "அரசியல்" செய்ய வேண்டாம் என்று அனைவரையும் மன்றாடி கேட்டு கொள்கிறேன். அரசியல் செய்ய வேறு தளங்கள், வேறு விஷயங்கள் உள்ளன. இங்கு வேண்டாமே?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  11. நண்பர் விஸ்வா, கனவுகளின் காதலர் தன் பதிவில் அகொதீகவிர்க்கு முன்பே இந்த பதிவு அனுப்ப பட்டு விட்டது என்று கூறியதால் தான் நான் கிண்டலுக்கு அப்படி பதிந்தேன். நீர் தொலைபேசி தகவலே முன்-தீர்க்க காரணி என்று குறிப்பிட்டு விட்டதால் சந்தேகம் தீர்ந்தது.

    மற்றபடி, நம் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் சகஜமாக அனுமதிக்க படும்,"நக்கல் நய்யாண்டி" முறையிலேயே நான் உள்குத்து என்று தமாசாக பதிந்தேன், தவிர எந்த வித அரசியல் நோக்குடனும் இல்லை (காமிக்ஸ் பதிவர்களிடையே அரசியலுக்கு என்ன வேலை). எனவே நீங்கள் அப்படி தவறாக கருத, என் பின்னூட்டம் காரணமாக இருந்தால் மன்னிக்கவும்.

    Let the Good Sense Prevail :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  12. அன்புள்ள அனாமி,

    கடல் பாடல் போட்டியில் வந்து நீங்கள் பாடியிருப்பது நிலாப்பாட்டு. எனவே மறுபடி வந்து ஒர் கடல் பாடலை பாடி விட்டு செல்லவும். நண்பர்களே நீங்களும் தவறாது கடல் பாடல்களை பாடிச்செல்லுங்கள்.

    என்ன பரிசா?!! அப்படின்னா என்னாங்கோ.

    ReplyDelete
  13. “கடலோரம் அலைகளே!
    கவிபாடும் குயில்களே!
    கடிக்காதே!
    அது புடிக்காதே!
    ஆத்தாடி!
    இள மனசொன்னு றெக்க கட்டி பறக்குது! பறக்குது!”

    (கவுண்டமனி, செந்தில் & கோவை சரளா மற்றும் குழுவினர் ஆடிப்பாடி நடித்த இப்பாடல் இடம்பெற்ற படம்: சின்னவர், இசை: இசைஞானி இளையராஜா)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  14. தலைவரே,

    இந்த பாடலை எழுதும்போது அந்த கவிஞர் கடல் அருகில் தான் இருந்து எழுதினார். அதனால் இதுவும் ஒரு கடல் பாடல் தான்.

    அனானி.

    ReplyDelete
  15. "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
    காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
    வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

    வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
    மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
    வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
    காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

    பொன்னியின் செல்வன் - பாகம் 2 - சுழற்காற்று - அத்தியாயம் 1 - பூங்குழலி

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  16. Hi,

    As per the request by Kanavugalin Kadhalan, Am posting One of the best poems ever written in English, iF NOT THE BEST.

    O Captain my Captain! our fearful trip is done,
    The ship has weathered every rack, the prize we sought is won,
    The port is near, the bells I hear, the people all exulting,
    While follow eyes the steady keel, the vessel grim and daring;
    But O heart! heart! heart!
    O the bleeding drops of red,
    Where on the deck my Captain lies,
    Fallen cold and dead.

    தமிழில் கையறு நிலை என்று ஒன்று உண்டு. தலைவனை இழந்த போது அவரின் நினைவாக கவிஞர்கள் பாடும் பாடல் தான் கையறு நிலை. அவ்வை பாட்டி பாடிய ஒரு கையறு நிலை பாடல் சங்க இலக்கியத்தில் ஒரு போரையே நிறுத்தியதாக கேள்வி. அதைப் போல, அமெரிக்க அதிபர் அப்ரகாம் லிங்கன் இறந்தபோது அவரின் நினைவாக வால்ட் விட்மன் எழிதிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

    இந்த பாடலில் வால்ட் விட்மன் அமெரிக்காவை ஒரு கப்பல் எனவும் அங்கு நிலவும் அசாதரண சூழ்நிலையை ஒரு "கடல்" எனவும் அந்த கடலை கடக்க முயற்சி மேற்கொள்ளும் கப்பல் காப்டைனை அப்ரகாம் லிங்கன் எனவும் கருதி எழுதப் பட்ட இந்த பாடல் மிகச் சிறந்த ஒரு கையறு நிலை பாடல் ஆகும்.

    O Captain my Captain! our fearful trip is done,
    The ship has weathered every rack, the prize we sought is won,
    The port is near, the bells I hear, the people all exulting,
    While follow eyes the steady keel, the vessel grim and daring;
    But O heart! heart! heart!
    O the bleeding drops of red,
    Where on the deck my Captain lies,
    Fallen cold and dead.


    இந்த பாடல் எனக்கு பிடிக்க வேறு ஒரு காரணமும் உண்டு. அதாவது, எனக்கு மிகவும் பிடித்த படமான "Dead Poet's Society" என்ற படத்தின் கிளைமாக்ஸ் வசனம் இது தான். அந்த வசனத்தின் தாக்கம் என்னுள் மறைய பல மாதங்கள் ஆனது. இந்த பாடலை முடிந்தால் ரசித்து படியுங்கள். அதைப் போலவே, முடிந்தால் (முடியா விட்டாலும் கூட) அந்த படத்தை பாருங்கள். உலக சினிமா இலக்கியங்களில் அதுவும் ஒன்று.

    நன்றிகள் பல.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  17. அன்பின் அனானி,

    நான் உங்களை நம்புகிறேன் இதோ போட்டிக்கு ஒர் பாட்டு.
    நிலா அது வானத்தின் மேலே/பலானது ஒடத்தின் மேலே
    நின்டாடுது வாலிப மனசு என்னாஹோய்,அட என்னாஹோய்
    பொழுதான போதும் துணையொன்னு வேணும் முதிரிளங்காளை ஆட்டம் விடிஞ்சாத்தான் தீரும்

    டண்டணக்கா,டனக்கு டக்கா,டண்டனக்கா டி.ராஜேந்தர் குரலில், குத்து ரீமிக்ஸ்.

    ஒப்பற்ற பயங்கரவாதத் தலைவரே,

    ஏல ஏலோ அய்யா எலல எலோ
    தாந்தத்தினா
    எலல ஏலோ தாந்தித்தினா
    கப்பலாளி அங்க தெரியுதடா
    தாந்தத்தினா
    வேளாவும் கூரலும் பாரையுங் கட்டாவும்
    வாளை கெழுது பனந்தொண்டயோட
    எல ஏல அய்யா
    எலல ஏலோ
    தாந்தத்தினா

    ஆழி சூழ் உலகு- பக்.160

    ReplyDelete
  18. கடலுக்குள்ளே ஏலேலோ
    கப்பல் தான் ஏலேலோ.
    கப்பல்ல ஏலேலோ
    நாமதான் ஏலேலோ.

    நாம எல்லாம் ஏலேலோ
    காமிக்ஸ் படிக்கிறோம் ஏலேலோ.
    கப்பல் ஓட்டுறது ஏலேலோ
    நம்ம கேப்டன் ஏலேலோ.


    கேப்டன் யாரு ஏலேலோ
    கேப்டன் அ.கொ.தீ.க டாக்டர் தான் ஏலேலோ.
    டாக்டர் யாரு ஏலேலோ
    அவருதான் கேப்டன் ஏலேலோ.

    ReplyDelete
  19. வேதாள நகரம் பாகம் பதிமூன்றில் இந்த பாடல் வர இருக்கிறது.

    ReplyDelete
  20. கேப்டன் ரசிகரே,

    அருமையான பாட்டு, அதுவும் காப்பி அடிக்காத பாட்டு. தரையில் குதிரைகளிற்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அந்த 3 குதிரை வீரர்களும் கடலை நோக்கி சென்ற செய்தி குதிரைகளிற்கு ஆறுதல் அளிக்கும். சின்ன அணிலிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  21. அடடே, அந்த மூன்று குதிரை வீரர்களும் கடலுக்கு தான் வருகிறார்களா? வரட்டும், வரட்டும்.

    அவர்களின் முடிவு கடலில் தான் என்று விதி இருக்கிறது போலும்.

    இப்போ, நான் ஒரு கடல் பாட்டு போடுறேன்:

    அடி ஆத்தாடி, இள மனசொன்னு (கண்டிப்பா விஸ்வா இல்ல)ரெக்கை கட்டி பறக்குது. இதுதானா?

    ReplyDelete
  22. வேதாள நகரம் ஒரு இலக்கிய படைப்பு. அதில் வரும் குதிரை வீரர்கள் இலட்சியத்திற்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள். அந்த உத்தமர்களை பற்றி தவறாக பேச வேண்டாம்.

    அவர்கள் கடலுக்கு சென்றால் கடலிலுள்ள மீன்கள் எல்லாம் எங்கு செல்லும் என்று ஏன் நீங்கள் நினைத்து பார்க்கவில்லை?

    ReplyDelete
  23. கடலினுள் பிறக்க வைத்தாய்,எங்களை[ இப்போது] தரையில் மிதக்க வைத்தாய்... ஜக்கம்மா காப்பாற்றம்மா,இலட்சியத்தை எதற்காகவும் தியாகம் செய்யும் வீரர்களிடமிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்.

    ReplyDelete
  24. நண்பர்களே,

    எந்நாளும் ஒரு பிரச்சனை இந்த வலையுலகத்தில் வந்ததால், என்னுடைய கருத்துக்களை இங்கு கூற விரும்புகிறேன்.

    ரபிஃக் ராஜா: When you ASSUME, u Make an ASS out of U and ME என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். பொதுவான ஒரு தளத்தில் நாம் எதையும் கூறும்போது, ஒரு முறைக்கு இரு முறை அதனை உறுதி படுத்தி கொண்டே பதிவிட வேண்டும். நம்முடைய அனுமானங்களை எல்லாம் பதிவிட்டால் நாம் எல்லோரும் கிசு-கிசு எழுத தான் செல்ல வேண்டும்.

    என்னாலும் பல காமிக்ஸ் நண்பர்கள் கோபமடைந்தார்கள் என்று எனக்கு தெரியும்.

    இருந்தாலும் நீங்கள் அதனை கமெண்ட் ஆக பதியும்போது நீங்கள் அவரிடம் உறுதிப்படுத்தி இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது அல்லவா?

    கிங் விஸ்வா: நீங்களும் சற்று அவசரப் பட்டு விட்டீர்களோ என்றே எனக்கு தோன்றுகிறது. இருந்தாலும் உங்களுடைய பதில் தன்னிலை விளக்கம் ஆக இருப்பதால் அது சரியாகப் படுகிறது.

    அனைவரும் ஒரு கடல் பாடலை பாடுவதால், நானும் என் பங்கிற்கு ஒரு கடல் பாடலை பதிகிறேன்:

    சிடிசன் படத்தில் அஜித் பாடும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலில் கடலை பற்றி அவர் பாடாமல் இருந்தாலும் பாடல் மற்றும் கதையின் பின்புலத்தில் கடல் வியாபித்து இருப்பதால் நண்பர் கனவுகளின் காதலர் என்னை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது:

    "கிழக்கே உதிக்கும் சூரியனே,
    உன்னை மேற்கே உதிக்க வைப்போம்".

    நன்றி.

    ReplyDelete
  25. நண்பர்களே,

    பதிவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு, குழப்பத்திற்கும் காரணம், என் தவறே அன்றி, விஸ்வாவோ, ரஃபிக்கோ அல்ல.தெளிவாக ஒன்றை எழுதாததால் வந்த சிறு குழப்பமே இது. எனவே முழுத் தவறிற்குமான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னை கடிந்து கொள்ளுங்கள், நண்பர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.

    காகொககூ அன்பரே, உங்கள் புதுமனையில் இனிதே குடியேறினீர்களா, என் பதிவைப் பற்றி எதுவும் கூறாமல் சென்றுவிட்டீர்களே, இயலுமானால் பதிவைப்பற்றி 2 வரிகள் எழுதி என்னைக் குஷிப்படுத்துங்கள்.

    ReplyDelete
  26. நண்பரே க.கொ.க.கூ.,

    ரஃபிக் ராஜா என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். எனக்கும் அவருக்கும் எவ்வித மனக்குழப்பமும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். காமிக்ஸ் உலகில் எந்த ஒரு புதுவரவு இருந்தாலும் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள இன்று வரை தவறியதில்லை.

    ரஃபிக் இட்ட பின்னூட்டம் எவ்வித வன்மத்தையும் மனதில் கொண்டு எழுதப்பட்டதல்ல என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும் நமது காமிக்ஸ் வலை நண்பர்கள் தவிர மற்றவர்கள் படிக்கும் போது ஏதேனும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதாலேயே நான் விளக்கமளித்தேன்.

    இத்தோடு இந்த தேவையில்லாத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    கனவுகளின் காதலர் அருமையான ஒரு பதிவை இட்டுள்ளார். அதைப் பற்றி மட்டும் இனி பேசுவோமே?!

    கனவுகளின் காதலரே - இந்த குழப்பத்திற்கு நீங்கள் எவ்வித்திலும் காரணியோ, பொறுப்பாளியோ அல்ல. ஆகையால் வருந்தவேண்டாம். தங்களின் அடுத்த பதிவை அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!

    கிங் விஸ்வா,
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  27. நான் எந்த குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த கமெண்ட்'ஐ இட வில்லை. அப்படி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன்.

    ReplyDelete
  28. ககொககூ அன்பரே, நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லையே, பின்பு ஏன் மன்னிப்பு, என்னுடன் ஏதும் கோபமா பதிவினைப்பற்றி எழுதமாட்டேன் என்கிறீர்களே. விஸ்வா உங்களையும் தான் விரைவில் பதிவைப்பற்றிய கருத்தினை பதியுங்கள் இல்லாவிடின் என் கவிதைகளினால் உங்களை, இனிக்க இனிக்க கொல்லுவேன்.

    ReplyDelete
  29. கனவுகளின் காதலனே,

    என்னை மன்னியும். உங்கள் கவிதைகள் மூலம் என்னை கொள்வதாக இருந்தால் நான் பல முறை இறக்க தயார். புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். பாருங்களேன்:
    http://kakokaku.blogspot.com/2009/01/blog-post_22.html

    ReplyDelete
  30. எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட கடல் பாடல்களை வெளியிட்டு உள்ளதால், என் பங்கிற்கு இன்னும் ஒன்று....
    (30 வது பின்னூட்டமாக, தமிழ் காமிக்ஸ் வலையுலகத்தில் அதிகமான பின்னூட்டங்களை பெற்ற பதிவானதற்கு வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே)

    ஏ பெண்ணே பெண்ணே என்னாச்சு
    ஏனிந்த உற்சாக பெரு மூச்சு
    படி தாண்டும், கரை தாண்டும்,
    மடை தாண்டும், தடை தாண்டும்
    நதியாக நதியாக ஆனேனே
    கடலுக்கும் மடலுக்கும் ஓயாதே தூதாகே
    நதி பாடும் அலையாக ஆனேனே
    வெள்ளத்தில் மீனானேன், வேகத்தில் மானானேன்
    கடல் பாடும் காற்றானேன், கரையில்லா ஊற்றானேன்

    - "தென்றல்" என்ற படத்திலோ-பாட்டு ஆல்பதிலேயோ வந்த அர்த்தம் சொரிந்த பாடல்

    முகமில்லா க.கோ.கு. வுக்கு பதில் கூறுவதாக நினைத்து கொண்டு நண்பரின் வலைப்பூவில் மேலும் இந்த விவாதத்தை வளர்க்க விரும்பாததால், நான் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  31. HI VERY NICE POST ON CORTO MALTESE. FOR MORE DETAILS :
    FILM : http://www.imdb.com/title/tt0259134/
    COMICS : http://rapidshare.com/files/101389560/corto_maltese_-_ballad_of_the_salt_sea.cbr

    ReplyDelete