Sunday, February 19, 2012

மறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்


சில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.

imageஉளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச்சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.

1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்கள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.

நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.

la-taupe-2012-20430-1561252877ஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவர்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போல் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.

மனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகாரியாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்கொள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

உளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக!!

ட்ரெய்லர்

Wednesday, February 1, 2012

அமெரிக்க காட்டேரி


உலகில் அதிகமாக விற்பனையாகும் புதினங்களை உற்பத்தி செய்திடும் படைப்பாளிகளில் ஒருவராகவே இன்னமும் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் திகழ்கிறார். அவர் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களை ரசித்துப் படித்துவிட்டு தல பின்னிட்டார்ல என்று பாராட்டும் ரசிகர் கூட்டம் அவரிற்கு சர்வதேச ரீதியாக உண்டு. உண்மையில் இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். அவரின் சில படைப்புக்கள் காமிக்ஸ் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு காமிக்ஸ் படைப்பிற்காக பிரத்தியேகமாக எழுதியது American Vampire க்குதான் என இக்காமிக்ஸின் அறிமுகப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

American-Vampire-2-variantScott Snyder என்பவரின் எண்ணத்தில் உதித்திட்ட கதைக்களமே அமெரிக்கன் வம்பயர் ஆகும். கிங்கிற்கு தெரிந்தவர் ஸ்னைடர் என்பதால் கிங் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கிங் கூறியிருப்பதுபடி கதையின் பிரதான பாத்திரமான Skinner Sweet ன் பூர்விகத்தின் அடித்தளங்களை முழுமையாக அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தது வாசகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல அமெரிக்கன் வம்பயர் கதையும்தான்.

லாஸ் ஏஞ்சலீஸிற்கு கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆளரவமற்ற வனாந்தரமான பகுதி ஒன்றில் குவிந்திருக்கும் இருளை முரட்டுத்தனமாக குலைத்தவாறே வருகிறது ஒரு மோட்டார்வண்டி. வனாந்தரத்தின் ஒதுக்கமான ஒரு பகுதியில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மோட்டார் வண்டியிலிருந்து கையில் விளக்குடன் இறங்குகிறது முக்காடு அங்கி அணிந்த ஒரு உருவம். அந்த உருவத்தின் நகங்களின் கூர்மை வனாந்தரத்தின் இருளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. உருவத்தின் முக்காட்டினுள் நுழைந்த இருள் அங்கிருக்கும் இருளைக் கண்டு வேகமாக தன்னிடம் திரும்புகின்றது.

மோட்டார் வண்டியின் கதவை மெல்ல திறக்கிறது அந்த உருவம். திறந்த கதவினூடாக உயிரற்ற விழிகளுடன் வனாந்தரவெளியை வெறிக்கின்றன வண்டியில் அடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள். அருகில் இருக்கும் பள்ளமொன்றில் சடலங்களை இழுத்து வந்து வீசுகிறது முக்காடு உருவம். வண்டியிலுள்ள சடலங்களை தள்ளி முடித்த நிலையில் கிளம்ப தயாராகிறது முக்காடு. அப்போது பள்ளத்திலிருந்து இருளின் ஒரு விழுதை பற்றிக் கொண்ட முணுமுணுப்பாக ஏறிவருகிறது நலிந்த ஒரு குரல். ஒரு பெண்ணின் மரணவாசல் முனகல். இரக்கம் காட்டுங்கள் நான் சாகவில்லை என ஒலிக்கிறது அக்குரல். குரல் வந்த பெண்ணின் உடலில் ஆழமான காயங்கள். துளையிட்ட, கடித்துக் குதறிய, ஆழமாகக் கிழித்த. அவள் கண்மணி வானத்தில் மிதக்கும் பிறைபோல தோற்றம் கொள்கிறது. வான்பிறையும், நட்சத்திரங்களும் அவள் குரலைக் கேட்காதவைபோல மெளனமாக விழித்திருக்கின்றன……

AV1இப்படியாகத்தான் ஆரம்பமாகிறது அமெரிக்கன் வம்பயரின் கதை. புது ரத்தம் என பிரெஞ்சுமொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அமெரிக்கன் வம்பயர் கதையின் முதல் ஐந்து இதழ்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் இரு கதைகள். ஒன்று 1925ல் நிகழ்வது. மற்றையது 1880ல் ஆரம்பமாகி 1925களை நோக்கி வேகமாக நகர்வது. இத்தொகுப்பின் முக்கிய பாத்திரங்களாக ஸ்கின்னர் ஸ்வீட்டையும், பேர்லையும் முன்வைக்க முடியும். புதிய வகை காட்டேரி ஒன்றின் தோற்றம், இருவகை காட்டேரிகளிற்கு இடையிலான வன்முறை, இவற்றின் மத்தியில் அகப்பட்ட நல்மனம் கொண்ட ஒரு சாதாரண துணைநடிகையின் வாழ்க்கையின் பிறழ்வு என்பவற்றை சுவையாக கதை விபரிக்கிறது.

இருளான ஆரம்ப பக்கங்கள் கடந்தபின் பிராகசமான விளக்குகள் ஒளிரும் தாரகையுலகமான ஹாலீவூட்டிற்குள் வாசகர்களை கதையின் பக்கங்கள் அழைத்து செல்கின்றன. பேர்ல், ஹாதி எனும் இரு துணை நடிகைகளின் வாழ்க்கை அப்பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. சினிமா அவர்கள் மீது செலுத்தும் கவர்ச்சி. ஒரு சிறுவேடத்திற்காகவேனும் காத்திருக்கும் அவர்கள் ஆர்வம். பிரபலமான நடிகர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் மையல். நாளாந்த வாழ்க்கையின் சுமைகளை இவற்றை தாண்டியும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என 1925களில் வாழ்ந்திருக்ககூடிய இரு துணைநடிகைகளின் வாழ்வின் ஒரு சிறியகூறை அதிக வேகமின்றி கதை கூறுகிறது. வேகமற்ற கதையின் முக்கிய திருப்பமாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல விருந்திற்கு பேர்ல் எதிர்பாராதவிதமாக அழைப்பு பெறும் நிகழ்வு அமைகிறது. இரவு விருந்திற்கு செல்லும் பேர்ல் அங்கு ரத்தவெறி கொண்டு காத்திருக்கும் சினிமா தயாரிப்பு பிரபலங்களிற்கு இரையாகிறாள். சினிமா தயாரிப்பில் இருப்பவர்கள் காட்டேரிகள் என்று சொல்லப்படுவதில் தவறேதும் இல்லையல்லவா.

இதன் பின்பாகத்தான் ஆரம்பப் பக்கங்களில் வரும் அந்தப் பிறை போன்ற கண்மணிகள் யாருடையவை என்பது தெரியவரும். அது அந்தக் கண்களினால் தெரியவருவதில்லை மாறாக பேர்ல் அவள் முதுகில் குத்திக் கொண்ட சூர்யகாந்தி மலர் பச்சையினால் அது வாசகர்களிற்கு புரியவைக்கப்படும். அந்த தருணம் கதையின் அருமையான திருப்பத் தருணங்களில் ஒன்று. ஆனால் பேர்லிற்கு அதிர்ஷ்டம் இன்னொருவன் வழியாக வருகிறது, அதை ஒருவர் அதிர்ஷ்டம் என அழைப்பது சரியாக இருக்குமேயெனில். அவன் தான் Skinner Sweet. அவன் தான் இப்பதிவின் தலைப்பு. அவன் தான் பேர்லையும் ஒரு காட்டேரியாக மாற்றுகிறான்.

ஆகவே ஸ்கின்னர் ஸ்வீட் எவ்வாறு ஒரு காட்டேரியாக மாறினான் என்பதை வாசகர்களிற்கு 1925லிருந்து 1880 க்கு காலப்பாய்ச்சல் மூலம் தாவி அவன் கதையைக்கூற ஆரம்பிக்கிறார்கள் கதாசிரியர்கள். கொள்ளை ,கொலைகளை தயங்காமல் செய்யும் ஒரு கூட்டத்தின் தலைவனான ஸ்கின்னர் காட்டேரியாக மாற வழிவகுத்த நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் கதையில் விபரிக்கப்படுகிறது. இப்பகுதியில் வெஸ்டெர்ன்களின் பாணியில் கதைகூறப்படுகிறது, இக்காமிக்ஸ் தொகுப்பின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உருக்கொண்ட முதல் காட்டேரியாக கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கின்னர் ஸ்வீட்டிற்கும், அவனை தற்செயலாக காட்டேரியாக மாற்றிவிட்ட, ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த காட்டேரிகளிற்குமான பகையும், வெறுப்பும் அங்கிருந்து காலாகாலமாக தொடர ஆரம்பிக்கிறது. 1880களில் காட்டேரிகள் வங்கி உரிமையாளர்களாகவும், புகையிரதப்பாதையின் சொந்தக்காரர்களாகவும், அதிகாரம், தங்கம், பணம், போன்றவற்றின் மீதான தீர்க்கவியலாத் தாகம் கொண்ட முதலாளித்துவ வர்க்கமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இக் காட்டேரி முதாலளித்துவத்திற்கு எதிரான வன்முறை அராஜகவாதியான ஸ்கின்னர் ஸ்வீட் அறிமுகமாகும் தருணத்திலிருந்து கதை வேகம் கொள்ள ஆரம்பிக்கிறது.

AV2கொள்ளை, கொலை, குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கி மோதல்கள், எதிர்பாரா திருப்பங்கள் என திகிலும் விறுவிறுப்பும் கதையில் கூடிக்கொள்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் காட்டேரிகள் தம்மை தூய குருதி கொண்ட இனமாக காண்கிறார்கள். ஸ்கின்னர் அவர்களை பொறுத்தவரையில் களங்கமான குருதி கொண்டவன். களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. அவன் பலவீனங்கள் வேறானவை. அப்பலவீனங்களை கண்டுகொள்ள பெரும் தேடல் கொள்கிறார்கள் தூயகுருதிக் காட்டேரிகள். ஸ்கின்னர் ஸ்வீட் காட்டேரிகளின் பரிணாமத்தின் முதல்படியாக கதையில் சித்தரிக்கப்படுகிறான்.

காலஓட்டத்தில் தொடர்ந்து செல்லும் காட்டேரிகளிற்கிடையான யுத்தத்தில் பேர்லை தன் யுத்தத்தில் பயன்படும் ஒரு சதுரங்க சிப்பாயாக உபயோகித்துக் கொள்கிறான் ஸ்கின்னர். அவன் கடந்து வரும் பாதைகளில் எல்லாம் அவன் எதிரிகளின் கல்லறைக் கற்கள் சிறு செடியாக முளைத்து நிற்கின்றன. அவன் எதிரிகளின் பெயர்கள் வாடா மலர்களாக அவற்றின் மேல் பூத்திருக்கின்றன. அவன் மனமெல்லாம் புது எண்ணங்கள் வியூகங்கள் கொப்பளிக்கின்றன. அவற்றின் நிறைவின் வழி வழிந்தோடப்போகும் குருதி அவனை அக்கணமே மேலும் தாகம் கொண்டவனாக்குகிறது. பில் பண்டிங் எனும் எழுத்தாளர் கூறுவதாக ஸ்கின்னர் ஸ்வீட்டின் கதை காமிக்ஸில் அமைந்திருக்கிறது. ஸ்கின்னரின் சாகசங்களை அல்லது கொடூரச் செயல்களை நேரில் பார்த்த சாட்சியமாக பில் பண்டிங் இருக்கிறார். பில் பண்டிங்கின் நண்பனான காவல்துறை அதிகாரி கிம் புக்கும் கதையில் வரும் சிறப்பான ஒரு பாத்திரமே. உனக்கு வயதாகி விட்டது, நான் நித்யத்திற்கும் இளைஞன், மெதுவாக, இயல்பாக மனிதர்கள் இறப்பது போலவே நீ இறந்து போ, இதைத்தவிர சிறந்த வஞ்சம் என் கண்களிற்கு தெரியவில்லை என்று குறிப்பெழுதி பில் பண்டிங்கை ஸ்கின்னர் உறைய வைக்கும் தருணம் காட்டேரிக் கவித்துவமான தருணம்.

1206416-american_vampire_02_cover_by_rafaelalbuquerqueart_super1பேர்ல் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தனக்கு பிடித்த சித்திரங்களை அருகே வரைந்து கொள்கிறது. ஓவியர் Rafael Albuquerque படு அட்டகாசமாக சித்திரங்களை படைத்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு இதழின் இறுதிப்பக்கத்திலும் வரும் சித்திரம் அசரவைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறார் என்று கூறிடலாம். அவள் எதிர்கொள்ளும் தருணங்கள் வழி தன் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னரை சுற்றியிருக்கும் மர்மங்கள் இக்கதை தொகுப்பில் முற்றிலுமாக கூறி முடிக்கப்படவில்லை. அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்கின்னர் தெருவொன்றில் நடந்து செல்கையில் இன்னுமொரு அசத்தலான திருப்பத்தை அறிமுகம் செய்து வைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர். இருப்பினும் பேர்ல் இயல்பாகவே ரத்த வெறி கொண்ட ஒரு காட்டேரியாக கதையில் சித்தரிக்கப்படுவதில்லை. அவள் காட்டேரியாக மாற்றம் கொள்ளும்முன் அவளிடம் இருந்த மனிதநேயம் அவளை விட்டு நீங்காமலே இருக்கிறது. தன் எதிரிகளை துவம்சம் செய்து தீர்த்தபின் அமைதியான ஒரு இடம் தேடி ஒதுங்கி கொள்ளவே விரும்புகிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னர் அழிவு என்பதை அறிமுக அட்டையாக வினியோகிக்கும் ஒரு வெறியன். இனத்துவேஷன். இப்படியாக பேர்லிற்கும் ஸ்கின்னரிற்குமிடையில் அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே இருந்திட்ட மனித இயல்புகள் இறந்த பின்னும் மாறிடவில்லை என்பதாக கதை நகர்கிறது.

பீற்றிக்கொள்ளும் முன்னுரையில் கிங், ஒரு ரத்தக் காட்டேரி ஒருபோதும் இவ்வாறு இருத்தல் ஆகாது என பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறார். ப்ளடிமேரிகளை சுவைத்துக் கொண்டு இரவில் மட்டும் பணியாற்றும் தோல் வெளிறிய ஒரு துப்பறிவாளனாக. நீயூ ஆர்லியன்ஸை சேர்ந்த துக்கத்தில் தோய்ந்த ஒரு ஆண்விபச்சாரியாக. மனவழுத்தம் கொண்ட ஒரு விடலையாக. ஒளிகடத்தும் தோலும் மான்களை போல் கண்களையும் கொண்ட ஒரு வாலிபனாக. ஸ்கின்னரில் இந்தப் பண்புகள் இல்லை என்பது உண்மை. கிங் யார் யாரை குறிவைக்கிறார் என்பதும் ஓரளவு புரிகிறது. ஆனால் கிங் தனித்துக் கதையை உருவாக்கி இருப்பேரயானால் கதை இவ்வளவு விறுவிறுப்புடன் நகர்ந்திருக்காது என்பது அணில் ரத்தம் அருந்தி வாழும் காட்டேரிகளிற்கும் தெரிந்த விடயம். ஐந்து காமிக்ஸ் இதழ்கள் கொண்ட முதல் தொகுப்பை படித்து முடிக்கையில் அடுத்த தொகுப்பையும் படிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர் ஸ்காட் ஸ்னைடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. சித்திரங்களும் தரமாக இருக்கின்றன. ஆங்கில மொழியில் மூன்று தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. காட்டேரி + வெஸ்டெர்ன் அதிரடி விரும்பும் வாசக உள்ளங்கள் இம்முதல் தொகுப்பிற்காக டவுன்லோட் அய்யானாரை தாராளமாக நாடுங்கள். கதை உங்கள் ரத்தத்தினை அதிகம் உறிஞ்சாது. [***]

Sunday, January 22, 2012

யாழி சூடிய நங்கை [ அல்லது கம்பேக் ஒரு காலப்பிரளயம்]


பிரபல தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ரம் தொடுத்த வழக்கில் தனக்கெதிரான தீர்ப்புகளை சந்திக்கும் பொருளியல் பத்தியாளன் மிக்கேல் ப்ளொம்க்விஸ்ட் அவன் பணியாற்றிவரும் பத்திரிகையான மில்லேனியத்தில் இருந்து விலகிச்செல்கிறான். இந்நிலையில் அவனைத் தொடர்பு கொள்ளும் சூவிடனின் பெரும் வியாபார புள்ளியான ஹென்ரிக் வேன்ஞ்சரின் வக்கீல் ஃப்ரோட், அவனை வேன்ஞ்சர் மாளிகைக்கு வரும்படி அழைப்பை விடுக்கிறான். அழைப்பை ஏற்று அங்கு செல்லும் ப்ளொம்க்விஸ்டிடம் நாற்பது வருடங்களிற்கு முன்பாக மர்மமான முறையில் காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான ஹாரியட்டின் மறைவின் பின்பாக இருக்ககூடிய மர்மங்களை ஆராய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார் ஹென்ரிக் வேன்ஞ்சர்……

உலகின் 46 நாடுகளில் 65 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்த மில்லேனியம் வரிசை நாவல்களின் பிறப்பிடம் சூவீடன். 2009 களில் சூவீடிய மொழியில் நாவலை தழுவி திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. நாவலை எழுதிய Stieg Larsson தன் படைப்புகளின் வெற்றியை ருசிக்காமலே இந்த இன்னுலகை விட்டு நீங்கி விட்டார். நவலின் சிறப்பான வெற்றி ஹாலிவூட் நவாப்கள் மனதில் குத்தாட்டம் போடாமல் இல்லை. The Girl with the Dragon Tattoo எனும் பெயரில் வெளியான நாவலின் ஹாலிவூட் வடிவம் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. குரங்கு கைகளில் பூ மாலையை தராதீர்கள் என்று சொன்ன பெரியவர்கள் பூமாலையை யாரிடம் தரவேண்டும் என்பதை சொல்லவில்லை. ஆனால் ஹாலிவூட் நவாப்கள் இத்திரைப்படைத்தை இயக்க தேர்ந்தெடுத்த நபர் குறித்த கணிப்பில் தப்பே செய்யவில்லை.

உலகளாவிய வெற்றி பெற்ற திகில் நாவல் ஒன்றின் திரைவடிவைக் காணச்செல்கையில் மனதில் வரும் முதல் எண்ணம் நாவலைவிடத் திரைப்படம் நன்றாக உருவாக்கப்பட்டிருக்குமா அல்லது பெரும்பான்மையான தழுவல்கள் போல் சொதப்பலாக இருக்குமா என்பதேயாகும். இயக்குனர் தேர்ந்த ஆசாமியாக இருந்தாலும் கூட நாவல்களின் திரைவடிவங்கள் ஏமாற்றத் தவறுவதில்லை. இயக்குனர் Brian De Palma இயக்கிய The Black Dahlia வை இதற்கு சிறப்பான ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஜேம்ஸ் எல்ராய் எனும் மகத்தான எழுத்தாளன் எழுதிய மகத்தான படைப்பு திரையில் தன் மகத்தை எல்லாம் தொலைத்து விட்ட ஒரு படைப்பாய் உயிர் கொண்டிருக்கும். இயக்குனர் டேவிட் ஃபின்ஞ்சர் இயக்கிய Zodiac திரைப்படமானது நல்ல வசூலை சம்பாதிக்கவில்லை எனிலும் நல்லதொரு படைப்பாய் அமைந்திருந்தது. ஒரு தொடர்கொலைஞனைப் பற்றிய இரு நபர்களின் விசாரணை மீது நகரும் அத்திரைப்படம் ஏமாற்றம் தந்திடாத ஒரு திரையனுபவம். ஃபின்ஞ்சர் இயக்கியுள்ள மில்லேனியத்தின் முதல் நாவலின் திரைவடிவம் ரசிகர்களை ஃபின்ஞ்சரிற்கே உரித்தான பாணியுடனான குற்றசூழ்நிலைக்குள் அதன் வண்ணங்களுடன் தவறாமல் எடுத்து செல்கிறது.

படம் ஆரம்பித்து எழுத்துக்கள் திரையில் உருக்கொள்ளும் தருணத்தில் எழுத்துக்களுடன் தோன்றும் செயற்கைவரைதோற்றங்களும், Led Zeppelin பாடலான Immigrant song ஆனது சமகாலத்தின் Trent Reznor & Atticus Ross & karen o திறமைகளில் விளைந்து ஒலிக்கும் பாடலும் இசையும் அட்டகாசமாக இருக்கின்றன. நாவலின் ஆன்மாவை தொலைத்து விடாது அதன் கதைக்களம் நடமாடும் ஸ்வீடன் நாட்டிலேயே இயக்குனர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கதை இடம்பெறும் ஒரு வருட காலத்தின் ஓட்டம் பருவகால ஓட்டங்களாக பாத்திரங்களுடன் உருக்கொள்கிறது திரையில். உறைந்து விறைத்த பனியும், பச்சை வண்ண வசந்தமும் அவற்றிற்கேயுரிய வனப்புடன் காட்சிகளினூடு கண்காட்டுகின்றன. சிறப்பான படத்தொகுப்பும், சூழ்நிலையின் உணர்வுகளை பார்வையாளனிற்கு கடத்திடக்கூடியதான ஒளிப்பதிவும் திரைப்படத்துடன் ஒன்றச்செய்கின்றன.

millenium-les-hommes-qui-n-aimaient-pas-les-femmes-2011-20033-893632067நாவலில் ப்ளொம்க்விஸ்ட் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் பகுதி சற்று வேகம் குறைந்த ஒன்றாக இருக்கும். திரைப்படத்தில் திரைக்கதை அதற்கு வேகத்தை கூட்டி தந்திருக்கிறது. சூவீடிய சமூகத்தின் மேற்பூச்சு அழகின் அடியில் ஒளிந்திருக்கக்கூடிய அவலங்கள் சிலவற்றை கதை கூறிச்செல்கிறது. கதையின் மிக முக்கியமான அம்சம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. திரையில் ஃபின்ச்சர் அதை உயிருடன் எடுத்து வந்திருக்கிறார். பலியாளாகவும் பழிவாங்குபவளாகவும், சமூகத்தின் நெறிகள் மீது காறி உமிழ்பவளாகவும், அதன் கணிப்புக்களை சாக்கடைக்குள் வழியச் செய்பவளாகவும் அசத்தலாக உருமாறி நிற்கிறாள் தோளில் ட்ராகன் பச்சை அணிந்த இளநங்கை லிஸ்பெத் ஸ்லாண்டர். திரைப்படம் எங்கும் அழிக்கமுடியா பச்சையாக நிறைகிறது ஸ்லாண்டர் பாத்திரம். பெண்கள் மீதான வன்முறையில் ஒட்டுமொத்த எதிர்குரலாக, பதிலடியாக அது வேகம் கொண்ட காற்றாக எதிர்படும் தடைகளை தூக்கி வீசுகிறது. நாவலில் இருந்ததைவிட அபாரமான முறையில் இப்பாத்திரத்தை உருவாக்கியிருகிறார் இயக்குனர் ஃபின்சர். இப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்பட்ட நடிகை Rooney Mara சமூகத்தால் விளிம்புநிலை ஆளுமை என தீர்க்கப்பட்ட ஒரு பெண்ணை சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வளவு சுதந்திரமானவள், எவ்வளவு உறுதியானவள், அவளுள் சூல் கொண்டு வாழ்ந்திருக்கும் காட்டுத்தனம் வெளிப்படும்போது அவள் எவ்வளவு அழகானவள் என்பவற்றை தன் பாத்திரம் மூலம் அவர் பிரதிபலித்து செல்கிறார். இந்தப் பாத்திரத்துடன் ஒப்பிடுகையில் நடிகர் க்ரெக் டேனியல் ஏற்றிருக்கும் ப்ளொம்க்விஸ்ட் பாத்திரம் திரையில் அடிபட்டு ஒதுங்கி சென்றுவிடுகிறது. முகத்தில் நுன்னுணர்வுகளை அவற்றின் அழகுடன் வெளிப்படுத்த இயலாத நடிகராக இருக்கிறார் க்ரெக் டேனியல்.

திரைப்படம் ஆரம்பித்து சரியாக ஒருமணி நேர அளவில், ஸ்லாண்டரிற்கும், ப்ளொம்க்விஸ்டிற்குமான அறிமுகம் ஏற்படுகிறது. அதுவரையில் ப்ளொம்க்விஸ்டின் கதை ஒரு பக்கமாகவும், ஸ்லாண்டரின் கதை ஒரு பக்கமாகவும் பக்குவமான வேகத்தில் திரையில் எழுதிச்செல்லப்படுகிறது. இந்தக் காலநேரத்தில் இரு ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் பார்வையாளனை சிறப்பாக வந்தடைந்து விடுகின்றன. இருவரிற்குமிடையில் இருக்கக்கூடிய வயது, தொழிற்படு, செயல்முறை, தொழிநுட்ப அனுகு வேற்றுமைகள் எதிர் எதிர் முனைகளாக இந்த இரு ஆளுமைகளையும் சிறப்பாக ஒட்ட வைக்கின்றன. அவர்கள் இணைந்து செயலாற்றும் தருணங்களில் வேகம் கதையில் சிறகு கட்டிக்கொள்கிறது. படிப்படியான விசாரணைகளும் அவை தரும் ஏமாற்றங்களும் பின்னர் பலன் தரக்கூடிய தரவுகளாக மாறி மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க விரைகின்றன. அந்த முக்கிய உண்மையை ஸ்லாண்டரும், ப்ளொம்க்விஸ்டும் கண்டுகொள்ளும் தருணமும் அதற்கு பின்வரும் காட்சிகளும் இதயதுடிப்பை மூச்சுவிட அனுமதிப்பதில்ல. முக்கியமான குற்றவாளிக்கும் ப்ளொம்க்விஸ்டிற்குமிடையில் அந்நிலையில் வரும் உரையாடல் எவ்வளவு குளிரையும் விஞ்சிவிடும். அத்தருணத்தில் அக்குற்றவாளி பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரின் நடிப்பை அவதானியுங்கள். சில நிமிடங்கள் ஆனாலும் தன் நடிப்பால் அள்ளிக்கொள்கிறார் அந்த நடிகர்.

இயக்குனர் ஃபின்ச்சர் மீளத் தம்மை இத்திரைப்படம் மூலம் குற்றசினிமாவில் புதுப்பித்திருக்கிறார். இரண்டரை மணி நேரத்தில் சிறிய ஏமாற்றம் என்பது படத்தின் இறுதி தருணங்களே. அவை தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ராம் மீதான எதிர் நடவடிக்கையாக இருக்கின்றன. ஹாரியட்டின் தந்தை மீதான பிரேத பரிசோதனையில் அவர் தலையில் வீழ்ந்த அடி பற்றி ஏதும் இல்லையா என்ன!!!!! இறுதியில் அன்பளிப்பு பரிசாக வாங்கிய தோல் ஜெர்க்கினை குப்பை தொட்டியில் விசி எறிந்து விட்டு சென்றாலும் கூட ட்ராகன் பச்சை அணிந்தவள் ஆழமாக பதிகிறாள் மனதில். [***]

பி.கு...அடைப்புக்குள் உள்ள தலைப்புக்கள் தம்மை மீளமாற்றும் தன்மை கொண்டவை...

ட்ரெய்லர்

Saturday, January 14, 2012

மேன்மைதகு மேஃப்ளவரின் நாள் - XIII - 20


XIII-Le-jour-du-soleil-noir-232x300XIII ன் முதலாவது ஆல்பமான கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படத்தினையும் அதன் இருபதாவது ஆல்பமான மேஃப்ளவரின் நாளினது அட்டைப்படத்தினையும் ஒரு துவிச்சக்கர சிற்றிடைவெளி தந்திடும் அவகாசத்தில் ஒப்பிட்டு பார்த்திடுவோமேயானால், அவ்விரு ஆல்பங்களிற்கும் இடைப்பட்ட 27 வருடங்களின் தடமானது மக்லேன் மாமாவில் அழகான முதிர்ச்சியாக உருப்பெற்றிருப்பது பட்டென உறைக்கும்.

பணப்பெட்டிக்கு முன்பாக ஐயமும் ஆச்சர்யமும் கலக்கிய பார்வையுடன் உத்தரத்திலிருந்து தொங்கி வழியும் ஒளியின் கசிவில் அதிரடிக்குள் தன்னை இறக்கி கொள்ளவிருக்கும் மக்லேனையும் அவனை சுற்றியிருக்ககூடிய மர்மங்களையும் கேள்விகளையும் கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படமானது மங்கிய இருள் தன் தடத்தினுள் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்களின் கசியலாக ஒழுகவிட்டுக் கொண்டிருக்கிறது. XIII தொடரின் அறிமுகமற்ற வாசகன் ஒருவன் அறிந்திராத மக்லேனின் வாழ்க்கைபோல மக்லேனின் முகம் மங்கிய ஒளி தூவும் அந்த இருளில் சற்று நனைந்திருக்கிறது. பத்தொன்பது ஆல்பங்களின் கதை சொல்லல் வழியே மக்லேன் தான் யார் என்பதனை அடையாளம் கண்டபோதிலும் அவன் நினைவுகள் முற்றாக அவனிடம் திரும்பி வந்திடவில்லை. மக்லேன் தன் நினைவுகளை தேடும் வேட்டையின் ஆரம்பமாக வெளியாகியிருக்கும் இருபதாம் ஆல்பமான மேஃப்ளவரின் நாளின் அட்டைப்படத்தில் மக்லேன் மாமா ஷோக்காகத்தான் இருக்கிறார்.

பணப்பெட்டிக்கு பதிலாக பக்குவமானதொரு மடிக்கணிணி. கால்சட்டை பைகளிற்குள் நுழைத்திட்ட கைகள். பிரகாசம் ததும்பும் மக்லேன் மாமா வதனத்தில் புதியதொரு அதிரடிப் பயணத்திற்கு தயாரான உறுதி. அப்பயணத்தின் மிக முக்கியமானதொரு புள்ளியாக இருந்திடக்கூடிய மேஃப்ளவர் கப்பல் அலைகள் ஆவேசமாய் நுரைத்து ததும்பும் கடலில் சற்று சரிந்தே நிற்கும் நிலை. கருமை சூல் கொண்டு உடன் பிரசவிக்க பரிதவிக்கும் வானம். யாவும் வாசகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. என்னவாக இருக்கலாம் என கேட்க தூண்டுகிறது. மேலுள்ள இரு அட்டைப்படங்களிலும் உள்ளது வில்லியம் வான்ஸின் கையொப்பம்தான், இருபதாம் ஆல்பத்திற்குரிய அட்டைப்படத்தையும் அதில் ஒரிரு பக்கங்களையும் நட்புக்காக வரைந்து தந்திருப்பவரும் வான்ஸ்தான். ஆனால் புதிய தொடரிற்கு கதை மற்றும் சித்திரங்கள் வான்ஸ், வான்ஹாம் கூட்டணி அல்ல. புதிய அணிதான். கதைக்கு பொறுப்பாக Yves Sente. சித்திரங்களிற்கு பொறுப்பாக Youri Jigounov.

mf1fr-10142011PremiredecouvExclusiveXIIIT20ஈவ்ஸ் சென்ட்டிற்கு வான் ஹாம் ஆரம்பித்து வைத்து விலகிச் சென்ற காமிக்ஸ் தொடர்களை தன் கையில் பொறுப்பேற்பது என்பது புதிதல்ல. வான் ஹாமின் Thorgal தொடரை அவர் பொறுப்பு ஏற்று இதுவரை நான்கு ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்போது XIII அவர் கைகளிற்குள் வந்திருக்கிறது. Blake and Mortimer, Le Janitor ஆகிய பிரபலமான தொடர்களில் பணியாற்றியிருக்கிறார். இதில் Le Janitor அவர் கற்பனையில் உருவாகிய தொடராகும். யூரி ஜிகுனொவ் Alpha எனப்படும் சமகால உளவுத்தொடரிற்கு வரைந்த சித்திரங்கள் மூலம் பிரபலமானவர். ஈவ்ஸ் செண்ட் லொம்பார்ட் பிரசுரத்தின் ஆசிரியர் குழுவின் முக்கியமான பொறுப்பில் இருந்தபோது மொஸ்கோவில் இருந்து வந்த யூரி ஜிகுனொவ்வில் ஒரு நல்ல கலைஞனைக் கண்டுகொண்டு அவரை உள்ளெடுத்துக் கொண்டார். ஆல்பாவின் அசத்தல் ஓவியங்கள் ஜிகுனொவ்வின் திறமைக்கு சான்றாக திகழ்கின்றன. காமிக்ஸ் ரசிகர்களால் அதன் அழகிற்காக பெரிதும் விரும்பப்படுகின்றன.

கடலிற்கும் மக்லேனிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நினைவிழந்த நிலையில் கடற்கரையில்தான் மக்லேனின் கதை ஆரம்பித்தது. அவனைக் காப்பாற்றிய ஏப் மற்றும் சலி ஸ்மித் தம்பதியினர் வாழ்ந்திருந்த அதே Bar Harbor கடற்கரை வீட்டில் வசிப்பவனாக கதையில் அறிமுகமாகிறான் மக்லேன். தன்னால் மீட்டப் படமுடியா நினைவுகளை மீட்டெடுக்க அவன் உளவியல் மருத்துவரும் அட்ரா சக்க எனச் சொல்லக்கூடிய அழகை கொண்டவருமான டாக்டர் சூசான் லெவின்சனிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறான். சூசான் லெவின்சனிற்கு மக்லேன் மாமாமேல் ஒரு ஈர்ப்பு இருப்பதாக காட்டப்படுவதன் மூலம் எதிர்வரும் ஆல்பங்களில் ஒன்று அவர் தியாகச்சாவையோ அல்லது பயங்கரமான துரோகத்தையோ நிகழ்த்துபவராக மாறிடலாம் என்பதை வாசக மனம் உருச்செய்யலாம். மக்லேனிற்கு மச்சம்ம்பா. அனுபவிக்க போகிறார். ஆனால் பாவம் இந்த ஆல்பத்தில் அனுபவிக்க கதை அவரை விடவில்லை.

உளவியல் டாக்டர் சூசான் அத்துறையில் பிரபலமான புரபசர் டக்ளஸின் சிகிச்சை மூலமாக மக்லேனிற்கு விமோசனம் கிடைக்குமா என முயல ஆரம்பிக்கும் அதே வேளையில் சூப்பர் பிகருப்பா இது எனக்கூறிடும் வகையில் அழகான சிட்டு, அல்வாவில் செய்த மொட்டு யூலியானா, கடற்கரை வீட்டில் மக்லேனை வந்து சந்திக்கிறார். தம் ரகசிய அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு மக்லேனை நட்புடன் அழைக்கிறார். ஆனால் மக்லேன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கவே யூலியானா அங்கம் வகிக்கும் USAFE எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்களால் மக்லேன் மாமாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது தொடர்கிறது. அவன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. எவ்வழியிலாவது மக்லேனை தம் அமைப்பிற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஒரு தீவிரத்துடன் செயற்படுகிறார்கள் USAFE குழுவினர்.

mf2புரபசர் டக்ளஸ் பெரியமனது வைத்து மக்லேனிற்கு சிகிச்சை தர முன்வருகிறார். மக்லேனின் மூளையில் மின் தூண்டல் மூலம் அவன் மறந்து போன நினைவுகளை மீட்க முடியுமா என அவர் முயல்கிறார். அவர் சிகிச்சையில் ஒரு சிறிய வெற்றி கிடைக்கிறது. மக்லேனிற்கு அவன் பால்ய கால நண்பனான ஜிம் ட்ரேக் என்பவன் பற்றிய சில நினைவுகள் திரும்புகின்றன. மதுவிடுதி ஒன்றில் தன் கவர்சியான மார்புகளை காட்டியவாறு நிற்கும் பரிசாரகியினை சட்டை செய்யாது புட்வெய்சர் பீரைக் குடிக்கும் மக்லேன், பின் தன் மீனவ நண்பன் ஒருவனின் உதவியுடன் பேஸ்புக்கில் ஜிம் ட்ரேக்கை தேடி, கண்டு பிடித்தும் விடுகிறார். ஜிம் ட்ரேக்கை தொடர்பு கொள்ளும் மக்லேன் அவனை சந்திக்க தான் ஆவலாக உள்ளதை தெரிவிக்கிறான். ஜிம் ட்ரேக்கும் அதே மனநிலையில் இருப்பதை கதையின் ஓட்டம் தெளிவாக்குகிறது. ஆனால் மக்லேன் மாமாவிற்கு அவரின் கடந்தகால நினைவுகள் திரும்பிவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் USAFE தன் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது…. பென்டகனும், FBI யும் மக்லேனை தீவிரமாக தேடும் வகையில் அது சதிகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறது….. கொலைக்குற்றம், மனநிலைபிறழ்ந்தவன் இவ்வகையான அபாண்டங்களை சுமந்து கொண்டு தன் நினைவுகளை மீட்க ஓட ஆரம்பிக்கிறான் மக்லேன்…. அடுத்த கட்ட ஓட்டம் ஆரம்பம். இந்த ஓட்டம் எத்தனை ஆல்பம் நீடிக்கும் என்பது வசூலிற்கே வெளிச்சம்.

மெய்னிலிருக்கும் அகுஸ்டாவில் ஆரம்பமாகும் கதை, ப்லிமுத், அரிசோனா பாலைவனம், பிரான்ஸின் அழகிய கிராமப்புறம், மேன்ஹாட்டன் என வேகம் பிடிக்கிறது. ஒவ்வொரு நிலப்பரப்பினதும் அழகை ஜிகுனொவ்வின் சித்திரங்கள் அழகுடன் தீட்டிச் செல்கின்றன. இந்த ஆல்பத்தின் மிகப்பெரிய பலம் ஜிகுனொவ்வின் சித்திரங்கள்தான். வான்ஸ் தந்த வரிகளை அப்படியே தத்தெடுத்தாலும் தன் பாணியில் அருமையாக இந்த ஆல்பத்திற்கான சித்திரங்களை ஜிகுனொவ் வழங்கியிருக்கிறார். இத்தொடரை இளமையாக கொண்டு செல்ல அவர் கைத்திறன் நிச்சயம் கைகொடுக்கும். கதையில் வரும் சிட்டுக்களை அவர் கவர்சியுடனும் அழகுடனும் படைத்திருக்கிறார். ஆனால் டார்கோட் படுபாவிகள் ஒரு சிட்டைக்கூட எதையும் காட்ட விடவில்லை. சூசானாவின் பாதங்களையும், யூலியானாவின் த்த்த்த்த்திரண்ட தயிர் போன்ற மார்பகங்களின் வெட்டையும் காட்டினால் மட்டும் போதுமா. ஆல்பத்தின் எட்டாம் பக்கத்தில் மேஜர் ஜோன்ஸ் கவர்ச்சி உடையுடன் கட்டிலில் சரிந்திருந்தவாறு மக்லேனிற்கு ஒரு தகவல் விடுப்பார். அழைப்பு எனலாம். எதற்கு எனக் கேட்டால் நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்தான். வழமைபோலவே மக்லேனின் உலகம் அழகான பெண்களால் சூழப்பட்டிருக்கிறது.

ஆனால் கொலைஞர்களின் உலகம் அழகிய பெண்களால் நிறைந்திருக்கிறது. அறிமுகமாகும் USAFE குழு ஒவ்வொன்றிலும் அழகிய கொலைஞி ஒருவர் இருக்கிறார். ஏன் மக்லேனை தன் பக்கம் இழுத்துவிட இந்த அமைப்பு துடிக்கிறது என்பது கதையில் படிப்படியாக தெளிவாகிறது. இங்குதான் மேஃப்ளவர் கப்பலின் வரலாறு முக்கியமான ஒன்றாக ஆகிறது. அது என்ன என்பதை கதையிலேயே நண்பர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதற்கும் மக்லேன் மாமாவின் கதைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் இந்த ஆல்பத்தின் முக்கியமான மர்மமாக இருக்கிறது. கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் ஈவ்ஸ் செண்ட். ஆனால் புதுமையான மாற்றங்கள் ஏதுமின்றி XIII மரபை அவர் தவறாது தொடர்ந்து வந்திருக்கிறார். ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், பெட்டி போன்றவர்கள் கவுரவ வேடத்தில் வருவது போல் வருகிறார்கள். பெண் கொலைஞிகளின் மனதிலோ அல்லது முகத்திலோ தழும்புகளை உருவாக்க மக்லேன் தவறுவதில்லை. இந்த ஆல்பத்திலும் அது உண்டு. இன்னொரு இரினா.

இந்த ஆல்பத்தில் வண்ணம் வழங்கும் பணியை செய்த Bérengère Marquebrecuq பாராட்டப்பட வேண்டியவர். கண்களிற்கு கவர்ச்சியான விருந்தாக அமைந்திடும் வண்ணம் சித்திரங்களிற்கு அவர் வண்ணங்களை தெரிவு செய்திருக்கிறார். அதிரடிகள் அதிகம் இல்லாத அதே போல் அலட்டல்கள் அதிகம் இல்லாத ஆல்பம் இது. பெண் கொலைஞிகள் உறுதியான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் ஆல்பம் இது. வான்ஹாம்ன், வான்ஸ் அணி விட்டுச் சென்ற பணியை XIII ன் பாரம்பரியத்தை புதிய அணி செவ்வனே செய்திருக்கிறது. XIII ன் இருபதாவது ஆல்பம் நல்லதொரு ஆரம்பம். டார்கோட் ஈட்டிய வசூலிற்கு. மக்லேன் மாமாவின் கம்பேக்கிற்கு. [***]

Saturday, December 10, 2011

காமத்தின்முன் கீழ்விழல்


காமம் எனும் அடிப்படையான மனித இச்சை குறித்த உங்கள் நேர்மையான பார்வைதான் என்ன? நாம் வாழும் சமூகம் கொண்டுள்ள மதிப்பீடுகளிற்கு அஞ்சி, ஒருவரின் பாலியல் இச்சை என்பதானது மறைத்து வைக்கப்படவேண்டிய ஒன்றாகிறதா? தீராப்பசிபோல தீராத காமம் என்பது இயல்பானதா இல்லை இயல்பை மீறியதா? பாலியல் இச்சை என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றா அல்லது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டி முடியாமல்போகும் ஒன்றா? நீடிக்கும் உறவுகள் மீது நம்பிக்கையற்ற ஆணொருவன் தன் உடலின் பசியை ஆற்றுவதென்பது உங்கள் பார்வையில் எவ்வகையில் மொழிபெயர்க்கப்படுகிறது? இவ்வாறாக தன் உடலின் இச்சையை கட்டுப்படுத்த இயலாத மனிதனொருவனின் அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம் என விழிக்கப்படுமா? சமூகம் அவமானம் என்பதை அந்த ஆண் உணர்தல் நியாயமானதா? தன்னைப்போலவே பிறிதொரு ஆளுமைமீது இவ்வகையான ஒரு மனிதன் கொண்டிருக்ககூடிய பார்வைதான் என்ன? சமூகத்தின் முன்பாகவும், நாம் போற்றிடும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் முன்பாகவும் நாம் மேற்கூறிய கேள்விகளிற்கு அளித்திடும் நேர்மையான பதில்கள் எம்மை அவமானம் கொள்ள செய்யுமா இல்லை விழுமியங்களை போற்றியொழுகும் மனிதர்களின் அவமானம் நிறைந்த பார்வையை நாம் எம்மீது சுமந்துகொள்ள வைக்குமா? முடிவேயற்று நீண்டு செல்லக்கூடிய கேள்விகளைப் போலவே பார்ப்பவன் மனதில் சிந்தனைகளை எழுப்பி உக்கிரமாக மோதுகிறது இயக்குனர் Steve Mcqueen இயக்கியிருக்கும் Shame திரைப்படம்.

பிராண்டன் எனும் மனிதனின் அடக்க இயலா காமத்தை மையமாக கொண்டு அவனைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதும், பிராண்டன் மீதும் காமம் அணிந்திருக்கக்கூடிய வெவ்வெறு கவுரவமான முகமூடிகளை கிழித்துக் போட்டுக் கொண்டேயிருக்கிறது கதை. ஒவ்வொரு முகமூடியின் வீழ்வின் பின்பாகவும் காமம் கிண்டலுடன் மனிதர்களை பார்த்து சிரித்துக் கொண்டே முன்னகர்ந்து செல்கிறது. பெண்ணுடனான உடலுறவோ, சுய இன்பமோ, போர்னோ தளங்களோ, பாலியல் தொடர்பாடல்களோ இல்லாமல் தன் வாழ்க்கையை கழிக்க முடியாத பிராண்டனின் ஆவேசம் அவன் இச்சையில் சக்தியாக மறுவுரு எடுத்து அவனை அக்கினியாக எரித்துக் கொல்கிறது. தன் இச்சை மீது அவன் கொண்டுள்ள குற்றவுணர்வானது தன் காமம் குறித்து எவரும் அறிந்திடக்கூடாது என்பதில் பிடிவாதமாக உருமாறியிருக்கிறது எனவேதான் அவன் பணியிடத்தின் கழிவறையில் சுய இன்பத்தில் ஈடுபடும் முன்பாககூட கழிவறையிருக்கையை சுத்தமாக துடைத்து போடுவதில் அவதானமாக இருக்கிறான்.

அவனது குடியிருப்பின் மறைவிடங்களில் அவனின் இச்சையின் அந்தரங்கங்கள் ஒளிந்திருக்கின்றன. அவனைத் தேடிவரும் விலைமாதுவின் சிறு அசைவிலும் தன் இச்சையின் தணிக்கவியலா தாகத்தை தணிக்க வழி தேடுகிறான் பிராண்டன். அவன் தினந்தோறும் புணர்ந்தெழும்போதும் தொலைபேசியின் பதில்விடு கருவியில் அவன் சகோதரியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தொலைபேசியை எடுத்து தன்னுடன் உரையாடு என அதில் அவன் சகோதரி சிஸ்ஸியின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிஸ்ஸியின் அழைப்புகளிற்கு அவன் பதில் அளிப்பதில்லை. தன் சகோதரியின் தகவல் குறித்த எந்த சலனமுமின்றி தன் வாழ்க்கையை தொடர்கிறான் பிராண்டன். இவ்வாறான நிலையில் அவன் குடியிருப்பிற்கே வந்து சேர்ந்துவிடுகிறாள் சிஸ்ஸி. தன் காமத்தை பொத்தி வைத்த அந்தரங்ககூட்டில் ஆக்கிரமிப்பான ஒன்றாக இதை உணர்கிறான் பிராண்டன். இதனாலேயே பின்பு தன் சகோதரியுடன் கடினாமன சொற்களை அவன் பரிமாறிக் கொள்கிறான். காமத்தின் முன்பாக ரத்த உறவுகூட தூக்கியெறியப்படும் கணம் சற்றும் அதிர்ச்சி தருவதாக இல்லை. பிராண்டன் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்றே முடிவிற்கு வரமுடிகிறது.

shame-2011-12016-286421857சிஸ்ஸி தன் காதலனுடன் உறவை சிக்கலாக்கி கொண்டே பிராண்டனின் குடியிருப்பிற்கு வந்து சேர்கிறாள். பிராண்டன் காதுகளில் விழுமாறே அவள் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன் காதலனை தொலைபேசியில் இரஞ்சுகிறாள். பாடகியான அவள் பாடும் பாடலில் துணையொன்றிற்கான ஏக்கம் கலந்தே ஒலிக்கிறது. துணையொன்றுடன் இணைந்து வாழும் வாழ்க்கை ஒன்றின் மீதான கனவுகள் அவள் பாடலில் ஏக்கமான குரலாக ஒலித்து ஒழுகுகிறது. அப்பாடலை தன் தோல்வியாகவும் தன் சகோதரி மீது கொண்டுள்ள அன்பாகவும் உள்ளெடுக்கும் பிராண்டன் விழிகளில் கண்ணீர் வழிகிறது. ஆனால் பார்வையாளன் முகத்தில் எதிர்பாராமல் அறைவதுபோல் பிராண்டனின் முதலாளியான டேவிட்டுடன் அன்றிரவே உடலுறவு கொள்கிறாள் சிஸ்ஸி. இதை பிராண்டனால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அவன் அறையில் அவர்கள் உறவுகொள்ள ஆரம்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அவன் தெருவில் இறங்கி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தினந்தோறும் காமத்திற்கு வடி இல்லாது உறங்கமுடியாத ஒருவன் பிறர் காம இச்சை முன்பாக குறிப்பாக அவன் சகோதரியின் காம இச்சை முன்பாக படும் அவமானம் அதிர வைக்கிறது. ஓடி முடிந்து களைத்து வீடு வந்து உறங்கச் செல்லும் அவனை அன்புடன் அணைக்கும் சிஸ்ஸியுடன் அவன் சீறும் சீற்றம் அவன் தன்னுள் கொண்டு வாழும் அவமானத்தின் தாண்டவப் பரிமாணம்.

பிராண்டனின் முதலாளியான டேவிட் மணமானவன். குழந்தையும் உண்டு. சிஸ்ஸியைக் கண்ட அரைமணிநேரத்தில் தன் குடும்பத்தையே மறந்து உடலுறவிற்கு தயாராகிவிட்ட அவன் பிராண்டனின் கணிணியிலிருந்த போர்னோ சரக்குகளை குறித்து ஒரு நீதிமான்போல் பேசுகிறான். காமம் என்பது தனக்குரிய தேவை எனும்போது அது குறித்த எந்த அருவருப்போ அல்லது அறமீறல்கள் குறித்த பிரங்ஞையோ மனிதரிடமிருந்து காணமல் போய்விடுகிறது என்பது வியப்பளிப்பாதாக இல்லையா. இதே வியப்புடன்தான் டேவிட்டின் அலுவலக அறையை விட்டு அவன் உரையாடலை பாதியில் விட்டு செல்கிறான் பிராண்டன். கணிணிக்குள் ஒளிந்திருக்கும் காமத்தினை கண்டுகொள்ள முடிகிறது மனதினுள் ஒளிந்திருக்கும் காமத்தை கண்டுகொள்ளத்தான் வழி இல்லையோ. தன் காமம் வடிந்த மனிதம் என்ன வேடமும் அணிந்திட தயக்கம் கொள்வதேயில்லை.

தான் சுய இன்பம் செய்வதை சிஸ்ஸி தற்செயலாக பார்த்துவிடுவதனால் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறான் பிராண்டன் ஆனால் அவன் இயல்பு அவனை விட்டு நீங்குவதாக இல்லை. நீடிக்ககூடிய உறவொன்றிற்காக முனையும் அவன், அலுவலகலத்தில் பணிபுரியும் சகாவான மரியானுடன் உறவுகொள்ள முனைகிறான். ஆனால் அவனால்அவளுடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை. அவள் உடலின் முன்பாக அவன் காமம் செயலிழந்து நிற்கிறது. நீடித்து நிற்கும் உற்வொன்றின் மீதான சந்தேகம் அவன் உணர்ச்சியை நீர்த்துவிடச்செய்கிறது. அவளை ஹோட்டல் ரூமிலிருந்து அனுப்பி வைக்கும் பிராண்டன், தான் மரியானை உணவுவிடுதியொன்றில் சந்திக்கும் முன்பாக தெருவில் உலாச்சென்றபோது கண்ட ஒரு உடலுறவு நிலையை ஒரு விலைமாதுவுடன் நிகழ்த்தி தன் காமத்தை வடித்துக் கொள்கிறான். மேற்குறிப்பிட்ட உணவு விடுதிச் சந்திப்பில், நீடிக்கும் உறவு ஒன்றிற்கான தேடலின் வடிவாக மாரியானும், உடல் இச்சையை ஆற்றிக்கொள்ள புதிய உடல்களை ஓயாது தேடும் காமத்தின் வடிவாக பிராண்டனும், இவ்வகையான தேடல்களினூடே எந்தவித லஜ்ஜையுமின்றி நகர்ந்து செல்லும் வாழ்க்கையின் வடிவமாக உணவுவிடுதிப் பரிசாரகனும் தோன்றுகிறார்கள்.

டேவிட் தன் விரலில் திருமண மோதிரம் அணிந்திருந்தை நீ அவதானிக்கவில்லையா என சிஸ்ஸியிடம் கோபம் கொள்வான் பிராண்டான், ஆனால் இதே பிராண்டன் கையில் திருமண மோதிரம் அணிந்த ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. அவன் ஆளுமையின் முரண்தன்மையை திரைப்படம் நெடுகிலும் ஒரு ரசிகன் அவதானித்திட முடியும். தன் இயல்பை கட்டுப்படுத்த முடியாதவனாக அவன் இச்சையை தீர்ப்பதற்காக அவன் அலைந்து சென்று கொண்டேயிருக்கிறான். அதற்காக அவன் அவமானங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறான். இச்சை அவனை விடுதலை ஆக்க ஆக்க அவனுள் நுழையும் அவமானம் அவனை குறுக வைத்துக் கொண்டே செல்கிறது. காமம் எனும் பெரும்சக்தியின் முன்பாக வெற்றி பெறவியலாத பெரும்பாலான சாதாரண மனிதர்களைப் போன்றே அவனும் அதன்முன்பாக மண்டியிட்டுக் கொள்கிறான். ஆனால் சிஸ்ஸியோ தீவிரமான ஒரு முடிவை தேடிச்செல்கிறாள். விரலில் திருமண மோதிரம் அணிந்த அதே பெண்ணை மீண்டும் அவன் ரயிலில் காண்கிறான். அவளும் அவனை அழைப்புடன் பார்க்கிறாள். பிராண்டன் காமத்தை வெல்வானா என்பதற்கு விடையில்லை. காமத்தை வென்றவன் என்று யாருமில்லை. மிகவும் உக்கிரமான இப்படம் ரசிகனின் உள்ளத்தை சற்று ஆட்டிப்பார்த்துதான் விடுகிறது. பிராண்டன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் Michael Fassbender, அவரின் சகோதரி சிஸ்ஸியாக வேடமேற்றிருக்கும் நடிகை Carey Mulligan ஆகியோர் மிகவும் அருமையாக நடித்து சென்றிருக்கிறார்கள். திரைப்படத்தின் இசை காமத்தின் வேகத்தையும், இன்பத்தையும், தந்திரத்தையும், வலியையும், அவமானத்தையும் ஒலிக்க விடுகிறது. அதிர்ச்சியும் நேர்மையுமான இப்படைப்பை பக்குவமான உள்ளங்கள் பார்த்து ரசிக்கலாம். [***]

ட்ரெய்லர்

Saturday, December 3, 2011

பேச மறுத்த கலைஞன்


1927ல் ஹாலிவூட் ஊமைப்படங்களில் மிகப்பிரபலமான நாயகனாக திகழ்கிறான் ஜார்ஜ் வலண்டைன். சினிமா எனும் கலைக்கு இன்றியமையாத துணையான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி Talkies எனப்பட்ட பேசும் படங்களை நோக்கி முன்னேற ஆரம்பிக்கையில் அந்தப் பாதையில் தன் பாதங்கள் படாது கலை செய்ய விரும்புகிறான் ஜார்ஜ் வலண்டைன். இதேவேளையில் அவனுடன் ஒரு படத்தில் துணைப்பாத்திரமாக நடித்து அவன் மனதை சலனகலனம் செய்த பெண்ணான பெப்பி மில்லர், பேசும் படங்களில் மிகப்பிரபலமான நாயகியாக உருவாக ஆரம்பிக்கிறாள்…..

The Artist திரைப்படத்தின் ஆரம்பம், ஒரு ஒற்றன் சிறையிலிருந்து தப்பிக்கும் சாகசத்துடன் ஆரம்பமாகிறது. அந்த ஒற்றனின் சாகசம் The Russian Affaire எனும் திரைப்படத்தின் இறுதித் தருணமாக அமைகிறது. அத்திரைப்படத்தை வெள்ளையும் கறுப்புமாக ஆடம்பர ஆடையணிந்த ஆடவரும் பெண்டிரும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கின் திரையின் முன்பாக ஒரு ஆர்கெஸ்ட்ரா திரைப்படத்திற்கான பின்னணி இசையை நேரடியாக இசைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது. 1927களில் காட்சிகளுடன் இசை கோர்த்துக் கொள்ளாத திரைப் படைப்பொன்றினை அந்த அரங்கில் ரசிகர்கள் ரசித்து மகிழும் தருணத்தை இக்கால ரசிகர்களிடம் கொண்டு வருகிறார் திரைப்படத்தின் இயக்குனரான Michel Hazanavicius. ஒரே ஒரு வித்தியாசம். எமக்கு முன்பாக இசைக்குழு இல்லை என்பதுதான். பேசும் படங்கள் திரையுலகை புரட்டிப்போட்டு ஆட்சியை கைப்பற்றும் முன்பாக சினிமாதுறையை கலக்கிய ஊமைப்படங்கள் பாணியில் கறுப்பு வெள்ளையில், நடிகர்கள் வாய் அசைவின் பின்பாக கறுப்பான திரையில் தோன்றும் வெள்ளை நிற வசனங்களுடனும், பிரகாசமான ஒளி அமைப்புக்களுடனும் நகைச்சுவையாக ஆரம்பிக்கிறது திரைப்படம். ஊமைப்படங்களிற்கு தற்கால பிரெஞ்சு இயக்குனர் ஒருவர் வழங்கியிருக்கும் கவுரமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இயக்குனர் மிசேல் ஹசானாவிசியுஸிற்கு பிரபலத்தை பெற்றுத்தந்தது அவர் இயக்கிய OSS 117 திரைப்படங்கள்தான். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் OSS 117. அப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரெஞ்சு நடிகர் Jean Dujardin. முதல் பாகம் பெரு வெற்றி பெற்று இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வசூல் கண்டது. இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் வலண்டைன் எனும் ஊமைப்பட நாயகனாக பாத்திரமேற்றிருப்பவரும் அவரே. நகைச்சுவையை வெளிப்படுத்தும் கலைஞராக அறிமுகமான ஜான் டுஜார்டானிற்கு இத்திரைப்படத்தின் கலகலப்பான ஆரம்பக் காட்சி நிகழ்வுகள் இலகுவாக கைவந்திருக்க வேண்டும். மிகவும் அனாசயமாக அப்பகுதிகளை ரசிகனை மென்சிரிப்புடன் கடந்து செல்ல வைக்கிறது அவரின் திறமை. ஊமைப்படம் என்பதால் முகபாவனைகளும், உடல் அசைவுகளும்கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையவேண்டும் என்பதற்காக அவர் முகமும் உடலும் திறமையுடன் இழைகோர்த்து சென்றிருக்கிறது.

ஆனால் ஜான் டுஜார்டான் ஏற்றிருக்கும் ஜார்ஜ் வாலன்டைன் பாத்திரம் கலகலப்பை மட்டுமே கொண்ட ஒன்றல்ல. மனைவியை புரிந்து கொள்ளவியலாத ஒரு கணவனாக, தன் காதலை வெளிப்படுத்த முடியாத ஒரு காதலனாக, பேசும் படங்களின் முன் தன் பெருமையை இழக்க விரும்பாத பிடிவாதமான கர்வம் கொண்ட ஒரு கலைஞனாக, மனித நேயத்தின் ஒரு சில வரிகளாவது ஓடும் ஒரு மனிதனாக, பேசும் சினிமாவின் வெற்றியால் யாவற்றையும் இழந்து நொடிந்து போகும் ஒருவனாக அப்பாத்திரம் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. மிகை நடிப்பு, மிகையுணர்வு வெளிப்படுத்தல் என அடையாளப்படுத்தக்கூடிய வகையில் ஒரு ஐந்து வருடகால வாழ்க்கையை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜான் டுஜார்டான். ஆனால் அவரின் இவ்வகையான நடிப்பைவிட லக்கி லூக் எனப்படும் கவ்பாய் பாத்திரமே எனக்கு பிடித்திருக்கிறது. இவ்வகையான நடிப்பை தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்து பழகிப்போனதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கேன்ஸ் அவரின் இப்பாத்திரத்திற்கு சிறந்த நடிகரிற்கான விருதை வழங்கி கவுரவித்ததையும் இங்கு நான் எழுதியாக வேண்டி இருக்கிறது.

the-artist-2011-21224-435674912ஜார்ஜ் வாலண்டைனினால் திரைப்படங்களில் துணை நடிகையாக தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பாத்திரம் பெப்பி மில்லர். அவர்கள் இருவரும் முதலில் சந்திக்கும் நிகழ்ச்சியே பெப்பி மில்லரின் போட்டோவை தினசரி ஒன்றின் முதல் பக்கத்தில் வர வைத்து விடுகிறது. அதன் வழியே ஆரம்பமாகும் பெப்பி மில்லரின் சினிமா வாழ்க்கையின் புகழும் வெற்றியும், ஜார்ஜ் வாலண்டைனின் வீழ்ச்சியும் திரைப்படத்தில் ஒருங்கே பயணிக்கின்றன. நடனத்தில் ஆரம்பமாகும் அவர்கள் கலைப்பயணம், அருமையான ஒரு நடனத்துடனேயே நிறைவு பெறுவது அழகான பொருத்தம்.

ஜார்ஜ் வாலண்டைனிற்கான தன் காதலை வெளிப்படுத்தாதவாறு அவன் நலனை பேணி அவனை மீட்டெடுக்க விழையும் பெப்பி மில்லர், அவன் தோல்விகள் ஒவ்வொன்றிலும் அவனிற்காக வருந்துபவளாக இருக்கிறாள். அவன் கலை மீதும் அவன் மீதும் அவள் கொண்ட பற்றை அவள் ஒரு போதும் இழப்பதேயில்லை. வெற்றியின் களிப்பில் அவள் வார்த்தைகளில் சறுக்கி விட்டபோதும் வீழ்ந்து விட்ட ஜார்ஜ் வாலன்டைனிற்கு அது வலிக்ககூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறாள். படத்தின் இயக்குனரின் வாழ்க்கை துணையான நடிகை Bérénice Bejo சிறப்பாக தன் வேடத்தை ஆற்றியிருக்கிறார். ஜார்ஜ்ஜும், பெப்பியும் ஆடும் நடனம் அழகானது. திரை இசையும் இனிமையானது. ரசிகர்களின் உணர்வுகளை உருக்க வேண்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்குமேயாயின் கொளுத்தி வைக்கப்படாத மெழுகுவர்த்திகூட சில சமயங்களில் உருகிப்போகும் அளவு உருக்கமான சம்பவக் கோர்வைகளிற்கு கதையில் பஞ்சம் என்பதே இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகிறது.

ஆனால் இவ்வகையான காதல் கதைகளை ஏற்கனவே பார்த்து விட்ட ஒரு உணர்வு மேலோங்கி செல்வதை தடுக்க முடியாமல் இருக்கிறது. வழமையாக பார்த்து பழகிய காட்சிகள் வேறு ரூபத்தில் வந்துவிட்டது போல ஒரு பிரமை கண்ணாடி மீது வழுகிச்செல்லும் நீர்துளியாக நழுவுகிறது. ஒரு வருடம் சம்பளம் தராவிடிலும் விசுவாசமாக வேலை பார்க்கும் கார் சாரதி, காதலிற்காக காதலன் அறியாது அவனிற்கு உதவிகள் செய்யும் ஒரு பெண், முன்னாள் நட்புகள் கைவிட நொடிந்து தனியனாகப் போகும் ஒரு முன்னாள் பிரபலத்தின் சோக சரிதம் என பல திக்குகளிலும் பார்த்த நினைவுகள் கண்சிமிட்டுகின்றன. இருப்பினும் பார்த்து ரசித்திட அருமையான மனதைத் தொடும் நுட்பமான காட்சி தருணங்கள் படத்தில் உண்டு. மிகையான பாராட்டுக்களிற்கும், எதிர்பார்ப்புக்களிற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு நல்ல படம். மகோன்னத படம் அல்ல. அல்லது ஊமைப்படக் கலைஞன் பேச மறுத்தது போலவே படமும் என்னுடன் பேசமறுத்து விட்டது போலும். [** ]

ட்ரெய்லர்

Saturday, November 26, 2011

கொலைஞனின் சீடன்


மாயபுனைவுகளின் வரிகளில் வாழ்ந்து வருபவனிற்கு ஒரு ஏக்கம் இழையோடும் எதிர்பார்ப்பு காலைப்புகாரில் கலந்திருக்கும் குளிர்போல் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பாரா ஒரு திருப்பம் அல்லது ஒரு நிகழ்வு. ஒரு புதிய அனுபவம். குருதியை இதமாக திராட்சை மதுபோல் வெப்பமாக்கும் சாகசம். மனதை பனியொழுகும் ஒரு மொட்டுப்போல் வீங்கச் செய்யும் தியாகம். வியக்க வைக்கும் புதுவகை மந்திரம். திகைக்க வைக்கும் உயிரிகள். அரிதாகவே காணக்கூடிய நகைச்சுவை. வரிகளிடையே இளம்கொடிபோல் படர்ந்து கிடக்கும் முதல் காதல். புது உலகமும் அதன் நிலவியலும் உயிரியலும் சனவியலும் அதனூடு அவன் வாழ்ந்து செல்லக்கூடிய பயணமும்.

ஒவ்வொரு மாயபுனைவும் படிப்பவனை மயக்கிவிடவேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல. படிப்பவை எல்லாம் மயக்குபவையாக இருந்தால் அந்த உலகங்களில் இருந்து மீட்சிதான் ஏது. இருப்பினும் ஒவ்வொரு மாயபுனைவு எழுத்தாளரும் தனக்கென ஒரு சிறப்பை உருவாக்கி கொள்ளவே விழைகிறார்கள். அவர்களிற்கென தனித்துவமான ஒரு சுவையை அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள். அதைப் படிப்பவன் ஒன்று அதை தீராப்பசியுடன் சுவைப்பவன் ஆகிறான், இல்லை பந்தியிலிருந்து சுவைவிலகி செல்பவனாகிறான். ஒவ்வொரு மாயபுனைவும் அதன் அட்டைக்கு பின்னால் விருந்தொன்றை விரித்து வரிகளில் பாய்விரித்திருக்கிறது. அது தரும் சுவை வாசகனின் ரசனையுடன் ஒன்றிச்செல்லும் தருணத்தில் அது நீண்டு செல்லும் ஒரு ஆனந்த மோகானுபவமாக மாறிவிடுகிறது.

ராபின் ஹாப்பின் பெயர் எனக்கு தெரிய வந்த நாளிலிருந்து அவரை ஒரு ஆண் என்றே வருடக்கணக்கில் நான் எண்ணி வந்திருக்கிறேன். எண்ணங்களும் உண்மைகளும் எதிராகும் புள்ளிகளில்தானே ஆச்சர்யம் கருவாகிறது. ராபின் ஹாப் ஒரு பெண் எழுத்தாளர் என்பது என்னை உண்மையில் ஆச்சர்யப்படுத்திய ஒன்று. பிரான்ஸில் மாயபுனைவு வாசகர்களால் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர் அவர். திரைப்பட வெளியீடுகளிற்குரிய கவுரவங்களுடன் அவர் நூல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஜார்ஜ் மார்ட்டினிற்கோ , ராபார்ட் ஜோர்டானிற்கோ இது இங்கு இதுவரை கிடைக்காத ஒன்று. பாதாள ரயில் நிலைய சுவர்களை சுவரொட்டிகளாக, மயங்கவைக்கும் வகையில அலங்கரிக்கும் அவர் நூல்களின் முன்னட்டைகளை நான் நின்று ரசித்திருக்கிறேன். அபாரமான வரவேற்புகளுடன் அவர் நாவல்கள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அவர் எழுதும் மொழியில் அவரிற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது இங்கிருப்பதைவிடவும் அளவில் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் எழுதும் வரிகளில் வழமையான மாயபுனைவொன்றில் இருக்கக்கூடிய அதிரடிகளும், பரபரப்புகளும், சாகசங்களும், மாயங்களும் அளவில் குறைந்ததாகவே காணக்கிடைக்கிறது. அவர் எழுதிய நாவலான Assasin's Apprentice எனும் நாவல் எனக்களித்த அனுபவம் இது. Farseer முப்பாக நாவல்களில் முதல் புத்தகம் இது.

வழமையான மாயபுனைவொன்றின் நாயகனிற்கு கிடைக்ககூடிய வெற்றி, புகழ் என்பன இக்கதையின் நாயகன் எனக்கருதக்கூடிய Fitz ற்கு கதையின் முடிவின்பின்கூடக் கிடைக்காது. நாயகன் வெற்றி பெறவேண்டும், வாகை சூட வேண்டும் என மாயபுனைவுகளின் மரபில் ஒய்வெடுக்கும் உள்ளங்கள் அலறித்துடித்தபோதும், ராபின் ஹாப் அந்த அலறல்களிற்கு எல்லாம் காது கொடுப்பதில்லை. மிக எதார்த்தமாக, ஏன் மிகை எதார்த்தத்துடன் ஆனால் படிப்பவர்களின் உணர்வுகளை குழைந்திட செய்யும் வகையில் நாயகனின் கதையை ஹாப் கூறிச் செல்கிறார்.

பட்டத்திற்குரிய இளவரசன் ஒருவனிற்கு தவறான வழியில் பிறந்த ஃபிட்ஸ், ஆறு வயதில் அவன் பாட்டனாரின் அரண்மனை வாசலில் கைவிடப்படுகிறான். அங்கு அவன் ஆரம்பிக்கும் அந்த புதிய அரண்மனை வாழ்வில் அவன் என்ன பங்கு வகிக்கப் போகிறான், அவன் வாழ்க்கை என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறது, அவன் சந்திக்கப்போகும் மனிதர்கள் என்ன வகையானவர்கள், அவர்கள் அவனை எப்படிப்பட்ட ஒருவனாக உருமாற்றப் போகிறார்கள், அவனில் மறைந்திருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன, அவன் சந்திக்கப்போகும் இடர்பாடுகளிலும், சவால்களிலும் அவன் வெற்றி காண்பானா.... இவை எல்லாவற்றையும் தனக்கேயுரிய மென்மையான ஒரு நடையில் ஹாப் விபரிக்கிறார். தவறான முறையில் பிறந்த ஒரு ராஜரத்த வாரிசின் வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமான ஒன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுவதை விட சோகமான ஒன்றாக ஃபிட்ஸின் வாழ்வை விபரிக்க ஹாப்பால் முடிந்திருக்கிறது. உன் ரத்தத்தை உன் எதிரி உனக்கெதிரான ஆயுதமாக மாற்றுமுன் அவனை நீ உன் விசுவாசத்திற்குரிய ஆயுதமாக்கு எனும் ராஜ தந்திரத்தின் பின்னால் ஒரு சிறுவன் வாழ்ந்து செல்லக்கூடிய வேதனைகள் வரிகளில் வாழும் வகையில் ஹாப்பால் இக்கதையை சொல்ல முடிந்திருக்கிறது. சுமாராக ஆரம்பிக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற படகுப் பயணம், ஆற்றின் நீளத்தினோடு அழகும் சுவையும் பெற்றுக் கொண்டு விடுவதுபோல் அவரின் எழுத்துக்கள் மென்மையான அதன் ஓட்டத்தில் படிப்பவனை ஒன்றிக் கொள்ள வைக்கின்றன.

Farseer கள் எனும் வழிவந்தவர்களின் வரலாற்றையும், தொன்மங்களையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்திருக்கும் இனங்களையும், அந்த நிலத்தில் குடியிருக்கும் மந்திரத்தையும் அளவான முறையில் எழுதுகிறார் ஹாப். நீண்ட மாயபுனைவுகளின் மத்தியில் 400 பக்கங்கள் கொண்ட அவர் நாவலை ஒரு சிறுகதையாகவே கருத முடியும். ஆனால் உணர்வுகளை கலங்க வைக்கும் மென்மையான ஒரு சிறுகதை அது. ஏற்கனவே கூறியதுபோல மாயபுனைவுகளின் அதிரடிகளிலிருந்து மிக நீண்ட தூரம் இந்நாவலில் விலகி நிற்கும் ஹாப், வாசகனை கவர்வது அவர் கதையில் இடம்பிடிக்கும் பாத்திரங்களின் உணர்வுகளின் ஓட்டத்தினாலேயே. அது மனிதர்களாகவும், விலங்குகளாகவும், மன்னனின் கிறுக்கனாகவும் படிப்பவனின் உணர்வுகளோடு விளையாட தவறுவதில்லை. ஹாப்பின் எழுத்துக்களில் சோடனைகள், அலங்காரங்கள் இல்லை. அதிரடித் திருப்பங்கள் இல்லை ஆனால் படிப்பதை வாசகன் நிறுத்திவிட முடியாத சுவை இருக்கிறது. 200 வது பக்கத்தின் பின்பாக கதையை படிப்பதை நிறுத்தி வைப்பதை ஒரு சோதனையாக நான் கருத வேண்டியிருந்தது. இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம். மாயப்புனைவுகளின் தனித்துவமான வகை எழுத்தாளர் ஹாப். அவர் உள்ளங்களிற்காக எழுதுகிறார். உயிருள்ள உள்ளங்களிற்கு அவரைப் பிடிக்கும். மாயப்புனைவு ரசிகர்கள் அவரின் இப்படைப்பை படித்து பார்த்திட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். [***]


Sunday, November 13, 2011

ரியல் ஸ்டீல் டின்டின் ஜானி இங்லிஷ்


2020 களில் மனிதர்களிற்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டிகள் வழக்கொழிந்துபோக எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைப் போட்டிகள் அதிநொழில்நுட்ப உதவியுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. சார்ல்ஸ் கெண்டன் எனும் முன்னாள் குத்துச் சண்டை வீரன் பழைய ரோபோக்களை மோதல்களில் ஈடுபட வைத்து பந்தயங்களில் ஜெயிக்க முயன்று வருகிறான். ஊர் விட்டு ஊர் அலையும் சார்ல்ஸிற்கு அவன் முன்னாள் காதலி இறந்து போகும் செய்தியுடன் அவன் மகனை வளர்க்கும் பொறுப்பை தன் காதலியின் சகோதரியிடம் கையளிக்கும் நிலை வந்து சேர்கிறது. இருப்பினும் சில வாரங்கள் சார்ல்ஸின் மகன் அவனுடன் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன…

பெரும்பாலான குத்துச்சண்டை திரைப்படங்களில் குத்துச்சண்டைகளைவிட உறவுகளிற்கிடையில் நிகழும் போராட்டங்கள் வலியை தருவதாக இருக்கும். இயக்குனர் Shawn Levy இயக்கியிருக்கும் Real Steel திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்பற்ற ஒரு தந்தைக்கும், அந்த தந்தையில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு மகனிற்கும் இடையிலான பரிமாற்றங்களை எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் மூலம் திரையில் பரிமாறுகிறது இத்திரைப்படம்.

தன் முன்னால் காதலி இறந்துவிட்ட செய்தியை அறிந்த சார்லஸ், தன் மகன் மேக்ஸை வளர்க்கும் பொறுப்பை அந்தக் காதலியின் சகோதரியிடம் தருவதற்காக ஒரு லட்சம் டாலர் பேரம் பேசும் ஒரு தந்தையாகத்தான் அறிமுகமாகிறான். ரோபோ மோதல் பந்தயங்களில் அவன் பெறும் தோல்விகள் அவனை ஒரு கடன்காரனாக மாற்றியடித்திருக்கின்றன. தன் மகன்மேல் பாசத்திற்கான எந்த அறிகுறிகளும் கொண்டிராத சார்லஸ் கூடவே கட்டாயமாக பயணிக்கிறான் மேக்ஸ். இந்தப் பயணம்தான் தந்தையினதும் மகனினதும் உறவை உயிர் கொள்ள வைக்கிறது. தந்தையின் தோல்வியிலிருந்து எவ்வாறு மகன் அவனை மீட்டெடுக்கிறான், தந்தை மகன் உறவு எவ்வாறு மீட்டெடுக்கப்படுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தின் பிரதான அம்சமான ரோபோக்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் நன்றாகவே திரைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் பல திரைப்படங்களில் பார்த்து பார்த்து சுவை தேய்ந்துபோன காட்சிகள் படம் முழுதும் உண்டு. தன் தவறை உணர்ந்து தன் பொறுப்புக்களை ஏற்க விரும்பும் ஒரு தந்தை, ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக சாம்பியன் குத்துச் சண்டைக்கு முன்னேறும் ஒரு ரோபோ என பழைய பதார்த்தங்கள் லிஸ்ட் நீளுகிறது படத்தில்.

பிரதான பாத்திரமான சார்ல்ஸை ஏற்று நடித்திருப்பவர் நடிகர் Hugh Jackman. மனிதர் செம மிடுக்காக இருக்கிறார். நாயகத்தனங்களை துறந்த ஒரு பாத்திரத்தில் இயல்பாக நடிக்க அவர் முனைந்திருக்கிறார் இருப்பினும் அவர் மட்டுமல்ல திரைப்படத்தின் எந்தப் பாத்திரங்களும் மனதை அருகில் நெருங்கிவிடவில்லை. அவ்வகையில் பாதி ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாகவே இது அமைந்து விடுகிறது. உறவையும் பாசத்தையும் வென்றெடுப்பதற்கான யுத்தம் எனில் அது செய்யப்பட வேண்டிய யுத்தமே. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இருக்ககூடும். [**]


les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-14794-2075921682பழைய பொருட்கள் விற்கும் சந்தை ஒன்றில் யுனிகார்ன் எனும் பெயர் கொண்ட அழகான ஒரு பாய்மரக்கப்பலை வாங்குகிறான் டின்டின். அவன் அப்பாய்மரக்கப்பலை வாங்கிய நிமிடத்திலிருந்து அதனை அவனிடமிருந்து கைப்பற்றிவிட முயலுகிறார்கள் சில ஆசாமிகள். இதனால் ஆர்வமாகும் பத்திரிகையாளன் டின்டின் அக்கப்பலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது அவனை ஒரு சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது…..

ஒரு ரெயின் கோட், வெள்ளைக் காலுறைகளிற்குள் செருகப்பட்ட பேண்ட், சூப்பிய பனங்கொட்டை சிகையலங்காரம், கூடவே ஒரு சிறு வெள்ளைநாய் சகிதம் 88 வருடங்களாக உலகை வலம்வரும் காமிக்ஸ் பாத்திரமான டின்டின் குறித்து அறியாதவர்கள் எண்ணிக்கை அரிதாகவே இருக்ககூடும். Hergé என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த ஜார்ஜ் ரெமி எனும் கலைஞரால் உருவாக்கப்பட்ட பாத்திரம் அது.

உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைத்துக் கொள்ளுமளவு ஊர் சுற்றி சாகசம் செய்திருக்கும் டிண்டின் மீது புகழ் மட்டுமல்ல சர்ச்சைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. சர்ச்சைகளை தாண்டியும் இன்றும் அவர் சாகசங்கள் சிறுவர்களால் படிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நான் இப்பாத்திரத்தின் ரசிகன் அல்ல. சிறுவயதிலிருந்து அப்பாத்திரத்தினை விட காப்டன் ஹடோக் எனும் அப்பாத்திரத்தின் நண்பன் மீதே எனக்கு பிடிப்பு இருந்து வருகிறது. நிச்சயமாக ஹடோக் கையில் பெரும்பாலும் இருக்கும் பொருள் அதற்கு காரணமாக இருக்க முடியாது.

தொலைக்காட்சி அனிமேஷன் வடிவம், திரைவடிவம் என முன்பே டின்டின் சாகசங்கள் வெளிவந்திருந்தாலும் இவ்வருடம் வெளியாகியிருக்கும் வடிவம் பலத்த எதிர்பார்ப்பை பெற்றது. அதற்கு காரணம் இரு பெயர்கள். கோயாவி மற்றும் வவ்வாலான். அல்லது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் பீட்டர் ஜாக்சன். ஸ்பீல்பெர்க் இயக்கி தயாரிக்க, ஜாக்சன் தயாரிப்பில் பங்கேற்றிருக்கிறார், அவர் கடமை அத்துடன் நின்றிருக்காது என்பது ரசிகர்கள் எல்லாரிற்கும் தெளிவாக தெரிந்த ஒன்று.

les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-2011-14794-224173399The Adventures of Tintin: The Secret of The Unicorn என தலைப்பிடப்பட்டிருந்தாலும் சீக்ரெட் ஆஃப் யுனிகார்ன் கதையை சிறிது மாற்றியும் தாண்டியும், சில சம்பவங்களையும், சில பாத்திரங்களையும் பிற ஆல்பங்களில் இருந்து கதையில் அருமையாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கதைக்கு அதிக சாகசச்சுவையை சிறப்பாக இட்டு வந்திருக்கிறது. மேலும் படம் திரையாக்கப்பட்டிருக்கும் விதம் அசர வைக்கிறது. கண்களிற்கு விருந்து என்பார்கள் அல்லவா அப்படி ஒரு விருந்து இப்படத்தில் ரசிகர்களிற்கு காத்திருக்கிறது. எனவே நல்ல பிரதிகளில் படத்தை பார்ப்பதே சிறந்தது என்பதை கண்டிப்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

படத்தின் மிகச்சிறப்பான பாத்திரம் என நான் ஹடோக்கைதான் சொல்வேன். அவரின் அட்டகாசங்கள் இரு வேறுபட்ட கால இடைவெளிகளிலும் ரசிக்க வைக்கின்றன. 17ம் நூற்றாண்டு காப்டனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை என்னவென்று சொல்வது. சில நிமிடங்கள் வந்தாலும் பிரான்சிஸ் ஹடோக் பாத்திரம் மனதை அழகான இளம் வாலிபி போல் கொள்ளை கொண்டு விடுகிறது. டின்டின் பாத்திரம் ஹெர்ஜெ படைத்த பாத்திரத்தைவிட அழகாகவும், உயிர்ப்புடனும் திரைப்படத்தில் உலாவருகிறது, ஹெர்ஜெ படைத்த ஸ்னொவியிடம் இருந்த குறும்புத்தனமும் மென்மையும் சற்று குறைந்த ஸ்னொவியை திரையில் காணலாம்.

பகார் எனும் மரொக்க துறைமுக நகரில் நடக்கும் துரத்தல் காட்சிகள், 17ம் நூற்றாண்டில் கடலில் நிகழும் கடற்கொள்ளையர்களுடான மோதல் என்பன அசரவைக்கும் ஆகஷன்ரகம். மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளிற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சேர்த்திருக்கும் தரத்தையும் அதற்கு காரணமானவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு சாகசத்திரைப்படங்கள் என்றால் அல்வா செய்வது போல. மனிதர் தேங்காய் எண்ணெய், சிகப்பு அரிசி மா, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சகிதம் கோதாவில் குதித்து உருவாக்கியிருக்கும் இந்த சாகச அல்வா, பனித்துளி போல் ரசிகர்கள் மனதில் கரைகிறது. திரையரங்கில் அனைத்து வயதிலும் டிண்டின் ரசிகர்களை காணக்கூடியதாக இருந்தது என்பதும் மகிழ்ச்சியான ஒரு விடயமே. சிறுவயது நாயகர்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டு நீங்கி விடுவதில்லை என்பது உண்மைதான் போலும். முதல் காதலின் தலைவிதி என்பது இதுதானோ. [****]


johnny-english-le-retour-johnny-english-2-20791-1172805843மொஸாம்பிக் நாட்டில் தன் கடமைகளை சரிவர ஆற்றத்தவறிய ஸ்பெஷல் ஏஜெண்டு ஜானி இங்க்லிஷ், திபெத்தின் மலைப்பிரதேச துறவி மடமொன்றில் சேர்ந்து கொள்கிறார். ஆனால் சீனப்பிரதமரைக் கொலை செய்யும் சதியை துப்பறிவதற்கு அவரை விட்டால் வேறு எவரும் இல்லை எனும் நிலையில் ஜானி இங்கிலிஷை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது MI7…….

இப்படி ஒரு மோசமான திரைப்படத்தை என்னை வெறுப்பேற்றும் நாவலாசிரியரான பிராண்டன் சாண்டர்சனிற்குகூட நான் பரிந்துரைக்க மாட்டேன் ஏனெனில் மோசமானவற்றிலும் தரமானவை உண்டு. ரோவான் அட்கின்சனிற்கு வயதாகி விட்டது, இருந்தாலும் Jhonny English: Reborn திரைப்படத்தில் மனிதர் சிரிக்க வைக்க பிரம்மபிரயத்தனங்கள் செய்கிறார். ஆனால் சிரிப்பதுதான் எனக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஆனால் திபெத்திய மடாலயத்தில் புடுக்கில் கற்பாறை கட்டி இழுக்கும் காட்சி சிரிக்க வைத்தது. பின் படம் முழுதும் உங்கள் புடுக்கில் ஒரு கற்பாறையை நீங்கள் சுமந்து கொண்டிருப்பதை உணரலாம்.

இங்கிலாந்து வந்து சேர்ந்தது முதல் ஆரம்பமாகும் ஜானி இங்கிலிஷின் சாகசங்கள்!!! டாக்கியோ, ஸ்வீஸ் என ஓட்டம் காட்டுகிறது. எப்படா சாகசம் முடியும் என கண்ணீர் மல்கும் நிலையில் ஏதோ கொஞ்சம் இரக்கப்பட்டு படத்தை முடித்து வைக்கிறார்கள். ஆள்மாறாட்ட கடுப்பு நகைச்சுவை, அப்பாவித்தனமான முட்டாள் நகைச்சுவை, கையை சும்மா வைத்திருக்க முடியா அலட்டல் ஆக்‌ஷன் நகைச்சுவை என படத்தில் பல நகைச்சுவைகள். சிரிப்பதைவிட சாகலாம் என்பது என்ன என்பதை உணர வைத்திருக்கிறார்கள், நன்றி.

ஜானி இங்லிஷிற்கு ஒரு பார்ட்னரை தருவார்கள். அவர் ஒரு கறுப்பினத்தவர். அப்பாத்திரத்தின் பெயர் Tucker. க்ரிஸ் டக்கரை கிண்டல் அடிக்கும் விதத்தில் இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் இப்படத்தை க்ரிஸ் விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருப்பார். தனக்கு நெருங்கியவர்களையும் இப்படத்தை பார்க்க தூண்டியிருப்பார். அதன்பின் அவர்கள் க்ரிஸிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்களா என்பதை க்ரிஸ்தான் சொல்ல வேண்டும்.

ரோவான் அட்கின்சனை ஒய்வெடுக்க விடுங்கள். எங்களை வாழ விடுங்கள். இப்படியான படங்களை எடுப்பதிற்கு பதிலாக இளையதளபதிக்கு அண்ணாவாக நடியுங்கள். படம் நெடுகிலுமே எனக்கு அருகில் இருந்த ஒரு ரசிகை சிரித்துக் கொண்டே இருந்தார்... கொடுத்து வைத்த ஜீவன்!!!

Sunday, November 6, 2011

காற்றின் பெயர்


மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.

பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.

ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.

கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

the_name_of_the_wind_by_marcsimonettiமாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.

வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.

தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன Sourire. கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.

மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]

Monday, August 15, 2011

சீசரின் வீடு


மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..

பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.

புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.

rise-of-the-planet-of-the-apes-2011-20170-634715338rise-of-the-planet-of-the-apes-2011-20170-153087889சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.

சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.

la-planete-des-singes-les-origines-2011-20170-807017264சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன. [***]