Sunday, May 18, 2014

கறுப்பு ட்ராகன்

எரோண்டார் எனும் ராஜ்யத்தின் தொன்மங்கள் ஏறக்குறைய 1500 வருடங்களுக்கு முன்பாக எல்ஃபுகளும், ட்ராகன்களும் இயற்கையுடன் ஒத்திசைந்து பெரும் வனப்பரப்பில் வாழ்ந்திருந்தார்கள் என்கிறது. இவர்கள் வாழ்ந்திருந்த மண், ட்ராகன்களின் பூமி என அழைக்கப்பட்டது. இருள் உலகில் இருந்து இவ்வுலகினுள் பிரவேசித்த தீயசக்திகள் ட்ராகன்களை அழிக்க ஆரம்பித்தன, எல்ஃபுகளை தம் சக்தியினால் அடிமைகளாக்கி தமக்கு துணையாக போரிடும் ஒரு புதிய இனமாக உருவாக்கின, சில நூற்றாண்டுகளாக ட்ராகன்களின் பூமி மீதும் அங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் மீதும் தம் ஆதிக்கத்தை நிறுவின. இந்த தீய சக்திகளுக்கு எதிராக மந்திரவாதிகள், அறிவியல்வாதிகள், அரசுகள், ட்ராகன்கள் ஓன்றாக இணைந்து போரிட்டன.

பெரும் யுத்தம் ஒன்றின் முடிவில் தீயசக்திகள் அவர்களின் இருள் உலகிற்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் இவ்வுலகிற்குள் பிரவேசித்த வழிகளின் மேல் ட்ராகன்கள் வீழ்ந்து மடிந்தன. அந்த ட்ராகன்களின் உடலில் இருந்து சிந்திய குருதி பெரும் கற்தூண்களாக உருமாறி தீயசக்திகள் இவ்வுலகில் நுழைவதற்கான பாதைகளை தடை செய்தன. போரின் பின்பு இவ்வுலகில் எஞ்சியிருந்த ட்ராகன்கள் தம் வாழ்ந்திருந்த பூமியைவிட்டு வேறிடங்கள் நோக்கி சென்றன. மந்திரவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உருவாகின. மந்திரவாதிகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் உருவாகின. சில மந்திரவாதிகள் நன்மையின் பக்கமிருந்து விலகிச் சென்றார்கள். இவர்கள் மந்திரவாத அமைப்புக்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

அறிவியலாளர்களோ அரசின் அதிகாரங்களை தமக்கு நெருங்கியதாக ஆக்கி கொண்டு மந்திரவாதிகளையும், அவர்கள் சக்திகளையும் தொலைவில் வைக்க எல்லா வழிகளையும் முயன்றார்கள். ட்ராகன்களின் பூமியையும் எரோண்டார் ராஜ்யத்தையும் பிரிக்கும் வண்ணம் ஒரு பெரும் சுவர் எல்லையில் எழுப்பபட்டது. இச்சுவரில் அமைந்த காவல் அரண்களில் இருந்த காவல்படையானது ட்ராகன்களின் பூமியில் வாழ்ந்திருக்ககூடிய தீயசக்திகள் எரோண்டாருக்குள் நுழைய முடியாது தடுப்பதை தன் கடமையாக கொண்டிருந்தது.

செரா, க்மோர், இயான், மிர்வா, அல்பென்
ஆனால் ட்ராகன்களின் குருதியால் உருவான கற்தூண்கள் தீடீரென நொருங்கி விழ ஆரம்பிக்கின்றன... அதன் வழியாக இருள் உலக தீய சக்திகளுக்கு இடப்பட்டிருந்த தடை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை ஆராய அறிவியலாளர்கள் சார்பாக மிர்வா எனும் இளம் பெண் வீராங்கனையும், மந்திரவாதிகள் சார்பாக முதிய மந்திரவாதியான அல்பெனும் ட்ராகன்களின் பூமியின் எல்லையிலிருக்கும் பெரும்சுவரை வந்தடைகிறார்கள். இடிந்து விழும் ட்ராகன்களின் குருதி தூண்களின் பின்பு ஒரு பெரும் தீயசக்தி விழித்து கொண்டிருக்கிறதென்பதை உணரும் மந்திரவாதி அல்பென் தன் உதவிக்கு என சிலரை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்... பெரும் அழிவை தடுக்கும் சாகசப் பயணம் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது.

மந்திரவாதி அல்பென் முதலில் தன் உதவிக்கு அழைத்து தூது அனுப்புவது இயான் எனும் வீரனிடம். கவுரமிக்க ட்ராகன் சம்ஹாரிகளின் வம்சத்தில் வந்தவன் இயான். அரசபடைகளில் பணிபுரிந்து, கடமையின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றால் தன் பதவியை துறக்கிறான் இயான். அவன் திறமைகளை முற்றிலும் உதறவிரும்பாத அரசு அவனை வேவு பார்க்கவும் வேறு பல சிறப்பு நடவடிக்கைகளிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு பதவியை வழங்குகிறது. வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான கடற்துறை நகரான சொலியானில் தன் வாழ்க்கையை கழித்து வரும் இயானிற்கு உற்ற நண்பணாக க்மோர் எனும் ஓர்க் இருக்கிறான். ட்ராகன்களின் பூமியிலிருந்து எரோண்டோரை பிரிக்கும் பெரும்சுவரிற்கு இடியும் குருதிதூண்கள் பற்றிய விவகாரத்தை ஆராய வந்த மிர்வா, இயானின் சகோதரி ஆவாள். கதையில் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிறப்பாக காட்டப்படுகிறது. தனக்கிடப்பட்ட பணியைவிட தன் சகோதரியை காப்பதே முதன்மையானது என நடப்பவன் இயான். அவனின் இந்த போக்கை எதிர்ப்பவள் மிர்வா. கோபமும், பாசமும் சேர்ந்த அந்த உறவு கதையின் இறுதிவரை பேணப்படுகிறது. இயான் எல்லா இன மக்களையும் அவர்கள் மரபுகளையும், மதங்களையும் மதிப்பவனாக கதையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். அவன் அரசசேவையிலிருந்து பதவி விலகியதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. அச்சம்பவம் குறித்து சில தகவல்கள் மட்டுமே தரப்படுகிறது. அவற்றை வைத்து தீர்க்கமாக அச்சம்பவத்தை பற்றி ஏதும் அறியமுடியாத நிலையே கதையில் இருக்கிறது. மிர்வாவும் இயானுடன் அச்சம்பவ தருணத்தில் இருந்ததால் அவளைக் காப்பாற்றுவதற்காக அவன் தன் கடமையிலிருந்து தவறியிருக்கலாம் என ஒரு ஊகத்தை உருவாக்கி கொள்ள மட்டுமே முடிகிறது. வழமையான நாயகர்களுக்குரிய அலட்டல்கள் இல்லாத அமைதியான ஒருவனாக இருக்கும் இயான் வீர வசனங்கள், வாய் சவடால்கள் விலக்கப்பட்ட ஒரு பாத்திரமாக கதையில் உலவுகிறான். அதே சமயம் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் தக்க சமயத்தில் அவனால் இயங்க முடியும் என்பதும் முரட்டு அன்னையை அவன் இருள்வனப்பகுதியில் சந்திக்கும் தருணம் தெளிவாக்குகிறது. இயானிடம் ஒரு அபூர்வ வாள் உண்டு. ஆனால் அது அபூர்வமானது என்பது கதையின் இறுதிப்பக்கங்களில்தான் காட்டப்படும்.

வழமையாக ஓர்க்குகள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவையாக சித்தரிக்கப்படுவது இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு. இக்கதையில் வரும் க்மோர்க் எனும் ஓர்க் அவற்றில் ஒன்று எனலாம். இயானுக்கும், க்மோர்கிற்குமிடையில் சிறுவயதிலேயே நட்பு உருவாவது கதையில் சித்தரிக்கப்படுகிறது இருப்பினும் க்மோர்க் இயானுடன் கூடவே வாழ்ந்து வருவது ஏன் என்பது கதையில் கூறப்படுவது இல்லை. கதையில் விரிவாக கூறப்படாத விடயங்களில் இதுவும் ஒன்று. தொடரும் கதை வரிசைகளில் இவர்களிற்கிடையிலான உறவு விரிவாக ஆராயப்படலாம். க்மோர் புத்தகங்களை விரும்புபவன், நல்ல சமையல்காரன், கோடாரி சண்டையில் தேர்ந்தவன், நகைச்சுவை உணர்வு கொண்டவன், இளகிய மனம் உடையவன் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. பெண் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கிவிடுவது க்மோர்க் எனும் ஓர்க்கிற்கு இலகுவான ஒன்றாக இருக்கிறது. கதையின் சில தருணங்கள் க்மோர்க்கை செவ்விந்தியர்களுடன் ஒப்பிடக்கூடியதாக அமைந்திருக்கின்றன. வேட்டையாடி உயிர்பறித்த விலங்கின் ஆன்மாவிற்காக பிரார்த்தித்தல், நல்ல ஓர்க்கு என்பது இறந்துபோன ஓர்க்கு மட்டுமே போன்ற வசனங்கள் எனக்கு செவ்விந்திய பூர்வகுடிகளையே நினைவிற்கு இட்டு வந்தன. வெஸ்டெர்ன்களில் பூர்வகுடிகளுக்கு எதிராக காட்டப்படும் இனவெறியானது க்மோர் எனும் ஓர்க்கின் மீது இக்கதை நெடுகிலும் காட்டப்படுகிறது.

இயானின் சகோதரியான மிர்வா அறிவியலாளர்கள் அமைப்பை சார்ந்த ஒரு வீராங்கனை. அறிவியல் தொழிநுட்பத்தின் வழியை முன்னிறுத்தி செல்பவள் அவள். அவள் மந்திரங்களை நாடுவது இல்லை. அவள் தொழில்நுட்பத்தின் விளைவுகளை உபயோகிப்பவள். அது ஆயுதங்கள் ஆனாலும் வேவுக் கருவிகள் ஆனாலும் அவள் அறிவியலின் பிரதிநிதியாகவே செயல்படுகிறாள். ஆனால் அறிவியலின் எல்லைகள் எட்டாத இடங்களுக்கு செல்ல மந்திரசக்தி தேவையாக இருக்கிறது. கதையில் அறிவியலும், மந்திரசக்தியும் ஒன்றுக்கொன்று உதவியவாறே தீமைகளை எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. மந்திரவாதி அல்பெனும், மிர்வாவும் வாதம் செய்து கொண்டே ஒருவருக்கொருவர் துணையாக நின்று தீமையை எதிர்க்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரின் திறமைகள் மட்டும் அதற்கு போதுமானதாக இருப்பது இல்லை.

இயானை தன் உதவிக்கு அழைத்த கையோடு மந்திரவாதி அல்பென் தனக்கு ஒரு மெய்பாதுகாவலனை தேடி காவல் அன்னையர் மடத்திற்கு செல்கிறார். பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இம்மடம் மிகவும் கடினமான கட்டுப்பாடுகளை கொண்டது. இவர்களால் உருவாக்கப்படும் மெய்பாதுகாவலர்கள் பெண்கள் மட்டுமே. அவர்களிடம் காணப்படும் அசாத்திய திறமைகள் வியப்பை தரும் வகையில் கதையில் பரிமாறப்பட்டு இருக்கின்றன. காவல் அன்னையர் மடத்தில் எகுபா எனும் பெண், மந்திரவாதி அல்பெனின் பாதுகாவலுக்கு பொறுப்பாக வழங்கபடுகிறாள். மந்திரவாதியின் உயிருக்கு பதிலாக அவள் தன் உயிரை தந்து போராட வேண்டும். தற்பாதுகாப்பு முறைகளிலும், தாக்குதல் முறைகளிலும் சளைக்கவியலா பாத்திரமாக சித்தரிக்கப்படும் எகுபா கதையின் முடிவில் மனதையும் கனக்க வைக்கும் ஒரு நிலைக்கு செல்லும் பாத்திரமாகி விடுகிறாள்.

மந்திரவாதி அல்பென் தன் முதல் முயற்சியில் சிறிய தோல்வியை தழுவினாலும் தீமைக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது இல்லை. அதற்கு பிறிதொரு வழியை கண்டடையும் அவன், தான் எதிர்த்து போராடப் போவது தன் பரம வைரியான ஜெரானஸ் என்பதையும் அறிந்தவனாகவே இருக்கிறான். தன் புதிய முயற்சிக்கு உதவும் ஒரு பொருளை கொண்டு வர இயானையும், க்மோர்க்கையும் அவன் ஆதிவனத்திற்குள் அனுப்பி வைக்கிறான். ஆதிவனத்தினுள் வாழ்ந்து வரும் எல்ஃபுகள் வீரர்களுக்கு உதவியாக தாவரவியல் அறிவு கொண்ட எல்ஃப் இளநங்கை செராவை அனுப்பி வைக்கிறார்கள். செரா இதன்வழியாக தன் வேர்களை துறந்து செல்லும் ஒரு எல்ஃபாக சித்தரிக்கப்படுகிறாள். ஓர்க்குகளை வனத்திலிருந்து அடித்து விரட்டிய எல்ஃபுகள் வழிவந்தவளுக்கும் ஓர்க்கான க்மோரிற்கும் இடையில் உருவாகும் நட்பு மிக மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான தருணங்களாக அவை இக்கதையில் அமைகிறது. புதிய இனங்களை நோக்கி செல்லும் செராவின் தயக்கமும், அச்சமும் கதையில் தெளிவாக கூறப்படுகிறது. படிப்படியாக அவள் துடுக்கான ஒரு வாயாடி எல்ஃபாக மாறுவதும் ரசிக்கப்படும்படியாக சொல்லப்படுகிறது. அதே போல ஆதிவனத்தில் வரும் மிக முக்கிய பாத்திரமான முரட்டு அன்னை பாத்திரமும் சிறப்பான ஒன்றே. இக்கதையில் நான் விரும்பி ரசித்த பாத்திரங்களில் அப்பாத்திரத்திற்கு தனியிடமுண்டு.

இவ்வாறாக பல நிலங்கள், மக்கள், மனிதர்கள், விசித்திர விலங்குகள், மலைவாழ் குள்ளர்கள், அவர்களின் ரகசியங்கள், வரலாறுகள் என விரியும் இக்கதை பீட்டர் ஜாக்சன் திரைப்படுத்திய டால்கியனின் நாவல்களின் பின் அனுபவமாக அதிக பிரமிப்பை உருவாக்காமல் போனாலும் குழப்பங்கள், சுழிகள் இல்லாத தெளிவான மிகைபுனை சாகசம் ஒன்றின் சுவையின் ஒரு கணிசமான பகுதியை தரவே செய்கிறது. 2007 ல் இத்தாலிய மொழியில் வெளியான Dragonero எனும் இக்கதை 2014 ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே டார்க் ஹார்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 286 பக்கங்களில் Dragonero வின் கதாசிரியர்கள் Luca Enoch, Stefano Vietti சிறப்பாகவே செயற்பட்டு இருக்கிறார்கள். சித்திரங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர் Giuseppe Matte. பல இடங்களில் அசர வைக்கும் இவர் சித்திரங்கள் சில இடங்களில் ஏதோ அவசரத்தில் வரைந்த உணர்வை ஏற்படுத்துகிறது, அதுவும் மிக முக்கியமான காட்சி ஒன்றி அவர் ஏன் அப்பாணியை கையாண்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று. காலம் அசையாமல் நிற்கும் தருணமொன்றில் சித்திரங்கள் வேறுபட்டு தெரிய வேண்டும் என ஆசிரியர் குழு முடிவெடுத்திருந்தால் அது வாசகர்களால் ரசிக்கதக்கவொரு விளைவை தரவில்லை என்றே நான் கூறுவேன்.

மேலும் சாகசத்தின் முடிவுப் பகுதியும் மிகவும் சுருங்கியது போன்ற உணர்வை தருகிறது. கதையை நீடித்து விரிவாக சொல்லியிருக்க வேண்டிய சமயத்தில் அள்ளி முடித்த கொண்டைபோல ஒரு முடிவுப்பகுதி என்பது கதை உருவாக்கிய எதிர்ப்பார்ப்பின் மீது பலமாக மோதி சாய்த்து விடுவதாக இருக்கிறது. முதல் முயற்சி என்பதால் சுருக்கமாக முடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டிருக்கலாம் என நானே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதை விட வேறு வழி இல்லை. இறுதியில் ஒரு உச்சவிலங்குடன் நடக்கும் மோதல் இப்படியான ஒரு எளிமையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பது மிகைபுனைவு சாகசமே அதைப்பார்த்து வேதனைக் கண்ணீர் விடும் ஒரு தருணமாகி விடுகிறது. பீட்டர் ஜாக்சனும் இதற்கு ஒரு காரணமே. ஆனால் சாகசம் இக்கதையுடன் நின்று விடவில்லை தொடரும் என்பதுதான் ஆறுதல். ஆம் சென்ற வருடத்திலிருந்து பொனெலி பதிப்பகம் மாத வெளியீடாக இக்கதை வரிசையை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது. பொனெலி இப்போது தமிழ் மொழியுடன் நல்ல உறவில் இருப்பதால் ஏதோ ஒரு சுபதின சுபவேளையில் கறுப்பு ட்ராகன் தமிழில் சிறகடிக்கலாம் இல்லையா !!!



Sunday, May 11, 2014

Inferno

டான் ப்ரவுனின் Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய  பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.

இவ்வகையான ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.

தீமையை செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது.  எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.

கதை நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு Inferno.