அந்தியின் வண்ணம் சுற்றுப்புறத்தை தீப்பிடிக்க வைக்க, ஏரியின் மத்தியில் ரம்யமாக எழுந்து நிற்கும் விடுதியில், சின்னக் கெண்டை எனும் பெயர் கொண்ட இளம் பெண்ணுடன் அந்த சுகமான தருணத்தின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறான் நோபுயுரோ.
அந்த வீட்டின் அருகில் நிற்கும் உயர்ந்த மரமொன்றின் கிளையில் தன் உடலைக் கிடத்தியவாறே அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் சின்னக் கெண்டையின் இளைய சகோதரனான டிக்கு. தன் சகோதரியை தன் உயிருள்ள வரை பாதுகாப்பேன் என சபதம் பூண்டவன் அவன். எதிர்காலத்தில் பெயர் பெற்ற ஒர் சாமுராய் வீரன் ஆகி விட வேண்டும் எனும் ஒர் கனவை உள்ளத்தில் விதைத்து வைத்திருப்பவன்.
விடுதியின் அருகில் உள்ள மண்பாதையில் நடந்து வரும் முதிய துறவி நோசின், மரத்தின் கிளையில் இருக்கும் டிக்குவை கீழே இறங்க வைத்து தியானம் செய்வதற்காக அழைத்து செல்கிறார். துறவியின் மூச்சில் ஸக்கே மதுவின் வாசம் சுழல்கிறது. தியானத்திற்கு அது சில சமயங்களில் துணையாகிடும் என டிக்குவிடம் கூறுகிறார் துறவி. மரமொன்றின் அடிப்பகுதியில் வாழ்ந்து வரும் குளிரான நிழலில் தியானம் ஆரம்பமாகிறது.
ஏரியிலிருந்து தன் கண்களை விலக்காத நோபுயுரோ, சின்னக் கெண்டையின் வயிற்றில் ஒர் உயிர் வளர்வதை அவளிடம் தெரிவிக்கிறான். சின்னக் கெண்டையின் விழிகள் ஆச்சர்யத்தால் விழிக்கின்றன. தன்னால் கூட உணர்ந்து கொள்ள முடியாதிருக்கும் விடயம் ஒன்றை நோபுயுரோ எவ்வாறு அறிந்து கொண்டான் எனும் கேள்வி அவளிடம் எழுகிறது. நோபுயுரோவின் சொற்களில் கரைந்திருக்கும் ரகசியம் என்னவென்று அவள் அவனிடம் வினவுகிறாள். அவளின் கேள்விக்கு சரியான பதில் தராது இருக்கும் நோபுயுரோ, தான் தன் எஜமானன் ஒக்கோவைப் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறான். ஏரியின் மேல் பறக்கும் வெண்பறவைகள் சூரியனைப் பிடிக்க விரைந்து பறந்து கொண்டிருந்தன.
அந்தக் கப்பலின் அறையொன்றின் உத்திரத்திலிருந்து தலை வெட்டப்பட்ட பூதத்தின் ராட்சத உடல் அவலட்சணமான ஒர் மீனைப் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மரகத வண்ண விளக்குகள் உமிழும் ஒளியால் சூழப்பட்டிருக்கும் அந்த அறையில், நீண்ட சுங்கான் ஒன்றைப் புகைத்தவாறே, பஞ்சனையில் சாய்ந்து கிடக்கிறான் அகாச்சி சான். அவன் அருகில் அமர்ந்திருக்கும் இளம் பெண் ஒர் தந்தி இசைக்கருவியை இசைக்க, பரவும் இசையில் உயிரற்ற பூதத்தின் தலை அகாச்சியின் முன் கண் மூடிக்கிடக்கிறது.
தனக்கு பெரும் தொல்லை தந்து கொண்டிருந்த கொடிய பூதத்தை ஒழித்துக்கட்டிய பூதவேட்டையன் ஒக்கோவைப் பாராட்டும் அகாச்சி சான், ஒக்கோவிற்குரிய சன்மானத்தை அவனிற்கு வழங்கி படகில் அவனை வழியனுப்பி வைக்கிறான். தன்னை எதிர்பார்த்து, ஏரியிலிருக்கும் விடுதியில் காத்திருக்கும் சகாக்களின் திசை நோக்கி படகை செலுத்த சொல்கிறான் ஒக்கோ.
இரவின் போர்வையில் நோபுயுரோ தங்கியிருக்கும் விடுதியை ரகசியமாக அண்மிக்கின்றன இரு கப்பல்கள். அக்கப்பல்களில் இருக்கும் கொள்ளையர்கள் அதிரடியாக விடுதியைத் தாக்க ஆரம்பிக்கிறார்கள். வாள்களாலும்,அம்புகளாலும் தீண்டப்பட்ட மனித உடல்கள் உயிரற்றுக் கீழே விழ, விடுதியில் இருந்த இளம் பெண்கள் யாவரும் கொள்ளையர்களின் கப்பலில் பலவந்தமாக ஏற்றப்படுகிறார்கள்.
எதிர்த்து தாக்கும் நோபுயுரோவை தந்திரமாக யுத்தப் பொம்மை ஒன்றை வைத்து வீழ்த்துகிறார்கள் கொள்ளையர்கள். தன் சகோதரி சின்னக் கெண்டை, கொள்ளையர்கள் கப்பலில் ஏற்றப்படுவதைக் காணும் டிக்கு கத்த ஆரம்பிக்க அவன் வாயை தன் கரங்களால் மூடி விடுகிறான் துறவி நோசின். துறவிக்கும் உயிர் முக்கியமல்லவா. விடுதிக்கு தீ வைத்து விட்டு, மீண்டு எழும் நோபுயுரோவை கடலினுள் அம்புகளால் தூதனுப்பி வைத்து ஏரியோடிச் செல்கிறார்கள் தம் முகங்களைக் காட்டாத அக்கொள்ளையர்கள்.
படகில் விடுதி திரும்பும் ஒக்கோ, விடுதி முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறான். தன் குழுவினரைக் கடிந்து கொள்ளும் அவன், இளம் பெண்களை கவர்ந்து செல்வதற்காக கொள்ளையர்கள் யுத்தப் பொம்மை ஒன்றை பயன்படுத்தியது அசாதரணமான ஒன்று என்று வியக்கிறான். தன் குழுவினருடன் உடனடியாக அவ்விடத்தை விட்டு நீங்க விரும்பும் ஒக்கோ, கொள்ளையர்களை தொடர்ந்து சென்று பழிதீர்க்க துடிக்கும் நோபுயுரோவின் மனதையும் மாற்றிக் கொள்ளச் சொல்கிறான்.
இந்த உரையாடல்களினூடு தயங்கியவாறே ஒக்கோவை நெருங்கும் சிறுவன் டிக்கு, தன் சகோதரி சின்னக் கெண்டையை காப்பாற்றித் தரும்படி அவனிடம் மண்டியிட்டு வேண்டுகிறான். வறுமையின் பிள்ளையான டிக்கு, அதற்கு சன்மானமாக ஒக்கோவின் முன் வைக்கும் துருப்பிடித்த தூண்டில்களையும், பழைய சீப்பு ஒன்றையும் பார்வையிடும் ஒக்கோ ஆத்திரம் கொண்டு டிக்குவை திட்டுகிறான்.
ஒக்கோவிற்கு வழங்குவதற்கு தன் துன்பமான இருப்பை தவிர தன்னிடம் வேறு ஏதுமில்லை, அதனை எடுத்துக் கொள்ளும்படி ஒக்கோவிடம் வேண்டும் டிக்குவிடம், உன் வாழ்வை எனக்கு வழங்குகிறாயா எனக் கேட்கிறான் ஒக்கோ. தன் சகோதரியின் மீது சத்தியம் செய்து ஒக்கோவிற்கு தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான் சிறுவன் டிக்கு. வழியில்லாதவன் கண்களில் வழியும் ஏரிகளில் மீன்கள் நீந்துவது இல்லை என்பதை அறியாத நீர்ப்பறவைகள் உண்டா என்ன.
ஒக்கோவின் படகினை செலுத்தல், அதன் பராமரிப்பு, சமையல் செய்தல் போன்ற எடுபிடி வேலைகளை அவன் ஆற்ற வேண்டும் என டிக்குவிற்கு கட்டளையிடுகிறான் ஒக்கோ. முதிய துறவி நோசின் அவன் கல்விக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகிறார். தன் வாழ்க்கை முழுதும் ஒக்கோவிற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறி கண்ணீர் சொரிகிறான் டிக்கு. அவன் கண்ணீரையும் ஏந்திக் கொண்ட ஒக்கோவின் படகு அவ்விடத்தை விட்டு அலைகள் மேல் நீந்தியது.
ஏரியில் மிதந்து சென்ற படகு, ஏரியின் கரைகளில் அமைந்திருந்த கிராமங்களைத் தாண்டி ஆளரவம் இல்லா நீர்ப்பரப்பில் பயணத்தை தொடர்கிறது. முதிய துறவி நோசின் வழிகாட்ட டிக்கு படகை செலுத்துகிறான். பயணத்தின் ஒர் தருணத்தில் ஏரியில் நிமிர்ந்து நிற்கும் குன்று ஒன்றின் மீது அமைந்துள்ள ஒர் ஆலயத்தின் அருகில் சென்று நிற்கிறது படகு.
சிதிலமான நிலையிலிருக்கும் அந்த ஆலயத்தின் அடிவாரத்தில், நீரில் வாழும் ராட்சத ஜந்துக்களின் எலும்புக்கூடுகள் குவிந்து கிடக்கின்றன. ஏரியின் மீது வெண்முத்தாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரவின் நிலவு அந்த எலும்புகளை குளிரச்செய்து மகிழ்ந்து கொண்டிருந்தது.
ஆலயத்தின் உட்புறத்தில் கடல் உயிரினங்கள் காணிக்கையாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. மீனின் கவிச்சி நாற்றம் ஆலயத்தை மூழ்கடித்து கொண்டிருந்தது. ஆலயத்தின் மத்தியில் காணப்படும் சிறிய நீர் தொட்டி ஒன்றின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறார்கள் துறவியும், டிக்குவும்.
தன் ஸக்கே மதுவை காணிக்கையாக தந்து நீர் தேவதையை அழைக்கிறான் துறவி. அக்காணிக்கை மதுவை உவப்புடன் ஏற்றுக் கொண்டு தொட்டியிலிருந்த நீர், உருவம் பெறத்தொடங்குகிறது. நீர் உருவம் கொண்டு நிற்கும் தேவதையிடம் சின்னக் கெண்டை குறித்த தகவல்களைக் கூறும்படி வேண்டுகிறான் துறவி. சிறுவன் டிக்கு, தன்னிடம் இருந்த சின்னக் கெண்டையின் சீப்பை நீர் தேவதையின் உடலில் அமிழ விட, அவன் சகோதரி பற்றிய தகவல்களை ஈர்க்க ஆரம்பிக்கிறது நீர் தேவதை.
சிறிது நேரத்தில் நீரால் தான் கொண்ட வடிவத்தை உடைத்துக் கொண்டு தொட்டியில் விழும் தேவதை, ஜொலிக்கும் மீனை தொடர்ந்து சென்றால் அது சின்னக் கெண்டை இருக்குமிடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் எனக்கூறி நீரில் கலக்கிறது.
குன்றின் அருகே ஏரியில் நிற்கும் படகின் அருகில் எங்கிருந்தோ தோன்றி நீந்திக் கொண்டிருக்கும் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது ஒக்கோ குழுவினரின் படகு.
நூறு விலாங்குகள் எனப் பெயர் கொண்ட துறைமுகத்தில் அமைந்திருக்கும் செந்தாமரை சூதாட்ட விடுதியில் இருக்கும் ஒர் அறையில் கொள்ளையர்களால் கடத்தி வரப்பட்ட இளம் பெண்கள் மீது நீர் ஊற்றி அவர்கள் மயக்கம் கலைக்கப்படுகிறது. பின்பு அவர்கள் அழகாக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள்.
இளம் பெண்கள் இருந்த அறையின் கதவு திறக்க, ஒர் குள்ளப் பெண்மணியும், தன் முகத்தை வெள்ளை நிறமான துணியால் மூடி மறைத்த உயர்ந்த ஒர் உருவமும் விடுதி உரிமையாளனுடன் உள்ளே நுழைகிறார்கள். வரிசையாக நின்ற இளம் பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவர்கள் உடல்கள் அழகிய நிர்வாணமாக்கப்படுகிறது. ஆடையின்றி நிற்கும் பெண்களை நெருங்கி அவர்கள் உடல்களை பரிசோதிக்கும் குள்ளப் பெண்மணி சின்னக் கெண்டையை தேர்வு செய்து நீ காத்திருந்த வாக்கு இவள்தான் என நெடிந்துயர்ந்து நிற்கும் உருவத்திடம் தருகிறாள்.
சின்னக் கெண்டையை தன் அவலட்சணமான விரல்களால் தீண்டும் அந்த உயர்ந்த உருவம், பின் அவளை அறையில் இருக்கும் ஒர் பெரிய ஜாடியினுள் நுழையச் சொல்கிறது. சின்னக் கெண்டை ஜாடியினுள் அமர்ந்து கொள்ள அந்த ஜாடி மூடப்பட்டு பணியாளர்களால் அவ்வறையை விட்டு தூக்கி செல்லப்படுகிறது.
அறையில் நிற்கும் ஒருவனிடமிருந்து வாளொன்றை உருவிக் கொள்கிறது அந்த உயர்ந்த உருவம். பின் நிர்வாணமான இளம் பெண்களை தவிர்த்து ஏனையோரை அறையை விட்டு நீங்கச் சொல்கிறது.
அறையின் கதவுகள் மூடப்பட்டதும், தன் கையிலுள்ள வாளை மேலே உயர்த்துகிறது அந்த நெடிய உருவம். குருதி இதழ்கள் கோலமிட, இறந்த பூக்களாய் தரையில் உதிர்கிறார்கள் அந்த இளம் பெண்கள்.
ஏரியில் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து வந்த ஒக்கோவின் படகு, செந்தாமரை விடுதியின் முன்பாக ஜொலிக்கும் மீன் மறைந்து விட, அவ் விடுதியை நெருங்குகிறது. படகிலிருந்து இறங்கும் ஒக்கோ குழுவினர் விடுதியின் படிகளில் ஏறிச்செல்கிறார்கள். இதே சமயம் சின்னக் கெண்டை இருக்கும் ஜாடியை அதே படிகள் வழி கீழே இறக்கி வருகிறார்கள் பணியாளர்கள். ஜாடியைப் பின் தொடர்ந்து வருகிறது ஒர் மூடிய பல்லக்கு…
விடுதியில் நடக்கப் போவது என்ன? சின்னக் கெண்டையை கவர்ந்து செல்லும் உயர்ந்த உருவம் யார்? சின்னக் கெண்டையிடம் அந்த உருவம் கண்டு கொண்டது என்ன? சின்னக் கெண்டையை ஒக்கோ குழுவால் காப்பாற்ற முடிந்ததா? என்பவற்றிற்கு விடை தருகிறது OKKO எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பம்.
1108 களில், ஜப்பானின் மத்திய காலப்பகுதியில் அதிகாரங்களை தம் வசப்படுத்திக் கொள்ள பெரும் குலங்கள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்க, இப்பகுதிகளிலிருந்து விலகி பூதவேட்டை நடாத்தும் குழு ஒன்றின் தலைவனாக எந்தவித கட்டுக்களுமற்ற சுதந்திர வீரனான ஒக்கோ, தன் உண்மையான அடையாளத்தைக் காட்டாது சிகப்பு முகமூடியால் தன் முகத்தை மறைத்து இருக்கும் அசுர பலம் கொண்ட நோபுயுரோ, ஸக்கே மதுப்பிரியரான ஒர் முதிய துறவி, சிறுவன் டிக்கு ஆகியோரின் சாகசங்களைக் கூறுகிறது கதை.
விழிகளை மயக்கும் சித்திரங்களும், அதிரடித்திருப்பங்களுமாக கதை நகர்கிறது. ஆக்ஷன், மந்திரம், மர்மம் என விறுவிறுப்பான கதை சொல்லலும், கதை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் இடங்களும் வாசகர்களை கவர்ந்து விடுகின்றன.
ஜப்பானின் பூத வேட்டையர்கள் பற்றிய கதை என்பதே ஒர் புதிய அனுபவமாக உள்ள போது, கதையில் தோன்றும் அமானுட பாத்திரங்கள் வாசகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக உள்ளன.
இயற்கையின் ஆதார மூலங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி என்பவற்றை மையமாக கொண்ட வட்டங்களாக OKKO தொடர் நகர்கிறது. ஒவ்வொரு ஆதார மூலத்திற்கும் இரண்டு ஆல்பங்கள் வழி கதை சொல்லப்படுகிறது. இது வரை ஐந்து ஆல்பங்கள் வெளியாகியுள்ள தொடரில் நாம் பார்த்தது நீர் வட்டத்தின் முதல் பாகமாகும்.
இத்தொடரிற்கு சிறப்பாக கதையையும், சித்திரங்களையும் உருவாக்கியிருப்பவர் HUB எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் ஆவார். 1969ல் அனெசி எனும் ஊரில் பிறந்தவர். இயற்பெயர் Humbert Chabuel. காமிக்ஸ்களிற்கு சித்திரம் வரைவது என்பது இவர் வாழ்நாள் கனவாக இருந்தது. 1992ல் லுக் பெஸனுடன் இனைந்து 5th Element திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். காமிக்ஸ் துறையில் பணியாற்றுவதில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் இவரிற்கு பிடித்தமான ஒன்று. அந்த சுதந்திரத்தின் உவகையில் OKKO காமிக்ஸ் தொடரில் அற்புதமாகப் பணியாற்றி வருகிறார். கதைக்கு அவர் வரையும் சித்திரங்களே அதற்கு சான்று பகர்ந்திடும். வாசகர்களின் கண்களிற்கு விருந்து நிச்சயம். [***]
இப்பதிவுவானது 04/08/2009 ல் எழுதப்பட்டது.
ஏனைய ஆல்பங்கள்