Showing posts with label மங்கா. Show all posts
Showing posts with label மங்கா. Show all posts

Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]

Saturday, January 8, 2011

இகார் ஓசன் பாரன்ஹைட் 451

கிரேக்க புராணக் கதைகளில் இகாரஸ் என்பவன் தன் தந்தை உருவாக்கிய சிறகு போன்ற அமைப்புக்களை தன் முதுகின் மீது பொருத்திக் கொண்டு கிரெட்டின் அரச மாளிகையிலிருந்து தப்பி வானில் உயரப் பறக்கையில், சூரியனின் வெப்பத்தால், அந்த சிறகு போன்ற அமைப்புக்களில் இருந்த மெழுகு உருகியதால் தொடர்ந்து பறக்க முடியாது கடலில் வீழ்ந்தவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் மற்றும் ஓவியரான Moebius – ப்ளுபெர்ரி புகழ் ஜான் ஜிரோ- அவர்கள் உருவாக்கியிருக்கும் கதையின் நாயகனான இகாரோ பறக்கும் சக்தியை பிறக்கும்போதே ஒரு இயல்பாக தன்னுள் கொண்டிருக்கும் ஒருவனாக உருவாக்கப்பட்டிருக்கிறான்.

மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு பிறக்கும் ஆண் சிசுவானது காற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. இந்த தகவலை அறியும் ஜப்பானிய ராணுவ அதிகாரம் அச்சிசுவை தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொள்கிறது. வெளியுலகம் என்னவென்று தெரியாது கூண்டுப் பறவை போல் வளர்க்கப்படும் இகார் எனும் அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அவன் பறக்கும் சக்தி குறித்து எண்ணற்ற ஆய்வுகளை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பெண் ஒருத்தி மீது காதல் வயப்படுகிறான் இகார். இது அவனை சுதந்திரத்தையும், விடுதலையையும் நோக்கி பறக்கச் செய்கிறது. ராணுவக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி இகார் தன் காதலில் வெற்றி கண்டானா, சுதந்திரமாக வானில் பறந்தானா என்பதை நீண்ட கதை விபரிக்கிறது.

ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி ஆரம்பமாகும் கதை பின் தன் சுவையையும், சுவாரஸ்யத்தையும் இழக்கிறது. ஜப்பானிய அதிகாரத்திற்கு எதிராக செயற்படும் புரட்சிக் குழுக்கள், இவ்வகையான குழுக்களை அடக்குவதற்கான நிகரற்ற ஆயுதமாக உருவாக்கப்படும் இகார், Sadomaso சிருங்காரம், இரு உள்ளங்களிற்கிடையில் மெல்ல மலரும் காதல் என மிகவும் சுவாரஸ்யமாகவும், சூடாகவும் சென்றிருக்க வேண்டிய கதை, விஞ்ஞான ஆய்வுகளிலும், இகாரின் கவிதை போன்ற பறத்தல்களிலும், சலிப்பை தரும் கதை நகர்விலும் தன்னை தொலைத்து விடுகிறது.


ic1 ic2 மாபியஸ் அவர்கள் உருவாக்கிய கதை, ஜப்பானிய ஆசிரியர் குழுவால் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, புத்தகத்தின் அட்டையில் அவரின் பெயரும், ராயல்டியில் பங்கும் அவரிற்கு உண்டு என்பதால் கதை சுமாரிற்கும் கீழாக உள்ளது என்பதற்கும் அவரே பொறுப்பு ஆகிறார். ஜப்பானிய மங்கா வார சஞ்சிகை ஒன்றில் இக்கதை தொடராக வெளியான போது வாசகர்களின் ஆதரவு இத்தொடரிற்கு கிடைக்காததால் கதை முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பை நாவலில் வாசகன் உணர முடியும். விருந்து சுமார்தான் எனினும் அதனையும் பாதியில் முறித்தால் என்ன உணர்வு வருமோ அதே உணர்வு கதையின் முடிவிலும் வருகிறது. இதற்குப் போய் இவ்வளவு பெரும் கூச்சலா எனும் கேள்வி மனதில் இறக்கை கட்டி பறக்கிறது.

இந்த மங்காவிற்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல மங்கா கலைஞர் Jiro Taniguchi. அற்புதமாக வரைந்து தள்ளியிருக்கிறார். பறத்தல் காட்சிகள், சிருங்காரக் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எதிலும் குறை வைக்கவிலை டேனிகுச்சி. சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. என்னை நீங்கள் பாராட்டக்கூடாது. ஆங்கில மொழியில் Icaro எனும் தலைப்பில் இச்சித்திர நாவல் வெளியாகி இருக்கிறது.

மிக எளிதாக வாசகர்களால் மறந்து விடப்படக்கூடிய இக்கதை புத்தக வடிவில் வெளிவரக் காரணம் ஜிரோ டேனிகுச்சி இன்று பெற்றிருக்கும் பிரபலம் ஒன்றுதான். நல்ல சித்திரங்கள் இருந்தாலும் கதை எனும் முக்கிய அம்சம் இறகை ஒடித்து விட்டதில் நாவல் சப்பென்று இருக்கிறது. கிழக்கும் மேற்கும் இணைகிறது என நடாத்தப்பட்ட விளம்பரங்களும், காமிக்ஸ் துறையின் இரு ஜாம்பவான்கள் கை கோர்க்கிறார்கள் என்ற வியப்பும் தரையில் வீழ்ந்து கிடக்கும் இகாரை பறக்க வைக்கப்போவதேயில்லை. [ * ]

ocean_10 இகாரைப் போலவே Ocean ம் சுமாரான ஒரு கதைதான். இன்று அமெரிக்க காமிக்ஸ் உலகின் பிரபல காதாசிரியர்களில் ஒருவரான Warren Ellis ஆல் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணங்கள் ரயில் பயணங்கள் போல் ஆகி விட்ட ஒரு எதிர்காலத்தில் இக்கதை கூறப்படுகிறது. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Chris Sprouse.

numérisation0003 ஜூபிடர் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Europa சமுத்திரப் பரப்பால் சூழப்பட்டிருக்கிறது. இச்சமுத்திரத்தினுள் ஆய்வுகளை நிகழ்த்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அங்கு விசித்திரமான மிதக்கும் தாழிகளை கண்டுபிடிக்கிறது. தொடரும் ஆய்வுகள் தரும் முடிவுகள், ஐநா இன்ஸ்பெக்டர் நேதன் கேனை இயுரோப்பாவிற்கு இட்டுச்செல்கின்றன. பலம் பொருந்திய பல்தேசிய நிறுவனம் ஒன்றின் எதிர்ப்புக்களை முறியடித்து விசித்திரமான தாழிகளினுள் உறங்கியிருக்கும் மர்மத்தையும், அதன் மூலம் பூமிக்கு உருவாகவிருக்கும் அபாயத்தையும் நேதன் கேனும் ஐநா ஆய்வுக்குழுவினரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கதை விபரிக்கிறது. கதையில் கூறப்படும் ஆரம்பகால விண்வெளிப் பிரயாணங்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவையாக உள்ளன.

வில் ஸ்மித்தை நாயகனாக கொண்டு இக்கதையை ஹாலிவூட்டில் இயக்கினால்கூட அப்படம் கதையால் அல்ல அதில் இடம்பெறும் அதிரடி ஆக்சன் மூலமே ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடும். சினிமாத்தனமான திருப்பங்களின் துணையுடன் பயணிக்கும் கதையின் இறுதிப்பகுதி விறுவிறுப்பை சிறிதளவில் வழங்கினாலும், அழிந்து போன உலகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் கலாச்சாரம், அதன் நீட்சி என புதுமையற்ற கதைதான் நாவலை ஆக்கிரமிக்கிறது. அமெரிக்க காமிஸ்களிற்கேயுரிய சித்திரப்பாணியில் சித்திரங்கள் கதைக்கு துணையாக நிற்கின்றன. இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ]

Ray Bradbury என்றால் அறிவியல் புனைகதை ஆர்வலர்களிற்கு Fahrenheit 451 எனும் தலைப்பு நினைவுகளில் தீப்பிடிக்கும். நாவலாசிரியர் ரே ப்ராட்பரியின் ஒத்துழைப்புடன் அந்த நாவலை சித்திர நாவலாக மாற்றியிருக்கிறார் Tim Hamilton. இந்த வேள்வித்தீயின் விளைவு அற்புதமான ஒரு சித்திர நாவலாக மலர்ந்திருக்கிறது.

fce34b7aec478f00b3bcf1b71c470adc96a8b6cc புத்தகங்கள் படித்தலும், சிந்திப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகிவிட்ட எதிர்காலம். வீடுகள், கட்டிடங்கள் தீப்பிடிக்க இயலாதவைகளாக உருவாக்கப்படுகின்றன. எனவே தீயணைப்பு வீரர்கள் புத்தகங்களை கொளுத்துகிறார்கள். புத்தகங்களை வைத்திருப்பவர்களை, படிப்பவர்களை கைது செய்கிறார்கள். இந்த தீயணைப்பு படை!! வீரர்களில் ஒருவனே Guy Montag.

தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் ஒரு அமைதியான மாலை வேளையில் வினோதமான இளம் பெண்னான Clarisse McClellan ஐ சந்திக்கிறான் கய் மொண்டாக். கிளாரிசுடன் தொடரும் அவன் சந்திப்புக்கள் அவனை தன் வாழ்க்கை குறித்த கேள்விகளை உருவாக்க வைக்கின்றன. கேள்விகள் அவனை புத்தகங்களை நாட வைக்கின்றன. புத்தகங்கள் அவனை அதிகாரத்திற்கு எதிரானான ஒருவனாக மாற்றியமைக்கின்றன…

என்ன ஒரு கதை! என்னே ஒரு சித்திர நாவல்! இகாரினால் சோர்ந்து போயிருந்த என்னை உற்சாகமூட்டி எழுப்பியது டிம் ஹாமில்டனின் இந்த அற்புதமான படைப்பு. அசர வைக்கும் ஹாமில்டனின் ஒவியப்பாணி கதைக்கு மென்மேலும் இருளை சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரகாசமான பக்கம் என்பது தீயானது புத்தகங்களை கபளீகரம் செய்யும் தருணத்தின்போதே காணக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.

f451 ஹாமில்டன், தற்காலத்திற்கேற்ப மூலக்கதையில் சிறிது மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்புகிறேன் [ நான் நாவலைப் படிக்கவில்லை]. நாவலில் முன் வைக்கப்பட்டிருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த பார்வைகள் ஆச்சர்யப்பட வைப்பவை. இச்சித்திர நாவலை படித்து முடித்தவுடன், தான் படிக்கும் புத்தகங்கள் மோசமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தீயிலிட்டுக் கொளுத்தி மகிழும் என் நண்பரிற்கு நான் ஒரு மடலை அனுப்பினேன். உங்கள் அகத்தில் ரே ப்ராட்பரியின் கற்பனைகளின் ஒரு கூறு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என!

எதிர்காலம் குறித்த ஒரு அச்சமான தரிசனத்தை வாசகன் மனதில் தீ போல் பரவச்செய்து கனவுகளினதும், கற்பனைகளினதும், எதார்த்தங்களினதும் அரூப வெளிகளில் அவன் முன்வைக்ககூடிய எண்ணற்ற புதிர் வினாக்களை விருட்சமொன்றின் உதிரும் இலைகள்போல் அவன் மனவெளியில் நிரப்புகிறது கதை. எதிர்வரும் நாட்களில் புத்தகங்களை எரிக்க தீயணைப்பு படை தேவையில்லை மக்களே விரும்பி புத்தகங்களை விட்டு விலகி வந்துவிடுவார்கள் எனக்கூறப்படும் கருத்து அதிரவைப்பது. மிகையான கேளிக்கை கொண்டாட்டங்களாக இருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் காட்சி ஊடகங்களும் மனிதர்களை சிந்திக்கவிடாதும், கேள்விகளை எழுப்ப விடாதும் செய்துவிடுகின்றன எனும் பார்வை அன்றே முன்வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. சித்திர நாவலின் கதை சொல்லலிலும், உரையாடல்களிலும் டிம் ஹாமில்டன் பின்னி எடுத்திருக்கிறார். திகில்தன்மையை இறுதிப்பக்கம் வரை அவர் சிறப்பாக எடுத்து செல்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் இச்சித்திர நாவல் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. மழை அடித்து பெய்யும் தருணம் ஒன்றில் கிளாரிசை சந்திப்பான் மொண்டாக், கிளாரிஸ் உளவியல் மருத்துவரைக் காணச் சென்று கொண்டிருப்பாள், மழையின் துளிகள் தனக்கு திராட்சை மதுவைப்போல சுவை தருகின்றன நீ எப்போதேனும் மழைத்துளிகளை சுவைக்க முயன்று பார்த்திருக்கிறாயா என வினவும் கிளாரிஸை கடிந்து கொள்ளும் மொண்டாக், அவள் தன்னை விட்டு விலகியபின் மழையினூடு நடந்து செல்வான், சித்திரப்பக்கத்தை க்ளிக்கி அத்தருணத்தை ரசியுங்கள்.

[ **** ]

Saturday, August 15, 2009

கோதுமைகளின் துரோகம்


1945- ஏப்ரல்- ஹிரோசிமா

gen2 இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டுப் படைகளிற்கு எதிராக ஜப்பான் நடாத்தி வரும் கடும் யுத்தம் அதன் இறுதி மூச்சை அடையும் நேரம் மெல்ல மெல்ல நெருங்கி கொண்டிருந்தது. ஹிரோசிமாவில், போரின் உக்கிரமான பிடிக்குள் சிக்கி வதங்கும் குடும்பங்களில் நாகாவோகாவின் குடும்பமும் ஒன்றாகும்.

ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் இரவு , பகல் பாராது தங்கள் குண்டு வீச்சுக்களை நிகழ்த்துகின்றன. மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள பதுங்குகுழிகளிற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். வானத்தில் அழகான மேகங்களையோ, நட்சத்திரங்களையோ பார்ப்பதை விடுத்து, அழிவின் தூதர்களை பார்க்க வேண்டிய காலமது.

வறியவனான நாகாவோகா, தனக்கிருக்கும் ஒர் சிறிய நிலத்தில் கோதுமைப் பயிரை பயிரிட்டு வருகிறான். நிலத்தில் உழைத்த நேரம் போக மீதி நேரத்தில் தன் வீட்டில் கர்ப்பமுற்றிருக்கும் தன் மனைவி கிமியுடன் மரத்தாலான காலணிகளையும் அவன் உருவாக்குகிறான்.

அவனது மூத்த மகன் கோஜி படிப்பை நிறுத்தி விட்டு ஏனைய மாணவர்களைப் போலவே, ஜப்பானிய ராணுவத்திற்காக ஊதியமின்றி தொழிற்சாலையில் வேலை பார்க்கின்றான். எய்கோ எனும் ஒர் இனிய மகள் , இதற்கு பின்பு மூன்று ஆண் பிள்ளைகள். இதில் அகிரா, பள்ளியில் படிக்கும் சிறுவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தினால் ஒர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். எஞ்சிய சிறுவர்களான ஜென்னும், சிஞ்யியும் குறும்புக்காரர்கள். தங்கள் தந்தையின் கோதுமை நிலத்தில் அவர் கூட ஒத்தாசையாக வேலை செய்கிறார்கள்.

அவர்கள் வீட்டில், வறுமையும், பசியும் குடும்ப அங்கத்தினர்களாகவே அவர்களுடன் வாழ்ந்து வருகின்றன. ஒர் யுத்தத்தினால் அதிகம் பாதிப்புள்ளாகும் வறிய வர்க்கமல்லவா அவர்கள். நாகாவோகா, ஜப்பானின் போர்க் கொள்கைக்கு எதிரான கருத்துடையவன். மக்களை எண்ணியே பார்க்காத சில பணக்காரர்களினதும், முட்டாள் ராணுவத்தினதும் கூட்டுச் சதிதான் போர் எனும் எண்ணம் கொண்டவன். நாகாவோகாவின் இக்கருத்துக்கள் அவனை தேசத்துரோகி எனும் பட்டத்திற்கு தகுதியுள்ளவையாக்குகின்றன. போரிற்கு ஆதரவான கருத்துக்கள் கொண்ட, தான் குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவன் நேரடியாகவே எதிர்க்கின்றான்.

gen3 அயலவர்களால் அவன் பிள்ளைகளும் துரோகியின் பிள்ளைகள் எனக் கிண்டல் செய்யப்படுகிறார்கள். வீட்டில் நிலவும் வறுமை காரணமாக தங்கள் பெற்றோர்கள் உருவாக்கிய மரத்தாலான காலணிகளை விற்பதற்காக எடுத்து செல்கிறார்கள் ஜென், எய்கோ, மற்றும் சிஞ்ஜி. இவர்கள் வழியில் குறுக்கிடும், அவர்கள் குடியிருக்கும் பகுதியின் தலைவரின் மகன் ரியுசிச்சி, அவர்களை துரோகிகள் என கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறான். பின் தன் நண்பர்களுடன் காலணிகள் இருந்த சிறு வண்டியை நீரினுள் தள்ளி விட்டு, அவனை எதிர்க்கும் எய்கோவின் ஆடைகளை அவிழ்க்க முயல்கிறான் . இதனால் ஆத்திரம்டையும் ஜென், ரியுசிச்சியின் விரல்களை கடித்து துண்டாக்கி விடுகிறான்.

தன் மகனின் நிலை கண்டு கோபமுறும் தலைவர், பொலிஸிடம் நாகாவோகா போரை எதிர்க்கும் ஒர் தேசத்துரோகி என புகார் தந்து அவனை கைது செய்ய வைக்கிறார். கைது செய்யப்பட்ட நாகாவோகாவை பொலிஸ் கடுமையான முறைகளில் விசாரிக்கிறது. எவ்வளவு அடி வாங்கினாலும் ஜப்பான் செய்யும் போர் அனாவசியமானது எனும் தன் கருத்திலிருந்து நகாவோகா மாறாதவனாகவேயிருக்கிறான்.

gen4 தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அறியும் சிறுவர்கள் ஜென்னும், சிஞ்யியும் மனம் கொதிக்கிறார்கள், குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவர் தனியே வரும் வேளை பார்த்து தாக்கியும் விடுகிறார்கள். சிறுவர்களின் அடாவடியில் காயமடைந்த தலைவர், நாகாவோகாவின் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்கிறார். வாக்கு வாதம் நிலை தவறிப் போகவே கிமியை அவர் அறைந்து விடுகிறார். இதனால் ருத்ரமாகும் கிமி, கத்தி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தலைவரை வீதியில் வைத்து தாக்கச் செல்கிறாள். நிலைமை விபரீதமாகும் முன்னர் நாகாவோகாவின் அயலவனான கொரிய நாட்டைச் சேர்ந்த பக் என்பவன் கிமியை தடுத்து சாமதானம் செய்துவிடுகிறான்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களும், சீனர்களும் பலவந்தமாக ஜப்பானிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். கடுமையான வேலைகளில் அமர்த்தப்பட்ட அவர்கள் மிகவும் மோசமன முறையில் மனிதாபிமானமற்ற வகைகளில் ஜப்பானியர்களால் நடாத்தப்பட்டார்கள். களமுனைகளில் போரிட்டு ஜப்பான் நாட்டிற்காகப் பலியானார்கள். பெரும்பான்மையான ஜப்பானிய மக்களோ அவர்களை சக மனிதர்களாக நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால் நாகாவோகா மனிதர்கள் யாவரும் ஒன்றே, கொரியர்களையும் நாங்கள் மதிக்க வேண்டும் என்ற நல்மனம் கொண்டவன். தன் குழந்தைகளிற்கும் அவன் இதைக் கற்றுத் தருகிறான்.

குடியிருக்கும் பகுதியின் தலைவரை, கிமி கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றாள் எனும் தகவல் அயலவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவிடுகிறது. நாகாவோகாவின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள் அப்பகுதியில் வாழ்பவர்கள். தம் பிள்ளைகள் கூட நாகாவோகாவின் பிளைகளுடன் பழகக்கூடாது எனத் தடையும் விதிக்கிறார்கள்.

gen5 ஜென் கல்வி கற்கும் பாடசாலையில், யுத்தம் மகத்தானது என்றும் மற்றும் ஜப்பானிய மன்னரிற்காகவும், மண்ணிற்காகவும் பிள்ளைகள் தங்கள் உயிரைக் கொடுத்தல் வேண்டும் எனவும் வஞ்சகக் கருத்துக்கள் ஏதுமறியாத பிஞ்சு உள்ளங்களிற்கு ஊட்டப்படுகின்றன. வகுப்பில் யுத்தத்திற்கு எதிராக தன் கருத்துக்களை எழுதியதால் ஜென் கடுமையாக தண்டிக்கப்படுகிறான். அவன் சகோதரியான எய்கோ, திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, உடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். துரோகிகள் என்றே அவர்களை எல்லாரும் அழைக்கிறார்கள். நேர்மைக்கு ஒத்த சொல்லாக சில நேரங்களில் துரோகம் அமைந்து விடுகிறது போலும். பக் மாத்திரம் எப்போதும் போன்று அவர்களுடன் மிகவும் மரியாதையுடன் பழகுகிறான்.

வீட்டில் உணவு ஏதுமின்றி பட்டினியால் வாடும் குழந்தைகளைப் பார்த்து மனம் உடைந்து அழுகிறாள் கிமி. தங்களிற்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பதால் அவள் தளர்ந்து போகிறாள். வேறு வழியில்லாது பரந்த புற்தரைகளில் வாழும் வெட்டுக்கிளிகளை பிடித்து உண்டு பசியாறுகிறார்கள் அவர்கள். பொலிஸும் நாகாவோகாவை விடுவித்து விடுகிறது. வீடு வரும் நாகாவோகா தன் குடும்பத்தின் நிலை கண்டு மனம் உடைந்து போகிறான். தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அவனும் வறுத்த வெட்டுக்கிளிகளை உண்ணத் தயாராகிறான். நாகாவோகா விடுதலையாகி வீடு திரும்பி விட்டதை அறியும் கொரியன் பக், தன் கஷ்டத்தின் மத்தியிலும் நாகாவோகா வீடு திரும்பியதைக் கொண்டாடச் சொல்லி அவர்களிற்கு சிறிது அரிசி தருகிறான்.

gen6 பாடசாலையில் தன் குழந்தைகளிற்கு நேர்ந்த கதியை அறிந்து விடும் நாகாவோகா, அவர்களின் பாடசாலைக்கு சென்று தன் குழந்தைகளின் எதிரிலேயே அவர்களிடம் முறை தவறி நடந்து கொண்ட ஆசிரியர்களை தாக்குகிறான். அப்பாவிச் சிறுவர்களை போரிற்கு தயார் செய்யும் கொலைகாரர்கள் எனவும் அவர்களைக் கடிந்து கொள்கிறான். பாடசாலையில் இருந்து ஜென்னுடனும், எய்கோவுடனும் வீடு திரும்பும் வழியில் தன் கோதுமை வயலைக் காணச் செல்லும் நாகாவோகா அச்சிறிய வயல் நசுக்கி சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

தன் வயலை மீண்டும் உருவாக்கி காட்டுவேன் என சபதமிட்டு வீடு திரும்பும் நாகாவோவிற்கு இன்னுமோர் அதிர்சி அவன் வீட்டில் காத்திருக்கிறது. அவன் மூத்த மகனான கோஜி விமானப் படையில் இணையப் போவதாக தெரிவிக்கிறான். தந்தையின் அறிவுரைகள் எதுவும் அவனை தடுத்து விட முடியாமல் போகின்றன.

தான் பணிபுரிந்த தொழிற்சாலையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், துரோகியின் மகனும் துரோகி எனும் அவப்பெயருமே தான் இம்முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்தன என்பதை தன் இரு சகோதரர்களான ஜென், சிஞ்ஜி ஆகியோரிடம் அவன் பகிர்ந்து கொள்கிறான். இதனாலாவது தன் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் அவப்பெயர் நீங்கும் என்று கோஜி நம்புகிறான். பின்பு தன் சகோதர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறான் கோஜி. தன் மகன் உயிரோடு திரும்ப வேண்டுமே என தன் மனதினுள் அழுகிறான் நாகாவோகா.

இதே வேளையில் அமெரிக்காவில் மன்ஹாட்டன் எனப் பெயரிடப்பட்ட ஒர் திட்டம் மூன்று வருடங்களின் பின் வெற்றிகரமான முடிவிற்கு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் அணு குண்டு ஒன்றை உருவாக்கல் ஆகும். உருவாக்கப்பட்ட அணு ஆயுதத்தின் உண்மையான தாக்கம் என்னவென்று உறுதியாக தெரியாத நிலையிலேயே, ஜப்பானை போரிலிருந்து ஒடுக்குவதற்காக நான்கு ஜப்பானிய நகரங்கள் பிரதான இலக்குகளாக தெரிந்தெடுக்கப்பட்டன. கோகுயுரா, ஹிரோசிமா, கியோட்டோ, நிகாட்டா என்பனவே அந்த நான்கு நகரங்கள் ஆகும்.

ஜப்பானின் பல நகரங்கள் அமெரிக்க விமானங்களினால் ஒயாத விமானத் தாக்குதலிற்கு இலக்காகின்றன. கள முனையிலோ தோல்வி ஜப்பானியர்களை ஆதரவுடன் அணைத்துக் கொள்கிறது. ஜப்பானிய அதிகார பீடம் போரின் நிலை பற்றி பொய்யான தகவல்களை மக்களிற்கு கூசாது அளிக்கிறது. இறுதி ஜப்பானியன் உயிருடன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என அதிரடி அறிக்கை விடுகிறது. அப்பாவி ஜனங்களை போரை நோக்கி உந்த உறங்காத ஒர் யந்திரம் போன்று அது புதிய வழிகளை தேடிக் கொண்டே இருந்தது.

ஜூன் 1945. ஹிரோசிமாவில் உணவுப் பொருட்களிற்கான தட்டுப்பாடு மிக உக்கிரமாக இருந்தது. மக்களின் அதிருப்தி போரிற்கு எதிராக அவர்களை திருப்ப ஆரம்பித்தது. காவல் துறை உதவியுடன் ஜப்பான் அதிகாரவர்க்கம் அதிருப்தியாளார்களை அடக்கி சிறையில் அடைத்துப் போட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு வழியின்றி போரிற்கு ஆதரவு தர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எல்லா வகையான கஷ்டங்களையும் மக்கள் ஜப்பானிய மன்னரிற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களிற்கு அறிவுரை நல்கப்பட்டது.

கர்பமாக இருக்கும் கிமி உடலில் சத்துக்கள் குறைந்ததால் உடல் நலம் இழக்கிறாள். அவளிற்கு நல்ல உணவுதான் மருந்து எனக் கூறிவிடுகிறார் மருத்துவர். நாகாவோகா என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவிக்கிறான். ஜென்னும், சிஞ்ஜியும் தெருவில் பாடல்கள் பாடி பிச்சை எடுத்து அப்பணத்தை யாரிற்கும் தெரியாது ஒர் சிறு முடிச்சில் இட்டு தங்கள் வீட்டிற்குள் வீசுகிறார்கள். இந்த உதவியை தங்களிற்கு செய்வது யார் என்பது தெரியாது ஆச்சர்யம் கொள்கிறார்கள் நாகாவோகா தம்பதிகள். இது ஒரு வேளை தங்கள் அயலவனான கொரியன் பக்கின் செயலாக இருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள்.

பக்கை சந்தித்து அவனிற்கு நன்றி கூறச் செல்கிறான் நாகாவோகா. பண முடிச்சுக்களை அவர்கள் வீட்டில் வீசியது தானல்ல என்று அவனிடம் கூறுகிறான் பக். இதனால் குழப்பமுற்று தெருவில் பலத்த யோசனையுடன் நடந்து செல்லும் நாகாவோகா, தெருவொன்றின் ஓரத்தில் ஒர் கும்பல் கூடியிருப்பதைக் காண்கிறான். அக்கும்பலை நெருங்கும் நாகாவோகா தன் இரு புதல்வர்களும் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பதைக் கண்டு கலங்கி விடுகிறான்.

அன்று அப்பாவிகள் போல் வீடு திரும்பி வரும் தன் இரு புதல்வர்களையும் அணைத்துக் கொண்டு அழும் நாகாவோகா, தெருவில் இனி பிச்சை கேட்கக் கூடாது என அவர்களிடம் கூறுகிறான். தங்களிற்காக சில பாடல்களைப் பாடிக் காட்டுமாறு நாகாவோகா அவர்களிடம் அன்புடன் கேட்க, உற்சாகாமாக உரத்த குரலில் கச்சேரியை ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள்.

ஜூலை 26, 1945. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஜப்பானை எந்தவித நிபந்தனைகளுமின்றி யுத்தத்தை நிறுத்தி விட்டு சரணடையும் படி கூட்டாக ஒர் அறிக்கையை வெளியிட்டன. மீறி யுத்தத்தை தொடர்ந்தால் ஜப்பான் மண்ணில் பேரழிவுக்கு இடமுண்டு எனவும் எச்சரித்தன. ஆனால் ஜப்பானிய ராணுவ அதிகாரம் இறுதி ஜப்பானியன் உயிருடன் உள்ள வரை போராடுவோம் என வீம்பு அறிக்கை விட்டு இதனை தட்டிக் கழித்தது.

இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே, 16.07.1945ல், அதிகாலை 5.30 மணிக்கு, நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் ஒன்றில் அமெரிக்கா மனித குலத்தின் முதல் அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது.

6.08.1945, அந்தக் காலையில் ஹிரோசிமாவின் நீல வானத்தின் அழகை ஜென்னும், அவள் சகோதரியும் தங்கள் கண்களால் பருகிக் கொண்டிருந்தார்கள்.மேகங்கள் அவர்களிற்கு தேவதைக் கதைகள் சொல்லித் தந்தன. கிமி தன் அன்புக் குழந்தைகளை பாடசாலைக்கு தயாராக சொல்கிறாள். சிறுவன் சிஞ்ஜி தன்னிடம் இருக்கும் படகு ஒன்றுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்படகில் அவன் செல்ல விரும்பிய இடங்கள் மிக அழகானவை. ஹிரோசிமாவில் அன்றைய விடியல் வழமை போலவே எழுந்தது. தன்னை நோக்கி காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கும் பேரழிவின் சலனத்தை அது உணரவேயில்லை.

gen7 அன்று காலை 8.16 மணியில் ஹிரோசிமாவில் நேரம் நின்று போனது…..

நாகாவோகா குடும்பம் என்னவானது?

Hodashi No Gen [வெற்றுப்பாத ஜென்], எனும் மங்காவின் முதல் பாகம் உள்ளத்தைக் கனக்க வைக்கும் ஒர் பிரதியாகும். அமெரிக்கா அணுகுண்டு வீசியதால், ஜப்பானிய நகரங்களான ஹிரோசிமா, நாகசாகி பேரழிவிற்கு உள்ளாகின என்பதும், அதன் விளைவுகள் தணிய பல வருடங்கள் ஆயின என்பதும், அமெரிக்காவின் கோரமுகத்தின் மரபுச்சித்திரம் இதுவென்பதும் பலரும் அறிந்ததே.

ஆனால் ஜப்பானில் அத்தருணத்தில் வாழ்ந்திருந்த அப்பாவி மக்களிற்கு ஜப்பானிய ராணுவமும், அரசும் ஆற்றிய கொடுமைகளும், துரோகமும் இக்கதையைப் படிக்கும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஹிரோசிமா நகரில் வாழும் ஒர் சாதரண குடும்பத்தின் கதை வாயிலாக நான் பெற்ற வாசிப்பனுபவம் மிகுந்த அதிர்ச்சி தருவதாக இருந்தது.

gen8 ஜப்பானின் கொடும் போரிற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட நாகாவோகா மூலம் போரிற்கு எதிராக குரல் தந்த மக்களின் அவல நிலை குறித்த உண்மைகளைக் கூறுகிறது இம்மங்கா. அதே சமயத்தில் ஜப்பானின் போரினால் பேரழிவுக்குத் தள்ளப்பட்ட ஒர் சமுதாயத்தின் கதையாகவும் அது விரிகிறது.

ஜப்பானின் மன்னர் பெயரால் மக்கள் போரிற்கு ஆதரவு அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொள்ளும்படி ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். போரிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள் என போர் வெறி பிடித்தவர்களால் ஒதுக்கப்பட்டு நொருங்கிப்போக வைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறை, ஊர்க்காவலர்கள் எனும் அதிகாரங்களின் ஏவலர்களின், மக்கள் மீதான வன்முறை கலங்க வைக்கிறது.

ராணுவத்தில் பயிற்சிக்கு சேரும் இளைஞர்களின் உடல் மற்றும் உள்ளம் மீதான பயிற்சியாளர்களின் சித்திரவதை, பாடசாலைகளின் ஆசிரியர்களால் மாணவர்களிற்கு செய்யப்படும் மூளைச் சலவை,போர் பற்றிய உண்மை விபரங்களை மக்களிற்கு தராது தொடர்ந்து நடாத்தப்பட்ட பொய்ப்பிரச்சாரம் என ஒர் பேரழிவை எப்படி ஜப்பானிய ராணுவமும், அரசும் அழைப்பிதழ் வைத்து வரவழைத்து ஜப்பானிய மக்களை காவு கொண்டது என்பதை அப்பட்டமாக சொல்கிறது கதை.

ஒர் உண்மையான பிரதியைப் படித்திடும் போது ஏற்படும் நம்பமுடியாத உணர்வையும், வலியையும் தாண்டி இம்மங்காவை இவ்வளவு நேர்மையுடன் படைத்த கலைஞனை போற்றிடவே என் மனம் ஓடுகிறது. உண்மையை உரக்ககூறி ஒர் கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் அவர்.

gen9 ஆசிரியர் போர் குறித்த ஜப்பானின் நிலைப்பாட்டை கடுமையாக சாடுகிறார். அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அவர் வன்மையாக எதிர்க்கிறார். பின்னர் வரும் ஒன்பது பாகங்களிலும் ஜென்னின் வாழ்க்கை வழியாக போரின் பின் விளைவுகளையும், வளர்சியையும் விபரிக்கிறார்.

இக்கதையை எழுதி சித்திரங்களையும் வரைந்துள்ள மங்கா கலைஞர் Keiji Nakazawa ஆவார். 1939ல் ஹிரோசிமாவில் பிறந்தவர். தன் தந்தை, ஒரு சகோதரன், ஒரு சகோதரியை அணுகுண்டு வீச்சிற்கு பறிகொடுத்தவர். இவரும், இவரது தாயும் அதிர்ஷ்டவசமாக அக்குண்டு வீச்சிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் ஆவார்கள். 1965ல் டோக்கியோவிற்கு சென்று பின்பு மங்கா கலைஞராக உருவெடுத்தார். தான் கண்டு அனுபவித்த சம்பவங்களைக் கலந்து இக்கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். 1973ல் இக்கதை ஜப்பானிய மங்கா சஞ்சிகையான Weekly Shonen Jumpல் தொடராக வெளியானது.

எவ்வளவிற்கு எவ்வளவு அதிர்ச்சி தரும் சம்பவங்களை இக்கதை தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனதை நெகிழ வைக்கும் தருணங்களும் ஏராளமாக காணப்படுகிறது. Persepolis, Mauze ஆகிய சுயவரலாறு சார்ந்து படைக்கப்பட்ட உன்னதமான சித்திர நாவல்களுடன் தனக்கென ஒர் தனியிடத்தைப் பிடித்துக் கொள்கிறது இம்மங்கா. கதையில் நாகாவோகா தன் பிள்ளைகளிற்கு பல தருணங்களில் கூறுவது இதுதான் “எவ்வளவுதான் மிதிபட்டாலும் கோதுமைப் பயிர் போல் உறுதியுடன் மீண்டும் எழுந்து நில்லுங்கள்”.

மங்காவின் தரம் [******]

ஆர்வலர்களிற்கு

Barefoot Gen

ஆங்கிலப் பிரதிகள்

Thursday, July 2, 2009

காட்டில் ஒர் பியானோ

GetAttachment.aspx எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைத்தளத்தில் சமீபத்தில் தான் படித்த மிக சுவாரஸ்யமான ஐந்து வலைப் பக்கங்களை தந்துள்ளார். அவற்றில் ஒன்றாக கனவுகளின் காதலன் வலைப்பூவும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றி அறிந்த நண்பர்களிற்கு என் மகிழ்ச்சி எவ்வகையானதாகவிருக்கும் என்பதனைக் கூறத்தேவையில்லை.

நவீன தமிழ் இலக்கியம், சினிமா, நாடகம், குறும்படங்கள் என பல தளங்களில் செயற்படுபவர் அவர். தன் வசீகரிக்கும் எழுத்துக்களால் வாசகனின் அருகில் வந்து விடுபவர். சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களிற்கு ரசிகராகவும் அவர் இருக்கிறார். அவர் வலைத்தளத்தில் அவர் காமிக்ஸ் பற்றி எழுதியும் கூட இருக்கிறார். காமிக்ஸ் கதை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவரிடத்தில் இருக்கிறது.

கனவுகளின் காதலனை அவர் படித்திருக்கிறார் என்பதே போதும் என்ற போது, அதனை தன் வலைத்தளத்தில் சிறப்பான பக்கம் என பரிந்துரை செய்ததை நான் ஒர் அற்புதம் என்பேன்.

என் வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கும் என் அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கையில் காமிக்ஸுடன் எஸ்ரா அவர்கள் இருக்கும் இந்தப் படம் இளம் காளை விஸ்வா அவர்களினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வா ஒழுங்கு செய்திருந்த காமிக்ஸ் வாசகர்கள் ஒன்று கூடல் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கிறார் எஸ்ரா அவர்கள். விஸ்வாவிற்கு என் நன்றிகள்.





தன் பாட்டியின் உடல் நலம் சீர்குலைந்ததன் காரணமாக அவள் அருகில் சிறிது காலம் தங்கியிருக்க விரும்பும் தன் தாயுடன் டோக்கியோவிலிருந்து ஒர் சிறிய நகரத்திற்கு வந்து சேர்கிறான் சிறுவன் சுகே.

நகரிலிருக்கும் சிறு பள்ளியில் மாணவனாக இணைந்து கொள்ளும் சுகே, அவன் வகுப்பு மாணவர்கள் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்கையில், தான் சிறு வயதிலிருந்தே பியானோ கற்பதாக கூறுகிறான்.

புதிய வரவான சுகேயை சீண்ட விரும்பும் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள காட்டில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் பியானோவினை அவனால் இசைக்க முடியுமா எனக்கேட்டு தொந்தரவு தருகிறார்கள். அப்பியானோ யார் வாசித்தாலும் இசையைத் தருவதில்லை எனவே நீ முயன்று பார் என்று அவனைத் தூண்டுகிறார்கள்.

இவ்வேளையில் அங்கு வரும் கய் எனும் சிறுவன் சுகேயை சக மாணவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். காட்டின் மத்தியிலுள்ள பியானோவை தான் வாசிப்பதாகவும், அது நன்றாக இசையை வழங்கக் கூடிய ஒர் பியானோ என்றும் அவன் தெரிவிக்கிறான்.

பள்ளியில் அன்றைய வகுப்புகள் முடிவடைந்ததும் சுகேயை அருகிலிருக்கும் காட்டினுள் அழைத்து செல்கிறான் கய். பியானோ இருக்கும் இடத்திற்கு சுகேயை இட்டுச் செல்லும் கய், காட்டின் மத்தியில், தனிமையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஒர் பியானோவை அவனிற்கு காட்டுகிறான்.

அப் பியானோவைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே கொள்ளும் சுகே, அதனை இசைக்க விரும்புகிறான். பியானோவின் முன் அமர்ந்து தன் விரல்களால் அதனை இசைக்க முற்படுகையில் பியானோ இசைக்க மறுக்கிறது.

pianoforest01 இதனால் சற்றுக் குழப்பமுறும் கய், தான் முயன்று பார்ப்பதாகக் கூறி பியானோ முன்னமர்கிறான். அவன் விரல்கள் பியானோ மீது பட்டது தான் தாமதம், அவனை ஒர் மாயசக்தி அரவணைத்தது போன்ற ஒர் மயக்கத்தில் அப் பியானோவை அவன் வாசிக்க, பியானோவும் இனிய இசையை வழங்குகிறது. தான் கேட்கும் இசையில் மயங்கி, தன் நெஞ்சில் கைகளை வைத்துக் கொள்கிறான் சுகே.

கய் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவன், பியானோவை முறையாக கற்காதவன் என்பதை சுகே அறிந்து கொள்ளும் போது அது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. சிறுவன் கய்யை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் சுகே.

சுகேயின் தந்தை ஒர் பிரபல பியனோக் கலைஞர். சுகேயின் தந்தையைப் போலவே அவன் ஒர் நாடு போற்றும் கலைஞனாக உருவாக வேண்டுமென்பது அவன் தாயின் அவா.

கய்யை தன் பாட்டியின் வீட்டிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லி கேட்கிறான் சுகே. ஆனால் அப் பியானோவை முறைப்படி இசைக்க முடியாது கர்ணகடூரமான இசையை ஒலிக்க செய்கிறான் கய்.

கய் முறைப்படி பியானோவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறான் சுகே. பியானோ தனக்கு ஒர் விளையாட்டு, மேலும் அதனைக் கற்றுக் கொள்ளுமளவிற்கு தான் வசதி படைத்தவன் அல்ல என்று கூறும் கய், சுகே அவனிற்கு பியானோ கற்றுத் தர முன் வந்த போதும் அதனைப் பிடிவாதமாக மறுத்து விடுகிறான்.

11-2_max சிறுவர்களின் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிகிறான் அஜினோ. சுகேயின் தாய் மூலமாக அஜினோ ஒர் காலத்தில் ஜப்பானின் மிகவும் பிரபலமான ஒர் பியானோக் கலைஞனாக இருந்ததை சிறுவர்கள் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.

அஜினோவைத் தன் மகனுடன் காணச்செல்லும் சுகேயின் தாய், சுகேவிற்கு அஜினோ பியானோ கற்பித்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறாள். தான் முன்பை போல் பியானோ வாசிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறும் அஜினோ, அவள் வேண்டுகோளை மறுத்து விடுகிறான். அஜினோவிடமிருந்து விடைபெறும் முன், கய் காட்டிலுள்ள பியானோவை பிரமாதமாக வாசிக்கிறான் என்பதை அஜினோவிடம் தெரிவிக்கிறான் சுகே. அஜினோவின் புருவங்கள் உயர்கின்றன.

அஜினோவிற்கு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றினால் அவன் இடது கை முன்பு போல் இயங்க முடியாத நிலையில் அஜினோவின் பியானோக் கலைஞன் வாழ்க்கை உடைந்து போனது. அஜினோவிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியானோவைக் கூட அவன் விற்று விடுகிறான். அப் பியானோவை வாங்கிய கபாரே மூடு விழாக் கண்டதால், அந்தப் பியானோவை கபாரேக்காரர்கள் காட்டில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

பள்ளியின் அருகிலிருக்கும் காட்டின் மத்தியில் மெளனமாக அமர்ந்திருப்பது அவனுடைய பியானோ என்பதை அஜினோ அறிவான். அவன் இசைத்தாலும் அப்பியானோ இசை தருவதில்லை. இப்போது கய் அதனை வாசிக்கிறான் என்பது அவனிற்கு பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

அன்றிரவு காட்டில் தன் பியானோவை தேடிச்செல்கிறான் அஜினோ. நிலவின் குளிர் ஒளி காட்டை நனைக்க, பியானோவினை அற்புதமாக கய் இசைப்பதை அவன் கண்டு கொள்கிறான். காடு முழுவதும் அந்த இசையை மயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசை தரும் பரவசம் அஜினோவின் கண்களில் ஊற்றாக வழிய, இசையை ரசித்துக் கேட்கிறான் அஜினோ.

2995597524_3843f09e93 கய் வாசிப்பதை நிறுத்தியதும் அவனை நெருங்கும் அஜினோ, எவ்வாறு கய் இப்படி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டான் என வினவ, சிறு வயது முதலே இந்தப் பியானோவுடன் விளையாடுவது தான் தன் பொழுது போக்கு என்கிறான் கய். அஜினோ, கய்க்கு தான் பியானோ கற்றுத் தருவதாக கூறுகிறான். ஆனால் கய்யோ என்னால் பியானோ கற்க முடியாது எனக் கூறி ஓடி விடுகிறான்.

பள்ளியில் ஒரு நாள் கய்யிற்கு BEETHOVAN, MOZART, CHOPIN, MENDELSHON ஆகியோரின் இசை வடிவங்களை இசைத்துக் காட்டுகிறான் அஜினோ. கய்யிற்கு இது வரை தெரிந்திராத இப் புதிய இசை வடிவங்கள் ஆச்சர்யத்தையும் அவற்றை உடனே இசைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் உண்டாக்குகின்றன.

காட்டிலுள்ள பியானோவில் அன்றிரவு இவ்விசை வடிவங்களை இசைக்க முயல்கிறான் கய். CHOPINன் “PETIT CHIEN” எனும் இசை வடிவம் மட்டும் அவனிற்கு வரவே மாட்டேன் என்கிறது.

அஜினோவைக் காணச் செல்லும் கய், தனக்கு CHOPINன் இசையை வாசிக்க கற்றுத் தர சொல்கிறான். மிக மகிழ்ச்சியுடன் ஒர் சாதாரணப் பியானோவில் கய்க்கு பியானோ கற்றுத்தர ஆரம்பிக்கிறான் அஜினோ.

சிறிது கால பயிற்சியின் பின், நிலவு பொழியும் ஒர் இரவில், கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஜன்னல் ஊடாக வழியும் நிலவின் கதிர்களில் ஊறியவாறே மெய்மறந்து CHOPINன் இசை வடிவத்தை பியானோவில் இசைக்கிறான் கய். அவனை மெளனமாக பார்த்து ரசிக்கும் அஜினோ, அவன் CHOPINன் இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறான்.

அஜினோவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறான் சிறுவன் கய். ஜப்பானின் தேசிய பியானோப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நடைபெறும் வட்டார தெரிவுப் போட்டியில் கய் கலந்து கொள்ளல் வேண்டும் என கேட்கிறான் அஜினோ. முதலில் மறுத்தாலும் பின்பு அஜினோவிற்காக போட்டியில் பங்கு கொள்ள சம்மதம் தருகிறான் கய்.

இதே போட்டிக்காக, இரவு பகல் பாராது தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் கய்யின் அன்பு நண்பன் சுகே…..

எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இன்றி, வேறுபட்ட இரு சிறுவர்களிற்கு இடையில் மலரும் நட்பை, அவர்கள் இருவரிற்கும் பொதுவாக உள்ள பியானோவைச் சுற்றி மென்மையாகப் பின்னியிருக்கிறார்கள். இரு சிறுவர்களின் நட்பும், அவர்களிற்கிடையில் தோன்றும் ஆரோக்யமான போட்டியும், தன்னை விட மற்றவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணும் அவர்கள் மனமும் பளிங்கு.

காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மிருகங்களோ, மரங்களோ படத்தில் இல்லை. அசர அடிக்கும் சித்திரங்களும் கிடையாது, ஆனால் கதை எங்களை இசை போல் மயக்கி தன்னுடன் எடுத்துச் செல்கிறது. படத்தில் இடம் பெறும் பியானோ இசை செவிக்கும், உள்ளத்திற்கும் இதமாக அமைகிறது.

சுகே, கய்யிடம் பியானோ என்பது தனக்கு ஒர் சாபம், பியானோவால் தான் இழந்தது அதிகம் என மனம் திறக்கும் கட்டம் நெகிழ வைக்கும். கய்யை மொசர்டின் ஆவிகள் கோஷ்டி கலாய்ப்பது, இறுதிப் போட்டியில் கய் சிறுமி டாகாகோவை உற்சாகப்படுத்தும் காட்சிகள் என்பன கலகல. இறுதிப் போட்டிக் காட்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. இசை, காட்சியமைப்பு என நெகிழ வைத்து விடுகிறது முடிவு.

MAKATO ISSHIKI என்பவரின் மங்கா படைப்பாகிய “PIANO NO MORI” கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கி இருப்பவர் MASAYUKI KOJIMA. இசையமைத்திருப்பவர் KEISUKE SHINOHARA. பியானோ இசை வடிவங்களை பிரபல பியானோக் கலைஞர் VLADIMIR ASKHENAZY இசைத்திருக்கிறார்.

“உன்னை மட்டும் நான் சந்தித்திராவிடில் நான் பியானோவை வெறுத்திருப்பேன்” என்ற சுகேயின் வரிகளுடன் முடிவடைகிறது படம். மிகவும் அர்த்தமுள்ள வரிகள் இவை. பொறுமையுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

பிரெஞ்சு ட்ரெய்லர்

இசையை ரசிக்க

Friday, June 19, 2009

தேவர்களின் சிகரம்

lsd2

வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.

தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….

“BECAUSE IT’S THERE”- G.MALLORY

நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.

மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.

தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் lsd3 மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..

8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.

ஜூன் 1993 காட்மண்டு.

lsd4 ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.

அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.

அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.

தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.

சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.

சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.

மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.

மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.

lsd5 பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.

பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.

கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.

அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.

ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.

டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.

lsd6 டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.

lsd7 திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.

இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.

ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

lsd8 தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.

இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.

ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.

மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.

ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.

இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!

கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.

ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.

இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.

lsd9 lsd10 மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.

அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.

நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.

உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.

மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.

கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.

கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.

அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.

lsd12 அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.

இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.

நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.

lsd11 இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.

பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.

ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.

அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……




lsd13 ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.

மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.

இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.

ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!

மங்காவின் தரம் ******

ஆர்வலர்களிற்கு

LE SOMMET DES DIEUX

ஆங்கிலப் பதிப்பு