கிரேக்க புராணக் கதைகளில் இகாரஸ் என்பவன் தன் தந்தை உருவாக்கிய சிறகு போன்ற அமைப்புக்களை தன் முதுகின் மீது பொருத்திக் கொண்டு கிரெட்டின் அரச மாளிகையிலிருந்து தப்பி வானில் உயரப் பறக்கையில், சூரியனின் வெப்பத்தால், அந்த சிறகு போன்ற அமைப்புக்களில் இருந்த மெழுகு உருகியதால் தொடர்ந்து பறக்க முடியாது கடலில் வீழ்ந்தவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் மற்றும் ஓவியரான Moebius – ப்ளுபெர்ரி புகழ் ஜான் ஜிரோ- அவர்கள் உருவாக்கியிருக்கும் கதையின் நாயகனான இகாரோ பறக்கும் சக்தியை பிறக்கும்போதே ஒரு இயல்பாக தன்னுள் கொண்டிருக்கும் ஒருவனாக உருவாக்கப்பட்டிருக்கிறான்.
மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு பிறக்கும் ஆண் சிசுவானது காற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. இந்த தகவலை அறியும் ஜப்பானிய ராணுவ அதிகாரம் அச்சிசுவை தன் பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொள்கிறது. வெளியுலகம் என்னவென்று தெரியாது கூண்டுப் பறவை போல் வளர்க்கப்படும் இகார் எனும் அந்த குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். அவன் பறக்கும் சக்தி குறித்து எண்ணற்ற ஆய்வுகளை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பெண் ஒருத்தி மீது காதல் வயப்படுகிறான் இகார். இது அவனை சுதந்திரத்தையும், விடுதலையையும் நோக்கி பறக்கச் செய்கிறது. ராணுவக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி இகார் தன் காதலில் வெற்றி கண்டானா, சுதந்திரமாக வானில் பறந்தானா என்பதை நீண்ட கதை விபரிக்கிறது.
ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி ஆரம்பமாகும் கதை பின் தன் சுவையையும், சுவாரஸ்யத்தையும் இழக்கிறது. ஜப்பானிய அதிகாரத்திற்கு எதிராக செயற்படும் புரட்சிக் குழுக்கள், இவ்வகையான குழுக்களை அடக்குவதற்கான நிகரற்ற ஆயுதமாக உருவாக்கப்படும் இகார், Sadomaso சிருங்காரம், இரு உள்ளங்களிற்கிடையில் மெல்ல மலரும் காதல் என மிகவும் சுவாரஸ்யமாகவும், சூடாகவும் சென்றிருக்க வேண்டிய கதை, விஞ்ஞான ஆய்வுகளிலும், இகாரின் கவிதை போன்ற பறத்தல்களிலும், சலிப்பை தரும் கதை நகர்விலும் தன்னை தொலைத்து விடுகிறது.
மாபியஸ் அவர்கள் உருவாக்கிய கதை, ஜப்பானிய ஆசிரியர் குழுவால் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, புத்தகத்தின் அட்டையில் அவரின் பெயரும், ராயல்டியில் பங்கும் அவரிற்கு உண்டு என்பதால் கதை சுமாரிற்கும் கீழாக உள்ளது என்பதற்கும் அவரே பொறுப்பு ஆகிறார். ஜப்பானிய மங்கா வார சஞ்சிகை ஒன்றில் இக்கதை தொடராக வெளியான போது வாசகர்களின் ஆதரவு இத்தொடரிற்கு கிடைக்காததால் கதை முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பை நாவலில் வாசகன் உணர முடியும். விருந்து சுமார்தான் எனினும் அதனையும் பாதியில் முறித்தால் என்ன உணர்வு வருமோ அதே உணர்வு கதையின் முடிவிலும் வருகிறது. இதற்குப் போய் இவ்வளவு பெரும் கூச்சலா எனும் கேள்வி மனதில் இறக்கை கட்டி பறக்கிறது.
இந்த மங்காவிற்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல மங்கா கலைஞர் Jiro Taniguchi. அற்புதமாக வரைந்து தள்ளியிருக்கிறார். பறத்தல் காட்சிகள், சிருங்காரக் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என எதிலும் குறை வைக்கவிலை டேனிகுச்சி. சிருங்கார காட்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. மென்மையான உள்ளம் கொண்ட வாசக அன்பர்களிற்காக அப்பக்கங்களை இங்கு தரமால் விட்டிருக்கிறேன். இது என் கடமை. என்னை நீங்கள் பாராட்டக்கூடாது. ஆங்கில மொழியில் Icaro எனும் தலைப்பில் இச்சித்திர நாவல் வெளியாகி இருக்கிறது.
மிக எளிதாக வாசகர்களால் மறந்து விடப்படக்கூடிய இக்கதை புத்தக வடிவில் வெளிவரக் காரணம் ஜிரோ டேனிகுச்சி இன்று பெற்றிருக்கும் பிரபலம் ஒன்றுதான். நல்ல சித்திரங்கள் இருந்தாலும் கதை எனும் முக்கிய அம்சம் இறகை ஒடித்து விட்டதில் நாவல் சப்பென்று இருக்கிறது. கிழக்கும் மேற்கும் இணைகிறது என நடாத்தப்பட்ட விளம்பரங்களும், காமிக்ஸ் துறையின் இரு ஜாம்பவான்கள் கை கோர்க்கிறார்கள் என்ற வியப்பும் தரையில் வீழ்ந்து கிடக்கும் இகாரை பறக்க வைக்கப்போவதேயில்லை. [ * ]
இகாரைப் போலவே Ocean ம் சுமாரான ஒரு கதைதான். இன்று அமெரிக்க காமிக்ஸ் உலகின் பிரபல காதாசிரியர்களில் ஒருவரான Warren Ellis ஆல் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணங்கள் ரயில் பயணங்கள் போல் ஆகி விட்ட ஒரு எதிர்காலத்தில் இக்கதை கூறப்படுகிறது. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Chris Sprouse.
ஜூபிடர் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Europa சமுத்திரப் பரப்பால் சூழப்பட்டிருக்கிறது. இச்சமுத்திரத்தினுள் ஆய்வுகளை நிகழ்த்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அங்கு விசித்திரமான மிதக்கும் தாழிகளை கண்டுபிடிக்கிறது. தொடரும் ஆய்வுகள் தரும் முடிவுகள், ஐநா இன்ஸ்பெக்டர் நேதன் கேனை இயுரோப்பாவிற்கு இட்டுச்செல்கின்றன. பலம் பொருந்திய பல்தேசிய நிறுவனம் ஒன்றின் எதிர்ப்புக்களை முறியடித்து விசித்திரமான தாழிகளினுள் உறங்கியிருக்கும் மர்மத்தையும், அதன் மூலம் பூமிக்கு உருவாகவிருக்கும் அபாயத்தையும் நேதன் கேனும் ஐநா ஆய்வுக்குழுவினரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்கதை விபரிக்கிறது. கதையில் கூறப்படும் ஆரம்பகால விண்வெளிப் பிரயாணங்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமானவையாக உள்ளன.
வில் ஸ்மித்தை நாயகனாக கொண்டு இக்கதையை ஹாலிவூட்டில் இயக்கினால்கூட அப்படம் கதையால் அல்ல அதில் இடம்பெறும் அதிரடி ஆக்சன் மூலமே ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடும். சினிமாத்தனமான திருப்பங்களின் துணையுடன் பயணிக்கும் கதையின் இறுதிப்பகுதி விறுவிறுப்பை சிறிதளவில் வழங்கினாலும், அழிந்து போன உலகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் கலாச்சாரம், அதன் நீட்சி என புதுமையற்ற கதைதான் நாவலை ஆக்கிரமிக்கிறது. அமெரிக்க காமிஸ்களிற்கேயுரிய சித்திரப்பாணியில் சித்திரங்கள் கதைக்கு துணையாக நிற்கின்றன. இக்கதையை வாசகர்கள் படிக்காது போனால் உலகம் ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை. [ * ]
Ray Bradbury என்றால் அறிவியல் புனைகதை ஆர்வலர்களிற்கு Fahrenheit 451 எனும் தலைப்பு நினைவுகளில் தீப்பிடிக்கும். நாவலாசிரியர் ரே ப்ராட்பரியின் ஒத்துழைப்புடன் அந்த நாவலை சித்திர நாவலாக மாற்றியிருக்கிறார் Tim Hamilton. இந்த வேள்வித்தீயின் விளைவு அற்புதமான ஒரு சித்திர நாவலாக மலர்ந்திருக்கிறது.
புத்தகங்கள் படித்தலும், சிந்திப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகிவிட்ட எதிர்காலம். வீடுகள், கட்டிடங்கள் தீப்பிடிக்க இயலாதவைகளாக உருவாக்கப்படுகின்றன. எனவே தீயணைப்பு வீரர்கள் புத்தகங்களை கொளுத்துகிறார்கள். புத்தகங்களை வைத்திருப்பவர்களை, படிப்பவர்களை கைது செய்கிறார்கள். இந்த தீயணைப்பு படை!! வீரர்களில் ஒருவனே Guy Montag.
தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் ஒரு அமைதியான மாலை வேளையில் வினோதமான இளம் பெண்னான Clarisse McClellan ஐ சந்திக்கிறான் கய் மொண்டாக். கிளாரிசுடன் தொடரும் அவன் சந்திப்புக்கள் அவனை தன் வாழ்க்கை குறித்த கேள்விகளை உருவாக்க வைக்கின்றன. கேள்விகள் அவனை புத்தகங்களை நாட வைக்கின்றன. புத்தகங்கள் அவனை அதிகாரத்திற்கு எதிரானான ஒருவனாக மாற்றியமைக்கின்றன…
என்ன ஒரு கதை! என்னே ஒரு சித்திர நாவல்! இகாரினால் சோர்ந்து போயிருந்த என்னை உற்சாகமூட்டி எழுப்பியது டிம் ஹாமில்டனின் இந்த அற்புதமான படைப்பு. அசர வைக்கும் ஹாமில்டனின் ஒவியப்பாணி கதைக்கு மென்மேலும் இருளை சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரகாசமான பக்கம் என்பது தீயானது புத்தகங்களை கபளீகரம் செய்யும் தருணத்தின்போதே காணக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. ஒளி நிறைந்த ஒரு எதிர்காலம் எனும் கனவை தன் சித்திரங்களில் கலந்திருக்கும் இருள்தன்மையால் இல்லாத ஒன்றாக்கி திகிலடிக்கிறார் டிம் ஹாமில்டன்.
ஹாமில்டன், தற்காலத்திற்கேற்ப மூலக்கதையில் சிறிது மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்புகிறேன் [ நான் நாவலைப் படிக்கவில்லை]. நாவலில் முன் வைக்கப்பட்டிருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த பார்வைகள் ஆச்சர்யப்பட வைப்பவை. இச்சித்திர நாவலை படித்து முடித்தவுடன், தான் படிக்கும் புத்தகங்கள் மோசமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தீயிலிட்டுக் கொளுத்தி மகிழும் என் நண்பரிற்கு நான் ஒரு மடலை அனுப்பினேன். உங்கள் அகத்தில் ரே ப்ராட்பரியின் கற்பனைகளின் ஒரு கூறு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என!
எதிர்காலம் குறித்த ஒரு அச்சமான தரிசனத்தை வாசகன் மனதில் தீ போல் பரவச்செய்து கனவுகளினதும், கற்பனைகளினதும், எதார்த்தங்களினதும் அரூப வெளிகளில் அவன் முன்வைக்ககூடிய எண்ணற்ற புதிர் வினாக்களை விருட்சமொன்றின் உதிரும் இலைகள்போல் அவன் மனவெளியில் நிரப்புகிறது கதை. எதிர்வரும் நாட்களில் புத்தகங்களை எரிக்க தீயணைப்பு படை தேவையில்லை மக்களே விரும்பி புத்தகங்களை விட்டு விலகி வந்துவிடுவார்கள் எனக்கூறப்படும் கருத்து அதிரவைப்பது. மிகையான கேளிக்கை கொண்டாட்டங்களாக இருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் காட்சி ஊடகங்களும் மனிதர்களை சிந்திக்கவிடாதும், கேள்விகளை எழுப்ப விடாதும் செய்துவிடுகின்றன எனும் பார்வை அன்றே முன்வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. சித்திர நாவலின் கதை சொல்லலிலும், உரையாடல்களிலும் டிம் ஹாமில்டன் பின்னி எடுத்திருக்கிறார். திகில்தன்மையை இறுதிப்பக்கம் வரை அவர் சிறப்பாக எடுத்து செல்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் இச்சித்திர நாவல் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. மழை அடித்து பெய்யும் தருணம் ஒன்றில் கிளாரிசை சந்திப்பான் மொண்டாக், கிளாரிஸ் உளவியல் மருத்துவரைக் காணச் சென்று கொண்டிருப்பாள், மழையின் துளிகள் தனக்கு திராட்சை மதுவைப்போல சுவை தருகின்றன நீ எப்போதேனும் மழைத்துளிகளை சுவைக்க முயன்று பார்த்திருக்கிறாயா என வினவும் கிளாரிஸை கடிந்து கொள்ளும் மொண்டாக், அவள் தன்னை விட்டு விலகியபின் மழையினூடு நடந்து செல்வான், சித்திரப்பக்கத்தை க்ளிக்கி அத்தருணத்தை ரசியுங்கள்.
[ **** ]
