Saturday, March 28, 2015

இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்

வாழ்க்கையின் ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் Jaume Collet - Serra  இயக்கியிருக்கும் Run All Night திரைப்படம்.

ஷான் எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக  சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.

நட்பும், விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு வேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.

சில உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.

6 comments:

  1. திரைப்பட விமர்சனமா?? ஆகா.. ஆகா.. அருமை காதலரே .. ஆங்கிலப் படங்களை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு என்னிடம் ஆங்கிலப் புலமையோ,ரசனையோ கிடையாது என்றாலும் அருமையான பதிவிற்கு நன்றி.. இது தமிழில் வந்தால் மட்டுமே என்னால் ரசிக்க முடியும்.(அடியேன் ஸ்டீல்க்ளா பாரம்பர்யம் அல்லவா)

    இப்போதைக்கு உங்கள் விமர்சனம் மூலமே எனக்கு இதை அனுபவிக்க முடிகிறது . நன்றி.

    ReplyDelete
  2. இந்த படம் தமிழகம் வர நாளாகும் போல...சின்ன பேனர் படங்கள் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வருவதில்லை..! Liom Neeson படங்கள் எல்லாம் அமைதியாக ஆரவாரம் இன்றி ரசிகர்கள் மனதை கவர்கின்றன.
    நெட்டில் கூட நல்ல பிரிண்ட் வரவில்லை,taken திரும்ப பார்க்கவேண்டிதுதான்..!

    ReplyDelete
  3. Hello dear, great tips you shared.
    Thanks for sharing it.
    Do you need high quality followers & likes for instagram than visit - Buy Instagram Followers Paytm - Paypal

    ReplyDelete