காட்டின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது ஒர் லின்க்ஸ் பூனை. நிறைக் கர்ப்பமாக இருக்கும் அப்பூனையின் வயிற்றினுள் இரு குட்டிகள் காட்டிற்கு வருகை தர ஆயத்தமான நிலையில் உள்ளன. குட்டிகளை ஈனுவதற்காக பாதுகாப்பான ஒர் மறைவிடத்தை தேடிக் கொண்டிருகிறது அத் தாய்ப் பூனை. ஆனால் அதன் கண்களில் தெரிகிறது அகோரமான பசி.
கடந்த வருடம் பனிக்காலத்தில் உருவான ஒர் நோயால் லின்க்ஸ் பூனைகளின் வழமையான உணவான அமெரிக்க முயல்கள் இனம் அழிந்து போயின.
அளவிற்கதிகமாகவிருந்த பனி வீச்சாலும், கடும் குளிராலும் தரையின் குளிர் நிலை உயர்ந்து விட, கானாங் கோழிகளில் பெரும்பாலானவை இல்லாது போயின.
இலை துளிர் காலத்தின் போது பெய்த அடை மழை வேறு நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி விட, மீன்களும் தவளைகளும் லின்க்ஸின் பாதங்களிற்கு எட்டாத தூரத்தில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.
லின்க்ஸ் பூனை பசிக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அது தன் குட்டிகளை ஈனும் முன் பட்டினியால் இறந்து விடும் நிலை. இருப்பினும் அப்பூனை தனக்கு கிடைத்த ஆமை முட்டைகளையும், சிறிய இறால்களையும் உண்டு தன் உயிரை தக்க வைத்துக் கொண்டது. பின் ஒர் நாள் காட்டில் வீழ்ந்து கிடந்த பிரம்மாண்டமான மரமொன்றின் கோறையான நடுப் பகுதியில் தன் குட்டிகளை பாதுகாப்பாக ஈனுவதற்கான ஒர் மறைவிடத்தை கண்டு கொண்டது.
1875- ஒண்டாரியோ, கனடா- இலை துளிர் காலம்
ERNEST THOMPSON SETON, வயது 15. படகில் பிரயாணத்தை முடித்துக் கொண்டு, பென்லொன் நீர் வீழ்சி தரிப்பில் தன்னை அழைத்து செல்ல வரும் டாமிற்காக காத்திருக்கிறான். சில நிமிடங்களின் பின் அங்கு குதிரை வண்டியில் வந்து சேரும் டாம், செட்டொனை மகிழ்சியுடன் வரவேற்று, அவனைத் தன் பண்ணைக்கு அழைத்து செல்கிறான். பென்லொன் பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே மனிதர்கள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். நாகரீகத்தின் எல்லைகளிலிருந்து தொலைவில் இருக்கும் காட்டுப் பிரதேசம். இங்கு குடியேறும் மனிதர்கள் காட்டுப் பகுதிகளை அழித்து பண்ணை அமைப்பு, விலங்கு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
டாமின் பண்ணைக்கு செல்லும் பாதையில் கலை மான்கள் கூட்டமொன்றைக் கண்டு வியக்கிறான் செட்டொன். தான் ஏற்கனவே கரடிகளையும், லின்க்ஸ்குகளையும் இங்கு கண்டிருப்பதாகவும், எனவே செட்டொன் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறான் டாம். 7 கிலோ மீற்றர் தூரத்தை வண்டியில் கடந்த பின் அவர்கள் டாமின் பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள்.
செட்டொனை அங்கு வரவேற்கும் டாமின் சகோதரிகளான ஜேனும், கேட்டும் அவர்களிற்கு உணவு பரிமாற ஆரம்பிக்கிறார்கள். உணவு உண்டவாறே உரையாடல் தொடர்கிறது. தன்னுடன் ஒர் துப்பாக்கியை எடுத்து வந்திருப்பதாக கூறுகிறான் செட்டொன். இதனைக் கேட்டு மகிழும் டாம், தன் வேலைச் சுமையால் தான் வேட்டைக்கு செல்வது அரிதாகவே என்று கூறுகிறான். செட்டொன் வேட்டையாடச் சென்றால் இறைச்சி உணவாகக் கிடைக்கும் என்று உவகை கொள்கிறார்கள் டாமின் சகோதரிகள். ஆனால் தான் இது வரை வேட்டை மிருகங்களை குறி பார்த்து சுட்டதில்லை என்கிறான் செட்டொன்.
இதே காலப் பகுதியில் லிங்ஸ் பூனையானது அழகான இரு குட்டிகளை மரத்தின் மறைவிடத்திற்குள் ஈன்றெடுக்கிறது. தன் குட்டிகளை தன் நாவால் நக்கி அன்பு சொரியும் அதன் பசி இன்னமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.குட்டிகளின் பராமரிப்பு பூனையின் இரை தேடல் நேரத்தைக் குறைக்கவே செய்தது. அதன் இரை தேடலின் போது கிடைக்கும் சிறிய அணில் போன்ற விலங்குகள் அதன் பசியை தீர்ப்பதாக இல்லை. பசி தீராது போனால் குட்டிகளிற்கு எவ்வாறு பால் தருவது. குட்டிகள் பசியால் ஒலி எழுப்புகின்றன.இவ்வாறு தானும் தன் குட்டிகளும் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் லின்க்ஸின் பாதையில் விதி குறுக்கிட வைக்கப் போவது, வேறு யாரையுமல்ல இளைஞன் செட்டொனைத்தான்.
பண்ணை வாழ்வு மிக அமைதியாகவே நகர்ந்தது. தினந்தோறும் செட்டொன் வனத்தினுள் உலாவுவதற்கு செல்வான். ஆனால் இது வரை அவன் எப் பிராணிகளையுமே வேட்டையாட முடிந்ததில்லை. செட்டொன் துப்பாக்கியைத் தன் தோளில் வைத்து குறி பார்க்கும் போதெல்லாம் பறவைகள் அதனை உணர்ந்து கொண்டது போல பறந்து சென்றன. செட்டொன் வெறுங் கையாக பண்ணைக்கு திரும்புவான்.
லின்க்ஸ் பூனை, தவளை, பாம்பு, முள்ளம் பன்றி என தான் உணவாக கொள்ளக்கூடிய எதனையும் விட்டு வைக்காது வேட்டையாட முயன்றது. ஆனால் முள்ளம் பன்றி மட்டும் லின்க்ஸின் பாதங்களில் தன் முட்களை பதித்து விட்டு தப்பி சென்றது. முள்ளம் பன்றியின் வாடையும், அப் பிராணி தரக்கூடிய அபாயமும் லின்க்ஸ்க்கு தெரிந்தே இருந்தது. ஆனால் பசி, என்ன செய்வது.
இவ்வாறாக ஒர் நாள் லின்க்ஸ் இரை தேடலிற்காக வனத்தின் எல்லையைக் கடந்து டாமின் பண்ணைக்கருகே வந்து சேர்ந்தது. அது முன்பு வந்திராத இடம், அதன் மூக்கு, அது இது வரை அறிந்திராத புதிய வாடையை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.
பண்ணையை நோக்கி அவதானமாக முன் நகர்ந்த லின்க்ஸின் கண்களில் அங்கு உலவிக் கொண்டிருந்த கோழிகள் கண்ணில் பட்டன. அதன் மிருக உணர்வு இங்கு நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது. உணவுடன் கூடிய அபாயமும் அங்கு இருக்கும் என்று அது சற்று அவதானமாக கோழிகளை நோக்கி, மரக் கட்டைகளின் பின் பதுங்கி , உடலை தரையில் தேய்த்தவாறே நகர்ந்தது.
கோழிகளின் கொக்கரிப்பு சத்தம் அவைகள் கிளப்பும் எச்சரிக்கை கத்தலாக இருக்குமோ எனச் சற்று தயங்கிய லிங்ஸ், நிதானித்தது. சூழ் நிலையில் எம் மாற்றங்களும் இல்லை என்பதை உணரும் லின்க்ஸ், கொக்கரிப்பு, எச்சரிக்கைக் கத்தல் அல்ல என தெரிந்து கொள்கிறது. மீண்டும் கோழிகளை நோக்கி நகரும் லின்க்ஸ், ஒர் அசுரப் பாய்ச்சலில் கோழிகள் மீது பாய்ந்து, ஒர் கோழியை வாயில் கவ்விக்கொண்டு தான் வந்தபாதையிலேயே திரும்பி வேகமாக ஓடுகிறது.
காட்டினுள் வழமை போன்று உலவச் சென்ற செட்டொன், இயற்கை அழகை ரசித்த படி, பிராணிகள் எழுப்பும் ஒலி வாயிலாக அவற்றை இனங் கான முயல்கிறான். திடீரென ஒர் அடர்ந்த புதர்ப் பகுதியில் இருந்து தன்னை நோக்கி ஒர் ஒலி அண்மிப்பதை அறியும் அவன் திகைத்து நிற்கிறான். புதர்களை விலக்கி கொண்டு தன் வேகமான ஒட்டத்தில் செட்டொன் முன் வந்து நிற்கிறது லின்க்ஸ்.
செட்டொன், முகத்தில் அதிர்ச்சி, மனதில் பயம். செட்டொனைத் தன் பாதையின் குறுக்கே இடையூறாக கண்டு விட்ட லின்க்ஸ், வாயில் கவ்வியிருந்த கோழியை கீழே போட்டு விட்டு, செட்டோனை நோக்கி சீற ஆரம்பிக்கிறது. லின்க்ஸின் வாயில் இருந்தது பண்ணையிலிருந்த கோழி என்பதை தெரிந்து கொள்ளும் செட்டொனிற்கு, பயத்தையும் மீறி ஆத்திரம் பொங்குகிறது, ஆனால் அன்று அவன் கைகளில் துப்பாக்கி இல்லையே. மிருகமும், மனிதனும் கண்களில் பார்த்துக் கொள்கிறார்கள். அக் கண்கள் மொழி பேசியிருக்கக் கூடுமா? தன் கண்களை செட்டொனின் கண்களில் இருந்து நகர்த்தாது, தன் தலையை சற்றுக் கீழிறக்கி, கோழியை வாயில் கவ்வும் லின்க்ஸ், செட்டொனிற்கு எதிர் திசையில் ஓடி மறைகிறது.
தன் குட்டிகள் இருக்குமிடம் வரும் வரையில் லின்க்ஸ் ஒட்டத்தை நிறுத்தவேயில்லை. கோழியின் ரத்தத்தின் சுவை, அதன் பசியைக் கூட்டிய போதிலும் அது கோழியை ஒர் கடி கூடக் கடிக்கவில்லை. தன் தங்குமிடத்தை அடையும் அத் தாய்ப் பூனை, தன் குட்டிகளை ஒலி எழுப்பி அழைக்கிறது, தான் பிடித்த கோழியை தன் குட்டிகள் முன்பாக போடுகிறது. தன் குட்டிகளை தன் முகத்தால் கொஞ்சி விளையாடும் லின்க்ஸ் பின் தன் குட்டிகளுடன் சேர்ந்து கோழியை உண்டு பசியாற ஆரம்பிக்கிறது.
அன்று மாலை பண்ணையில் அனைவரும் லின்க்ஸ் பற்றியே பேசிக் கொள்கின்றனர். இரை கிடைக்காமையாலேயே லின்க்ஸ் பண்ணை வரை வந்திருக்க கூடும் என்கிறான் டாம். கோழிக் களவாணி லின்க்ஸை மறு முறை தான் கண்டால் அதன் கதையை தீர்த்து விடுவதாகக் கூறுகிறான் செட்டொன்.
சம்பவத்தின் பின், நாட்கள் பல, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி கழிந்தன. செட்டொன் வழமை போல் காட்டினுள் உலவச் செல்கிறான். காட்டின் புதிய பகுதிகளிற்கு உலவச் செல்ல ஆரம்பிக்கும் செட்டொன் ஒரு நாள் கலை மான் தடமொன்றினைக் காண்கிறான். மானை அருகில் இருந்து பார்க்க விரும்பும் அவன், தடங்களை தொடர்ந்து செல்கிறான். ஒர் சிறிய பள்ளத்தாக்கை கடந்த பின் வரும் ஒர் புல் தரையில் கலைமானும் ஒர் குட்டியும் நிற்பதைக் காணும் அவன் மகிழ்ச்சி அடைகிறான். மெதுவாக மான்களை நோக்கி செட்டொன் முன்னேறிய போது, அவனைக் கண்டு விடும் மான்கள் ஒடி விடுகின்றன. மான்களைப் பார்த்த பரவசத்தில் காட்டினுள் உற்சாகமாக முன்னேறுகிறான் செட்டொன்.
கோழி வேட்டையின் பின்பு லின்க்ஸிற்கு திருப்திகரமான இரைகள் எதுவும் அகப்படவில்லை, மறுபடியும் அந்த பெரிய கூட்டிற்கு செல்லலாமா என அது தனக்குள் கேட்டுக் கொண்டது. இவ்வாறாக அது இரை தேடி நடந்து வருகையில், மேய்ந்து கொண்டிருக்கும் கலை மானையும், அதன் குட்டியையும் கண்டு விடுகிறது. அருகில் இருக்கும் புதர்களின் பின்னே பதுங்குகிறது லின்க்ஸ். மான் குட்டி தாயை விட்டு விலகி வரும் தருணத்தை பாத்திருக்கும் லின்க்ஸ், அத் தருணம் கிடைத்த போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மான் குட்டியை தன் பாதத்தால் அடித்து விழுத்தி, அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறது.
காட்டினுள் நடந்து செல்லும் செட்டொன் தரையில் வீழ்ந்து கிடக்கும் ஒர் மரத்தின் அருகில் வரும் போது பூனைகளின் கத்தலைக் கேட்டு விடுகிறான். மரத்தினை அண்மிக்கும் அவன் அதன் கோறையான உட் பகுதியில் இரண்டு லின்க்ஸ் குட்டிகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். தன் துப்பாக்கியால் அக் குட்டிகளை குறி பார்க்கிறான். துப்பாக்கி ஒன்று தங்களை குறி பார்க்கிறது என்பது அறியாமல் குட்டிகள் எக் கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அக்குட்டிகளை சுடுவதற்கு செட்டொனின் மனம் இடம் தரவில்லை.
அவன் தயங்கி நின்ற அத் தருணத்தில் புதர்களை கிழித்துக் கொண்டு வாயில் மான் குட்டியுடன் செட்டொன் முன்பாக பாயும் லின்க்ஸ், மானை கீழே வீசி விட்டு சீறியவாறே செட்டொன் மேல் பாயத் தயாராக, செட்டொன் துப்பாக்கி விசையை அழுத்துகிறான், அவன் குறி தவறுகிறது, துப்பாக்கி ஓசையால் மிரண்டு போன லின்க்ஸ் மான் குட்டியை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு ஓட, அதன் பின் தொடர்ந்து ஓடுகின்றன அதன் குட்டிகள்.
பண்ணைக்கு திரும்பும் செட்டொன் நடந்தவற்றை டாம் குடும்பத்தினரிடம் விபரிக்கிறான். இரவு உறங்கப் போகும் முன்பாக தன் நாட் குறிப்பில் சம்பவங்களை எழுதிக் கொள்கிறான்.
சில நாட்களின் பின் டாம் நோய்வாய்ப் படுகிறான். காட்டில் காணப்படும் மருத்துவ மூலிகைக் கசாயங்கள் தந்து சிகிச்சைகள் அளித்தும் அவன் காய்ச்சல் குணமாகாததால், குதிரை வண்டில் மூலம் தன் தாய் வீட்டிற்கு சிகிச்சைக்காக செல்கிறான் டாம்.
இதனைத் தொடர்ந்து டாமின் சகோதரிகளும், செட்டொனும் பண்னை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரும் சில நாட்களில் கேட்டும், ஜேனும் காய்ச்சல் உண்டாகி படுக்கையில் வீழ்கிறார்கள். காடு தன் இன்னொரு முகத்தை செட்டொனிற்கு காட்டுவதற்கு தயாராகியது.
லின்க்ஸிற்கும் அதன் குட்டிகளிற்கும் மான் குட்டி ஒரு வாரத்திற்கு பசியை தீர்த்து வைத்தது. பின் குட்டிகள் பசியால் கத்த ஆரம்பிக்கின்றன. காட்டினுள் இரை தேடி அலையும் லின்க்ஸ் இரை ஏதும் கிடைக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கிச் செல்கிறது.
சுகவீனமான நிலையிலிருக்கும் கேட்டையையும், ஜேனையும் பராமரிக்கிறான் செட்டொன். அவனே தனி ஆளாக செயற்பட வேண்டிய கட்டம். ஒர் நாள் அவன் கேட்டிற்கு மூலிகைக் கசாயம் அருந்த தந்து கொண்டிருக்கும் வேளையில், கோழிகளின் கொக்கரிப்பு பலமாகவே, தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தன் வாயில் ஒர் கோழியைக் கவ்விய படியே ஒடிக் கொண்டிருக்கும் லின்க்ஸைக் காணும் அவன் தன் துப்பாக்கியால் அதனை சுடுகிறான், ஆனால் லின்க்ஸ் காட்டிற்குள் ஓடி விடுகிறது.
பண்ணையில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் கோழிகள் அனைத்தையும் கோழிக் கூட்டிற்குள் அடைத்து விடுகிறான் செட்டொன். இத்தருனத்தில் அவன் உடல் நடுங்க ஆரம்பிக்கிறது, மற்றவர்களை தாக்கிய காய்ச்சல் அவனையும் தன் அணைப்பில் எடுத்துக் கொண்டது. உடல் பலவீனமாக இருந்தாலும், ஆற்றில் சென்று தண்ணி அள்ளுவதை தொடர்கிறான் செட்டொன், இரவில் காய்சல் அவர்களைப் படுத்தும் போது உருவாகும் தாகத்தை தீர்க்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். மூலிகைக் கசாயங்கள் நோயின் வலிமையை தணிப்பதாக இல்லை, தாயின் வீடு சென்ற டாம் திரும்பவில்லை. பண்ணையில் இருக்கும் உணவுப் பொருட்களின் அளவு குறைகிறது.
கோழி ருசி கண்ட லின்க்ஸ் வேறு இரைகள் சிக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கி வருகிறது. வழமையாக அங்கு உலவும் கோழிகளைக் காணாது ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அதன் மோப்ப சக்தி கோழிகள் அங்கு எங்கோ இருப்பதை அதற்கு உணர்த்தி விடுகிறது. இருள் வரட்டும் எனக் காத்திருக்கும் லின்க்ஸ், நன்றாக இருண்ட பின் பண்ணையை நோக்கி நகர்கிறது. கோழிக் கூட்டிற்கு பதிலாக மனிதர்கள் தங்கும் வீட்டிற்குள் மண்ணைக் கிளறி உட் புகும் லின்க்ஸ், மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக செட்டொன் பாதுகாப்பாக வைத்திருந்த பன்றி வற்றலை எடுத்துக் கொண்டு காட்டினுள் ஓடி விடுகிறது.
காலையில் எழும் செட்டொன் பன்றி வற்றல் காணமல் போனதை எண்ணி திகைக்கிறான். இது லின்க்ஸின் வேலையாகத்தான் இருக்கும் என தீர்மானிக்கிறான். உணவிற்காக வளர்க்கும் கோழிகளை கொல்ல வேண்டிய நிலைக்கு பண்ணையில் உள்ளவர்கள் தள்ளப்படுகிறார்கள். கோழிக் கூட்டிற்கு செல்லும் செட்டொன் கோழியை ஒடிப் பிடிக்க உடலில் வலிமை இல்லாததால் தன் துப்பாக்கியால் சுட்டுக் கோழியைக் கொல்கிறான். கூட்டின் கதவைத் திறந்த போது வெளியே ஓடி விட்ட கோழிகளை மீண்டும் கூடு சேர்க்க அவனிடம் வலிமை இல்லை. எனவே கோழிகளை வெளியில் உலவித் திரிய விட்டு விடுகிறான்.
மனிதர்கள் பலவீனமாகி விட்ட நிலையில், கோழிகளை லின்க்ஸ் மட்டுமன்றி காட்டுக் கீரி, நரி போன்றவையும் வேட்டையாடுகின்றன. கோழிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் செட்டொனின் மனதில் லின்க்ஸ் மீதான ஆத்திரம் அதிகரிக்கிறது. ஒர் நாள் இரவு காய்ச்சலின் மயக்கத்தில் விழிக்கும் செட்டொன், தன் படுக்கையில் அருகில் உள்ள தண்ணி வாளியில் லின்க்ஸ் நீர் அருந்திக் கொண்டிருப்பதைக் காண்கிறான், செட்டொன் விழித்ததைக் கண்ட பூனை தப்பி ஒடி விடுகிறது. மறு நாள் காலை தான் கண்டது கனவா என எண்ணும் செட்டொன், கோழி சூப்பிலிருந்து கோழி மாமிசம் மறைந்து விட்டதைக் காண்கிறான். லின்க்ஸ் வீட்டினுள் நுழைய தோண்டிய துளையை சிறு மரக்கட்டைகளால் மூடுகிறான். கோழிகள் யாவையும் பூனை வேட்டையாடி தீர்க்கிறது. மரக் கட்டைகளை விலக்கி வீட்டினுள் நுழைந்து கோழி சூப்பிலிருந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு ஓடி தன் குட்டிகளிற்கு உண்ணத் தருகிறது. கோழிகளும் தீர்ந்து விட்டன, வேறு உணவுகளும் இல்லை, டாம் சென்று 3 வாரங்கள் ஓடி விட்டன. நோய் அவர்களை விடுவதாக இல்லை. செட்டொனும், டாமின் சகோதரிகளும் காட்டு பெரிகளையும், நீரையும் மட்டும் உணவாக உட் கொண்டு உயிர் வாழும் வேதனையான நிலை உருவாகிறது.
செட்டொன் தனது துப்பாக்கியின் தோட்டாக்கள் யாவும் தீர்ந்து போனதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஒர் குத்துக் கோலை உருவாக்கி கொள்கிறான். காட்டில் பசியெடுத்த லின்க்ஸ் உள்ளுணர்வால் உந்தப்பட்டு பண்ணையை நோக்கி நடக்கிறது.
இரவு தூக்கம் கலைந்து எழும் ஜேன், தன் கட்டிலின் அருகில் லின்க்ஸ் நீர் அருந்துவதைக் கண்டு விடுகிறாள். பயத்தில் செட்டொனை கூப்பிடும் அவளின் குரலால் செட்டொனின் தூக்கம் கலைகிறது. செட்டொன் குத்துக் கோலையும், மெழுகுதிரி விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் மறைந்து விட்ட பூனையை தேட ஆரம்பிக்கிறான். இருளில் தீக்கங்குள் போல் பிரகாசிக்கும் காட்டுப் பூனையின் கண்களை கண்டு விடும் செட்டொன் அம் மூலையை அனுக அவன் தோளின் மீதாக சீறிப் பாய்ந்து ஒர் மேஜையின் மேல் இறங்குகிறது லின்க்ஸ்.
தன் கையிலிருந்த விளக்கையும், குத்துக் கோலையும் முன் நீட்டி லின்க்ஸிற்கு பயம் காட்ட முனைகிறான் செட்டோன், உக்கிரமாகும் பூனை செட்டொன் மேல் பாய்கிறது, அதிர்ச்சியால் செட்டொன் கீழே விழ, அவனைக் கடந்து விழும் பூனை கட்டிலின் அடியில் மறைந்து கொள்கிறது.
கட்டிலின் அடியினுள் தன் கோலால் குத்துகிறான் செட்டோன், பதிலுக்கு சீறிப்பாயும் பூனை செட்டொனைக் காயப்படுத்துகிறது, வன்மம் தலைக்கேறும் செட்டொன், பூனையின் நகங்களின் கீறல், மரத்திலான தரையில் ஏற்படுத்திய தடம் பார்த்து கட்டிலை நோக்கி தன் குத்துக் கோலை இறக்குகிறான். ரத்தம் தெறிக்கிறது. ஆக்ரோஷமாக வெளியேறும் பூனை, செட்டொனின் கோலை கடித்து, தன் பாதத்தால் அடித்து முறிக்கிறது. பலமிழந்து செட்டோன் தரையில் விழ வீட்டை விட்டு ஓடுகிறது லின்க்ஸ்.
இதன் பின் டாம் பண்ணைக்கு திரும்புகிறான். அவன் கொண்டு வந்திருந்த மருந்துகள், அவன் சகோதரிகளையும், செட்டொனையும் குணப்படுத்துகின்றன. புதிய கோழிகளையும், ஒர் நாய்க் குட்டியையும் வாங்குகிறான் டாம். பண்ணை வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புகிறது. லின்க்ஸ் மறுபடியும் பண்ணைப் பக்கம் தென்படவில்லை. ஒரு மாத காலத்தின் பின் சலவை வாளி தயாரிக்க மரமொன்றை காட்டினுள் தேடிச் செல்கிறார்கள் டாமும், செட்டோனும்.
முன்பு லின்க்ஸ் குட்டிகளை செட்டொன் பார்த்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மரத்தடிக்கு வந்து சேர்கிறார்கள் இருவரும். பிரம்மாண்டமான அம் மரம் தன் தேவைக்கு போதுமானது எனக் கூறுகிறான் டாம். இருவரும் சேர்ந்து மரத்தை அறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒர் துண்டம் அறுத்து எடுத்ததும் மறு துண்டத்தை அறுக்கப் போகும் டாம் கண்களில் கோறையான மரத்தின் உள்ளே ஏதோ இருப்பது தெரிகிறது. மரத்தினைக் கோடாரியால் கொத்தி ஒர் சிறிய பகுதியை திறக்கிறான் டாம். திறந்த அப் பகுதி வழி உள் நுழையும் சூரியக் கதிர்கள் அணைப்பில் இறந்து கிடக்கின்றது தாய் லின்க்ஸ், அதனுடன் அதன் முலைகளை கவ்வியபடி காய்ந்து போய் இறந்து கிடக்கின்றன அதன் குட்டிகள். செட்டொனின் குத்துக்கோலின் உடைந்த நுனி , லின்க்ஸின் உடலில் இன்னும் குத்திக் கொண்டே நிற்கிறது… திறந்திருக்கும் லின்க்ஸின் உயிரற்ற விழிகள் செட்டொனின் மனதில் என்றும் விழித்துக் கொண்டேயிருக்கும்.
ஒர் காட்டில், தனதும், தன் குட்டிகளினதும் பசி தணிக்க இரை தேடும் ஒர் லின்க்ஸிற்கும், அக் காட்டில் விடுமுறையைக் கழிக்க வந்த இளைஞனிற்குமிடையிலான போராட்டத்தை இயல்பாக சித்தரிக்கிறது கதை.
எர்னஸ்ட் தாம்ப்சன் ஸெட்டொன் என்ற இயற்கை ஆர்வலனின் வாழ்வின் ஒர் சிறிய பகுதியே கதையாக விபரிக்கப் படுகிறது. பிரதான கதையுடன், இணைந்து செட்டொனிற்கு இயற்கையிலும், உயிரிகள் மேலும் ஆர்வம் ஏற்படக் காரணமான வில்லியம் புரொடி என்பவரின் அறிமுகம் வாசகர்களிற்கு தரப் படுகிறது. செட்டொன் முக்கியமான நிகழ்வுகளையும், உயிரிகள் பற்றிய குறிப்புகளையும் நாட் குறிப்புகளாக எழுத வேண்டுமென அறிவுரை வழங்கியவர் புரொடி எனக் காட்டப் படுகிறது.
சுகவீனமான நிலையில் இருக்கும் கேட்டிற்கு, செட்டொன் கூறும் கதையில், செட்டொனின் தந்தை மிகவும் கண்டிப்பானவராக சித்தரிக்கப் படுகிறார். காட்டில் அலைதல் ஒர் கனவானிற்குரிய செயல் அல்ல என்ற கொள்கையுடையவர் அவர். தந்தையின் கொடுமை தாளாது செட்டொன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
தன் வீட்டிற்கருகில் இருந்த ஒர் காட்டில், தனக்காக ஒர் குடிலை மிகவும் சிரமப் பட்டு செட்டொன் உருவாக்குவதும், வீட்டை விட்டு வெளியேறிய ஒர் சமயம் இக் குடிலுக்கு தங்க வரும் செட்டொன் அதில் குடிகாரக் கும்பல் ஒன்று குடியேறிவிட்டதை காண்பதும், பின் அக் குடிகாரக் கும்பல் அவன் குடிலை சிதைத்து செல்வதையும் நெகிழ்வாக கூறியிருக்கிறார்கள்.
காட்டு உயிரிகள் பற்றிய விபரங்கள் எளிய முறையில் கூறப் படுகின்றன. கரடியை இது வரை கண்டிராத செட்டொன், கனேடிய முள்ளம் பன்றியை கரடி என நினைத்து ஒதுங்கல் போன்ற மென் நகைச் சுவையும் உண்டு.
இயற்கை ஆர்வலன் செட்டொன் எனும் இம் மங்காத் தொடரில் இது இரண்டாவது கதையாகும். பிரென்ச்சு மொழியில் இது வரை நான்கு கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
செட்டொன் எழுதிய நூல்களிலிருந்து மிருதுவான இக் கதையை அமைத்திருப்பவர் YOSHIHARU IMAIZUMI. மிகவும் இயல்பாக கதையை தந்திருக்கிறார் ஆசிரியர். கதையின் ஒர் தருணத்தில் பசி என்பது மனிதர்க்கும் சரி மிருகத்திற்கும் சரி பொதுவானதே, உயிர்வாழ்தலின் போராட்டமும் பொதுவானதே என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறார். லின்க்ஸின் மரணம் செட்டொனின் வாழ்வில் ஒர் முக்கிய திருப்பம் எனவும், பின் அவர் இயற்கையில் எவ்வாறு மனிதன் காட்டு விலங்குகளுடன் இசைவாக வாழலாம் என்பதை பற்றி உலகிற்கு தெரிவிக்க காரணமாய் அமைந்தது எனவும் குறிப்பிடுகிறார் [WOODCRAFT]
நல்ல மங்கா கதைகளில் சித்திரங்கள் கதையுடன் கை கோர்த்துப் பயணிக்கும். இக்கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் JIRO TANIGUCHI எனும் மங்கா கலைஞர். சிறப்பான விருதுகள் வென்றவர். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர். காட்டின் வனப்பை மிக அழகாக வரைந்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் சூரியக் கதிர்களையும், அதன் பரவலையும், காட்டில் வாழும் உயிரிகளையும் மிக இயல்பாக சித்தரித்திருக்கிறார். பூனையின் உக்கிரமான மோதல் காட்சியையும் சிறப்பாக தந்திருக்கிறார். ஜான் ஜிரொட்டுடன் [MOEBIUS] இணைந்து ICARE எனும் கதையில் பணியாற்றியிருக்கிறார்.
காட்டுடன் இசைவாக வாழ விரும்புவன் காட்டில் வாழ வேண்டும் என்கிறார் செட்டொன். உண்மையே. சென்று விடலாமா?!
நண்பர்களே இப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆல்பத்தின் தரம் *****
ஆர்வலர்களிற்கு