Thursday, December 27, 2012

புல்வெளி முள்வேலி

bsp1கவ் கல்ச் எனும் நகரிற்கு அண்மித்த நிலத்தை அரசிடமிருந்து வாங்கும் வெரோன் பெல்ஃப்ஸ் அந்நிலத்தில் விவசாயம் செய்யும் விருப்பத்துடன் அங்கு தன் இல்லத்தை நிர்மாணிக்கிறான். ஆனால் அவன் விவசாய நிலமானது கவ் கல்ச்சின் கால்நடை கிங் என அழைக்கப்படும் காஸ் கேஸியின் மந்தைகள் பயணிக்கும் இடத்தில் அமைந்து விடுகிறது……

பிரெய்ரியின் பரந்த புல்நிலங்களிற்கு ஏகபோக உரித்தாளர்களாக கால்நடை வளர்ப்பாளர்கள் தம்மைக் கருதி வந்தார்கள். எல்லைகள் மறைந்த அப்புல்வெளியின் உபயோகத்தின் முன்னுரிமையின் ஜமீன்தார்களாக அவர்கள் தம்மை வரித்துக் கொண்டார்கள். கால்நடை வணிகம் வழி அவர்கள் அடைந்த செல்வம் அப்பகுதிகளில் அவர்களை அதிகாரமும், பலமும் கொண்டவர்களாக மாற்றியடித்தது. அவர்கள் வளர்த்த கால்நடைகளும் மிகவும் சுதந்திரமாக நடைபோட்டு அசைபோட்டு புல்வெளியில் காற்றாட காலாற நடந்து தம் இவ்வுலக வாழ்வில் இன்புற்றிருந்தன என்றால் அது மிகையல்ல. பிரெய்ரி புல்லின் செழுமை கால்நடைகளின் உடலில் தெரிந்தது. புல்வெளியின் மென்மை கால்நடைகள் போட்ட சாணத்தில் வீழ்ந்து பிரெய்ரியில் காதலுடன் கலந்தது. பிரெய்ரியினூடாக தம் வாழ்வின் இலட்சியப் பயணங்களை ஓயாது நிகழ்த்துபவைகளாக கால்நடைகள் இருந்தன. இந்த இலட்சியப் பயணங்களில் கால்நடைகளின் நலத்திற்கு கேடு வராத வண்ணம் காத்திடும் பொறுப்பை கவ்பாய்கள் என அழைக்கப்படும் முரட்டு ரவுடிகள் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறான தடையில்லா சுகவாழ்வு நீடித்திருக்க வாழ்க்கை அல்லது விதி அனுமதிப்பது இல்லை. முதல் இரவின் பின்பாக வெளிவரும் உண்மைகள் போல இன்பத்தின் பின்பாக அசெளகர்யங்களை மனிதர்கள் எதிர்கொள்ள பழகிட வேண்டி இருக்கிறது. கவ் கல்ச்சிற்கு விவசாயி வெரோன் பெல்ஃப்ஸ் குடியேறும் தருணத்தில் அவனிற்கும் சரி கால்நடை கிங் காஸ் கேஸிக்கும் சரி அசெளகர்யம் மார்கழிமாதக் கோலம் போல் அவர்கள் வாசலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.

கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே கதாசிரியர் கொஸ்ஸினியின் நகைச்சுவை கலந்த கதைசொல்லல் படிப்பவர்களை மேனிதொட்டும் உணரமுடியா சிறுகாற்றாக சிரிப்பூட்டக் கிளம்பி விடுகிறது. விவசாயிகள், கவ்பாய்களை விட காந்தர்வ ரூபம் கம்மியானவர்கள் என கொஸ்ஸினி எழுத அதற்கு மாரிஸ் வரையும் சித்திரங்களே போதும் கதையில் வாசகன் எதிர்பார்க்கும் நகைச்சுவையை அவனிடம் வாழையிலையில் பன்னீர் தெளித்து பரிமாறிட. கவ்பாய்கள் அருந்தும் காப்பி செய்முறை விளக்கம் மிக சிறப்பான அங்கதம். காப்பியை தயாரித்தபின்பாக அதனுள் ஒரு குதிரை லாடம் போடப்பட வேண்டும். லாடம் காப்பியில் மிதக்காவிடில் காப்பி பக்குவம் போதவில்லை என அர்த்தம். கவ்பாய்கள் அருந்தும் காப்பியின் தடிப்பு குறித்த இந்த அங்கத தகவலே இக்கதையை படிப்பவர்களிற்கு கிடைக்கும் பசும்புல்வண்ண சமிக்ஞையாக அமைந்து விடுகிறது.

bsp2வெரோன், கவ் கல்ச்சில் நிலத்தை வாங்கியது அவன் குற்றமல்ல. அவன் விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகள் அணிவகுப்பு நடாத்தியவாறே தம் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டது கால்நடைகளின் தப்புமல்ல. விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகளை ஓட்டிச்சென்றது கவ்பாய்களின் தவறுமல்ல; வெரோன் அதை எதிர்த்துக் கேள்விகளைக் கேட்கும்வரை. அவன் எதிர்த்துக் கேள்விகள் கேட்கும் நபர் கால்நடை கிங் காஸ் காஸியாக இருந்துவிடுவதுதான் ஒரே ஒரு குற்றம். கொஸினினியின் வரிகள் “அவன் மாமிசத்தை நினைத்தான், அவன் மாமிசத்தை புசித்தான், அவன் மாமிசமலையாக இருந்தான்” என காஸ் கேஸியைக் கதையில் வர்ணிக்கிறது. மதுவிடுதியில் காஸ் கேஸியை சந்திக்க வரும் வெரோன் நிற்கும் நிலையை காட்டும் கட்டமே இரு மனிதர்களும் குறித்த ஒரு முழுமையான பார்வையை இங்கு தந்துவிடுகிறது. காஸ் கேஸி போன்றவர்களிடமிருந்து பேசுவதன் மூலம் நியாயத்தை யாரும் பெற்றுவிட முடியாது அல்லவா. ஆகவே வன்முறை மதுவிடுதியில் துளி கொள்ளும்போது நாயகன் லக்கி லூக் கதையில் பிரசன்னமாகிறார்.

bsp3சாதாரண விவசாயியான வெரோனிற்கும், அதிகாரமும், செல்வமும் படைத்த கால்நடைவளர்ப்பாளனான காஸ் கேஸிக்கும் இடையில் உருவாகும் சிக்கல் கவ் கல்ச்சின் பிரச்சினையாக உருவெடுக்கிறது. விவசாயிகளா இல்லை கால்நடைவளர்ப்பளார்களா எனும் கேள்வியுடன் இரு பகுதியினர்கிடையேயான யுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. இந்த யுத்தத்தின் மிகமுக்கிய காரணியாக அமைவது முட்கம்பி வேலியாகும். எந்த தடைகளும் அற்று வானத்துப் புள்ளினங்கள் போல வாழ்ந்திருந்த தம் கால்நடைகள் முள்வேலியால் பாதுகாக்கப்படும் விவசாயநிலங்களை விலத்தி செல்லுவது என்பது காஸ் கேஸி போன்ற கால்நடைவளர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியா ஒரு செயலாகும். முள்வேலி என்பது கவ்பாய்களிற்கு மிகப்பெரிய அவமானம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவ் கல்ச்சிலிருந்து விவசாயிகளை விரட்டி அடிக்க சகல வழிகளையும் கையாள்வது என காஸ் கேஸி முடிவிற்கு வருகிறான். காஸ் கேஸியின் அராஜக செயல்களிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அவர்களிற்கு உதவ முன்வருகிறார் லக்கி லூக். கால்நடை வளர்ப்பாளர்கள், அவர்களின் அடியாட்களான கவ்பாய்கள், நிகழ்த்திடும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் விவசாயிகள் எவ்வாறாக சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை சிறப்பான நகைச்சுவையுடன் கதை விறுவிறுப்பாக விபரித்து செல்கிறது.

bsp4கால்நடை வளர்ப்பாளர்கள் எந்நேரமும் விடுதியில் உட்கார்ந்து சுருட்டைப் புகைத்தவாறே விடுதிச் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருக்க விவசாயி தன் மனைவியின் பக்குவத்தில் சுவையான உணவுகளை சுவைத்து மகிழும், இல்லம் இனிய இல்லம் எனும் தத்துவத்தை மிக அழகாக கொஸ்ஸினியும், மொரிஸும் காட்டியிருக்கிறார்கள். இல்லத்திற்கு அழகு சேர்ப்பவள் இல்லத்தரசி எனும் கருத்தை வெரொனின் மனைவியான ஆனபெல் காட்சிப்படுத்திக் கொண்டே இருப்பார். தனது இல்லம் தரைமட்டமாகிய பின் கண்களில் கண்ணீருடன் ஜன்னல் திரைச்சீலைக்கு லக்கி லூக் வாங்கிவர வேண்டிய துணியின் வண்ணத்தை அவர் சொல்லும் விதத்தில் உங்கள் மனைவிமார் உங்கள் கண்களின் பின்னே தோன்றி மறைவார்கள். கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகை செய்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை இது. சகல பிரதான பாத்திரங்களிற்கும் சமவுரிமை பாத்திரப்பிரசன்னத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது எனலாம். காஸ் கேஸியின் அடியாட்கள் டால்டன்கள் போல உருவாக்கப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன் ஆனால் இது என் பார்வை மட்டுமே. இந்த அடியாட்களில் ஒருவரின் பெயர் டெக்ஸ். கண்டிப்பாக இது நவஹோ சிங்கம் டெக்ஸை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாக இராது என நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் கொஸ்ஸினி வாழும் பேராத்துமா உலகை நோக்கி என் பாராட்டை திசைப்படுத்திவிடுகிறேன். லக்கி லூக் கதைகளில் வெண்தாடி வைத்த ஒரு கிழம் வந்து செமையான லொள்ளுப் பண்ணிக் கொண்டிருக்கும். வாசகர்களை இக்கதையில் அவ்வகையான ஒரு கிழம் தன் லொள்ளுகளால் குஷிப்படுத்த தவறவில்லை. லக்கிலூக்கிற்கும் ஜொலி ஜம்பரிற்கும் இடையே வரும் சம்பாஷனைகள் இயல்பாகவே சிரிப்பை வரவழைப்பவையாக இருக்கின்றன. கதையினூடே சைவ, அசைவ உணவு வேறுபாடு பற்றிய மெலிதான பார்வையும் உண்டு என்பது என் கருத்து.

உண்மையில் முள்வேலியின் வருகை கவ்பாய்கள் எனும் இனத்தின் அழிவின் காரணியாக அமைந்தது என நான் படித்திருக்கிறேன். குதிரைகளில் ஏறி கவ்பாய்கள் சுற்றி சுற்றி வந்து செய்த காரியத்தை, மரக்குற்றிளை சுற்றி சுற்றி தழுவி நீண்ட முட்கம்பி வேலி செய்து முடித்து விடுகிறது. முள்வேலிகளிற்குள் இட்டு வரப்பட்ட கால்நடைப் பரமாரிப்பிற்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை, வேலியற்ற கால்நடைகளின் பராமரிப்பிற்கான ஆட்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருந்தது. கதையில் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தமது உரிமைகளிற்காக போராட கவ்பாய்கள் தமது வாழ்க்கை குறித்த அக்கறை அற்றவர்களாக இருப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் கொஸ்ஸினியேகூட அது குறித்து சிந்திக்காது விட்டிருக்கலாம். போயும் போயும் இது ஒரு நகைச்சுவைக் கதைதானே இதில் போய் என்ன தீவிரமான சங்கதி என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கதையின் ஒரு தருணத்தில் முள்வேலிகளால் தம் நிலத்தை பாதுகாக்கும் விவசாயிகள், “ஒரு வழியாக விடுதலை” என்பார்கள். கால்நடைகள் மற்றும் கவ்பாய்கள் தொல்லையிலிருந்து. அதே முள்வேலி பின்பு சரித்திரத்தில் மனிதர்களை அடைத்து நின்று அவர்களை விலங்குகளை விட மோசமான இனமாக மனிதர்களே நடாத்தியதையும் வேடிக்கை பார்த்து நின்றது என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. மிக நீண்ட காலத்தின் பின்பாக படித்தாலும் ஏமாற்றாத நகைச்சுவை கொண்ட கதையாக அமைந்து விடுகிறது Des Barbelés sur la Prairie.

Saturday, November 17, 2012

ஹுஆல்பை தீர்க்கதரிசி

வதனமோ சந்த்ர பிம்பமோ – 6

ஷெலர் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைதியாக வாழ்ந்திருந்த Hualpai இந்தியர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். காலனல் க்ளிஃப்டனால் இத்தகவல் கிடைக்கப்பெறும் டெக்ஸ் தன் குழுவினருடன் ஷெலர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்…..

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான பூர்வகுடிகளின் எழுச்சிகள், போராட்டங்கள் அவர்களிற்கு வெற்றிகளையும் தந்தன ஆனால் அந்த வெற்றிகளின் வாழ்நாளானது அவர்கள் தம் வாழ்நாள் நெடுகிலும் சந்தித்த தோல்விகளிற்கு ஈடாகவேயில்லை. தம் உரித்து நிலத்தில் வாழும் விலங்குகளிற்கு இருந்த வாழ்க்கையின் சுதந்திரம்கூட அவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் இழந்து வாழ்ந்திருந்த அம்மக்களின் மனச்செவிகளில் நம்பிக்கை ஒளியை விருட்சமாக உயிர்க்க செய்யும் வார்த்தைகள் விதைகளாக விழுந்தால் அவ்வார்தைகளையும், அவ்வார்த்தைகளை கூறுபவர்களையும் அவர்கள் தம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன. கையறு நிலையிலிருக்கும் மனிதர்கள் தாம் கரம்பற்றக்கூடிய ஒரு நம்பிக்கையை உதறிவிடுவார்களா என்ன.

தனக்கு வந்த தகவலையடுத்து ஷெலர் கோட்டையை நோக்கி விரையும் டெக்ஸ்கூட சாதாரண ஒரு ஆக்கிரமிப்பாளர் போலவே இங்கு சிந்திக்கிறார். தமக்கு நிகழக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து சிறிதும் அஞ்சாது ஹுஆல்பை இந்தியர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கான காரணம் என்ன எனும் கேள்வியை அவர் எழுப்புகிறார். இங்கு “நிகழக்கூடிய விளைவுகள்” என்பது ஒடுக்குமுறையின் பாசக்கார தோழனான வன்முறையிலான பதிலடி என்பது தெளிவான ஒன்று. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் கிளர்ச்சிக்காரர்கள் குறித்து எழுப்பிடும் ஒரு கேள்வியாகக்கூட இது இருக்கலாம். டெக்ஸ் தான் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஷெலர் கோட்டையில் அறிந்து கொள்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஹூஆல்பைகளின் வன்முறைக்கு சான்றான ஒரு நிகழ்வின் முடிவையும், அவர்களின் வன்முறையையும் அவர் நேராகவே காணவும் அனுபவிக்கவும் செய்கிறார். அந்தக் கணம் முதல் கொண்டே ஹூஆல்பை நாய்களிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் மனதிலும் அவர் குழுவினர் மனதிலும் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆன்மா கூத்தாட ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கூத்திற்கு உடந்தையாக டைகர் ஜாக், கூத்தை உலகின் அல்லது வாசகன் கண்களின் முன் நியாயப்படுத்த பயன்படும் பாத்திரமாக.

அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்திருந்தவர்கள். இயற்கை தமக்கு வழங்கிய ஆதார வளங்களையும் அவர்கள் மிகவும் மதிக்கவே செய்தார்கள். இயற்கையின் சொற்களிற்கு காது கொடுப்பது அவர்களிற்கு வழக்கமாக இருந்தது. செவ்விந்தியக்குடிகளில் மனிதர்க்குரிய உலகிற்கு அப்பால் உள்ள உலகுகளுடன் தரிசனங்கள் வழியாக தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றல் கிடைக்கப் பெற்றவர்கள் அக்குடிகளின் மருத்துவர்களாக இருந்தார்கள். வெகுஜன இலக்கியங்களில் இவர்கள் சூன்யக்காரர்கள் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவர்கள் கனவுகள் வழியாகவும், தியானங்கள் வழியாகவும் உருவாகக்கூடிய ஒரு மோனநிலையில் அவர்கள் கொள்ளும் தரிசனங்களை நிஜவுலகிற்கான சம்பவங்களாக மொழிபெயர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் மோனங்களில் இழையெடுக்கும் காட்சிகளை மருத்துவர்கள் பேராத்மாக்கள் தமக்கு வழங்கிய கட்டளையாகவோ அல்லது செய்தியாகவோ உணர்ந்தார்கள். இந்தப் பேராத்மாக்கள் விலங்குகளின் உருக்களை பெற்றிருப்பதையும் அவர்கள் தரிசித்தார்கள். பேராத்மாக்கள் தமக்கு உணர்த்தியவற்றைக் கொண்டு தம் இனமக்களிற்கு ஆலோசனைகளையும், குணமாக்கல்களையும், வழிநடத்தல்களிற்கான உதவிகளையும் மருத்துவர்கள் நல்கினார்கள். வரவிருக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து எதிர்கூறினார்கள். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்ட பூர்வகுடிகளும் அவர்கள் எதிர்கூறல்களை நம்பினார்கள். அவர் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயற்படவும் செய்தார்கள். மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த ஹூஆல்பைகளின் காதுகளில் அவர்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை ஒரு எதிர்கூறி உரைத்தால், அவன் எதிர்கூறியவைகளில் ஒன்று அவர்கள் கண்களிற்கு முன்பாக நிஜமானால், தம் இனத்தை ஆக்கிரமிப்பவர்களிற்கு எதிராக அந்த எதிர்கூறியை தம் தலைமையாக கொண்டு அவர்கள் போராடா மாட்டார்களா என்ன!

ph1ஆனால் பூர்வகுடிகள் மத்தியில் தரிசன வாக்குகள் தந்த அனுபவத்திற்கும் மேலாக எதார்த்தம் வழங்கிய அனுபவம் கண்டவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறைகளின் கோரவுருக்களை தம் கண்முன் கண்டுணர்ந்து அகம் நனைந்து வந்தவர்கள் அவர்கள். தம் அனுபவங்கள் வாயிலாக தாம் கண்ட உண்மைகளை அவர்கள் ஒரு எதிர்கூறியின் தரிசனத்திற்கு எதிராக தம் மக்களிடம் எடுத்துக்கூறும்போது, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும், எம் நிலமும், வாழ்வும் முன்போல் வளம் கொள்ள வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் வார்த்தைகளே அவர்களிற்கு எதிரிகளாகி விடுகின்றன, அம்மக்கள் பார்வையில் அவர்களை துரோகிகளாக்கி விடுகின்றன. அவ்வகையான ஒரு முதியவரைத்தான் ஷெலர் கோட்டையில் சந்திக்கிறார் டெக்ஸ்.

கதையில் டெக்ஸ் அவரை முதிய சூன்யக்காரன் எனச் செல்லமாக விழிக்கிறார். பூர்வகுடி மருத்துவர்களின் செயல்முறைகள் சடங்குகளால் கட்டப்பட்டது. மந்திர உச்சாடனங்கள், பாடல்கள், நடனம், பலியிடல், மோனம், பேராத்மாக்களுடன் தொடர்பு எனக் கலவையாக அவை அமைந்திருந்தன. இயற்கை தந்த மருந்துகளால் மட்டுமன்றி பேராத்மாக்களின் உதவியாலும் அவர்கள் தம் குடிகளின் பிணிகளை நீக்க முயன்றார்கள். இயற்கையை தெய்வமாக ஏற்க மறுத்த கிறித்தவ மரபில் ஊறிவந்த ஆக்கிரமிப்பாளர்கள் மனதில் இந்த மருத்துவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது அவர்களிற்கு சூன்யக்காரர்கள் எனும் நாமத்தையும் எளிதாக பெற்றுத் தந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும். தமக்கு எதிராக துர் ஆத்மாக்களை ஏவிவிடக் கூடியவர்களாக கருதப்பட்ட மருத்துவர்களிற்கு அவர்களால் வேறு பெயரை வழங்க முடியாதது அவர்கள் தப்பாக இருக்க முடியாதுதான்.

ஷெலர் கோட்டையில் டெக்ஸுடன் தனியே உரையாடும் முதிய சூன்யக்காரன், ஹூஆல்பைகளின் கலகத்திற்கான காரணம் என்ன என்பதையும் இன்னம் பத்து நாட்களிற்குள் நிகழப்போகும் ஒரு முக்கியமான சந்திப்பு குறித்தும் அவரிடம் கூறுகிறான். ஹூஆல்பைகளின் எழுச்சிக்கும், ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான அவர்களின் படைதிரட்டலிற்கும் காரணம் யார் என்பதை TEX Special 21 கதையான Le Prophète Hualpai ன் முதல் பக்கமே வாசகர்களிற்கு தரிசனமாக்கிவிடும். Hualapai சிகரங்கள் புடைசூழ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பூர்வகுடி இளைஞன் பேராத்மா ஒன்றுடன் கொள்ளும் மோனத்தரிசனமே கதையின் ஆரம்ப பக்கங்களை அலங்கரிப்பவையாக இருக்கின்றன. அந்த தரிசனத்தில்  பேராத்மா அவனிற்கு வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் ஒருவனாகவே Manitary ஐ என்னால் இக்கதையில் காணமுடிகிறது.

மானிட்டாரி ஒரு அனாதை. அவன் என்றுமே வீரனாகவோ, பராக்கிரமியாகவோ இருந்தவனல்ல. அவன் ஒரு தனியன். தியானங்களில் ஆழ்ந்து துறவிபோல வாழ்ந்தவன். கதையின் ஒரு சந்தர்பத்தில் Wovaka என்பவருடன் மானிட்டாரியை டெக்ஸ் ஒப்பிட்டு பேசுவார். டெக்ஸ் இங்கு பேசுவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனம் என்பது கண்டதையும் கனாக்கண்டு உளறி வைப்பது என்பதாக இருக்கும். இது டெக்ஸின் பாத்திரப் படைப்பில் ஒரு முரணாக எனக்கு தோன்றியது. டெக்ஸின் ஏதாவது ஒரு கதையிலாவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனத்தை கேட்டு அவர் சிந்தித்ததே இல்லையா என்ன. இதே கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி எழுதிய இருளில் வரும் நிழலியே இவ்வகையான கனவு தரிசனம் ஒன்றிற்கு டெக்ஸ் காது கொடுப்பதை நான் படித்திருக்கிறேன். மானிட்டாரி பாத்திரத்தை உருவாக்க கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி, வோவாகாவினை ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். வோவாகா கிரகணம் ஒன்றின் போது கூறிய எதிர்கூறல்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை இக்கதையில் மானிட்டாரிக்கு அணிவித்து இருக்கிறார் கதாசிரியர். ஆனால் வோவாகா அமைதியைப் போதித்தவர், பூர்வகுடிகளின் பழம்பெருமையும், வளமும், நிலமும் அவர்களை மீண்டும் வந்து சேரும்,ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மரணித்த பூர்வகுடி வீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என அவர் எதிர்கூறினார். இவற்றை விரைவாக அடைவதற்கான வழியாக அவர் Ghost Dance ஐ உருவாக்கினார். கதையில் மானிட்டாரி அமைதியை போதிப்பதிலிருந்து வோவாகாவிடமிருந்து விலகிவிடுகிறான். அவன்கூறிய எதிர்கூறல் ஒன்று இயற்கை நிகழ்வாக விடிந்தபின் அவன்பின்பாக பூர்வகுடி போராளிகளும், மக்களும் அணிவகுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான ஒரு பெரும்படையை தன் வன்முறை வழிகளால் திரட்ட ஆரம்பிக்கிறான் மானிட்டாரி.

ஹூஆல்பை கலகத் தலைவனான மானிட்டாரி குறித்தும் அவன் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் டெக்ஸ், பத்து நாட்களிற்குள் மானிட்டாரியை ஆட்டத்திலிருந்து தூக்கி விடுவது எனும் முடிவிற்கு வருகிறார். தலைமையிழந்த போராட்டம் தள்ளாடி தளர்ந்து தடங்கலுற்று தடமிழக்கும் என்பது டெக்ஸின் கணிப்பு. ஆகவே டைகர் ஜாக்கும், டெக்ஸும் ஹூஆலாபை மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்திருக்கும் மானிட்டாரியை தேடி அப்பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள். கிட்டும், கார்சனும் ஹூஆல்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கிய சந்திப்பை தடுப்பதற்காக  கிங்மேன் எனும் இடத்தை நோக்கி விரைகிறார்கள். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை தொடரும் சித்திரப்பக்கங்கள் வாசகர்களிடம் எடுத்தியம்புகின்றன.

அமெரிக்க பூர்வகுடிகள் மீது டெக்ஸ் வன்சொற்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு கதையை நான் படிப்பது இது முதல் தடவை. ஹூஆல்பைகள் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணம் அவர்கள் நாய்கள் என்பதாகவே இருக்கிறது. அப்படியாகத்தான் என்னால் உணர முடிந்தது. செவ்விந்தியர்களை எதிர்நாயகர்களாக கொண்ட ஒரு சாகசக் கதையில் அவர்களை நாய்களாக அழைப்பதிலும், நடத்துவதிலும் என்ன தப்பை நான் கண்டுவிட்டேன் என்பதுதான் நானே என்னிடம் கேட்கும் கேள்வி. இருப்பினும் டெக்ஸ் மீது இக்கதை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒன்றானதாக இல்லை என்பதை நான் தயங்காமல் கூறுவேன். டெக்ஸ் நவஹோக்களின் தலைவராகவும், நவஹோக்கள் ஹூஆல்பைகளின் ஜென்ம விரோதிகளாக இருந்தாலும்கூட ஹூஆல்பைகள் குறித்த டெக்ஸின் இந்த ஆவேசமான மதிப்பீடு எனக்கு சங்கடத்தையே தந்தது.

ph2டெக்ஸின் கதைகளில் தோன்றும் எதிர் நாயகர்கள் வீர்யமற்றவர்களாக இருப்பின் அக்கதையானது எம் மனதில் பெரிதாக உருவாகும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து விடாமலேயே நகர்ந்து முடியும் தருணங்கள் உண்டு. இக்கதையின் எதிர்நாயகனான மானிட்டாரி பலவீனமான ஒருவனாகவே இறுதிவரை முன்னிறுத்தப்படுகிறான். டெக்ஸ் தன் வார்த்தைகளால் அடித்து வீழ்த்திய எதிர்நாயகனாகத்தான் மானிட்டாரியை என்னால் காண முடிகிறது. கதையில் அவன் பலம் என்பது அவன் பின்னால் திரண்ட பூர்வகுடிப் போராளிகள்தான். அப்போராளிகளிற்கும் டெக்ஸ் குழுவினர்க்குமிடையில் நிகழும் சந்திப்புக்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை தந்தாலும் கதையின் போக்கில் அவையே சலிப்பை தருபவையாக இருக்கின்றன. இவ்வகையான ஊடுருவல் வகை கதைகளிற்குரிய எதிர்பாரா திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இக்கதையில் அதிகம் இல்லை என்பதும் சலிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது. வேதாளர் அல்லது டார்ஜான் போடும் சண்டைபோல வரும் காட்சியும் டெக்ஸின் பெருமையை உயர்த்துவதாக இங்கு அமையவில்லை. ஒட்டு மொத்த ஹூஆல்பைகளையும் இரண்டாம்தர அறிவிற்கு தள்ளிவிடாது சமமான வல்லவர்களாக கதாசிரியர் படைத்திருப்பாரேயெனில் கதை பற்றி எரிந்து வாசகனை உவகைத்தகனம் செய்திருக்ககூடும். ஆனால் டெக்ஸின் சுமாரான கதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்தக்கூடிய வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. கார்சனின் அலம்பல்கள் ஒரு ஆறுதல் இருப்பினும் ஹூஆல்பைகளின் ரத்தம் நிலத்தில் தெறிக்க வேண்டும் எனக்கூறுவதில் கார்சன் டெக்ஸிற்கு போட்டியானவராகவே தோன்றுகிறார்.

ஆனால் சுமாரான கதைகளையும் விழிகள் அகன்று விரிய, கட்டங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து உள்ளெடுக்கும் வண்ணம் மாற்றியடிக்கும் மந்திரம் அறிந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். இக்கதையின் சித்திரக் கலைஞரான Corrado Mastantuono அரிதான அவ்வகைக் கலைஞர்களில் ஒருவர் என்பது இக்கதைக்கு கிடைத்த அதிர்ஷ்டநிகழ்வு. அவரை இக்கதையில் பணியாற்ற அமர்த்திய செர்ஜ் பொனெலிக்கு ஒரு பெருநன்றியை பேராத்மாக்களின் உலகை நோக்கி இத்தருணம் நான் அனுப்பி வைக்கிறேன். ஹூஆலாபை சிகரங்களுடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம் முதல் கொலராடா ஆற்றுடன் நிறைவுறும் இறுதிப்பக்கம் வரையில் வாசகன் சிலாகித்துக் கொண்டிருக்கும் வகையிலான சித்திரங்களை செதுக்கி பொருத்தி இருக்கிறார் இத்தாலிய சித்திரக் கலைஞர் கொராடோ மஸ்டாண்ட்யுவோனோ. அவரின் சித்திரங்கள் தீர்க்கமான, தெளிவான கோடுகளால் உருவானவை. மிடுக்கான உணர்வை வாசகனிடம் அவை இலகுவாக உணரச் செய்பவை. ஒரு காட்சியை வித்தியாசமான கோணங்களில் வரைவதில் மஸ்டாண்ட்யுவோனோ பக்கா கில்லாடி, அவர் சித்திரங்களின் சிறப்பம்சமும் அதுதான். கதையில் ஷெலர் கோட்டையில் முதிய சூன்யக்காரனுடன் டெக்ஸ் உரையாடும் தருணத்தில் அவர் வரைந்திருக்கும் சித்திரங்கள் இதற்கு அருமையான ஒரு உதாரணமாக அமைகின்றன.ஹூஆலாபை மலைப்பிரதேச நிலவியலை அவர் வரைந்து தந்திருக்குமழகு சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல அவர் நிழல்களை சித்திரங்களில் உலவவிடுவதன் வழி கதைநிகழும் சூழலின் ஒளிப்பிரசன்னத்தையும் அது தரக்கூடிய உணர்வுகளையும் வாசகர்களிடம் சிறப்பாக எடுத்து வருவதையும், கறுப்பு, வெள்ளை சித்திரங்களின் அழகை அந்த உத்தி வழி அவர் பூரணமாக்க விழைவதையும் ஒருவர் எளிதாக அவதானிக்க முடியும். கதையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளிற்கு மஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்களும், கோணங்களும் வேகத்தையும், விறுவிறுப்பையும், உயிர்த்துடிப்பையும் வழங்கி அவற்றை வெகுவாக ரசிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இக்கதை சுமாரான ஒன்றாக இருந்தாலும் அது சுமாரான ஒன்று எனும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு தயங்கிட காரணமாக அமைவது மாஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்கள் மட்டுமே. அவரின் சித்திரங்களை பார்த்து ரசிப்பதற்காகவேனும் படிக்க வேண்டிய டெக்ஸ் கதை இது என்பது நான் காணும் மோனத்தரிசனமாக இருக்கட்டும்.

Sunday, November 11, 2012

நாயகர் இல்லா நாடகம்

1977 ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 34 பயணிகளுடன் பயணித்த கோர் ஏர் விமானம் அமேசான் அடர் வனப்பகுதியில் விழுந்து சிதைகிறது. இவ்விபத்தில் உயிர் தப்பிய மனிதர்கள் அவ்வனத்திலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் எனும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார்கள்.....

விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிர்பிழைத்த மனிதர்கள், எந்த உதவிகளும் தம்மைக் காப்பாற்ற வராத நிலையில் தம் ரட்சணியத்தை தம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளும் கதைகள் உங்களிற்கு புதிதான ஒன்றாக இருக்காது. பல சிரமங்கள் மத்தியில் போராடி தம் வாழ்விடங்களிற்கு செல்லத் துடிக்கும் குழுவினர் கண்டு கொள்ளும் அனுபவங்கள் அவர்கள் கதையை சுவாரஸ்யமான ஒன்றாக்க மாற்றியமைக்க பெரிதும் உதவிடும். இன்றைய நாட்களில் இவ்வகையான கதைக்களம் புதிதான ஒன்றாக இல்லை என்றபோதிலும் இக்கதை வெளியான 1977 களில் இது சிறப்பான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கியில் இது குறித்து தேடியபோது அக்காலகட்டத்தில் இன்னம் பிரபலமாகியிராத கலைஞனாக இருந்த வான் ஹாமிற்கு இக்கதையை எழுத ஆதர்சமாக 1965களில் வெளியாகிய The Flight of the Phoenix எனும் திரைப்படம் அமைந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸின் பறப்பு, சகாரா பாலையில் அவசரநிலை தரையிறங்குதலை நிகழ்த்திய விமானமொன்றின் பயணிகளின் நிலை குறித்து பேசும் படமாகும்.

Histoire sans Heros எனும் வான் ஹாமின் கதையானது மனிதர்கள் அதிகம் காலடி எடுத்து வைத்திராத ஒரு வனத்தில் விழுந்த விமானத்திலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் கதையை விபரிக்க விழைகிறது. இவ்வகையான கதைகளில் மனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகையில் அதற்கென ஒரு தலைமை இருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. இக்கதையில் வான் ஹாம் அதனை தவிர்க்க முயன்றிருக்கிறார் இருப்பினும் அவரைத் தாண்டியும் கதையானது தருணத்திற்கு தருணம் நாயக பிம்பங்களை முன்வைக்கவே செய்கிறது எனலாம்.

வெளியுலகுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களிற்கு மட்டுமே போதுமான உணவு கையிருப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார். சமூகத்தில் பலவிதமான ஸ்தானங்களை வகிக்கும் மனிதர்கள் அவற்றை தற்காலிகமாக இழந்தநிலையில் தம் உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் வகிக்கும் ஸ்தானங்கள் அவர்களின் மறுபக்கங்களை இயல்பாக வெளிக்கொணர்வதை அவர் விறுவிறுப்புடன் சொல்ல முயல்கிறார். இவ்வகையான மனிதர்கள் மத்தியில் எழக்கூடிய கருத்து மோதல்கள், அகங்கார ஆளுமையால் உருவாகும் பிரிவுகள், அச்சம், கோழைத்தனம், வீரம், தியாகம், காதல் எனக் கதையானது மனிதர்களின் சூழ்நிலை உணர்வுகளோடு நகர்கிறது.

ஒரு பிரிவினரின் முடிவுகளோடு ஒன்றுபடா மனிதன் ஒருவனின் போராட்டத்தின் தோல்வியும், அப்பிரிவினரின் முயற்சியின் வெற்றியும் கோழைத்தனத்திலும், தியாகத்திலும், உண்மை அறிதலிலும், நன்றிக் கடனுறுதலிலும் கலந்து பரிமாறப்படும் கதையின் இறுதிக்கட்ட திருப்பம் வான் ஹாமின் ரசிகர்களை நெகிழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் மனிதர்களின் மாறுபட்ட முகங்களை காட்டும் வகையில் அவர் பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார், கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார். பயணங்களினூடு பயணிக்ககூடிய மர்மங்களையும், புதிய பாதைகளையும் அவர் கதை அடர்காட்டில் கோலமிடுகிறது.

இயலுமானவரை எதார்த்தத்துடன் கதை சொல்லப்படவேண்டும் என ஹாம் விரும்பினாலும் நாடகத்தனம் பல சந்தர்ப்பங்களில் எட்டிப் பார்க்கவே செய்கிறது, இக்கதை இற்றைக்கு 35 வருடங்களிற்கு முன்பாக உருவான ஒன்று எனும் தகவலே இக்கதையின் நாடகத்தனமான யதார்த்தத்தை விழுங்க உதவிடுகிறது. இக்கதைக்கு சித்திரங்களை உருவாக்கி தந்திருப்பவர் டேனி. டேனியின் சித்திரங்கள் நண்பர்களிற்கு இரு பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் பரிச்சயமாகி இருக்கலாம். ஹெர்மானின் பாணியிலிருந்து வேறுபட்ட அவரின் சித்திரங்களை நினைவில் கொண்டுவர வாசகர்களிற்கு சிரமம் இருக்காது. இக்கதையில் அவர் தன் வழமையான பாணியை விடுத்து புதிய ஒரு பாணியைக் கையாண்டு இருப்பதாக இணையத்தில் படித்தேன். கதை மாந்தர்களையும், அமேசான் வனத்தையும் மிகவும் எதார்த்தமாக கொணர அவர் முயன்றதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை. ஆனால் டேனியின் பாணிக்கு நான் ரசிகன் அல்ல என்பதால் இக்கதையில் அவர் சித்திரங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை எனலாம். இக்கதையானது இன்று சுமாரான ஒன்றாக தோற்றம் தந்தாலும் அன்று இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சித்திரக் கதைகளில் One Shot எனும் வகையை அறிமுகமாக்கிய ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகவும், அக்கால ரசிகர்களின் மதிப்பில் போற்றப்பட்ட கதையாகும் இது இடம்பெற்றிருக்கிறது என்பதும் கூடுதலான தகவல்கள் ஆகும். ...... ஆகவே

ஆகவே ஏன் இக்கதைக்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்கக்கூடாது. அதே கலைஞர் கூட்டணியில் இருபது வருடங்களிற்கு பின்பாக 1997ல் இக்கதையின் தொடர்ச்சியான Vingt Ans après வெளியாகியது. அதன் வழி இது ஒரு One Shot எனும் வகையிலிருந்தும் வெளியேறியது. அமோசான் காட்டிலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் இன்றைய நிலையைக் கதை காட்டி சென்றாலும் கதையின் மைய இழை அதுவல்ல. தம் அடையாளங்களை மாற்றிக் கொண்டு உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நாஸி போர்க்குற்றவாளிகளிற்கு எதிரான ரகசிய நடவடிக்கையே  இப்பாகத்தின் பிரதான இழை எனலாம்.

முதல் பாகம் ஆரம்பித்த அடர் காட்டினுள் கதை மாந்தர்கள் சிலரை மீண்டும் இட்டுச் செல்லும் முன்பாக கதையானாது, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்சு, தாய்லாந்து, சுரினாம் எனப் பயணிக்கிறது. இருபது வருடங்களின் பின்பாக மாற்றம் பெற்றிருப்பது கதைமாந்தர்கள் மட்டுமல்ல; ஹாமின் கதை சொல்லும் விதமும், டேனியின் சித்திரப் பாணியும் எவ்வகையான மாற்றங்களிற்குள்ளாகி இருக்கின்றன என்பதை இக்கதைகளை ஒருசேரப்படிக்கும் ஒரு வாசகன் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஹாம் முதலாம் பாகத்தில் வழங்க எத்தனித்த நாடகத்தனமான எதார்த்தத்தை முற்றிலுமாக உதறிவிட்டு தனக்கு கைவந்த ரகசிய நடவடிக்கை நாடகத்தை விறுவிறுப்பாக சொல்லுகிறார். பரபரவென நகர்கிறது கதை. இது ஏன் இப்படி என்று கேள்வி கேட்காமல் படித்து சென்றுவிட வேண்டும். நாஸிக் குழுக்களின் ரகசியமான வளர்ச்சி, அவற்றை தேடி வேட்டையாடும் மொசாட், தாய்லாந்தின் போதைப் பொருள் சந்தை, தாய்லாந்து வனத்தின் ஆழமான காடுகளில் வாழும் குடிகள், சுரினாம் தொழுநோயாளி பராமரிப்பகம் என வான் ஹாமின் கதை சிறப்பான ஸ்தலங்களில் தொய்வின்றி நகர்ந்து எல்லாம் ஆரம்பமான அமோசன் அடர்வனம் நோக்கிப் பயணிக்கிறது. இப்பயணத்தினூடு வாசகர்களை நெகிழ வைக்க ஹாம் தவறவில்லை. தியாகம், காதல், நட்பு, நன்றிக்கடன்  இவையாவும் மாறுபட்ட கலாச்சார முகங்களுடன் கதையில் பரிமாறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இப்பாகம் என்னைக் கவர்ந்தது எனினும் முடிவு சிறிது ஏமாற்றமே. வெறுப்பும், வஞ்சமும் இன்னம் தொடரவா வேண்டும் அதை முடித்து விடலாம் எனும் வரியுடன் கதையின் ஒரு பெரும் மர்மம் வாசகனிற்கு விடுவிக்கப்படாத ஒன்றாக இக்கதை நிறைவுறுகிறது.


சித்திரக் கலைஞர் டேனி இப்பாகத்தில் அசர வைத்திருக்கிறார். அவர் சித்திரப்பாணியின் மாற்றம் கதை நிகழும் இடங்களின் அழகையெல்லாம் அழகாக பக்கங்களில் அழகுபடுத்தி இருக்கிறது. தாய்லாந்தின் அழகுகள்!! ஒட்டக கழுத்துப் பெண்களின் நளினம், சுரினாமின் அந்தி, அமோசான் அடர் வனத்தின் நிறைபச்சை என ஆச்சர்யம் செய்திருக்கிறார் டேனி. அமேசான் வனத்தில் விமானம் வீழ்ந்த இடத்தை அவர் வரைந்திருக்கும் விதம் உணர்வுகளை சற்று மேலெழச் செய்வதாக இருக்கிறது. டேனியின் படைப்புகள் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லாவிடிலும் இப்பாகத்தில் டேனியை ரசிக்காமல் இருப்பது என்பது சிரமமான ஒன்று.  பரபரப்பான கதைகளை விரும்பும் வாசகர்களை இக்கதை அதிகம் ஏமாற்றி விடாது என்பது என் எண்ணம். கதையின் முதலாம் பாகத்தில் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை எழுதும் பாத்திரம் யார் என்பது ஆச்சர்யம். அது யார் என்பதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் படிக்கும்போது உங்களிற்கும் அந்த ஆச்சர்யம் முழுமையாக கிடைக்கட்டுமே !!



Sunday, November 4, 2012

தாவிப் பாய் என் தங்கமே

வதனமோ சந்த்ரபிம்பமோ – 5

நவஹோ போக்கர் மாஸ்டர் டெக்ஸ் வில்லர் ஸ்ட்ரெய்ட் ப்ளஷ்

டெஃபியான்ஸ் கோட்டையில் பணிபுரியும் வீரர்களின் பட்டுவாடாப் பணத்தை தங்க நாணயங்களாக ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் ஏந்தியவாறு நீயு மெக்ஸிக்க, அரிசோனா எல்லைகளை இணைக்கும் ரயில்பாதையில் பெருவறள் நிலத்தினூடாக விரைகிறது ஒரு புகையிரதம். அப்பணத்தை அபகரிக்க தயாராகிறது ஒரு குழு. இதை எல்லாம் அறியாமலேயே ரயிலில் பயணிக்கும் வீரர்களுடன் சாதாரண பயணிகளாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இரு ரேஞ்சர்கள். டெக்ஸ் வில்லர்! கிட் கார்சன்…..

டெக்ஸை மீண்டும் ஒரு ரயில் வண்டியில் சந்திக்கிறோம். கடந்த வதனமோ சந்த்ரபிம்பமோ கொண்ட்ராஸ் தங்கத்தில் ரயிலில் வரும் தங்கத்தை தன் எதிரிகள் எல்லாரிற்கும் சதுரங்க வெட்டு வைத்து கைப்பற்றி வருவது நவஹோ தங்கம் டெக்ஸ். இம்முறை அவர் தான் பயணித்த ரயிலில் பறிபோகும் தங்கத்தையும் அதற்கான காரணகர்த்தாக்களையும் சட்டத்தின் பிடிக்குள் எடுத்துவர முயல்கிறார். அவர் ஒரு ரேஞ்சர் எனும் வகையில் மேலதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றியே சுயமான ஒரு முடிவுடன் களத்தில் இறங்குகிறார். நரகத்திற்கு சென்றாலும் குற்றம் செய்தவர்களை விடப்போவதில்லை என சூளுரைக்கும் வழமை கொண்ட டெக்ஸ் இக்கதையிலும் தன் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை. இக்கதை TEX Special வரிசையில் வெளியாகிய 6 வது கதையாகும். பிரெஞ்சு மொழியில் இக்கதையை L’attaque du train de Fort Defiance எனும் பெயரில் Semic பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இப்பதிப்பகம் தற்போது டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறள்நில இரவில் பெருநிலம் கிழித்தோடும் ரயிலில் உறங்க முடியாமல் தவிக்கும் கார்சனின் புலம்பல்களோடு ஆரம்பமாகும் கதையில் ரயிலில் முக்கியமான ஒரு பொருள் இருக்கும் சாத்தியத்தை கார்சனிற்கு விபரிக்கிறார் டெக்ஸ். இந்தக் காட்சிகளை இடைவெட்டிக்  கொண்டு வருகிறது கதையின் எதிர் நாயகர்களில் ஒருவனான லிஞ்ச் வெய்ஸ் அறிமுகமாகும் காட்சி. கதாசிரியர் Claudio Nizzi எதிர் நாயகனான லிஞ்ச் வெய்ஸை வாசகர்கள் முன் கொணரும் காட்சியானது இலகுவில் மறக்கக்கூடிய ஒன்றல்ல. பெருமேற்கின் சாகசங்களை ஏதோ அந்த ஊரின் நாட்டாமைகள் போல படித்து கண்ணீர் விட்டு மனைவிமாரிடம் வாங்கிக் கட்டும் அந்த வாசக உள்ளங்களை பெருமேற்கின் தூய ஆவியான மதுசெலெம் ரட்சிக்கட்டும். அவ்வகையான வாசகர்களின் சாகஸ ஆர்வத்தின் வாயில் டைனமைட்டை சொருகி பற்றவைத்தால் அந்த ஆர்வம் இறகு முளைத்து அரிசோனாவின் பாலை மேகங்களினூடு வெடித்துப் பறந்திடாதா என்ன. பொனெலி பதிப்பகத்தின் ஆஸ்தான கதாசிரியரான க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையில் எதிர் நாயகர்களிற்கு வழங்கி இருக்கும் முக்கியத்தும் வியப்படைய வைக்கும் ஒன்று. [அதே சமயம் இருளில் வரும் நிழல் போன்ற சுமாரிற்கும் கீழான கதைகளையும் நிஸ்ஸி படைக்க சளைத்தவரில்லை என்பதையும் நாமறிந்து கொள்ளல் சிறப்பானது].

fd1மிக இலகுவாக தன் திட்டத்தை செயல்படுத்தி பணத்தை அபகரித்து செல்கிறான் லிஞ்ச். ரயிலில் பணத்தின் பாதுகாப்பிற்காக பயணித்த ராணுவ வீரர்கள் ஒரு கட்டத்தின் பின்பாக லிஞ்ச் குழுவினரை துரத்திச் செல்வது முடிவிற்கு வர, அவர்களை விடாது துரத்த ஆரம்பிக்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ராணுவத்தின் இளம் உயரதிகாரியை தாண்டி டெக்ஸ் வழங்கும் உத்தரவுகள் அந்த அதிகாரியின் கவுரவத்தை பாதிக்க அதையும் சேர்த்து ஒரு பஞ்சில் உடைப்பார் பாருங்கள் டெக்ஸ்..அருமையான பஞ்ச் அது. வழமைபோலவே டெக்ஸ் மற்றும் கார்சனிற்கிடையிலான உரையாடல்களில் கிண்டல் கலந்து வாசகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை ஆனால் இக்கதையின் நகர்வானது பெரிதும் தங்கியிருப்பது அதன் எதிர் நாயகர்களின் செயற்பாடுகளிலேதான்.

கொள்ளையடித்து சென்ற பணத்தை பாகம் பிரிக்கும்போது கிடைக்கும் அதிர்ச்சி கதையின் எதிர்நாயகர்களை மட்டுமல்ல வாசக உள்ளங்களையும் திகைக்க வைக்கும். ஆனால் கதையின் மர்மநாடியே அதுதான். எதிர்நாயகர்கள் ஏமாற்றப்பட்டார்களா, இல்லை இது ஒரு பொறியா என அவர்கள் அறியாமல் விழிப்பதைப் போலவே சாகச ரசிகர்களையும் விழிக்க வைக்கிறது கதை. அத்தருணத்திலிருந்து கதை எடுக்கும் வேகம் இரட்டிப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

இந்த சாகஸத்தின் எதிர்நாயகர்களாக லிஞ்ச் வெய்ஸை தவிர்த்து லூக் தோர்ட்டன், டூட் ஜான்ஸன், க்ளைட்டோன் சகோதர்கள் என ஒரு பத்துப்பேர் கொண்ட கூட்டம் இருக்கிறது. இரைதேடிகளான இவர்கள் தாம் கூட்டுச் சேர்ந்து ஆற்றிய ஒரு திட்டத்தின் தோல்வியின் பின்பாக அதற்கான காரணம் என்ன என்பதை அறிய விழைந்தால் நிகழும் நிகழ்வுகள் எப்படியாக இருக்கும். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி பரபர என கதையை நகர்த்தி செல்கிறார். திருப்பத்திற்கு திருப்பமாக எதிர் நாயகர்களின் வீழ்தல்களோடும், வெற்றிகளோடும் பெருமேற்கின் சாகசமொன்றை அதன் நாயகனான டெக்ஸை தாண்டியும் அவர் விறுவிறுப்பு குறையாது எழுதிச் செல்கிறார். தொய்வே அற்ற இந்தக் கதை சொல்லல் கதையை ஒரே வீச்ச்சில் வாசிக்க வைக்கும் மந்திரத்தின் பெரும் சொல்லை தனதாக்கி  கொண்டிருக்கிறது.

fd2டெக்ஸும், கார்சனும் எதிர்நாயகர்களில் ஒருவனான லூக் தோர்ட்டன் கூட்டத்தினை போட்டுத்தள்ளும் காட்சி இருக்கிறதே…. கதாசிரியர் வெஸ்டெர்ன் திரைப்படங்களிற்கு தந்திருக்கும் ஒரு கவுரவம் அது எனலாம். கைவிடப்பட்ட ஒரு நகரம். அதனூடு வீசிக் கொண்டிருக்கும் அனல் காற்று. அக்காற்றின் நர்த்தனத்தில் கலந்து தன்னை இழந்து வெளியில் மிதந்தாடும் சுருள் பற்றைகள். எதிராளிகளின் திறமைகளை தகுந்த வகையில் எடைபோட்டு உருவாக்கப்படும் பொறிகள். அப்பொறிகளை புத்திசாலித்தனமாக நாயகன் மீறி வருகையில் ஏற்படும் ஒரு சிறு உவகை என அக்காட்சித் தொடர் ஒரு குறுங்கதையாக பரிமளிக்கிறது. இறந்தவர்கள் குற்றவாளிகளாக கொலையாளிகளாக இருந்தாலும்கூட அவர்கள் உடல்களை பெருநிலத்தின் இரைதேடிகளின் கைகளில் விட்டுச் செல்லாது அவர்களை புதைத்துவிட்டுச் செல்லும் மனிதாபிமானத்தின் அடையாளமாக இங்கு டெக்ஸும், கார்சனும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இதே பாக்கியம் சமூகத்தில் நேர்மையான பேர்வழி எனப் பேர் பெற்று அந்தத் திரையின் மறைவில் காய் நகர்த்தும் நபர்களிற்கு கிடைப்பதில்லை. அப்படியான நபரை நேரம் எனும் காரணத்தை முதன்மையாக்கி புதைக்காமல் செல்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ஒரு வாசகன் எனும் முறையில் இது டெக்ஸின் ஒரு வகையான தீர்ப்பு எனவே என்னால் ஊகிக்க முடிந்தது. கொலைகாரர்களை புதைத்துவிட்டு செல்லும் டெக்ஸ் நேரத்தைக் காரணம் காட்டி ஒருவரின் சடலத்தை அப்படியே விட்டுச் செல்வதின் பின்னாக உள்ள காரணத்தை என் மனம் ஏன் தேடித் தொலைத்தது என்பதற்கு விடையில்லை.

fd3சாகஸத்தின் பிரதான எதிர்நாயகனான லிஞ்ச், ஒரு சூதாட்டக்காரன். பெருமேற்கின் சூதாடிகளிற்கென ஒரு ஆடையணி அழகு இருக்கிறது. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சூதாட்டக்காரனிற்குரிய ஆடையுடனேயே நடமாடும் லிஞ்ச் தன் நகர்வுகள் யாவையும் சூதாட்டமாகவே எண்ணிக் கொள்கிறான். ஒரு சூதாடிக்கு தன் எதிரியிடம் இருப்பது என்ன என்று தெரியாதபோதும் தன் இழப்புக் குறித்த எந்தக் கிலேசமுமின்றி தன் ஆட்டத்தை தொடர்பவனாகவே இருப்பான். லிஞ்ச் தன் மேலாடையின் நீண்ட கை மடிப்புக்களிற்குள்ளும் உதிரிச் சீட்டுக்களை ஏந்தியிருக்கும் சூதாடி வர்க்கத்தை சேர்ந்தவன். அவனிற்கு எதிரான ஆட்டங்களை எல்லாம் அவன் அவ்வகையிலேயே முறியடிக்கிறான். தான் தோற்றுவிடக்கூடாது எனும் வெறி அவனைக் கொண்டு செல்லும் எல்லைகளின் வர்ணம் வன்மையானது. தன் எதிரிகளை ஒவ்வொன்றாக ஆட்டத்தில் தோற்கடிக்கும் லிஞ்ச் தன் இறுதி எதிரியை ஒரு துருப்பால் வீழ்த்தி அடிக்கும் இடம், அவன் எவ்வகையான ஒரு சூதாடி என்பதையும் அவன் மனநிலையையும் பெருமேற்கின் எதிர் நாயகர்களின் வாழ்வில் அறம் என்பதன் மதிப்பையும் தெளிவாக்கும். இங்கு நான் இக்கதையின் சித்திரக் கலைஞரான ஹோசே ஒர்டிஸைப் பற்றி எழுதிவிடல் நலம். இவர் பற்றி கொண்ட்ராஸ் தங்கத்தில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் இக்கதையில் வரைந்திருக்கும் சித்திரங்கள் அவர் குறித்த என் கணிப்பை இன்னம் பலமாக்கியிருக்கின்றன. குறிப்பாக தன் இறுதி எதிரியை லிஞ்ச் வீழ்த்தும் அந்த தருணம். அரைப்பக்கத்தில் வரும் அந்த சித்திரம் உங்களை அப்படியே அள்ளிக் கொள்ளும். உயிர்தப்பலுடன் ஊசாலாடும் வாழ்வை மரணம் எனும் பெருவீழ்ச்சி தழுவுகையில் அதனை நேரில் காண்பவர்கள் மனதில் கிளர்ந்தெழும் எழுச்சிகளின் சித்திரங்களின் வரைகோடுகளின் சிறுதெறிப்பின் ஒரு மென்நுண்மையையாவது ஒருவர் அதில் உணரக்கூடும். ஓர்டிஸின் தீர்க்கமற்ற கோடுகளின் பின்பாக அபார உயிர்ப்புடன் மேலெழும் பெருமேற்கின் கருவெள்ளை வரட்டழகு எந்த ஜிரோவினாலோ அல்லது மொபியாஸினாலோ குழைக்கப்பட்ட குழைவண்ணங்ககளினால் தரப்பட இயலாதவை. ஹோசே ஓர்ட்டிஸ் பெருமேற்கின் காய்நில அழகை தன் சித்திரங்களால் தனித்துக் காட்டி நிற்பவர். டெக்ஸ் கதைகள் சர்வதேசப் புகழ் பெற்றவை அல்ல எனும் ஒரே காரணம் இவ்வகையான கலைஞர்களின் உழைப்பு சிறப்பான பார்வை பெறாமைக்கு உதவிடும் காரணங்களில் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இக்கதையை முதலில் நான் படித்தது இற்றைக்கு பதினைந்து வருடங்களின் முன்பாக. பாரிஸ் நூலக வலையமைப்பில் அன்று இருந்த ஒரே ஒரு டெக்ஸ் கதை இது மட்டுமே. இன்று அதுவும் இல்லை ஏன் எதுவுமில்லை. [ஏன் பாரிஸ் நூலக சேவை டெக்ஸ் கதைகளை வாங்குவதிலை எனும் விடயம் வியப்பான ஒன்று]. இக்கதையை அன்று படித்தபோதே இக்கதையின் சித்திரங்களும், லிஞ்சும் என் மனதை ஆட்கொண்டுவிட்டார்கள். ஆனால் சித்திரக் கலைஞரின் பெயர் எனக்கு அன்று முக்கியமான ஒன்றாக படவில்லை. அதேபோலவே லிஞ்சின் பெயரும் என் மனதை விட்டு காலத்தோடு கடந்து சென்றது. ஆனால் சமீபத்தில் இக்கதை பற்றி உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியபோது என் நினைவில் இருந்து திரும்பியவை சில சொற்கள் மட்டுமே. செம ஸ்பீட், அட்டகாசமான வில்லன், அசர வைக்கும் ஓவியங்கள். என்னுடன் உரையாடிய நண்பர்கள் இக்கதையைப் படித்தால் நான் வார்த்தை தவறவில்லை என்பதும் இக்கதை அதன் பண்புகளிலிருந்து இன்னம் விடுபடாது இன்றும் அதேயளவு சுவையுடன் வாசிப்பனுபவத்தை நல்குகிறது என்பதும் உறுதியாகும்.

லிஞ்சை ஏன் நான் மறக்கவில்லை எனும் காரணம் இன்று இக்கதையை நான் படித்தபோது எனக்கு தெளிவாகியது. மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவுடன் தன் கடைசிச் சீட்டை உங்கள் முன் வீசி வீழும் ஒரு சூதாடியினை உங்களால் இலகுவில் நினைவில் இருந்து அழித்திட முடியாது. அவன் தன் சூதாடிக்கான அழகான எடுப்பான ஆடைகளுடன் உங்கள் மனதில் தாவிப் பாயும் தங்கமாக என்றும் உங்கள் நினைவின் ஒரு நுண்மடிப்பில் நின்றிருப்பான். ஏனெனில் ஒரு தோல்வியின் பின்பாக சில சூதாடிகள் மீண்டும் ஆடுவதேயில்லை.

Saturday, October 27, 2012

மறுபிறப்பு !!!


நான் முதன்முதலாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படம், த மேன் வித் த கோல்டன் கன். காற்சட்டை அணிந்த வயதில். உண்மையில் பெண்களைவிட கிறிஸ்டோபர் லீயின் மூன்றாவது முலைதான் கூச்சம் தந்தது. ஆனால் பாண்டின் ரசிகனாகி விட்டேன். தொடர்ந்த வருடங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்த பாண்ட் படங்களை தவற விட்டதிலை. த ஸ்பை கூ லவ்ட் மீ மிகவும் பிடிக்கும். ரோஜர் மூரை பாண்டாக நினைத்த காலம். ஷான் கானரியை ஏனோ மனம் ஏற்க மறுத்தது. ரோஜரும் கூட மூன் ரேக்கர் போன்ற சொதப்பல்களில் ஏமாற்றவே செய்தார். இடையில் இடைவெளி. பின் ப்ராஸ்னனின் மிடுக்குடன் அணிகோர்த்த கவர்ச்சி பிடித்திருந்தது. பின் க்ரெய்க். இங்கு நான் திமொதியைக் குறிப்பிடவே இல்லை. அவர் தாக்கம் அப்படியான ஒன்று. பெரும்பான்மையானவர்களின் மீது.
காசினோ ராயல் நல்லதொரு ஆரம்பம். இருளுடன் கலந்த உளவாளியின் அறிமுகம். குவாண்டம் ஏமாற்றம். சாம் மெண்டஸ் ஸ்கை ஃபாலின் இயக்கம் என்பது ஆச்சர்யம். அதன் ட்ரெய்லர் காத்திருத்தல் ஒன்றின் ஆரம்பம். திரையில் அதைக் கண்டு வந்தது எதிர்பார்ப்பு ஒன்றின் சோகமான மரணம்.
துருக்கியின் பெரும் சந்தை ஒன்றை அண்மித்த கூரைகளின் மீது இடம்பெறும் பைக் ஆக்‌ஷன் இதுவரை வந்த பாண்ட் திரைப்படங்களின் திறப்புக் காட்சிகளில் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று. பாண்ட் திரைப்படத்தை பார்க்கிறேன் எனும் பிரக்ஞை இருந்தபோதிலும் அதனை உள்ளெடுப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் ஏமாற்றம் என்பது அதனுடன் முடிந்துவிடவில்லை!!!
எதிர் நாயகனான ஹாவியர் பார்டெம் தோன்றும்வரை ஸ்கைபாலின் வேகமற்ற தன்மைதான் ரசிகன் பெறும் உண்மையான ஆச்சர்யம். நாமே கூட நம் தேசத்தின் எதிரியாகவிடக்கூடிய இக்காலத்தில், கருதப்பட்ட மரணமொன்றிலிருந்து தன் தேசத்தையும் குறிப்பாக தன் அன்னை பிம்பத்தையும் காக்க ஓடோடி வருகிறார் பாண்ட். அதுவரையில் அவர் தன் மரணத்திற்கு வாழ்வு தந்தவாறே ஹைனிகன் பீர்களை சுவைத்துக் கொண்டும், நீர் நிலைகளின் அருகில் கிடைக்ககூடிய சிட்டுக்களின் உடல்களை சுகித்துக் கொண்டும் இருக்கிறார். போதையேறிய ஒரு காலையில் அவரிற்கு நாட்டுப்பற்று ஐம்பது வருடம் பீப்பாயில் பதமாக ஊறிய விஸ்கியை விட அதிக போதையை தரும் என்பது உறைத்திருக்க வேண்டும்.
அதன்பின் என்ன.... எதிர்நாயகனான சில்வாவை தேட ஆரம்பிக்கிறார் பாண்ட். தன் வழமையான வழிகளால் கண்டும் பிடிக்கிறார். இறுதியில் ... !!! அட நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...
சில்வா தன் அறிமுகத்தை பாண்டிடம் நிகழ்த்தும் அறிமுக 20 நிமிடம் மட்டுமே படத்தில் ரசிக்கப்படக்கூடியது. ஆனால் ஹாவியரின் சிறப்பான திறமை இதுவல்ல. அந்த 20 அறிமுக நிமிடங்களையும் படுகொலை செய்பவையாக வந்து சேர்கின்றன ஹாவியர் தோன்றும் பின்னைய காட்சித் தொடர்ச்சிகள்.
பாண்டிற்கு மறு உயிர் தந்தாக வேண்டும். அதற்காக அவர் வீட்டை, அவர் முன்பு பயன்படுத்திய காரை, அவரின் கடந்தகாலத்தை.... இப்படியாக பலதும் அழிக்கப்பட்டு அவரிற்கு மறு வாழ்வு தந்தாக வேண்டியிருக்கிறது. அழிக்கப்பட்டவற்றிற்கு பதிலாக புதியன அவற்றிற்குரிய இடங்களிலும் வந்து சேர்ந்தாகி விட்டது. பாக்கி இருப்பது கதை ஒன்று மட்டுமே. இத்திரைப்படத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம் கிடையாது என்பதை நீங்கள் அதனை பார்ப்பதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம்.
நல்ல விஸ்கி வீணாகப் போனது, காம்பார்ட்மென்ட் மாறுகிறேன் போன்ற பாண்டின் வழக்கத்திற்குரிய சில வரிகள் காட்சிகளிற்கேற்ப சுவைக்க செய்தாலும் ஒட்டு மொத்த படைப்பாக பாண்டின் 50 வது நிறைவில் சாம் தந்திருப்பது ஏமாற்றமே. குறிப்பாக அழகாக காட்சிகளை வழங்குகிறேன் என அவர் தந்திருக்கும் திரையழகியல் மலிவான ஒன்று..... வெளிச்சக் கூடுகளையும், விளக்குகளையும் காட்டி உயிரற்ற அழகை அழகியலாக்குவதில் அவர் கண்டுள்ளது வெற்றியே....
ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றை அதற்குரிய வேகத்துடன் வழங்க சாம் தோற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் வேகமற்ற தன்மையும், அதனுடன் சேர்ந்திருக்கும் நீளமும் சலிப்படைய வைக்கும் ஒன்று. உணர்ச்சிகரமான நாடகமொன்றின் தேர்ந்த இயக்குனரான சாம் இங்கும் அதில் வெற்றி கண்டிருக்க முடியும், ஹாவியரை வைத்து அவர் அதில் வெற்றி காணவும் முயற்சித்திருக்கிறார்... ஆனால் பாண்ட் படத்தில் வரும் பாத்திரங்களின் உணர்ச்சிகள் எப்போதும் வெற்றியை ஈட்டி வருபவையாக இருந்ததில்லை. இருப்பினும்... ஹாவியர் பார்டம் இல்லாவிடில் இப்படத்தை பற்றி எழுத என்னதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன், பார்டம் இதைவிட சிறப்பாக செய்திருக்கிறார். இத்திரைப்படத்தைவிட ஆக்‌ஷன் காட்சிகள் ஆமை விறுவிறுப்பாகவும் [லண்டனில் சில்வாவின் திட்டத்தை தவிர்த்து], தேவாங்கு சுறுசுறுப்பாகவும் உள்ள சமகால பாண்ட் படங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பாண்ட் திரைப்படங்களில் பெண்களின் முக்கியத்துவம் அதாவது கவர்ச்சிக் கன்னிகளின் முக்கியத்துவம் ஏறக்குறைய தமிழ் சினிமா நிலையை எட்டி விட்டது. ஆனால் இவர்கள் கண்ணாடிக் குளியலறைக்குள் வைத்து புணரப்படுவதால் அயல்நாட்டு மலைப்பகுதி டூயட்டுக்களிலிருந்து இவர்களிற்கும், ரசிகர்களிற்கும் விடுதலை. ஏன் ஹாவியர் பார்டம் கூட உச்சக்கட்டத்தில் நடிகர் திலகம் போல் நடித்திருப்பார். டானியல் க்ரெய்க், என்ன சொல்வது! அவர் நடித்தவற்றில் மோசமான பாண்ட் இது. இங்கிலாந்து எனும் தாய் மண்ணைக் காக்க பாண்ட் புத்துயிர் பெறலாம் ஆனால் பாண்டின் ரசிகர்களை காக்க எதை புத்துயுயிர்ப்பிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸ்கைஃபால் பிறந்தவீடுதான் ஆனால் பார்வையாளர்களின் இறந்தவீடாகி விட்டது...


Wednesday, October 10, 2012

கொம்புக்குதிரை - பாகம் மூன்று


எல்லாப்புகழும்.............. மிட்நைட் அப்லோடரிற்கே

ஆன்லைனில் படித்திட
http://issuu.com/georgecustor/docs/kombukuthirai_3/1?zoomed=&zoomPercent=&zoomX=&zoomY=&noteText=&noteX=&noteY=&viewMode=magazine

தரவிறக்க
https://rapidshare.com/#!download|542p10|2316113971|kombukuthirai%203.zip|46235|0|0

Sunday, September 16, 2012

குப்பைமேட்டு தேவதைக்கதை

க்ரிஸ் எனும் போதைமருந்து விற்கும் இளைஞன் அவன் செலுத்த வேண்டிய கடனை செலுத்தவியலா நிலையில் அவன் உயிரிற்கு கெடு விதிக்கப்படுகிறது. வேறு வழிகள் ஏதும் அறிந்திடாத க்ரிஸ் தன் தாயின் காப்புறுதி தொகை வழியாக இந்தக் கடனை அடைத்திடலாம் எனும் முடிவிற்கு வருகிறான். தன் தாயைக் கொல்வதற்காக அவன் கில்லர் ஜோ என்பவனின் சேவையை நாடுகிறான்....

சில திரைப்படங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், உங்கள் மூச்சை நிறுத்தும், உங்கள் இதய துடிப்பை எகிறச்செய்யும் எனும் விளம்பர வரிகளுடன் வந்து மிகையான ஏமாற்றத்தை உங்ககளிற்கு அளித்து செல்லும். சில திரைப்படங்கள் வரிகளில் ஏதும் சொல்லிடாது தன் காட்சிகள் வழி உங்களை அதிர வைக்கும் ஆனால் Killer Joe திரைப்படம் தரும் அதிர்ச்சியானது சிறிது நீண்ட கணமொன்றை உங்களிடமிருந்து சுவீகரித்து அதன் அதிர்ச்சியை உங்கள் மனமெங்கும் கடத்தியவாறே இருக்கும். மனித சமூகத்தின் விழுமியங்களின் அழுகல் செயற்பாட்டை அது தன்னாலான வன்மையுடன் உங்கள் அறநிலைப்பாட்டுடன் மோதச்செய்து உங்களை அது நிலைகுலைய வைக்கும்.

டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்திருக்கும் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தினை கதையின் மையமாக்கி வழமையாக எம் மனதில் படிந்து போயிருக்கும் அமெரிக்காவின் அழகான இல்லம் நல்லதொரு குடும்பம் எனும் பிம்பத்தை உறுதியாக தகர்க்கிறார்கள் இயக்குனர் Willam Friedkin மற்றும் திரைக்கதாசிரியர் Tracy Letts ஆகியோர். திரைக்கதாசிரியர் உருவாக்கி இருக்கும் அப்பாத்திரங்கள் எல்லாம் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு விடை ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனைக் கடனில் உயிர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் க்ரிஸ், மதுப்பிரியனான அவன் தந்தை ஆன்செல், தன் கணவனான ஆன்செலிற்கு தெரியாது பிறிதொரு ஆணுடன் உறவொன்றை பேணும் ஆன்செலின் இரண்டாவது மனைவியான சார்லா, சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் க்ரிஸின் சகோதரி டொட்டி. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திர படைப்புக்களுமே நாம் அதிகம் பார்த்திராத அல்லது அறிய விரும்பாத அல்லது அக்கறை காட்டாத, எம் பார்வைக்கு முன் வைக்கப்படாத அமெரிக்க மனித முகங்களாகும். அவர்கள் வாழ்விடங்களும் அவர்கள் வாழ்க்கையைப் போன்றே உருக்குலைந்த நிலையில் மிளிர்பவையாக இருக்கின்றன.  அவர்கள் வாழ்வில் கலந்திருக்கும் வன்முறையின் விகிதம் திரையில் தன்னை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்துதான் மீளவேண்டியிருக்கிறது.

மிகவும் எதார்த்தமாக தந்தையும், மகனும் கொலை செய்வதற்கான நியாயங்களை துகிலுரி விடுதியிலிருந்து பேசி தீர்ப்பதும், பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனும் முடிவிற்கு வருவதும், கொலைஞன் ஜோ, முன்பணம் வேண்டும் என உறுதியாக கூறிட பணத்திற்கு பதில் டொட்டியை அவனிற்கு ஈடாக தர சம்மதிப்பதிலும் வாழ்க்கை என்பதன் ஓட்டத்தில் சிறியதொரு இளைப்பாற்றிக்காக எதையும் செய்திட ஒத்துக் கொள்ளும் சமூகமொன்றின் இருத்தலை இக்காட்சிகள் அங்கதத்துடன் சொல்லி செல்கிறது எனலாம். இக்காட்சிகளில் எல்லாம் உரையாடல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் மொழிநடை இயல்பாகவும் பின்னனி இசையானது மிகவும் அடங்கி காப்பி எந்திரத்தின் ஒழுகலின் ஒலியாகவும் நிகழ்வுகளின் சூழலிசையுணர்வை சிறப்பாக திரைக்கு முன்பாக கடத்திவருகின்றன.

கொலைஞன் ஜோ வித்தியாசமானதொரு மனிதன். அவன் காவல்துறையில் பணிபுரிந்தாலும் கூலிக்காக கொலைகளையும் செய்பவன். சட்டத்திற்கு புறம்பானவர்களை அவன் வெறுப்பான் என்பது ஒரு கட்டாயம் அல்ல. தன் கொலைத் தொழிலிற்குரிய விதிகளில் கறாரானவன். அவன் ரசனைகள் வேறுபட்ட உருக்களை அவன் கனவுகளில் எழுதி விட்டிருக்கின்றன. க்ரிஸின் தங்கை டொட்டியுடனான அவனது உறவு அவன் இச்சைகளின் நிர்வாண வடிவின் அகச்சித்திரம். ஆன்செலின் குடும்பம் உக்கிய நிலையில் இருந்தாலும் கூட அங்கு ஒரு விஷச்செடிபோல தன் வேர்களை உறுதியாக அவன் ஊன்றுவான். அவனுள் இருக்கும் வன்முறை அவன் அழகை போர்வையாக கொண்டிருக்கிறது. மிக மென்மையான மெலிதான கண்ணறியாப் போர்வை அது. அது கிழிபடும் தருணங்களில் நீங்கள் மட்டும் ஒரு வக்கிர வன்முறைக்காட்சிகளின் பிரியராக இல்லாத பட்சத்தில் உங்கள் நிலை சங்கடமான ஒன்றாகவே மாறியிருக்கும். இந்தக் கொலைஞன் ஜோ பாத்திரத்தின் உக்கிர நடனம் அரங்கேறும் உச்சக் கட்டக் காட்சி தன்னில் கொண்டிருக்கும் ஆரம்ப அமைதியானது அதன் வெளிக்காட்டலின்போது ஒருவனை அதே வன்மையுடன் தாக்க காத்திருக்கும் ஒன்றாகும்.

கதையில் எல்லாராலும் விரும்பப்படுவள் டொட்டி, அவள் ஒரு குப்பைமேட்டில் குடியேறிய தேவதைபோல. தனக்கேயுரிய தனித்த உலகில் சஞ்சரிக்கும் அவள் மனிதர்களின் சதிகளினுள் சிக்கி சற்று திணறித்தான் போகிறாள். அவள் மென்மையான குணம் அதன் எதிரான நிலையை அடையும் நிலையில் திரை இருண்டு மிகுதியை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறது. வாழ்ந்ததும் உணர்ந்ததும் நரகமெனில் இனி என்ன வந்துதான் என்ன ஆகிடப் போகிறது எனும் நிலையை உணர அதிக கணம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாரிற்கும் இருந்திருக்காது எனலாம். ஆன்செல் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Thomas Haden Church ஒரு கையாலாக குடும்பத்தலைவனாக சிறப்பித்திருக்கிறார். முதல் மனைவியின் மரணத்தின் பின்பாக காப்புறுதி பணத்தை பெறச்செல்லும் இவரின் கோட் சூட்டின் தோள் பிணைப்பு கழன்று விழும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிகம் திரையில் காணமுடியாத நல்லதொரு நடிகர் இவர் எனலாம். ஷார்லாவாக நடித்திருக்கும் முன்னை நாள் கவர்ச்சிக் கன்னி Gina Gershon உச்சக்கட்டக் காட்சியில் மனதை கனக்க செய்வார். டொட்டியாக Juno Temple எனும் இளம் நடிகை, முக்கியமானதொரு பாத்திரம் ஆனால் அவர் அதிர்ச்சி தருவது அவர் அப்பாவியான இளம் தேகத்தினாலேதான்! கொலைஞன் ஜோவாக நடிகர் Matthew McConaughey, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் ஒரு எந்திரம் போல் இயங்கும் அழகான அரக்கன். இந்தப் பாத்திரத்தை உச்சக்கட்டக் காட்சியின் பின்பாகவும் ஒருவர் விரும்ப முடியும் என்றால் அவர் அதைவிட உக்கிரமானதொன்றை பார்த்திருக்கிறார் என பொருள்கொள்ளலாம். அசத்தலான பாத்திரம். மனிதன் கொன்று விட்டார்.

மிக ரகசியமாக செயற்படுத்தப்படும் திட்டமொன்றானது எதிர்பார்த்த விளைவுகளிற்கு மாறானவற்றை அளித்திடும்போது உருவாகும் குழப்பநிலையின் அழுத்தம் அது பாத்திரங்களில் ஏற்படுத்தும் நெரிசல், மோதல், இக்கட்டான அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக பாத்திரங்கள் இயற்றிடும் செயல்கள், ஒவ்வொரு திட்டத்தின் பின்பாகவும் மறைந்திருக்கும் ரகசியங்கள் தம்முடன் எடுத்து வரும் உண்மைகளின் அழகற்ற உக்கிய முகங்கள், ஒவ்வொரு தோல்வியும் மனித சமூகத்தின் வீழ்ச்சியின் புகழை பறைசாற்றி செல்லும் தருணங்களாக பின்னி எடுத்திருக்கிறார் வில்லியம் ப்ரெய்ட்கின். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. குறிப்பாக பொரித்த கோழித்துண்டு ஒன்றின் வழியாக கில்லர் ஜோ நிகழ்த்தும் அந்த செயல் எல்லை தாண்டிவிட்டதோ என்ற உணர்வை அளிக்கிறது. இவ்வகையான தரக்குறைவான நிகழ்வுகளை திரைப்படுத்திதான் உண்மை நிலையைக் காட்டிட வேண்டுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. படைப்பாளிகளிற்கான சுதந்திரம் சமூகத்தின் புரையைக் கூறு போட்டுக் காட்டுகையில் அதன் உண்மையான வீச்சத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே பரிதாபமான உண்மை என நான் உணர்கிறேன். இவ்வகையான வாழ்க்கைகள் உலகெங்கும் பரவி இருக்கலாம் ஆனால் அது குறித்து நான் அறிந்திட விரும்பியவானாக இல்லை என்பதும் உண்மை. நான் இன்னொரு உலகில் வாழ்கிறேன் எனக்கருகில் இருக்கும் பிறிதொரு உலகின் உண்மைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எக்ஸார்ஸிட்டைக்கூட ஒரு அமானுடக் கதை என கூறிச்செல்லலாம் ஆனால் கில்லர் ஜோ அதைத்தாண்டி உங்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒரு அமெரிக்க சமூகத்தை திரையில் வைத்து வேப்பிலை அடிக்கிறது என்பதுதான் நிஜம். மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்பதையும் நான் இங்கு கூறிவிடுகிறேன்.





Saturday, September 8, 2012

கொண்ட்ராஸ் தங்கம்

வதனமோ சந்த்ர பிம்பமோ- 4

நவகோசிட்டி ஸ்டேஷன் மாஸ்டர் டெக்ஸ் சாகசம்…

மெக்ஸிக்கோவின் எல்லைக்கு அருகாக இருக்கும் அரிசோனாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கின்றனர் சில மெக்ஸிக்க டெஸ்பராடோக்கள். இந்த தாக்குதலிற்கு காரணமான டெஸ்பராடோக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அக்கிரமங்களிற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காக அப்பகுதிக்கு விரைந்து வருகிறார் டெக்ஸ். அங்கு அவர் அறிந்து கொள்ளும் தகவல்கள் மெக்ஸிக்க ஜெனரலான கொண்ட்ராஸ் என்பவனின் இலட்சிய கனவு குறித்த பார்வையை டெக்ஸிற்கு வழங்குகின்றன…..
ரயில் என்பது பல மனிதர்களின் மனதின் ரகசியமான ஒரு ஓரத்தில் அவர்கள் கடந்தோடி வந்த பாதைகளின் நினைவுகளை ஏற்றிக்கொண்டவாறே நினைவின் மடிக்கப்பட்ட ஒரு ஜோடி தண்டவாளத்தில் எந்த சத்தமுமின்றி ஓடிக்கொண்டேயிருக்கும். ரயில் நிலையங்களின் அருகே வாழ்ந்திட சந்தர்ப்பம் கிடைத்த சிறுவர்கள் மனதில் ரயிலுக்கு என பெரும்பாலும் ஒரு பிடித்தமான இடம் பதிவாகியிருக்கும். அவற்றில் பலர் பாடசாலைகளில் ரயில் ஓட்டுனராதலே என் எதிர்கால லட்சியம் எனப் பதில் சொல்ல தயங்கியதே இல்லை. ஒரு ரயிலோட்டியின் வாழ்க்கை பெரிதும் பயணங்களால் ஆனது. ஆனால் அவன் பயணங்களில் பெரும்பாலானவை பிறர் வாழ்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கும்.
தனியார் போக்குவரத்துச் சேவைகளோ, அதிவேக பிரயாண வசதிகளோ இல்லாதிருந்த ஒரு காலப்பகுதியில் ரயில் என்பதும் ஒரு உச்ச நட்சத்திரமாகவே இருந்திருக்கிறது. ரயில் இன்று அதன் உச்சவேகங்களை எட்டி, செல்லுமிடங்களிற்கான பயணநேரத்தை வெகுவாக குறைத்து விட்டபோதிலும் அவ்வேகத்தில் ரயில் பயணம் என்பதன் நிஜமான ஆத்மா உருக்குலைந்து போய்விட்டது எனலாம். இந்த வேகப்பித்து என்பது நம் சமூகத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து விடுவதற்கு முன்பாக இருந்த நிதானமான ரயிலின் வேகத்தில் நிகழ்ந்த பயணங்கள் இன்றும் பல உணர்வுகளுடன் நினைவுமீட்க கூடியவைகளாகவே இருக்கின்றன. அம்மம்மா கட்டித் தந்த சோற்றுப்பொதியை கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து திறக்கையில் வாழையிலையின் சுகமான வேகலுடன் நாசியை வருடிய வாசம்போல ரயில் பயணம் குறித்த நினைவுகள் மனதை வருடிச்செல்ல தவறுவதேயில்லை. முதல் முத்தம், முதல் புணர்ச்சி, முதல் காதல் போன்றவற்றைக்கூட ஒருவர் மறக்கலாம். ஆனால் அந்த நிதானவேக காலத்தில் ஒருவர் தவறவிட்ட ரயில் குறித்த கதையை மறக்கமுடியுமா.
பெருமேற்கின் முடிவற்ற வெளிகளினூடாக தன் நீண்டவுடலை முன்னகர்த்தியவாறே சென்றிருக்ககூடிய ஒரு ரயில், அதனை முதன்முறையாகக் காணும் அமெரிக்க பூர்வகுடி ஒருவனிற்கு தந்திருக்ககூடிய உணர்வுகளை சற்றே கற்பனை செய்துதான் பாருங்களேன். அவன் உணர்ந்தவற்றின் ஏதோவொன்றின் ஒரு நுண்கூறாவது இன்றும் முதன்முதலாக ரயிலை கண்டிடும் ஒருவனிலும் உயிர்த்திட வாய்ப்புக்கள் உண்டல்லவா. ஆனால் அந்த இரும்புக்குதிரையின் வேகமான முன்னகர்வானது அமெரிக்க பூர்வகுடி நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பின் வெற்றிக்கும், அப்பூர்வகுடிகளின் இனவழிப்பிற்கும் சாதகமான ஒரு அம்சமாகவும் அமைந்திருந்தது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
tb1பண்டிகை காலங்களின்போது உங்கள் உறவினர்கள் வருகிறார்கள் என்றாலோ அல்லது உங்கள் அன்புக் காதலி ஜன்னலோரம் இருந்தவாறே உங்களிற்கு சைகை காட்டிச் செல்வாள் என்றாலோ அல்லது பிக்பாக்கெட் பாண்டி தன் கஸ்டமர்களிடம் லாவகமாக சுருட்டிய உடமைகளை வெளியில் காத்திருக்கும் உங்களிடம் எறிகிறான் என்றாலோ அல்லது ஸ்டீல் க்ளோ கதை இனி வராது என இந்த உலகமே வெறுத்து உங்கள் இன்னுயிரை ஓடிவரும் ரயிலிடம் நீங்கள் பலிதர நினைத்தாலோ அல்லது உங்களை விட்டு ஓடும் மனைவி ஒரு குறித்த ரயிலில்தான் பயணிக்கிறார் என்றாலோ அந்த ரயிலை ஒருவர் ஆர்வமுடன் பார்க்கவும், காதலுடன் நோக்கவும், செம வசூல் நைனா எனச் சொல்லி பாராட்டவும், குட்பை தமிழ் காமிக்ஸ் உலகமே என அணுகவும், விட்டதடா சனி என கையெடுத்து நிலத்தில் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்து வீட்டு பரிமளத்திடம் நாம இனி செட்டிலாகிடலாம் என மூச்சு விடாமல் கூறிடவோ முடியும். ஆனால் குதிரைகளில் பயணித்து பெருமேற்கின் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சாகசங்களின் தடங்களை பதித்த நவஹோ சீமானும், நற்பண்பாளருமான டெக்ஸை இரும்புக்குதிரையில் பாய்ந்து ஏறி சாகசங்களை செய்யக் கேட்டுக்கொண்டால் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை டெக்ஸின் வாசகர்களான குணசீலப் பெருந்தகையோர்க்கு நான் சொல்லிட வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் டெக்ஸ் ஏன் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்து அதிரடி சாகசங்கள் நிகழ்த்துகிறார் என்பதற்கு விடையாக அமைகிறது TEX MAXI 8 ன் கதையான Le Train Blindé [ கவச ரயில் ].
கதையின் ஆரம்பமே அதகளம்தான். மெக்ஸிக்கோ டெஸ்பராடோக்களினால் பாதிக்கப்பட்ட இடமொன்றை அடையும் டெக்ஸ், அந்த டெஸ்பராடோக்களின் தடங்களை தொடர்ந்து சென்று அவர்களுடன் மோதும் காட்சிகளின் துணையுடனேயே கதையின் முதல் பகுதி ஆரம்பமாகிறது. Caramba, Carai, Gringo எனும் தாய்மொழிச் சொற்களை உதிர்த்தவாறே அரிசோனாவின் மண்ணில் விழுந்து தம் இன்னுயிரை இழக்கும் அந்த மெக்ஸிக்க உயிர்களிற்காக நாம் ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்திப்போம். மெக்ஸிக்க எல்லைக்கருகே ஒரு கால்வாய்ப் பாலத்தினருகே நடைபெறும் அந்த மோதலிலேயே சித்திரக் கலைஞரான José Ortiz தன் திறமையின் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் சுவைத்திட வாய்பளித்து விடுகிறார். நவஹோ திலகமான டெக்ஸ் கடமையும் கண்ணுமாக டெஸ்பராடோக்களின் செயற்படுமுறை ஒழுங்கையும், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் வைத்து அவர்கள் வழமையானதொரு டெஸ்பராடாக்கள் குழு அல்ல என்பதை ஊகித்துக் கொள்கிறார். அவரின் ஊகம் பின் ஜெனரல் கொண்ட்ராஸின் லட்சிய கனவு குறித்து அவர் அறிந்திடும்போது ஊர்ஜிதமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. இங்கு டெக்ஸ் தன்னிடம் உயிருடன் சிக்கிய ஒரு டெஸ்பராடோவிடமிருந்து உண்மையான தகவல்களை அறிந்திட உளவியல் வன்முறை அணுகலை பிரயோகிப்பார். துப்பாக்கியை மட்டுமல்ல மனிதனிற்குள் என்றும் இருந்திடும் உயிர் குறித்த பயத்தை வைத்தே டெக்ஸ் ஆடும் இந்த ஆட்டம் அவர் உளவியலிலும் வல்லவரே என்பதை தெளிவாக்குகிறது.
tb2tb3மெக்ஸிக்க ஜெனரல் கொண்ட்ராஸின் இலட்சியக் கனவுதான் என்ன! கொண்ட்ராஸ் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதானால் அவன் ஒரு தேசபக்தன். ஆனால் அதுவே பல இடங்களில் சர்வதிகாரி, எதேச்சதிகாரி, கொடுங்கோலன் எனும் அர்த்தங்களை கொண்டதாக திரிபுபட்டு விடுவதுண்டு. ஆனால் இந்த விடயமானது இலட்சியக் கனவு கொண்ட தேசபக்தர்களிற்கு புரிவதே இல்லை.அவர்களின் லட்சியக் கனவுகளே அவர்கள் கண்களில் இடப்பட்ட ஒரு திரையாக இருந்து விடுகிறது இல்லையா.
1846ல் இடம்பெற்ற அமெரிக்க மெக்ஸிக்க மோதலில் அமெரிக்கா கைப்பற்றிய மெக்ஸிக்க நிலங்களை 15 மில்லியன் டாலரை மெக்ஸிக்கோவிற்கு செலுத்தி தனதாக்கி கொண்டது. தான் பிறந்த மண்ணின் மீது அதிக பற்றுக் கொண்ட கொண்ட்ராஸ் அமெரிக்காவிடம் பறிபோன இந்த நிலங்களை மீண்டும் கைப்பற்றிட வேண்டும் எனும் கனவை கொண்டவனாகவிருக்கிறான். மெக்ஸிக்கோவின் வரலாற்று நாயகர்களில் ஒருவனாக தன்னை இந்த மனித குலம் நினைவு கூர்ந்திட வேண்டும் என்பது அவன் மனவிருப்பமாகும். இந்த இலட்சியத்திற்காக மெக்ஸிக்க அரசிற்குகூட தெரியாத வகையில் அவன் ஒரு ரகசிய புரட்சியை அமெரிக்கா கொள்வனவு செய்த மெக்ஸிக்க நிலங்களில் உருவாக்கி அதன் வழியாக அந்நிலங்களை மெக்ஸிக்கோவிற்குரியதாக மாற்றிட கனவு காண்கிறான்.
இந்த திட்டத்தை டெக்ஸ் அறிந்து கொள்ளும்போது தனி ஒரு மனிதனாக இதனை தன்னால் முறியடிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்கிறார். ஒரு நல்ல நாயகனிற்கு தன்னால் எத்தனை பேரை அடிக்க முடியும் என்பது தெரிய வேண்டும் அல்லது எத்தனை பேரிடம் தன்னால் அடிவாங்க முடியும் என்பதாவது தெரிய வேண்டும். டெக்ஸ் இதில் முதல் ரகம் எனவே அவர் ஜெனரல் தாமஸையும், செனெட்டர் டேவிஸையும் ரகசியமாக சந்தித்து உரையாடுகிறார்.
ரகசியமான இந்த சந்திப்பின்போது கொண்ட்ராஸ் தன் லட்சியக் கனவை நிறைவேற்ற தேவையான தங்கமும், ஆயுதங்களும் ரயிலொன்றில் அவனது தலைமையகம் நோக்கி எடுத்து செல்லப்படும் என்பதனையும் அந்த தங்கமும், ஆயுதங்களும் கொண்ட்ராஸின் கைகளிற்கு கிடைத்திடாதவாறு டெக்ஸ் தடுத்திட வேண்டுமெனவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சில அரசியல் காரணங்களிற்காக இதனை ஒரு ரகசிய உளவாளி நிகழ்த்தும் நிழல் நடவடிக்கை போலவே டெக்ஸ் செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். எனவே திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக மெக்ஸிக்கோவினுள் நுழைந்து கொண்ட்ராஸின் பகுதிகளிற்குள்ளும், தங்கம் கொண்டு வரும் ரயில் பயணிக்கும் பாதைகளிலும் ஒரு கள ஆய்வை மேற்கொள்ள மெக்ஸிக்கோவிற்கு செல்கிறார் டெக்ஸ்.
tb4tb5கதையின் இப்பகுதியில் டெக்ஸின் நடவடிக்கைகள் ரகசிய உளவாளிகளின் செயற்படுமுறை கையேடுகளில் இணைக்கப்படவேண்டிய கூறுகளை தம்முள்ளடக்கிய ஒன்றாகவே முக்கியத்துவம் பெறுகின்றன. துரோகிகளிற்கு கொண்ட்ராஸ் வழங்கும் தண்டனை முறைகளின் குரூரத்திலிருந்து டெக்ஸ் நிகழ்த்தும் கொண்ட்ராஸ் குறித்த உளவியல் அலசல், எதிரிக்கு எதிரியை உன் நண்பனாக்கு, அவனிடமிருந்து உன் எதிரி பற்றிய தகவலறி, அவனை உன் எதிரிக்கு எதிராக செயற்பட திருப்பு எனும் தத்துவம், தேசபக்தி எனும் பெயரில் நிகழும் அக்கிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்களை தன் ரகசிய திட்டத்திற்கு சாதகமான காரியங்களையாற்ற பயன்படுத்தல், தீவிர நடவடிக்கை அமுலாக்கப்பட வேண்டிய ஸ்தலத்தில் ஒரு உளவாளிக்கு இருக்க வேண்டிய அவதானச்செறிவு, அந்த அவதானங்களை தனக்கு சாதகமான வகையில் நடைமுறை செயற்பாடுகளாக மாற்றிடக்கூடிய நுட்பங்கள் அல்லது அந்த நுட்பங்களில் திறமைசாலிகளை கண்டடைந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் ஞானம். டெக்ஸின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெருமேற்கின் உன்னதமான உளவாளி அவர் என்பதை செவ்விந்திய புகைச்செய்திபோல வானில் எழுதுகின்றன.
டெக்ஸ், தங்கம் ஏற்றி வரும் ரயில் பயணிக்கும்பாதையை நோட்டமிடும் தருணங்களில் ஓவியர் ஹோசே ஒர்ட்டிஸ் தன் திறமையை சந்தைப்படுத்த தவறவே இல்லை. பறவைக்கோணச் சித்திரங்கள் வழியும், வானிலிருந்து கீழ்நோக்கி விழும் மழைத்துளிகள் வழியும், கறுப்பையும், வெள்ளையையும் கலந்து அவர் தேர்ந்த ஒரு வித்தைக்காரன்போல் தன் சித்திரங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். சில இடங்களில் சிறுவன் ஒருவனின் கிறுக்கல்கள் போல தோன்றும் ஒர்ட்டிஸின் சித்திரங்கள் அச்சித்திரங்களிலுள்ள பாத்திரங்கள் யார் என்பதை வாசகன் ஊகித்தறிய செய்யும் தன்மை கொண்டதாகவும் திடீரென அந்த கிறுக்கல் விடுபட்டு தெளிவான கோடுகளுடன் அசரவைக்கும் சித்திரங்கள் பாத்திரங்களில் உயிர்நடனமிடும் பாவங்களுடன் உருப்பெறுவதாகவும் ரசவாதம் நிகழ்த்தியவாறே கதை நெடுக நகர்ந்து செல்கின்றன. ஹோசே ஓர்டிஸ் டெக்ஸ் கதைகளில் பணியாற்றிய மிகத்திறமை வாய்ந்த ஒரு கலைஞர் என்பது தெளிவு. அவர் சித்திரங்களில் வாழும் இலகுதன்மை பார்த்து உணரப்படவேண்டிய ஒன்று.
tb6கதாசிரியர் Antonio Segura உருவாக்கியிருக்கும் கதை டெக்ஸின் கதைக்குரிய வழமையான பலவீனங்களை தன்னில் கொண்டிருக்கிறது இருப்பினும் அவற்றை ஒரு வாசகன் கடந்து வந்து டெக்ஸ் நிதானமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு அதனைக் கொண்டு கொண்ட்ராஸிற்கு எதிராக காய் நகர்த்துவதை படிப்படியாக சுவையுடனும் விறுவிறுப்புடனும் விபரிக்கிறது. கொண்ட்ராஸ், டெக்ஸ் ஆகியோரின் திட்ட உருவாக்கல்களில் சதுரங்க ஆட்டம் சித்திரங்களில் உள்ளவாறு கதை உருவாக்கப்பட்டு சதுரங்க ஆட்டம் குறியீடான ஒன்றாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு எதிராளியின் அடுத்த நகர்வு என்ன என்பதை முன்னமே ஊகித்து அதற்கு எதிராக சில காய் நகர்வுகளை தன் மனதின் ஓரத்தில் திட்டமிடும் தேர்ந்த ஒரு சதுரங்க ஆட்டக்காரன் போலவே டெக்ஸும், கொண்ட்ராஸும் தம் திட்டங்களை சதுரங்க காய்கள் போல நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் முறியடிக்கப்பட்டால் அதற்கான எதிர்திட்டம் என கதையில் விறுவிறுப்பு நிதானமான திட்டமிடலுடன் கைகோர்த்து வாசிப்பின் சுவையை தக்க வைக்கிறது.
பெருமேற்கில் இவ்வகையான சாகசங்களை நிகழ்த்தும் மனிதர்களிற்கு ஒரு நல்ல குளியல் வழங்ககூடிய களிப்பையோ, ஒரு நல்ல குளிர்ச்சியான பீர் மற்றும் வாட்டிய தடித்த இறைச்சி துண்டங்கள் தீர்க்கும் தாகங்களையோ அல்லது பசியையோகூட கதாசிரியர் தவறவிட்டார் இல்லை. பெருமேற்கின் வறண்ட பாலையில் அலைந்து திரிந்து நகரொன்றில் நுழையும் ஆணிற்கு அழகான நங்கை ஒருத்தி தரக்கூடிய உணர்வுகளையும் அவர் ஒதுக்கினார் இல்லை. அதிரடி, விறுவிறுப்பு, பின் அங்காங்கே இழையோடும் நகைச்சுவை என அந்தோனியா செகுராவின் கதை ஒரு ருசியான கலவை. கவச ரயில் என பிரெஞ்சு தலைப்பு இருந்தாலும் கவச ரயில் கதையில் அதிக முக்கியத்துவம் பெற்றிடவில்லை. மாறாக டெக்ஸ் இந்தக் கவச ரயிலின் பாதுகாப்பிலிருந்து எப்படி கொண்ட்ராஸின் தங்கத்தையும் ஆயுதங்களையும் கவர்கிறார் என்பதே கதையின் இறுதிப்பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது. தான் சேர்த்த மனிதர்களின் துணையுடன் டெக்ஸ் நிகழ்த்தும் இந்த சாகசம் உங்களை நீங்கள் இறங்க வேண்டிய தரிப்பை தவறவைக்கும் சக்தி கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. தேசபக்தி, நட்பு, காதல், பாசம், துரோகம் வீரம் அதிரடி என நகரும் கதை இறுதியில் ஒரு திருப்பத்தையும் டெக்ஸின் அதிரடியான் முடிவுடனும் நிறைவுறுகிறது. டெக்ஸ் டிக்கெட் இல்லாது ரயிலில் ஏறினாலும் அவர் தன் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவே இல்லை.

Wednesday, August 1, 2012

ஜில்ஜில்லின் ஆரம்பகால சாகஸங்கள்


felixdupcouv01துப்பறிவாளர் Gil Jourdan அவர்கள் இரும்புக்கை மாயாவிக்கு முன்பாகவே தன் அறிமுகத்தை பிரெஞ்சு பெல்ஜிய காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி கொண்டவர் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்பிரு எனும் பெல்ஜிய காமிக்ஸ் சஞ்சிகையை நண்பர்கள் மறந்திருக்க முடியுமா! அல்லது அந்த சஞ்சிகையை ஆரம்பித்த ஜான் டுப்புயி தான் எமக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆளுமையா. இல்லை ஜான் டுப்புயின் பதிப்பகமான டுப்புயி வெளியீடுகளாக வெளிவரும் கதைகளான லார்கோ வின்ஞ் போன்றவற்றுடன்தான் எமக்கு அறிமுகம் கிடையாதா? இல்லை என்று நீங்கள் பதிலிறுத்தால் அதனால் ஒரு குடியும் மூழ்கிப்போய்விடாது. இருப்பினும் இரும்புக்கை மாயாவிக்கு மூத்தவர் ஜில்  என்பதை நாங்கள் அறிவதற்கு, 1956 ம் ஆண்டின் செப்டெம்பரில் வெளியான 962 ம்  ஸ்பிரு சஞ்சிகையில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் ஆரம்பமாகின என்பதை தெரிந்து கொள்வது நலம்.
Maurice Tillieux எனும் பெல்ஜியக் கலைஞரால் உருவாக்கப்பட்டவரே ஜில் ஜோர்டான். மாரிஸ் திலியூவின் இன்னுமொரு பாத்திரமான துப்பறிவாளர் Felix ஐ சார்ந்தே ஸ்பிருவிற்காக ஜில் ஜோர்டானை மாரிஸ் திலியூ உருவாக்கினார். மேலும் நம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் அபிமான துப்பறிவாளர்களில் ஒருவரான Jess Long ன் கதைகளிலும் கதாசிரியராக மாரிஸ் திலியூ பணியாற்றியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒரு சங்கதியே. ஆகவே இரும்புக்கை மாயாவியை விட ஜில்லு கொஞ்சம் ஓல்டு என்பதை மனதில் இருத்திக் கொள்ளத் தவறாதீர்கள். ஏறக்குறைய 56 வருடங்களின் பின்னாக தமிழில் அறிமுகமாகவிருக்கும் ஜில் ஜோர்டானை நாம் கண்டிப்பாக வரவேற்போம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. ஏனெனில் நாம் பழமையின் காவலர்கள், ரசிகர்கள், போராளிகள்.
1985 களில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் அவற்றின் முப்பதாவது வருட நிறைவை எட்டி சென்று கொண்டிருந்த வேளையில் டுப்புயி பதிப்பகமானது ஜில் ஜோர்டானின் சாகசங்களை சிறு சிறு தொகுப்புகளாக வெளியிட்டது. அந்த தொகுப்புகளை டுப்புயி Tout Gil Jourdan என தலைப்பிட்டிருந்தது. அத்தலைப்பின் கீழ் முதல் வெளிவந்த ஆல்பம்தான் Premieres Adventures. ஜில் ஜூர்டானின்  மூன்று ஆரம்பகால சாகசங்களையும், இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொன் அவர்களின் இரு கதைகளையும் கொண்ட தொகுப்பாக இத் தொகுப்பு அமைகிறது.
தொகுப்பின் முதல் கதையாக இருப்பது La Poursuite [ தேடல் வேட்டை ]. இக்கதையானது 1963ல் உருவான கதையாகவிருந்தாலும் ஜில்ஜில்லின் கதைகளின் பிரதான பாத்திரங்களான இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொனிற்கும் பிரபல திருடன் ஆண்ட்ரூ லிபெலூயுலிற்கும் இடையிலான அறிமுகத்தை விபரிக்கிறது. அவ்வகையில் தொகுப்பில் பின் வரும் மூன்று கதைகளிற்கும் சிறப்பான ஒரு அறிமுகமாக இக்கதை அமைகிறது. இக்கதையில் ஜில்ஜில் பங்கு வகிப்பதில்லை.
பிரபல பாடகியான லோலா மார்டினோவின் நகைகள் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து திருடப்பட்டுவிடுகிறது. இதை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் க்ருட்டொனிடம் தருகிறார் தலைமைப் பொலிஸ் அதிகாரி….. கதையில் இன்ஸ்பெக்டர் க்ருட்டொன் தன் திறமைமேல் அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் தேடல்களிலும், விசாரணைகளிலும் எதுவுமே அவரிற்கு சாதகமாக அமைந்து விடுவதில்லை. க்ருட்டொனின் மேலதிகாரிக்கு க்ருட்டொனைக் கண்டால் அன்றைய நாள் பாழாகி விடும் எனும் நம்பிக்கை இருக்கிறது. வேறு இன்ஸ்பெக்டெர்கள் இல்லாத நிலையிலேயே க்ருட்டொனிடம் அவர் குற்றங்களிற்கான விசாரணை நடவடிக்கையை வழங்குகிறார். இருப்பினும் பொலிஸ் பணியின் மாறாத சலிப்பிலும் அழுத்தங்களிலும் இருந்து அவரிற்கு கிடைக்கும் ஒரு விடுதலையாகவே க்ருட்டொன் இருக்கிறார். இதை மேலதிகாரியே க்ருட்டொனின் ராஜினாமவைத் தான் ஏற்றுக் கொள்ளாமைக்கு ஒரு காரணமாக கதையில் கூறுகிறார். கறுப்பு கோட், சூட், தொப்பி, நீலக் கழுத்து பட்டி, சிவப்பு மீசை, வழுக்கை ஆக்கிரமித்த தலை, கையில் ஒரு தடி, வாயில் புகையும் ஒரு சிகரெட் இவ்வாறான ஒரு அசத்தல் உடையலங்காரத்தோடு விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் க்ருட்டொனிற்கு தன் குரல் வளத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. இசைத்துறையில் ஒரு உச்ச இடத்தை தான் எட்டியிருக்கலாம் எனும் கருத்தை வாசகர்கள் மத்தியில் இக்கதையில் க்ருட்டொன் பகிர்ந்து கொள்ள தவறவில்லை. இருப்பினும் விசாரணையின் ஆரம்பத்தில் தேனாக இனித்த பாடகி லோலா மார்டினோவின் பாடல்கள் விசாரணை முடிவில் க்ருட்டொனிற்கு சகிக்க முடியாதவையாக மாறிவிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.
gj1குத்து ரம்யா, தொரசிங்கம், க்விக் போஸ்ட் ரஃபிக் என்பது போலத்தான் ஜூல்ஸ் க்ருட்டொன். குத்து, சிங்கம், க்விக் போஸ்ட் என்பதற்கு வாசகர்கள் அர்த்தங்களை உணர்ந்து கொள்வீர்கள் அதுபோலவே Crouton எனும் சொல் சற்று கடினமான மேற்பரப்பை குறிக்கும் ஒன்றாகும். உதாரணமாக மசால் வடையின் மேற்பரப்பு சற்று மொறுமொறு கடினத்தோடு இருப்பதை போல். அதற்காக ரஸ்க்கு ஜூல்ஸ் என க்ருட்டொனை நாம் அழைக்க முடியுமா என்ன. மேற்பரப்பில் சற்று கடினமாகவும் உள்ளே சுவையான குணங்களும் கொண்ட ஒரு பாத்திரம் அவர் என மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் பிரபல திருடன் ஆண்ட்ரு லிபெலூயுலில் இருக்கும் Libellule என்பது ஒரு வகை தும்பியைக் குறிப்பிடுகிறது. தும்பியின் லாவகத்தோடு பாதுகாப்பு பெட்டகங்களை திறக்கும் ஒரு திறமைசாலி என இதை இங்கு எடுத்துக் கொள்ள முடியும்!!! ஆண்ட்ரு லிபெலூயுலின் மூச்சுக் காற்று பூட்டுக்கள் மேல் பட்டாலே போதும் பூட்டுக்கள் தானாக திறக்கும் என ஒரு வதந்தி பிரான்சு மக்கள் மத்தியில் உலவி வருகிறது. நகைச்சுவை குணமும், சேஷ்டைகளும் கொண்ட ஆண்ட்ருவிற்கு மஞ்சள் வண்ண கோட் சூட், தொப்பி, டை, வாயில் ஒரு சிகரெட் என உடையலங்காரம் உண்டு. சுறுசுறுப்பாக இயங்கும் ஆண்ட்ரு இன்ஸ்பெக்டெர் க்ருட்டொனிற்கு தண்ணி காட்டுவதில் கில்லாடி. தேடல் வேட்டையில் நகைச்சுவை என்பது க்ருட்டொன், ஆண்ட்ருவை துரத்தும் காட்சிகளிலேயே அதிகம் காணப்படும். ஆண்ட்ரு வார்த்தை விளையாட்டுகளிலும் தேர்ந்தவன். ஆனால் இந்த வார்த்தை விளையாட்டுக்கள் வாசகர்களிற்கு நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம் இல்லை என்பதை கதை தெளிவாக்குகிறது. இறுதியில் ஆன்ட்ரு சிறைக்கு செல்கிறான் என்பதோடு கதை முடிகிறது. ஆனால் சிறையறையில் அவன் எல்லா பொலிஸ் அதிகாரிகளுமே க்ருட்டொன்போல் இருந்து விட்டால் இந்த வாழ்க்கை இனிமையாக இருந்துவிடும் என்று எண்ணுவதாக கதை நிறைவு பெறுகிறது.

தொகுப்பில் அடுத்து வரும் கதை Libellule S’ Evade [ தப்பியோடும் தும்பி!]. ஜில்ஜிலின் முதல் சாகசம் இது. எட்டு வருட சிறைத்தண்டனையின் பின்பாக பிரபல திருடனான தும்பியை இன்ஸ்பெக்டர் ரஸ்க் சிறைக்கு சென்று அழைத்து வருகிறார். பிரபல பாடகி லோலாவின் நகைகள் எங்கிருக்கின்றன என்பதை தும்பியிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் இன்ஸ்பெக்டர் ரஸ்க் ஆர்வமாகவிருக்கிறார். ஆனால் வழியில் தன் கால்கள் வலிக்கின்றன என ரஸ்க்கிடம் குறைசொல்லி தும்பி முறையிட, டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணமாகிறார்கள் ரஸ்க்கும், தும்பியும். செல்லும் வழியில் டாக்ஸி சாரதி ரஸ்க்கை நடுவழியில் லபோ என தவிக்க விட்டுவிட்டு தும்பியை காப்பாற்றிக் கொண்டு செல்கிறான். இவ்வாறாக தும்பியைக் காப்பாற்றி செல்லும் டாக்ஸி சாரதியாகவே ஜில்ஜில் வாசகர்களிற்கு தன்னை கதையில் அறிமுகமாக்கி கொள்கிறார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவரான ஜில்ஜில், துப்பறியும் துறைக்கு புதியவர். தன் கையிலிருந்த சொற்ப காசு அனைத்தையும் துப்பறியும் தொழிலில் இறங்குவதற்காக முதலிட்டவர். ஆறுமாத காலத்திற்குள் தன் பெயர்பெற்ற ஒரு துப்பறிவாளராக ஆகவேண்டும் என்பது அவரது இலக்கு.

GilJourdan1tl_06082008_225626
தான் பணியாற்றும் துறையில் மிகவும் உபயோகப்படக்கூடிய திறமைகளைக் கொண்ட தும்பியை அவர் தன் உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். ஜில்ஜில்லின் பாசமான மிரட்டல்களிற்கு பயந்தே தும்பி ஜில்ஜில்லிற்கு உதவியாளனாக சேர்ந்து கொள்கிறான். ஏனெனில் வேலை பார்ப்பது என்பது அவனிற்கு பிடிக்காத ஒரு விடயமாகும். ஜில்ஜில்லின் காரியதரிசியாக கதையில் Queue de Cerise எனும் இளம் பெண் அறிமுகமாகிறார். ஒரு ரயில் விபத்தில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்த செர்ரி [காம்பு] மிகவும் துடிதுடிப்பான, புத்திசாலியான, ஒன்பது மொழிகள் அறிந்த ஒரு இளம் பெண். ஜில்ஜில் ஜோர்டானின் அலுவலகம் ஒரு மதுவிடுதியின் மேல் ஒரு சிறிய அறையிலேயே அமைந்திருக்கிறது. ஆறுமாத காலத்திற்குள் பிரபலமாகிட விரும்பும் ஜில்ஜில் அதற்கான நடவடிக்கையாக தேர்ந்தெடுப்பது போதை மருந்து கடத்தல் பற்றிய விசாரணையையே. பிரான்சில் பெருகிவரும் போதை மருந்து விற்பனையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிந்துவிடத் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் ஜில்ஜில், இதேவேளை தும்பியை தப்பவிட்ட காரணத்திற்காக பொலிஸின் போதைமருந்து தடுப்பு பிரிவிற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டெர் ரஸ்க். நீலக் கோட் சூட், சிவப்பு கழுத்து பட்டி, மோஸ்தரான சிகையலங்காரம், எடுப்பான ஒரு மழைக் கோட் என அட்டகாசமான இளைமை ஜொலிக்கும் பாத்திரமாக கதையில் ஜில்ஜில் தென்படுகிறார். இன்ஸ்பெக்டெர் ரஸ்க் குறித்த ஒரு எள்ளல் மனப்பான்மையையே இக்கதையில் ஜில்ஜில் தன்னில் கொண்டிருக்கிறார்.

தொகுப்பில் இரு கதைகளை படித்துக் கொண்டு வருகையில் மாரிஸ் திலியூவின் சித்திரங்கள் மீது ஒரு தனி அபிமானம் வந்து விடுகிறது. தெருவில் நடக்கும் காட்சிகளில் எல்லாம் சிறு சிறு மாந்தர் வழி அப்பகுதியின் வாழ்க்கையின் கூறுகளை நகைச்சுவை வண்ணம் கலந்து வரைந்து தள்ளியிருக்கிறார் திலியூ. புகைப்பிடித்தல் என்பது அக்காலத்தில் எப்படியான ஒரு ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருக்கிறது என்பதை அவர் சித்திரமாந்தர்களின் வாயில் புகையும் சிகரெட்டுக்களையோ அல்லது சுருட்டுக்களையோ அல்லது சுங்கான்களையோ வைத்து அறிந்து கொள்ளலாம். பழைய மாடல் கார்களும், பழமை செறிந்த கட்டிடங்களும் என அது ஒரு தனி உலகமாகவே இன்று தெரிகிறது. குப்பைகளை வெளியே வைக்கும் தொழிலாளியோ அல்லது தன் நாயுடன் தெருவில் உலாவரும் சீமாட்டியோ அல்லது ரயிலில் பயணிக்கும்போது பன்றி வளர்பது எப்படி எனும் புத்தகத்தை படித்துக் கொண்டு செல்லும் பண்ணையாரோ யாராக இருந்தாலும் திலியூவின் சித்திரங்களில் நுழைந்து  அக்கதை நடந்த காலத்தின், சூழலின் ஆன்மாக்களை கதைக்குள் எளிதாக கொணர வைத்து விடுகிறார்கள். கதை நடந்த காலத்தில் ஒரு பகுதியின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அவர் சித்திரங்கள் தெளிவான கோடுகளால் வரையறுக்கின்றன. முகபாவனைகளிலும் உடல் மொழிகளிலும் உணர்வுகளை மிகச்சிறப்பாகவும் அதே வகையில் அந்த தருணத்திற்குரிய நகைச்சுவையை இழந்து விடாமலும் எதார்த்தமாக இயங்கியிருக்கிறார் மாரிஸ் திலியூ. பாரிஸின் அந்தகாலத் தோற்றத்தை திலியூவின் கைத்திறமையில் பார்ப்பது ஒரு தனியனுபவம் என்பதனையும், ஏன் ஜில்ஜில் கதைகள் ஐரோப்பிய காமிக்ஸ்களில் தலைசிறந்த வகையை சார்ந்தவை என்பதையும் என்னால் இப்போது சிறிது புரிந்துகொள்ள முடிகிறது.

gj2தொகுப்பின் மூன்றாவது கதையான Popaine et Vieux Tableaux [பொப்பேய்னும், பழைய ஓவியங்களும்] தப்பியோடும் தும்பி கதையின் தொடர்ச்சியே. அக்கதையில் ஜில்ஜில் ஆரம்பித்த விசாரணை இப்பாகத்தில் நிறைவுக்கு வருகிறது. காக்கெய்னையே இங்கு திலியூ பொப்பேய்ன் எனக் குறிப்பிடுகிறார். இதற்கு அக்காலத்தில் நிலவிய தணிக்கை காரணம் எனப் படித்தேன். கதையின் வேகம் மிகவும் மெதுவானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கதையில் பரபரப்பு என்பதன் அளவு மிகவும் சிறியதே. ஏன் அந்தப் பரபரப்பை இன்றையகால வாசகன் உணராமலே போய்விடக்கூடிய நிலையும் இருக்கிறது எனலாம். இருப்பினும் காதில் பூச்சுற்றும் கதை வகை அல்ல திலியூவுடையது. கதையின் நம்பகத்தன்மைக்காக அவர் மிகவும் எதார்த்தமான விளக்கங்களுடன் கதையை உருவாக்கி இருக்கிறார். ஜில் ஜோர்டான் பாத்திரம் தன் உதவியாளான தும்பி மேல் வன்முறையிலும் இறங்க தவறுவதில்லை என்பது இன்றைய நிலையில் சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது. பழைய ஓவியங்கள் கதையில் அவர் மாறு வேட திறமையும், மிமிக்ரி திறமையும் வெளியாகின்றன.  ஜில்ஜில்லின் காரியதரிசி செர்ரியும் இக்கதையில் சிறப்பான பங்கை வகிக்க ஆரம்பிப்பார்.

நவீன ஓவியப்பாணிகள், ஓவியங்கள், ஓவியர்கள் குறித்த சிலேடை கலந்த கிண்டல்கள் கதையில் அதிகம் இருக்கின்றன. இவ்வகையான ஓவியங்கள் மீதான மேல்வர்க்கத்தினரின் பாசாங்கு பார்வைகளையும் ரசனையையும் புரிதலையும் கடுமையான கிண்டலாக்கி எழுதியிருக்கிறார் மாரிஸ் திலியூ ஆனால் இவை சிரிப்பை இன்று வரவழைக்கும் சுவையுடன் இல்லை என்பது வேதனையானதே.

தன் சாகசங்கள் பற்றிய தகவல்களை ஒரு பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக விற்பதன் வழியாக இந்த போதைப் பொருள் விசாரணையில் சிறிது பணத்தையும், விளம்பரத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார் ஜில்ஜில். இறுதியில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கே விசாரணையின் வெற்றிக்கு காரணம் எனப் புகழ்ந்து கதையில் ரஸ்கிற்கு இழைந்த கொடுமைகள் எல்லாவற்றிற்கும் ஜில்ஜில் பரிகாரம் தேடிக் கொள்ள விழைகிறார். இதே சந்தர்பத்தில் தன்மீதும் இன்ஸ்பெக்டெர் ரஸ்க் சிறிது கருணை காட்ட வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொள்கிறான் தும்பி. இவ்வகையான சுபமான தருணங்களுடன் இக்கதை நிறைவு பெறுகிறது.

இன்னம் தொகுப்பில் எஞ்சியிருக்கும் இரு கதைகளில் இறுதியாக வழங்கப்பட்டிருக்கும் கதையான Les Vacances de Crouton [ரஸ்க்கின் விடுமுறை] , ஐந்து பக்கங்களில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கின் துரதிர்ஷ்டமான விடுமுறை ஒன்றை விபரிக்கும் ஒரு சிறு கதை ஆகும். இத்தொகுப்பில் இருக்கும் மிக மோசமான கதை இதுவே. இதை ஒரு பக்க நிரப்பியாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தொகுப்பின் பக்கங்களை சிறப்பாக நிரப்பிடும் இச்சிறு துணுக்குக்கதை வாசகர்கள்  மனதை எரிச்சலால் நிரப்ப  வைக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Couv_168372ஜில்ஜில்லின் மூன்றாவது சாகசமான La Voiture Immergé ஐ நான் படித்து முடித்தபோது எனக்கு மிகவும் வழக்காமான ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. ஜில் ஜோர்டானின் சிறந்த கதைகளில் தலையாயது இதுவே எனவே இக்கதை தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் ஜில்ஜில்லின் மூன்று சாகசங்களிலும் நான் பெற்ற வாசிப்பனுபவம் சுவை குறைவாகவிருந்தது [கடலில்] அமிழ்ந்த மோட்டார் வண்டி கதையே என்பேன்.

நிக்கிட்டா சிக்ஸ் எனும் அரும் கலைப்பொருள் சேகரிப்பாளர் தனக்கு வந்த அனானிக் கடிதம் ஒன்றை படித்த பின்பாக குஜால் குதிரை வீரன் கோட்டைக்கு பயணமாகி அங்கிருந்து திரும்பும் வழியில் எந்த தடயமுமில்லாமல் மறைந்து போய்விடுகிறார். அவர் மோட்டார் வண்டி மட்டும் கடலில் அமிழ்ந்த நிலையில் கண்டு பிடிக்கப்படுகிறது. இதையடுத்து நிக்கிட்டா சிக்ஸின் உறவினரான ஹென்ரி சிக்ஸ் இவ்விவகாரத்தை துப்பறியும்படி ஜில்ஜில்லிடம் பணியை வழங்குகிறார். ஜில்ஜில்லும் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்.

முதல் இரு ஜில்ஜில் சாகசங்களில் மதுவிடுதிக்கு மேல் அமைந்திருந்த ஜில் ஜோர்டானின் ஆலுவலகம் இக்கதையில் பாரிஸின் பரபரப்பானதும் கவுரவமானதுமான ஒரு பகுதியில் மிகப் பெரிய ஒரு அலுவலகமாக உருவெடுத்திருப்பதை வாசகர்கள் முதலில் அவதானிக்கலாம். ஜில்ஜில் கொஞ்சம் வசதி படைத்த துப்பறிவாளராக ஆகிவிட்டார் என்பதும், அவர் துப்பறியும் தொழில் அவரிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பதையும் ஒருவர் இங்கு உடனே உணர்ந்து கொள்ள முடியும். அதே போல் முன்னைய சாகசங்களில் பணத்தை எச்சிக்கையால் காக்காயை விரட்டாதவர் போல செலவிட்ட ஜில்ஜில் இங்கு தன் விசாரணைகளில் தனக்கு உதவுவர்களிற்கு ஆயிரம் பிராங்கு நோட்டு ஒன்றை படு சுளுவாகவும் ஸ்டைலாகவும் எடுத்து நீட்டுவது மலைக்க வைக்கிறது. இது எல்லாம் போதாது என்று ஜோரான மோட்டார் வண்டி ஒன்றையும் அவர் தன் சொந்தமாக்கி கொண்டிருப்பது அக்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் கண்டிப்பாக தாமும் ஒரு துப்பறிவாளராகி விடவேண்டும் எனும் ஒரு இனிய கனவை உருவாக்க உதவியிருக்கும்.

giljourdantout02gj3ஏளனமாகவும், கிண்டலுடனும் முன்னைய கதைகளில் நெருங்கப்பட்ட இன்ஸ்பெக்டெர் ரஸ்க்குடன் இக்கதையில் தனது விசாரணைகளில் ஜில்ஜில் இணைந்து செயல்படுகிறார். அதேபோல தும்பியும் பொலிஸ் கெடுபிடிகள் இல்லாத ஒரு நபராகவே கதையில் உலாவருகிறான். முன்னைய கதைகளை விட இக்கதை சற்று பரபரப்பாக நகரக்கூடியதாக இருந்தாலும் அக்கதைகளில் காணக்கிடந்த, சுவைக்க முடிந்த, உணரக்கூடிய நகைச்சுவை, சித்திரங்களின் உயிரோட்டம், சித்திரங்கள் வாசகன் மனதில் நிகழ்த்தும் அந்த அற்புத வேதியியல் மாற்றம் என்பன இக்கதையில் மிகக்குறைந்த அளவிலேயே உணரப்படக்கூடியதாக இருக்கிறது என்பேன்.

பரபரப்பாகவும், நகைச்சுவையுடனும் ஆரம்பமான கடலில் அமிழ்ந்த மோட்டார் வண்டி விசாரணைகளின் நகர்வுடன் வேகமெடுப்பதுபோல தோன்றினாலும் சலிப்பான வாசிப்பனுபவத்தையே தருகிறது. தும்பி பாத்திரத்தின் காரணமே இல்லாத கோபச்சீற்றங்களும், உளறல்களும் படிப்பவர் மீது தம் கனத்தை அழுத்தமாக பதித்து நகைச்சுவைக்கு பதிலாக எரிச்சலையும், சலிப்பையுமே தருகின்றன. திலியூ தன் எதார்த்தமான துப்பறியும் கதை நகர்வை கையாண்டு இருந்தாலும், கதை வெளியாகிய காலகட்டத்தில் பிரம்மிக்க வைக்கும் குற்ற நுட்பங்களை கதையில் உபயோகித்து இருந்தாலும் அவற்றின் பாதிப்பு என்பது இன்றைய நாட்களில் அதிகமான ஒன்றாக இருக்கவில்லை. ஜில்ஜில்லுடன் என்னால் நெருங்கி கொள்ள முடியவில்லை. வாசகன் ஒருவன் தொலைவில் நின்று பார்த்து விலகும் ஒரு கதைமாந்தரின் நெருக்கமே ஜில்ஜில்லிடம் இருந்து எனக்கு கிடைத்தது. மாறாக இன்ஸ்பெக்டெர் க்ருட்டொன் மனதைக் கவர்கிறார். மனதைக் கவர்ந்திருக்ககூடிய தும்பியும் தன் மேலதிக அலட்டல்களினால் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்.

இருப்பினும் ஜில் ஜோர்டான் வரவேற்கப்பட வேண்டிய ஒருவரே. ஐரோப்பிய காமிக்ஸ்களின் சிறந்த ஒரு கிளாசிக் வகை என்பதாலும். திலியூவின் சித்திரங்களிற்காகவும். ஜில்ஜில்லின் முதல் இரு சாகசங்களையும் படிக்கும் வாய்ப்பு உங்களிற்கு கிடைத்தால் அவற்றை கண்டிப்பாக படித்து அவரின் மூன்றாவது சாகசத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஜில்ஜில்லிற்கு வரவேற்பு ஜில் லாக இருக்குமா என்பதை இன்னம் சிறிது காலத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.