பில்லி சூனியங்களும், பைசாசங்களும், இருளும் தங்கள் கிளைகளைத் தடையற்று விரித்துக் கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். தீமையின் கருவான சாத்தானையும், அவன் ஏவலர்களையும் எதிர்த்துப் போராட எவருமே இல்லை என்பதால் தீமை தன் எல்லைகளை உலகில் விரிவு படுத்திக் கொண்டிருந்தது.
சாலமன் கேன், இங்கிலாந்து நாட்டிற்காக யுத்தங்களில் பங்கு கொள்ளும் ஒரு போர் வெறியன். போர்க்களமே அவன் இனிய இல்லம். உயிர்களை அறுப்பது என்பது அவனிற்கு மிக லகுவானது. எதிரியின் ரத்தத்தில் முகம் துடைப்பது அவனிற்கு மிகப் பிடித்தமானது. வன்முறையைப் போற்றும், அழிவை விதைக்கும் ஒரு முரடன் அவன்.
ஆபிரிக்காவில் இடம்பெறும் குரூரமான யுத்தம் ஒன்றில் எதிரிகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்ளும் சாலமன், அரண்மனையில் உள்ள மன்னனின் அறையைச் தன் சக வீரர்களுடன் தேடிச் செல்கிறான். சபிக்கப்பட்டிருக்கும் அந்த அரண்மனையில் இருக்கும் மாயக் கண்ணாடிகளில் அடைபட்டு இருக்கும் கொடிய பைசாசங்கள் சாலமனின் வீரர்களை ஒவ்வொருவராக தங்கள் கண்ணாடிகளிற்குள் இழுத்துக் கொள்கின்றன.
இதைப் பொருட்படுத்தாத சாலமன் அச்சமின்றி மன்னனின் அறைக்குள் நுழைகிறான். வழமைக்கு மாறாக குளிர் உடுத்தியிருந்த அந்த அறையின் கதவுகள் அவன் பின் மூடிக்கொள்கின்றன. அறையின் காற்றில் கரிய நிற இழைகள் உருவாகி வேகமாக ஓட ஆரம்பிக்கின்றன. இக்கரிய நிற இழைகள் யாவும் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஒரு நெடிய, கரிய உருவம்.
சாத்தானிற்காக ஆன்மாக்களை அறுவடை செய்பவன் என்று கொடூரமான குரலில் தன்னை அறிமுகம் செய்யும் அந்தக் கரிய அங்கி அணிந்த உருவம், சாலமனின் ஆன்மா சபிக்கப்பட்டது என்பதையும் அவனின் ஆன்மாவை சாத்தானிற்காக பறித்துக்கொள்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது. சாலமன் எதிர்ப்பதை விட்டு விட்டு தன் முன் மண்டியிடும்படி அவ்வுருவம் சாலமனிற்கு கட்டளையிடுகிறது.
சாத்தானின் அறுவடையாளனின் மிரட்டல்களிற்கு அடங்காத சாலமன் அவனை எதிர்த்து மோதி அவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபிரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பும் சாலமன், தன் செல்வங்களை திருச்சபைக்கு தந்து, வன்முறைகளைத் துறந்து, ஓர் துறவி மடத்தில் சென்று அடைக்கலம் பெற்றுக் கொள்கிறான். அமைதியின் பாதைக்கு திரும்பி விட்ட ஒரு மனிதனாக வாழ்வதற்கு முயல்கிறான்.
மடத்தில் தங்கியிருக்கும் சாலமனைக் குறித்து துர்க்கனவுகளைக் காணும் துறவி மடத்தின் தலைமைத் துறவி, சாலமனை அம்மடத்தினை விட்டு நீங்கும்படி கேட்டுக்கொள்கிறார். சாலமனின் வேண்டுதல்களை உறுதியுடன் தட்டிக்கழித்து விடும் தலைமைத்துறவி, சாலமனை துறவி மடத்தில் இனி தங்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிடுகிறார்.
அடைக்கலம் புறக்கணிக்கப்பட்ட வேதனையுடன் துறவி மடத்தை விட்டு நீங்கிச் செல்கிறான் சாலமன். கருமை சூழ்ந்த வானம், விடாது கொட்டும் மெல்லிய பனி, நினைத்தவுடன் பொழியும் மழை என்பவற்றினூடு மரங்கள் அடர்ந்த பாதைகளில் தன் பயணத்தை தொடர்கிறான் அவன்.
அவன் செல்லும் வழிகளில் கறுப்பு மரணத்தின் கோரப்பிடியை அவன் காண்கிறான். தூக்கு மரங்களில் உயிரற்ற மனித உடல்கள் தோரணங்களாக தொங்குகின்றன. இவை யாவற்றையும் மெளனமான ஒரு பார்வையுடன் கடந்து செல்கிறான் சாலமன்.
நீண்ட பயணத்தின் இடையில், காட்டு வழியில் சிறிது ஓய்வெடுப்பதற்காக தங்கும் சாலமனை கள்வர்கள் தாக்குகிறார்கள். அமைதி வழிக்கு திரும்பி வன்முறையைக் கைவிட்ட சாலமன் அவர்களை திருப்பித்தாக்காது இருக்கிறான். கள்வர்கள் அடிக்கும் அடியில் துவண்டு மயங்கி விடுகிறான். மயங்கிக் கிடந்த சாலமனை அவ்வழியே தன் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கும் வில்லியம் என்பவன் காப்பாற்றுகிறான்.
இங்கிலாந்தை விட்டு நீங்கி, அமெரிக்காவிற்கு சென்று ஒரு புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக தன் மனைவி, மகன்கள், மகள் மெரிடித் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறான் வில்லியம். வில்லியம் குடும்பத்தின் கனிவான பராமரிப்பில் உடல் நலம் தேறும் சாலமன், அவர்களுடன் தன் பயணத்தை தொடர்கிறான்.
அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் அந்தப் பிரதேசத்தில் மலாக்காய் எனும் துர் மாந்திரீகன் தன் வன்முறை ஆதிக்கத்தை குரூரமான வழிகளால் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறான்.
மலாக்காய், தன் துர் மாந்தீரிகத்தால் தனக்கு அடிமையான, முகமூடி அணிந்த ஒரு குதிரை வீரன் மூலம், அப்பிரதேசத்தில் வாழும் வலிமை நிறைந்த ஆண்களை தன் மந்திரக் கட்டிற்குள் கொணர்ந்து, தன் நாச வேலைகளை இயற்றும் ஏவலர்களாக உருமாற்றுகிறான். வலிமையற்றவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் நர மாமிசம் உண்ணும் நடைப் பிணங்களாக நிலத்திற்கு அடியில் வாழ்கிறார்கள்.
வில்லியம் குடும்பத்தினர் ஓய்வெடுக்கும் வேளை ஒன்றில், முகமூடி வீரன் தலைமையில் அவர்களைத் தாக்குகிறது மலாக்காயின் காட்டுமிராண்டிக் குழு. வில்லியத்தையும், அவன் இரு மகன்களையும் கத்திகளால் வெட்டிப் போடுகிறார்கள் அவர்கள். இந்நிகழ்வால் சாலமன் கேன் தன் அமைதிப் பாதையை விட்டு நீங்கி மீண்டும் வன்முறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சாலமன் முரடர்களை எதிர்த்துப் போராடினாலும் அவர்களை அவனால் வெல்ல முடியவில்லை. மெரிடித்தை சிறைப்பிடித்துக் கொண்டு சென்று விடுகிறார்கள் மலாக்காயின் ஏவலர்கள். உயிர் பிரிந்து கொண்டிருக்கும் வில்லியம், தன் மகள் மெரிடித்தை சாலமன் காப்பாற்ற வேண்டுமென அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறான். மெரிடித்தை சாலமன் காப்பாற்றினால் சபிக்கப்பட்டிருக்கும் சாலமனின் ஆன்மா இரட்சணியமடையும் என்றும் கூறிவிட்டு கண்களை மூடுகிறான் வில்லியம்.
தான் எவ்வழியிலாவது மெரிடித்தை மீட்டு வருவதாக வில்லியத்தின் மனைவியடம் கூறிவிட்டு, துர் மாந்திரீகன் மலாக்காயையும், அவனின் பைசாசங்களையும் தேடித் தன் சகாசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் சாலமன் கேன்….
Conan எனும் பெயரைக் கேட்டால், சினிமா ரசிகர்களிற்கு உடனே நினைவில் மலர்வது, உருண்டு திரண்ட இரும்பு உடல், ஒரு சின்ன ஜட்டி, நெற்றியில் ஒரு பட்டி, கையில் நீண்ட வாளுடன் காட்சிதரும் ஆர்னால்ட்தான்.[ அவர் கூட வரும் அழகியும்தான்]
அந்தக் Conan எனும் உலகப் புகழ் பெற்ற பாத்திரத்தை உருவாக்கிய Robert Ervin Howard எனும் அமெரிக்க எழுத்தாளரே சாலமன் கேன் எனும் பாத்திரத்தையும் 1928களில் தன் கதைகளில் அறிமுகம் செய்தார்.
சாலமன் கேன், இருள் குடி புகுந்த ஒரு பாத்திரம். தீமைகளை எவ்வழியிலும் வெற்றி கொள்வது என்பதே அவன் குறிக்கோள். கெட்டவர்களிற்கு மகா கெட்டவன் அவன். அவன் எங்கிருந்து வருகிறான் எங்கே போகிறான் என்பது யாரிற்கும் தெரியாத ஒன்று. இவ்வாறாகவே தன் சிறிய அத்தியாயங்கள் கொண்ட கதைகளில் ராபர்ட் ஹோவார்ட், சாலமனைச் சித்தரித்திருக்கிறார். சாலமன் கேனின் கதைகளை மார்வலும், டார்க் ஹார்சும் காமிக்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.
கொனன் அளவிற்கு புகழ் பெறவில்லை என்றாலும், தனக்கேயுரிய ரசிகர்களை கொண்டவன் சாலமன் கேன். அந்த சாலமன் கேனை வெள்ளித்திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனர் Michael J Basset.
துர்மாந்திரீகம், பைசாசங்கள், சாத்தானின் ஏவலர்கள் என இருள் கொண்ட உலகம், இதனுள் பயணிக்கும் அட்டகாசமான சாலமன் கேன் பாத்திரம் என்பவற்றின் துணையுடன் அற்புதமாக உருவாகியிருக்க வேண்டிய இத்திரைப்படத்தை முடமாக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸட்.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் அசத்த வைக்கும் கிராபிக் காட்சிகளோ, சுறுசுறு விறுவிறு சண்டைக்காட்சிகளோ, இவை இல்லாவிடிலும் கூட ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்க கூடிய ஒரு கனமான கதையோ கிடையாது என்பது வேதனையான ஒன்று. சாலமன், தன் ஆன்மாவை மீட்டு, தீமைக்கு எதிராக போராடும் தன் பாதையைக் கண்டு கொள்வதை திரைக்கதை சோம்பேறித்தனமாக கூறுகிறது. [ஆனால் இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் மிக வெற்றிகரமான ட்ரெயிலர்களில் ஒன்றாகும். அது வெளியான நாள்முதலாக இப்படத்தை ஆவலுடன் எதிர்பர்த்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.]
சாலமன் கேன் பாத்திரத்தை திரையில் ஏற்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் நடிகரான James Purefoy, அப்பாத்திரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு தெரிவு. சாலமன் கேன் பாத்திரம் மட்டுமே சிலவேளைகளில் இத்திரைப்படத்தை தன் தோள்களில் ஏந்திக் காப்பாற்றியிருக்கக்கூடும், ஆனால் ஜேம்ஸ் ப்யூர்போய் தன்னால் சுமக்க இயலாத ஒரு வேடத்தை சுமந்து ஒடிந்து போகிறார். சாலமனின் சக்தியை திரையில் கொணர முடியாது மூச்சிரைக்கிறார்.
படத்தில் குறிப்பிட்டுக் கூறத்தக்க அம்சங்கள் எனில்; ஒன்று ஒளிப்பதிவு.கார் மேகங்கள் சூழக் கருமை கொண்ட இங்கிலாந்துக் காடுகள், காடுகளில் நடந்து செல்லும் புகார், தொடர்ந்து தூவும் பனி என கதையின் இருளை ஒரளவேனும் சுவைக்க வைத்து விடுகிறது ஒளிப்பதிவு. அடுத்தது கலை இயக்கம். குறைந்த பட்ஜெட் எனினும் கிடைத்ததைக் கொண்டு சிறப்பான அரங்குகளையும், அலங்காரங்களையும் அமைத்திருகிறார்கள். மலாக்காயின் கோட்டை, 17ம் நூற்றாண்டு இங்கிலாந்துச் சூழல் என குறை கூறவியலாதபடி செய்திருக்கிறார்கள்.
இவை இரண்டும் மட்டும் ஒரு படத்தைக் காப்பாற்றிவிடமுடியுமா என்ன! மாய, மாந்திரீக கற்பனைக் கதை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்க வேண்டிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளாசிக் கதாபாத்திரத்தை, உழைப்பும், அனுபவமுமற்ற இயக்கமும், கஞ்சத்தனமான ஐரோப்பிய தயாரிப்பும் கொன்று போட்டு விட்டதற்கான சாட்சியாக வந்து நிற்கிறான் இந்த சாலமன் கேன்.
ரட்சணியத்திற்கு இட்டுச் செல்ல பல பாதைகள் உண்டு, அவற்றில் எல்லாப் பாதைகளும் அமைதி நிறைந்தவை அல்ல. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக அதனை உணர்ந்திருப்பார்கள். [*]
ட்ரெயிலர்