Showing posts with label Robert Zemeckis. Show all posts
Showing posts with label Robert Zemeckis. Show all posts

Friday, December 4, 2009

வெண்பனியில் ஒரு கிறிஸ்துமஸ் பாடல்


tn-le-drole-de-noel-de-scrooge-2009-13582-2047188084 கிறிஸ்துமஸ் காலத்தின் வெண்பனி, தன் நுண்ணிய சிதறல்களால் லண்டன் நகரைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் குளிரான இரவினூடு, மென்கூனல் ஒன்றை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பனி பரவிய தெருக்களில் நடந்து செல்கிறான் வயதேறித் தளர்ந்த அந்த முதியவன்.

தெரு விளக்குகளின் பிரகாசத்தினால் முற்றிலும் கலைக்கப்பட்டுவிடாத இருளினூடு தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த முதியவனின் பார்வையில் கசப்பு ஊறிப்போயிருக்கிறது. அந்த முதியவனின் பெயர் எபெனேஸர் ஸ்கூருச் என்பதாகும்.

எபெனேஸர் ஸ்கூருச்சை சுருக்கமாக, ஒரு கஞ்சன் என்று கூறிவிடலாம். தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் மரணத்தில் கூட இரண்டு பென்சுக்களை இழக்க விரும்பாதவன் அவன். பிறர் மீதான அன்பும், காருண்யமும் அவனிற்கு அன்னியமானவை.

ஸ்கூருச் தன் உறவினர்களிடமிருந்து விலகியே இருக்கிறான். உறவுகளின் அன்பான அழைப்புக்களையும் அவன் தட்டிக் கழித்து விடுகிறான். தனக்கு கீழ் பணி புரியும் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் என்பவனின் அவல நிலை குறித்து அவன் மனம் அலட்டிக் கொள்வதேயில்லை. பாப் கிராட்ஷிட்டை மிக மோசமாக வேலை வாங்குகிறான் ஸ்கூருச்.

அவன் வாழ்வில் அவனிற்கு தேவையான ஒன்று, பணம். பணம் தேடுவதற்காக மட்டுமே தன் வாழ்வின் மணித்துளிகள் ஒவ்வொன்றையும் ஸ்கூருச் அர்பணித்திருக்கிறான். பணத்தை ஈட்டித்தர முடியாத எதுவுமே அவன் பார்வையில் வீணான ஒன்றாகப் படுகிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-451697508 le-drole-de-noel-de-scrooge-2009-13582-1412865459 பணத்தை செலவு செய்வது என்பதை கடுமையாக வெறுக்கும் ஸ்கூருச்சிற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சலையும், சினத்தையும் தருவதாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் மனிதர்களிடம் ஊற்றெடுத்துப் பொங்கும் அன்பை அவனிற்குப் பிடிக்கவில்லை. பண்டிகைக் காலத்தின்போது மக்கள் செலவு செய்யும் பணம் வீண் செலவு என்று பொருமுகிறான் அவன். பண்டிகைக்காக ஒரு நாள் விடுமுறை வழங்குவதையும் அவன் வெறுக்கிறான்.

ஸ்கூருச் தெருவில் நடந்து செல்கையில் பனியில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள் அடங்கிப் போகிறார்கள். லண்டன் தெருக்களின் முனைகளில் நின்று, தூவும் பனியின் மத்தியில் கிறிஸ்துமஸ் இசைக்கீதங்களை பாடும் குழுவினர் ஸ்கூருச்சைக் கண்டதும் பாடுவதை நிறுத்துகிறார்கள், சில்லறை சேகரிக்கும் குவளையையும் மறைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வசதியற்றவர்களிற்கு உதவி செய்வதற்காக நிதி சேகரிக்கும் அமைப்புக்களின் உறுப்பினர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறான் ஸ்கூருச்.

தன் தனிமையையும், பணத்தையும் மட்டுமே தன்னுடன் கொண்ட ஸ்கூருச்சின் வீட்டில் ஒளிரும் மெழுகுவர்த்தி கூட அந்த வீட்டின் இருளைப் போக்குவதற்கு வலிமையற்றதாகவே இருக்கிறது.

லண்டன் நகர மக்களின் ஊதாரித்தனத்தை எண்ணி மனதிற்குள் புறுபுறுத்தவாறே தன் வீட்டை அடையும் ஸ்கூருச், தன் வீட்டின் வாசல் கதவை திறக்க முயல்கையில் அந்தக் கதவின் பிடியில் ஏழு வருடங்களிற்கு முன்பாக இறந்து போன தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் கோரமான முகம் தெரிவதைக் கண்டு வெலவெலத்துப் போகிறான்.

ஒரு வழியாக தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ஸ்கூருச் இது வெறும் பிரமை என எண்ணியவாறே தன் வீட்டினுள் நுழைந்து தூங்கச் செல்வதற்கு தயாராகிறான். ஆனால் வீட்டினுள் வினோதமான சத்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் படுக்கை அறையிலிருக்கும் சிறு மணிகள் கிறுக்குப் பிடித்தாற் போல் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் மனதில் பயம் உருவாகி அவன் நடுங்க ஆரம்பிக்கின்றான். அவன் அச்சம் கொண்டது சரிதான் என்பதை நிரூபிப்பதைப் போலவே உடலில் பிணைக்கப்பட்டிருக்கும் கனமான சங்கிலிகளுடன் ஸ்கூருச் முன் குதிக்கிறது ஜாக்கோப் மார்லியின் ஆவி.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-1670616268 வாழும் போது தான் செய்யத்தவறிய செயல்களால் இறந்த பின்னும் தான் வேதனைப்பட வேண்டியுள்ளதாக ஸ்கூருச்சிடம் கதறியபடியே ஒப்பாரி வைக்கிறது மார்லியின் ஆவி. எபனேசர் ஸ்கூருச்சிற்கு இந்த உலகில் இன்னும் வாய்ப்பு இருக்கும் போதே அவன் தன் நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆவி ஸ்கூருச்சை எச்சரிக்கை செய்கிறது. கிறிஸ்துமஸின் முன்னிரவு விடியும் முன்பாக ஸ்கூருச்சை மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் வந்து சந்திக்கும் என்பதையும் தெரிவித்து விட்டு தன் அவல வாழ்க்கையை தொடர மிதந்தபடியே செல்கிறது மார்லியின் ஆவி.

இரவின் ஓட்டத்தில் மார்லியின் ஆவி கூறியபடியே கடந்தகால, நிகழ்கால, வருங்காலங்களை சேர்ந்த மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் ஸ்கூருச்சை வந்து சந்திக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஸ்கூருச்சினை தங்களிற்குரிய காலங்களிற்கு இட்டுச் செல்கின்றன. அந்த ஆவிகள் ஸ்கூருச்சின் முன்பாக திரை விரிக்கும் காட்சிகள் மூலம் மனம் மாறி புது வாழ்வொன்றை ஆரம்பிக்கும் ஸ்கூருச், லண்டன் நகரிலேயே பெரும் கொடை வள்ளல் எனவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஸ்கூருச்சை அடித்துக் கொள்ள வேறு எவருமே லண்டனில் இல்லை எனவும் பெயர் எடுத்துக் கொள்வதே மீதிக்கதை.

பிரபலமான ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு 1843ம் ஆண்டில் வெளியான A Christmas Carol எனும் நாவலைத் தழுவி அதே தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கியிருப்பவர் Forrest Gump, Beowulf ஆகியதிரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Robert Zemeckis.

நிஜ நடிகர்களின் அசைவுகளைப் படமாக்கி அவற்றை 3D அனிமேஷன் வடிவில் உருவாக்கிவிடும் Performance Capture எனும் தொழில் நுட்பத்தில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-653268359 டிக்கின்ஸின் நாவலில் வரும் ஸ்கூருச் எனும் புகழ் பெற்ற கதாபாத்திரத்தை திரையில் கொணர அவர் மாடலாக தேர்ந்தெடுத்தது உலக மகா முகச்சுளிப்பு சேஷ்டைகளின் ராஜாவான Jim Carrey அவர்களை. ஸ்கூருச் பாத்திரத்திற்கு ஜிம் கேரி வழங்கியிருக்கும் நடை, சீறல், ஏளனச் சிரிப்பு, கண்கலங்கும் பார்வை, குதூகல நடனம் போன்றவை அட்டகாசம். அதே போன்று திரைப்படத்தில் தோன்றும் மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகளிற்குமான மாடலும் கேரிதான். வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி ஜிம் கேரியிடம் அதிகம் வேலை வாங்கவில்லை. கறுப்புத்துணி ஒன்றை உடல் முழுக்கப் போர்த்திக் கொண்டு அங்கேயும் இங்கேயும் விரலை நீட்டுவதுதான் அந்த ஆவியின் அபாராமான நடிப்பு.[ இந்தக் கால சிறுசுகள் ஆவிகளைப் பார்த்து பயப்படுவார்களா என்ன!!]

ஸ்கூருச்சின் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் பாத்திரத்திற்கு மாடல் தந்திருப்பவர் நடிகர் Gary Oldman. படத்தில் இவரது பாத்திரமும், நடிப்பும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. வேதனையான தருணங்களில் அவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. ஜாக்கோப் மார்லியின் ஆவிக்கும் இவரே மாடலாக இருந்திருக்கிறார்.

19ம் நூற்றாண்டு லண்டன் நகரை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். வறுமையில் வாடும் மக்கள், செல்வம் கொழிக்கும் குடும்பங்கள் என மக்களின் வாழ்க்கை தர வேறுபாடுகளையும் படம் தெளிவாகக் காட்டுகிறது. வெண் பனி பொழியும் கிறிஸ்துமஸ் கால லண்டன் நகரக் காட்சிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்கூட்டிய சுவையை பார்வையாளன் மனதில் கிளர்ந்தெழச் செய்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-992206759 இவ்வாறாக தொழில்நுட்பத்தின் தரத்திலும், காட்சி உருவாக்கலின் அழகிலும் அசர வைக்கும் இத்திரைப்படமானது ரசிகர்களின் மென்மையான உணர்வுகளை தொடத் தவறிவிடுகிறது.

கடந்தகால, நிகழ்கால கிறிஸ்துமஸ் ஆவிகள் விரிக்கும் காட்சிகள் பார்வையாளன் மனதில் மென்மையான உணர்வுகளை துளிர்க்கச் செய்கின்றன, இந்த துளிர்ப்புகளையெல்லாம் இயக்குனர் செழிப்பாக வளர்த்தெடுத்து அழகான ஒர் கிறிஸ்துமஸ் மரமாக்கியிருக்க வேண்டாமா? மாறாக 3D ரசிகர்களின் வியப்புக் கூச்சல்களை அள்ள வேண்டி உருவாக்கப்பட்டிருக்கும் ஏராளமான காட்சிகளின் கால்களில் அழுந்தி இந்த மென் உணர்வுகள் பரிதாபமாக நசுக்கப்பட்டு விடுகின்றன.

அட! மனம் திருந்தி புது வாழ்வை ஆரம்பிக்கும் ஸ்கூருச்சின் வாழ்வையாவது இயக்குனர் ஓர் நீண்ட கொண்டாட்டம் ஆக்கியிருக்க கூடாதா? சில கண நேரம் வானில் வெடித்து மறையும் வண்ணமிகு வான வேடிக்கையென பட்டென முடிந்து விடுகிறது திரைப்படம்.

தன் அற்புதமான கற்பனைத்திறனாலும், பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் மிக அழகாகவும், இனிமையாகவும் இயக்குனர் ஸெமெகிஸ் உருவாக்கியிருக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் பாடல் தன் ஆன்மாவைத் தொலைத்து விட்டல்லவா ஒலிக்கிறது. [**]




ட்ரெயிலர்


மிக்கியின் கிறிஸ்துமஸ் பாடல் [1983]