Rhinebeck எனுமிடத்தில் பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனையாளானாக இருக்கும் செத் கிரஹாம் சிமித்திற்கு ஹென்ரி எனும் வாடிக்கையாளன் வழி சில நாட்குறிப்புக்கள் கிடைக்கின்றன. அந்நாட்குறிப்புக்களை படிக்க ஆரம்பிக்க முன்பாக ஹென்றி விதிக்கும் சில நிபந்தனைகளை செத் ஏற்றுக் கொள்ள வேண்டியாகிறது. ஹென்றியையும் அவன் வழங்கிய பட்டியலில் உள்ள 11 நபர்களையும் தவிர நாட்குறிப்புக்களில் உள்ள விடயங்களை செத் யாருடனும் கலந்து பேசக் கூடாது, மேலும் அந்நாட்குறிப்புக்களில் உள்ள தகவல்களை கொண்டு செத் ஒரு ஆவணத்தை தயாரித்தல் வேண்டும் என்பன இந்நிபந்தனைகளுள் அடங்கும். ஆர்வத்தின் உந்தலால் ஹென்றியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் செத், குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அன்றுவரை அவன் நம்பியிருந்த பல தகவல்கள் பொய்யாக மாறிக்கொள்ளும் ரஸவாதத்தை அந்நாட்குறிப்புகளின் வாசிப்பு உருவாக்குவதை உணர ஆரம்பிக்கிறான்.
பட்டியலில் உள்ள 11 நபர்களையும் சந்தித்து உரையாடும் செத், அமெரிக்க தேசத்தில் வாழ்ந்திருந்த!! ரத்தக்காட்டேரிகளின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். தேசத்தின் பிறப்பில், வளர்ச்சியில், அதனை நாசமாக்குவதில் ரத்தக் காட்டேரிகள் வகித்த பங்கு மற்றும் காட்டேரிகளின் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து தேசத்தை காக்கப் போராடிய ஒரு மனிதன் குறித்தும் அவன் தெரிந்து கொள்கிறான். ரத்தக்காட்டேரிகள் கட்டுக்கதையல்ல, நிஜம்! அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவன் காலத்தில் ஒரு சிறப்பான காட்டேரி வேட்டையன்! காலகாலமாக ஆப்ரகாம் லிங்கன் குறித்து சொல்லப்பட்டு வரும் தகவல்களால் கட்டப்பட்ட பிம்பம் நேர்மையற்றது! ஆப்ரகாம் லிங்கன் குறித்த நூல்கள் அவரின் உண்மையான போராட்டம் என்ன என்பது குறித்து பேசவேயில்லை! எனும் முடிவுகளை தன் ஆய்வுகள் மூலம் உருவாக்கி கொள்கிறான் செத்.
உண்மையில் ஹென்றி வழங்கிய ஆவணங்களை போலி அல்லது ஹென்றியின் உருவாக்கம் என்பதாகவே செத் கருதிக் கொள்கிறான் ஆனால் ஹென்றி தன் சுயரூபத்தைக் காட்டும்போது செத் தன் கருத்தை மாற்றியாக வேண்டியிருக்கிறது. ஆப்ரகாம் லிங்கன் நைனாவின் நாட்குறிப்பு என உங்களிடம் ஒரு நபர் சில பழைய குறிப்பேடுகளை தந்தால் உங்கள் மனநிலையில் உருவாகும் எண்ணங்களின் சித்திரங்கள் எவ்வாறானதாக இருக்கும்….எவ்வாறு பிரதி உருவாக்கப்பட்டது என்பதற்கு செத் வழங்கும் இந்த ஆரம்ப அறிமுகமே நாவலில் அவர் உட்பொதித்துள்ள கற்பனை வளத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது. செத் ரைன்பெக்கில் வாழ்ந்தாரா அவர் விற்பனையாளராக இருந்தாரா அவர் வாழ்க்கை ஹென்றி தந்த நாட்குறிப்புக்களால் சிதைக்கப்பட்டதா எனும் கேள்விகளிற்கெல்லாம் விடைகள் என்ன என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம், தன் கற்பனையின் நம்பகத்தன்மையை அங்கதமாக உறுதிப்படுத்த விழையும் செத்தின் நகைச்சுவை உணர்வு பின் தொடரும் வரிகளிலும் தனக்கென ஒரு இடத்தை சுவீகரித்து கொண்டிருக்கிறது. இதன் பின்பாக வரலாற்றில் எழுதப்பட்ட தகவல்களுடன் பதமாக குழைக்கப்பட்ட சுவையான கற்பனை எளிமையான ஒரு கதை சொல்லலில் பங்கேற்கையில் உண்மைகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடரப்போகும் கதையில் லயிப்பதில் என்ன தவறுதான் இருக்க முடியும்.
தான் திரட்டிய தகவல்கள், மற்றும் லிங்கனின் நாட்குறிப்புக்கள், கடிதங்கள், அவருடன் பழகியிருந்த மனிதர்களின் கூற்றுக்கள் என்பவற்றைக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் நாவலான Abraham Lincoln: The Vampire Hunter ஐ மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார் செத் கிரஹாம் ஸ்மித். முதல் பாகமான Boy, லிங்கனின் பிறப்பிலிருந்து அவன் 19 வயதை எட்டும் வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்திருக்ககூடிய சம்பவங்களை வாசகனிடம் எடுத்து வருகிறது. ஏழு வயதான லிங்கன், வான் கோழிகளை வேட்டையாடும் காட்சியில் ஆரம்பமாகிறது கதை. லிங்கன் வேட்டையாடிய வான்கோழியின் குரூரமான மரணம் அவன் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. தனக்கு தீங்கு நினைக்காத ஒரு உயிரைப் பறித்தது குறித்து சிறுவனான லிங்கன் மனதில் குற்றவுணர்வு உருவாகிறது. அவ்வான்கோழியின் மாமிசத்தை உண்ணாது விடுகிறான் லிங்கன். மேலும் தான் வேட்டையாடப் போவதில்லை என்பதில் உறுதியானவனாகிறான். அவன் தந்தை இதற்காக மரக்கட்டைகளை கோடாரியால் பிளக்கும் பணியை ஒரு தண்டனையாக லிங்கனிற்கு வழங்குகிறார். லிங்கனிற்கும் கோடாரிக்குமான நெருக்கத்தின் ஆரம்பம் இதுவே. மரக்கட்டைகளை பிளந்த அனுபவம் பின்னாட்களில் காட்டேரிகளின் இதயங்களை பிளக்க அவனிற்கு கைகொடுக்கும் என்பதை அவ்வயதில் லிங்கன் அறிந்தானில்லை.
1809ல் ஸிங்கிங் ஃபீல்டில் பிறந்த லிங்கனிற்கும் அவர் தந்தைக்கும் இடையில் மிகவும் ஒரு பெரிய இடைவெளி இருந்து வந்திருக்கிறது. எழுதப் படிக்க தெரியாத நபரான தாமஸ் லிங்கன், தன் குடும்பத்தின் ஆகக்குறைந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் ஒரு குடும்பத்தலைவனாகவே இருந்தார். இதுவே லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த பற்றற்ற தன்மைக்கு மூலமாக இருந்தது. காலம், லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த மெலிதான வெறுப்பை அதிகரிக்க அதிக வாய்ப்புக்களை எடுத்து வந்து கொண்டிருந்தது. தன் தந்தை தாமஸின் இறுதிச்சடங்கில்கூட லிங்கன் பங்கேற்கவில்லை எனுமளவிற்கு லிங்கனிற்கு அவர் முக்கியமற்றவராக மாறிப்போயிருந்தார். மாறாக தன் தாயாராகிய நான்சி லிங்கன் மீது பெரும் அன்பு கொண்டவராக இருந்தான் லிங்கன்.
கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லிங்கனிற்கு கதைகளைப் படித்துக் காட்டியும், கூறியும் வாசிப்பில் லிங்கனின் ஆர்வத்தை தூண்டினார் நான்சி. மேலும் லிங்கனை எப்போதும் எந்நிலையிலும் அன்புடன் வாரித்தழுவிக் கொள்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக 1818ல் Milk Sickness என அழைக்கப்பட ஒரு வியாதியால் அவர் மரணத்தை தழுவிக் கொள்கிறார். மரணப்படுக்கையில் நான்சியின் அருகில் விலகாது இருந்த லிங்கனிற்கு அவன் தாயார் கூறிய இறுதி வார்த்தைகள் அவன் மரணம்வரை அவன் வாழ்வின் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்காதிருக்க உதவின என்பதை நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. நேசம் கொண்ட ஒருவரின் மரணம் வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்க செய்கிறது அல்லது அதன் மீதான பிடியை நழுவச் செய்கிறது. லிங்கன் தன் தாயின் இறுதி வார்த்தைகளிற்காக வாழ்ந்து செல்பவனாக இருக்கிறான். அதேபோல் அவன் தாயின் மரணம் குறித்து பின் அவன் தெரிந்து கொள்ளும் உண்மைகளும் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு இலட்சியத்தை எடுத்து வருகின்றன. லிங்கன் எனும் ஆளுமையின் உருவாக்கத்தில் அவன் தாய் வகித்த பங்கு என்ன என்பதை நாவலின் இப்பகுதி சொல்லாமல் சொல்கிறது. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தைக்கூட தாண்டாது என்பது மிகவும் ஆச்சர்யத்தை எடுத்து வரும் ஒரு தகவலாக இருக்கிறது.
நான்சியின் மரணத்தின் பின்பாக சாரா எனும் பெண்மணியை மறுமணம் செய்து கொள்கிறார் தாமஸ். தன் சொந்தப் பிள்ளைகளைவிட ஆப்ராகம் லிங்கனில் பரிவு கொண்டவராக இருந்தார் சாரா. வாசிப்பின்மீது லிங்கனின் ஆர்வத்தை உணர்ந்த சாரா அதனை ஊக்குவிக்க தவறியதேயில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்த கதைகள் லிங்கனை பெரிதும் கவர்ந்தன. தன் தந்தையைப் போலவே கதைகள் கூறுவதில் சிறப்பான ஆற்றல் கொண்டவனாக லிங்கன் உருவாக ஆரம்பித்தது இக்காலப்பகுதியில்தான். அதேபோல் பப்டிஸ் மதப்பிரிவை சேர்ந்த தாமஸ் லிங்கன், அமெரிக்க மண்ணில் புழக்கத்திலிருந்த அடிமைமுறை குறித்து எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார், அதை தீமையின் ஒரு வடிவாகவே அவர் கருதினார். தன் தந்தையிடமிருந்து லிங்கன் வரித்துக் கொண்ட பண்புகளாக மேற்கூறிய இரண்டையும் கருதிக் கொள்ளலாம். இதை தவிர்த்து தன் தந்தைக்கு நேர் எதிரான பிம்பமாக உருமாறினார் லிங்கன். தன் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அவர்கள் நலன்களை சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் தந்தையுமாகவே அவர் இருந்தார்.
1820ல் லிங்கனின் 11வது பிறந்ததினத்திற்கு பரிசாக சாரா அவனிற்கு ஒரு நாட்குறிப்பை வழங்குகிறார். அதே வருடத்தில் இலைதுளிர்காலத்தின் இரவொன்றில் தன் தாயின் மரணம் குறித்த சில உண்மைகளை தன் தந்தை வழியாக அறிந்து கொள்கிறான் லிங்கன். Milck Sickness என்பது உண்மையில் என்ன என்பதும் அவனிற்கு அந்த இரவில் தெளிவாகிறது. அவன் அறிந்து கொண்ட உண்மைகள் தன் தந்தையையுடன் அவன் கொண்டிருந்த உறவின் இடைவெளியை மேலும் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டேரிகளை பூண்டோடு ஒழிப்பேன் எனும் சபதத்தையும் அவன் கொள்ள காரணமாகவிருக்கின்றன. கடவுள் என்பவர் மீது லிங்கன் கோபம் கொண்டவனாகிறான். தன் தாய்மீது அவன் கொண்டிருந்த பாசமும், அவன் இளரத்தமும் காட்டேரிகள் குறித்த அபாயங்களை அவன் கண்களிற்கு காட்ட தடையானவையாகவிருந்தன. காட்டேரி வேட்டை பற்றிய தன் அனுபவங்களை தன் நாட்குறிப்பில் பதிவது என்றும் அந்நாட்குறிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது எனவும் லிங்கன் தீர்மானிக்கிறான். ஆனால் லிங்கனின் இந்த தீர்மானமானது பிற்காலத்தில் உறுதியற்ற ஒரு தீர்மானமாக மாறிப்போவதை தொடரும் நாட்குறிப்புக்களின் பதிவுகள்வழி வாசகன் அறிந்து கொள்ளமுடியும். தனது பலதரப்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் லிங்கன் இந்த நாட்குறிப்புக்களில் பதிந்து வந்திருக்கிறார். இந்த வரிகள்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் எனும் பிம்பத்தின் மீதான உடைப்பை சிற்றுளிபோல் நிகழ்த்துகிறது. நாவலின் முக்கியமான தளமும் லிங்கன் குறித்த கற்பனையான மாற்றுப்பார்வைதான். அதுவேதான் லிங்கன் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரைபோல் நகரும் இந்நாவலின் வாசிப்பனுபவத்தை ஓரளவிற்கேனும் சுவையான ஒன்றாக மாற்றியமைக்கிறது.
காட்டேரி வேட்டையனாக மாறிவிட்ட லிங்கன் அபாயங்களை தேடிப் போகிறான். அபாயத்தில் மாட்டிக் கொள்கிறான். காட்டேரிகள் குறித்து அதிக தகவல்கள் தெரிந்திராத நிலையில் அவர்களை எதிர்த்துப் போராடுவது அறிவற்ற செயலாக லிங்கனிற்கு தோன்றுவதேயில்லை. ஒரு காட்டேரி வேட்டையின்போது வசமாக ஒரு காட்டேரியின் பிடியில் மாட்டிக்கொண்டு உயிர்போகும் நிலையிலிருக்கும் லிங்கனை காப்பாற்றுகிறான் ஹென்றி ஸ்டேர்ஜெஸ். லிங்கனை மிகவும் சிறப்பான ஒரு காட்டேரி வேட்டையனாக மாற்றுவது ஹென்றி அவனிற்கு அளிக்கும் பயிற்சிகளே. காட்டேரிகள் குறித்து நன்கு அறிந்தவனாக இருக்கும் ஹென்றி தரும் தகவல்களைக் கொண்டு தன் வேட்டைகளை வெற்றிகரமானதாக நிகழ்த்த ஆரம்பிக்கிறான் லிங்கன். ஹென்றிக்கும் லிங்கனிற்குமிடையில் உறுதியான ஒரு நட்பு உருவாக ஆரம்பிக்கிறது. மரணம் என்பதை அர்த்தமற்ற ஒன்றாக ஆக்குவதாக இந்நட்பு நாவலில் சித்தரிக்கப்படுகிறது.
காட்டேரி வேட்டை மும்முரமாக நடந்தாலும் அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் லிங்கன் தனக்கு கிடைக்ககூடிய வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவனாக இருக்கிறான். இதில் கிடைக்கும் வருமானத்தை அக்காலகட்ட வழக்கப்படி அவன் தந்தையிடம் லிங்கன் தந்தாக வேண்டும், இது லிங்கனிற்கு உவப்பான ஒன்றாக இருந்ததில்லை. தன் தந்தையிடமிருந்து தூர விலகி இருக்கலாம் எனும் காரணத்திற்காகவே ஜேம்ஸ் ஜெண்ட்ரி எனும் வணிகன் தரும் வேலையை ஏற்றுக் கொள்கிறான் லிங்கன். ஜெண்ட்ரியின் சரக்குகளான பதப்படுத்தப்பட்ட பன்றி மாமிசம், சோளம் போன்றவற்றை தானே உருவாக்கிய தட்டைப்படகொன்றில் மிசிசிபி ஆற்றின் வழியாக அமெரிக்க தெற்கின் ஆழங்களை நோக்கி கொண்டு செல்லும் நீண்ட பயணத்தை தொடக்குகிறான் லிங்கன். இப்பயணம் அமெரிக்காவில் புழக்கத்திலிருந்த அடிமைமுறையின் குரூரம் குறித்த ஒரு பார்வையை லிங்கனில் அழுத்தமாகப் பதிக்கிறது. காட்டேரிகள் போலவே அமெரிக்காவை பிடித்த மற்றுமொரு கேடு அடிமைமுறை என்பதாக அவன் எண்ணங்கள் இருக்கின்றன. அடிமைமுறையை புழக்கத்தில் கொண்ட மனிதர்களுடன் லிங்கனின் வியாபார தொடர்புகள் இருந்தாலும் அதுகுறித்த சலனங்களை லிங்கன் எங்கும் காட்டிக் கொள்வதில்லை. நீயூ ஆர்லியன்ஸ் நகரில் சுதந்திரமாக பயமற்று உலவும் காட்டேரிகள் லிங்கனிற்கு வியப்பை தருபவர்களாக இருக்கிறார்கள். தன்னை வேவுபார்க்கும் ஒரு காட்டேரியை தீர்த்துக் கட்ட தொடர்ந்து செல்ல்லும் லிங்கன் ஒரு வித்தியாசமான சந்திப்பை உருவாக்கி கொள்கிறான். அந்த சந்திப்பின் பெயர் எட்கார் ஆலன் போ!
காட்டேரிகள் குறித்த லிங்கனின் பார்வைக்கு எதிரான பார்வை கொண்டவராக இருக்கிறான் எட்கார் ஆலன் போ. மதுவை சுவைத்தபடியே தன் காட்டேரி நண்பன் ஒருவன் குறித்து லிங்கனிடம் பகிர்ந்து கொள்ளும் போவின் கருத்துக்கள் லிங்கனை வியப்படைய வைக்கின்றன. ஆலன் போ ஒரு வித்தியாசமான மனிதன் எனும் எண்ணத்தை தன் மனதில் லிங்கன் உருவாக்கி கொள்கிறான். ஆலன் போவின் கவிதைகளில் மயங்கிய ஒரு காட்டேரி, மரணத்தையும், அதன் இருள்மையையும் குறித்து இவ்வளவு நுட்பமான உணர்வுகளுடன் எழுத ஒரு காட்டேரியால் மட்டுமே முடியும் எனக்கருதி பின் ஆலன்போ ஒரு காட்டேரி அல்ல என்பதை அறியும்போது அடையும் வியப்பு நாவலின் வரிகளில் சுவையாக சொல்லப்படுகிறது. காட்டேரிகள் அதிசயமான , மேன்மையான படைப்புக்கள் எனும் கருத்தைக் கொண்டவராக இருக்கிறான் ஆலன் போ. ஆலன் போ இரு தடவைகள் லிங்கனை சந்தித்து உரையாடும் தருணங்கள் நாவலில் இடம்பிடிக்கின்றன, இவை இரண்டிலும் ஆலன் போ மீதான ஒரு அருமையான சித்திரத்தை ஒரு சில வரிகளில் உருவாக்கும் வித்தையை செத் சாதித்து இருக்கிறார். அமெரிக்க காங்கிரஸிற்கான தேர்தலில் வெற்றி பெற்று வாஷிங்டனில் வாழ்ந்து வரும் லிங்கனை 1849ன் பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பார் ஆலன் போ. அந்த சந்திப்பின்போது காட்டேரிகள் திட்டமிட்டுள்ள ஒரு சதி குறித்து லிங்கனிடம் பேசும் ஆலன் போ, அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் பால்டிமோர் நகரின் தெருக்களில் மனநிலை குழம்பியவராக நடந்து திரிந்து பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறார். நாவலில் காட்டேரிகள் தாக்கி மரணமானவர்களின் நோய் அறிகுறிகளும் ஆலன் போவின் நோய் அறிகுறிகளும் ஒத்தவையாக இருக்கின்றன. ஆலன் போவின் மரணத்தின் மீது படிந்திருக்கும் மர்மத்தின் இருளை இந்தக் கற்பனை மூலம் இங்கு தெளிவாக்க விழைகிறார் செத். 1829ல் நீயூ ஆர்லியன்ஸில் ஆப்ரகாம் லிங்கன் காணும் அனுபவங்களுடன் நாவலின் முதல் பாகத்தை நிறைவிற்கு இட்டு வருகிறார் செத். சாதாரண வாசகன் ஒருவன் அதிகம் அறிந்திராத ஆப்ரகாம் லிங்கனின் இளமைக்காலம், மற்றும் அவர் வாழ்ந்திருந்த காலத்தின் மக்களின் வாழ்க்கை முறை என்பவற்றை சுருக்கமாக சொல்வதன் மூலம் இப்ப்குதியை விறுவிறுப்பானதாக செத் உருவாக்கியிருக்கிறார்.
செத்தின் நாவலின் இரண்டாம் பாகமான Vmpire Hunter, லிங்கனின் வாழ்வின் மிக முக்கியமான சில நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது. 1830களில் இலினாய்ஸிற்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்கிறான் தாமஸ் லிங்கன். தன் தந்தையுடன் இலினாய்ஸில் மேலும் இரு வருடங்களை கழிக்கும் லிங்கன், தன் இருபத்தி இரண்டாவது வயதில் தன் வழியில் தனித்து செல்ல ஆரம்பிக்கிறான். தான் ஏற்றுக் கொண்ட வேலைகளில் சிரத்தையுடன் உழைக்கும் அவனது திறமையை வியக்கும் டெண்டன் ஒஃபுட் எனும் வியாபாரி நீயூ சலேம் எனும் குடியேற்றத்தில் அவன் உருவாக்கும் பல்பொருள் அங்காடியில் லிங்கனை சிப்பந்தியாக பணிக்கு அமர்த்திக் கொள்கிறான். இங்குதான் லிங்கனிற்கு வில்லியம் மெண்டெர் கிரஹாம் எனும் பள்ளி ஆசிரியரின் நட்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு பேச்சாளனாக லிங்கன் திகழ்வதற்குரிய ஆரம்பகட்ட பணிகளிற்கு மெண்டெர் கிரஹாம் அதிக பங்களிப்பு செய்திருக்கிறார். அமெரிக்க மண்ணில் வாழும் காட்டேரிகள் குறித்த எண்ணங்கள் லிங்கனில் இருந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் காட்டேரிகள் எந்த பயங்களுமின்றி சுதந்திரமாக வாழ்வதையும், அவர்கள் ஆற்றும் உயிர்க்கொலைகள் மீதான தண்டனைகள் குறித்த அச்சங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை என்பதும் லிங்கனால் உணரப்படுகிறது. மேலும் காட்டேரிகளிற்கும் அடிமை வியாபாரிகளிற்கும் இடையில் உருவாகி இருக்கும் மெளனமான ஒரு புரிந்துணர்வும் லிங்கனால் அறியக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. அடிமைகளின் ரத்தம் மனிதர்களாலும், காட்டேரிகளாலும் உறிஞ்சப்படுவதில் அமெரிக்க மண்ணில் வேற்றுமை இல்லை எனும் உண்மையை செத் வாசகனிடம் இங்கு எடுத்து வர ஆரம்பிக்கிறார். காட்டேரி எனும் தீமைக்கு எதிரான போராட்டம் அடிமைமுறைமைக்கு எதிரான, அமெரிக்க மண்ணில் வாழும் மனிதனின் நிறம் எவ்வாறானதாக இருந்தாலும் அது அவன் சுதந்திரத்திற்கான போராட்டம் எனும் மாயவரிகளை வாசகன் இங்கு காண ஆரம்பிக்கிறான். இந்நிலையில் ஆப்ரகாம் லிங்கன் தன் அரசியல் வாழ்வின் முதல்படியில் காலடி எடுத்து வைப்பதையும் செத் நாவலிற்குள் இட்டு வருகிறார்.
1832ல் இலினாய்ஸ் மாநில தேர்தலில் நீயு சலேம் குடியிருப்பு பகுதி வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறான் லிங்கன். இக்காலகட்டத்தில் Black Hawk எனும் செவ்விந்திய உரிமைப் போராட்ட தலைவன், அமெரிக்க அதிகாரத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி கலகத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்தச் செவ்விந்தியப் போராளியையும் அவனது குழுவையும் எதிர்த்துப் போராட தன்னார்வ வீரர்களாக சேர்ந்து கொள்பவர்களில் ஒருவராக இருக்கிறார் லிங்கன். போர் மீது அக்காலத்தில் லிங்கன் கொண்டிருந்த மோகம், தலைவனாகி அமெரிக்கர்களை வழிநாடத்தி செல்வதில் அவரிற்கிருந்த பிரியம் எனபன நாவலின் இப்பகுதியில் புலனாக ஆரம்பிக்கின்றன. இப்பகுதியில் அதிர்ச்சி தரும் சில வரிகளை லிங்கனின் எண்ணமாக எழுதுகிறார் செத். காட்டேரிகளை விட வேகமும், வலிமையும் குறைந்த செவ்விந்தியர்களை எளிதாக அதிக எண்ணிக்கையில் கொன்று குவிக்க முடியும் என லிங்கன் கருதுவதாக அமையும் வரிகள் இங்கு அதிர்ச்சி தருகின்றன. அடிமைமுறையை கேடாக கருதும் லிங்கன் எவ்வாறு செவ்விந்திய மக்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க மண்ணிற்கு எதிரான ஆபத்தான ஒன்றாக விளங்கிக் கொண்டான் போன்ற கேள்விகளை வாசகன் எழுப்பாது இப்பகுதியிலிருந்து நகர முடியாது. அரசியல் வாழ்க்கையில் ஆப்ரகாம் லிங்கனின் முதல் வெற்றி 1834 ஆகஸ்டில் அவனை வந்தடைகிறது. இலினாய்ஸ் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுகிறான் லிங்கன். எதிர்காலத்தில் ஒரு வக்கீலாவதற்கும், வெள்ளை மாளிகையில் நுழைவதற்குமான முதல் படி இந்த வெற்றியில்தான் ஆப்ரகாம் லிங்கனிற்கு கட்டி தரப்படுகிறது. அது மட்டுமல்ல இக்காலகட்டத்தில்தான் தன் முதல் காதலையும் சந்தித்துக் கொள்கிறான் லிங்கன்.
“இந்த உலகை பாழாக்கும் அனைத்து இருள்மைகளிற்கும் எதிரான ஒரு ஒளடதமாக அவள் இருந்தாள்.”என தன் காதலியான ஆன் ருட்லெட்ஜ் குறித்து தன் நாட்குறிப்பில் பதிகிறான் லிங்கன். இவ்வரிகளை லிங்கன் எழுதிய காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடனில் சிக்கியிருந்தான் லிங்கன். ஆன் ருட்லெட்ஜின் நினைவுகள் லிங்கனை கடன் தந்த அழுத்தத்திலிருந்தும், காட்டேரிகளின் மீதான அவன் வஞ்சத்திலிருந்தும் தூரத் தள்ளி வைத்திருந்தன. கதாசிரியர் செத் இங்கு லிங்கனை அசாதரணமான ஒரு பிறவியாக சித்தரிக்காது வழமையாக காதலின் கொடூர பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனாகவே காட்ட விழைகிறார். காதலியின் அருகாமையை எப்போதும் வேண்டும், அவள் தந்த முதல் முத்தத்தை தன் மரணமூச்சின்போதும் நினைவுகூரும், காதலியின் அழகை ஓயாது புலம்பும் ஒருவனாகவே லிங்கன் இருக்கிறான். ஆனால் லிங்கனின் சாபம் அவனை விடுவதாக இல்லை அவன் உயிர்க்காதலியான ஆன் ருட்லெட்ஜ் 1835ல் அகால மரணமடைகிறாள். லிங்கன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்த காட்டேரி வேட்டையை மீண்டும் முடுக்கி விடுவதாக இச்சம்பவம் அமைகிறது. தாய், காதலி எனும் இரு அன்புகளையும் தன்னிடமிருந்த பறித்த தீமைக்கு எதிரான போராட்டத்தை லிங்கன் தீவிரமாக நடாத்துவதின் வழி சாதாரண பழிவாங்கும் படல கதையமைப்புக்களை ஒத்ததாக நாவலின் கதையமைப்பு மயக்கத்தை உருவாக்கும் தருணமிது. ஆனால் லிங்கனை ஒரு காட்டேரியின் பிடியிலிருந்து முன்பொருமுறை காப்பாற்றிய ஹென்றி, ஆனின் இறுதிச் சடங்குகளின் பின்பாக லிங்கனிடம் சில உண்மைகளை விளக்க ஆரம்பிக்கிறான். லிங்கனை பிரதான பாத்திரமாக கொண்டு ஒரு தேசத்தை கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து மீட்க ஒரு குழு வகுக்கும் திட்டங்களை லிங்கன் இத்தருணத்தில் அறிந்து கொள்கிறான். காலம் அவனை காதலியை இழந்த வேதனையிலிருந்து மீட்டெடுக்கிறது. 1839ல் லிங்கனிற்கு அறிமுகமாகும் மேரி டோட்டை 1842ல் திருமணம் வாயிலாக கரம் பற்றுகிறான் லிங்கன். லிங்கனை சாதாரண ஒரு மனிதனின் உணர்வுகளோடும் குழப்பங்களோடும், சிக்கல்களோடும் இப்பகுதியில் வடித்திருக்கும் செத், ஆப்ரகாம் லிங்கன் மீது வாசகன் பார்வையை தன் கற்பனையால் மறுபுனைவு செய்கிறார். 1857 வரை தொடரும் இப்பகுதியில் செத், லிங்கனின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, வக்கீல் வாழ்க்கை போன்றவற்றை வாசகனிடம் எடுத்து வருகிறார். 1843ல் அவரிற்கு முதல் மகன் பிறக்கிறான், தன் மனைவிமீதும், குழந்தைமீதும் கொண்ட பற்றால் காட்டேரி வேட்டையை நிறுத்துகிறான் லிங்கன். ஆனால் 1857ல் ஹென்றி, நீயூயார்க்கிற்கு வருமாறு லிங்கனிற்கு ஒரு அழைப்பை விடுக்கிறான். அவன் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் லிங்கன் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை அறிந்து கொள்கிறான். அந்த உண்மைகள் தந்த பாதிப்பில் லிங்கன் எடுக்கும் முடிவானது அமெரிக்க வரலாற்றையே மாற்றியமைத்த ஒன்றாக அமைந்தது.
1858ல் ஆரம்பிக்கும் நாவலின் மூன்றாம் பகுதியான President ஆனது லிங்கனின் படுகொலைவரை தொடர்கிறது. லிங்கன் எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியானார் என்பதற்கு தன் கற்பனை வழி காரணங்களை புகுத்துகிறார் செத். ஹென்றியும் அவன் நண்பர்களும் எவ்வாறு லிங்கனிற்கு பின்னிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதை நாவலின் வரிகள் சுவாரஸ்யமாக வாசகனிடம் எடுத்து வர முயல்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாவலின் விறுவிறுப்பு குறைந்த பகுதியாக இந்த இறுதிப் பகுதி அமைந்து விடுகிறது. தேர்தல், அரசியல் வெற்றிக்கான காய்நகர்த்தல், காட்டேரிகளின் சதிகளை முறியடித்தல் என இருந்தாலும் வேகம் இந்தப் பகுதியில் காணாமல் போய்விடுகிறது. 1861ல் ஆரம்பமாகிய அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்பாகவுள்ள உண்மையான காரணங்கள் என்ன என்பதை செத் தன் கற்பனையில் வடிக்க விழைகிறார். அப்போரில் பங்கு பற்றியவர்களின் கடிதங்கள் வழி தன் கற்பனையின் நம்பகத்தன்மையை செத் இங்கு நிரூபிக்க முனைகிறார். அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக முனைப்புடன் போராடிய ஒரு மனிதனின் கதையை அவரால் நாவலில் சுவையாக தர முடிந்திருக்கிறது. லிங்கனின் மனைவியான மேரி டோட் மனநிலை சிதைந்த ஒரு பெண்ணாக நாவலில் இறுதிப் பகுதியில் சித்தரிக்கப்படுகிறார். இறந்துபோன தன் இரு புதல்வர்களின் ஆவிகளுடனும் அவர் தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பங்களும், லிங்கனிற்கும் அவரிற்குமிடையிலான உறவு சில சுமூகமான நல விசாரிப்புக்களுடன் தேங்கிவிட்டதும் மெலிதாக இப்பகுதியில் கோடிட்டு காட்டப்படுகிறது. லிங்கன்கூட உறுதி குலைந்தவராகவும், தளர்ந்து போனவராகவும், சிரிப்பை தொலைத்தவராகவுமே சித்தரிக்கப்படுகிறார். லிங்கனை படுகொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத் குறித்த சில நம்பவியலா தகவல்களை கதையின் இறுதிப்பகுதியில் சேர்த்து காட்டேரிகள் எனும் உருவகத்தினை உறுதிப்படுத்த விழைகிறார் கதாசிரியர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 ஆகஸ்டில் லிங்கன் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக ஆற்றும் உரையுடனும், மிகையான கற்பனை உண்மைகளுடனும் நாவல் நிறைவு பெறுகிறது.
மிக எளிதான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், வேகமான வாசிப்பை வழங்கக்கூடியது. இருப்பினும் நாவலின் தரம் சுமாரான ஒன்றே. நாவலின் பல பக்கங்களிலும் போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் நகைச்சுவையை மேலும் கூட்டும் தன்மையுடையவையாக இருக்கின்றன. ஸ்டார்பக் காப்பியகம், கூகிள், விக்கி என தன் நன்றியை செலுத்தும் செத்தின் எழுத்துக்கள் ஆன்மாவை உள்வைத்து இருக்கும் ரகத்தை சேர்ந்தவை அல்ல. பரபரப்பான மாத நாவல் ஒன்றை படிப்பது போல ஒரு அனுபவத்தை வழங்கும் இந்நாவல் லிங்கன் எனும் மனிதன் மீதும் அவர் எடுத்துக் கொண்ட அடிமைமுறையொழிப்பு போராட்டத்தின் மீதுமான மதிப்பை புதுப்பிக்க வைக்கும் பணியை சிறப்பாக நிகழ்த்தி விடுகிறது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் இந்நாவலின் திரைவடிவம் வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும் என்பது உபரித்தகவல். நாவலை படித்தால் டிக்கட் காசு மிச்சம் என்பது கூடுதல் தகவல்!!