Friday, June 19, 2009

தேவர்களின் சிகரம்

lsd2

வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.

தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….

“BECAUSE IT’S THERE”- G.MALLORY

நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.

மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.

தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் lsd3 மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..

8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.

ஜூன் 1993 காட்மண்டு.

lsd4 ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.

அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.

அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.

தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.

சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.

சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.

மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.

மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.

lsd5 பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.

அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.

பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.

கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.

அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.

ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.

டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.

lsd6 டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.

பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.

lsd7 திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.

இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.

ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

lsd8 தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.

இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.

ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.

மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.

ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.

இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!

கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.

ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.

இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.

lsd9 lsd10 மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.

தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.

அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.

நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.

உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.

மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.

கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.

கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.

அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.

lsd12 அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.

இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.

நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.

lsd11 இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.

பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.

ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.

அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……




lsd13 ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.

மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.

இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.

ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!

மங்காவின் தரம் ******

ஆர்வலர்களிற்கு

LE SOMMET DES DIEUX

ஆங்கிலப் பதிப்பு

Sunday, June 14, 2009

பயணங்கள்


டோக்கியோவில் இசைக்குழுவொன்றில் Violoncellist ஆக இருக்கிறான் டாய்கோ (Masahiro Motoki). ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்த பின் அவன் பணியாற்றிய இசைக்குழு கலைக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்சியடைகிறான் அவன். இதனையடுத்து ஜப்பானின் மேற்குப் பகுதியிலிருக்கும் யமகட்டா எனும் தன் பிறந்த ஊரிற்கு தன் மனைவியுடன் திரும்புகிறான் டாய்கோ.

ஊரில் இறந்து விட்ட தன் தாய் தனக்கு விட்டுச் சென்ற வீட்டில் வசிக்கும் டாய்கோ, பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தனக்கு பொருத்தமாக ஏதாவது வேலை கிடைக்குமா என தேடுகிறான். ஒரு விளம்பரத்தில் வயது, முன்னனுபவம் எதுவும் தேவையில்லை, குறைந்த வேலை நேரம், நல்ல சம்பளம் பயண ஏஜென்சியில் வேலைக்கு ஆள் தேவை எனும் ஒர் அறிவிப்பைக் காணும் அவன் அந்த எஜென்சிக்கு வேலை தேடிச் செல்கிறான்.

ஏஜென்சியில் அதன் முதிய பாஸுடன்(Tsutomu Yamazaki) நிகழும் உரையாடலிலிருந்து அது உண்மையில் ஒர் பயண ஏஜென்சி அல்ல மாறாக ஜப்பானிய முறைப்படி இறந்தவர்களின் உடல்களை பெட்டிக்குள் வைக்கும் முன் அவ்வுடல்களை அவர்கள் நிகழ்த்தப் போகும் பயணத்திற்காக அலங்காரம் செய்து அழகுபடுத்தும் ஏஜென்சி என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

இவ்வேலையை ஏற்பதற்கு டாய்கோ சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொள்ளும் முதியவர், டாய்கோவை சில நாட்கள் தன் உதவியாளனாக பணிபுரிந்து பார்க்கும்படி கேட்கிறார். அதற்கு அரை மனத்துடன் சம்மதிக்கிறான் டாய்கோ.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் வேலையை ஆரம்பிக்கும் டாய்கோ காலத்தின் ஓட்டத்தில் சிறந்த, அர்பணிப்பு மிகுந்த கலைஞனாக உருமாற ஆரம்பிக்கிறான்.

19076844 வேலையின் முதல் நாளில், ஒரு விவரண படத்திற்காக டாய்கோவையே ஒர் பிணமாக நடிக்க சொல்லி விடுகிறார் முதியவர். அதிலிருந்து ஆரம்பிக்கும் நகைச்சுவை, மரணத்தை சுற்றியிருக்கும் பிரிவு, வலி, ஏமாற்றங்கள், உடைந்த கனவுகள் என மெதுவாக மாற்றம் உற்று எங்களையும் சிரிக்கவும், நெகிழவும் வைக்கின்றன.

இறந்தவர்களின் வீடுகளில் அலங்கார நிபுணர்கள் எதிர் கொள்ளும், குடும்பத்தவர்களின் எதிர்பாராத செயல்களை, அவர்கள் தங்கள் தொழில் திறமையாலும், அர்பணிப்பாலும் வென்றெடுப்பது நெகிழ்வாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒர் சமயம் இறந்த வீட்டிற்கு ஐந்து நிமிடங்கள் தாமதாக முதியவரும் டாய்கோவும் வந்து சேர்வார்கள் அதற்காக அவர்களை கடிந்து கொள்வார் இறந்த மனைவியின் கணவர். நிகழ்வின் முடிவில் தன் மனைவியின் உடலை முதியவர் அவள் உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க அழகாக்கி விட்டதாக அவர் கூறி நெகிழும் காட்சி, மரணித்துவிட்ட திருநங்கை ஒருவரின் உடலை பெண் போன்று டாய்கோ அழகாக அலங்கரித்து முடித்து அவ்வீட்டை விட்டு வெளியேறும் போது, உங்கள் அலங்காரத்தில் என் பையனின் புன்னகையை கண்டேன் என அவர்களை தரையில் வீழ்ந்து வணங்கும் தகப்பன் என மனதை தொடும் காட்சிகள் நிறைய உண்டு.

ஆனால் இறந்த உடல்களை அலங்கரிக்கும் தொழில் சமூகத்தால் தீட்டுப்பட்ட வேலை என்று பார்க்கப்படுவதையும் காட்டி விடுகிறார் இயக்குனர். டாய்கோவின் நண்பன் அவனுடன் பேசுவதற்கே தயங்குகிறான், அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து சென்று விடுகிறாள். மரணம் பற்றி அல்ல அதனுடன் எப்போதும் அருகிலிருக்கும் வாழ்வையும் அதனை எப்படி வாழ்வது என்பதனையும் கண்டடைகிறான் டாய்கோ.

இவ்வருடம் சிறந்த அயல்நாட்டுப்படத்திற்கான ஆஸ்காரை வென்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் Yojiro Takita. அழகான காட்சியமைப்பு, [குறிப்பாக உடல்களை அலங்கரிக்கும் காட்சிகள் யாவும் ஓவியங்கள் போல் தீட்டப்பட்டிருக்கின்றன.] இனிய இசை, நடிகர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு – அதிலும் முதிய பாஸின் நடிப்பு என சிறப்பாக உள்ள ஒர் படத்தில், அதன் நீளம் சற்றே இடிக்கிறது. மிக மெதுவாகவே படம் நகர்வதால் இதனைப்பார்த்து முடிக்க சற்று பொறுமையும் தேவைப்படும். ஆனால் உங்கள் பொறுமை உங்களை நிச்ச்சயம் ஏமாற்றாது. சிறந்த ஒர் படத்தினை பார்த்த அனுபவத்தை அது உங்களிற்கு வழங்கும். டாய்கோவின் தகப்பனின் கைக்குள்ளிருக்கும் அந்தக் கூழாங்கல்லை போல.

( ***** )


படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒரு சிறிய பகுதி கீழே, கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். இசையமைத்திருப்பவர் KITANAO, MIYAZAKI ஆகியோரின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள JOE HISAISHI.

ட்ரெய்லர்

Friday, June 12, 2009

டெர்"டப்பா"மினட்டர்


வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம்.

மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் 7 அவர்களிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இச்சொற்களை நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணம் அவர்தான். அவர் வலைப்பூவின் கருவறையில் பூத்ததுதான் கனவுகளின் காதலன்.

இங்கு காணப்படும் எல்லாப்பதிவுகளுமே அவரிற்குரியவைதான். அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு என் மனதறியும்.

அவரிற்கென ஒரு பதிவு நிச்சயம் இடம் பெறும் அது வரையில் டீசராக இப்பதிவு.

terminator-salvation-bale மனிதகுலத்தின் இறுதி நம்பிக்கையான ஜான் கானரின் தலைமையில், டெர்மினட்டர்களின் தலைமையகமான ஸ்கைநெட் கோட்டையின் மீது இறுதி தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுகிறது போராளிகளின் கூட்டமைப்பு. ஆனால் ஸ்கைநெட்டின் ரகசியத்திட்டமோ ஜான் கானர், மற்றும் கைய்ல் ரீஸ் இருவரையும் ஒழித்துக்கட்டுவதோடு மட்டுமல்லாது போராளிகளின் கட்டளை அமைப்பையும் சிதைத்து விட, அவதானமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை முறியடிக்க ஜான் கானரிற்கு உதவ முன் வருகிறான் புதியவனான மார்குஸ்…….

ஹெலிகாப்டர் ஒன்று டெர்மினட்டரின் தலையின் மீது தரையிறங்க, ஹெலியிலிருந்து கீழே இறங்கும் ஜான் கானர் [ கிறிஸ்டியன் பேல்] அகப்பட்டுக்கொண்ட டெர்மினட்ரின் தலையில் தோட்டாக்களைப் புதைத்து அதன் கதையை முடிக்கிறான். இந்த முதல் காட்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் நண்பர்களே, திரைப்படத்தினை தொடர்ந்து பார்க்கப் போகும் ரசிகர்களின் கதியும் இதேதான் என்பதை சிம்பாலிக்காக எடுத்துக் காட்டிய இயக்குனர் McG யின் புத்திசாலித்தனத்தினை பாராட்டியே ஆக வேண்டும்.

நீர், நிலம், ஆகாயம் என டெர்மினட்டர்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். உளவு பார்த்தல், துரத்தல், அழித்தல், கொல்லுதல் என அவைகள் செய்யாத சாகசங்களே இல்லை எனலாம். பேசாமல் ஒர் லோக்கல் டச்சாக பான்பாராக் விற்கும் ஒர் பெட்டிக்கடை டெர்மினட்டரையும் சேர்த்திருக்கலாம்.

Terminator-4-1714 கிறிஸ்டியன் பேல், சாம் வார்திங்டன் [ மார்குஸ் ] ஆகிய இரு நடிகர்களுமே ரொம்ம்ப நல்லவர்கள். இப்படியொரு டப்பாக் கதையில் மனம் வந்து நடித்திருக்கிறார்களே!!

சண்டைக்காட்சிகள் யாவும் சலிப்பையே தருகின்றன. ஒரு காட்சி கூட ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. தலையில் துண்டு கட்டிக்கொண்டு காவல் காக்கும் டெர்மினட்டர் மட்டும் நினைவில் நிற்கிறார்.

திரைப்படத்தின் உச்சக்கட்ட மோதல் காட்சிகளில் அம்மணமாக வந்து பங்கேற்கும் கலிபோர்னியாவின் கவர்னர் உருவம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒர் ஹாலிவுட் மயிலை அக்காட்சியில் போட்டிருந்தாலாவது கொஞ்சம் சூடாகியிருக்கலாம்!!!

இறுதிக்கட்டம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும், இது அக்காட்சியால் வந்த கண்ணீரல்ல, அப்பாடா படம் முடிந்ததே என்பதால் சொரிந்த ஆனந்தக் கண்ணீர்.

திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களிற்கு கிடைக்கும் விடுதலை உணர்வு மட்டும் தான் இப்படத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான இரட்சணியம்!!! (*)