வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழமை போன்றே உங்கள் கருத்துக்களிற்கான என் பதில்களை கருத்துப் பெட்டிகளில் நீங்கள் காணலாம்.
தவறவே விடக் கூடாத மங்கா கதை ஒன்றைப் பற்றிய பதிவுடன் இம்முறை உங்களிடம் வருகிறேன் நண்பர்களே. மங்கா கதை என்பதால் சித்திரப் பக்கங்களை வலமிருந்து இடமாக படிக்கவும். கதைக்குள் நுழையலாமா ?
மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் செவனிற்கு….
“BECAUSE IT’S THERE”- G.MALLORY
நெடிதுயர்ந்த மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கற்றையான முகில்களினூடு சூரியக் கதிர்கள் ஓடும் காற்றை எட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றன.
மலையின் 7900 மீற்றர் உயரத்தில் புவியியலாளன் நோயல் ஓடல், மலையில் காணப்படும் கற்களை எடுத்து ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இது வரை யாரிற்குமே கிடைத்திராத வாய்ப்பு அது. அது அவன் மனதை குதூகலம் கொள்ளச் செய்தாலும், மலோரியும், இர்வின்னும் முதல் முதலாக மலையின் சிகரத்தை தொட்டு வெற்றி கொள்ளப் போகிறார்களே எனும் எண்ணம் அவன் மனதை பிசையவே செய்தது.
தீடிரென வீசும் பலமான காற்றில் மலைச்சிகரத்தை மூடியிருந்த முகிலாடை விலக, தன் முழுப் பிரம்மாண்டத்துடனும் உன்னதத்துடனும், அவன் கண்களில் விருந்தாக விரிகிறது எவரெஸ்ட் மலையின் சிகரம். இந்த அற்புதக் காட்சியில் அவன் மனம் லயித்துப் போகிறது. சிகரத்தின் உயரத்தினை கூர்ந்து நோக்கும் அவன், அங்கு இர்வினையும், மலோரியையும் சிறு உருவங்களாக காண்கிறான். லிவர்பூலிலிருந்து கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன, இர்வினை விடவும் மலைச்சுவாத்தியம் தனக்கு நன்கு பழகி விட்ட போதிலும், ஓக்சிஜன் கருவிகளின் நுட்பம் அறிந்த இர்வினை, மலோரி சிகரத்தின் உச்சியை வெற்றி கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? மீண்டும் பலமாக வீசும் காற்றில், முகில்கள் வேகமாக சிகரத்தின் மேனியழகை மூடி விட, அவன் கண்களிலிருந்து மறைந்து போய் விடுகிறார்கள், இர்வினும், மல்ரோயும்..
8 ஜூன் 1924 அன்று, எவரெஸ்ட் சிகரத்தின் மீதான முதல் மனித ஏறலின் ரகசியத்தை தம் பின்னே விட்டு காணாமல் போனார்கள் அவ்விரு மலையேறிகளும்.
ஜூன் 1993 காட்மண்டு.
ஒடுங்கிய தெருக்களில் கம்பளங்களை கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள், பிற தேசத்தவன் என்று தெரிந்ததும் அவனிற்கு கஞ்சா விற்க விரும்பும் நபர், ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. அவன் மனதின் வேதனையை அவ்விதத்திலாவாது குறைத்து விடலாமா எனும் ஆசை தான். காட்மண்டுவிற்கு அவன் நான்காம் முறையாக வருகை தந்திருக்கிறான். எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற விரும்பிய ஜப்பானியக் குழுவொன்றின் படப்பிடிப்பாளானாக அவன் இடம் பெற்றிருக்கிறான். அவன் மனதில் அந்த மலையேறும் நிகழ்ச்சியின் ஒர் தருணம் ஓட, அதனை மறக்க விரும்பி மேலும் தன் நடையை தொடர்கிறான்.
அவன் கால்கள் அவனை தாமல் எனப்படும் மலிவு விலை ஹாட்டல்களும், மலையேற்றத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் கூடிய பகுதிக்கு அவனையறியாமலே இட்டு வந்து விடுகின்றன. சகர்மாதா எனப்படும் பெயருள்ள கடையில் நுழையும் அவன், கடையை சுற்றிப் பார்க்கிறான். பல விதமான ஆடைகள், புத்தமதம் சார்ந்த பொருட்கள் இப்படியாக கடையிலுள்ள பொருட்களை பார்வையிடும் அவன் கண்களில் படுகிறது ஓர் பழைய கமெரா.
அக் கமெராவினை எங்கோ கண்ட ஞாபகம் அவனிற்கு இருந்தாலும் அவனால் அதனை உடனடியாக நினைவு படுத்தி விட முடியவில்லை. அக் கமெராவினை கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து பார்க்கும் அவன், பேரம் பேசி அக்கமெராவை வாங்கி விடுகிறான். அந்த தருணத்தில் அக்கமெரா வழி ஒர் சந்திப்பு நிகழும் என்பதை அவன் அறிந்தானில்லை. ஆம், இமாலாயாவின் பிரம்மாண்டத்தில் மறைந்து வாழ ஆரம்பிக்கும் முன்பாக, மலையேறுவதில் வல்லவனும், பெயர்பெற்றவனும், முரடனுமான ஹபு ஜோஜியை அறிமுகம் கொள்ளப் போகிறான் புகாமச்சி.
தன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் புகாமச்சி, ஜப்பானிலுள்ள தன் நண்பனொருவனை தொடர்பு கொண்டு, அப் பழைய கமெரா பற்றிய விபரங்களை வேண்டுகிறான். நண்பனின் பதில் அழைப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இருவரைப் பலியெடுத்து விட்ட அந்த மலையேறும் சம்பவம் மீண்டும் அவன் மனதினை உறுத்த ஆரம்பிக்கிறது.
சில மணி நேரக் காத்திருப்பின் பின் தொலைபேசி மணி அடிக்க , அதனை ஆவலுடன் எடுத்து அவன் நண்பனுடன் பேசுகிறான் புகாமச்சி. எதிர்முனையில் இருக்கும் அவன் நண்பன், மலோரி 1924ல் தன்னுடன் எடுத்து சென்ற கமெரா, புகாமச்சி கடையில் வாங்கிய பழைய கமெரா வகையை ஒத்ததே என தெரிவிக்கிறான். தன் கையில் இருப்பது மட்டும் எவரெஸ்ட் மீது ஏறும்போது மலோரி தன்னுடன் எடுத்து சென்ற அதே கமெராவாகவிருந்தால் எவரெஸ்ட் மலையேற்ற சரித்திரமே மலையேற வேண்டியிருக்கும் என எண்ண ஆரம்பிக்கின்றான் புகாமச்சி.
சகர்மாதா கடைக்கு திரும்பவும் வரும் புகாமச்சி, கமெரா அக்கடைக்கு எப்படி வந்தது என விசாரிக்கிறான். கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், தனக்கு அது குறித்து நினைவு வரும் போது புகாமச்சியை தொடர்பு கொள்வதாக கூறுகிறான். அவனிடம் ஒர் தொலைபேசி எண்ணை தந்து, கடையை விட்டு வெளியேறுகிறான் புகாமச்சி.
மணிக்குமார் பற்றி அவன் விசாரித்த இடங்களில், அவனைக் குறித்து எச்சரிகையாக இருக்க சொல்லி புகாமச்சிக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரமாக தன் அறைக்கு திரும்பும் அவன், தான் வாங்கிய பழைய கமெராவை யாரோ திருடி விட்டதை அறிந்து கொள்கிறான். அவன் சந்தேகம் மணிக்குமார் மேல் திரும்புகிறது.
மலோரி, மற்றும் இர்வின் மறைவு பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தவாறே தூங்கிப் போகிறான் புகாமச்சி. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனிற்கு ஒர் தொலைபேசி அழைப்பு வருகிறது. மணிக்குமாரை அவன் கடைக்கு தேடிச்செல்லும் புகாமச்சிக்கு, தனக்கு கமெராவைக் கொண்டு வந்து தந்தவர் இவர்தான் என நாரதர் ராசேந்திராவை அறிமுகம் செய்கிறான் மணிக்குமார். நாரதர் தான் கமெராவை வாங்கியது மலையேற்றங்களில் பொதிகள் மற்றும் உபகரணங்களைச் சுமப்பவனாக பணியாற்றும் கோத்தமாவிடம் என்கிறான். கோத்தமாவை தேடிச் செல்கிறான் புகாமச்சி.
பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் கோத்தமாவை ஒர் மது பான விடுதிக்கு அழைத்து சென்று கமெரா அவனிற்கு எப்படிக் கிடைத்தது என வினவுகிறான் புகாமச்சி. உனக்கு இந்தப் பழைய கமெரா மேல் ஏன் இவ்வளவு அக்கறை என எதிர்க் கேள்வி கேட்கிறான் கோத்தமா. இதனால் உஷாரடையும் புகாமச்சி, பணத்தை காட்டி கோத்தமாவை மயக்கி, அவனிற்கு அக் கமெராவை தந்தது இன்னொரு ஜப்பானியனே என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.
அவன் பெயரைத் தனக்கு கூறும்படி புகாமச்சி கேட்க, அவன் பெயர் பிக்கலு சான்ங் எனக் கூறுகிறான் கோத்தமா. அவன் ஜப்பானியப் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறான். அவன் எங்கே வசிக்கிறான் என புகாமச்சி வினவ, எதிரிலிருந்த கோத்தமாவின் கண்கள் பயத்தால் விரிகின்றன, மதுச் சாலையை குப்பெனத் தாக்கியது ஒர் மிருக வாடை, புகாமச்சி அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஒர் மனித மலை போன்று வந்து கொண்டிருந்தான் பிக்கலு சான்ங்.
பிக்கலு சான்ங் தங்களை நோக்கி வருவதைக் கண்டது முதல் கோத்தமாவின் உடல் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பிக்கிற்து, அவர்களிடம் வந்த பிக்கலு, புகாமச்சியிடம் இடைஞ்சலிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கோத்தமாவிடம் கடுமையாக பேச ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் வீட்டில் இருந்து அவன் திருடிச் சென்ற பொருட்கள் எங்கே என அவனிடம் கேட்கிறான் பிக்கலு. முதலில் மென்று முழுங்கும் கோத்தமா, பிக்கலு தன் நண்பனுடன் போலிசில் சென்று முறையிடுவதாக கூறியதும் உண்மையைக் கக்கி விடுகிறான். புகாமச்சியின் மூளையோ பிக்கலுவை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருக்கிறோமே என சிந்திக்க ஆரம்பிக்கிறது.
கோத்தமா, புகாமச்சி, பிக்கலு, அவன் நண்பன் என யாவரும் மணிக்குமாரை தேடிச்செல்கிறார்கள். சகர்மாதா கடையில் இவர்களை வரவேற்கும் மணிக்குமார், முதலில் விடயம் தனக்கு புரியாதது போல் நாடகமாடுகிறான், போலிசிடம் முறையிடப் போவதாக பிக்கலுவும் அவன் நண்பனும் அவனை மிரட்ட, அச்சமுறும் மணிக்குமார் பதுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து பிக்கலுவிடம் தந்து விடுகிறான்.
அப்பொருட்களின் மத்தியில் தன்னிடமிருந்து களவாடப்பட்ட பழைய கமெராவைக் கண்டு விடும் புகாமச்சி, அது குறித்து பிக்கலுவிடம் கேள்விகளை எழுப்ப, அக் கமெரா பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முரட்டுத்தனமாக மறுத்து விடுகிறான் பிக்கலு. புகாமச்சியோ பிடிவாதமாக கமெரா கண்டெடுக்கப்பட்ட போது இக் கமெராவினுள் ஏதேனும் படச்சுருள் இருந்ததா என பிக்கலுவை பின் தொடர, நடந்த சம்பவங்களையும், கமெராவையும் மறந்துவிடும்படி கூறி விட்டு விலகிச் செல்கிறான் பிக்கலு. பிக்கலுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு நிற்கும் புகாம்ச்சிக்கு, பிக்கலு தன் காலை சற்று நொண்டி நடப்பது அவன் மூளையின் தேடலிற்கு விடையை தந்து விடுகிறது.
ஹபு என உரக்க அழைக்கிறான் புகாமச்சி, முன்னே நடந்து சென்று கொண்டிருந்த பிக்கலுவின் முதுகில் ஓடிய நடுக்கம் அவன் கண்களில் தெளிவாக தெரிந்தது. தன் நடையை ஒரு கணம் நிறுத்தியிருந்த பிக்கலு சுதாரித்துக் கொண்டவன் போல் மீண்டும் விலகி நடக்க ஆரம்பிக்கின்றான். மலையேறிகள் வட்டத்தில் இருந்து கரைந்து போய் விட்ட ஹபு ஜோஜி நேபாளத்தில் என்ன செய்கிறான் எனும் கேள்வி புகாமச்சியின் மனதை குடைய ஆரம்பிக்கிறது.
டோக்கியோ, ஒரு வாரத்தின் பின்.
டோக்கியோவிற்கு திரும்பும் புகாமச்சி, அங்கு ஹபு ஜோஜி பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றான். தன் நண்பன் ஒருவன் வழங்கிய புகைப்படமொன்றின் பிரதியிலிருந்து, நேபாளத்தில் பிக்கலுவாக இருப்பது ஹபு ஜோஜி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவன், ஹபு ஜோஜி தலைமறைவாகும் முன் அங்கத்தவனாக இருந்த மலையேறுபவர்கள் சங்க தலைவரை சந்தித்து ஹபு ஜோஜி பற்றி அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
பெற்றோரை இழந்த இளம் அனாதையான ஹபு, எவ்வாறு தன் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் மலையேறுவதில் வல்லவனாக மாறினான் என்பதை விளக்குகிறார் சங்கத் தலைவர். ஒரு தருணத்தில் மலையைத் தவிர வேறு எதுவுமே அவன் வாழ்வில் இல்லாதவனாகி விட்டதை அவர் விளக்குகிறார். ஹபுவிற்கு எல்லாமே மலையாக இருந்தது. அவன் மனதில், உயிரில் உயிராக மலை மட்டுமே இருந்தது, அவன் மலையுடன் மட்டுமே இருக்க விரும்பினான். இவ்வுலகில் அவனிற்காக மலை மட்டுமே இருந்தது.
திறமைகளும், கனவுகளும் வசதி இல்லாத காரணத்தினால் முடக்கப்படுவது என்பது வாழ்வில் சகஜமான ஒன்று. ஹபு வசதியற்றவன், எனவே அயல் நாடுகளில் மலையேறச் செல்லும் குழுக்களில் இடம்பெற முடியாமல் மனம் வருந்துகிறான். அவன் பிரபலமாகாதவன் என்பதால் அவனிற்கு அணுசரனையாளர்களும் கிடைக்காது தவிக்கிறான்.
இந்த ஏமாற்றங்கள் அவனை ஏதாவது சாதனை செய்து தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற நிலைக்கு உந்த ஆரம்பிக்கின்றன. மலையேறுபவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனுடன் இணைந்து ஒனி சுரா எனும் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைக்க விரும்புகிறான் ஹபு.
ஜப்பானின் ஒனி சுரா சிகரம் பேய்கள் [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது] தற்கொலை செய்யும் சிகரம் என பெயர்பெற்றது. ஐரோப்பிய சிகரங்களில் ஏறும் அனுபவத்தை வழங்க வல்லது. அச்சிகரத்தில் வசந்த காலத்தில் ஏறுவது என்பது ஏற்கனவே பல நபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பனிக்காலத்தில் அச்சிகரத்தினை வெற்றி கொள்ள விரும்புகிறான் ஹபு. இதற்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.
தன் தளராத முயற்சியாலும், அவனின் உள்ளே இயல்பாகவே ஓடும் தந்திரமான மலையேறும் நுட்பங்களாலும் அந்த அசாத்தியாமான ஏறலை தன் சகாவுடன் இணைந்து சாதித்து விடுகிறான் ஹபு. ஒனி சுரா சிகரத்தில் பனிக்காலத்தில் முதன் முதலில் ஏறிய அணி எனும் சாதனையை உருவாக்குகிறான் ஹபு.
இச்சாதனையும் அணுசரனையாளர்களை அவனிற்கு பெற்றுத்தர தவறி விடுகிறது. ஐரோப்பிய, ஹிமாலாயச் சிகரங்களில் ஏறும் வாய்ப்புகள் அவனிற்கு வெகு தூரம் என்பதால், ஜப்பானின் மிகச்சிரமான மலைச் சிகரங்களில் ஏற ஆரம்பிக்கிறான் ஹபு. மலையேறும் போது ஹபு இலகுவான வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை, அவற்றை தவிர்த்து விட்டு கடினமான வழிகளின் மூலம் அவன் மலைச்சிகரங்களை வெற்றி கொள்ள விழைகிறான்.
ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. அவன் ஏறும் வேகம் பிரமிக்கத்தக்கது. மிகச் சில மலையேறிகளில் மட்டுமே காணக்கூடிய ஒர் புனிதம், அவன் மலையேறும் முறைகளில் நிறைந்திருந்தது.
மலையின் முன்பாக ஹபுவிற்கு எதுவுமே தெரிவதில்லை. அவனிற்கென ஒர் நிரந்தர வேலை கிடையாது. பணி புரியுமிடத்தில் மலை ஏறுவதற்காக விடுப்புக்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவன் அவ்வேலையை ராஜினாமா செய்து விடுவான். அவனிற்கென ஒர் குடும்பமில்லை. அவன் ஒர் தனியன். மலையேறல் ஒன்றே அவன் மது, மதம் எல்லாம்.
ஹபுவின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், கால ஓட்டத்தோடு வந்து சேரும் புதிய பொறுப்புக்களினாலும் மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ள சகாக்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். ஹபு இணைந்து மலையேறுவதற்கு சகாக்கள் இல்லாதவனாகி விடும் நிலை ஏற்படுகிறது.
இச்சந்தர்பத்தில் தான் மலையேறுபவர்கள் சங்கத்தில் வந்து இணைகிறான், 18 வயது இளைஞனான கிஷி. சங்கத்தில் இணைவதிற்கு அவன் தந்த காரணம்- ஹபு ஜோஜி!
கிஷி, ஹபுவுடன் சேர்ந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஹபுவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவனாக அவனிருக்கிறான். ஹபு ஆரம்பத்தில் அவனை ஒதுக்கி விட நினைத்தாலும், கிஷியின் உண்மையான அர்ப்பணிப்பு அவன் மனதை தொட்டு விடுகிறது. கிஷிக்கு மலையேறும் நுட்பங்களை கற்றுத் தர ஆரம்பிக்கின்றான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் வியக்கும் விதமாக மலையேறுவதில் விரைவாக முன்னேற்றம் காண்கிறான் கிஷி. அவன் மலையேறுவதை பார்ப்பவர்கள் அது அப்படியே ஹபு மலையேறுவதைப் போலுள்ளது எனக்கூறி ஆச்சர்யப்படுகிறார்கள்.
ஹபுவுடன் மலையேற சம்மதம் தந்த சகா ஒருவன் இறுதி நேரத்தில் குடும்ப காரணங்களிற்காக மலையேற்றத்தில் இணையமுடியாது எனக் கூறிவிடுகிறான். மனம் வெறுத்துப் போகும் ஹபு வீட்டில் தனியாக இருந்தவாறே மனதை அலைபாய விடுகிறான். இவ்விடயத்தை தெரிந்து கொண்டு ஹபுவைத் தேடி அவன் வீட்டிற்கு வருகிறான் கிஷி. தான் அவனுடன் மலையேற வருவதாக அறிவிக்கிறான்.
இம்மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இது முடியுமானது என ஆரம்பத்தில் மறுத்து விடும் ஹபு, பின் கிஷியின் பிடிவாதத்தினால் அவனைத் தன்னுடன் மலையேற அழைத்து செல்ல சம்மதிக்கிறான்.
மலையேற்றம் ஆரம்பிக்கிறது. சிரமங்கள் மிகுந்த ஏற்றம் அது. ஹபுவிற்கு ஈடு கொடுத்து ஏறுகிறான் கிஷி, ஆனால் களைத்துப் போகிறான். தன் களைப்பை வெளிக்காட்டி ஹபுவின் மலையேற்றத்தை தாமதிக்க அவன் விரும்பவில்லை.
தன் மாணவனின் மீது மனதில் பெருமை கொள்கிறான் ஹபு. மலையின் சிகரத்தை தொட்டு விடுவதற்கு இன்னும் சிறிதளவு உயரமே ஏற வேண்டிய நிலையில், ஹபுவை தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த கிஷியின் கால்கள் வழுக்கி விட மலையிலிருந்து கீழே விழுகிறான் கிஷி.
அவன் உடல் மலையில் அடிபடுகிறது. மலையின் மடிப்பு ஒன்றை தாண்டி விழும் கிஷி, ஹபுவின் இடையில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில், அரை உயிருடன் பாதாளத்தின் மேல் ஊசலாடுகிறான்.
நடந்த சம்பவத்தின் தீவிரம் ஹபுவிற்கு உறைக்க, கிஷி என உரக்க கத்தும் அவனிற்கு பலவீனமான குரலில் பதிலளிக்கிறான் கிஷி, அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலை.
உடலில் பட்ட அடிகள் அவனை மரணத்தின் சுவையை பருகச்செய்து கொண்டிருந்தன. கிஷியின் உடல் பாரம் ஹபுவை கீழே இழுக்கிறது. கீழே தொங்கும் கிஷி, ஹபுவிடம் தான் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றை அறுத்து விடச் சொல்கிறான். இதனால் இரு உயிர்கள் பறிபோவது தவிர்க்கப்படும் என்று கூறும் அவனை, மேலும் பேச வேண்டாம் என வேண்டுகிறான் ஹபு.
மலையில் ஆணியொன்றை அறைந்து, அதில் தன் உடலைத் தனியே பிரித்து பொருத்திக் கொள்ளக்கூடிய அமைப்பொன்றை ஏற்படுத்துகிறான் ஹபு. பின் மேலும் ஆணிகளை மலையின் சுவரில் பொருத்தி, அதில் வளையங்களை மாட்டி, கிஷியை தாங்கி கொண்டிருக்கும், தன் இடையில் இணைக்கப்பட்டுள்ள, பிரதான கயிற்றை தன் இடையிலிருந்து விடுவித்து அவ்வளையங்களில் இணைத்து விடுகிறான்.
கிசியின் உடல் பாரம் ஹபுவிடமிருந்து நீங்கியதால், மலையின் சுவர்களில் கால்களை ஊன்றி, உடலை வெளிநீட்டி தன் கீழ் தொங்கும் கிஷியை எட்டிப்பார்க்கும் ஹபு, கிஷியின் நிலையைக் கண்டதும் உடைந்து போகிறான். கிஷிக்கு நடக்கப் போவது என்ன என்பது அவனிற்கு தெரிந்திருந்தது.
கீழே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிஷியின் குரல் வலிமை இழந்து கொண்டே போகிறது. தன் இரு கைகளாலும் கிஷி இணைக்கப்பட்டுள்ள கயிற்றை மேலே நோக்கி இழுக்கிறான் ஹபு. ஆனால் அதில் தோல்வியடைந்து விடுகிறான். இரண்டு மணி நேரமாக தொடரும் இப்போராட்டத்தினால் ஏற்படும் களைப்பு, மற்றும் கடும் குளிர் என்பன ஹபுவின் கண்களையும், உடலையும் சற்று அயரச் செய்து விடுகின்றன. இச்சமயத்தில் கிசியை தாங்கி கொண்டிருந்த கயிறு மலை மடிப்புடன் தொடர்ந்து உராய்ந்ததன் காரணமாக அறுந்து விட கீழே வீழ்கிறான் கிஷி.
அயர்ந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு மீளும் ஹபு, காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் அறுந்த கயிற்றைப் பார்க்கிறான். சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.
அறுந்த கயிற்றை மேலே எடுத்து, அதன் உதவியுடன் மலையின் சிகரத்தை அடையும் ஹபு, மலையிலிருந்து இறங்கும் வழியாக கிஷியைத் தேடிக் கீழே செல்கிறான். மலையின் வெண்பனி போர்த்திய கல் மெத்தை ஒன்றில், ஹபுவில் தான் கொண்ட மதிப்பு சிறிதும் கசங்காது சிதறிப் போய்க்கிடக்கிறான் கிஷி. அவன் ஏற விரும்பிய மலைகளில் எல்லாம் இனி ஹபு அவனிற்காக ஏறுவான். கிஷியும் தளராது அவனைப் பின் தொடர்வான்.
இவ்விபத்தின் பின் அமைதியாகி விடுகிறான் ஹபு. மலையேறுபவர்கள் சங்கத்திலுள்ளவர்கள் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள். சங்கத்தை விட்டு விலகுகிறான் ஹபு. காலம் ஓடுகிறது. மலையேறுபவர்களிற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறான் ஹபு.
நிறுவனம் ஒழுங்கு செய்யும் மலை ஏறும் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் அவன் பங்கு கொள்கிறான். மற்றவர்களிற்கு ஆபத்தாய் அமையும் எவ்வகையான மலையேற்ற முயற்சிகளையும் அவன் கைவிட்டு விடுகிறான்.
இதே காலப்பகுதியில் ஜப்பானில் மலையேறுவதில் பிரபலம் அடைய ஆரம்பிக்கிறான் ஒருவன். அவன் மலையேறும் பாணியில் காற்றில் ஒளிந்திருக்கும் புத்துணர்ச்சி கலந்து இருக்கிறது.
பல நிறுவனங்களின் அணுசரனை மற்றும் உதவிகளுடன் அவன் நிகழ்த்தும் மலையேற்றங்கள் மூலம் அவன் உலகப் புகழ் பெற ஆரம்பிக்கிறான்.
ஹபு ஏற்கனவே நிகழ்த்திய ஒனி சுரா சிகரத்தினை பனிக்காலத்தில் ஏறும் சாதனையை, அவன் ஒற்றை ஆளாக ஏறி சாதனை புரிகிறான்.
அவன் தனி நபராக நிகழ்த்தும் சாதனைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறான் ஹபு. அப்புதியவனின் சாதனைகளை தான் தனியாளாக முறியடிக்க வேண்டுமென்ற கனல் மெதுவாக அவனில் மலர ஆரம்பிக்கிறது. அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகும் அப்புதியவனின் பெயர், ஹாஸ் ட்சுனியோ……
ஹாஸ் ட்சுனியோவின் சாதனைகளை ஹபு முறியடித்தானா? புகாமச்சி எண்ணுவது போல் அந்தப் பழைய கமெரா மலோரியுடையதா? அக் கமெரா ஹபுவின் கைக்கு எங்கணம் வந்து சேர்ந்தது? காட்மண்டுவில் ஹபு, பிறர் அறியாமல் மறைந்து வாழ்வதன் காரணம் என்ன? ஹபுவை புகாமச்சி மீண்டும் சந்திப்பானா? எவரெஸ்டின் சிகரத்தினை முதலில் வெற்றிகண்டவர்கள் யார்? எனும் கேள்விகளோடு நிறைவு பெறுகிறது LE SOMMET DES DIEUX எனும் மங்காவின் முதல் பாகம்.
மலைகள், மலையேறும் முறைகள் மற்றும் நுட்பங்கள், அதிலுள்ள சிரமங்கள், மலையை வெற்றி கொள்ள பாடுபடும் மனிதர்கள் என ஒர் வித்தியாசமான உலகிற்கு எம்மை இட்டுச்செல்கிறது கதை. மிக விறுவிறுப்பாகவும், நுணுக்கமான தகவல்களுடனும் உணர்ச்சிகளை நெகிழ வைக்கும் சம்பவங்களுடனும் நகர்கிறது கதை.
இம் மங்கா முதலில் KAMIGAMI NO ITADAKI எனும் நாவலாக வெளிவந்தது. நாவலை எழுதியவர் ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான YUMEMAKURA BAKU ஆவார். நாவலை மங்காவிற்காக தத்தெடுத்து, அதனை ஒர் காவியமாக்கியிருப்பவர் செட்டொனும் லிங்ஸ் பூனையும் புகழ் ஜிரோ டனிகுச்சி.
ஜிரோ டனிகுச்சியின் சித்திரங்கள் எம்மை உலகின் மலைச்சிகரங்களிற்கெல்லாம் அழைத்து செல்கின்றன. சிறப்பான கதைசொல்லலையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். மலையேறும் போது பாத்திரங்களுடன் கூட நாங்களும் கூடவே ஏறுவது போன்ற படபடப்பு நிச்சய அனுபவம். தன் வாழ்க்கையையே மலைக்கு தந்து விடுகின்ற ஒரு மனிதனின் கதையை எந்தவித ஜோடிப்புகளும் இன்றி யாதார்த்தமாகவும், வாசகனின் உணர்ச்சிகளை நுட்பமான ரசனையின் புள்ளிக்கு இட்டுவரும் விதமாகவும் தந்திருக்கிறார் டனிகுச்சி. கதையின் ஐந்து பாகங்களையும் படித்து முடிக்கும் போது ஹபு எனும் மனிதன் எங்கள் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்து விடுவான். ஜிரோ டனிகுச்சியும் தான். எங்களை காதலுடன் அழைத்து நிற்கும் மலைச் சிகரங்களாக!
மங்காவின் தரம் ******
ஆர்வலர்களிற்கு
கனவுகளின் காதலரே,
ReplyDeleteவணக்கம்,
மீ த ஃபர்ஸ்ட்டு!
இதென்ன அதிரடி?
By the way, அந்த நட்ச்சத்திர அமைப்பை சற்று விளக்குங்களேன். (மங்காவின் தரம்)
காதலரே,
ReplyDeleteஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த செகண்டு!
ஜிரோ டனிகுச்சி வழங்கும் மற்றுமொரு மாங்கா பதிவா? இன்றைய இரவு சிறப்பாக கழியும்.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
மங்காவின் ஐந்தாம் பாகத்தில் ஹபு ஜோஜிக்கு வழங்கப்படும் அற்புதமான முடிவு நான் என் காமிக்ஸ் மற்றும் நாவல் வாசிப்பில் காணாதது. அது மட்டுமல்லாது எக்காரணம் கொண்டும் நண்பர்கள் தவறவிடக் கூடாத மங்கா என்பதற்காகவும், இது என் இதயம் கவர் மங்கா என்பதற்காகவுமே அப்பச்சை நட்சத்திரம்.
ReplyDeleteகாதலரே,
ReplyDelete//சற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.//
Superb.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
ஒலக காமிக்ஸ் ரசிகரே நன்றி, சற்று நீண்ண்ட பதிவு தான் பொறுமையாகவே படியுங்கள்.
ReplyDeleteவிஸ்வா முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
காதலரே,
ReplyDeleteநீங்கள் என்னடாவென்றால் மாங்காவுக்கு மேல் மாங்காவாக அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். ஆனால் இந்த பயங்கரவாதியும், விஸ்வாவும் தான் தமிழ் காமிக்ஸில் இது வரை வந்த மாங்கா காமிக்ஸ்களை பற்றிய தனித்தனி பதிவுகளை இடாமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறார்கள்.
Dr 7 / Viswa, மாங்கா சீசனே முடியப் போகிறது. இன்னும் என்னைய்யா தயக்கம்? .
காதலரே,
முழுவதும் படித்து விட்டேன். முடிவு பிரம்மாதம். இந்த மாங்கா காமிக்சிலும் மூலக் கதையை மாற்றி இருக்கிறார்களா?
இந்த பதிவை பற்றிய நீண்ட பின்னுட்டத்தை காலையில் இடுகிறேன். இப்போது எதுமாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி பதிவை தயார் செய்து வருகிறேன். மன்னிக்கவும்.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
ஓலக காமிக்ஸ் ரசிகரே, இம் மங்கா கதையில் மூலக்கதையின் முடிவு மாற்றப்படவில்லை. வழமையாகவே நீங்கள் வித்தியாசமாக பதிவிடுவீர்கள் அதிலிருந்து வித்தியாசமாகப் பதிவு என்பது ஆவலைத் தூண்டுகிறது. தமிழில் வெளியான மங்கா கதைகள் பற்றிய பதிவுகளைக் காண நானும் ஆவலாயுள்ளேன்.
ReplyDeleteஅடடா, மலை சிகரங்களை அடிப்படையாக கொண்ட ஒரு கதை தொடரா... இது வரை இப்படி கதைகளத்தை காமிக்ஸில் பார்த்த நியாபகம் இல்லை. மலைசிகரங்கள் என்றாலே சற்றென்று நியாபகம் வருவது கிளிப்ஹேங்கர் படம் தான்.
ReplyDeleteமுழுவதும் பொருமையாக படித்து விட்டு மீண்டும் கருத்தை பதிகிறேன், காதலரே.
நண்பரே,
ReplyDeleteநீண்ட பதிவு என இன்னொரு முறை சொல்லாதீர்கள். லின்ஸ் பூனையின் பதிவினை சிறந்த பதிவு என்று சொல்லியிருந்தேன். Judgement reserved.
மலையேற்றம் குறித்து மிகுந்த ஆர்வம் உண்டு. சிறிய குன்றுதானே என ஏறி இறங்க முடியாமல் அவஸ்தை பட்டிருக்கிறேன். மேலே ஏறிய வுடன் ஏற்படும் அனுபவத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.
மிக சிறந்த பதிவு. இச்சித்திரத் தொடர் மொத்தம் எத்தனை பாகங்களாக வந்திருக்கிறது?
ஜெர்மனி தோல்வியடைந்த பின் அங்கிருந்து தப்பி ஹென்ரிஷ் ஹிம்ல்ர் எழுதிய Seven Years in Tibet புத்தகம் மலையேற்றம் உங்களுக்கு பிடித்திருந்தால் தவற விடாக்கூடாத புத்தகம் பிராட் பி்ட் நடித்து படமாகவும் வந்தது.
படத்தை பார்த்து விட்டு, புத்தகத்தை படிக்கலாம். படம் சுமாராகதானிருகும்.
ஜெயமோகனின் பனி மனிதன் கதையும் மலையேற்றத்தை அடிப்படையாக கொண்டதுதான்.
The Snow Leopard என்ற புத்தகத்தையும் இச்சமயத்தில் பரிந்துரை செய்கிறேன். இரு புத்தங்களிலும் இந்தியர்களை ஒரு மாதிரியாக தான் எழுதியிருப்பார்கள். அது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மலையேற்ற சாகசங்களில் பார்த்தீர்களென்றால் நம்மவர்கள் மற்றும் நேபாளிய ஷெர்பாகள் துணையின்றி அவர்களால் மலையேற முடியாது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவர்களது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.
மலைகள் பற்றி பேச நிறைய இருக்கின்றன. வாரக் கடைசியில் இனிமையான நினைவுகள் தூண்டிய உங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.
ரஃபிக், பொறுமையாகப் படித்து விட்டு வாருங்கள். உங்கள் கருத்துக்களிற்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteநீதிபதி ஜோஸ் அவர்களே, இபிகோ செக்ஸன் படி நீங்கள் பதிவுகளைப் படித்து விட்டு தீர்ப்பு சொல்லும் பாணி என்னை கிலுகிலுக்க வைக்கிறது.
மொத்தம் 5 பாகங்களாக இத்தொடர் வந்திருக்கிறது. மொத்தப் பக்கங்கள் 1500க்கும் மேல். கடைசிப்பாகம் அற்புதமாக இருக்கும்.
பிராட் பிட் நடித்த படத்தை பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் கூறுவது போல் படம் சுமாரிற்கும் கீழாகவே இருந்ததாக ஞாபகம்.
நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்களை என் நேர வசதிக்கேற்ப படித்து விடுகிறேன், குறிப்பாக பனிச்சிறுத்தை பற்றிய புத்தகம் ஆவலைத் தூண்டுகிறது.
முன்பு ஆங்கிலேயர் காலத்தில் சிறந்த, மலையேற உதவும் ஷெர்பாக்களிற்கு டைகர் எனும் பதக்கம் வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். இக்கதையிலும் ஹபு ஜோஸிக்கும் ஒர் ஷெர்பாவிற்குமிடையிலான நட்பு சிறப்பாக கூறப்பட்டிருக்கும்.
எங்கள் நாட்டில் கடைசி 3 வருடங்களை மஸ்கெலியா எனும் மலைப்பிரதேசத்தில் நான் கழித்தேன். அது ஒர் இனிய காலம்.
உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
problem with my reading is that, if i start reading a book, i have to complete it or else i feel very uncomfortable.
ReplyDeletethat is why i collect all the tex willer 1-2-3 parts and read it together. one series in tiger i couldn't read till i purchased it from a friend of mine.
here this book is available in two of the 5 parts and (though your post is tempting to order) iam hesitating to do so. once the complete set is out, i will buy.
great reading your blog is. keet it up.
காதலரே,
ReplyDeleteநண்பர் ஜோஸ் மற்றும் நீங்கள் மலைஎற்றத்தை பற்றி எழுதியதால் நானும் அதனை பற்றி என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக காமிக்ஸ் வலைப் பதிவர் குழு கூட்டு முயற்சியாக மலைப் பிரதேசங்களுக்கு சென்று மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை விடுமுறையை ஆனந்தமாக கழித்து விட்டு வருகிறது.
இந்த குழுவில் இருப்பவர்கள்:
பயங்கரவாதி டாக்டர் செவன்
கிங் விஸ்வா
ஒலக காமிக்ஸ் ரசிகன்
கவிஞர் தமிழ் குட்டி
அனேகமாக இந்த வருட களியாட்டங்கள் அடுத்த மாதம் நடந்தாலும் நடக்கலாம். அய்யம்பாளையமும் மற்றும் சில காமிக்ஸ் பதிவர்களும் இந்த முறை கலந்து கொள்ளலாம்.
சென்ற வருடத்தில் விஸ்வா அவர்கள் மலை ஏறும்போது செய்த சாகசங்களை பற்றி பல பதிவுகள் இடலாம். குறிப்பாக அவர் உயரமான பிரதேசங்களை விடு விடுவென ஏறும் அழகே தனி. மேல் விவரங்களுக்கு பயங்கரவாதியை அணுகவும்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
100% உண்மையான பதிவுகள்.
கனவுகளின் காதலரே, மிக நீண்ட நாட்களுக்குப்பின்னர் உங்கள் பதிவை வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது மலை ஏறும் சாகசங்களுடைய பதிவு. Superb *****
ReplyDeleteமூன்லெஸ் நைட் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகரே, தொடருங்கள் உங்கள் ஜாலிப் பயணங்களை, மறக்காது அனுபவங்களையும் பதிந்திடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
டேவிட் அவர்களே, கனிவான கருத்துக்களிற்கு நன்றி தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.
காதலரே,
ReplyDeleteமங்கா கதையை சற்றும் அலுப்பு தட்டாமல் படிக்குமாறு அருமையாக பதிவிட்டு உள்ளிர்கள். பக்கத்தில் உள்ள சித்திரங்களை கூட பார்க்காமல் உங்கள் உரைநடை கடைசி வரை இழுத்து சென்று விட்டது . இக்கதையை ஆங்கிலத்தில் படித்திருந்தால் எனக்கு இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது .
மலையேறும் போது ஒருவர் விழுந்துவிட்டால் மற்றொருவர் கயிற்றை அறுத்து விடும் செய்கையை Vertical Limit படத்திலும் பார்த்துள்ளேன்.
இதே போல் அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
Lovingly,
Lucky Limat
நண்பர் லக்கி லிமட் அவர்களே, உங்கள் மனதார்ந்த கருத்துக்களிற்கு நன்றி. சிறந்த கதைகள் கிடைக்கும் போது உங்கள் விருப்பம் போல் அவற்றைக் குறித்து தவறாது பதிவிட்டு விடுகிறேன், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteநான் ஜீரோ டணிகுச்சி கதைகளை முதலில் படிக்க ஆரம்பித்தது சென்ற ஆண்டு தான். அதுவும் எந்த காரணத்தால் என்றால் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன மோபியஸ் (கேப்டன் டைகர் புளுபெர்ரி) இவருடன் இணைகிறார் என்று நண்பன் ஒருவன் தகவல் சொன்னான் (அவன் வாழ்க).
இப்படி இந்த இரண்டு பெரும் இனைந்து கொண்டு வந்த அந்த "இகாரோ" என்ற கதை வரிசையை படித்து முடித்து விட்டு மிரண்டு போனேன். மாங்க கதை வரிசையில் இப்படி கூட கதை எழுத இயலுமா என்று? அந்த சமயத்தில் தான் எக்ஸ் மென் 2 வேறு பார்த்து இருந்தேன் (இந்த இகாரோ கதையின் நாயகன் பறக்கும் சக்தி உடையவன்). கிழக்கும் மேற்கும் சேந்து வந்த இந்த கதை இன்னமும் நான் படித்த ஜீரோ டணிகுச்சி கதைகளில் சிரப்பனதோங்றாகும்.
அதற்க்கு பிறகு ஜீரோ டணிகுச்சி வரைந்த சாமுராய் லெஜென்ட், ஹோட்டல் ஹார்பர் வியூ, என்று பல கதைகளை படித்தாலும் கூட இந்த இகாரோ இன்னமும் மறக்க முடியவில்லை.ஆனால் எனக்கு தகவல் சொன்ன என் நண்பனுக்கு இந்த கதை பிடிக்கவில்லை.
இந்த ஜீரோ டணிகுச்சி கதையை நான் இன்னமும் படிக்கவில்லை. விரைவில் படிக்க முயல்கிறேன். பதிவுக்கு நன்றி.
காதலரே, மீ பேக்.
ReplyDeleteசரித்திரத்தில் சிகரங்களை தொட முயன்று காணாமல் போன ஒரு குழுவை மையமாக கொண்டு ஒரு கதை தொடரா.... அருமையான கதைகளம்..... இனி என் கருத்து (வழக்கம் போல தாமதமாக தான் ... ஹி ஹி)
// மலைச்சிகரங்களினூடு உயிரை சில்லிடச் செய்யும் காற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்க,//
வழக்கம் போல அருமையான தொடக்கம். பக்கத்தில் ஊட்டி கொடைக்கனால் குளிரே நம்மால் தாங்க முடியவில்லை, இதில் சிகரங்கள் எல்லாம் நமக்கு அலர்ஜிப்பா :)
// ஒர் காலத்தில் இச்சிகரங்கள் யாவும் கடலின் கீழ் ஆழ்ந்திருந்தன, எந்தச் சக்தி இவ்வளவு உயரத்திற்கு கடலை எடுத்து வந்திருக்கும் என்பதை யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? //
என்னுடைய பூகோல ஞானம் கம்மி தான் என்றாலும், ஏதோ ஒருமறை பூமி மேற்பரத்தில் உள்ள கண்ட செசிமிக் தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி அந்த அழுத்தத்தில் கடலிலிருந்து வெளிவந்த முகடுகளே எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதின் அன்மையில் இருக்கும் மலை தொடர்கள் என்று படித்த நியாபகம்.. நீங்களும் இந்த கூற்றை படித்திருக்கிறீர்களா ஷங்கர் ? சில வருடங்கள் முன்பு ஒரு பெரிய சுறாவின் உறைந்த பாகங்களை இமாலய மலை தொடரில் புதைந்து போயிருந்து கண்டுபிடித்தாக ஒரு தகவல் படித்த நியாபகம். கடலின் ஆழத்தில் இருந்து வெளி வந்தவை தான் இவை என்பதில் இனி ஐயம் எங்கு :)
// ஆட்டோக்கள், மக்கள் யாவையும் மறந்து நகரத்தின் தெருக்களில் தொலைந்து விடத்துடிக்கிறான் புகாமச்சி. //
அட காட்மாண்டுக்கும் நம் நகரங்களுக்கும் வித்தியாசமே இல்லை போலிருக்கே :). ஆசிய நகரங்கள் எல்லாம் இதே பாணிதானா :) என்ன நம்ம ஆட்டோ கொள்ளைகாரர்கள் மாறி அங்கிருக்க வாய்ப்பு குறைவுதான்.
// கடையில் பொறுப்பாக நிற்கும் மணிக்குமார், //
மணிக்குமாரா... அப்ப நம்ம ஆளுங்களா.... ஆனால் கடையில் வேலை பார்க்கும் பையன் தான் ரோலா... சே... :)
// [மனைவிமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது //
உண்மையிலேயே அந்த சிகரத்திற்கு அதுதான் காரணமா... இல்லை பேய்களுடன் அந்த லிங்கை காதலர் வழங்கியிருக்கிறீரா... என்னவோ உங்க நேரம் சரியில்லை அவ்ளோதான் :)
// ஹபு மலையேறுவதை பார்ப்பது, ஒர் வண்ணத்துப் பூச்சி மலையேறுவது போன்று அழகானது. //
வண்ணத்துப்பூச்சிக்கும் மலையேற்றத்துக்கும் என்னங்க சம்பந்தம் காதலரே :) சிட்டு போல ஏறுகிறான் என்று குறிக்கிறீர்களா ?
//ற்று நேரத்திற்கு முன்பாக அக்கயிற்றின் மறு முனை தாங்கி நின்ற உயிரும் கூட அவனை விட்டு அறுந்து போயிருந்தது.//
காதலரின் கவிதை நிறைந்த வார்த்தைகள். அந்த பிரிவை நானே நேரில் உணர்ந்தது போல இருந்தது.
// காப்பாற்றுவதற்காக ஹபு தான் கயிற்றை அறுத்திருக்க வேண்டும் என அவன் முதுகின் பின் பேசுகிறார்கள் //
காரணமே இல்லாத வெட்டி ஊரார் தூற்றுதலை இந்த நல்ல உள்ளமும் அனுபவித்ததை எண்ணி வருத்தம் தான் கொள்ள முடியும். ஒரு வேளை இப்படிபட்ட சமூகத்துடன் ஒட்டி உரவாடி பேசுவதை தவிர்க்கவே ஹபு மவுனியாக மாறி கொண்டானோ...
அருமையான ஒரு கதை தொடர், அதை அற்புதமான சித்திரங்கள் மூலம் நிஜத்தில் தவழ விட்டிருக்கிறார் கதாசிரியர்.... ஓவியங்கள் செட்டோன் பாணியில் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் பெரும்பாலான மங்கா கதை சித்திரங்கள் ஒரே வடிவம் தானே என்று காரணம் சொல்லி கொண்டேன். கடைசியில் டனிகுச்சி தான் இதற்கும் கர்த்தா என்று தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
கருப்பு கோடுகள் மூலம் இப்படிபட்ட அற்புத சித்திரங்களை உருவாக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார் டனிகுச்சி. அதுவும் அந்த வெள்ளை பணி படர்ந்த மலை சிகரங்கள் அருமையிலும் அருமை.
மங்கா கதைகள் தங்களிடம் 5 நட்சத்திரங்கள் வாங்குவது வழக்கமாக ஆகி விட்டதிலிருந்தே, டனிகுச்சியின் திறமை தெளிவாக விளங்குகிறது.
முக்கியமாக அந்த காமிரா எப்படி இவன் கைவசம் வந்தது என்ற ரகசியத்தை அறிய ஆவல் அதிகமாக இருக்கிறது. சரித்திரத்தில் தொலைந்து போன இருவர்களை வைத்து அமர்க்களமாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள், மர்மத்துடன்.
இன்னொரு அருமையான கதை தொடரை அறிமுகபடுத்தியதற்கு நன்றி நண்பரே. இந்த் மங்கா கதையை சித்திரங்களுக்காகவே கையகபடுத்தலாம். ஆங்கில பதிப்பு வந்திருப்பதால் இன்னும் சுலபம்.
ஆமாம் முதல் பக்கம் வண்ணத்தில் இருக்கிறதே... அது எப்படி... அங்கங்கு வண்ண பக்கங்களும் இருக்குமா ?
கடைசியாக கொடைக்கானல் ஊட்டி போன்ற இடங்களில் உயர்ந்த மலைமுகடுகளில் இருந்து கீழே 200 அடி எட்டி பார்த்திலேயே நான் அதற்கு லாயக்கில்லாதவன் என்று புரிந்து கொண்டேன்.... இமாலய சிகரங்களை இப்படி சித்திரங்களில் மட்டும் தான் பார்த்து சந்தோஷபட வேண்டும் :)
அதிரடியை தொடருங்கள்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
ஜாலி ஜம்பர் அவர்களே, டனிகுச்சி பல கதைகளில் பணியாற்றியிருக்கிறார். நான் முதலில் படித்தது செட்டொன் கதை. அதன் பின் அவர் கதை என்றால் ஒர் ஈர்ப்பு.
ReplyDeleteஇகார் கதையை நான் படிக்கவில்லை, உங்கள் வலைப்பூவில் அதனைப் பற்றி பதிவொன்று இட்டு எங்களை மகிழ்வியுங்கள் நண்பரே. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.
ரஃபிக், இமயமலையின் தோற்றம் குறித்து அதிகம் நான் தெரிந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் கூறியிருப்பது என் ஆர்வத்தை தூண்டி விட்டது. 2012 ஆங்கிலப் படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தேன் அதில் இமயமலை போன்ற ஒர் சிகரத்தினை கடல் மூழ்கடிப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். பிரமிக்க வைக்கிறது. இயற்கையின் மர்மங்கள் இன்னமும் எத்தனையோ.
ரஃபிக், சிட்டுக்கள் மலையேறுவது என்ன அவர்கள் நடந்து சென்றாலே அழகாகத்தானிருக்கிறது :)
காமெரா எவ்விதம் ஹபுஜோஜியின் கைக்கு கிடைத்தது என்பதற்கும் ஹபுஜோஜியின் இறுதி முடிவிற்கும் தொடர்பு உண்டு. அதுதானே கதையின் மிக முக்கிய மர்மம்.
முதல் பாகத்தில் மட்டும் இவ்வண்ணப்பக்கம் காணப்பட்டது, ஏனைய பாகங்களில் கிடையாது. ஆனாலும் எனக்கு பிடித்தது என்னவோ கறுப்பு வெள்ளைச் சித்திரங்களே.
ரஃபிக்., ஒர் அழகிய நிலவு உங்களிடம் தன்னை மலையுச்சிக்கு அழைத்து சென்றால் இச்சு இச்சு, மற்றும் இன்ன பிற இங்கீலீஸ் சமாச்சாரங்கள் தருவதாக கூறினால் நீங்கள் ஏறாத மலையெல்லாம் ஏறிவிட மாட்டீர்களா. மலை ஏறும் நிபுணர் எவரெஸ்ட் ஜோஸிடம் வேண்டுமானால் டிப்ஸ் கேட்டுக் கொள்ளுங்கள்- மலையேறுவதற்கு மட்டும்-
காதலரே,
ReplyDeleteகருப்பு வெள்ளை தங்களுக்கு பிடித்து போனதில் ஆச்சர்யம் இல்லை. அந்த வண்ணம் நிறைந்த பக்கம், பென்சில் கோடுகளால் தீட்டபட்ட கருப்பு வெள்ளை படங்களை எவ்வகையில் மறைத்து இருக்கும் என்று, மற்ற படங்களை பார்ப்பதிலேயே தெரிகிறது.
சீக்கிரம் இந்த புத்தகம் கையபடுத்த முடியுமா என்று பார்க்கிறேன்.
இமயமலை எவரெஸ்ட் சிகரத்தை வாட்டர் வால்ட் படத்தில் கூட கடைசியில், பூமியில் இருக்கும் ஒரே மனல் திட்டாக காட்டியிருப்பார்கள்... உங்களின் 2012 டிரெயிலர் அதை விட ஆர்வத்தை தூண்டுகிறது...
சிட்டுகள் நடந்து செல்வதை நீங்கள் எந்த கோணத்தில் இருந்து பார்ப்பீர்கள் என்பதை தயவு செய்து தெளியபடுத்தவும் :) அதற்கு பிறகு மலையேற்றத்திற்கு சிட்டுகள் அழைத்தால் போவதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம் :)
இந்த மலையேறுவது என்ற வார்த்தை அமைப்பில் டபிள் மீனிங் எதுவும் இல்லைதானே என்று நிபுணர் ஜோஸிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் :)
ரஃபிக், சிட்டுக்கள் நடப்பதை அவர்களை தொடர்ந்து சென்று ரசித்தால் தான் அழகு. என்ன ஒர் ஒயில், அதில் எத்தனை வகை, கண்களில் கண்ணீர் கூட வரும்.
ReplyDeleteஇந்தியாவில் காமிக்ஸ்களிற்கு இருக்கும் வரவேற்பைக் காணும் போது, சந்தையில் இது விரைவில் கிடைக்கும் என்றே நம்புகிறேன், சற்றுப் பொறுத்திருந்து 5 பாகங்களையும் கையகப்படுத்தல் நல்லது என்று கருதுகிறேன்.
மலையேறும் வல்லுனர் ஜோஸிடமே டபுள்மீனிங் குறித்த கேள்வியை நான் விட்டுவிடுகிறேன் :):)