Wednesday, March 31, 2010

நீரும் நெருப்பும்


கடலால் சூழப்பட்ட மலைகளின் மீது அமைந்திருக்கும், வைகிங் மக்களின் கிராமமான பெர்க்கில் வாழ்ந்து வருகிறான் சிறுவன் கிக்கப். பெர்க் கிராமத்தின் தலைவராக கிக்கப்பின் தந்தையாகிய ஸ்டாய்க் பதவி வகித்து வருகிறார். தாயற்ற சிறுவனான கிக்கப் தாயின் அன்பு அறியாதவனாகவே வளர்ந்து வருகிறான்.

dragons-2010-16768-2088635105 கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க் மிகுந்த பலசாலி. அவர் ஆகிருதியே எதிரிகளை அச்சம் கொள்ள வைக்கும் ஆனால் அவர் மகனான கிக்கப்போ தந்தைக்கு நேர்மாறான குணங்களை தன்னகத்தே கொண்டவனாக இருக்கிறான்.

துடுக்குத்தனம் நிறைந்த கிக்கப் ஒரு ஒல்லிப் பயில்வான். வீரத்திற்கும் கிக்கப்பிற்கும் இருக்கும் தூரத்தைக் கண்டு கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க் வேதனைப்படுகிறார். தன் மகன் மற்றவர்கள் போற்றும் வகையில் ஒரு வைகிங் வீரனாக உருவாகுவானா என்பதில் அவரிற்கு பெருத்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் கிக்கப்போ தான் ஒரு வீரனாகுவேன் என்று வாய்ச் சவடால்கள் விடுவதற்கு அஞ்சாதவனாகவே இருக்கிறான்.

பெர்க் கிராமத்தில் இருக்கும் கொல்லர் பட்டறையில் வேலை பழகுபவனாக தன் நாட்களைக் கழிக்கிறான் கிக்கப். அந்தக் கொல்லர் பட்டறையை நடாத்தி வரும் கொபெர், அனுபவம் மிகுந்த சிறப்பான வைகிங் வீரர்களில் ஒருவனாவான். கிராமத்தில் இருக்கும் சிறுவர்களிற்கு போர்ப் பயிற்சிகள் அளிப்பதையும் அவன் செய்து வருகிறான். தாயற்ற சிறுவனான கிக்கப் மீது அவன் அக்கறை கொண்டவனாக இருந்து வருகிறான்.

எல்லாக் கிராமங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும் [ அதனை தீர்த்து வைப்பதற்காக ஒரு நாட்டாமையும், ஒரு சொம்பும், ஒரு மரமும் கூடவே இருக்கும்] அதே போன்று பெர்க் கிராமத்திற்கும் ஒரு தொல்லை இருந்து வருகிறது. பெர்க் கிராமவாசிகளை உலுப்பியெடுக்கும் அந்த தொல்லையின் செல்லப் பெயர் ட்ராகன்கள் என்பதாக இருக்கிறது.

dragons-2010-16768-963714536 வைகிங்குகளிற்கும், ட்ராகன்களிற்குமிடையில் நிலவி வரும் பகைமை இன்றோ நேற்றோ பிறந்தது அல்ல. மூன்று நூற்றாண்டுகளிற்கு மேலாக, பரம்பரை பரம்பரையாக, இரு இனங்களும் தம்மை எதிரிகளாகவே உணர்ந்து வருகிறார்கள். இரவு நேரங்களில் பெர்க் கிராமத்தை சகட்டு மேனிக்கு தாக்கி அங்கிருக்கும் மந்தைகளை களவாடிச் செல்கின்றன ட்ராகன்கள். ட்ராகன்கள் விளைவிக்கும் நாசம் பெர்க் கிராமத்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ட்ராகன்களைக் கொல்லுதல் என்ற வார்த்தைகளைப் போல் இன்ப அனுபவம் தரும் வார்த்தைகள் பெர்க் கிராமத்தவர்களிற்கு வேறு கிடையாது.

வைகிங் இனத்தில் பிறந்த ஒருவன் உண்மையிலேயே வைகிங் என அழைக்கப்படும் தகுதியைப் பெற வேண்டுமானால் அவன் ஒரு ட்ராகனைக் வெல்ல வேண்டும். ஒல்லிப் பயில்வானான நமது ஹீரோ கிக்கப்பும் தான் ஒரு ட்ராகனை வென்றாக வேண்டும் என்ற ரகசியக் கனவை தன் மனதில் இருத்தி வருகிறான். ஆனால் அவன் நடவடிக்கைகளை பார்க்கும் கிராமத்தவர்கள் அவனை எள்ளி நகையாடுகிறார்கள், அவன் தந்தை உட்பட.

dragons-2010-16768-712902605 இந்த நிலையில் ஒரு இரவு வேளை பெர்க் கிராமம் பல வகையான ட்ராகன் ரவுடிகளை உள்ளடக்கிய ஒரு ட்ராகன் கூட்டத்தால் தாக்கப்படுகிறது. பெர்க் கிராமத்தவர்களும் ட்ராகன் ரவுடிகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். தமது வாயிலிருந்து உமிழப்படும் தீக் கற்றைகளால் பெர்க் கிராமத்து வீடுகளை புஸ்வாணம்போல் கொளுத்தி கும்மாளமிட்டு மகிழ்கின்றன ட்ராகன்கள். கிராமத்தவர்களின் மந்தைகளையும் அவை தம் கொடூரமான பிடியில் கவர்ந்து செல்கின்றன.

தன் தந்தையின் அறிவுரையைக் கேட்காது, ரகசியமாக ட்ராகன்களிற்கு எதிரான தாக்குதலில் கலந்து கொள்கிறான் சிறுவன் கிக்கப். தான் பணியாற்றும் கொல்லர் பட்டறையில் அவனாகவே தயாரித்த ஒரு பொறி ஆயுதத்தை வைத்து ட்ராகன்களை தாக்க விரும்புகிறான் அவன். ட்ராகன்களிற்கும், கிராமத்தவர்களிற்குமிடையில் கடுமையான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கிக்கப்பின் பொறி ஆயுதம் எதிர்பாராத விதமாக இயங்கி வானில் பறந்து கொண்டிருந்த ஒரு ட்ராகனைத் தாக்கி வீழ்த்துகிறது. ஆனால் இதனை கிக்கப்பை தவிர வேறு யாருமே அவதானிக்கத் தவறி விடுகிறார்கள்.

கிக்கப்பின் தாக்குதலிற்குள்ளாகிய அந்த ட்ராகன் இதுவரை வைகிங்குகளின் கைகளில் அகப்படாத ஒரு வகை ட்ராகன் ஆகும். வைகிங்குகளின் ட்ராகன் கலைக் களஞ்சியத்தில் அந்த ட்ராகனிற்குரிய பக்கங்கள் வெறுமையாக இருக்கிறது. வைகிங்குகளினால் அதிகம் அஞ்சப்படும், இரவின் இருளில் கலந்து, மின்னலெனத் தாக்கும் அந்த ட்ராகனின் பெயர் Night Fury. சிறுவன் கிக்கப்பின் பொறி ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ட்ராகன் இருளில் பெர்க் கிராமத்தை சூழவிருக்கும் மலைப் பகுதிக்குள் விழுகிறது.

கிக்கப், நைட் ஃப்யூரியை வீழ்த்தினான் எனும் தகவல் கிராமத்தில் நகைப்பிற்கிடமாகிறது. கிராமத்தை சுற்றியிருக்கும் மலைப்பகுதியில் உலாவச் செல்லும் கிக்கப், அங்கு தன் ஆயுதத்தால் வீழ்த்தப்பட்ட ட்ராகனைக் காண்கிறான். அந்த ட்ராகன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான்.

பொறிக் கயிறுகளில் மாட்டிக் கொண்ட நிலையில், அசைய முடியாதபடி தரையில் வீழ்ந்து கிடக்கும் அந்த ட்ராகனை தன் சிறு கத்தியால் கொன்று, அதன் இதயத்தை தன் தந்தையிடம் கொடுத்து வீரன் எனப் பெயரெடுக்க விரும்புகிறான் கிக்கப். இதற்காக தரையில் கிடக்கும் அந்த கறுத்த ட்ராகனை அவன் நெருங்குகிறான்.

தன் சிறு கத்தியை ட்ராகனை நோக்கி கிக்கப் உயர்த்துகிறான் இந்த நிலையில் ட்ராகனின் கண்களும், கிக்கப்பின் கண்களும் சந்திக்கின்றன. அந்தக் கண்கள் பேசிக் கொண்ட மொழிதான் என்ன? தன் கத்தியால் ட்ராகனைக் கொல்லாது அதனை விடுவிக்கிறான் கிக்கப். பறக்க முடியாத நிலையிலிருக்கும் அந்த ட்ராகன் தவ்வி தவ்வி பறந்து மலைகளில் மறைகிறது.

தொடரும் நாட்களில், ரவுடி ட்ராகன்களின் தொல்லைக்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட விரும்பும் கிராமத் தலைவர் ஸ்டாய்க், கிராமத்தில் இருக்கும் வீரர்களுடன் ட்ராகன்களின் கூட்டைத் தேடிப் பயணமாகிறார். கிராமத்தை விட்டு நீங்கு முன்பாக கொல்லன் கொபெரிடம் தன் மகன் கிக்கப், ட்ராகன்களுடன் மோதுவதற்கான பயிற்சிகள் பெறுவதற்கு சம்மதம் தருகிறார். கிராமத்தில் இருக்கும் இன்னும் சில வானரங்களுடன் பயிற்சிக்கு செல்வதற்கு அரை மனதுடன் சம்மதிக்கிறான் கிக்கப். ஆனால் பயிற்சியில் கலந்து கொள்ளும் அழகிய சிறுமியான ஆஸ்ட்ரிட் மீது கிக்கப்பிற்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

comment-dresser-votre-dragon-2010-16768-290347931 கிராமத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதி ட்ராகன்களுடான மோதல் பயிற்சிகளின் பின், மலைப் பகுதிக்கு வரும் கிக்கப், தன்னால் தாக்கப்பட்ட கறுத்த ட்ராகன் பறக்க முடியாது மலைப்பகுதியிலேயே தங்கியிருப்பதைக் கண்டு கொள்கிறான். மீன்களை அது உணவாக உட்கொள்ளும் என்பதனையும் அறிந்து கொள்கிறான்.

கிராமத்திலிருந்து மீனொன்றை எடுத்து வரும் கிக்கப், அதனை கறுத்த ட்ராகனிற்கு உண்ணத் தருகிறான். ஆரம்பத்தில் கிக்கப்பின் அருகில் நெருங்க தயங்கும் ட்ராகன், படிப்படியாக கிக்கப்பை நெருங்க ஆரம்பிக்கிறது. கறுத்த ட்ராகனிற்கும் கிக்கப்பிற்குமிடையில் பாசம் நிறைந்த நட்பு இயல்பாக உருவாக ஆரம்பிக்கிறது. கறுத்த ட்ராகனிற்கு பற்களை உள்ளிழுக்கும் இயல்பு இருப்பதால் அதற்கு பொக்கை [Toothless] எனச் செல்லப் பெயர் வழங்குகிறான் கிக்கப்.

பொக்கையின் வாலில் உள்ள, ஒரு பக்க துடுப்புச் சிறகு அழிந்து விட்டதாலேயே அது பறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறியும் கிக்கப், தான் பணியாற்றும் கொல்லர் பட்டறையில் தோலாலான ஒரு துடுப்புச் சிறகை பொக்கைக்காக வடிவமைக்கிறான். கிக்கப் அந்தச் சிறகை பொக்கையின் வாலில் இணைக்க, பொக்கை குஷியாகி கிக்கப்பையும் இழுத்துக் கொண்டு மேலே பறக்க ஆரம்பிக்கிறது.

பொக்கையுடனான தன் அனுபவங்கள் வழி அதன் மீது ஏறி இலகுவாகப் பறப்பதற்கு உபயோகமான அமைப்புக்களை கிக்கப் உருவாக்குகிறான். பொக்கையுடனான நட்பு ட்ராகன்களின் உணர்வுகள் குறித்து மனிதர்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்களை அவனிற்கு கற்றுத் தருகிறது. இதுவரை காலமும் ட்ராகன்கள் குறித்த தான் அறிந்திருந்த விடயங்கள் தவறானவை என்பது அவனிற்குப் புரிய ஆரம்பிக்கிறது.

dragons-2010-16768-1010155991 ட்ராகன்களின் உணர்வுகள் குறித்து அறிந்து கொள்ளும் அனுபவம் கிடைக்கப் பெற்ற கிக்கப், கிராமத்து பயிற்சிசாலையில் இருக்கும் கைதி ட்ராகன்களை மோதலின்போது ஆயுதங்கள் இல்லாமலே மடக்குகிறான். இதனால் கிராமத்து மக்களிடையே அவன் பிரபலம் ஆகிறான். ஆனால் அழகிய சிறுமி அஸ்ட்ரிட்டிற்கு கிக்கப்பின் முறைகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.

இவ்வேளையில் ட்ராகன்களின் கூட்டைத் தேடிச் சென்ற கிக்கப்பின் தந்தை அந்தக் கூட்டை கண்டறிய முடியாது தோல்வியுடன் கிராமத்திற்கு திரும்பி வருகிறார். கிராமத்தில் தன் மகன் கிக்கப் புகழ் பெற்றிருப்பது அவரிற்கு மிகுந்த மகிழ்சியை தருகிறது. இதனைத் தொடர்ந்து கொடிய ட்ராகன் ஒன்றுடன் கிக்கப் மோதும் போட்டி ஒன்று ஏற்பாடாகிறது.

போட்டி நாள் அன்று தனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை பார்வையாளர்கள் முன்பாக தூக்கி எறியும் கிக்கப், தான் பொக்கையுடன் பெற்ற அனுபவங்கள் வழியாக தன்னுடன் மோத வந்த கொடிய ட்ராகனைக் கட்டுப்படுத்த விழைகிறான். கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க்கிற்கு இது பெருத்த அவமானத்தையும், ஆத்திரத்தையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த மைதானத்தில் எதிர்பாராது நிகழும் சில நிகழ்வுகள் கிக்கப் தன் மனதில் விரும்பியிருந்த அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகின்றன…..

கிக்கப் தன் தந்தையின் மனதை மீண்டும் வென்றானா? பொக்கைக்கும் கிக்கப்பிற்கும் இடையில் உருவான அந்த நட்பின் கதி என்னவாகியது? ரவுடி ட்ராகன்களின் ஹெட் குவார்டர்ஸை கிராமத்தவர்கள் கண்டுபிடித்தார்களா? ட்ராகன்களின் தொல்லை பெர்க் கிராமத்தை விட்டு நீங்கியதா? இவற்றை அறிய விரும்பினால், உடனடியாக, பார்ப்பவர் மனதை உவகை கொள்ளச் செய்யும் How to Train Your Dragon எனும் அருமையான இத்திரைப்படத்தை எவ்வழியிலாவது பார்த்திடுங்கள்.

இரு இனங்களிற்கிடையில் காலகாலமாக இருந்து வரும் பகைமையையும், புரிந்துணராமையையும் எவ்வாறு ஒரு நேசமிகு நட்பு முடிவிற்கு கொண்டு வருகிறது என்பதைச் சற்றுக்கூட தொய்வில்லாது, அருமையாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் Chris Sanders மற்றும் Den Deblois ஆகியோர். Dream Works, திரைப்பட ரசிகர்களிற்கு வழங்கியிருக்கும் குதூகலமான ட்ராகன் ட்ரீட் இது.

dragons-2010-16768-695543554 ஆரம்பக் காட்சியில் இடம்பெறும் பெர்க் கிராமத்தின் மீதான ட்ராகன்களின் தாக்குதலின் போதே அதகளம் ஆரம்பமாகி விடுகிறது. ஏதோ ஒரு இரவு நடன விடுதியில் மகிழ்சியாக நடனம் ஆடுவதுபோல் பெர்க் கிராமத்தை ட்ராகன்கள் புரட்டி எடுத்து துவம்சம் செய்யும் காட்சி செம ஜாலி. திரைப்படத்தில் வரும் ட்ராகன்களின் முகங்கள் சற்று நையாண்டித்தனம் கலந்து உருவாக்கப் பட்டிருப்பது சிறப்பு. ட்ராகன்கள் முரட்டுப் பார்வை பார்க்கும்போது ரசிகர்களிற்கு தானாகவே சிரிப்பு உருவாகி விடுகிறது.

ஆரம்பக் காட்சியில் இருந்து ரசிகர்களிடம் உருவாகிவிட்ட எதிர்பார்ப்பை இறுதிவரை ஏமாற்றாது கொண்டு சென்ற திறமையான இயக்குனர்களும், Dream Worksன் அனிமேஷன் அணியும் பாராட்டிற்குரியது. திரைப்படத்தில் உலா வரும் அளவில் சிறிய ட்ராகன்கள் மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அவற்றின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.

பொக்கைக்கும், கிக்கப்பிற்குமிடையில் படிப்படியாக நட்பு உருவாகும் காட்சிகள் மனக் குளத்தில் கல்லை வீசியெறிந்தது போல் மென் உணர்வு அலைகளை உருவாக்குகின்றன. பொக்கையின் தலையின் மீது கிக்கப்பின் கை முதன் முதலாக படும் தருணம், பொக்கையுடனான கிக்கப்பின் முதல் பறப்பு ஆகிய காட்சிகள் உள்ளங்களை மென்மையாக தம் வசப்படுத்துகின்றன, ரசிகர்களை இந்த இரு பாத்திரங்களையும் நோக்கி நெருங்கி வரச் செய்கின்றன. கிக்கப்புடன் நட்பான பின் பொக்கை அடிக்கும் செல்ல லூட்டிகளும், தன் கண்களின் வழியாக பொக்கை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அருமை. அஸ்ரிட்டுடன் தனது சிறு கோபத்தை பொக்கை காட்டும்போது அதனை ஒரு குழந்தையாகவே காணமுடிகிறது.

dragons-2010-16768-338192901 படத்தில் இசையின் பங்கு முக்கியமானது. Celtic இசையுடன், நவீன இசை கலந்து திரைப்படம் நெடுகிலும் வழியும் John Powellன் இசையானது அற்புதமான உணர்வை வழங்குகிறது. பொக்கையுடனான பறத்தல் காட்சிகளின் இசையும், மனதை மயக்கும் காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட நுட்பமும் சேர்ந்து எம்மை எங்கோ எடுத்துச் செல்கின்றன. பொக்கையின் மீது அஸ்ரிட்டும், கிக்கப்பும் உலாவரும் அந்தக் காட்சியின் ரம்யம் உன்னதம். பின்பு அதே காட்சியில் அவர்கள் ரவுடி ட்ராகன்கள் கூட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளும் தருணம் திக் திக் திகில் கணம்.

இறுதியில் ட்ராகன் கூட்டின் பிக் பாஸான ஆறு கண்கள் கொண்ட ராட்சத ட்ராகனுடன் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சியைப்போல் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சியை சமீபத்தில் நான் திரையில் கண்டதில்லை. ரசிகர்களை இருக்கைகளில் இருந்து தூக்கிப் போடும் ஆக்‌ஷன் காட்சியாக அது அமைகிறது.

கண்ணைக் கவரும் காட்சிகள், அருமையான இசை போன்றவற்றுடன் சாகசம், காமெடி, செண்டிமெண்ட் என்பவற்றை சரியான அளவில் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மனதை இலகுவாக ஆக்கிரமித்து விடுகிறது. எந்தவித தயக்கமுமின்றி முழுக்குடும்பத்துடனும் பார்த்து ரசிக்க்கப்பட வேண்டிய அருமையான திரைப்படமாக இது அமைகிறது. உண்மையான நட்பும், ஆகாயத்தில் பறத்தலும் சில சமயங்களில் ஒரே உணர்வை வழங்கிச் செல்பவையாகவே அமைந்து விடுகின்றன இல்லையா! இத்திரைப்படம் அந்த உணர்வை உங்களிற்கு வழங்கும். இவை ட்ராகன்கள் இல்லை, எங்களைக் குழந்தைகளாக்கும் ஜாலியான ரவுடிகள். [****]

ட்ரெயிலர்

Friday, March 26, 2010

அற்புத உலகில் ஆலிஸ்


சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது.

தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது விரும்பினாலும் அதிலிருந்து நீ விழித்தெழுந்திட முடியும் என்று அவளிற்கு தைரியம் தருகிறார்.

காலம் ஓடிச் செல்கிறது. ஆலிஸின் தந்தை மரணத்தை அணைத்துக் கொண்டு விடுகிறார். ஆலிஸ் வளர்ந்து அழகு செழிக்கும் இளம் பெண்ணாக மிளிர்கிறாள். கட்டுப்பாடுகளிற்குள்ளும், விக்டோரிய கலாச்சாரத்திற்குள்ளும் இலகுவாக மடங்கிவிட மறுக்கும் தன்மை அவளில் இயல்பாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. தந்தையைப் போலவே அசாத்தியங்களை சாத்தியமாக்கும் விருப்பம் கொண்ட இளம் பெண் அவள்.

ஆலிஸின் தந்தையின் மரணத்தின் பின் ஆலிஸின் குடும்பத்தின் நிதி நிலை அவ்வளவு கவுரவமானதாக இல்லை. ஆலிஸின் தந்தையின் செல்வந்த நண்பனான ஒருவரின் மகனிற்கு ஆலிஸை நிச்சயம் செய்து வைக்க இரு வீட்டாரும் விருப்பமாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான நிகழ்விற்காக செல்வந்தர் வசிக்கும் மாளிகையின் அழகான தோட்டத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

alice-au-pays-des-merveilles-2010-16284-191504119 வசதி படைத்த அந்தக் குடும்பத்தில் மருமகளாகச் செல்வதற்கு ஆலிஸிற்கு தயக்கம் இருக்கிறது. செல்வந்தரின் மகனின் குணாதிசயங்களும் ஆலிஸிற்கு திருப்தியளிப்பதாக இல்லை. இந்நிலையில் ஆலிஸின் சகோதரி, தம் குடும்ப நிலையை ஆலிஸிற்கு விளக்கி, அவளிற்கு ஆலோசனைகள் தந்து, திருமண நிச்சயதிற்கு உடன்படும்படியாகக் கேட்டுக் கொள்கிறாள்.

அழகான அந்த தோட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு மேடையொன்றில், செல்வந்தனின் மகனிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது தடுமாறும் ஆலிஸ், தான் சிறுமியாக இருந்தபோது கண்ட கனவில் தோன்றிய மேல் கோட் அணிந்த முயல், அந்தத் தோட்டத்தில் ஒரு செடிக்குப் பின்பாக நின்று தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். செல்வந்தனின் மகனை மேடையிலேயே காத்து நிற்க விட்டுவிட்டு மேல்கோட் அணிந்த முயலை தேடிச் செல்கிறாள் ஆலிஸ்.

மேல்கோட் அணிந்த அந்த முயலானது வெகு வேகமாக ஓடி ஒரு மரத்தின் அடியில் இருக்கும் குழியொன்றில் புகுந்து மறைந்து விடுகிறது. முயலைத் துரத்தி வந்த ஆலிஸும் தயங்காது அந்தக் குழிக்குள் இறங்கி விடுகிறாள். ஆனால் அந்தக் குழியோ சிறுவயதில் அவள் கனவில் வந்த குழிபோல் நீண்டு முடிவற்று செல்கிறது. சுழன்றபடியே அக்குழியில் விழுந்து கொண்டிருக்கும் ஆலிஸ் ஒரு கணத்தில் ஒரு அறைக்குள் சென்று விழுகிறாள்.

alice-au-pays-des-merveilles-2010-16284-1116378139 அந்த அறையில் அவள் கண்டெடுக்கும் ஒரு சாவியின் உதவியுடன், உடலை சிறிதாக மாற்றும் பானத்தைக் குடித்து தன் உடலை சிறிதாக்கி, அறையிலிருக்கும் சிறியதொரு கதவின் வழியாக கீழுலகிற்குள் [Underworld] பிரவேசிக்கிறாள் ஆலிஸ்.

கீழுலகம் தான் கனவில் கண்ட விந்தை உலகம் போலவே தோற்றமளிப்பதை வியப்புடன் பார்க்கிறாள் ஆலிஸ், விசித்திரமான உயிரினங்கள், விந்தையான தாவரங்கள் என அழகும், ரகசியமும் கலந்த ஒரு உலகம் அது. ஆலிஸ் தம் உலகிற்குள் நுழைந்ததை அறியும் சில விலங்குகள் ஆலிஸை நெருங்குகின்றன. இவ்விலங்குகளிற்கு பேசும் சக்தி வாய்க்கப் பெற்றிருக்கிறது.

ஆலிஸை நெருங்கிய விலங்குகள், ஆலிஸின் வளர்ச்சியையும், தோற்றத்தையும் பார்த்து இவள் முன்பொரு முறை இங்கு வந்த ஆலிஸா எனச் சந்தேகம் கொள்கின்றன. ஆலிஸிற்கும் இது குறித்து குழப்பம் உருவாகிறது. இதுவும் ஒரு கனவுதான் எனத் தன்னைத்தானே கிள்ளிப் பார்க்கும் ஆலிஸ், அந்த முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதை அறிந்து ஆச்சர்யம் கொள்கிறாள்.

alice-au-pays-des-merveilles-2010-16284-159047746 ஆலிஸின் மேல் சந்தேகம் கொண்ட விலங்குகள் அவளை கீழுலகின் ஆருட சிகாமணி நீலக் கம்பளிப் பூச்சியிடம் உடனடியாக இட்டுச் செல்கின்றன. நீலக் கம்பளிப் பூச்சி ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் வெளி விடும் புகை அவரைச் சூழ ஒரு மாயத்தன்மையை உருவாக்குகிறது.ஆலிஸ் குறித்து நீலக் கம்பளிப் பூச்சியின் கணிப்பு புரியாத் தன்மை கொண்டதாக இருக்கிறது. கீழுலகின் விபரங்கள் அடங்கிய மந்திர நாட்காட்டிச் சுருள் ஒன்றைப் பார்த்தவாறே இவர்களின் விவாதம் தொடர்கிறது. மந்திர நாட்காட்டிச் சுருளில் ஆலிஸின் தோற்றத்தைக் கொண்ட பெண் ஒருத்தி, கீழுலகின் கொடுங்கோல் ராணியாகிய சிகப்பு ராணியின் செல்லப் பிராணியான கொடிய ட்ராகனைக் கொல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கீழுலகை தன் கொடுங்கோல் ஆட்சிக்குள் வைத்திருக்கும் சிகப்பு ராணியின் சீட்டுக் கட்டு வீரர்களாலும், சிகப்பு ராணியின் காதலனான குதிரை வீரனாலும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தாக்குதலில் சில விலங்குகள் சிறை பிடிக்கப்பட்டு சிகப்பு ராணியின் அரண்மனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் மந்திர நாட்காட்டி சுருளைக் கண்டெடுக்கும் குதிரை வீரன் கீழுலகிற்கு ஆலிஸ் வந்திருப்பதை ஊகித்து விடுகிறான்.

தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ளும் ஆலிஸ், கீழுலகில் பாதை தெரியாது தடுமாறுகிறாள். அப்போது அவள் முன்பாக தோன்றும், காற்றில் மறையும் சக்தி கொண்ட பூனை [Cheshire Cat] அவளை கிறுக்குத் தொப்பிக்காரன் [Mad Hatter] என்பவன் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்கிறது.

alice-au-pays-des-merveilles-2010-16284-398739969 சிறை பிடித்த விலங்குகளுடன் சிகப்பு ராணியின் அரண்மனைக்கு திரும்பும் குதிரை வீரன், சிகப்பு ராணிக்கு ஆலிஸின் வருகையையும் அது அறிவிக்கும் அபாயங்களையும் விளக்குகிறான். ஆலிஸை உடனடியாகப் பிடித்து வரும் படி தன் பெரிய தலையை ஆட்டிய படியே உத்தரவு இடுகிறாள் ஆலிஸ். இது நிகழ்வதற்குள் சிகப்பு ராணியின் பழக் கேக்கை திருடித் தின்ற அடிமைத் தவளை ஒன்றுக்கு, சிகப்பு ராணியின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டு விட்டதை நண்பர்கள் அறிந்து கொள்வது நல்லது.

தன் இருப்பிடத்தில் ஆலிஸை வரவேற்கும் கிறுக்குத்தனமான சேஷ்டைகள் கொண்ட கிறுக்குத் தொப்பிக்காரன், இப்போது ஆலிஸாக வந்திருப்பது கீழுலகிற்கு முன்பு வந்த அதே ஆலிஸ்தான் என உறுதிப்படுத்துகிறான். அவளால்தான் சிகப்பு ராணியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறான். சிகப்பு ராணியின் சகோதரியான வெள்ளை ராணியிடமிருந்து கொடூரமான முறையில் சிகப்பு ராணி ஆட்சியைப் பறித்த சோகக் கதையை ஆலிஸிற்கு கூறுகிறான் கிறுக்குத் தொப்பிக்காரன்.

குறித்த ஒரு தினத்தில் சிகப்பு ராணியின் கொடிய ட்ராகனை ஆலிஸ் கொல்வாளெனில், வெள்ளை ராணியின் நல்லாட்சி மீண்டும் திரும்பும் என்பதை ஆலிஸிற்கு விளக்குகிறான் தொப்பிக்காரன். அந்தக் கொடிய ட்ராகனைக் கொல்வதற்கு ஒரு மந்திர வாள் தேவை எனவும், அந்த மந்திர வாள் தற்போது சிகப்பு ராணியின் மாளிகையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆலிஸிற்கு அறியத்தருகிறான் அவன்.

alice-au-pays-des-merveilles-2010-16284-196099410 இந்த வேளையில் ஆலிஸைத் தேடி தேடுதல் வேடையில் இருக்கும் சிகப்பு ராணியின் வீரர்கள் இவர்களைச் சுற்றி வளைக்கிறார்கள், கிறுக்குத் தொப்பிக்காரன் ஆலிஸைக் காப்பாற்றுவதற்காக சீட்டுக் கட்டு வீரர்கள் பிடியில் தான் சிக்கிக் கொள்கிறான். ஆலிஸ் மறுபடியும் வீரர்கள் பிடியிலிருந்து தப்பிக் கொள்கிறாள். ஆனால் அவள் ஓய்ந்து விடவில்லை, சிகப்பு ராணியின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்ற சிகப்பு ராணியின் மாளிகையை நோக்கி விரைந்து செல்கிறாள் அவள்……

தொப்பிக்காரனையும், விலங்குகளையும் சிகப்பு ராணியின் பிடியிலிருந்து ஆலிஸ் மீட்டாளா? மந்திர வாளை அவள் கைப்பற்றினாளா? கொடிய ட்ராகனைக் கொன்று கீழுலகில் சிகப்பு ராணியின் ஆட்சிக்கு முடிவு கட்டினாளா? ஆலிஸிற்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தின் முடிவுதான் என்ன? என்பதை திரைப்படத்தினைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

உன்னைச் சுற்றியிருக்கும் கூட்டை உடைத்து உன் கனவுகளைப் தேடிப் பற எனும் கருத்தையே இயக்குனர் Tim Burton சிறப்பாக இயக்கியிருக்கும் Alice in Wonderland எனும் இத்திரைப்படம் கூற விழைகிறது. Lewis Carroll என்பவர் எழுதிய Alices Adventures in Wonderland, Through the Looking Glass ஆகிய இரு நாவல்களின் பாத்திரங்களை மையமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திரைக்கதை ஒன்றை, தனது வழமையான இருட் சுவை கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் டிம் பெர்டென்.

alice-au-pays-des-merveilles-2010-16284-169083867 கீழுலகு எனப்படும் விந்தை உலகை மிகவும் அருமையான கற்பனையில் திரைப்படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என ஒவ்வொன்றின் உருவாக்கலிற்கும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்களின் உடையலங்காரங்கள், வண்ணத் தெரிவுகள், உள் மற்றும் வெளி அலங்காரங்கள் என்பன ரசனை மிகுந்த கற்பனையில் மிளிர்கின்றன.

கீழுலகம் கண்களிற்கு விருந்தளித்து உவகை தந்தாலும், டிம் பெர்டென் ரசிகர்களை நெருங்கி வருவது திரைப்படத்தின் ஆழமான பாத்திரப் படைப்புக்களாலேயே என்பதுதான் உண்மை. குறிப்பாக சிகப்பு ராணி, கிறுக்குத் தொப்பிக்காரன் ஆகிய பாத்திரங்களில் அவரது ஆழமான ஈடுபாடு தெளிவாகப் புலனாகிறது. இதேபோல் காற்றில் மறையும் செஷயர் பூனையும், செயின் ஸ்மோக்கர் நீலக் கம்பளிப் பூச்சியும், தன் குடும்பத்திற்காக சிகப்பு ராணிக்கு விலை போகும் நாயும் மனதை கவர்கின்றன.

சுதந்திரங்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் அதிகாரங்களையும், அந்த அதிகாரத்தை சுற்றி ஜால்ரா அடிக்கும் போலி வேடதாரிகளையும் எதிர்த்துப் போரடுபவளாக ஆலிஸ் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. கீழுலகில் தான் கற்றுக் கொண்ட இந்தப் போர்க்குணத்தை ஆலிஸ் மேல் உலகிலும் உபயோகித்து தன் வாழ்வை தன் விருப்பப்படி வாழும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்கிறாள். ஆலிஸ் வேடத்தில் புதுமுக நடிகையான Mia Wasikowska நடித்திருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ரசிகர்களை தன் பிடிக்குள் வீழ்த்த இவரால் முடியவில்லை என்பது தெளிவு.

alice-au-pays-des-merveilles-2010-16284-487761893 ஆனால் ஆலிஸ் பாத்திரத்தை சுவையான கேக் போல் கபளீகரம் செய்து ஏப்பம் விடுகிறார்கள் சிகப்பு ராணியாக வரும் Helena Bonham-Carter, மற்றும் கிறுக்குத் தொப்பிக்காரன் வேடமேற்றிருக்கும் Johnny Depp ஆகியோர்.

பெரிய தலையும், அந்தத் தலைக்கேற்ற தலைக்கனமும் கொண்டு, வெட்டுங்களடா அவன் தலையை என்று கண்டபடிக்கு தண்டனைகளை அள்ளி வீசும் சிகப்பு ராணியாக ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது முகபாவங்களும், உடல் அசைவுகளும், சிறப்பான நடிப்பும் ரசிகர்களை மயங்கடிக்கிறது. அவரது உதடுகளில் இதய வடிவில் இருக்கும் உதட்டுச் சாயம் செம அழகு. முத்தம் தர மனசு அலைகிறது. தன் துணைவிக்கு அசரடிக்கும் பாத்திரத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார் டிம் பெர்டென்.

alice-au-pays-des-merveilles-2010-16284-1756384002 தன் மனதில் பொதிந்திருக்கும் ஒரு ஆழமான வேதனையுடன், எதிர்பாராத சமயங்களில் கிறுக்குப்பிடித்து ஆவேசமாகும் தொப்பிக்காரன் பாத்திரத்தில் ஜொனி டெப் பின்னிப் பிழிந்திருக்கிறார். சிகப்பு ராணியின் தலைக்கு தொப்பி செய்து தருவதாகக் கூறி ராணியை அவர் கவிழ்க்கும் பாணி அட்டகாசம். ஆலிஸிற்கும் அவரிற்குமிடையில் உருவாகும் பாசமான நட்பின் பிரிவு மூலம் ரசிகர் மனங்களை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர். ஆலிஸைப் பிரியும் வேளையில் டெப்பின் நடிப்பு உன்னதம். பரபரப்பான இறுதிச் சண்டைக் காட்சியின் பின்பாக டெப் ஆடும் அந்த நடனம் சூப்பரோ சூப்பர்.

விந்தை உலகம், சாகசம், நகைச்சுவை, ஆக்‌ஷன், மந்திரம் எனத் தொய்வில்லாது படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர், இருப்பினும் வெள்ளை ராணி வரும் காட்சிகளில் சலிப்பு சற்றுத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. இதனை ஆலிஸின் அற்புத உலகம் என்பதை விட டிம் பெர்டெனின் அற்புத உலகம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஒரு கூட்டுப் புழுவானது, தனது புது வாழ்விற்காக, அது அடைபட்டிருக்கும் கூட்டைக் கிழித்து, அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாறி காற்றில் பறந்து செல்வதைப் போலவே தன் கனவுகளை நோக்கிச் சுதந்திரமாக பறந்து செல்கிறாள் இந்த ஆலிஸ். அற்புத உலகில் ஆலிஸ், கேளிக்கைக்கு உத்தரவாதம். [***]

ட்ரெயிலர்

Tuesday, March 23, 2010

புத்தர் புரியும் புன்னகை


லடாக் பீட பூமிக்கு வடக்கே, கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலிருக்கும் தேப்சாங் பள்ளத்தாக்கில் ரோந்து செல்லும் ராணுவ வீரர்கள், வெண் பனியில் பதிந்திருக்கும் ராட்சத காலடித் தடங்களைக் கண்டு கொள்கிறார்கள். இந்தக் காலடித் தடங்களை போட்டோ பிடிக்கும் அவ்வீரர்கள் அதனை தமது ராணுவ மேலிடத்திடம் அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பல முறை இது போன்ற பனியில் பதிந்த ராட்சதக் காலடித் தடங்களை இந்திய ராணுவத்தினர் அவதானித்திருக்கிறார்கள். அக்காலடித் தடங்கள் பதினேழு தடவைகள் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இமய மலைப் பகுதிகளில் வாழும் பனி மனிதனின் காலடித்தடமாக இது இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் விஞ்ஞானிகள் இவை பனியில் இயற்கையாக ஏற்படும் குழிகள் எனக் கூறுகிறார்கள்.

லடாக்கின் ராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியர் கே.கே. நாயர், இந்த விடயம் குறித்த ரகசிய விசாரணை ஒன்றை மேற் கொள்ளும்படி ராணுவ வீரன் மேஜர் பாண்டியனைப் பணிக்கிறார்.

விசாரணைகளை ஆரம்பிக்கு முன்பாக சில தகவல்களை அறிந்து கொள்ள பாண்டியன் விரும்புகிறான். ராணுவ ஆராய்ச்சிப் பிரிவு அவனிற்கு வழங்கிய தகவல்கள் பயனளிக்காத நிலையில் டாக்டர் திவாகர் என்பவரைச் சந்தித்து தனக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அவன் தீர்மானிக்கிறான்.

டாக்டர் திவாகர் ஒரு மானுடவியலாளர். இமய மலையில் உள்ள மனிதர்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அவர் டா பிங் எனும் மலைக் கிராமத்தில் வசித்து வருவதால் அக்கிராமத்தை நோக்கி வழிகாட்டி ஒருவனுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் பாண்டியன்.

டா பிங் கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் ஆதி குடிகள், தம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கிம் சுங்கை மலைத் தேவதைகளின் பலீ பீடத்தில் உயிரோடு காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிறுவன் கிம் சுங்கிற்கு கடுமையான காய்ச்சல் கண்டிருக்கிறது. பலி பீடத்தில் கிடத்தப்பட்ட சிறுவனின் உடலைக் குறிவைத்து பெரும் கழுகுகள் வானிலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றன. சிறுவன் கிம் சுங்கின் நிலையைக் கண்டு பதறும் பாண்டியன், சிறுவனைக் கிராம மக்களிற்கு தெரியாது காப்பாற்றுகிறான். டா பிங் கிராமத்திற்கு மயங்கிய நிலையிலிருக்கும் சிறுவன் கிம் சுங்கை தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.

மலையின் இருளில் வழி தெரியாது சில கணம் தடுமாறும் பாண்டியனின் வழிகாட்டி, காற்றில் கலந்து வரும் தேவதாரு மரத்தின் புகையை மோப்பம் பிடித்து டா பிங் கிராமத்திற்கு அவர்களை இட்டுச் செல்கிறான். கிராமத்தில் நுழையும் பாண்டியன் டாக்டர் திவாகரைச் சந்திக்கிறான். டாக்டர் திவாகர் காய்சலில் வாடும் சிறுவன் கிம் சுங்கிற்கு சிகிச்சை அளிக்கிறார்.

yeti_footprint மறுநாள் காலை டாக்டர் திவாகருடன் உரையாடும் பாண்டியன், டாக்டர் மலையில் வாழும் மக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாலும் பனி மனிதன் குறித்த தேடல்களிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அறிந்து கொள்கிறான். டாக்டர் திவாகரைப் பொறுத்த வரை பனிமனிதன் மீதான அவரது ஆராய்ச்சி என்பது உண்மையில் மனிதர்கள் மீதான ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மேலும் பனிமலையில் வழி தவறிப் போன சிறுவர்களை பனி மனிதன் காப்பாற்றி வருகிறான் என்ற தகவலையும் அவர் பாண்டியனிற்கு கூறுகிறார். இது பாண்டியனிற்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இந்த வேளை டா பிங் கிராமத்தை நோக்கி ஓநாய்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதை டீன் பறவைகள் கிராமத்தவர்களிற்கு அறியத் தருகின்றன [ ஏன் என்பதை கதையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்], ஓநாய்க் கூட்டத்தின் தாக்குதலை முறியடிக்க விரும்பும் கிராமத்தவர்கள், ஓநாய்கள் வரும் பாதையில் பாறைகளில் வெடி ஒன்றை வெடிக்க வைத்து ஓநாய்க் கூட்டத்தை விரட்டியடிக்கிறார்கள். இந்தக் களேபேரங்கள் முடிவடைந்த வேளையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கிம் சுங், குரங்கு மனிதன் என்னைப் பிடிக்கிறான் என அலறியவாறே திடுக்கிட்டு எழுகிறான்.

டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள், ஆடு மேய்ப்பதற்காக சென்ற வேளையில் தனக்கு காய்ச்சல் உண்டாகி நடக்க முடியாமல் போனதெனவும், தன்னை தன் தந்தையும் தனியே கைவிட்டு வந்த வேளையில் குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவத்தையும் சிறுவன் கிம் சுங் அவர்களிடம் கூறுகிறான். குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிச் சென்ற வேளையில் ஒரு தருணத்தில் மயக்கமடைந்த அவன் இப்போதுதான் மயக்கம் தெளிவதாகவும் அவன் தெரிவிக்கிறான்.

அது மட்டுமல்ல குரங்கு மனிதன் தன்னை தூக்கிச் சென்ற பாதையை அவர்களிற்கு தான் காட்ட முடியும் எனவும் கிம் சுங் அறிவிக்க, அடுத்த நாளே டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்குடன் பனி மனிதனைத் தேடி தம் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்…

குளிர் அதன் உச்சத்தில் குதூகலிக்கும், இயற்கை தன் ஜால வித்தைகளை நிகழ்த்தும், ஆபத்தும், அபாயமும் உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து அவதானிக்கும் பனிமலைப் பாதைகளினூடாக, சாகசப் பயணமொன்றிற்கு பனி மனிதன் எனும் தன் நாவல் வழியாக அழைப்பு விடுக்கிறார் நாவலாசிரியர் ஜெயமோகன்.

அறிவியல், ஆன்மீகம், இயற்கை என நாவல் எங்கிலும் தெளிவான விளக்கங்களுடன், சிறப்பான தகவல்களை வழங்கி அவர் கதையை சுவையாகக் கூறிச் செல்கிறார். பனி மனிதனைத் தேடி ஆரம்பமாகும் பயணமானது, மனிதன் இயற்கையுடன் கொடூரமாக அறுத்து எறிந்திருக்கும் தன் தொப்புள் கொடி உறவு குறித்து வேதனையோடு பகிர்ந்து கொள்கிறது. இதற்குக் காரணமாகவிருந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்துக் கேள்விகளை முன் வைக்கிறது.

nepal_headerfull மேலோட்டமாக தகவல்களை வழங்கி விட்டு நகர்ந்து விடாது, நல்லதொரு ஆசானைப்போல் பல விடயங்கள் குறித்தும் தன் தெளிவான விபரிப்பால் வாசகனின் ஆர்வத்திற்கு திகட்டாத ஒரு விருந்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.

சாகசப் பயணத்தில் ஈடுபடும் டாக்டர் திவாகர், வழியில் நிகழும் சம்பவங்களை அறிவியல் ரீதியாக விளக்க முனைகிறார். சிறுவன் கிம் சுங்கோ, அவன் பெற்றிருக்கும் புத்த மடாலயப் போதனைகள் வழி அச்சம்பவங்களை மொழி பெயர்க்க விழைகிறான். ராணுவ வீரன் பாண்டியனோ அறிவியல், ஆன்மிகம் இவை இரண்டிற்குமிடையில் பயணித்துச் செல்பவனாக இருக்கிறான். என்னைப் போன்ற வாசகனின் பயணம் பாண்டியனின் பயணத்தை ஒத்ததே.

சாகசத்தின் இறுதிப் பகுதியானது மனிதனின் நான் எனும் உணர்வைக் குறித்த சிந்தனைகளை வாசகனிடம் எழுப்புகிறது. கூட்டு ஆழ் மனம் மூலம் இயங்கக் கூடிய ஒர் உயிர் சூழலின் சாத்தியத்தையும், அதன் தேவையையும், வாசகன் முன் அந்த உயிர் சூழலின் அற்புதங்களுடன் பரிமாறுகிறது.

இயற்கையும், அதில் இருக்கக் கூடிய எல்லா உயிர்களும் ஒரே மனம் கொண்டவையாக இருந்தால் அந்த உலகம் எவ்வாறு இருக்கும், அந்த உலகில் பரிணாமத்தின் வேகம் எப்படியாக இருக்கும், அங்கிருக்கும் மனிதர்கள் எதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் பேசும் மொழி என்னவாகவிருக்கும், அந்த சூழலில் தீமை என்பது என்ன போன்றவற்றை ஒரு விசித்திர உலகின் மூலம் வாசகன் முன் விரிக்கிறார் நாவலாசிரியர்.

pm2 சிறுவர்களாக இருந்தபோது இக்கதையைப் படித்தவர்களிற்கு அதில் வரும் ஆன்மீகம் தத்துவம் என்பன எவ்வளவு தூரம் ஆர்வம் தந்திருக்கும் என்பது ஆச்சர்யமே. ஆனால் கதையில் வரும் சாகசமும், விந்தைகளும் அவர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். மாறாக கதையின் ஆன்மிகமும் தத்துவமும் என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளை அணைத்துக் கொள்கிறது.

அறிவியல் ரீதியாக பனி மனிதன் இருப்பு குறித்து அறிய முயலும் கதையில், சிவபுராணத்திலும், ரிக் வேதத்திலும் அவர்கள் குறித்து குறிப்புக்கள் கணப்படுகின்றன என்பது தெரியவரும்போது ஆச்சர்யம் எகிறுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறிய பெட்டித் துணுக்குகளாக ஏராளமான பயனுள்ள தகவல்களை தந்து அவற்றைக் கதையில் சொல்லப்படும் விடயங்களுடன் இணைத்திருக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது. தமிழ் சிறுவர் நாவல் ஒன்றில் நாவலாசிரியரின் இவ்வளவு நேர்மையான அர்பணிப்பை காண்பது அரிதான ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

பனிமலைப் பகுதியில் பூரண நிலவு எழும் அந்த சொர்க்கத்திற்கு ஒப்பான காட்சியை ஜெயமோகன் தன் வார்த்தைகளால் வர்ணிக்க, அக்காட்சி அப்படியே வாசகனுள் உயிர் பெறுவது அபாரமானது.

ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் தெளிவான, விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் நாவலாகவே பனி மனிதன் அமைகிறது. பனிமலைச் சிகரங்களின் உச்சிகளில், அஸ்தமனத்துச் சூரியனின் கதிர்கள் பட்டுத் தெறித்து அப்பிரதேசத்தையே செந்தீயாலான வெளியாக மாற்றியடிக்கிறது. மனதை மயக்கும் இந்நிகழ்வை புத்தரின் புன்னகை என ஒப்பிடுகிறான் சிறுவன் கிம் சுங். அந்தப் புன்னகையை எங்கள் மனதிற்குள்ளும் எடுத்து வருகிறது ஜெயமோகனின் பனி மனிதன். [***]

Saturday, March 20, 2010

மீன்களின் கனவுகள்


நியூ ஆர்லியன்ஸின் காவல் துறையில் சார்ஜெண்டாக பணியாற்றி வருகிறான் டெரென்ஸ் மக்டொனா [Nicolas Cage]. காத்ரீனா சூறாவளி சமயத்தில், நீரில் பாதி மூழ்கியிருந்த ஒரு காவல் நிலையத்தின் கைதிகள் அறையில் அகப்பட்டுக் கொண்ட ஒரு கைதியை, தன் உயிரை துச்சமென மதித்துக் காப்பாற்றுகிறான் டெரென்ஸ். இந்தச் தீரச் செயலானது சில மாதங்களின் பின் டெரென்ஸிற்கு காவல் துறையில் லியூட்டினெண்ட்டாக பதவி உயர்வைப் பெற்றுத் தருகிறது.

இந்த வேளையில் ஆர்லியன்ஸின் புற நகர்ப் பகுதியில் வாழ்ந்து வரும் ஆபிரிக்காவின் சினெகல் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம், கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறது. இந்தக் கொடூரமான கொலைகளின் மீதான விசாரணைக்கு டெரென்ஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படுகிறது.

வெள்ள நீரில் குதித்து, கைதியைக் காப்பாற்றிய நாள் முதலாக டெரென்ஸை ஒரு மோசமான முதுகு வலி பீடித்துக் கொள்கிறது. தீராத வேதனையான அந்த முதுகு வலிக்காக டெரென்ஸ் தன் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் போதை மருந்துகளையும் நாட ஆரம்பிக்கிறான். இது அவனைப் படிப் படியாக போதைப் பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. போதை மருந்து உட்கொள்ளாது தன் பணிக்கு செல்ல முடியாதவனாக மாறி விடுகிறான் டெரென்ஸ்.

அமெரிக்க ஃபுட் பால் பந்தயங்கள் மீது நிகழ்த்தப்படும் சூதாட்டங்களிலும் டெரென்ஸ் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். சூதாட்டத் தரகன் ஒருவனின் உதவியுடன் சூதாட்டங்களில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டும் டெரென்ஸ், அந்தச் சூதாட்டத் தரகனிடம் கடனாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது.

தன் போதைப் பொருள் தேவைக்காக பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போதை மருந்தில் கை வைப்பதற்கு டெரென்ஸ் தயங்குவதில்லை. அதே போல் தெருக்களிலும், வேறு இடங்களிலும் அவன் சோதனையிடும் நபர்களிடமிருக்கும் போதைப் பொருட்களை தன் பாவனைக்காக அவன் எடுத்துக் கொள்கிறான். பெண்கள் விடயத்தில் அவன் தயங்குவது அரிது. சந்துகளிலும் புணர்வதற்குத் தயங்காதவனாக அவன் இருக்கிறான். ஆனால் அவன் மனதிலும் அன்பு இருக்கிறது.

bad-lieutenant-2009-17028-518490278 டெரென்ஸிற்கு பிராங்கி எனும் பெண் நண்பி இருக்கிறாள். தனது கவர்ச்சியான உடலை முன் வைத்து, ஆண்களின் உணர்சிகளின் வடிகாலாக செயற்படும் தொழிலைச் செய்பவளாக அவள் இருக்கிறாள். டெரென்ஸின் மீது மிகுந்த கரிசனம் கொண்ட பிராங்கியும் போதைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் கொண்டவளே.

டெரென்ஸ், அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சற்று இளைப்பாற விரும்பும் நேரங்களில் பிராங்கியைத் தேடி வருகிறான். பிராங்கியும் அவனும் கொக்கேய்னை தம் மூக்குகளால் ஒரு இழுவை இழுத்துக் கொண்டு அது தரும் உச்சத்தில் அழுத்தங்களை தற்காலிகமாக அழிக்கிறார்கள். டெரென்ஸ் என்ன தேவையென்று கதவைத் தட்டினாலும் தன் வீட்டின் கதவுகளை அவனிற்காக சிரித்த முகத்துடன் திறக்கும் பெண்ணாக பிராங்கி இருக்கிறாள்.

சினெகலைச் சேர்ந்த குடும்பத்தின் கொலை மீதான விசாரணை வேகமாக நகர, கொலைக்கு காரணம் போதைப் பொருள்கள் விற்பதில் ஏற்பட்ட தகராறே என்பது தெளிவாகிறது. Big Fate [Xzibit], என அழைக்கப்படும் போதைப் பொருள் விற்பனையாளன் மற்றும் அவன் இரு சகாக்கள் மீது கொலை குறித்த சந்தேகம் உறுதியாக வலுப்பெற ஆரம்பிக்கிறது. தனது தளராத முயற்சிகளால் கொலை செய்தவர்களை நேரில் பார்த்த சாட்சியான இளைஞன் டரிலை கண்டு பிடிக்கும் டெரென்ஸ், அந்த இளைஞனை நீதிமன்றத்தில் சாட்சி கூறவும் சம்மதிக்க வைக்கிறான்.

bad-lieutenant-2009-17028-93662023 பிக் ஃபேட்டையும், அவன் சகாக்களையும் தேடி நடக்கும் வேட்டையில் பிக் ஃபேட்டின் சகாக்களை தன் குழுவின் உதவியுடன் சமார்த்தியமாகக் கைது செய்கிறான் டெரென்ஸ். காவல் துறை தன்னை தீவிரமாகத் தேடி வருகிறது என்பதை அறியும் பிக் ஃபேட், தன் வக்கீலுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சேர்கிறான்.

கொலை சம்பந்தமான பிறிதொரு ஆதாரங்களும் இல்லாத நிலையில் சிறுவன் டரிலின் சாட்சியத்தை மட்டுமே தம் வசம் ஆதாரமாகக் கொண்டு, பிக் ஃபேட் குழுவிற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய பொலிஸாரும், அரசு சட்டத்தரணியும் முடிவெடுக்கிறார்கள். வழக்கின் முக்கிய சாட்சியான டரிலின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக டெரென்ஸ் நியமிக்கப்பட்டு, டரில் டெரென்ஸின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறான். இந்தச் சமயத்தில் டெரென்ஸின் பெண் நண்பியான பிராங்கியிடமிருந்து டெரென்ஸிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

பிராங்கியின் தொலைபேசி அழைப்பை அடுத்து டரிலுடன், பிராங்கி தங்கியிருக்கும் காசினோவிற்கு செல்கிறான் டெரென்ஸ். பிராங்கி தங்கியிருக்கும் அறையை அடையும் அவன், பிராங்கி தன் சேவைகளை வழங்கிய நபர் அவளுடன் சிறிது முரட்டுத்தனமாக இயங்கியிருப்பதை அறிந்து கொள்கிறான்.

பிராங்கியின் அறையில் இன்னமும் தங்கி இருக்கும் அந்த நபரிடமிருந்து, பிராங்கிக்கு அவன் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவனை நன்றாக மிரட்டி வெளியே துரத்துகிறான் டெரென்ஸ். ஆனால் அந்த மனிதனோ தான் செல்வாக்கு நிறைந்த ஒரு பெரும் புள்ளியின் மகன் என்றும் டெரென்ஸும், பிராங்கியும் இதற்கான விலையை தரவேண்டியிருக்கும் என்றும் அவர்களை எச்சரித்து விட்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு விலகுகிறான்.

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-7806564 இதன் பின் பிராங்கி தங்கியிருந்த அறையை விட்டு வெளியேறும் டெரென்ஸ், பிராங்கி, டரில் ஆகியோர் காசினோவின் உணவு விடுதியில் காப்பி அருந்துவதற்காகச் செல்கிறார்கள். பிராங்கியையும், டரிலையும் உணவு விடுதியில் சிறிது நேரம் தனக்காக காத்திருக்குமாறு கூறி விட்டு, காசினோவின் தொலைக்காட்சித் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபுட் பால் மேட்சைக் காணச் செல்கிறான் டெரென்ஸ். தான் பணம் கட்டிய அணி மேட்சில் தோற்றுக் கொண்டிருப்பதைக் காணும் டெரென்ஸ் சற்று எரிச்சல் அடைகிறான்.

பிராங்கியையும், டரிலையும் தேடி வரும் டெரென்ஸ், உணவு விடுதியில் பிராங்கி மட்டும் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு டரில் எங்கே என்று அவளிடம் வினவுகிறான். டரில் கழிவறைக்கு சென்றிருப்பதாக பதிலளிக்கிறாள் பிராங்கி. டெரென்ஸின் மனதில் மெதுவான படபடப்பு பட்டாம் பூச்சியாக சிறகடிக்க, காசினோவின் எல்லாக் கழிவறைகளிலும் அவன் டரிலைத் தேடுகிறான். ஆனால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான டரிலோ எந்தத் தடயமுமில்லாது காணாமல் போய்விடுகிறான்.

அது மட்டுமா! தொடரும் நாட்களில் டெரென்ஸால் மிரட்டி அனுப்பப்பட்ட பிராங்கியின் வாடிக்கையாளனின் தந்தை, டெரென்ஸ் மீது உள்ளக பொலிஸ் விசாரணை ஒன்றை தூண்டி விடுகிறார், பிராங்கியை குறி வைத்து குண்டர் படையொன்றையும் அவர் ஏவுகிறார், இரு நாட்களில் டெரென்ஸ் 50000 டாலர்களைத் தராவிடில் பிராங்கிக்கும், அவனிற்கும் ஏற்படப் போகும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என டெரென்ஸை மிரட்டுகிறது அந்தக் குண்டர் படை, இது போதாதென்று டெரென்ஸின் சூதாட்டத் தரகன் அவன் அலுவலகத்திற்கே நேரில் வந்து அவன் தர வேண்டிய பணத்திற்காக அவனுடன் வாக்குவாதம் செய்கிறான்.

கவிழ்ந்து போன கொலை வழக்கு, குண்டர்களிற்கும், சூதாட்டத் தரகனிற்கும் தந்தாக வேண்டிய பெருந்தொகைப் பணம், பறி போகும் நிலையில் ஊசலாடும் பொலிஸ் பதவி, இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் தன் போதைப் பொருள் தேவைக்காக ஓட வேண்டிய அவல நிலை என சிக்கல்கள் எல்லாம் ஒரே சமயத்தில் டெரென்ஸ் மீது இறங்க, போதைப் பொருள் விற்பனையாளனான பிக் ஃபேட் உடன் இணைந்து செயற்பட்டு பணம் சம்பாதிப்பது எனும் தீர்மானத்திற்கு வருகிறான் டெரென்ஸ், அதனை அவன் விரைவாக செயற்படுத்தவும் ஆரம்பிக்கிறான்….

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-1952183669 கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அந்தக் குடும்பத்தின் கொலைகளிற்கு காரணமான குற்றவாளிகளை டெரென்ஸ் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தானா? பெருந்தொகைப் பணம் தரவேண்டிய குண்டர்கள் மற்றும் சூதாட்டத் தரகன் ஆகியோரின் பிடியிலிருந்து டெரென்ஸ் மீண்டானா? அவன் பொலிஸ் அதிகாரி பதவி அவனிற்கு நிலைத்ததா? தான் அடிமையாகி விட்ட போதைப் பொருட்களிடமிருந்து டெரென்ஸால் மீள முடிந்ததா? விடைகளை நீங்கள் அறிய விரும்பினால் Bad Lieutnant: Port of Call: New Orleans எனும் திரைப்படத்தை தயங்காது பாருங்கள்.

போதை வஸ்துக்களின் பிடிக்குள் அகப்பட்ட, சற்று வில்லங்கமான ஒரு பொலிஸ் அதிகாரியின் வாழ்க்கையை அதன் கிறுக்குத்தனமும், சூடும், சுழிகளும், இவற்றினிடையே அங்காங்கே திடீர் மின்னலென வெட்டும் மனித நேயமும், அன்புமென, விறுவிறுப்பாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Werner Herzog. [Abel Ferrara, 1992ல் இயக்கிய Bad Lieutnant திரைப்படத்திற்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகள் போதைப்பொருள் உட்கொள்ளும் வில்லங்கமான பொலிஸ் அதிகாரி பாத்திரம், மற்றும் அதன் பெயர் என்பவை மட்டுமேயாகும். இத்திரைப்படம் ஒரு ரீ மேக் அல்ல என அடித்துக் கூறுகிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் வெர்னெர் ஹெர்ஸாக் ]

போதைப் பொருட்களிற்கு அடிமையாகி, அவை தரும் உச்சத்தின் உந்துதலில் ஓடிக் கொண்டிருக்கும் டெரென்ஸின் உணர்வுகளையும், விபச்சாரம், போதைப் பொருள் விற்பனை, பொலிஸ் பணி என்பவற்றின் சிக்கல்கள், ஆபத்துக்கள் இவற்றில் ஈடுபடுவர்களின் வாழ்க்கையின் சில கூறுகள் போன்றவற்றை ரசிகனிடம் வெற்றிகரமாகக் கடத்துகிறார் இயக்குனர் ஹெர்ஸாக். டெரென்ஸ் பாத்திரம் பார்வையாளனை அதிர வைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால் அதில் அவர் அதிரவைக்கும் வெற்றி கண்டிருக்கிறார்.

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-2037842078 தன் பெண் நண்பியான பிராங்கியை முரட்டுத்தனமாக ஒருவன் அடித்திருந்த போதும், குண்டர்கள் கத்தி முனையில் அவளை மிரட்டும் போதும், தன் அதிகாரத்தாலும், வலிமையாலும் அந்த தீயவர்களை துவம்சம் செய்யாமல் மெதுவாக அடங்கிச் செல்லும் பொலிஸ் அதிகாரி டெரென்ஸ் வழியாக பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த ஹீரோயிஸ அதிரடி ஆக்‌ஷன்களிலிருந்து இயக்குனர் அவர்களைப் பட்டினி போட்டாலும், அடுத்து நடக்கப் போவது என்ன என எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதையை அழகான பாணியில் நகர்த்தி சபாஷ் போட வைக்கிறார் அவர்.

டெரென்ஸின் பைத்தியக்காரத்தனமான ஓட்டத்தினூடு சில மென்மையான தருணங்களையும் ஒட்ட வைப்பதற்கு ஹெர்ஸாக் தவறவில்லை. தான் சிறுவனாக இருந்தபோது கடற்கொள்ளையரின் புதையல் எனக் கண்டெடுத்த துருப்பிடித்த கரண்டியை பிராங்கிக்கு டெரென்ஸ் வழங்குவது, திரைப்படத்தின் இறுதித் தருணத்தில் டெரென்ஸ் தான் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய கைதியுடன் மீன்களின் கனவு பற்றி வினவுவது, அதன் பின் வரும் பிரம்மாண்டமான மீன் தொட்டிக் காட்சிகள் என்பன கவிதையும், அன்பும் கலந்து செய்த தருணங்களாக சுவை பெற்றிருக்கின்றன.

திரைப்படத்தில் நீக்கமற நிலைத்திருப்பவர், நிற்பவர், நடிகர் நிக்கோலாஸ் கேஜ். அவர் ஏற்றிருக்கும் டெரென்ஸ் பாத்திரம் ஏனைய பாத்திரங்கள் அனைத்தையும் வலிய சுனாமி அலை போல் அப்பால் அடித்துத் தள்ளி விடுகிறது. கையில் கொக்கேய்னை போட்டு, மூக்கால் ஒரு இழுவை இழுத்துக் கொண்டு, தன் முதுகு வலியால் ஒரு பக்கம் சற்று சாய்ந்தவாறே நடந்து, கசங்கிய ஆடைகளுடன் அவர் வழங்கும் வெறித்தனமான நடிப்பும், சிரிப்பும் அட்டகாசம்.

மருந்துக் கடையில் தன் வலி போக்கும் மாத்திரைகளிற்காக நீண்ட நேரம் காத்திருந்த பின்பாக வெடித்தல், கொலைக்கு சாட்சி சொல்ல வந்த டரிலின் பாட்டி பணியாற்றும் முதியோர் விடுதியில் முதிய பெண்மீது உண்மைகளை அறிவதற்காக அவர் நிகழ்த்தும் வன்முறை, தன் போதை மருந்து தேவைக்காக தெருவில் வைத்து சோதனையிடும் இளம் பெண் ஒருத்தியுடன் அந்தப் பெண்ணின் நண்பனிற்கு எதிரிலேயே உறவு கொள்ளல்[ இந்தக் காட்சியுன் உக்கிரத்தை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை] என அதிர அதிர அதிர வைக்கிறார் நிக்கோலாஸ் கேஜ். அரங்கில் ரசிகர்களின் கைதட்டல்களையும் அவர் அள்ளிக்கொள்கிறார். ரசிகர்கள் அவர் நடிப்பின் மீது உன்மத்தம் கொள்ள வைக்கும் பாத்திரமாக இது கேஜிற்கு அமைந்திருக்கிறது.

bad-lieutenant-2009-17028-1268913927 போதையின் உச்சத்தில் அவர் ஓணான்களை காண ஆரம்பிப்பதும், சுடப்பட்டவர்களின் உடல்களிலிருந்து வெளியேறும் ஆன்மாக்கள் அவர் முன்பாக நடனம் ஆடுவதுமாக இயக்குனரும், கேஜும் ரசிகர்களிற்கு வழங்கும் விருந்து பிரம்மாதம். பிக் ஃபேட்டின் கும்பலுடன் டெரென்ஸ் அடிக்கும் லூட்டிகள் கலக்கல்.

Val Kilmer எனும் நடிகரை உங்களிற்கு நினைவிருக்கலாம். தான் இன்னமும் இருப்பதை இப்படத்தில் சில காட்சிகளில் வருவதன் மூலம் நிரூபித்திருக்கிறார். நடிப்பால் அல்ல அவரது பிரசன்னத்தால்! Eva Mendes க்கு தன் நடிப்புத்திறனைக் காட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை, ஆனால் அவர் தனது ஏனைய அழகான திறமைகளையும் காட்ட இயக்குனர் அனுமதிக்கவில்லை என்பது என் போன்ற தீவிர ரசிகர்களிற்கு ஏமாற்றமே. படத்தில் ஒரு எரோட்டிக் கனவின் சுவை ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

சிறப்பான ஒளிப்பதிவுடன், சூடான வசனங்களுடன், விறுவிறுப்பாக நகரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள், இவை டெரென்ஸ் போதையில் காணும் கனவா என ரசிகர்களைச் சற்றே சந்தேகம் கொள்ள வைக்கும். டெரென்ஸின் சிக்கல்கள் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடுகிறது என்றால் நம்ப முடியுமா! ஆனால் அந்த தீர்தலில் அதிர்ஷ்டம், தற்செயல், போதையில் மூழ்கினாலும் டெரென்ஸுடன் எப்போதும் ஒட்டியிருக்கும் அவன் புத்திசாலித்தனம் என்பன அடங்கியிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை [ கொலைக் குற்றவாளியை மாட்ட வைப்பதற்கு டெரென்ஸ் கையாளும் அந்த யுக்தி மெச்சத்தகுந்தது]

Leaving Las Vegas திரைப்படத்திற்குப் பின், நிக்கோலாஸ் கேஜிடமிருந்து சிறப்பான ஒரு பாத்திரத்தை எதிர்பார்த்து இதுநாள்வரை காத்திருந்த ரசிகர்களிற்கு திகட்டாத விருந்தாக இத்திரைப்படம் அமைகிறது. நிக்கோலாஸ் கேஜ் ஒரு அற்புதமான கலைஞன் என்பதை இத்திரைப்படம் மீள நிறுவுகிறது. ரசிகர்களின் மனதிற்கு மிகவும் பிடித்தமானவனாகிப் போகிறான் இந்த அட்டகாசமான Bad Lieutnant. [***]

ட்ரெயிலர்

Tuesday, March 16, 2010

சகோதரர்கள்


சாம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். அழகிய இளம் மனைவி கிரேஸ், இரு பெண் குழந்தைகளான இசபெல், மஹி எனச் சிறிய அன்பான குடும்பம் அவனுடயது. தன் காதல் மனைவியுடனும், மகள்களுடனும் ஆனந்தமாக தன் வாழ்வைக் கழிக்கிறான் சாம்.

சாமிற்கு டாமி எனும் சகோதரன் இருக்கிறான். சாமைப் போல் நேர்வழியில் நடக்கத் தெரியாதவன் டாமி. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் டாமி, நிபந்தனைக்குட்பட்ட விடுதலையில் சிறையிலிருந்து வெளியே வருகிறான்.

தன் சகோதரன் டாமி மேல் மிகுந்த பாசம் கொண்டவன் சாம். அவர்கள் தந்தையான ஹாங்ஸ், டாமியை அவன் செயல்களிற்காக வெறுப்பவராக இருந்தாலும் தன் சகோதரன் டாமிக்கு அன்பும், ஆதரவுமாக இருக்கிறான் சாம். அதே போல் டாமியும் தன் சகோதரன் சாமை அதிகம் மதிப்பவனாகவும், அவன் மேல் அன்பு கொண்டவனாகவும் இருக்கிறான். சிறையில் இருந்து விடுதலை பெறும் டாமியை நேரில் சென்று அழைத்து வரும் சாம், அவனிற்கு நல்ல வழியில் நடக்கும்படி ஆலோசனைகள் வழங்குகிறான்.

இவ்வேளையில் சாம் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனும் அழைப்பு அவனிற்கு விடுக்கப்படுகிறது. நல்லதொரு வீரனாக அந்த அழைப்பை ஏற்று, தன் அன்பான உறவுகளைப் பிரிந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்கிறான் சாம்.

ஆப்கானிஸ்தானில் சாம், தன் சக வீரர்களுடன் ஒரு ஹெலிஹாப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அக்ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. விபத்துக்குள்ளான ஹெலியில் பயணம் செய்தவர்களைத் தேடித் தீவிர தேடுதலை நடத்தும் அமெரிக்க ராணுவத்தினால், சாமையோ, அவன் உடலையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் சாம் இறந்து விட்டதாக கருதி, அமெரிக்காவில் இருக்கும் அவன் மனைவி கிரேஸிடம் அவன் இறந்து விட்டதான தகவலைத் தருகிறது அமெரிக்க ராணுவம்.

brothers-2010-15080-58759356 தன் அன்புக் கணவன் சாம் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாகிய கிரேஸ், இத்தகவலால் உள்ளே நொருங்கிப் போகிறாள். சாமின் இரு பெண் பிள்ளைகளின் மீதும் கூட தந்தையின் மரணம் குறித்த வேதனையின் துகள்கள் மெல்ல விழுந்து விடுகின்றன. சாமின் சகோதரன் டாமி இந்த செய்தியறிந்து துடித்துப் போகிறான்.

சாம் வாழ்ந்த நகரில் அவனிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சாம் மிகவும் சிறந்த வீரன், நல்லதொரு நண்பன் என அவனைப் பற்றி சக வீரர்கள் நினைவு கூருகிறார்கள்.

இளம் வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த கிரேஸ், கண்ணீரிற்கு மத்தியில் தன் வாழ்வைத் தேடுகிறாள். தன் கணவனின் மேல் சட்டைகளில் அவன் வாசனையை நுகர்கிறாள். சாமுடன் ஆனந்தமாக கழித்த தருணங்களை மனதில் மீட்டிப் பார்க்கிறாள். சாமின் பிரிவு மெல்ல அவளை உள்ளே கொல்கிறது.

சாமின் சகோதரன் டாமி, தன் சகோதரனின் மரணத்தின் பின் தன் நடவடிக்கைகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான். சாமின் மகள்கள் இருவரோடு தன் நேரத்தை செலவிடுகிறான். இஸபெலும், மகியும் டாமியை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். கிரேஸின் வசதிகளற்ற சிறிய சமையலறையை தன் நண்பர்களின் உதவியுடன் புதுப்பித்து தருகிறான் சாம். தன் சகோதரனின் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். கிரேஸின் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை மலர வைக்க முயல்கிறான் அவன்.

குழந்தைகளினதும், டாமியினதும் தொடர்ந்த முயற்சிகளால் கிரேஸ் தன் கணவனின் மரணத்தின் சோகச் சுழலிலிருந்து மேலெழ ஆரம்பிக்கிறாள். கிரேஸும், டாமியும் அவர்கள் அறியாமலே தங்களிற்குள் நெருங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

brothers-2010-15080-619381143 ஒரு நாள் இரவு, கிரேஸிற்கும், டாமிக்குமிடையிலான இந்தப் புதிய உறவானது அதன் எல்லைகளை சற்றுத் தாண்டிப் பார்த்து விட அவர்களை அழைத்து செல்கிறது. ஆனால் எல்லை தாண்டலின் ஆரம்ப நிலையிலேயே இருவரும் சுதாரித்துக் கொண்டு தங்கள் மரியாதையான உறவின் எல்லைகளிற்குள் திரும்பி விடுகிறார்கள். எல்லையை சற்றுத் தாண்டியதற்காக உண்மையிலேயே அவர்கள் உள்ளம் வேதனை கொள்கிறது.

இச்சம்பவத்தின் பின்னும் கிரேஸின் குழந்தைகளை வந்து சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்கிறான் டாமி. இப்போது கிரேஸிற்கும் டாமிக்குமிடையில் புரிந்துணர்வு கூடிய ஆரோக்யமான உறவு நிலவுகிறது. இந்நிலையில் கிரேஸிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பானது அவள் கணவன் சாம் இறக்கவில்லை உயிருடனேயே இருக்கிறான் எனும் தகவலை அவளிற்குத் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தன் வீட்டிற்கு திரும்பும் சாம் வேறொரு மனிதனாக மாறியிருக்கிறான். தாலிபான்களின் கொடூரமான சித்திரவதைகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு வரும் சாம்,மன அழுத்தங்களின் பயங்கரக் குவியலாக இருக்கிறான். அவன் மனதில் இருக்கும் ஒரு ரகசியம் அவனை அகச் சித்திரவதை செய்கிறது. வீடு திரும்பிய சாம், தன் மனைவிக்கும், சகோதரனிற்குமிடையில் நிலவும் உறவு குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறான்……

போர் அது நிகழும் இடத்தில் ஏற்படுத்தும் அழிவுகளை தாண்டி உருவாக்கக்கூடிய அழிவுகள் உண்டு. போர் உருவாக்கும் அவ்வகை அழிவுகளின் மாயக் கரங்களின் நீட்சி எல்லையற்றது. யுத்த முனையிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ அதிகாரி, எவ்வாறு தன் வாழ்வையும், தன் அன்பான குடும்பத்தின் வாழ்க்கையையும் நரகத்தின் வாயிலிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பிக்கிறான் என்பதை அதிர்ச்சியுடன் விரிக்கிறது Brothers திரைப்படம்.

டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் Susanne Bier இயக்கிய Brodre எனும் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படமிது. திரைப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Jim Sheridan.

brothers-2010-15080-852099240 திரைப்படத்தின் அதிர்வைத் தரும் ஆச்சர்யம், சாம் வேடத்தில் வரும் Tobey Maguire. ஸ்பைடர் மேனில் நாம் கண்ட அந்த இனிய ஹீரோவா இவர் என்று புருவங்களை வியப்பால் உயர வைக்கிறார் டாபி மாக்குவைர்.

படத்தின் ஆரம்பத்தில் சிரித்த முகமும், அன்பு நிறைந்த குடும்பத் தலைவனாகவும் வரும் சாம், ஆப்கானில் தாலிபான்களின் சித்திரவதைகளின் போது படிப்படியாக மாற்றம் பெற்று முற்றிலுமாக வேறொரு உருவம் எடுத்து விடுகிறார். வெறித்த பார்வையும், உயிரற்ற கண்களும், மெலிந்த உடலுமாக, பின் வரும் அவரின் தோற்றமே மிரட்டுகிறது.

சாம், தன் மனைவியின் மீதும், சகோதரன் மீதும் சந்தேகம் கொள்ளும் கணங்கள் நுன்னிய ஊசி முனையால் குத்தும் உணர்வை வழங்குகிறது. போர் ஒன்றின் விளைபொருளான சாம் பாத்திரம் தன் மனதில் அடக்கி வைத்திருக்கும் ரகசியத்தையும், அழுத்தங்களையும் சுமக்க முடியாது உடைந்து அமிழ்வது வேதனையானது.

சாமின் அழுத்தங்கள் அவன் கட்டை மீறி வெடிக்கும் இரு கணங்கள் படத்தில் உண்டு. முதலாவது கணம் சாமின் மகள் மஹியின் பிறந்த நாள் இரவுணவின் போது இடம் பெறுகிறது அந்த வெடிப்பின் தொடர்ச்சியாக சாமின் அன்பு மகள் இஸபெல், நீ ஆப்கானில் செத்துப் போனவனாகவே இருந்திருக்கலாம் என சாமைப் பார்த்துக் கதறுவது கனமானது.

brothers-2010-15080-510483742 இரண்டாவது கணம், டாமி புதிதாக திருத்தியமைத்த கிரேஸின் சமையலறையை சாம் அடித்து நொருக்கும் காட்சி. டாபி மாக்குவைரின் நடிப்பு மிகையானதா அல்லது அழுத்தங்கள் குவிந்த ஒரு மனிதனின் இயல்பு இதுதானா என்று பிரித்தறிய முடியாதவாறு வன்மம் பீரிடும் உக்கிரமான காட்சி அது. அன்பு, சந்தேகம், வன்மம், உடைதல் என டாபி மாக்குவைரின் சினிமாப் பாத்திரங்களில் மிகவும் பேசப்படும் ஒரு பாத்திரமாக சாம் பாத்திரம் அமையும். [ ஸ்பைடர் மேன் 4ல் டாபி மாக்குவைர் இல்லையாம்]

சந்தேகமும், வன்முறையும், அச்சமும் குடிகொண்ட ஒரு கணவனை அன்புடன் சகித்துக் கொள்ளும் கிரேஸ் பாத்திரத்தில் Natalie Portman. பித்துப் பிடித்த நிலையில் சந்தேக வெறி கொண்டாடும் கணவனை தன் அன்பால் அணைக்கத் துடிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் நத்தாலியின் திறமைக்கு இப்பாத்திரம் அதிக வாய்ப்பை வழங்கி விடவில்லை. திரைப்படத்தை பார்க்கும் யுத்த முனையிலிருக்கும் அமெரிக்க வீரர்கள் கிரேஸ் போல் ஒரு மனைவி தங்களிற்கும் வேண்டும் என்று ஏங்குவார்கள்.

கொஞ்சம் முரடனாக இருந்து, நல்ல வழிக்கு திரும்புவனாக டாமியின் பாத்திரத்தில் நடிகர் Jake Gyllenhall. ஆரம்ப காட்சிகளில் தன் தந்தையுடன் மோதுவதும், சாமின் மரணத்தின் பின் அவன் குடும்பத்தின் மீது அக்கறை எடுப்பதும், கிரேஸ் மீது கவரப்பட்டு பின் ஒதுங்குவதும், வீடு திரும்பும் சாம் தன் சந்தேக கேள்விகளால் தாக்கும் போது அதனை அமைதியாக எடுத்துக் கொண்டு தன் சகோதரனை எப்போதும் அன்பால் அணைத்துக் கொள்வதுமென மிக இயல்பாக நடிக்க வருகிறது ஜேக் ஜிலன்ஹாலிற்கு. டாமிக்கும் அவரது தந்தை ஹாங்ஸிற்குமிடையிலான உறவு சாமின் மறைவின் பின் மீண்டும் வலுப்பெற ஆரம்பிப்பது மிக மென்மையாக கூறப்பட்டிருகிறது.

இரு சகோதரர்களினதும் தந்தையான ஹாங்ஸ், வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். அப்பாத்திரம் வழியே வியட்னாம் போரிலிருந்து வீடு திரும்பிய போர் வீரர்கள் முகம் கொடுத்திருக்ககூடிய சில பிரச்சினைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குனர்.

brothers-2010-15080-1508556320 படத்தில் மஹி, இஸபெல் ஆகிய இரு சிறுமிகளின் நடிப்பும் அருமையானது. அன்பில் ஆனந்தமாய் மகிழ்வதும், தந்தையின் வெறியின் முன் பயந்து ஒடுங்குவதுமாக எப்படி இவ்வாறான பக்குவமான நடிப்பை இந்தச் சிறுமிகளால் வழங்க முடிகிறது என்று மனம் வியக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மென்மையான குடும்பக்கதையை ஒரு தளத்திலும், ஆப்கானில் சாம் சந்திக்கும் கொடிய நிகழ்வுகளை இன்னொரு தளத்திலும் காட்சிப்படுத்தி படத்தை வேகமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஜிம் ஷெரிடன். ஆப்கானிலிருந்து சாம் வீடு திரும்பிய பின் திரைப்படம் அழுத்தங்கள் நிறைந்த ஒரு துன்பியல் நாடகமாக மாறி விடுகிறது.

படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகளின் நீளம் சலிப்பைத் தருகிறது. இருப்பினும் உச்சக்கட்ட காட்சியின் மூலம் பார்வையாளர்களைப் பற்றிக் கொள்கிறார் ஜிம் ஷெரிடன். படத்தில் சில கேள்விகளை அவர் அதிகாரங்களை நோக்கி உறுதியாக முன் வைத்திருப்பார் எனில் படம் இன்னமும் வீர்யமாக இருந்திருக்கக்கூடும்.

போரில் மரணமுற்றவர்களே அதன் முடிவைக் காண்கிறார்கள். நான் போரின் முடிவைக் கண்டிருக்கிறேன் ஆனால் என்னால் மறுபடியும் ஜீவிக்க முடியுமா?” தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே, தன் மனைவியைக் கட்டியணைத்தவாறு, அவன் கண்களில் கண்ணீர் வழிய, சாம் தன் மனதிற்குள்ளே எழுப்பும் கேள்வி இது. கனமான இக்கேள்வி இலகுவாக பார்வையாளனின் தோளில் ஏறி உட்கார்ந்து விடுகிறது. இதற்கான விடை அன்பிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று! [**]

ட்ரெயிலர்