
லடாக் பீட பூமிக்கு வடக்கே, கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலிருக்கும் தேப்சாங் பள்ளத்தாக்கில் ரோந்து செல்லும் ராணுவ வீரர்கள், வெண் பனியில் பதிந்திருக்கும் ராட்சத காலடித் தடங்களைக் கண்டு கொள்கிறார்கள். இந்தக் காலடித் தடங்களை போட்டோ பிடிக்கும் அவ்வீரர்கள் அதனை தமது ராணுவ மேலிடத்திடம் அனுப்பி வைக்கிறார்கள்.
கடந்த காலங்களில் பல முறை இது போன்ற பனியில் பதிந்த ராட்சதக் காலடித் தடங்களை இந்திய ராணுவத்தினர் அவதானித்திருக்கிறார்கள். அக்காலடித் தடங்கள் பதினேழு தடவைகள் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இமய மலைப் பகுதிகளில் வாழும் பனி மனிதனின் காலடித்தடமாக இது இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் விஞ்ஞானிகள் இவை பனியில் இயற்கையாக ஏற்படும் குழிகள் எனக் கூறுகிறார்கள்.
லடாக்கின் ராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியர் கே.கே. நாயர், இந்த விடயம் குறித்த ரகசிய விசாரணை ஒன்றை மேற் கொள்ளும்படி ராணுவ வீரன் மேஜர் பாண்டியனைப் பணிக்கிறார்.
விசாரணைகளை ஆரம்பிக்கு முன்பாக சில தகவல்களை அறிந்து கொள்ள பாண்டியன் விரும்புகிறான். ராணுவ ஆராய்ச்சிப் பிரிவு அவனிற்கு வழங்கிய தகவல்கள் பயனளிக்காத நிலையில் டாக்டர் திவாகர் என்பவரைச் சந்தித்து தனக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அவன் தீர்மானிக்கிறான்.
டாக்டர் திவாகர் ஒரு மானுடவியலாளர். இமய மலையில் உள்ள மனிதர்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அவர் டா பிங் எனும் மலைக் கிராமத்தில் வசித்து வருவதால் அக்கிராமத்தை நோக்கி வழிகாட்டி ஒருவனுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் பாண்டியன்.
டா பிங் கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் ஆதி குடிகள், தம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கிம் சுங்கை மலைத் தேவதைகளின் பலீ பீடத்தில் உயிரோடு காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிறுவன் கிம் சுங்கிற்கு கடுமையான காய்ச்சல் கண்டிருக்கிறது. பலி பீடத்தில் கிடத்தப்பட்ட சிறுவனின் உடலைக் குறிவைத்து பெரும் கழுகுகள் வானிலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றன. சிறுவன் கிம் சுங்கின் நிலையைக் கண்டு பதறும் பாண்டியன், சிறுவனைக் கிராம மக்களிற்கு தெரியாது காப்பாற்றுகிறான். டா பிங் கிராமத்திற்கு மயங்கிய நிலையிலிருக்கும் சிறுவன் கிம் சுங்கை தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.
மலையின் இருளில் வழி தெரியாது சில கணம் தடுமாறும் பாண்டியனின் வழிகாட்டி, காற்றில் கலந்து வரும் தேவதாரு மரத்தின் புகையை மோப்பம் பிடித்து டா பிங் கிராமத்திற்கு அவர்களை இட்டுச் செல்கிறான். கிராமத்தில் நுழையும் பாண்டியன் டாக்டர் திவாகரைச் சந்திக்கிறான். டாக்டர் திவாகர் காய்சலில் வாடும் சிறுவன் கிம் சுங்கிற்கு சிகிச்சை அளிக்கிறார்.
மறுநாள் காலை டாக்டர் திவாகருடன் உரையாடும் பாண்டியன், டாக்டர் மலையில் வாழும் மக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாலும் பனி மனிதன் குறித்த தேடல்களிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அறிந்து கொள்கிறான். டாக்டர் திவாகரைப் பொறுத்த வரை பனிமனிதன் மீதான அவரது ஆராய்ச்சி என்பது உண்மையில் மனிதர்கள் மீதான ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மேலும் பனிமலையில் வழி தவறிப் போன சிறுவர்களை பனி மனிதன் காப்பாற்றி வருகிறான் என்ற தகவலையும் அவர் பாண்டியனிற்கு கூறுகிறார். இது பாண்டியனிற்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.
இந்த வேளை டா பிங் கிராமத்தை நோக்கி ஓநாய்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதை டீன் பறவைகள் கிராமத்தவர்களிற்கு அறியத் தருகின்றன [ ஏன் என்பதை கதையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்], ஓநாய்க் கூட்டத்தின் தாக்குதலை முறியடிக்க விரும்பும் கிராமத்தவர்கள், ஓநாய்கள் வரும் பாதையில் பாறைகளில் வெடி ஒன்றை வெடிக்க வைத்து ஓநாய்க் கூட்டத்தை விரட்டியடிக்கிறார்கள். இந்தக் களேபேரங்கள் முடிவடைந்த வேளையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கிம் சுங், குரங்கு மனிதன் என்னைப் பிடிக்கிறான் என அலறியவாறே திடுக்கிட்டு எழுகிறான்.
டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள், ஆடு மேய்ப்பதற்காக சென்ற வேளையில் தனக்கு காய்ச்சல் உண்டாகி நடக்க முடியாமல் போனதெனவும், தன்னை தன் தந்தையும் தனியே கைவிட்டு வந்த வேளையில் குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவத்தையும் சிறுவன் கிம் சுங் அவர்களிடம் கூறுகிறான். குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிச் சென்ற வேளையில் ஒரு தருணத்தில் மயக்கமடைந்த அவன் இப்போதுதான் மயக்கம் தெளிவதாகவும் அவன் தெரிவிக்கிறான்.
அது மட்டுமல்ல குரங்கு மனிதன் தன்னை தூக்கிச் சென்ற பாதையை அவர்களிற்கு தான் காட்ட முடியும் எனவும் கிம் சுங் அறிவிக்க, அடுத்த நாளே டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்குடன் பனி மனிதனைத் தேடி தம் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்…
குளிர் அதன் உச்சத்தில் குதூகலிக்கும், இயற்கை தன் ஜால வித்தைகளை நிகழ்த்தும், ஆபத்தும், அபாயமும் உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து அவதானிக்கும் பனிமலைப் பாதைகளினூடாக, சாகசப் பயணமொன்றிற்கு பனி மனிதன் எனும் தன் நாவல் வழியாக அழைப்பு விடுக்கிறார் நாவலாசிரியர் ஜெயமோகன்.
அறிவியல், ஆன்மீகம், இயற்கை என நாவல் எங்கிலும் தெளிவான விளக்கங்களுடன், சிறப்பான தகவல்களை வழங்கி அவர் கதையை சுவையாகக் கூறிச் செல்கிறார். பனி மனிதனைத் தேடி ஆரம்பமாகும் பயணமானது, மனிதன் இயற்கையுடன் கொடூரமாக அறுத்து எறிந்திருக்கும் தன் தொப்புள் கொடி உறவு குறித்து வேதனையோடு பகிர்ந்து கொள்கிறது. இதற்குக் காரணமாகவிருந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்துக் கேள்விகளை முன் வைக்கிறது.
மேலோட்டமாக தகவல்களை வழங்கி விட்டு நகர்ந்து விடாது, நல்லதொரு ஆசானைப்போல் பல விடயங்கள் குறித்தும் தன் தெளிவான விபரிப்பால் வாசகனின் ஆர்வத்திற்கு திகட்டாத ஒரு விருந்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.
சாகசப் பயணத்தில் ஈடுபடும் டாக்டர் திவாகர், வழியில் நிகழும் சம்பவங்களை அறிவியல் ரீதியாக விளக்க முனைகிறார். சிறுவன் கிம் சுங்கோ, அவன் பெற்றிருக்கும் புத்த மடாலயப் போதனைகள் வழி அச்சம்பவங்களை மொழி பெயர்க்க விழைகிறான். ராணுவ வீரன் பாண்டியனோ அறிவியல், ஆன்மிகம் இவை இரண்டிற்குமிடையில் பயணித்துச் செல்பவனாக இருக்கிறான். என்னைப் போன்ற வாசகனின் பயணம் பாண்டியனின் பயணத்தை ஒத்ததே.
சாகசத்தின் இறுதிப் பகுதியானது மனிதனின் நான் எனும் உணர்வைக் குறித்த சிந்தனைகளை வாசகனிடம் எழுப்புகிறது. கூட்டு ஆழ் மனம் மூலம் இயங்கக் கூடிய ஒர் உயிர் சூழலின் சாத்தியத்தையும், அதன் தேவையையும், வாசகன் முன் அந்த உயிர் சூழலின் அற்புதங்களுடன் பரிமாறுகிறது.
இயற்கையும், அதில் இருக்கக் கூடிய எல்லா உயிர்களும் ஒரே மனம் கொண்டவையாக இருந்தால் அந்த உலகம் எவ்வாறு இருக்கும், அந்த உலகில் பரிணாமத்தின் வேகம் எப்படியாக இருக்கும், அங்கிருக்கும் மனிதர்கள் எதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் பேசும் மொழி என்னவாகவிருக்கும், அந்த சூழலில் தீமை என்பது என்ன போன்றவற்றை ஒரு விசித்திர உலகின் மூலம் வாசகன் முன் விரிக்கிறார் நாவலாசிரியர்.
சிறுவர்களாக இருந்தபோது இக்கதையைப் படித்தவர்களிற்கு அதில் வரும் ஆன்மீகம் தத்துவம் என்பன எவ்வளவு தூரம் ஆர்வம் தந்திருக்கும் என்பது ஆச்சர்யமே. ஆனால் கதையில் வரும் சாகசமும், விந்தைகளும் அவர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். மாறாக கதையின் ஆன்மிகமும் தத்துவமும் என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளை அணைத்துக் கொள்கிறது.
அறிவியல் ரீதியாக பனி மனிதன் இருப்பு குறித்து அறிய முயலும் கதையில், சிவபுராணத்திலும், ரிக் வேதத்திலும் அவர்கள் குறித்து குறிப்புக்கள் கணப்படுகின்றன என்பது தெரியவரும்போது ஆச்சர்யம் எகிறுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறிய பெட்டித் துணுக்குகளாக ஏராளமான பயனுள்ள தகவல்களை தந்து அவற்றைக் கதையில் சொல்லப்படும் விடயங்களுடன் இணைத்திருக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது. தமிழ் சிறுவர் நாவல் ஒன்றில் நாவலாசிரியரின் இவ்வளவு நேர்மையான அர்பணிப்பை காண்பது அரிதான ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.
பனிமலைப் பகுதியில் பூரண நிலவு எழும் அந்த சொர்க்கத்திற்கு ஒப்பான காட்சியை ஜெயமோகன் தன் வார்த்தைகளால் வர்ணிக்க, அக்காட்சி அப்படியே வாசகனுள் உயிர் பெறுவது அபாரமானது.
ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் தெளிவான, விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் நாவலாகவே பனி மனிதன் அமைகிறது. பனிமலைச் சிகரங்களின் உச்சிகளில், அஸ்தமனத்துச் சூரியனின் கதிர்கள் பட்டுத் தெறித்து அப்பிரதேசத்தையே செந்தீயாலான வெளியாக மாற்றியடிக்கிறது. மனதை மயக்கும் இந்நிகழ்வை புத்தரின் புன்னகை என ஒப்பிடுகிறான் சிறுவன் கிம் சுங். அந்தப் புன்னகையை எங்கள் மனதிற்குள்ளும் எடுத்து வருகிறது ஜெயமோகனின் பனி மனிதன். [***]
