Saturday, July 20, 2013

சிக்கன் வித் ப்ளம்ஸ் - தமிழில்

மார்ஜான் சத்ராபியின் குறிப்பிடத்தக்க படைப்பான சிக்கன் வித் ப்ளம்ஸ் இணையத்தில் தமிழில் தரவிறக்க கிடைக்கிறது. நுண்ணிய உணர்வுகளை தன் கோடுகளிற்குள் மந்தகாசமான அங்கதத்துடன் ஒளித்து வைக்கும் திறமைசாலி சத்ராபி. வழமையிலிருந்து வேறுபட்ட வாசிப்புக்களை தேடும் நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு அதிரடி ஆக்சன் சாகஸம் அல்ல, அகமொன்றின் ஆற்றாமையின் தளர்நடையின் மெளனமான இசைவரி.



தரவிறக்க
http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr

தொடர்புடைய பதிவு
http://illuminati8.blogspot.fr/2013/02/chicken-with-plums.html

Sunday, July 7, 2013

நீரோட்டத்தின் நிழல்

தன் கணவனை கொலை செய்வதற்கு துணை தேடும் அழகான மனைவிகளிற்கு நீங்கள் உதவ முன்வரும் பட்சத்தில் நீங்கள் அவர்களை விட விவேகமானவர்களாகவும், அவர்கள் விவேகவேகத்தினை கடந்து ஓடக்கூடியவர்களாகவும் இருப்பது நல்லது.
ஜேம்ஸ் எம் கெய்ன் எழுதிய நாவலான Double Indemnity இவ்வகையான அழகான மனைவி ஒருத்தியின் கவர்ச்சியில் ஆழும் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டின் பரிதாபமான முடிவிற்கு வாசகர்களை சிறப்பாக எடுத்து செல்கிறது.

கணவனை கொலை செய்வதன் வழி அவன் இன்சூரன்ஸ் பணத்தை தனதாக்கி கொள்ள விரும்பும் ஒரு பெண். அதற்கு துணைபோகும் இன்சூரன்ஸ் தொழிலின் அனைத்து தந்திரங்களையும் அறிந்த ஒரு மனிதன். இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஓட்டைகள் ஏதுமற்ற ஒரு கொலைத்திட்டம். அதன் நிறைவேற்றம். அதன் பின்பான திருப்பங்கள். கவர்ச்சியின் உறை களையும் வேளையில் மனிதர்கள் மீது இறங்கும் தெளிவின் கனம்.

அந்த தெளிவு அவனை அவளை வெல்ல தூண்டுகிறது. அவளிடமிருந்து வேறுபட்ட ஒரு அன்பை தனதாக்கி கொள்ள இயக்குகிறது. இன்சூரன்ஸ் கம்பனியின் அனுபவம் பெற்ற அதிகாரியின் நடவடிக்கைகளிற்கும், எதிர்பாரா நிகழ்வுகள் வழங்கும் சறுக்கல்களிற்கும் முன்பாக தன்னை ஒரு திறமைசாலியாக நிரூபித்திட உந்துகிறது. ஆனால் ஒரு மனிதன் ஓடுவதை நிறுத்தும் எல்லை என ஒன்று உள்ளது. அது அயர்ச்சியாலோ, களைப்பாலோ ஏன் அன்பினாலோ கூட இருக்கலாம். வால்ட்டர் ஹஃப் எனும் அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தோற்பது ஒரு பெண்ணால். ஆனால் அது தன் கணவனை கொலை செய்வதற்கு துணைபோன பெண்ணான பைலிஸ் அல்ல.  பெண்ணின் அருகாமையே மனதில் அமைதியையும் சாந்தத்தையும் குடி கொள்ளச் செய்து மனிதனை இளைப்பாற்றும் காதலை ஒருவனில் உருவாக்ககூடிய பெண்ணவள்.

ஆனால் வால்ட்டர் ஹஃப்பிற்கு கிடைப்பது பரிதாபமான முடிவு. இவ்வகையான நாவல்கள் வழங்கக்கூடிய அருமையான முடிவும் கூட. அம்முடிவின் தருணத்தில் கூட நாவலாசிரியர் ஜேம்ஸ் எம் கெய்ன் தன் எழுத்துக்கள் மூலம் கொணரும் இறுக்கமான உணர்வை சிறிதும் தளர்த்திடவில்லை. நீரோட்டம் ஒன்றின் ஆழங்கள் கொண்டுள்ள ரகசியங்கள் போலவே மனித மனங்களும். அவற்றின் ரகசியங்களும், அன்புகளும் மேற்பரப்பில் கோலங்கள் இட்டு அழகோவியமாவதில்லை.

நாவல் தந்த அனுபவம் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. இருபது நிமிடங்களின் பின்பாக திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பிரதான காரணம்; வால்டர் ஹஃப் பாத்திரம் திரையில் ஓயாமல் பேசுகிறது. நாவலில்கூட கதை சொல்லி அவனாகவே இருந்தாலும் அவன் கதையை சொல்வதை தவிர்த்து வார்த்தைகளை தேவை மீறி உபயோகிப்பவனாக இருப்பது இல்லை. அவன் பாத்திரம் நாவலில் உருவாக்கும் பிம்பம் திரையில் ஆரம்ப கணத்திலேயே உடைந்து விடுகிறது. அது போலவே கதையில் இன்சூரன்ஸ் அதிகாரியாக வரும் கீய்ஸ் பாத்திரத்தை சிறு பராவில் தீர்க்கமானதாக உருவாக்கி காட்டுவார் நாவலாசிரியர் கெய்ன் ஆனால் திரையிலோ அவரும் அதிகம் பேசுவதாகவே நான் உணர்கிறேன். இது நாவல் என் மீது உருவாக்கிய சித்திரத்திற்கும் திரைப்படத்தின் ஆரம்ப நிமிடங்கள் தந்த அனுபவங்களிற்குமான இடைவெளி மட்டுமே. என் கருத்தில் நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது என்றே சொல்வேன்.

ஜேம்ஸ் எம் கெய்ன் சுற்றி வளைக்காது நேரடியாக விடயத்திற்கு வரும் எழுத்துக்களின் சொந்தக்காரர். 1936 களில் வெளியான இந்நாவலின் கச்சிதம் வியக்க வைக்கும் ஒன்று. ஒரு க்ரைம் நுவார் வாசகனிற்கு தர வேண்டிய உணர்வையும், அவனை இட்டு செல்ல வேண்டிய சூழலையும் , பாத்திரங்களின் இக்கட்டான நிலையையும் அவர் எழுத்து சிறப்பாக நாவலில் எடுத்து வருகிறது. தேவையற்ற வர்ணனைகள், உரையாடல்கள் போன்றவற்றை கெய்னின் எழுத்துக்கள் கொண்டிருப்பது இல்லை என்பேன். அது போல நாவலில் அங்காங்கே சில வரிகள், நின்று மீண்டும் படித்து ரசித்து செல்ல வைக்கும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. இவ்வகை கதைகளில் பாத்திரங்களை வாசகனிடம் உணர்வுபூர்வமாக நெருங்க வைப்பது ஒரு மலிவான உத்தி என நான் கருதுகிறேன். அதை கெய்ன் தன் நாவலில் செய்வது இல்லை. நாவலின் பாத்திரங்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்மான பிடிப்பை ஏற்படுத்துவதை கெய்னின் கதை சொல்லல் தடுக்கவே முயல்கிறது. இருப்பினும் வால்ட்டர் ஹஃபின் முடிவு அதை வெற்றி கொள்கிறது எனலாம்.

இவ்வகை நாவல்களின் பிரதான பாத்திரங்களில் செயற்படும் அறம் மிகவும் புதிரான ஒன்று.  அவற்றின் வினோதமான ஆட்டத்தின் பொம்மைகளாகவே பாத்திரங்கள் இயங்கி மயங்குகின்றன. அதுவே அப்பாத்திரங்களின் முடிவுகளையும் தீர்மானித்து விடுகிறது போல. ஆரம்ப கால ஹார்ட் பாய்ல்ட் வகை நாவல்களில் மிகச்சிறப்பான ஒரு நாவல் Double Indemnity என்பது உண்மையே.

Monday, July 1, 2013

பாவம் கழுவாய்

ஒரு குற்றப்புனைவின் பிரதான இழையானது குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் எடுத்து வரல் அல்லது அறம் சார்ந்த ஒரு தீர்ப்பை புனைவின் முடிவில் குற்றமிழைத்தவர்களிற்கு வழங்கல் போன்ற பண்புகளை தன்னுடன் இழைத்துக் கொண்டதாக இருக்கும். இப்பண்புகள் இவ்வகை புனைவுகளை படிக்கும் வாசகர்களின் மனநிறைவிற்கும், திருப்திக்கும் உத்தரவாதம் அளிப்பவையாகவும் திகழும். குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது எனும் நிம்மதியும், மகிழ்ச்சியும் வாசகர்களை அரவணைத்துக் கொள்ளும்.

இவ்வகையான இனியெல்லாம் சுபமே முடிவுகளைக் கொண்ட குற்றப்புனைவுகள் அனைத்துமே படிப்பவர்களை திருப்தி செய்து விடுமா எனும் கேள்வியைக் என்னிடம் கேட்டால் என் பதில் இல்லை என்பதுதான். இவை பெரும்பாலும் வேகமான வாசிப்பிற்கு என உருவாக்கப்பட்ட படைப்புக்களாகவும், இலகுநுகர் பண்டங்களாகவும், விற்பனை யுக்திகள் மற்றும் விளம்பர திணிப்பு, மந்தைவிமர்சன கலாச்சாரம் என்பவை வழியாக  அவற்றிற்குரிய தரத்தைவிட அதிக தரம் சுமத்தப்பட்ட படைப்புக்களாகவும் காணப்படுகின்றன என்பது என் கருத்து. இவற்றிற்கு உதாரணமாக அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகளை நான் சுட்டிக் காட்டுவேன். ஸ்டெய்க் லார்சனும் சரி கமிலா லாக்பெர்க்கும் சரி லார்ஸ் கெப்லரும் சரி அவர்களிற்கும் அவர்கள் படைப்புக்களிற்கும் கிடைத்திருக்கும் பெயரிற்கும், பிரபலத்திற்கும் ஏற்புடைய படைப்புக்களை தரவில்லை என்பது என் வாசிப்பனுபவம். அவர்கள் படைப்புக்களை Fred Vargas எழுதிய Wash this Blood clean from my Hand ஐ படித்தபின்பாக சாதாரண குற்றப்புனைகள் என்பதாகவே என்னால் வகைப்படுத்த கூடியதாகவே இருக்கிறது.

ஆனால் பிரெஞ்சு நாவலாசிரியையான ஃப்ரெட் வார்கா தனது இப்படைப்பில் குற்றத்தை ஒரு பரபரப்பு ஆக்கியிருக்க மாட்டார். அதுதான் இப்புனைவின் மொத்த உயிர் என உருக்காட்டியிருக்க மாட்டார். அசர வைக்கும் துப்பறியும் நுட்பங்களோ, அல்லது அறிவியல் நுட்பங்களோ கதையில் பெரிதும் திருப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் படைப்பை அவர் எழுதியிருக்க மாட்டார். கதையின் நாயக பிம்பமானது கதையில் வரும் ஏனைய பாத்திரங்களை தாண்டி புனித தன்மையோ அல்லது புத்திசாலித்தனமோ அல்லது செயற்திறனோ அல்லது வீரமோ கொண்டது என வற்புறுத்திய திணிப்புடன் காட்டவே மாட்டார். ஆனால் இவை அனைத்துடனுமே அவர் தனது நாவலை ரசிக்க செய்து விடுகிறார். அவ்வகையில்தான் ஃப்ரெட் வார்கா மிகவும் சிறப்பானதொரு படைப்பாளியாகவும், கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்தாளாராகவும் தகுதி பெறுகிறார்.

கதை, 30 வருடங்களிற்கு மேலாக சமார்த்தியமாக கொலைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் கொலைஞனை ஆடம்ஸ்பெர்க் எனும் பொலிஸ் அதிகாரி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை விபரிக்கிறது. பாரிஸின் குற்றப் பொலிஸ் பிரிவொன்றில் பழுதடைந்து போன வெப்பமூட்டியை தன் பார்வையால் திருத்திட முயலும் ஆடம்ஸ்பெர்க்குடன் கதை ஆரம்பமாகிறது. அதிலிருந்து வேறுபட்ட சுவையை தேடும் வாசகனிற்கு விருந்துதான். பாரிஸ் குற்றப்பிரிவின் அவலங்கள், அதில் பணிபுரிபவர்களின் வாழ்க்கைகள், அவர்கள் குணாதிசயங்கள் போன்றவற்றை மென்மையான நகைச்சுவையுடன் தன் வார்த்தைகளில் விதைக்கிறார் ஃப்ரெட் வார்கா. அவர் வரிகளை படிப்பது பனிநிறைந்த காலை ஒன்றில் இதமான சூரியக்கதிர்களோடு உலாச்செல்வதுபோல அவ்வளவு இதமாக இருக்கிறது.[ மொழிபெயர்ப்பாளார் Sian Reynolds கதையை அருமையாக மொழிபெயர்த்து இருக்கிறார்]

படிப்படியாக வாசகனை Trident எனும் கொலைஞனின் பாதைக்கு இட்டுச் செல்லும் கதை, தான் செல்லும் வழியில் அவனிற்கு காட்டும் சுவாரஸ்யங்கள் ஏராளம். நிதானமான கதை சொல்லல் என்பது குற்றப்புனைவின் மிகப் பெரிய எதிரி. அந்த எதிரியையே தனது சுவை நிறைந்த கதை சொல்லலால் இனிய அனுபமாக்கிவிடுவதுதான் ஃப்ரெட் வார்காவின் திறமை. அவர் குற்றத்தை விடவும் தன் கதையின் மாந்தர்களை தன் படைப்பில் அதிகம் பிரதானம் செய்கிறார். அவர்களின் ஆன்மாக்களை தன் எழுத்துக்களால் வாசகனை நெருங்க செய்கிறார். ஆடம்ஸ்பெர்க் எனும் தலைமை பாத்திரத்தை தாண்டியும் பிரான்சின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு ஒய்வுபெற்ற முதியவரையும் - அவர் ஒரு சில பக்கங்களிலேயே கதையில் வந்தாலும்- எம்மால் ரசிக்கவும், நெருங்கவும் அவரால் செய்ய முடிகிறது. அதுபோலவே பிரான்சின் ஆன்மாவினையும் நாவலினூடு அவர் எழுத்துகள் நுட்பமாக பதித்து விடுகின்றன.

பாத்திரங்கள் மட்டுமல்லாது கனடாவில் இருக்கும் ஒரு அணிலையோ அல்லது அங்குள்ள குளிர் ஏரியில் ராஜாங்கம் செய்யும் ஒரு வாத்தையோ அல்லது இறந்த ஆழ் ஏரி ஒன்றில் ஜீவித்திருக்கும் ஒரு முற்சரித்திர மீன் வகையையோ அல்லது பிரான்சின் ஸ்டார்ஸ்பூர்க் எனும் இடத்திலிருக்கும் கோதிக் கோயிலையோகூட அவர் தன் எழுத்துக்களால் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் ஆக்குகிறார். கதையின் ஓட்டத்தில் இவை உருப்படுத்தும் குறியீடுகள் வாசகனிற்கு எடுத்துவரும் அனுபவம் அலாதியானது. அந்த வகையில் ஃப்ரெட் வார்காவின் எழுத்து தனித்துவமானது, வழமையான மையநீரோட்ட குற்றப்புனைவுகளிலிருந்து வெகுதூரம் விலகி வரிகளினுள் புதைக்கப்பட்ட புதையலை தேடியலையும் வாசகனை வேண்டி நிற்பது. அவ்வகையான வாசகர்கள் மட்டுமே அவரின் பகட்டற்ற எழுத்துக்களின் பின் மறைந்திருக்கும் மறையழகை கண்டுணர முடியும். அவர் எழுத்துக்கள் படைப்பு என்பதையும் தாண்டி உங்கள் வாசிப்பனுபவத்தை மெருகேற்றும் ஆற்றலை தம்மில் கொண்டிருக்கின்றன.

ஃப்ரெட் வார்கா 
Trident ன் கரங்கள் நீண்டவை. அவனை நோக்கி ஆடம்ஸ்பெர்க் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனை அவன் அழிவை நோக்கி இட்டுச் செல்பவையாக இருக்கும். ஆடம்ஸ்பெர்க்க்கும் தர்க்கங்களை பெரிதும் நம்பாது தன் உள்ளுணர்வுகளையும், கனவுகளையும் நம்புபவன். தர்க்கங்களும், ஆதாரங்களும் மட்டுமே ஒருவனை குற்றவாளியாக்கிடவோ, நிரபராதியாக்கிடவோ முடியும் எனும்போது ஆடம்ஸ்பெர்க் இவற்றை தாண்டி தன் தேடலை நடாத்துகிறான். இதனாலேயே அவன் தனியனாக சித்தரிக்கப்படுகிறான். அவன் ஒவ்வொரு ஆதாரங்களாக தேடிச் சென்று தோல்வியுற்று பின் அவற்றை கண்டடையும் வழிகள் எல்லாமே வாசகனை ஏமாற்றாதவை. கதையின் பாத்திரங்கள் யாவுமே ஆடம்ஸ்பெர்க்கிற்கு ஏதோ வகையில் அவன் தேடலில் உதவுகின்றார்கள். அவனிற்கு உதவுவதன் வழி அவர்கள் தம்மை படைப்பில் செதுக்கி கொள்கிறார்கள். எதிர்பாரா திருப்பங்களை கதைக்கு இட்டு வரும் இப்பாத்திரங்களை ஃப்ரெட் வார்கா உருவாக்கி, கதையில் நடமாடவிட்டிருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக கிளிமென்டின், ஜொசேட் எனும் முதிய பெண்களின் கூட்டணி அசத்தல் என்பேன். அதுவும் அவர்கள் உரையாடல்கள், அவர்கள் பற்றிய ஃப்ரெட் வார்காவின் விபரிப்புக்கள் யாவுமே அருமையாக இருக்கும். கதைமாந்தர்கள் என்னை இவ்வளவு கவர்ந்த குற்றப்புனைவு இதுவாகத்தானிருக்கும் என்றால் அது மிகையல்ல.

ஆடம்ஸ்பெர்க், தொடர்கொலைஞனின் குற்றவடிவு என்ன என்பதையும் அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதையும் கண்டறியும் தருணங்கள் உண்மையிலேயே நல்லதொரு கற்பனை. அந்த வடிவை பூரணமாக்குவதைப் போலவே நாவலின் முடிவும் அமைந்து இருக்கிறது. ஏனெனில் தொடர்கொலைஞர்களிலும் கலைஞர்கள் உண்டு. அவர்கள் தம் கொலைகள் வழி தம் படைப்பின் பூரணம் காணவே விழைகிறார்கள். அது அவர்களின் விடுதலை. பாவத்தை கழுவுதல் என்பதும் ஒரு வகையில் விடுதலையே. ஆடம்ஸ்பெர்க் ஒரு சில பாவங்களை தானும் கழுவிக் கொள்கிறான். ஆனால் அவன் வெற்றி பெறுகிறானா அல்லது கொலைஞன் வெற்றி பெறுகிறானா என்பதற்கு நாவலில் ப்ரெட் வார்கா தரும் முடிவு மிகவும் எதார்த்தமானது.

இயந்திர வேகமும், அறிவியல் நுட்பமும் கலந்து ஒளியின் வேகத்தில் பயணிக்க துடிக்கும் குற்றப்புனைகளின் மத்தியில் இளைப்பாறலின் இன்பத்தையும், வாசிப்பிலுள்ள சுகத்தையும் வாசகனிற்கு வழங்கி மனிதமும்,  மனிதவாழ்வின் சிக்கல்களினூடன இயல்பான பயணமும், மனித மனதில் ஆழத்தில் வாழும் இருளும் கலந்து ப்ரெட் வார்கா தந்திருக்கும் இப்படைப்பு சிறப்பானது அன்றி வேறல்ல.