தரவிறக்க
http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr
தொடர்புடைய பதிவு
http://illuminati8.blogspot.fr/2013/02/chicken-with-plums.html
தெஹரான், 1958.
தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.
நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை மதிக்கும் நாசீர் வேறு வேலைகள் செய்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.சில தினங்களிற்கு முன்பாக வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் ஒன்றின் போது அவன் மனைவி நகீட், அவனுடையை டார் வாத்தியத்தை முறித்து விடுகிறாள்.
தன் வாத்தியக்கருவி உடைந்து போனது நாசீர் அலிக்கு அவன் வாழ்வின் ஆதாரமே நொருங்கிப் போனது போன்ற உணர்வைத் தருகிறது. தனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட உணர்வில், இசைக்கருவிகளை விற்கும் கடை ஒன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன அவனுடைய தளர்வுற்ற கால்கள்.
வாத்தியக் கருவிகள் விற்கும் கடையின் உரிமையாளன் மிர்ஷா, நாசீரை உவகையுடன் வரவேற்கிறான். நாசீரின் டார் உடைந்து விட்ட செய்தியை அறியும் மிர்ஷா, தன் கடையிலிருக்கும் ஒரு டார் வாத்தியத்தை நாசீரிற்கு தருகிறான்.
மிர்ஷா தந்த டார் வாத்தியத்தை இசைத்துப் பார்க்கும் நாசீர், அவ்வாத்தியம் எழுப்பும் இசையில் திருப்தி கொள்ளாதவனாக இருக்கிறான். தன் கடையில் மிகையாக இருக்கும் ஈரலிப்பே டார் வாத்தியத்தை பாதித்திருப்பதாகக் கூறும் மிர்ஷா, நாசீர் வீட்டின் உலர்ந்த ஓர் பகுதியில் ஒரு வாரம் கருவி இருக்குமானால் அது தன் இனிய இசையை வழங்க தயாராகிவிடும் என்று கூறுகிறான்.
ஒரு வார காலம் தன் வீட்டில் வைத்திருந்த பின்னும், புதிய டார் கருவி எழுப்பும் இசையில் திருப்தி பெறாத நாசீர், கருவியை மீண்டும் மிர்ஷாவிடம் எடுத்துச் செல்கிறான். இவ்வாறாக ஒரு மாத காலத்தில் மிர்ஷா வழங்கிய நான்கு டார் வாத்தியங்கள் தரும் இசையிலும் நிறைவடையாத நாசீர் அலி, மிர்ஷாவிடம் கோபித்துக் கொள்கிறான்.
மனம் சோர்வடைந்த நிலையில் தன் வீட்டில் முடங்கியிருக்கும் நாசீர் அலியைக் காண அவன் நண்பன் மனோட்சேர், நாசீரின் வீட்டிற்கு வருகிறான். நாசீரின் சோர்வான தோற்றத்தைக் காணும் அவன், ஈரான் நாடு தற்போதிருக்கும் நிலையில் எவருமே சுகமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்கிறான். 1953ல் CIA மற்றும் ஆங்கிலேயர்களின் துணையுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பாக ஈரானில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் கருத்து.
நாசீரின் கவலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் மனோட்சேர், மஸாட் நகரிலிருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் அருமையான டார் வாத்தியம் ஒன்று இருப்பதாகக் தெரிவிக்கிகிறான். நாசீர் தன் நண்பனை அங்கு சென்று சந்தித்தால் அவன் அதிர்ஷ்டத்தை அவனால் கண்டடைய முடியும் என்றும் நாசீரை உற்சாகப்படுத்தி விடைபெறுகிறான் மனோட்சேர்.
சில நாட்களின் பின் தன் மனைவி நகீட்டிடம், தான் மஸாட் நகரிற்கு செல்ல விரும்பும் தகவலைக் கூறுகிறான் நாசீர். அவர்களின் கடைக்குட்டிப் பையனான மொஸாபரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் அவர்களிற்கிடையில் தகராறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி மொஸாபரையும் தன்னுடன் மஸாட்டிற்கு அழைத்துச் செல்கிறான் நாசீர்.
நீண்டதொரு பஸ் பயணத்தின் பின்பாக அவர்களிருவரும் மாஸட் நகரை வந்தடைகிறார்கள். பஸ் பயணத்தின்போது இடைவிடாது பாடல்களை பாடி சக பயணிகளின் சாபத்தை வாங்கிக் கொள்கிறான் சிறுவன் மொஸாபர். நாசீர், மொஸாபாரின் பாடல்களால் காது கேட்காத நிலைக்கு வந்து விட்டிருக்க்கிறான். தெருவில் செல்லும் வாகனங்களின் ஹாரன் ஓலி கூட அவன் காதில் புக மறுத்து விடுகிறது.
மாஸாட் நகரின் இருண்ட தெருக்கள் வழியே தாம் தேடி வந்த நபரான ஹவுசானின் வீட்டை வந்து அடைகிறார்கள் நாசீரும், மொஸாபரும். அவர்களை மகிழ்சியுடன் வரவேற்கும் ஹவுசான், அவர்களை தன் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.
நாசீர் சற்றுப் பதட்டமான நிலையிலிருப்பதை அவதானிக்கும் ஹவுசான், நாசீரை இளைப்பாற்றுவதற்காக அபின் நிரம்பிய சுங்கான் ஒன்றை புகைப்பதற்காக அவனிடம் தருகிறான். பின்பு தன்னிடம் இருக்கும் டார் வாத்தியத்தை வாசிப்பதற்காக நாசீரிடம் கையளிக்கிறான்.
அபின் தந்த இதமான மயக்கத்தில் அந்த டார் வாத்தியத்தை இசைக்கும் நாசீர் அது தரும் இசையில் திருப்தி கொள்கிறான். இவ்வளவு ரம்யமான இசையை இதுவரை தான் கேட்டதில்லை எனக்கூறும் ஹவுசான், நாசீரை மேலும் கருவியை இசைக்கும்படி வேண்டுகிறான். 2000 டுமான்கள் கொடுத்து அந்த டாரை ஹவுசானிடமிருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் நாசீர். இம்முறை சிறுவன் மொஸாபர் அருந்திய பாலில் அபின் சிறிதளவு கலக்கப்பட்டதால் பயணம் அவன் பாடல்களில்லாமல் இனிதே கழிந்தது.
காலையில் விழித்தெழும் நாசீர், சிகை திருத்தும் நிலையம், மீசை திருத்தும் நிலையம் என்பவற்றிற்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடைகளில் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து கொள்கிறான்.
நாசீரின் நடவடிக்கைகளை கவனிக்கும் மனைவி நகீட், ஷா மன்னரைச் சந்திக்க செல்கிறாயா என அவனைக் கிண்டல் செய்கிறாள். மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும்வரை அமைதியாக காத்திருக்கிறான் நாசீர். அவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் கடைக்குட்டிப் பையன் மொஸாபரை அயலில் உள்ள வீடு ஒன்றில் கொண்டு விடுகிறான்.
வீடு திரும்பும் நாசீர் ஒர் சிகரெட்டை ரசித்துப் புகைக்கிறான். அவன் விரல்கள் டார் இசைக்கருவியை இசைக்கும் முன்பாக அவன் விழிகள் நீண்ட நேரம் அக்கருவியின் மீது நிலைத்திருந்தன.
டார் வாத்தியத்தை இசைக்க ஆரம்பிக்கிறான் நாசீர், அதிலிருந்து எழும் இனிய இசை மெல்ல மெல்ல அவன் காதுகளில் அபஸ்வரமாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. எந்த ஒரு டார் வாத்தியமும் அவனிற்கு இசைக்கும் இன்பத்தை வழங்காத நிலையில், நாசீர் அலி இறந்து விடுவது எனத் தீர்மானிக்கிறான். அமைதியாகத் தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்கிறான் நாசீர்.
எட்டு நாட்களிற்கு பின்பாக நாசீரின் உடல், அவன் அன்னையைப் புதைத்த கல்லறையில் அவளிற்கருகில் அடக்கம் செய்யப்படுகிறது. அவனை அறிந்தவர்கள் யாவரும் அன்று அந்தக் கல்லறையின் அருகில் இருந்தார்கள்……
நாசீரின் மரணத்திற்கு முன்பான எட்டு நாட்களிலும் நிகழும் சம்பவங்கள் வழி, நாசீரின் வாழ்கையை தன் அற்புதமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களாலும், சிறப்பான கதை சொல்லலாலும் எம்முன் கொணர்ந்திருக்கிறார் திறமைமிகு கலைஞியான Marjane Satrapi.
நாசீரிற்கும் அவன் தாய், சகோதரன், சகோதரி ஆகியோரிற்கிடையான உறவு, அவனது இசைப்பயிற்சி, அவனது காதல் தோல்வி, நகீட்டுடான அவனது திருமணம், அவனது குழந்தைகளின் எதிர்காலம், மரண தேவன் அஸ்ரேலுடனான உரையாடல் என நாசீரின் மனதில் விரியும் காட்சிகள் மூலம் வாசகனை நாசீரின் மனவேதனைகள், ஏக்கங்கள், தோல்விகள், சின்ன சின்ன இன்பங்கள் என்பவற்றினூடாக வேதனையும், நகைச்சுவையும் தெளித்து பயணிக்க வைக்கிறார் மார்ஜேன் சட்ராபி.
சட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.
கதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.
மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.
நாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான்? அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா? இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்தில் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.
நகீட், அவன் டாரை உடைத்தபோது கூட அவன் காதல் உடைந்து விடவில்லை, ஆனால் தெஹரானின் தெருவொன்றில் ஒரு பெண்ணிடமிருந்து வரும் சில வார்த்தைகள் நாசீரையே முற்றிலுமாக உடைத்து விடுகிறது….
மார்ஜேன் சட்ராபி, 1966ல் ஈரானில் பிறந்தவர். ஈரானில் அரசியல் நிகழ்வுகள் காரணமாக வியன்னாவிற்கு தன் கல்வியை தொடரச் சென்றவர். பின்பு தன் கல்வியை பிரான்சிலும் தொடர்ந்தார். தற்போது பாரிசில் வசித்து வருகிறார்.
அவரது முதல் சித்திர நாவலான Persepolis அவரிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் இக்கதையை அவர் Vincent Parnnaud வுடன் சேர்ந்து ஒரு அனிமேஷன் படமாக உருவாக்கினார். இத்திரைப்படம் 2007ல் கேன் திரைப்படவிழாவில் ஜூரி விருதையும், அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கவுரவமான கலை விருதான செஸார் விருதுகள் இரண்டையும் வென்றது. தமிழில் விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. எனவே அச்சித்திர நாவலைப் படிக்கத் தவறாதீர்கள்.
Poulet Aux Prune சித்திரநாவல் 2004ல் Angouleme காமிக்ஸ் விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்றது. சட்ராபி மீண்டும் வன்சென் பார்னோவுடன் இணைந்து இக்கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இத்திரைப்படம் அனிமேஷன் வடிவமாக இருக்கப்போவதில்லை. நிஜ நடிகர்களை கொண்டு படத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம். இச்சித்திர நாவலின் ஆங்கிலப் பதிப்பு Chicken With Plums எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
ப்ளம் பழங்களில் சமைத்த கோழி நாசீரிற்கு பிடித்தமான உணவு, அவன் கனவுகளில் அதுவே நடிகை சோபியா லாரனாக உருமாற்றம் கொள்கிறது. திறந்து கிடக்கும் மலை போன்ற சோபியாவின் மார்பகங்களின் இன்பத்தில் உறங்கிப்போகிறான் நாசீர். அவன் வாழ்வில் இன்பத்தின் வரவும், வெளியேற்றமும் சோபியா வடிவில் எழுகிறது. அவனிற்கு கிடைக்கும் இச்சிறு இன்பங்களைக் கூட உடைத்து அவன் வாழ்வையே மடிந்து போகச் செய்து விடும் வார்த்தைகளை நாம் காதல் என்றும் அழைக்கலாம். [****]
வாலிப, வயோதிப அன்பர்கள் அனைவரிற்கும் மன்மதனின் காதலர் தின நல்லாசிகள்!!