மர்மக் கொலைஞன் ஒருவன் விடுமுறை தினங்களில்! கொத்தம் நகரில் கொலைகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறான். கொத்தம் நகர ஊடகங்கள் இவனை ஹாலிடே என அழைக்க ஆரம்பிக்கின்றன. கொத்தம் நகரின் முதன்மை மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனின் ஆதிக்கத்திலிருந்து நகரத்தை விடுவிக்க வேண்டும் என விரும்பும் பேட், விடுமுறைதின கொலைஞன் ஹாலிடே யார் என்பதையும் அறிய தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்….
கார்மைன் பால்கனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியின் திருமணத்தில் ஆரம்பமாகிறது Jeph Loeb ன் கதையான The Long Halloween. அங்கிருந்து நகரும் கதை முடிவை எட்ட பதின்மூன்று அத்தியாங்களை தனதாக்கி கொண்டிருக்கிறது. ஜெப் லீப்பின் கதை பேட்மேன் கொத்தம் நகரில் இயங்க ஆரம்பித்ததின் ஆரம்ப காலங்களில் கூறப்படுகிறது. மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனை எப்படியாவது சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என பேட்மேன், ஹார்வி டென்ட், ஜிம் ஹோர்டான் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். கேட் வுமனும் இதில் கார்மைனிற்கு எதிராக பேட்மேனிற்கு உதவ முன்வருகிறாள்.
கார்மைன் பால்கான் அசைக்க முடியாத குற்றத்தலைவனாக இருக்கிறான். அவன் இடத்திற்கு போட்டியாக மரோனி எனும் இன்னொரு தலைவன். இவர்களிற்கிடையில் இருக்கும் போட்டியும், நட்பும் சந்தர்ப்பங்களை பொறுத்து இடம் மாறிக் கொண்டே இருக்கும். கதையில் இந்த இடம் மாறலை லீப் சிறப்பாக பயன்படுத்தி இருப்பார். எதிரி நண்பனாவதும், நண்பன் குழிபறிப்பதும் என திருப்பங்களின் உருவாக்கத்திற்கு இந்த இரு மாஃபியா தலைவர்களிற்கும் இடையிலான உறவும் பயன்படுகிறது. அதே போல நீதியின் காவலர்களான பேட், ஹார்வி, ஹோர்டான் ஆகியோரிற்கு இடையிலான உறவும் கதையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும். பேட் தான் நம்பிக்கை வைக்கும் இரு மனிதர்களாகவே ஹோர்டானையும், ஹார்வியைம் சித்தரிக்கிறார். இவர்களிற்கிடையே உள்ள நம்பிக்கையில் விரிசல் தன் ரேகைகளை பதிக்கும்போது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையின் உறுதி கொள்ளும் கோலங்களையும் கதாசிரியர் கதையில் வெளிக் கொணர தவறவில்லை.
ஹோர்டான், ஹார்வி இருவருமே தம் பணிக்காக தம் குடும்ப வாழ்க்கையை பெரிதும் இழப்பவர்களாக கதையில் காட்டப்பட்டு இருப்பார்கள். பேட்மேன் அல்லது ப்ரூஸ் வெய்ன் தனிமையிலும், கடந்தகால நினைவுகளிலும் மூழ்கி ஏங்குவதாக கதை சித்தரிக்கிறது. முன்னைய இருவரினதும் மனைவிகள் எவ்வளவு பொறுமை கொண்டவர்கள் என்பதை கதை பெரிதுபடுத்தாமல் அழுத்தமாக விதைக்கிறது. இல்லறத் துணைவர்களின் பணிச்சுமை அவர்களை ஓயாது அழுத்தும் இயந்திரமாக இயங்கி கொண்டிருக்க, வீடு திரும்பும் வேளைகளில் தம் குடும்ப கடமைகள் குறித்த குற்றவுணர்வு ஒரு கையாலாகா தீயாக அவர்களில் முகிழ, அதைக் கிள்ளி வீசி எறிந்து தம் துணைகளை பெரிதும் அணைத்துக் கொள்ளும் துணைவிகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். தம் துணைவர்கள் தம்முடன் வாழ வேண்டிய காலத்தை அவர்கள் பணி பறித்துக் கொள்கிறதே எனும் வேதனையை அவர்கள் முகங்களில் குடியேறி இருக்கும் அயர்ச்சியும், அவர்கள் உதிர்க்கும் அழுத்தம் கலந்த சொற்களும் தெளிவாக முன்னிறுத்துகிறது. ஏன் அவர்கள் இந்த கொத்தம் நகரை விட்டு சென்று விடக்கூடாது எனும் கேள்வியையும் அது கதையில் பிறப்பிகிறது. ஏன் எனும் கேள்விக்கு பதிலை பேட்மேன் வழியாகவே கதை அளிக்கிறது. அனைவரும் நீதிக்கு தரும் விலை என ஒன்று இருக்கிறது. இவர்கள் அனைவரும், பேட் உட்பட நீதிக்கும் சுதந்திரத்திற்கும் வழங்கும் விலை கொத்தம் நகரில் வாழ்ந்திருப்பதுதான்.
கதையின் பிரதான பாத்திரங்களிற்கும் அவர்களின் தாய், தந்தையர்களிற்கும் இடையிலான உறவையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை. அந்த உறவுகளே இன்று அப்பாத்திரங்களின் வாழ்நிலைக்கு காரணமாக அமைந்தது என்பதை வாசிப்பினூடு ஒருவர் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பேட்மேனின் பெற்றோரின் மரணம் அவரை ஒரு நீதிக்காவலானக நிறுத்தியது எனும் அதே வேளையில் மரோனியின் தந்தையால் மரோனி வன்முறையினதும், அதிகார ஆதிக்கத்தினதும் உச்ச எல்லைகளை கையகப்படுத்த நோக்கி நகர்த்தப்படும் ஆடுகாயாகவே இருக்கிறான். தம் புத்திரர்களின் கொலைகளிற்கு பின்னாக கார்மைனும், கார்லாவும் எடுக்கும் அவதாரம் வன்முறையின் பாசக்கோலமே. இவ்வகையில் பேட்மேனும், ஹார்வியும் தமக்கென பெற்றோர் இல்லாத நிலையில் தம்முள் வாடும் நிலையை பக்கங்கள் சிறிதேனும் விபரித்தே செல்கின்றன. ஒவ்வொரு தனயனிற்காகவும் பெற்றோர் சிந்தும் கண்ணீரிலும் பெற்றோரிற்காக தனயர் சிந்தும் கண்ணீரிலும்தான் கல்லறை வளர் புற்களின் பசுமைநுனி பனித்துளிகள் உயிர்ப்பாக இருக்கின்றதா? சிந்த வைக்கப்படும் குருதியிலும், சிந்தும் குருதியிலும் பாசத்தின் வண்ணத்தை காண்பவர்கள் மனிதர்கள் இல்லையா? நீதியும், குற்றமும் மனிதர்கள்தானே.
ஒவ்வொரு மாதமும் விடுமுறை தினமன்று கொலைகளை செய்யும் குற்றவாளி மிக புத்திசாலித்தனமாக தன் கொலைகளை ஆற்றுவான். குற்ற மனதானது நீதிக்கு விடும் அபாரமான சவாலாக இதை இங்கு எடுத்துக் கொள்ளலாம். புதினங்களை தவிர்த்து உலகில் எத்தனை கொலைகளின் உண்மையான ஆற்றுனர்களிற்கு நீதி வழி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதி ஒரு நகைச்சுவை நாடகம் என்பதை புரியாத மனங்கள் அல்லவே நாங்கள். புதினங்களிலாவது நீதியை உணரந்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். பிரான்சில் தற்போது மார்சைய், மற்றும் கோர்ஸ் எனும் இருபகுதிகளில் இடம்பெற்று வரும் தொடர் குற்ற உச்சங்களும் அதை தடுக்க முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டு வேடிக்கை பொருளாகிப் போன பிரான்ஸ் நீதி, மற்றும் காவல் துறைகளும் இதற்கு மிக சிறப்பான ஒரு உதாரணம் ஆகும். நீதி வகுத்துள்ள வழிகளில் குற்றத்தை வெல்வது என்பதும் வேடிக்கையான ஒரு சவால் அல்லவா? ஆனால் இங்கு பேட்மேன் கூட்டணி நீதி வகுத்த வழிகளிலேயே பெரிதும் செயற்பட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு தரும் விலை அதிகமானது. ஒரு மனிதன் இரு ஆளுமைகளாக பிளவுபட்டுப் போகும் பரிதாபமான முடிவை, பேட்மேன் கதையில் உறுதியாக தன் மனதின் வேதனையாக நிலை நிறுத்துவார்.
விடுமுறைதின கொலைஞனாகிய ஹாலிடே முதல் ஆற்றும் கொலை கார்மைனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியினுடையது. கொலை ஸ்தலத்தில் சில பொருட்களை விட்டு செல்வதன் மூலம் தான் ஒரு தொடர் கொலைஞன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வான் ஹாலிடே. கார்மைனிற்கு நெருக்கமானவர்களை ஹாலிடே கொல்வதன் வழி அவன் ஒரு வகையில் அந்த மாஃபியா தலைவனை பலவீனமாக்குகிறான். கார்மைனும் ஹாலிடே யார் என்பதை அறிய விளைகிறான். இங்கு குற்றங்கள் வழி குற்றத்திற்கு முடிவு காணும் செயற்பாட்டை வாசகர் உணரலாம். ஆனால் நீதியில் இதற்கு இடமில்லை எனும் வகையில் பேட்மேனும் அவர் சகாக்களும் சுழல்புதிரில் சிக்கி திணற வேண்டியே இருக்கிறது. பேட்மேன் சுழல்புதிரில் மட்டுமல்ல கேட்வுமன், பாய்சன் ஐவி ஆகிய பெண்களிடமும் மாட்டவே செய்கிறார். இருவருமே பேட்மேனை தம் கவர்ச்சிக்குள் இட்டு வர விரும்புவதை கதையில் காணலாம். இதுவே சில சமயங்களில் அவரின் மீட்சியாகவும் கதையில் செயற்படுகிறது.
கார்மைன் மட்டுமல்ல நீதியின் காவலர்களும் ஹாலிடே யார் என்பதை அறிய ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு பேட்மேன் ஆர்க்காம் காப்பகத்திலுள்ள காலண்டர் மேனிடம் சில தகவல்களை வேண்டுவார். ஆக குற்றத்தின் நகர்பாதையை குற்றமூளை வழியே குறுக்கு வழியால் சென்று கண்டடையவே பேட்மேன் உட்பட அனைவரும் விரும்புகிறார்கள். கார்மைன், ரிட்லரின் திறமையை இதற்காக பயன்படுத்திக் கொள்வான். ஆக குற்றம், நீதி என இரு எதிர்புள்ளிகளும் போட்டியிட்டு தேடும் ஒரு மர்மமாகவே ஹாலிடே கதையில் இருக்கிறான். குற்றமும், நீதியும் தேடி அறிய முடியா புதிராக அவன் கதையில் உருக்கொள்கிறான். இந்த இரு எதிர்புள்ளிகளினதும் எதிர்புள்ளியாக அவன் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படியானால் நீதிக்கும், குற்றத்திற்கும் எதிரான அப்புள்ளிக்கு நீதியில் வழங்கப்படக்கூடிய பெயர் என்ன?! அவன் குறித்த கணிப்புக்கள் அடையாளங்கள் எல்லாம் ஒருவனைக் காட்டி நிற்பதற்கு பதிலாக பல சாத்தியங்களை முன்னிறுத்துகின்றன. இந்த சாத்தியங்கள் உருவாக்கும் சந்தேகங்கள் கதையின் புதிர்தன்மையை அதிகரிக்கின்றன. கதையின் நீட்சியை ஒரு கட்டத்தில் இழுவை என வாசகன் தீர்மானிக்கும் நேரத்தில் அவன் தீர்மானத்தை அவை விலக செய்கின்றன. வாசகனும் துப்பறிவாளனே என்பது குற்றப்புனைவுகளின் இன்னுமொரு பக்கம். வாசிப்பினூடு வாசகனும் குற்றவாளியை தேடுவான், நாயகர்களிற்கு முன்பாக அதை கண்டடைய முயற்சிப்பான், சில சமயங்களில் வெற்றியும் காண்பான். அது இந்தப் படைப்பிலும் நிகழும் ஆனால் அதற்கும் ஒரு பரிகாரத்தை ஜெப் லீப் வைத்திருக்கிறார். அதுவே இக்கதையை சுவாரஸ்யமான ஒன்றாக ஆக்குகிறது. குற்றவாளி இவர்தான் என யாவும் சுட்டிக் காட்டினாலும் வாசகன் மனதில் ஒரு முனையில் முளைத்து நிற்கும் ஒரு சந்தேகம்தான் இக்கதையை பேட்மேன் கதைகளில் தனித்து நிற்க வைக்க முயல்கிறது.
தனித்து நிற்க வேண்டும் என்பதில் உச்ச ஆர்வம் கொண்ட ஜோக்கர், ஹாலிடே யார் என அறிவதற்காக ஆடும் ஆட்டம் ஜோக்கர் பாத்திரத்தினை இரு அத்தியாயங்களில் உறுதியாக நீரூபிக்க முயல்கிறது எனலாம். எந்த ஆணும் தன் கவர்ச்சியில் இருந்து தப்ப முடியாது என்பதை பாய்சன் ஐவியும் காட்டிச் செல்கிறாள். கேட் வுமன் செயல்களில் உள்ள மர்மம் கதையின் ஓட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. கொத்தம் நகர காவல்துறையின் ஊழலிற்கு மனிதர்கள் தரும் விலையின் வலியும் கதையின் நெடுகே காட்டப்படுகிறது. இதுவே நீதியின் முகத்தையும் பதம் பார்க்கும் ஒரு காரணியாக இறுதியில் அமைந்து விடுகிறது. பேட்மேனின் பிரதான எதிர்நாயகர்களை சுவையான வகையில் கதையின் திருப்பங்களிற்காக ஜெப் லீப் பயன்படுத்தி இருப்பார். ஹார்வி டெண்டின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அவரால் சொல்லப்பட்டு இருக்கிறது எனலாம். கதையின் இறுதிப் பக்கம்வரை விசுவாசமாக வரும் ஒரு வாசகனே ஹார்வியின் வாழ்க்கையின் ஆழ்சோக நிழல்களின் வேதனையை உணர்ந்து கொள்ளமுடியும். நாணயங்களின் பக்கங்கள் தீர்மானிப்பதை முடிவாக எடுக்கும் ஒருவனின் வாழ்க்கையின் நாணயமான பக்கத்தின் அர்த்தம் எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தன்னுள்ளே இறக்கி கொள்ள முடியும்.
மனித உறவுகள், நீதி, குற்றம், தன்னிலை, தீர்ப்பு என்பவற்றை கொத்தம் நகர வாசிகளைக் கொண்டு அருமையாக களப்படுத்தி பார்வையாக முன்வைத்து இருக்கும் இக்கதையின் இரண்டாவது உயிர் இதன் சித்திரக் கலைஞர் Tim Sale. கதையின் இருள்மையை உயிர்க்க வைப்பவர் இவரே. அத்தியாயத்திற்கு அத்தியாயம் தன் திறமையை அட்டைப்படம் முதல், இறுதிப்பக்கம்வரை அவர் பல இடங்களில் நிரூபித்துக் கொண்டே இருப்பார். அவர் சித்திரங்களிற்காகவேனும் இதை நீங்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்திடலாம் . குற்றவாளி என நீங்கள் கருதும் ஒருவன் உங்கள் மனதில் விதைக்கும் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி உங்கள் கணிப்புக்களையும், முடிவுகளையும் மறுபடியும் விசாரணை செய்ய தூண்டும். ஹாலிடே யார் என்பதும் உங்கள் அகவிசாரணையிலேயே இருக்கிறது. பேட்மேன் படைப்புக்களில் நான் விரும்பும் ஆழத்தை இக்கதை எட்டாவிடிலும் இது பேட்மேன் ரசிகர்கள் தவிர்க்க கூடாத ஒரு படைப்பு என்பேன்.