பிரெஞ்சு தொலைக்காட்சியில் பணிபுரியும் மரி, சுனாமி அனர்த்தம் ஒன்றில் அகப்பட்டு இறப்பை கண்டு மீள்கிறாள். இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் சிறுவனான மார்க்கஸ் தன் அன்பிற்குரிய ஒரு உயிரை இழந்து அதன் துயரிலிருந்து மீளமுடியாது வாடுகிறான். அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜிற்கு இறந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அபூர்வ சக்தி வாய்த்திருக்கிறது…..
வருடத்திற்கு ஒரு திரைப்படம் எனும் வகையில் வேகமாக இயங்கி கொண்டிருக்கும் இயக்குனர் க்ளிண்டிஸ்ட்வூட்டின் சமீபத்திய திரைப்படமான Hereafter மரணத்தின் பின்பான வாழ்வுகள் குறித்து நீண்டு நிதானமாக பேசுகிறது. மரணமடைந்தவர்களிற்கு மரணத்தின் பின்பாக காத்திருக்கக்ககூடிய ஒரு வாழ்வு, மரணத்தால் தம் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் வாழ்வு, மரணமடைந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களின் வாழ்வு, மரணத்தை சந்திந்து மீண்டவர்களின் வாழ்வு என திரைப்படத்தின் மூன்று பிரதான பாத்திரங்கள் வழி மரணம் குறித்த, அதற்கு பின்பாக உள்ள வாழ்க்கைகள் குறித்த ஒரு பார்வையை தனக்கேயுரிய பாணியில் முன்வைத்திருக்கிறார் இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வூட். படத்திற்கு இசையையும் க்ளிண்ட்டே வழங்கியிருக்கிறார்.
சுனாமியில் அகப்பட்டு, ஒரு கணம் தன்னுயிரை இழந்து மீளும் மரி, அக்கண நேரத்தில் தான் கொண்ட அனுபவம் காரணமாக இறந்தவர்கள் வாழும் உலகம் குறித்த கேள்விகளை எழுப்ப ஆரம்பிக்கிறாள். இறந்தவர்களின் உலகம் என்பது குறித்து நிலவும் அசட்டைத்தனத்தை எதிர்த்து தன் அனுபவங்களையும், இறந்தவர்கள் உலகம் குறித்து இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகளையும் கொண்டு தன் கருத்துக்களை முன்வைக்கும் அவள், தன் புகழையையும், மதிப்பையும் தொலைக்க ஆரம்பிக்கிறாள். அவள் நம்பியிருந்த உறவும், நட்பும் அவளை இலகுவாக கைகழுவிவிடுகின்றன. ஆனால் மரணத்தின் பின்பான வாழ்வு குறித்த அவள் எண்ணங்களை அவள் விட்டுத் தருவதாக இல்லை. மரி தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வழி இறப்பின் பின்பாக இருக்க கூடிய இறந்த ஆன்மாக்களின் உலகு குறித்த பெரும்பான்மையானவர்களின் கருத்தும் அதற்கு எதிரான போராட்டங்களும் சித்தரிக்கப்படுகின்றன. மரியாக பாத்திரமேற்றிருக்கும் நடிகை Cécile de France இறந்தவர் போலவே நடிப்பை வழங்கியிருக்கிறார். மிகவும் அனுபவம் கொண்ட க்ளிண்ட் எவ்வாறு இந்த நடிகையின் திறமையை ஏற்றுக்கொண்டார் என்பது வியப்படைய வைக்கும் ஒன்றாகும்.
தன் அன்பிற்குரிய உறவை இழந்த சிறுவன் மார்க்கஸ், மரணத்தின் பின்பான வாழ்க்கை குறித்து தேடல்களை நிகழ்த்துகிறான். தான் இழந்த அன்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஓயாது விழைகிறான். இதற்காக இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியவர்களை அவன் நாடிச் செல்கிறான். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவன் தாயிடமிருந்து விலக்கப்பட்டு, பிறிதொரு குடும்பத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்படும் மார்க்கஸின் வாழ்க்கை அவன் இழந்த உறவுடன், அதன் இறப்பின் பின்னும் இணைந்திருக்கவே விரும்புகிறது. சிறுவன் மார்க்கஸ் பாத்திரம் வழி உறவுகளின் மதிப்பையும், அதன் இழப்பு வழங்கும் வலியையும், அதனால் முடக்கப்படும் வாழ்வையும் இயக்குனர் திரைப்படுத்தினார் எனில் அதன் இன்னொரு புறமாக இறந்தவர்களுடன் தொடர்பு கொள்கிறேன் என்றுகூறி அப்பாவிகளை ஏமாற்றி காசு பார்க்கும் கூட்டத்தை பற்றியும் அவர் திரைப்படுத்தியிருக்கிறார். சிறுவன் மார்க்கஸாக வரும் Frankie Mclaren தனது வலிநிறைந்த பார்வை ஒன்றினாலேயே மனங்களை நெகிழ வைத்து விடுகிறார்.
இறந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஜார்ஜ்ஜின் வாழ்க்கையோ சிறப்பானதாக இல்லை. சாதாரண வாழ்க்கை ஒன்றை வாழவோ, நிலையான உறவு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவோ முடியாத நிலை அவனிற்கு. இதனால் அவன் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விடுகிறான். தனக்கிருக்கும் சக்தி, ஒரு சாபம் என்று கருதியவாறே அவன் தன் வாழ்க்கையை நகர்த்துகிறான். ஜார்ஜ் பாத்திரம் விசேட சக்தி ஒன்றிற்கு ஒரு மனிதன் சில வேளைகளில் வழங்ககூடிய விலை குறித்து பேசுகிறது. நல்லிதயம் கொண்ட மீடியம் ஒருவனின் வாழ்க்கை குறித்த ஒரு மெலிதான பார்வையையும் முன்னிறுத்துகிறது. இங்கு ஜார்ஜ் ஒரு கட்டத்தின்பின்பாக பணம் தந்தாலும்கூட இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள மறுப்பவனாக, அவ்வாறு தொடர்பு கொள்ளும் ஒரு சமயத்தில் அவன் வெளிப்படுத்தும் உண்மைகள் அவன் உருவாக்கி கொள்ளவிருந்த ஒரு உறவை முறித்துவிட அதனை மெளனமான வலியுடன் தாங்கிக் கொள்பவனாக, மிகவும் மென்மையானவனாக சித்தரிக்கப்படுகிறான். உள்ளே இருக்கும் வலியுடன் அமைதியான வாழ்வை தேடும் இந்தப் பாத்திரத்தை நடிகர் மேட் டாமொன் சிறப்பாக செய்திருக்கிறார், ஆனால் இது அவரின் சிறந்த பாத்திரம் என்று கூறவியலாது.
மூன்று தளங்களில் நகரும் கதையின் பிரதான பாத்திரங்களை திரைப்படத்தின் உச்சக்கட்டத்தில் ஒரு இடத்திற்கு இட்டுவருகிறது திரைக்கதை. இறப்பின் பின்பாக உள்ள வாழ்வு குறித்த மனிதர்களின் நம்பிக்கைகளும், அனுபவங்களும் எவ்வாறாக இருப்பினும் இவ்வுலக வாழ்க்கையானது அதன் சுக துக்கங்களுடன் அனுபவித்து வாழப்படவேண்டியது முக்கியமானதே என்பதை உணர்த்தி படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர் க்ளிண்ட். ஒவ்வொரு தடவையும் தன் படைப்பால் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் க்ளிண்ட் இம்முறை கூடவே ஏமாற்றத்தையும் ஆச்சர்யமாக தந்து விடுகிறார்.
மெலானி எனும் தன் தோழிக்காக ஜார்ஜ் இறந்தவர்களுடன் உரையாடி அதன் பின் அவன் உறவு உடையும் தருணம், சிறுவன் மார்க்கஸிற்காக ஜார்ஜ் இறந்த ஒரு உயிரை தொடர்பு கொள்ளும் தருணம் போன்ற மனதை நெகிழவைக்கும் காட்சிகளில் க்ளிண்டின் தேர்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது. தான் இழந்துபோன அன்புறவுடன் சிறுவன் மார்க்கஸ் உரையாடும் அந்தக் கட்டம் திரைப்படத்திலேயே மிகவும் கனமான, மென்மையான உணர்வுகளைக் கலங்க வைக்கும் கட்டமாகும். ஆனாலும் இரு மணிநேரம் நீண்டு செல்லும் படத்தில் இவ்வகையான நெகிழ்வான காட்சிகளின் துணையிருந்தும் அதனுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விடுகிறது. வேகமற்ற மிகவும் நிதானமான காட்சி நகர்வு மிகவும் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இறந்தவர்கள் உலகம் என்பது மிகவும் அன்னியமான ஒன்றாக உணரப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உச்சக்கட்டக் காட்சி பலமான ஏமாற்றத்தையே வழங்குகிறது. க்ளிண்ட் மட்டும் படத்தை இயக்கியிராவிடில் பாதி படத்திலேயே பல இருக்கைகளாவது காலியாகி இருக்கும். க்ளிண்டின் படமொன்றில் கிடைக்கும் உபரியான ஒரு மனத்திருப்தி இத்திரைப்படத்தில் கிடைக்காமல் போய்விடுகிறது என்பது வேதனையானதே. மரணம் எனும் விடயம் கையாள இலகுவான ஒன்றல்ல, தன் தேர்ந்த திறமையால் க்ளிண்ட் வழங்கியிருக்கும் இப்படைப்புக்கும் உயிர் குறைவாகவே இருக்கிறது. [*]
ட்ரெயிலர்