
ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றை தன்னகத்தே பாரிய பிரச்சினைகளாகக் கொண்டிருந்தது.
பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர்கள், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மண்டேலாவின் ஆட்சியில் தாங்கள் யாவரும் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்ற அச்சமும், மண்டேலாவின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கறுப்பின மக்களின் மனங்களிலும், தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையால் உருவாகிய வெள்ளையர்கள் மீதான கோபம் இன்னமும் தணியாத சூட்டுடன் இருக்கிறது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற மண்டேலா, தனக்கு முன்பாக சாவாலாக குவிந்து கிடக்கும் பிரச்சினைகளை கண்டு அஞ்சிடாது அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார். அவர் கட்டியெழுப்ப விரும்புவது பல்வேறு இன மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சத்துடனும் வாழக்கூடிய ஒரு வானவில் தேசம்.
இதற்காக மண்டேலா, தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தவரின் நம்பிக்கையை தான் வென்றெடுக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறார். தனது அலுவலகத்தில் வெள்ளையர்களை தொடர்ந்து பணியில் பேணுகிறார். கறுப்பினத்தவர்களை மட்டுமே கொண்டிருக்கும் தன் மெய்காவலர் குழுவில் வெள்ளையர்களையும் அங்கம் வகிக்கச் செய்கிறார். மக்களுடன் நெருங்கியிருக்க இயலுமானவரை முயல்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டபின் முதன்முதலாக ஒரு ரக்பி மேட்ச்சிற்கு செல்கிறார் மண்டேலா. அந்த மேட்சில் இங்கிலாந்து ரக்பி அணியும், தென்னாபிரிக்காவின் ரக்பி அணியும் மோதவிருக்கின்றன.
தென்னாபிரிக்காவின் ரக்பி அணியானது Springboks எனவும் அதன் ஆதரவளார்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. [ஸ்பிரிங்பொக் என்பது தென்னாபிரிக்காவின் ஒரு வகை மானினத்தைக் குறிக்கிறது.] கறுப்பின மக்களிற்கு அந்த அணியானது ஆண்டாண்டு காலமாக அவர்கள் அனுபவித்த நிறவெறியின் அடையாளமாகவே தெரிகிறது. இதனால் தென்னாபிரிக்க ரக்பி அணியை அவர்கள் வெறுக்கிறார்கள். ரக்பி அணியிலும் ஒரே ஒரு கறுப்பினத்தவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்.
இங்கிலாந்திற்கும், தென்னாபிரிக்காவிற்குமிடையிலான மேட்ச் ஆரம்பமாகிறது. தென்னாபிரிக்கா அணியானது மிகவும் வலுவிழந்த அணியாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி இலகுவாக புள்ளிகளை ஈட்டிக் கொள்கிறது.
மைதானத்தில் இருக்கும் கறுப்பர்கள் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டுமே தென்னாபிரிக்கா அணிக்காக உற்சாக குரல் எழுப்புவர்களாக இருக்கிறார்கள். ஆட்டத்தின் முடிவில் பரிதாபமான ஒரு தோல்வியைத் தழுவுகிறது தென்னாபிரிக்கா அணி.
ஒரு நாட்டின் மக்கள் விளையாட்டு மைதானத்தில் இரு வேறு நாடுகளாகப் பிரிந்து கிடப்பதை அவதானிக்கும் மண்டேலாவின் உள்ளத்தில் ரக்பி விளையாட்டை வைத்தே இரு இனங்களிற்கு இடையிலும் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. உடைந்து போய்க் கிடக்கும் ரக்பி அணிக்கு புத்துயிர்ப்பு அளிப்பதற்கு தன் மனதில் தீர்மானம் கொள்கிறார் அவர்.
நடந்து முடிந்த மேட்சில் தென்னாபிரிக்க அணி சந்தித்த தோல்வியை அடுத்து அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் வரவிருக்கும் உலகக் கோப்பை ஆட்டத்திற்கு தென்னாபிரிக்கா அணியானது அதன் கனவில் கூட தெரிவாகாது எனக் கணிக்கிறார்கள் வல்லுனர்கள்.
தென்னாபிரிக்க ரக்பி அணியின் நிர்வாகம், மற்றும் அதன் கேப்டன் பிரான்சுவாவைக் குறி வைத்து விமர்சனங்கள் பாய்கின்றன. இந்நிலையில் வெள்ளை இனத்தவர்களின் நிறவெறியின் அடையாளமாக திகழும் தென்னாபிரிக்க ரக்பி அணியைக் கலைத்து விடவேண்டுமென தீர்மானம் கொண்டு வருகிறது கறுப்பர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய விளையாட்டுக் கவுன்சில்.
தேசிய விளையாட்டுக் கவுன்சிலின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் மண்டேலா அதற்கு குறுக்கே நிற்கிறார். தனது முப்பது வருட சிறை வாழ்க்கையில் வெள்ளையர்களையும், அவர்கள் நூல்களையும் தான் நன்கு கற்றறிந்ததை தேசிய விளையாட்டுக் கவுன்சில் அங்கத்தினர்களிடம் அவர் நயமாக எடுத்துக் கூறுகிறார்.
எதிரியை மன்னிப்பதன் மூலமே எங்கள் ஆன்மாக்களைச் சுதந்திரமாக்கமுடியும், இனங்களிற்கிடையில் வாழ்ந்துவரும் அச்சத்தை உடைக்க முடியும், வானவில் தேசத்தை பல இனங்ளாக சேர்ந்து உருவாக்க முடியும் என்றும் விளக்குகிறார். ஆனால் மண்டேலாவிற்கு அதிகம் நெருங்கியவர்கள் கூட ரக்பி விளையாட்டின் மூலம் தேச மக்களை ஒன்றிணைக்கமுடியும் என்ற மண்டேலாவின் ரகசியத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாது இருக்கிறார்கள்.
ஸ்பிரிங்பொக்ஸ் மீதான கடுமையான விமர்சனங்களின் பின் அந்த அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறார். பிரான்சுவா அணியின் தலைவனாக நீடிக்கிறான். தனது பரபரப்பான நேர அட்டவணைக்கு மத்தியிலும் ஸ்பிரிங்பொக்ஸை சிறப்பான அணியாக மாற்றிட விரும்பும் மண்டேலா, அணியின் காப்டன் பிரான்சுவாவை தன் அலுவலகத்தில் வரவேற்று அவனுடன் உரையாடுகிறார்.
தன் சிறை வாழ்க்கையில் தான் உடைந்து போய்விடாது தனக்கு ஊக்கம் தந்தது ஒரு கவிதை என்பதை பிரான்சுவாவிற்கு தெரிவிக்கும் மண்டேலா, வாழ்க்கையில் மகத்துவங்களை வெல்வதற்கு அவனும் எதிலிருந்தாவது ஊக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவனுடன் ஆதரவாக உரையாடுகிறார். மண்டேலா, தனது அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை தன்னிடம் மறைமுகமாகக் கேட்கிறார் என்பதை மெல்லப் புரிந்து கொள்கிறான் பிரான்சுவா.
தென்னாபிரிக்க அணியின் பயிற்சிகள் கடுமையாகின்றன. மண்டேலாவின் வேண்டுகோளிற்கிணங்க ரக்பி பற்றி அதிகம் அறிந்திராத, அலட்டிக் கொள்ளாத கறுப்பின மக்கள் வாழும் வறிய பகுதிகளிற்கு சென்று அங்குள்ள சிறுவர்களிற்கு ரக்பி விளையாட்டை அறிமுகம் செய்கிறது பிரான்சுவாவின் அணி. இது அணியினர்க்கு ஒரு புது அனுபவமாக அமைகிறது.
இவ்வகையான நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் ரக்பி அணி குறித்த நல்லெண்ணத்தை உருவாக்கும் அதே வேளையில் வெள்ளை இன மக்களின் பெருமையும், உயிருமான ரக்பி மீது மண்டேலா காட்டும் அக்கறை, அவர் மீது வெள்ளையர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை விலக்கி கொள்வதற்கும் உதவுகிறது.
தென்னாபிரிக்க மக்களின் ஆதரவும், கடுமையான பயிற்சிகளும், ஊக்கமான விளையாட்டும் தென்னாபிரிக்க அணியை உலக கிண்ணப் போட்டியின் கால்சுற்றுக்கு எடுத்து வருகின்றன. கால்சுற்றுப் போட்டியில் அவர்கள் அவுஸ்திரேலிய அணியுடன் மோதியாக வேண்டும்.
அவுஸ்திரேலிய அணியுடன் மோத கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் தென்னாபிரிக்க அணியை தானே நேரில் வந்து சந்திக்கும் மண்டேலா, அவர்களுடன் அன்பாக உரையாடி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். பிரான்சுவாவுடன் தனிமையில் உரையாடும் மண்டேலா விடைபெறுவதற்கு முன்பாக அவனிடம் ஒரு கடித உறையைத் தந்து செல்கிறார். அன்றிரவு தனது அறையில் அந்த உறையைப் பிரிக்கும் பிரான்சுவா, Invictus எனும் கவிதையை அதனுள் காண்கிறான். அந்தக் கவிதை தனக்காக மண்டேலாவின் கைகளால் பிரதி செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் அவன் அறிந்து கொள்கிறான்.[ Invictus கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 1875ல் எழுதப்பட்டது]
அடுத்த நாள் இடம்பெறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை அட்டகாசமாகத் தோற்கடிக்கிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தென்னாபிரிக்கா தேசமே களிப்பாகிறது. தாம் கண்ட வெற்றியைக் கூட முழுமையாகக் கொண்டாடாது கடுமையான பயிற்சிகளில் இறங்குகிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தெருவில் ஓடிச் செல்லும் அவர்களைக் காணும் மக்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களைப் பாராட்டுகிறார்கள்.
கடுமையான பயிற்சிகளின் மத்தியில் கிடைக்கும் ஒரு ஓய்வு நாளில், மண்டேலா தன் தண்டனையைக் கழித்த Robben Island சிறையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு தென்னாபிரிக்கா அணியினர்க்கும், அவர்கள் துணைவிகளிற்கும் கிடைக்கிறது. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்கும் பிரான்சுவா, மண்டேலா அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிடுகிறான்.
மிகக் குறுகலான சிறு அறை. ஒரு சிறிய ஜன்னல், ஒரு மேசை, ஒரு கதிரை, தரையில் படுத்துக் கொள்ள ஒரு விரிப்பு. அறையின் மத்தியில் நின்று தன் கைகளை விரிக்கிறான் பிரான்சுவா. அவன் இரு கைகளின் விரல்களும் அந்த சிறு அறையின் ஒடுக்கு முறை எல்லைகளை தொடுவதற்கான இடைவெளி அதிகம் இருக்கவில்லை.
பிரான்சுவாவின் காதுகளில் மண்டேலா சிறையில் படித்து ஊக்கம் பெற்ற Invictus கவிதையின் வரிகள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அவன் மனதில் சிறையில் கல்லுடைத்துக் கடூழியம் செய்யும் நெல்சனின் உருவம் தோன்றுகிறது. முப்பது வருடங்களாக ஒரு குறுகிய அறையில் தன்னை அடைத்துவைத்து ஒடுக்கிய மக்களை நேசத்துடன் அணைத்துக் கொள்ளும் ஒரு மாமனிதனை அவன் உணர்ந்து கொள்கிறான்.
தொடரும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை தோற்கடிக்கிறது தென்னாபிரிக்கா [ யார்தான் அவர்களை தோற்கடிக்க தவறினார்கள்!]. இறுதிப் போட்டியில் அவர்களுடன் மோதவிருப்பது வெல்லவே முடியாத அணியெனப் பெயர் எடுத்த நியூசிலாந்தின் All Blacks. தென்னாபிரிக்காவிற்கு தோல்வி நிச்சயம் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.
தென்னாபிரிக்க அணியானது, நியூசிலாந்தை எப்படிக் கவிழ்க்கலாம் என வியூகம் வகுக்க, ஓய்வில்லாத கடும் வேலையால் மயங்கி விழுந்து தன் வீட்டில் கட்டாய ஓய்விலிருக்கும் மண்டேலா, நியூசிலாந்து அணி கலந்து கொண்ட போட்டிகளில் அவர்களின் தீவிரமான விளையாட்டைப் பார்த்து சிறிது அச்சம் கொள்கிறார். அவர் எதிர்பார்த்திருப்பது வெறும் ஆட்டமல்ல, ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கப் போகும் ஆட்டமல்லவா அது.
இறுதி ஆட்டம் நிகழும் நாள் வருகிறது. மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே நாடு, ஒரே அணியென தென்னாபிரிக்காவின் கொடிகள் காற்றில் உற்சாகமாய் அசைகின்றன. தென்னாபிரிக்க வீரர்கள் அணியும் மேற்சட்டை அணிந்து மைதானத்திற்குள் நுழையும் மண்டேலா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மதுபான விடுதிகள், வீடுகள், கடைகள் என எங்கும் தொலைக்காட்சியின் முன்பாக எல்லா இன மக்களும் குழுமியிருக்கிறார்கள். மைதானத்தில் நீயுசிலாந்து வீரர்கள் தங்கள் எதிரிகளைப் பயமுறுத்தும் போர் நடனத்தை ஆடுகிறார்கள். நடுவர் விசிலை ஊதுகிறார். ஆட்டம் ஆரம்பமாகிறது…. அந்த ஆட்டத்தின் முடிவு விளைவித்த மந்திரக் கணங்களை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Jhon Carlin, என்பவர் எழுதிய Playing The Enemy எனும் நாவலைத் தழுவி Invictus எனும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் மதிப்பிற்குரிய ஹாலிவூட் பெருசு Clint Eastwood ஆவார்.
பிளவு பட்டுக்கிடந்த ஒரு நாட்டின் மக்களை, ஒரு விளையாட்டு அணியின் வெற்றி மூலமாக ஒன்றிணைப்பதில் வெற்றி கண்ட மண்டேலாவின் கதையை உணர்ச்சி ததும்பக் கூறுகிறது திரைப்படம். பொருளாதாரப் பின்னடைவில் இருந்த தென்னாபிரிக்காவை முன்னேற்றுவதற்கு அவர் மேற்கொண்ட ஓய்வற்ற முயற்சிகளையும், வெள்ளை இன மக்களை தன் மேல் நம்பிக்கை கொள்ள வைக்க அவர் எடுத்த நடவடிக்கைகளையும் திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது.
உறக்கம் விழித்து எழுந்து, கலைந்திருக்கும் தன் படுக்கையை தானே ஒழுங்குபடுத்தும் ஆரம்பக் காட்சிகளிலேயே மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறார் ஜனாதிபதி மண்டேலா.
அவரது ஒவ்வொரு செயல்களும் வியக்க வைக்கின்றன. ஆபிரிக்காவின் முன்னேற்றத்திற்காக அயராது ஓய்வின்றி உழைப்பதிலும், ஒரு சிறுவனைப் போல் தென்னாபிரிக்க ரக்பி அணியின் தகவல்களை அறிந்து கொள்ள விழைவதிலும், தன்னை நெருங்கியுள்ள மனிதர்களுடன் அவர் பழகும் கண்ணியமான விதத்திலும் இப்படி ஒரு மனிதர் இருப்பது சாத்தியமா என ஆச்சர்யப்படவைக்கிறது அப்பாத்திரம் .
வெள்ளையர்களை எதிரிகளாகக் கருதாது, அவர்களையும் நேசத்துடன் அணைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர் காட்டும் அக்கறை, எப்படி முப்பது வருட ஒடுக்குமுறையின் பின்னால் இவரால் இதை சாத்தியமாக்க முடிகிறது எனும் கேள்வியினை மனதில் ஓயாது எழுப்புகிறது.
திரைப்படத்தில் மண்டேலாவைப் போலவே காட்சிகளும் எளிமையாக இருக்கின்றன. இது பார்வையாளர்களை காட்சிகளுடன் இலகுவாக ஒன்றிவிடச் செய்கிறது. படத்தில் இடையிடையே பொழியும் பியானோ இசை, இனிமையான ஒரு சாரல்.
மண்டேலா பாத்திரத்தில் Morgan Freeman. தன் சிறப்பான, மென்மையான நடிப்பால் ரசிகர்களை இலகுவாகக் கவர்கிறார் ஃப்ரீமேன். பிரான்சுவா வேடத்தில் Matt Damon. திரைப்படத்தில் அவரின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம் அவரிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அடக்கமாக, அழகாக நடித்துச் செல்கிறார்.
மண்டேலாவின் இரு இன மெய்ப்பாதுகாவலர்கள் மத்தியில் ரக்பி மூலமாக துளிர்விடும் நட்பு இயல்பாக சொல்லப்படுகிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் கறுப்பின பணிப்பெண்ணிற்கும் சேர்த்து ரக்பி ஆட்டத்திற்கு டிக்கட் வாங்கி வரும் பிரான்சுவா, இறுதி ஆட்டத்தின்முடிவில் மண்டேலாவின் கறுப்பின மெய்ப்பாதுகாவலரை கட்டியணைத்து உற்சாக கூச்சல் போடும் வெள்ளையர் என மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம். மண்டேலாவின் தனிமை நிறைந்த வாழ்க்கையின் சோகமும், தென்னாபிரிக்காவே தன் குடும்பம் என்று அவர் கூறுவதும் மனதைக் கலங்கடிக்கின்றன.
இருப்பினும் பெருசு க்ளிண்ட், வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள் ஒன்றிணைவதை ஆழமாகக் காட்டவில்லை என்பது என் கருத்து. பிரான்சுவா குடும்பம் மூலமாக ஒரு வெள்ளை இன குடும்பத்தை அவர் முன்னிறுத்துகிறார். ரக்பி அணி வீரரொருவரின் குடும்பத்தை தவிர்த்து பிறிதொரு குடும்பத்தை அவர் காட்டியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போன்று ரக்பி அணியில் இடம்பெறும் சில வீரர்களின் இன வெறித் தன்மை எவ்வாறு மாற்றம் கொள்கிறது என்பதை அவர் விரிவாகக் காட்டவில்லை. எல்லாம் கலந்ததுதான் உலகம் என்று கூறுகிறாரோ பெருசு!!
நடிகராக க்ளிண்டை எனக்கு சிறு வயது முதலே பிடிக்கும். ஆனால் இயக்குனர் க்ளிண்டை இன்று எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் இயக்கும் படங்களில் மனித நேயம் என்பது உணர்வுபூர்வமாகவும், மென்னழகுடனும் வெளிப்படுகிறது என்று நான் உணர்கிறேன். Invictus திரைப்படம் மூலம் Clint Eastwood, ரசிகர்களின் மனங்களை இலகுவாக வென்று விடுகிறார். [***]
Invictus
Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.
ட்ரெயிலர்