டுபக் எனும் சிறுகிராமத்திற்கு தன் நண்பனும், சகாவுமான டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸை தேடி வருகிறார் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன். டுபக்கை வந்தடையும் ஹென்ரி, அங்கு மக்கள் பெரும் பீதியில் வாழ்ந்திருப்பதையும், சிறிது காலமாக கிராமத்தில் வினோதமான துக்க சம்பவங்கள் அரங்கேறுவதையும் அறிந்து கொள்கிறார். டுபக் கிராமத்திற்கு இந்த துரதிர்ஷ்டம் வரக் காரணமென டாக்டர் ராபர்ட் ஸ்டீபன்ஸை அடையாளம் காண்கிறார்கள் கிராமத்தவர்கள். கிராமத்திலிருந்து விலகி வாழும் தன் நண்பணான ராபர்ட்டை தேடிச் செல்லும் டாக்டர் ஹென்ரி ஃபெர்கஸன் அதன் பின்பாக எந்த தடயமுமேயில்லாது காணாமல் போய்விடுகிறார்......
இவ்வாறான ஒரு மதுவிடுதியிலேயே தாமஸ் ஃபெர்கஸன் காணாமல்போன தன் தந்தையை குறித்த விசாரணைகளை மேற்கொள்ள டெக்ஸிடம் கேட்டுக் கொள்கிறான். பீரை படு சுளுவாக உறிஞ்சியவாறே கேள்விகளை கேட்கும் டெக்ஸ், பின் தன் குழுவுடனும் தாமஸுடனும் டுபக் கிராமம் நோக்கி கிளம்புகிறார்.
ஏறக்குறைய ட்ராகுயூலா திரைப்படம் போல இருளில் அதன் பயங்கரத்தை அதிகரித்தபடி பாய்ந்தோடி வரும் ஒரு குதிரை வண்டிக் காட்சியுடன் ஆரம்பமாகிறது
TEX Special - 18 ன் கதையான
Ombres Dans La Nuit. பெருத்து பெய்யும் மழையுடன் குதிரை வண்டிக்குள் பயணிக்கும் நபர்களின் உரையாடலின் வழி கதையின் திகிலை வாசகர்கள் மனநிலத்தில் விதைக்க ஆரம்பிக்கிறார் டெக்ஸ் கதைகளின் பிரதான கதாசரியர்களில் ஒருவரான
Claudio Nizzi. நிஸ்ஸியின் கதைகளில் இன்னம் சிலவற்றை நாம்
வதனமோ சந்த்ர பிம்பமோ வரிசையில் காணும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
டெக்ஸின் கதைகளில் அமானுட மர்மங்கள் நிறைந்த கதைகள் என ஒரு வகை உண்டு. அவ்வகையான ஒரு கதையாக இதை வகைப்படுத்திடலாம். அறிவியலின் தேடல்கள் நல்ல நோக்கங்களை கொண்டவையாக இருந்தாலும் தேடல்கள் என்றும் வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. தேடல்களின் தோல்விகள் எவ்விதமாக மனித குலத்திற்கு எதிராகவும் அந்த தேடலிற்கு காரணமானவரிற்கு எதிராகவும் மாறிடக்கூடும் எனும் சிறு வரிதான் கதையின் மைய இழையாக ஓடுகிறது.
டுபக் கிராமத்திற்கு விசாரணைக்கு வரும் வழியிலேயே டெக்ஸ், நம்ப முடியாத விடயங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இங்கு டெக்ஸ் அமானுடம் குறித்த தன் நம்பிக்கைகளையும் ஐயங்களையும் தாமஸிடம் தெளிவாக்குகிறார். டெக்ஸ் தன் வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள் அப்படி. டுபக் கிராமத்தில் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் டெக்ஸிற்கு அதிக விபரங்கள் கிடைப்பதில்லை. டாக்டர் ராபர்ட் ஸ்டீவன்ஸ் வாழுமிடத்திற்கே சென்று விடுவது எனும் முடிவிற்கு வருகிறார் டெக்ஸ்...
வழமையான அமானுட மர்மக் கதைகள் போலவே காணாமல்போன ஒரு நபரை தேட தொடங்கும் கதையானது அதன் பின்பாக வினோதமான ஒரு சிருஷ்டியின் தடங்களை தேடுவதாகவே நகர்கிறது. அந்த சிருஷ்டிக்கு பின்பாக இருக்ககூடிய மர்மங்களை டெக்ஸ் அண்ட் கோ கதையின் இறுதிப்பகுதிவரை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடல்களின் எதிர்பாரா விளைவுகளை தம் லாபத்திற்காக பயன்படுத்த தயங்கிடாத தீய மனிதர்களின் தந்திரங்களையும், தம் இன மக்கள் எந்தக் காரணமுமின்றி கொடிய படைப்பு ஒன்றால் தாக்கப்படுவதை எதிர்த்து ஏதும் செய்யவியலாத பீமா இந்திய பூர்வகுடிகளையும், மனிதகுலத்தின் நன்மைக்காக ஆய்வுகளில் இறங்கி தோல்வியில் அடிவைக்கும் மனிதர்களையும், அம்மனிதர்களிற்கு விசுவாசமானவர்களையும், தோல்வியில் தோள் கொடுத்து நிற்கும் நட்பையும் டெக்ஸ் அண்ட் கோ கதையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
இருப்பினும் க்ளோடியோ நிஸ்ஸியின் கதை சொல்லலில் விறுவிறுப்பு இல்லை. மர்மத்தினை வாசக மனது அறியத்துடிக்கும் அந்த உயிர்ப்பின் மூச்சு இல்லை. மர்மங்களை மெலிதாக ஊகிக்க முடிவதும், பரபரப்பாக நகர்த்தியிருக்க வேண்டிய கதையை பூங்காவொன்றினூடாக நிகழும் மாலை உலா போல் சொல்லியிருப்பதும் இவ்வகையான கதைகளிற்கு ஏற்புடையதாகவே இல்லை. இருப்பினும் சித்திரங்கள் அசத்த வைக்கின்றன. ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதிக் காட்சிகள்வரை பிரம்மிக்க வைக்க முயன்றிருக்கிறார் ஓவியர்
Roberto De Angelis. அவரது திறமையை காணவேண்டுமெனில் இப்படைப்பை அதன் அசல் அளவில் படித்தாக வேண்டும். சினிமாஸ்கோப் காட்சிகள் போல் தீடிரென விரியும் காட்சிகளில் கண்கள் சில நொடிகள் ஊன்றி நின்றே நகர்கின்றன. அப்படியான சித்திரங்களை தன் அறிபுனைக் கதை சித்திர பாணியிலிருந்து விலகி பெருமேற்கின் நாயகன் டெக்ஸிற்கு வழங்கியிருக்கிறார் சித்திரக் கலைஞர் ராபர்ட்டோ டு ஏஞ்சலிஸ். அவரது சித்திரங்களிற்காகவேனும் ரசிக்கப்படக்கூடிய இக்கதை டெக்ஸ் கதைகளில் சுமாரிலும் சுமாரன ஒன்று என்பதே என் கருத்து. இந்த இரவின் நிழலில் பயம் இல்லை, திகில் இல்லை, சுறுசுறுப்பான விறுவிறுப்பு இல்லை, நெகிழ்ச்சியான தருணங்கள் இல்லை ஆனால் காட்சி விருந்து மட்டும் இருக்கிறது.