தன் பெற்றோர்களின் அகால மரணத்தின் பின்பாக சூவீடனின் கரையோரச் சிற்றூரான Fjallbacka எனும் தன் பிறந்த ஊரிற்கு திரும்பி வருகிறாள் எரிக்கா. பெற்றோர்களின் இழப்பு தந்த வேதனை ஆறாத நிலையில், பனிக்காலத்தின் கடும் குளிரினூடு சுயசரிதை நூல் ஒன்றை எழுத முயற்சித்து கொண்டிருக்கும் எரிக்காவை அவள் முன்னாள் தோழியான அலெக்ஸாண்ட்ராவின் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது......
ஸ்கண்டினேவிய குற்றப்புனை எழுத்துக்கள், அவை விபரிக்க வரும் குற்றங்களை சற்றுத் தாண்டிச் சென்று அக்குற்றங்கள் நிகழும் சமூகம், சூழல், காலநிலை, கதைமாந்தர்கள், அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள், உளவியல் என மேலும் பல விடயங்களையும் தம் கதைக்களத்தில் ஆழமாக வேர் ஓட விட்டிருக்கும் பண்பை கொண்டவைகளாகவே இருக்கின்றன. சூவீடனைச் சேர்ந்த கதாசிரியையான
Camilla Lackberg அவர்களின்
Ice Princess எனும் நாவலும் இப்பண்புகளை உள்ளடக்கிய ஒரு படைப்பாகவே இருக்கிறது. கதையின் முதல் மரணமானது அறிமுகமாகும் முன்பாகவே அம்மரணம் நிகழும் ஊர் குறித்த ஒரு சுருக்கமான பார்வையை தன் வரிகளில் கொணர்ந்துவிடுகிறது நாவல்.
|
மங்கலான சாம்பலங்கி அணிந்த வானம் எங்கே! |
சூவீடனின் மேற்கு கரையோர ஊரான Fjallbacka பராம்பரியமாக மீன் பிடித்தலை பிரதான தொழிலாக கொண்டிருந்த ஒரு ஊராகவே இருந்து வந்திருக்கிறது. குளிர் அந்த ஊருடன் இணைந்த ஒரு அம்சம். வானம் மங்கலான சாம்பல் அங்கியை அணிந்து நிற்கும் நாட்கள் அங்கு ஏராளம். இங்கு
Eilert Berg எனும் ஓய்வு பெற்ற மீனவன் வழியாக வசதியற்ற மீனவர்களின் வாழ்க்கையின் இன்றைய நிலையை கோடிட்டுக் காட்டுகிறார் கதாசிரியை. காலம் காலமாக கடினமாக உழைத்தாலும்கூட அவர்களிற்கு கிடைக்கும் ஓய்வூதியமானது ஜீவனம் நடத்த போதுமான ஒன்றாக இருப்பதில்லை எனும் சோகத்தை சுட்டிக் காட்டியபடியே, மீனவத் தொழிலை மட்டும் தனியே செய்வதன் மூலம் இன்றைய காலத்தில் வாழ்க்கையை கொண்டு செல்ல இயலாத நிலையில் வருந்தும் ஊரவர்களின் உள்மனத்தையும் கதை தன் வரிகளில் மெலிதாக விபரிக்கிறது. படிப்படியாக மீனவத் தொழில் ஒடுங்கி, மீனவர்களின் பழமை வாய்ந்த இல்லங்கள் வசதி படைத்த நகரத்தவர்கள் வசம் வந்து சேரும் மென்சோகத்தையும், தனது நிஜ அடையாளத்தை மெல்ல மெல்ல இழக்கும் Fjallbacka படிப்படியாக வசதி படைத்தவர்களின் வசந்தகால உல்லாச ஸ்தலமாக புது அடையாளம் பெறுவதையும், காலகாலமாக அங்கு வாழ்ந்திருந்த மீனவக் குடும்பங்கள் வேறிடங்கள் நோக்கி செல்வதையும் எரிக்கா எனும் பிராதன பாத்திரத்தின் ஏக்கம் கலந்த பார்வையுடன் கூறுகிறது நாவலின் ஆரம்ப பக்கங்கள். இங்கு கதாசிரியை கமிலா லாக்பெர்க் அவர்களின் சொந்த ஊரும் Fjallbacka என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். தன் கண்கள் முன் நிகழ்ந்தேறிய மாற்றங்களை கதைமாந்தர்களின் உணர்வுகள் வழி கதையின் வரிகளில் இங்கு நழுவச் செய்கிறார் கமிலா லாக்பெர்க். Fjallbacka ஊரவர்கள் பழமைவாதிகள் என்பதையும், அங்கு நிலவும் வர்க்க வேறுபாடுகளையும், புதிய தலைமுறைக்கும் அதன் முன்னையதற்கும் இடையிலுள்ள இடைவெளியையும், வித்தியாசங்களையும் நாவல் தன் கதையோட்டத்துடன் முன்வைத்திட தவறவில்லை.
எரிக்காவின் முன்னாள் நண்பியான அலெக்ஸ்ஸாண்ட்ராவின் மரணம் முதலில் தற்கொலை என்றே கருதப்படுகிறது. வம்பு பேசுவதில் ஆர்வமுள்ள ஊரவர்கள் இது குறித்து ஆர்வமாக பேசிக் கொள்கிறார்கள். அலெக்ஸின் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு கொலை என்பது ஊர்ஜிதமாகும் நிலையில் சிறிய குற்றச் செயல்களிற்கு பழக்கப்பட்டிருந்த Fjallbacka ஊர் சற்று பரபரப்பானதாகவே ஆகிவிடுகிறது. ஊர் மட்டுமல்ல அப்பகுதி காவல் நிலையமும் தன் வழமையான வேகத்தை விடுத்து புது வேகம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. ஒரு சிற்றூரின் காவல்நிலையத்தின் மெத்தனப் போக்கை கிண்டலுடன் கதை வாசகர்களிடம் இங்கு எடுத்து வருகிறது.
அலெக்ஸின் மரணத்தின் பின்பாக, எரிக்கா பல வருடங்களிற்கு முன்பாக அவளுடன் கொண்ட நட்பும், அந்த நட்பின் முறிவால் அவள் அடைந்த வேதனையான அனுபவங்களும் கதையில் இடம்பிடிக்கின்றன. தன் பெற்றோர்களின் மரணத்தை எரிக்கா ஏற்றுக் கொள்ளும் விதம், குறித்த கெடுவிற்குள் சுயசரிதை நூலை எழுதி முடிக்க இயலாமை தரும் அழுத்தங்கள், தன் சகோதரியான ஆனாவுடனான உறவில் ஏற்பட ஆரம்பிக்கும் விரிசல், பிரம்மச்சாரியாக தன் வாழ்கையை தனியே முடிக்க வேண்டுமா என எரிக்கா கொள்ளும் நியாயமான அச்சம் என அவளை சுற்றி கதை தன்னைப் பின்னிக் கொள்கிறது. இவை யாவற்றிலுமிருந்து தப்பிச் செல்லும் வழியாகவே அலெக்ஸின் மரணத்தின் பின்பாகவுள்ள சில ரகசியங்களை அறிந்து கொள்வதற்கு தைரியமாக தேடல்களில் இறங்குகிறாள் எரிக்கா. அலெக்ஸ் குறித்த ஒரு நாவலை எழுத வேண்டும் எனும் ஒரு சுயநலம் இதில் அடங்கியிருந்தாலும் தன் செயல்கள் குறித்து அதிகம் சுயவிசாரணை செய்து இது தவறு, இது நியாயமானது என தீர்வு காணும் ஒரு பாத்திரமாகவே எரிக்கா நாவலில் காணப்படுகிறாள். முப்பதுகளின் மத்தியில் உள்ள ஒரு பிரம்மச்சாரி பெண்ணின் ஏக்கங்களை நாவல் எங்கும் அள்ளி வீசியிருக்கிறார் கமிலா லாக்பெர்க். ஒரு பெண்ணால் அழகாக ஒரு பெண்ணின் ஏக்கங்களையும், அவள் மனக்கோலங்களின் ரகசிய குரலையும் எளிதாக எழுதிவிட முடிகிறது என்பது உண்மைதான்.
ஒருவர் மீது நாம் கொண்டுள்ள அபிப்பிராயமானது நிரூபிக்கப்படும் தகவல்கள் மேல் கட்டப்படும் ஒன்றாகும். அலெக்ஸின் மரணத்தின் பின்பாக விசாரணைகளின் வழியாக வெளிவரும் தகவல்கள் அவள் உறவுகள் உருவாக்கி வைத்திருந்த அலெக்ஸின் அழகான பிம்பத்தை உடைக்க ஆரம்பிக்கின்றன. தனது செயல்கள் வழி சுதந்திரமான ஒரு பெண்ணாக இருந்திட்ட அலெக்ஸ், அச்சுதந்திரத்தின் வழியே தன் அன்பான உறவுகளையும் கண்ணீர் சிந்த வைக்கிறாள். அலெக்ஸின் கணவனான ஹெண்ட்ரிக் சிந்தும் கண்ணீர் உண்மையில் வேதனையானது. மனைவிக்கு துரோகம் இழைக்கும் கணவன், கணவனிற்கு தூரோகம் இழைக்கும் மனைவி என இரு பக்கத்தையும் சமமாக காட்ட கமிலா லாக்பெர்க் முயன்றாலும் கதையின் ஓட்டத்தில் ஆண்கள் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுவதை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. சில ஆண்களின் பாத்திரத்தை பெண்கள் மெச்சத்தகும் விதமாக கமிலா உருவாக்கினாலும்கூட மொத்த வாசிப்பில் ஆண்கள் மீதே எதிர்மறையான ஒரு நிழல் வந்து வீழ்கிறது. கமிலா லாக்பெர்க் பெண் வாசகிகளை குறி வைத்து எழுதினாரா இல்லை சுவீடிய சமூகத்தில் ஆண்கள் மோசமானவர்களாகவே இருக்கிறார்களா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. ஆக உலகம் முழுக்க ஆண் சமூகமே மோசமான ஒன்றுதான் என பெண்கள் தீர்மானம் எடுத்தால் அதில் கமிலா லாக்பெர்க்கின் பங்கும் சிறிது உண்டு என்பதை அவரிற்கு நான் நேரடியாக எடுத்து சொல்ல விரும்புகிறேன் [ பார்க்க போட்டோ]
பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைக்கு எடுத்துக்காட்டாக நாவலில் உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரம் எரிக்காவின் தங்கையான ஆனா. தொடர்ச்சியான வன்முறைக்கு அவள் கணவனால் உள்ளாக்கப்படும் ஆனா, அவ்வன்முறையை வலிகொண்ட மெளனத்துடன் சகித்து கொண்டு தன் கணவன் லூக்காஸின் மனம் கோணாதபடி நடந்து கொள்ள சிரத்தையுடன் செயல்படும் ஒரு பெண். மேலும் தன் இரு குழந்தைகள் மற்றும் குடும்பக் கடமைகள் யாவற்றையும் தானே தனியே சுமந்திடும் ஒரு பரிதாபமான மனைவி மற்றும் தாய். பெண்கள் மீதான காரணமற்ற வன்முறையின் மொத்த வடிவமாக லூக்காஸ் பாத்திரம் திகழ்கிறது. அதே போலவே வன்முறை என்பதன் இலக்கு எக்கணத்திலும் எதன்மீதும் தாவலாம் என்பதையும் லூக்காஸ் பாத்திரம் மூலம் வாசகர்களிடம் எடுத்து வருகிறார் கதாசிரியை. வன்முறை செய்யும் ஆண்களுடன் இணைந்து இருக்காதீர்கள் என உரத்த குரலில் கமிலா நாவலில் செய்யும் பிரச்சாரம் சூவீடியப் பெண்களிற்கு மட்டுமல்ல உலகெங்கும் அவர் நாவல் மொழிபெயர்க்கப்பட்ட தேசங்களில் உள்ள பெண்களிடமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க இயலாத ஒன்று.
பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்குமிடையிலான உறவு என்பதும் கமிலா லாக்பெர்க் தன் நாவலில் ஆழமாக சித்தரித்திருக்கும் மற்றுமொரு அம்சமாகும். நாவலில் பெரும்பாலான பாத்திரங்கள் அவர்களின் பெற்றோர்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருப்பதில்லை. எரிக்கா, அலெக்ஸின் தங்கையாக அறிமுகமாகும் யூலியா, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன ஓவியனான நீல்ஸ், Fjallbacka ன் வசதி படைத்த குடும்பத்தில் அங்கம் வகிக்கும் ஜான் ஆகிய பாத்திரங்கள் தம் பெற்றோர்களை வெறுப்பதற்கு தகுந்த காரணங்களை தம் வாழ்க்கையில் கொண்டிருக்கவே செய்கின்றன. இந்த வெறுப்பை இத்தருணத்தில் கமிலா லாக்பெர்க் தன் நாவலின் மிக முக்கியமான ஒரு விடயமாக காட்ட விரும்பிய சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளலாம். எவ்வாறு சில தலைமுறை இடைவெளிக்குள் சிறுவர்கள் மீது ஒழுக்கத்திற்காக பிரயோகிக்கப்பட்ட தண்டனைகள் இன்று சாடிஸமாக கருதப்படக்கூடிய அளவு மனித குலம் தன் கண்களை திறந்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறார் கமிலா லாக்பெர்க். எம் பள்ளிகளில் பரீட்சைகளில் புள்ளி குறைந்தால்கூட எம்மைக் கண்டபடி போட்டுத்தாக்கிய ஆசிரியர்கள் சாடிஸ்ட்களா இல்லை குருக்களா எனும் கேள்வி இங்கு எழாமலில்லை. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறார்கள் தம் வாழ்வில் சுமந்து வரும் சிலுவைகளின் பாரம் எத்தகையதாக இருக்ககூடும் என்பதை கதாசிரியை நாவலில் சிறப்பாக கொண்டு வருகிறார். வன்முறைக்குள்ளான சிறுவர்கள் அதே வன்முறையின் வடிவாகவும் அவதாரம் கொள்வதையும் உறைய வைக்கும் விதத்தில் நாவலில் காட்டுகிறார் அவர். தம் குடும்பத்தின் நலன் எனும் பெயரால் தம் குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துவிடும் பெற்றோர்களையே கமிலா லாக்பெர்க் இங்கு பிரதான குற்றவாளிகளாக காட்ட விழைகிறார். அதனாலேயே நாவலின் மர்ம முடிச்சுக்கள் சிலவற்றை வாசகன் ஒருவனால் முன்னமே ஊகிக்க கூடியதாக இருந்தாலும் கதை சலிப்பில்லாது நகர முடிகிறது. அது மட்டுமல்லாது வாசகனை ஒரு மர்மத்தை சரியாக ஊகிக்க வைப்பதன் மூலம் மிக முக்கியமான ஒரு மர்மத்தை சிறப்பாக நாவலின் இறுதித் தருணம் வரை வாசகர்களிடமிருந்து மறைத்து விடுகிறார் கமிலா.
|
சில வாசகர்களின் கனிவான பார்வைக்காக |
அலெக்ஸின் கொலை விசாரணையை எடுத்து செல்லும் ஒரு காவல் அதிகாரியாக நாவலில் பற்ரிக் இருக்கிறான். எரிக்காவும், பற்ரிக்கும் காதல் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் அவர்கள் வயதிற்குரிய பதட்டங்களுடன் சிறப்பாக சொல்லப்படுகிறது. எரிக்கா தான் அறியும் தகவல்களை பற்ரிக்குடன் பரிமாறிக் கொள்கிறாள். பற்ரிக், தன் பிரியமானவளுடன் கொலை குறித்த தன் விசாரணை விபரங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த ஜோடிகளின் உறவுதான் அலெக்ஸ் கொலை மர்மம் விடுபட முக்கியமான ஒரு காரணியாக கதையில் காணப்படுகிறது. பற்ரிக் பணிபுரியும் காவல் நிலையம் வழியாக சுவீடிய காவல்துறையில் காணப்படும் எதேச்சதிகாரம், சோம்பல்தனம், ஆட்பற்றாக்குறை, போதிய சம்பளமின்மை எனும் விடயங்கள் நகைச்சுவையுடன் அலசப்படுகின்றன. கொலை விசாரணையை விட நாவலில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும், அப்பாத்திரங்களை தன் எழுத்துக்களால் படிப்பவர்களை நெருங்க வைத்துவிடும் திறனும் கமிலா லாக்பெர்க் நாவலின் மிக முக்கியமான அம்சமாகும். கதையில் வரும் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தால்கூட ஒரு ஒரு சில வரிகளில் அப்பாத்திரத்தின் வாழ்க்கையை கூறி வாசகனை நெகிழவோ, அதிரவோ வைத்துவிடுகிறார் கமிலா. ஒரு கொலை ஸ்தலத்தின் குரூரத்தை நம்பவியலா அழகியலுடன் எடுத்து வருவது அவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் எனலாம். கதைசொல்லலானது பாத்திரம் விட்டு பாத்திரம் தாவி முன்னகர்ந்து செல்லும் விதமும் இந்நாவலில் நன்றாக வந்திருக்கிறது. Fjallbacka ல் நிலவும் காலநிலையை கதை நெடுகிலும் அழகாக வர்ணித்து கதை நிகழும் ஸ்தலத்தில் இருப்பதுபோல உணரச் செய்கின்றன கமிலாவின் எழுத்துக்கள். காலநிலையுடன் சம்பந்தம் கொண்ட ஒரு விடயமே கதையின் மிக முக்கியமான ஒரு திருப்பத்தை எடுத்து வருவதாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மிக மென்மையான வார்த்தைகளை கோர்த்து, அழகு செறிந்த எளிமையான கதை சொல்லலால் கமிலா லாக்பெர்க் வழங்கியிருக்கும் இந்நாவல் கொலை ஒன்று பரபரப்பான விசாரணையாலும் அதிரடியான நடவடிக்கைகளாலும் நாயகத்தனங்களாலும் அணுகப்படும் வழமையான முறையை வேறுபடுத்திக் காட்டுவதில் அருமையான வெற்றி பெறுகிறது.