Friday, May 18, 2012

ஒளிரும் நட்சத்திரங்களின் துன்ப வரி

கன்சாஸிலிருக்கும் விச்சிடா எனும் நகரிற்கு வேலை தேடி வருகிறான் இளைஞன் Nate Colton. நகரில் அவன் நுழைகையில் அவனை விசாரிக்கும் விச்சிட்டா நகரின் ஷெரீப்பான Sam Slade  விசாரிப்பின் பின்பாகஅவனிற்கு கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் காவலனாக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுத் தருகிறான்.....

அட்டைப்படத்தில் வீற்றிருக்கும் இளைஞனான நேட் கால்ட்டனிற்கு ஒரு கை இல்லை. ஒற்றைக் கையால் மாத்திரமே துப்பாக்கியை இயக்க இயலுமான ஒரு இளைஞனிற்கு, அதிலும் அவன் குறிபார்த்து சுடும் திறனானது சுமாரான ஒன்று என்பதை சோதித்து தெரிந்து கொண்டபின்பாகவே அவனை கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் பாதுகாவலானக வேலைக்கு அமர்த்த முன்னிற்கும் ஷெரீப் ஸாம் சிலேட்டின் மனதில் ஒரு திட்டம் உண்டு. துப்பாக்கியால் குறி தவறாது சுடும் தன் அபாரமான திறமையை ஷெரீப் ஸாம் சிலேட்டிடமிருந்து மறைத்து அவன் பெற்றுத்தரும் வங்கி காவல் வேலைக்கு செல்லும் நேட் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. நேட்டின் மனதின் ரகசிய சுழிகளில் மறைந்திருக்கும் அத்திட்டம் உருவானதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை அறிவதற்கு காலத்தில் பதினொரு வருடங்கள் பின்னோக்கி பயணித்து 1868 ன் ஜூலை மாதத்தில் Fort Laramie எனும் நகரிற்கு நாம் சென்றிட வேண்டும். அந்த சிரமத்தை எமக்கு தந்திட விரும்பாத Western கதையின் கதாசிரியரான ஜான் வான் ஹாம், தன் கதையின் முதல் பக்கத்தை ஃபோர்ட் லராமியிலிருந்தே ஆரம்பிக்கிறார்.

wes1வெஸ்டெர்ன் கதையின் கதைகூறியாக அக்கதையின் பிரதான பாத்திரமான நேட் கோல்ட்டனே இருக்கிறான். அவன் குரலிலேயே கதையானது சித்திரப் பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. ஆரம்பம் முதலே நேட்டின் குரலில் கலந்திருக்கும் அந்த ஈரமான வேதனை, வரிகளின் மீதான நகர்வுகளுடன் மனதை ஈரலிப்பாக்க ஆரம்பிக்கின்றது. கதையின் தொனி எவ்வாறானதாக இருக்ககூடும் என்பதை அவன் குரல் ஒரு ஒலி இழந்த கட்டியம்போல் படிப்பவன் மனதில் ஒலிக்கச் செய்கிறது. செவ்விந்தியர்களால் கடத்தி செல்லப்பட்ட தன் சகோதரனின் மகனை மீட்ட ஒரு மனிதனை சந்திப்பதற்காக ஃபோர்ட் லராமி செல்லும் வசதி படைத்த ஒரு பண்ணை உரிமையாளனாக கதையில் அறிமுகமாகிறான் அம்ப்ரோஸியஸ் வான் டீர். அவனுடன் கூடவே பயணிக்கிறாள் அவன் மகளான கேத்தி.

அம்ப்ரோஸியஸ் மனதில் ஒரு திட்டம் உண்டு. அம்ப்ரோஸியஸின் சகோதரனின் மகனை செவ்விந்தியர்களிடமிருந்து மீட்டெடுத்த மனிதன் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. இவ்வாறாக கதையின் ஆரம்பத்திலும் சரி, பதினொரு வருடங்களின் பின்பாக நேட் கோல்ட்டன் விச்சிட்டாவிற்கு வந்து சேர்கையிலும் சரி மனிதர்களின் மனங்களில் புதைந்திருக்கும் திட்டங்களின் ரகசியங்கள் தரும் மர்மத்தின் தடங்களில் தன் கதையை சலிப்பில்லாது நடத்தி செல்கிறார் ஜான் வான் ஹாம்.

1868 ன் கோடையில் ஃபோர்ட் லராமியில் நிகழும் சில எதிர்பாரா நிகழ்வுகளே பதினொரு வருடங்கள் ஓடியபின்பாக நேட் கோல்ட்டனை விச்சிட்டாவிற்கு அழைத்து வருகின்றன. இந்த பதினொரு வருட காலத்தின் விபரிப்பை ஆரம்ப பக்கங்களில் இருந்து எதிர்பாராமை அளிக்கும் வியப்பின் சுவையோடும், ஏமாற்றங்களும், தோல்விகளும், குற்றவுணர்வுகளும் அளிக்கும் மென்சோகத்தின் வலியோடும் கதையில் கொணர்கிறார் கதாசிரியர். இக்கால இடைவெளியில் நேட்டின் வாழ்க்கையை பருவகால மாற்றங்களோடும், அவன் கடந்து வரும் நிலப்பரப்புக்களோடும் சோகத்தின் மூச்சோடு கரைய விட்டிருக்கிறார் வான் ஹாம் எனலாம். தோல்விகளும், ஏமாற்றங்களும், கைவிடப்படுதல்களும் தன் வாழ்க்கையில் சகஜமாகிப் போன அம்சங்கள் என்பதை நேட்டின் குரல் அவன் கடந்து வரும் பெருமேற்கின் பரந்த வெளிகளுனூடு சொல்லிக் கொண்டே தேய்கிறது.

விச்சிட்டாவில் தன் மனதில் உள்ள திட்டத்தை செயற்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறான் நேட் கோல்ட்டன். அந்நாள் வங்கிக் கொள்ளையர் வடிவில் அவனை தேடி வந்து சேர்கிறது. நாள் ஒன்றிற்கு ஐந்து டாலர்களிற்காவும், மூன்று வேளை உணவிற்காகவும் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயங்காத வங்கிக் காவலர்கள் குறித்த ஒரு மெலிதான பார்வையை கதையின் இப்பகுதியில் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். வங்கிக் கொள்ளை முயற்சியை முறியடித்தால் கிடைக்கக்கூடிய மேலதிக சன்மானம் வங்கிக் காவலர்களின் இன்பக் கனவு. கன்ஸாஸ் வங்கிக் கொள்ளை முயற்சி எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தை எட்ட, விச்சிட்டாவில் பிரபலமான ஒருவனாக உருவாகிறான் நேட் கோல்ட்டன். அவன் வங்கிக் கணக்கின் வைப்புத் தொகையானது நீள்கொம்பன்கள்போல் கொழுக்க ஆரம்பிக்கிறது. இருப்பினும் ஷெரீப் சிலேட், அக்கால மேற்கின் யதார்த்தத்தை நேட்டிற்கு விளக்குகிறான். நேட்டை விச்சிட்டா நகரை விட்டு விரைவில் விலகிச் செல்ல கேட்டுக் கொள்கிறான் ஷெரீப் சிலேட். சட்டத்தின் காவலர்கள் சிலர் தமது சுயலாபத்திற்காக சமூகவிரோதிகளுடன் இணைந்து செயற்படுவது என்பது சாகசக் கதைகளில் தீமையின் பக்கத்தின் பலத்தை சட்டத்தின் துணைகொண்டு பலப்படுத்துவது போன்ற ஒரு நிலையை உருவாக்கும் அந்த நிலையை ஜான் வான் ஹாம் இங்கு உருவாக்கி வைக்கிறார்.

சிலேட்டின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால் விச்சிட்டா நகரை விட்டு விலகிச் செல்லும் நேட் கோல்ட்டன், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் பண்ணை ஒன்றில் கால்நடை பாதுகாவலனாக வேலைக்கு சேர்ந்து கொள்கிறான். கால்நடை பண்ணையில் கால்நடை பாதுகாவலர்கள், கவ்பாய்கள், பண்ணை எடுபிடிகள் எனும் தொழில்ரீதியான அதிகார அடுக்கை ஒரு சில வரிகளில் கதை விளக்குகிறது. கால்நடை பாதுகாவலர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொலைஞர்கள் எனும் கருத்தே பண்ணையில் பணிபுரிபவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. கடும் குளிரிலும், பனியிலும், இரவு பகல் என வேறுபாடின்றி ஒரு நாள் ஓய்வுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் கால்நடை காவலர்களின் விதி. கால்நடை திருடர்கள் குறித்த சட்டங்கள் எளிதானது. யாராக இருந்தாலும் தயங்காது சுடலாம், கொல்லலாம் என்பதே அது. நேட் கோல்ட்டன் தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முனைப்பில் வேதனையுடன் சில உயிர்பலிகளை நிகழ்த்துவதாக கதையில் கூறப்படுகிறது. மனிதர்களை கொல்ல அவன் விரும்புவதில்லை என்பதை கதாசிரியர் இங்கு காட்ட விழைகிறார். கதையின் மிக அருமையான கதை சொல்லல் இப்பகுதியில்தான் இடம்பெறுகிறது என்பது என் கருத்து. தக்க தருணம் ஒன்றிற்காக பண்ணையில் காத்திருக்கும் நேட் கோல்ட்டன் அத்தருணம் வாய்க்கையில் தன் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் ஆரம்பிக்கிறான்.

ஆனால் திட்டம் என்பது என்றும் வெற்றியில்தான் நிறைவுற்றிட வேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல என்பதை வான் ஹாம் தன் வழமையான கதைகளில் இருந்து இங்கு வேறுபடுத்திக் காட்ட முனைகிறார். ஆனால் நேட்டின் திட்டம் என்ன என்பது கதையில் புலனாக ஆரம்பிக்கும் தருணங்கள் சிறிய ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருக்கின்றன. இவ்வகையான திட்டங்களை தேர்ந்த வாசகன் ஒருவன் அது இட்டு வரக்கூடிய முடிவுடன் முன்கூட்டியே ஊகித்துவிட முடியும் என்பது இக்கதையின் பலவீனமான ஒரு அம்சமாகும். இருப்பினும் ஜான் வான் ஹாமின் பலவீனத்தை சரியாக்குவதற்கு என உருவாக்கப்பட்டவை போல இருக்கிறது ஒவியக் கலைஞர் ரொஸின்ஸ்கியின் அபாரமான தூரிகைச் சித்திரங்கள். கதைசொல்லலானது தனது ஆன்மாவை இழக்கும் வேளைகளில் எல்லாம் கதையை தாங்கிக் கொண்டு அதற்கு மேலதிக ஆன்மாவாக செயல்படுகின்றன ரொஸின்ஸ்கியின் சித்திரங்கள். இக்கதைக்கு ரொஸின்ஸ்கி தேர்வு செய்திருக்கும் வண்ணத்தேர்வு தனித்துவமான ஒன்று. நேட் கோல்டின் வாழ்கை இலையுதிர்கால காடு ஒன்றின் உதிர்தல் வாசனையை தன்னுள் கொண்டிருப்பதை போலவே ரொஸின்ஸ்கியின் ஓவியங்களும் நேட் கோல்டின் வாழ்க்கையின் வண்ணத்தை சித்திரங்கள் வழி சிறப்பாக உணர வைத்திருக்கின்றன. ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இக்கதையின் அத்தியாயங்களை எல்லைப்படுத்த உபயோகிக்கப்பட்டிருக்கும் ரொஸின்ஸ்கியின் தூரிகை ஓவியங்களின் அழகு அசர வைக்கிறது. ரொஸின்கியின் திறமை இங்கு ஜான் வான் ஹாமை காப்பாற்றியிருக்கிறது என ஒருவர் கூறினால் அது ஒரு மிகையான கூற்றே அல்ல.

கதையில் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டிய பாத்திரம் ஷெரீப் சிலேட். சிலேட் எவ்வகையான ஒரு கொடூரன் என்பதை அறிய கதையின் இறுதிப்பக்கத்தின் இறுதிக் கட்டம்வரை ஒருவர் சென்றாக வேண்டும். ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத ஒரு அபாயமான விஷ ஜந்துபோல கதையில் சித்தரிக்கப்படுகிறான் சிலேட். வஞ்சம் என்பதன் அர்த்தம் எத்தகையது என்பதை அவன் வழியாக இங்கு வாசகர்கள் அறிந்து கொள்ளவியலும்.

தான் உண்மையில் அடைய விரும்புவது என்ன என்பதை நேட் கோல்ட்டன் உணர்ந்து கொள்ளும் சமயம், அது குறித்த அவன் உணர்வுகள் கதையில் ஆழமாகப் பதிவுசெய்யப்படவில்லை. இதனாலேயே அது குறித்த அவன் இழப்புக்களும் அதிக பாதிப்புக்களை வாசக மனங்களில் உண்டாக்க தவறிவிடுகிறது. கதையின் நீளம் போதாமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இங்கு இருப்பதை நான் சுட்டிக் காட்டியாக வேண்டும். நேட் கோல்ட்டன் தனக்குரித்தான எதையுமே தனதாக்கி கொள்வதில்லை, அவன் காதலும் சரி பெண்கள் ஸ்பரிசம் மீது அவன் கொண்ட உணர்வும் சரி குதிரைகளின் காலடிகளில் மிதிபட்டுப் போய்விடுகிறது. வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களின் உள்ளத்தில் நேட் கோல்ட்டனின் வாழ்க்கை ஒரு துன்பமிகு வரியாக மறைந்திருக்ககூடும்.


24 comments:

  1. எமனின் திசை மேற்கு, எதுத்தாப்ல வர்றவன் போட்டிருக்கான் செருப்பு ;)

    ReplyDelete
    Replies
    1. ஆங் அடுப்பில வேவுது துவரம் பருப்பு....அழகான சிட்டு வந்து அணைச்சா நெருப்பு..... லைட்ட ஆஃப் செய்தா வருது கருப்பு.....

      Delete
    2. தமிழ்ல படிச்சா மட்டும் தான் களிப்பு, ஆங்கிலத்த பார்த்தாலே வருது கழிப்பு ;)

      Delete
  2. ரோசின்ஸ்கியின் சித்திரங்கள் என்றுமே தரமானவை. தோர்கல் கதைதொடரில் அவர் வரைந்த சித்திரங்கள் வைகிங் கதைகளின் மந்திரத்தை தனது தூரிகையில் களவாடிக் கொண்டு வரும். வைகிங் சமுதாயத்தின் வன்முறையும் சரி, இயற்கையின் அழகும் சரி, அவரது சித்திரங்கள் என்றுமே சோடை போனதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இரு வேறு கருத்தில்லை...இருப்பினும் தோர்கலின் ஆரம்ப ஆல்பங்களில் ரொஸின்ஸ்கியின் சித்திரங்கள் வினோதமான ஒரு உணர்வையே தந்தன....

      Delete
  3. என்னங்கய்யா தலைப்பு வச்சுப் பழகுறீங்க? "காரிருளில் மறைந்த கண்ணீர்"... இப்டி வைங்கய்யா :)

    ReplyDelete
    Replies
    1. ஏன் கடலிற்குள் கலந்த குளம் என்று வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா....:))

      Delete
  4. இல்லன்னா, எச்சி துப்பும் திசை மேற்குனு எகஸ்மாத்தா வைச்சுப் பழகனும். :)

    ReplyDelete
    Replies
    1. ஆமா அப்டி வெச்சிப்பிட்டு நாங்க கிழக்கால வர்றப்ப கரீட்டா துப்புறதுக்கா.... ஏமாற மாட்டோம் ....:))

      Delete
    2. எமன் வர்ற திசையையே நாங்க கரக்டா சொல்லுவோம் ஓய். எச்சி எல்லாம் எங்களுக்கு பழகின மேட்டரு.. :)

      Delete
  5. சினிபுக் அறிவிப்பு வந்தவுடன் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. இதை மேலும் கிளறிவிட்டியர்.... தமிழில் இது வருது இல்லையா?

    ReplyDelete
  6. "மனதில் ஒரு திட்டம் உண்டு மனதில் ஒரு திட்டம் உண்டு" ("அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்" மாதிரி இருக்கு) என்று சொல்கிறீர்களே தவிர அது என்ன என்று சொல்லவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. இன்னம் சில மாதங்களில் திட்டங்கள் எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொண்டு விடலாம்.. அதுவரை பொறுமை..:))

      Delete
  7. Interesting review. Seems that there was an undercurrent and foreboding of tragedy throughout the book?

    Is this available in India or in English in book form? Or did you manage to find some online scan?

    ReplyDelete
    Replies
    1. It's available via Flipkart, Infibeam in India.
      Regards,
      Mahesh

      Delete
    2. மகேஷ், தகவல் தந்துதவியமைக்கு நன்றிகள் பல.....

      Delete
  8. Surio, சினிபுக் இதை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்குமா என்பதை நண்பர் ரஃபிக்தான் கூறவேண்டும். பிரெஞ்சு மூலத்தின் வாசிப்பனுபத்தின் வழியாக உருவான பதிவு இது..:)

    ReplyDelete
  9. nicely evaluated! wer u get the page with thamizh clippings?!

    ReplyDelete
    Replies
    1. தமிழாக்கம் நான் செய்ததுதான்.... :)

      Delete
  10. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    .

    ReplyDelete
  11. இப்பதிவை முன்பே பார்த்திருந்தாலும், தமிழிலில் இந்தக் கதை வருவதனால், பதிவைப் படிப்பதைத் தள்ளிப் போட்டிருந்தேன். மிக அருமையான ரிவியூ... கதையின் திருப்பங்களைப் பதிவுசெய்யாமல் ரிவியூ செய்திருப்பது உங்கள் திறமைக்கு ஒரு எ.கா.

    அந்த நட்சத்திரங்களடங்கிய அந்த ப்ரேம்..அருமை.. எந்த ஒரு காமிக்ஸ்களிலும் பார்த்திராத ஒன்று. அவன் கொல்லப்படும் முன்பு அவன் நேர்கோட்டில் செல்ல, இரண்டு பக்கங்களிலிருந்தும் அவனைக் குறிபார்க்கும் கூட்டம்... அடுத்தது என்ன என்பதைச் சொல்கிறது.

    அந்த ஷெரீப்பின் குணச்சித்திரம் அருமை. இந்தக் கதையில் ஹீரோவை பெரிய உத்தமனாக காட்டாமல், சில ஆதாயங்களுடன், காய் நகர்த்தும் ஒரு சராசரி இளைஞனாக காட்டியது அருமை.

    நீங்கள் கூறியது போல.. சித்திரங்களைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை... AMAZING ..

    ReplyDelete
  12. இந்த தடவை தமிழ் மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது... வசனங்கள் நிகழ்கால தொனி இல்லாமல் ஒரு பழமையைக் கொண்டிருந்தது. தமிழில் படிக்க நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

      Delete