பெருமழை ஒன்றினுள் சிக்கி, தம் கால்நடை மந்தைகளை வெகுசிரமத்துடன் வழிநடாத்தி வரும் கவ்பாய் குழுவொன்றின் உதவிக்கு வருகிறார்கள் அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த டெக்ஸ் வில்லரும், கிட் கார்சனும்…..
அமெரிக்க மண்ணை ஆக்கிரமிக்க சென்ற ஸ்பானியர்களின் உணவுத் தேவைக்காகவே முன்சரித்திர காலத்தில் அழிந்து போயிருந்த எருதுகளும், மாடுகளும் 15ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியளவில் அமெரிக்க மண்ணில் தடம் பதித்தன. படிப்படியாக இனக்கலப்புகள் வழியாகவும், இடப்பெயர்வுகள் வழியாகவும் அவை 17ம் நூற்றாண்டளவில் டெக்ஸாஸை வந்தடைந்தன. கட்டற்ற இனமாகவும், எல்லையற்ற வெளிகளின் சுதந்திரத்தை தம் வசம் கொண்டவையாகவும் இருந்த கால்நடை மந்தைகளை, மனிதர்களின் உணவுத் தேவைக்காக பயன்படுத்தி காசு பார்க்கும் தொழிலும் மெதுவான நடையுடன் ஆரம்பமானது. பரந்த வெளிகளில் சுதந்திரமாக உலவித் திரிந்த முரட்டு மந்தைகளை அடக்கி, வழிநாடாத்த முரட்டு மனிதர்கள் தேவைப்பட்டார்கள். மேற்கின் இரக்கமற்ற சூழலை தாங்கிக் கொண்டு கால்நடைகளை காக்க வேண்டிய மனிதர்கள் அக்கால்நடைகளை விட மூர்க்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். கால்நடை மந்தைகளை திருட வரும், அல்லது மந்தைகளிற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு காரணியையும் கல்நெஞ்சத்துடன் அழித்துவிடும் குணமுடையவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படியானவர்களாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். தம் உயிரை துச்சமென மதித்து சிறுதொகைப் பணத்திற்காக பல சிரமங்களிற்கு மத்தியிலும் உழைத்த இந்தக் கவ்பாய்களைக் கொண்டு தம் பணத்தை பெருக்கிக் கொண்ட முதலாளிகள் பலர்.
நகரங்களின் பிறப்பும், மனிதர்களின் உணவிற்கான கேள்வியின் உயர்வும் பெருமுதலாளிகளை தம் கால்நடை மந்தைகளை, மாமிசவுணவு தேவைப்படும் நிலைகளிற்கு எல்லாம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கின. கால்நடை மந்தைகளை குறித்த பாதை வழியே வழிநடத்தி சென்று, அவற்றை அவை சென்றாக வேண்டிய நகரங்களிற்கான ரயில் வண்டிகளில் ஏற்றிவிடும் வரையிலான கடுமையான பணிகளை செய்வதும் கவ்பாய்களின் பணியாகிப் போனது. பட்டுக் கம்பளம் விரித்த பாதை அல்ல கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டிய பாதை. அப்பாதையில் ஆபத்துக்களிற்கு குறைவு என்பதே இல்லை. இயற்கையின் ஆவேச நர்த்தனம், செவ்விந்திய பூர்வகுடிகளின் வெறித்தாக்குதல், கொள்ளையர்களின் அதிரடி, பெருமுதலாளிகளிற்கு இடையில் நிலவும் தொழில் போட்டியின் காரணமாக உருவாக்கப்பட்ட சதிவலைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு சிறு நொடியில் தம் அமைதியான நடையை, உடலைக் கூறு போடும் கொம்புகளின் ஆவேச ஓட்டமாக மாற்றிவிடக்கூடிய இயல்பு கொண்ட நீள்கொம்பன்களின் ரவுத்திரம் இவை எல்லாவற்றையும் சமாளித்து குறித்த காலக்கெடுவிற்குள் கால்நடை மந்தைகளை அவை சென்றாக வேண்டிய புள்ளிகளிற்கு இட்டுச் செல்வது என்பது சாதாரணர்களிற்கான பணியே அல்ல. முன்னொரு காலத்தில் பெருமேற்கின் அபாயம் நிறைந்த நிலப்பரப்புகளினூடாக ஓயாத நடை நடந்து தடங்களை உருவாக்கிய கால்நடை வணிகத்தையும், அதில் ஒருவர் காணக்கூடிய அபாயங்களையும், இழப்புக்களையும் மையவிழையாகக் கொண்டே
TEX Maxi – 9 ன் கதையான
La Piste De Embuscades ஐ உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர்
Gianfranco Manfredi. ஜியான்ஃப்ரன்கோ மான்ஃப்ரெடி,
Nick Raider,
Dylan Dog போன்ற கதை வரிசைகளிற்கும் கதை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பிரபலமான படைப்பாக கருதப்படுவது பெருமேற்கு மிகுபுனை காமிக்ஸ் கதை வரிசையான
Esprit Du Vent ஆகும்.
வதனமோ சந்த்ரபிம்பமோ வரிசையின் மூன்றாவது கதையாக இது அமைகிறது.
கதையின் முதல் பக்கத்தில் வாசகர்களை வரவேற்பது பெருமேற்கின் பெருமழை. அது தனக்கே உரிய சுதந்திர வீழ்தலுடன் பரந்த வெளியெங்கும் தன் நடனத்தை நிகழ்த்தும் ஒரு சக்தியாக தன் பாதங்களை நிலவண்ண வெள்ளமாக்கி அதன்மேல் நிலத்தில் ஓய்ந்திருந்தவற்றை தன்மேல் அள்ளிச்செல்லும் விரைவான ஓட்டமாக தன் நடனத்தை மேல்வான எல்லையிலிருந்து ஓயாது நடாத்திக் கொண்டிருக்கிறது. மழையின் இந்தக் களிநடனத்தில் மாட்டிக் கொண்டவர்களாக அறிமுகமாகிறார்கள் டெக்ஸும், கிட் கார்சனும். வழமை தவறாது கிட் கார்சனின் புலம்பல் இடிச்சத்தத்தின் செவியடை ஒலியிலும் டெக்ஸின் காதுகளில் வந்து விழத் தவறிடவில்லை. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் டெக்ஸ் பார்வையில் படுகிறார்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு போராடும் கவ்பாய்கள்.
இங்கு கதாசிரியர் மான்ஃப்ரெடியைவிட வாசகர்களை சொக்க வைப்பவர் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியரான
Miguel Angel Repetto ஆவார். மிகெல் ஏஞ்சல் ரெப்பெட்டோவின் சித்திரங்களில் பெருமழை தன்னைத் தந்திழந்து தன்னியல்பு துளிர்த்து நிற்கிறது. கறுப்பு வெள்ளையில் அந்த ஆரம்ப பக்க சித்திரங்களில் நனைந்து ஒழுகி நிலத்தில் வீழ்ந்து வாசகன் முகத்தில் துளியாக தெறிக்கும் மழையீரக் கவர்ச்சியே போதும் உள்ளங்களை ஓடும் வெள்ளத்துடன் மிதந்தோட செய்திட. மேற்குநில வெள்ளத்தின் உக்கிரத்தின் ஒரு சிறுகூறை தன் கோடுகளில் ரெப்பெட்டோவால் சித்தரிக்க சிறப்பாக முடிந்திருக்கிறது. அக்கோடுகளுடன் வந்து கலந்து கொள்கிறார்கள் மான்ஃப்ரெடியின் கதை மாந்தர்கள்.
வெள்ளத்தில் சிக்கித் திணறிய நீள்கொம்பன்களை டெக்ஸும், கிட் கார்சனும் கவ்பாய்களுடன் சேர்ந்து காப்பாற்றுகிறார்கள். அந்நிலையில் தன் உயிரையே மதிக்காது, ஒரு கால்நடையைக்கூட இழந்துவிடக்கூடாது எனப் போராடும் ஒரு பாத்திரம் வாசகர்களிற்கு அறிமுகமாகிறது. ஜூன் பீகாக் என அழைக்கப்படும் அப்பாத்திரம் ஒரு அழகான பெண். ஆனால் கவ்பாய்களிற்கு நிகராக காரியம் ஆற்ற தயங்காத ஒரு பெண். தன் கணவன் க்ளிண்ட்டின் மறைவின் பின்பாக பண்ணையின் நிர்வாகம் ஜூன் பீகாக்கின் கைகளில் வந்து சேர்கிறது. அவளிற்கு துணையாக அவள் கணவனின் சகோதரன் கஸ் பீகாக். இருப்பினும் பண்ணை நிலவரம் நன்றாக இல்லை. டொட்ஜ் சிட்டி நோக்கி செல்லும் ரயில்வண்டியில் குறித்த காலத்தினுள் அவர்கள் அம் மந்தையை கொண்டு சென்று ஏற்றாவிடில் பண்ணையை இழக்கும் நிலை ஜூன் பீக்காக்கிற்கு. இங்கு கதாசிரியர் ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை எப்படியாவது டொட்ஜ் சிட்டி ரயிலில் ஏறிட வேண்டும் என வாசகர்களை மனதில் கற்பனை செய்ய ஊக்குவிக்கிறார். ஜூன் பீக்காக்கின் மந்தையை நடாத்தி செல்ல ஆட்பற்றாக்குறை இருப்பதால் டெக்ஸும், கார்சனும் அவளிற்கு உதவி செய்வது என முடிவெடுக்கிறார்கள்.
ஆனால் டெக்ஸ் ஒரு முடிவெடுத்தால் அதன்பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கும் என்பதை வாசக நண்பர்கள் அறிவீர்கள். ஜூன் போன்றதொரு கணவனை இழந்து நிற்கும் ஒரு அழகான சிட்டிற்கு துணைசெய்ய டெக்ஸை விட்டால் வேறு யார்தான் பெருமேற்கின் பெருமழையில் நனைந்து வரமுடியும். ஆனால் காரணம் அதுவல்ல. ஜூனின் கணவன் க்ளிண்டின் மரணத்தின் பின்பாக இருக்கும் ஒரு மெல்லிழையான மர்மம் டெக்ஸின் ஆர்வத்தை மெல்ல நனைக்கிறது. அது மட்டுமல்ல க்ளின்ட் பண்ணை இருக்கும் பகுதியில் வங்கிகளை தன்பக்கம் சேர்த்துக் கொண்டு சிறுபண்ணை உரிமையாளர்களின் மந்தைகளையும், நிலங்களையும் தன்னுரிமையாக்கி கொண்ட ஒரு மனிதனின் பெயரும் டெக்ஸ் மனதில் ஒரு பொறியை கிளப்புகிறது. அம்மனிதனின் பெயர் தோர்ன் மில்லர். ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை டொட்ஜ் சிட்டியை வந்தடையக் கூடவே கூடாது என்பதற்காக சகல வழிகளையும் மார்கக்ங்களையும் பிரயோகிக்கத் தயங்காத தோர்ன் மில்லரின் சதித் திட்டங்களிலிருந்து ஜூனின் கால்நடை மந்தையை டெக்ஸ் காப்பாற்றினாரா…. ஜூனின் கணவன் க்ளின்டின் மரணம் விபத்தா இல்லை கொலையா…. கொலையெனில் அதனை செய்தது யார்.. எதற்காக…. தோர்ன் மில்லரை டெக்ஸ் தன் நீதியால் வெல்வாரா என்பதை சீரான ஓட்டத்துடன் மீதிக் கதை சொல்கிறது.
ஜூன் பீக்காக்கின் அழகிலும் கவர்ச்சியான வளமான உடல் வனப்புகளிலும் தன்னை இழந்திடாது துப்பறிவது ஒன்றே தன் கடமை என செயற்பட டெக்ஸால் மட்டுமே இயலும். அடிதடிக்கு இப்படி அலையும் ஒரு ஹீரோவை நீங்கள் காண்பதரிது. வழமைபோலவே கார்சனும், டெக்ஸுமிற்குமிடையில் கிண்டல் பரிமாற்றங்கள். இம்முறை ஜூனை கார்சனிற்கு ஜோடி சேர்த்து டெக்ஸ் அடிக்கும் கிண்டல்கள் ரசிக்கவே வைக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கஸ் பீக்காக் பாத்திரம் வாசகர்களை இறுதியில் கலங்க வைக்கும். மிக அமைதியான ஒரு மனிதன் கஸ் பீக்காக். தன் இருத்தலை அவன் நிருபிக்க செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்விகளாகவும், அவனிற்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவதாகவுமே அமைகின்றன. தன் எண்ணங்களில் நனமை கொண்ட கஸ் அந்த நன்மையுடனேயே வாசகனை பிரிந்து செல்கிறான்.
கதையின் இறுதிவரை க்ளிண்டின் மரணத்தின் பின்பான மர்மத்தை கதாசிரியர் மான்ஃப்ரெடி திறமையாக இட்டு வருகிறார். சில மனிதர்களின் உண்மை முகங்கள் மர்மங்களின் முகங்களுடன்தானே வெளியாகின்றன அறியப்படுகின்றன அதிர்ச்சியுண்டாக்குகின்றன. கால்நடை மந்தை ஒன்றை நடாத்தி செல்லும் வழியில் ஒரு கவ்பாய் குழு எதிர்கொள்ளும் அபாயங்களான இயற்கை, கொள்ளையர்கள், செவ்விந்தியர்கள் என கதை நெடுகே சாகசத்திற்கு குறைவில்லை. அதிலும் பறக்கும் பலூனில் தோர்ன் மில்லருடன் டெக்ஸ் போடும் குங்குபூ சண்டை ஆளவந்தான் க்ளைமேக்ஸை காக்கா நரிவடை க்ளைமேக்ஸ் அளவிற்கு தள்ளி விடுகிறது. கால்நடைகளை வழிநாடாத்தி செல்ல உதவி செய்ய வருவதாக முன்வரும் கொள்ளையர், செவ்விந்தியக் குடிகளிற்கிடையிலேயான மோதல், தகுந்த நேரத்தில் கால்நடைகளை டொட்ஜ் சிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை, இவற்றை எல்லாம் படு சுளுவாக எதிர் கொள்ளும் ரெப்பெட்டோவின் அழகான கம்பீரமான டெக்ஸ், அசர வைக்கும் சித்திரங்கள் என எல்லாம் இருந்தும் மான்ஃப்ரெடியின் இப்பெருங்கதையில் ஆன்மா முழுமையான ஒன்றாக இல்லை. வாசகன் கதையுடன் பாதிக்கும் குறைவாகவே ஒன்றிக்கொள்ள முடிகிறது. சீரான வேகத்தில் சொல்லப்பட்ட நீண்டகதை இதற்கு காரணமாக இருந்தாலும் சாகசம் என்பதை மட்டுமே பிரதானப்படுத்திய கதை சொல்லலையும் நான் இதற்கான ஒரு காரணம் எனச் சொல்வேன். உணர்வுகளையும் தூண்டி இசைக்கும் விதத்தில் கதையமைப்பு அமைந்திருந்தால் ஆபத்துக்களின் பாதை அழகான ஒரு பாதையாக இருந்திருக்கும்.