Showing posts with label Miguel Angel Repetto. Show all posts
Showing posts with label Miguel Angel Repetto. Show all posts

Saturday, June 21, 2014

சட்டம் ஸ்டார்க்கர் கையில்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 15

நிக் லூயிஸ் எனும் கேடியை தேடி தெற்கு கொலராடோவிற்கு வரும் டெக்ஸ் வில்லர் வழியில் தறிகெட்டு ஓடிச்செல்லும் ஒரு கோச்சு வண்டியை தற்செயலாக காண நேரிடுகிறது. குதிரைகள் ஓடும் ஓட்டத்திலிருந்தே கோச்சு வண்டியில் ஏடாகூடமாக ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கும் பெருமேற்கின் இளஞ்சிங்கம் கோச்சு வண்டியை விரட்டி செல்கிறது. சிங்கத்தின் ஊகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோலவே கோச்சு வண்டியின் ஓட்டுநர் தன் இருக்கையிலேயே பரமபதம் சென்று இருக்கிறார். பலத்த போராட்டத்தின் பின்பாக வண்டியை நிறுத்தி ஆராயும் டெக்ஸ் வில்லர் வண்டியினுள் பயணிகள் எவரும் இல்லை என்பதை காண்கிறார். ஆனால் பெருமேற்கின் துடிதுடிப்பான ஷெர்லாக்கான டெக்ஸின் மனம் பரபரக்கிறது. கோச்சு வண்டியின் கூரையில் இருக்கும் பயண லக்கேஜ்களுக்கு சொந்தமானவர்கள் எங்கோ இருந்தே ஆக வேண்டும் என டெக்ஸிடம் அது முன்வேனில் செங்குருவிபோல டிவிட் சொல்கிறது. வண்டி வந்த பாதையின் தடத்தில் செல்லும் தல டெக்ஸ் அவ்வண்டியில் பயணித்த பயணிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கொள்கிறார். படுகொலை நடாத்தப்பட்டிருக்கும் பாணி அவர் தேடிவந்த கேடியான நிக் லூயிஸின் கைவண்ணத்தை ஒத்திருப்பதையும் அவதானித்து கொள்கிறார். அந்த தருணத்தில் சட்டம் மூன்று குதிரைகளில் டெக்ஸை நோக்கி விரைந்து வருகிறது.... வந்து கொண்டிருக்கும் சட்டத்திற்கு பெருமேற்கின் நீதிதேவனான டெக்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாசக யூவர் ஆனர்கள் குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அழகான முன்வேனிலின் இதமான காற்றில் சுருளிச் சூறாவளியாக பறக்கும் கோச்சு வண்டியில் சடலமாக அதன் ஒட்டுனர். TEX MAXI N° 16  ன் கதையான Le Loi de Starker  ன் திகிலான, சூடான, பரபரப்பான, இளமையான அறிமுகத்திற்கு மேலும் சூடேற்றவது போல அமைகிறது டெக்ஸ் வில்லர் அந்த கோச்சு வண்டியை துரத்தி செல்லும் காட்சி. ஆறு குதிரைகள். காற்றிற்கு வேகத்தை கற்பிக்கும் பேராசிரியர்கள் போல விரைந்து கொண்டிருக்கின்றன. அவ்வண்டியை எப்படியாவது நிறுத்த அதன் பின் விரையும் டெக்ஸ். வாசக அன்பர்கள் தம் மனத்திரையில் இந்த ஆக்சேன் சேஸிங்கை ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். தன் குதிரையிலிருந்து கோச்சு வண்டிக்கு பாய்வார் பாருங்கள் [ இதை அதே மனத்திரையில் ஸ்லோமோசனில் ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன்]. பார்க்க இரு கண்கள் போதாது என்றால் அது பொய். அங்கு ஆரம்பிக்கும் அதகளம் இக்கதை நடக்கும் ப்ளாக் ஃபால்ஸ் பகுதியைவிட்டு டெக்ஸ் புறப்பட்டு செல்லும்வரை நீடிக்கும் என்றால் அது .... மெய்.

குதிரைகளில் ஏறி வந்த சட்டங்களில் ஒருவன் ப்ளாக் ஃபால்ஸ் நகர ஷெரீஃபான கிரிகரி ஸ்டார்க்கர். தன் பாணியில் ப்ளாக் ஃபால்ஸில் சட்ட பரிபாலனம் செய்து நீதி மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுபவன். டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. சுமூகமான அறிமுகத்தின் பின்பாக டெக்ஸ் பயணிகளை கொலை செய்த கேடிகளின் தடத்தில் பயணிக்க ஸ்டார்க்கர் பயணிகளின் சடலங்களோடு ப்ளாக் ஃபால்ஸ் நகரம் நோக்கி விரைகிறான். ஆனால் விதி இவர்கள் இருவர்களின் பாதைகளையும் ஒன்றாக்கி அதில் அவர்களை ஒருவரை ஒருவர் நோக்கி பயணிக்க வைத்து விடுகிறது.

கேடிகளின் தடமானது ஒரு தருணத்தில் மறைந்துவிட ப்ளாக் ஃபால்ஸ் நகர் நோக்கி வருகிறார் டெக்ஸ். நகர மக்கள் முன்னிலையில் உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கரின் உரையை கேட்கவும் அவதானிக்கவும் செய்கிறார். அந்தக் கணத்திலேயே ஸ்டார்க்கர் ஒரு மகா நடிகன் என்பதை அவர் கணித்தும் விடுகிறார்.

நகரின் சலூனில் இலவச பீர் தந்து டெக்ஸை வரவேற்கும் காட்சியில் டெக்ஸின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை. சான்ஸே இல்லை. சாட்சாத் ஜெமினி கணேசன் புன்னகைதான். அந்தப் புன்னகை ஆவியாகாமலேயே ஸ்டார்க்கரின் உரையை கேட்கப் போய் அங்கு ப்ளாக் ஃபால்ஸ் நகர மக்கள் தம் ஷெரீஃப் மீது கொண்டிருக்கும் அபிமானத்தையும் அறிந்து கொள்கிறார். ப்ளாக் ஃபால்ஸ் நகரை அண்மித்த பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் அதை தடுக்க, ஒழிக்க, அழிக்க தீபோல செயற்படும் ஸ்டார்க்கர், இவை டெக்ஸ் மனதின் ஓரத்தில் ஐயங்களை விதைக்கின்றன. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது அந்நியன் ஒருவன் ஒரு நகரின் சூப்பர் ஷெரீஃப்பை குற்றம் சாட்ட முடியுமா? அது அந்த அந்நியனிற்கு எதிரான ஒரு அலையாக மாறி அந்த அந்நியனிற்கு சேதங்களை விளைவிக்காதா? ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு டெக்ஸ் வந்து சேரும் இரவன்றே அவரை அந்நகரிலிருந்து வெளியேற வைக்கும் நிகழ்வுகளும் ஆரம்பமாகி விடுகின்றன. டெக்ஸை நகரிலிருந்து வெளியேற வைப்பதில் ஸ்டார்க்கர் வெற்றியும் காண்கிறான். ஆனால் டெக்ஸ் நகரிலிருந்து மட்டும்தான் வெளியேறுகிறார். கோச்சு வண்டிப் பயணிகள் படுகொலையான விவகாரத்தில் இருந்து அல்ல. இந்த சமயத்தில்தான் ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டார்க்கர் எப்படியான ஒரு தருணத்தில் ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு ஷெரீஃபாக உருவாகினான் என்பதும் கதையில் நான் லினியார் பாணியில் விளக்கப்படுகிறது. ரவுடிகள் கையில் சுடுபட்டு சாகும் முன்னைய ப்ளாக் ஃபால்ஸ் ஷெரீஃப். பயத்திலும், திகிலிலும் அடங்கி ஒடுங்கும் மக்கள். அட்டகாச ஆட்சி நடத்தும் ரவுடிக் கும்பல். இந்த ரவுடிக் கும்பலை போட்டு தள்ளும் ஸ்டார்க்கர். அவனை பெரிய வீரனாக கருதி, ஏற்று தம் நகரின் மேயர், நீதிபதி, ஷெரீஃப் என அனைத்து பதவிகளையும் ஒப்படைத்து விடும் நகர மக்கள் அவன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு கேள்வி கூட எழுப்புவது இல்லை. ரவுடிக்கு நீதி ரவுடியால்தான் எனும் பெருமேற்கின் உன்னதமான தத்துவமானது உறுதிபடும் ஸ்தலம் ப்ளாக் ஃபால்ஸ். ஆனால் ரவுடிக்கெல்லாம் ரவுடி எங்கள் தலை என்பதும் உறுதிபடும் இடமும் ப்ளாக் ஃபால்ஸ் தான் டெக்ஸின் அன்பு ரசிகர்களே.

ப்ளாக் ஃபால்ஸ் நகரை விட்டு வெளியேறும் டெக்ஸ் தன் தேடல்களை தொடர்கிறார். அவரின் தேடல்கள் ஸ்டார்க்கரை மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க செய்கிறது. அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக் தோள்கள் உரசிக் கொள்வதுபோல ஸ்டார்க்கரும், டெக்ஸும் உரசிக் கொள்கிறார்கள். டெக்ஸின் தேடல்கள் எல்லாம் ஸ்டார்க்கரை நோக்கியே விரலைக் காட்டுகின்றன. ஸ்டார்க்கரின் நகர்வுகள் எல்லாம் டெக்ஸை குழிக்குள் இறக்குவதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த காய் நகர்வுகள் எல்லாம் வாசகனை டெக்ஸின் ஆக்சன் அதிரடிக்குள் உயிருடன் புதைப்பதாகவே அமைகின்றன. ஆனால் டெக்ஸ்  அடங்குவது இல்லை. வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார்.

ஸ்டார்க்கரின் டெப்யூட்டிகளை துவம்சம் செய்வது, துவம்சம் செய்த டெப்யூட்டி ஒருவனின் உயிரை காப்பாற்றுவது, இறந்த உடல்போல் ஆற்றில் மிதப்பது, ரகசிய தகவல்களை சொல்ல முன்வருபவர்கள் போட்டுத்தள்ளப்பட்ட பின்பாக அவர்களை காண செல்வது,  தாமதமாக வந்து விட்டோமே என வருத்தப்படுவது, நிக் லூயிஸை படிய வைப்பது, நிற வெறியர்கள் மீது கரி பூசுவது, பின் அவர்களிற்காக இருளில் காத்திருந்து அதிர்ச்சி தருவது, மர ஆலையின் முரட்டு நபருடனான சூடான மோதல், ஸ்டார்க்கரை ஓயாது தன் நடவடிக்கைகளால் சீண்டல் இப்படி இன்னம் பல வகையான இயக்கவோட்டங்களால் அடி பின்னி எடுக்கிறார் டெக்ஸ். ஒரு வகையில் டெக்ஸ் இங்கு ஸ்டார்க்கரை உளவியல் ரீதியாக தாக்குகிறார் என்பது மிகையல்ல. கதையில் சில பகுதிகளில் தனது நகரம், தனது சட்டம், நீதி என ஸ்டார்க்கர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டார்க்கரை குறித்து டெக்ஸ் கூறும் சில வரிகளை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். புற்றில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியேற வைக்க வேண்டுமெனில் அதை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் டெக்ஸ் சீண்டும் சீண்டலில் பாம்பு சுரங்கம் தோண்டி மெக்ஸிக்கோவிற்கு சென்றுவிடும் என்பதும் டெக்ஸின் வாசக வெள்ளம் அறியாத ஒன்றல்ல.

கதையின் சிறுகூறாக நிறவெறி கையாளப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து போராடி கறுப்பின மக்களின் நீதிக்கரமாக டெக்ஸ் செயற்படுவதாக கதை சுட்டி நிற்கிறது. கறுப்பினத்தவரின் உதவியாலேயே டெக்ஸ் கதையின் மர்மத்தின் முக்கிய தகவலை அறிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. கறுப்பின குடும்பம் ஒன்றின் நலனிற்காக டெக்ஸ் செய்யும் சில செயல்கள் பில் கேட்ஸையே வெட்கம் கொள்ள வைப்பதாக உள்ளன.

கதையில் பெரும்பகுதியில் டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்கிறார். இறுதிப்பகுதியில் கவுரவ வேடம் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போல கார்சன் வந்து சேர்கிறார். டெக்ஸை ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்குள் இழுத்து போட்டுத் தள்ள ஸ்டார்க்கர் கார்சனை உபயோகித்து கொள்கிறான். கார்சனைக் காப்பாற்ற டெக்ஸ் எவ்விதமாக நகரில் நுழைகிறார் என்பதே இக்கதையின் கதாசிரியர் Tito Faraci அவர்களின் கற்பனை வளத்தை காட்டி விடும். சமகால உத்திகளுடன் டெக்ஸ் கதைகள் புதுப்பிக்கப்படுகையிலேயே அது சுவையான புதிதான அனுபவத்தை வாசகர்களிற்கு வழங்கும் என்பதில் டிட்டோ பராசிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வழங்கியிருக்கும் கதை தெளிவாக்கி விடுகிறது. டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை எனினும் புதுமையான ஒரு அனுபவம் மறுக்கப்படும் எந்த தருணமும் டெக்ஸ் தன் குதிரையில் பின்னோக்கியே பயணிக்கிறார் மன்மதலீலை கமல்போல என்பதை சொல்லவும் வேண்டுமா. கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் ஆர்ஜெண்டின சித்திரக் கலைஞர் மிகுவெல் ஏஞ்சல் ரெப்பெட்டோ. அவரின் சித்திரங்கள் சிவாஜியின் ஓவர் ஆக்டிங் எப்படி திரைப்படங்களில் பொருந்திப் போகுமோ அப்படி கதைக்கு பொருந்தி வந்திருக்கிறது. குறிப்பாக ஸ்டார்க்கரின் முகபாவனைகள், அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் வாசகர்களின் உணர்வுகளை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. நிலவியல் அழகை தருகிறேன் எனும் போர்வையில் ஆங்காங்கே சில பறவைகள், பிராணிகளை காட்சிப்படுத்துவதை தவிர ரெப்பெட்டோ சிறப்பாக எதனையும் செய்து விடுவது இல்லை.

இப்படியாக ஆழமற்ற கதைகளும், ஓவர் ஆக்டிங் சித்திரங்களுடனும் வரும் டெக்ஸ் மேக்ஸி கதைகள் அக்கதை வரிசைகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமையப் போவது இல்லை. பொனெலி நிறுவனம் வருடம் ஒரு மேக்ஸி என்பதை ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்து விட்டதோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் டெக்ஸ் கதைகளை வெளியிடும் பதிப்பகம் இவ்வருட இறுதியுடன் பெரும்பாலும் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வகையான கதைகள் அதை விரைவில் நிறைவேற்றி வைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்தாலியர்களுக்கும் பஸ்டாவும், பிஸ்ஸாவும், நமக்கு சாதமும் அலுப்பது இல்லை. அவரவர் சுவை அவரவர்க்கு. என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்.

சமர்ப்பணம்.
நான் ஒரு போலி டெக்ஸ் விசிறி என வதந்தி பரப்புவர்களுக்கு.





Saturday, July 14, 2012

ஆபத்துக்களின் பாதை

pe 1பெருமழை ஒன்றினுள் சிக்கி, தம் கால்நடை மந்தைகளை வெகுசிரமத்துடன் வழிநடாத்தி வரும் கவ்பாய் குழுவொன்றின் உதவிக்கு வருகிறார்கள் அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த டெக்ஸ் வில்லரும், கிட் கார்சனும்…..


அமெரிக்க மண்ணை ஆக்கிரமிக்க சென்ற ஸ்பானியர்களின் உணவுத் தேவைக்காகவே முன்சரித்திர காலத்தில் அழிந்து போயிருந்த எருதுகளும், மாடுகளும் 15ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியளவில் அமெரிக்க மண்ணில் தடம் பதித்தன. படிப்படியாக இனக்கலப்புகள் வழியாகவும், இடப்பெயர்வுகள் வழியாகவும் அவை 17ம் நூற்றாண்டளவில் டெக்ஸாஸை வந்தடைந்தன. கட்டற்ற இனமாகவும், எல்லையற்ற வெளிகளின் சுதந்திரத்தை தம் வசம் கொண்டவையாகவும் இருந்த கால்நடை மந்தைகளை, மனிதர்களின் உணவுத் தேவைக்காக பயன்படுத்தி காசு பார்க்கும் தொழிலும் மெதுவான நடையுடன் ஆரம்பமானது. பரந்த வெளிகளில் சுதந்திரமாக உலவித் திரிந்த முரட்டு மந்தைகளை அடக்கி, வழிநாடாத்த முரட்டு மனிதர்கள் தேவைப்பட்டார்கள். மேற்கின் இரக்கமற்ற சூழலை தாங்கிக் கொண்டு கால்நடைகளை காக்க வேண்டிய மனிதர்கள் அக்கால்நடைகளை விட மூர்க்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். கால்நடை மந்தைகளை திருட வரும், அல்லது மந்தைகளிற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு காரணியையும் கல்நெஞ்சத்துடன் அழித்துவிடும் குணமுடையவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படியானவர்களாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். தம் உயிரை துச்சமென மதித்து சிறுதொகைப் பணத்திற்காக பல சிரமங்களிற்கு மத்தியிலும் உழைத்த இந்தக் கவ்பாய்களைக் கொண்டு தம் பணத்தை பெருக்கிக் கொண்ட முதலாளிகள் பலர்.
pe2
நகரங்களின் பிறப்பும், மனிதர்களின் உணவிற்கான கேள்வியின் உயர்வும் பெருமுதலாளிகளை தம் கால்நடை மந்தைகளை, மாமிசவுணவு தேவைப்படும் நிலைகளிற்கு எல்லாம் அனுப்பி வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கின. கால்நடை மந்தைகளை குறித்த பாதை வழியே வழிநடத்தி சென்று, அவற்றை அவை சென்றாக வேண்டிய நகரங்களிற்கான ரயில் வண்டிகளில் ஏற்றிவிடும் வரையிலான கடுமையான பணிகளை செய்வதும் கவ்பாய்களின் பணியாகிப் போனது. பட்டுக் கம்பளம் விரித்த பாதை அல்ல கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டிய பாதை. அப்பாதையில் ஆபத்துக்களிற்கு குறைவு என்பதே இல்லை. இயற்கையின் ஆவேச நர்த்தனம், செவ்விந்திய பூர்வகுடிகளின் வெறித்தாக்குதல், கொள்ளையர்களின் அதிரடி, பெருமுதலாளிகளிற்கு இடையில் நிலவும் தொழில் போட்டியின் காரணமாக உருவாக்கப்பட்ட சதிவலைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு சிறு நொடியில் தம் அமைதியான நடையை, உடலைக் கூறு போடும் கொம்புகளின் ஆவேச ஓட்டமாக மாற்றிவிடக்கூடிய இயல்பு கொண்ட நீள்கொம்பன்களின் ரவுத்திரம் இவை எல்லாவற்றையும் சமாளித்து குறித்த காலக்கெடுவிற்குள் கால்நடை மந்தைகளை அவை சென்றாக வேண்டிய புள்ளிகளிற்கு இட்டுச் செல்வது என்பது சாதாரணர்களிற்கான பணியே அல்ல. முன்னொரு காலத்தில் பெருமேற்கின் அபாயம் நிறைந்த நிலப்பரப்புகளினூடாக ஓயாத நடை நடந்து தடங்களை உருவாக்கிய கால்நடை வணிகத்தையும், அதில் ஒருவர் காணக்கூடிய அபாயங்களையும், இழப்புக்களையும் மையவிழையாகக் கொண்டே TEX Maxi – 9 ன் கதையான La Piste De Embuscades ஐ உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் Gianfranco Manfredi. ஜியான்ஃப்ரன்கோ மான்ஃப்ரெடி, Nick Raider, Dylan Dog போன்ற கதை வரிசைகளிற்கும் கதை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பிரபலமான படைப்பாக கருதப்படுவது பெருமேற்கு மிகுபுனை காமிக்ஸ் கதை வரிசையான Esprit Du Vent ஆகும். வதனமோ சந்த்ரபிம்பமோ வரிசையின் மூன்றாவது கதையாக இது அமைகிறது.


கதையின் முதல் பக்கத்தில் வாசகர்களை வரவேற்பது பெருமேற்கின் பெருமழை. அது தனக்கே உரிய சுதந்திர வீழ்தலுடன் பரந்த வெளியெங்கும் தன் நடனத்தை நிகழ்த்தும் ஒரு சக்தியாக தன் பாதங்களை நிலவண்ண வெள்ளமாக்கி அதன்மேல் நிலத்தில் ஓய்ந்திருந்தவற்றை தன்மேல் அள்ளிச்செல்லும் விரைவான ஓட்டமாக தன் நடனத்தை மேல்வான எல்லையிலிருந்து ஓயாது நடாத்திக் கொண்டிருக்கிறது. மழையின் இந்தக் களிநடனத்தில் மாட்டிக் கொண்டவர்களாக அறிமுகமாகிறார்கள் டெக்ஸும், கிட் கார்சனும். வழமை தவறாது கிட் கார்சனின் புலம்பல் இடிச்சத்தத்தின் செவியடை ஒலியிலும் டெக்ஸின் காதுகளில் வந்து விழத் தவறிடவில்லை. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் டெக்ஸ் பார்வையில் படுகிறார்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு போராடும் கவ்பாய்கள்.


இங்கு கதாசிரியர் மான்ஃப்ரெடியைவிட வாசகர்களை சொக்க வைப்பவர் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியரான Miguel Angel Repetto ஆவார். மிகெல் ஏஞ்சல் ரெப்பெட்டோவின் சித்திரங்களில் பெருமழை தன்னைத் தந்திழந்து தன்னியல்பு துளிர்த்து நிற்கிறது. கறுப்பு வெள்ளையில் அந்த ஆரம்ப பக்க சித்திரங்களில் நனைந்து ஒழுகி நிலத்தில் வீழ்ந்து வாசகன் முகத்தில் துளியாக தெறிக்கும் மழையீரக் கவர்ச்சியே போதும் உள்ளங்களை ஓடும் வெள்ளத்துடன் மிதந்தோட செய்திட. மேற்குநில வெள்ளத்தின் உக்கிரத்தின் ஒரு சிறுகூறை தன் கோடுகளில் ரெப்பெட்டோவால் சித்தரிக்க சிறப்பாக முடிந்திருக்கிறது. அக்கோடுகளுடன் வந்து கலந்து கொள்கிறார்கள் மான்ஃப்ரெடியின் கதை மாந்தர்கள்.

pe3pe4வெள்ளத்தில் சிக்கித் திணறிய நீள்கொம்பன்களை டெக்ஸும், கிட் கார்சனும் கவ்பாய்களுடன் சேர்ந்து காப்பாற்றுகிறார்கள். அந்நிலையில் தன் உயிரையே மதிக்காது, ஒரு கால்நடையைக்கூட இழந்துவிடக்கூடாது எனப் போராடும் ஒரு பாத்திரம் வாசகர்களிற்கு அறிமுகமாகிறது. ஜூன் பீகாக் என அழைக்கப்படும் அப்பாத்திரம் ஒரு அழகான பெண். ஆனால் கவ்பாய்களிற்கு நிகராக காரியம் ஆற்ற தயங்காத ஒரு பெண். தன் கணவன் க்ளிண்ட்டின் மறைவின் பின்பாக பண்ணையின் நிர்வாகம் ஜூன் பீகாக்கின் கைகளில் வந்து சேர்கிறது. அவளிற்கு துணையாக அவள் கணவனின் சகோதரன் கஸ் பீகாக். இருப்பினும் பண்ணை நிலவரம் நன்றாக இல்லை. டொட்ஜ் சிட்டி நோக்கி செல்லும் ரயில்வண்டியில் குறித்த காலத்தினுள் அவர்கள் அம் மந்தையை கொண்டு சென்று ஏற்றாவிடில் பண்ணையை இழக்கும் நிலை ஜூன் பீக்காக்கிற்கு. இங்கு கதாசிரியர் ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை எப்படியாவது டொட்ஜ் சிட்டி ரயிலில் ஏறிட வேண்டும் என வாசகர்களை மனதில் கற்பனை செய்ய ஊக்குவிக்கிறார். ஜூன் பீக்காக்கின் மந்தையை நடாத்தி செல்ல ஆட்பற்றாக்குறை இருப்பதால் டெக்ஸும், கார்சனும் அவளிற்கு உதவி செய்வது என முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் டெக்ஸ் ஒரு முடிவெடுத்தால் அதன்பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கும் என்பதை வாசக நண்பர்கள் அறிவீர்கள். ஜூன் போன்றதொரு கணவனை இழந்து நிற்கும் ஒரு அழகான சிட்டிற்கு துணைசெய்ய டெக்ஸை விட்டால் வேறு யார்தான் பெருமேற்கின் பெருமழையில் நனைந்து வரமுடியும். ஆனால் காரணம் அதுவல்ல. ஜூனின் கணவன் க்ளிண்டின் மரணத்தின் பின்பாக இருக்கும் ஒரு மெல்லிழையான மர்மம் டெக்ஸின் ஆர்வத்தை மெல்ல நனைக்கிறது. அது மட்டுமல்ல க்ளின்ட் பண்ணை இருக்கும் பகுதியில் வங்கிகளை தன்பக்கம் சேர்த்துக் கொண்டு சிறுபண்ணை உரிமையாளர்களின் மந்தைகளையும், நிலங்களையும் தன்னுரிமையாக்கி கொண்ட ஒரு மனிதனின் பெயரும் டெக்ஸ் மனதில் ஒரு பொறியை கிளப்புகிறது. அம்மனிதனின் பெயர் தோர்ன் மில்லர். ஜூன் பீக்காக்கின் கால்நடை மந்தை டொட்ஜ் சிட்டியை வந்தடையக் கூடவே கூடாது என்பதற்காக சகல வழிகளையும் மார்கக்ங்களையும் பிரயோகிக்கத் தயங்காத தோர்ன் மில்லரின் சதித் திட்டங்களிலிருந்து ஜூனின் கால்நடை மந்தையை டெக்ஸ் காப்பாற்றினாரா…. ஜூனின் கணவன் க்ளின்டின் மரணம் விபத்தா இல்லை கொலையா…. கொலையெனில் அதனை செய்தது யார்.. எதற்காக…. தோர்ன் மில்லரை டெக்ஸ் தன் நீதியால் வெல்வாரா என்பதை சீரான ஓட்டத்துடன் மீதிக் கதை சொல்கிறது.

pe5ஜூன் பீக்காக்கின் அழகிலும் கவர்ச்சியான வளமான உடல் வனப்புகளிலும் தன்னை இழந்திடாது துப்பறிவது ஒன்றே தன் கடமை என செயற்பட டெக்ஸால் மட்டுமே இயலும். அடிதடிக்கு இப்படி அலையும் ஒரு ஹீரோவை நீங்கள் காண்பதரிது. வழமைபோலவே கார்சனும், டெக்ஸுமிற்குமிடையில் கிண்டல் பரிமாற்றங்கள். இம்முறை ஜூனை கார்சனிற்கு ஜோடி சேர்த்து டெக்ஸ் அடிக்கும் கிண்டல்கள் ரசிக்கவே வைக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கஸ் பீக்காக் பாத்திரம் வாசகர்களை இறுதியில் கலங்க வைக்கும். மிக அமைதியான ஒரு மனிதன் கஸ் பீக்காக். தன் இருத்தலை அவன் நிருபிக்க செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்விகளாகவும், அவனிற்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவதாகவுமே அமைகின்றன. தன் எண்ணங்களில் நனமை கொண்ட கஸ் அந்த நன்மையுடனேயே வாசகனை பிரிந்து செல்கிறான்.

கதையின் இறுதிவரை க்ளிண்டின் மரணத்தின் பின்பான மர்மத்தை கதாசிரியர் மான்ஃப்ரெடி திறமையாக இட்டு வருகிறார். சில மனிதர்களின் உண்மை முகங்கள் மர்மங்களின் முகங்களுடன்தானே வெளியாகின்றன அறியப்படுகின்றன அதிர்ச்சியுண்டாக்குகின்றன. கால்நடை மந்தை ஒன்றை நடாத்தி செல்லும் வழியில் ஒரு கவ்பாய் குழு எதிர்கொள்ளும் அபாயங்களான இயற்கை, கொள்ளையர்கள், செவ்விந்தியர்கள் என கதை நெடுகே சாகசத்திற்கு குறைவில்லை. அதிலும் பறக்கும் பலூனில் தோர்ன் மில்லருடன் டெக்ஸ் போடும் குங்குபூ சண்டை ஆளவந்தான் க்ளைமேக்ஸை காக்கா நரிவடை க்ளைமேக்ஸ் அளவிற்கு தள்ளி விடுகிறது. கால்நடைகளை வழிநாடாத்தி செல்ல உதவி செய்ய வருவதாக முன்வரும் கொள்ளையர், செவ்விந்தியக் குடிகளிற்கிடையிலேயான மோதல், தகுந்த நேரத்தில் கால்நடைகளை டொட்ஜ் சிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை, இவற்றை எல்லாம் படு சுளுவாக எதிர் கொள்ளும் ரெப்பெட்டோவின் அழகான கம்பீரமான டெக்ஸ், அசர வைக்கும் சித்திரங்கள் என எல்லாம் இருந்தும் மான்ஃப்ரெடியின் இப்பெருங்கதையில் ஆன்மா முழுமையான ஒன்றாக இல்லை. வாசகன் கதையுடன் பாதிக்கும் குறைவாகவே ஒன்றிக்கொள்ள முடிகிறது. சீரான வேகத்தில் சொல்லப்பட்ட நீண்டகதை இதற்கு காரணமாக இருந்தாலும் சாகசம் என்பதை மட்டுமே பிரதானப்படுத்திய கதை சொல்லலையும் நான் இதற்கான ஒரு காரணம் எனச் சொல்வேன். உணர்வுகளையும் தூண்டி இசைக்கும் விதத்தில் கதையமைப்பு அமைந்திருந்தால் ஆபத்துக்களின் பாதை அழகான ஒரு பாதையாக இருந்திருக்கும்.