சில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.
உளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச்சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.
1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்கள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.
நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.
ஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவர்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போல் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.
மனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகாரியாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்கொள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
உளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக!!
ட்ரெய்லர்