Showing posts with label Stephen King. Show all posts
Showing posts with label Stephen King. Show all posts

Wednesday, February 1, 2012

அமெரிக்க காட்டேரி


உலகில் அதிகமாக விற்பனையாகும் புதினங்களை உற்பத்தி செய்திடும் படைப்பாளிகளில் ஒருவராகவே இன்னமும் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் திகழ்கிறார். அவர் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களை ரசித்துப் படித்துவிட்டு தல பின்னிட்டார்ல என்று பாராட்டும் ரசிகர் கூட்டம் அவரிற்கு சர்வதேச ரீதியாக உண்டு. உண்மையில் இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். அவரின் சில படைப்புக்கள் காமிக்ஸ் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு காமிக்ஸ் படைப்பிற்காக பிரத்தியேகமாக எழுதியது American Vampire க்குதான் என இக்காமிக்ஸின் அறிமுகப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

American-Vampire-2-variantScott Snyder என்பவரின் எண்ணத்தில் உதித்திட்ட கதைக்களமே அமெரிக்கன் வம்பயர் ஆகும். கிங்கிற்கு தெரிந்தவர் ஸ்னைடர் என்பதால் கிங் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கிங் கூறியிருப்பதுபடி கதையின் பிரதான பாத்திரமான Skinner Sweet ன் பூர்விகத்தின் அடித்தளங்களை முழுமையாக அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தது வாசகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல அமெரிக்கன் வம்பயர் கதையும்தான்.

லாஸ் ஏஞ்சலீஸிற்கு கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆளரவமற்ற வனாந்தரமான பகுதி ஒன்றில் குவிந்திருக்கும் இருளை முரட்டுத்தனமாக குலைத்தவாறே வருகிறது ஒரு மோட்டார்வண்டி. வனாந்தரத்தின் ஒதுக்கமான ஒரு பகுதியில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மோட்டார் வண்டியிலிருந்து கையில் விளக்குடன் இறங்குகிறது முக்காடு அங்கி அணிந்த ஒரு உருவம். அந்த உருவத்தின் நகங்களின் கூர்மை வனாந்தரத்தின் இருளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. உருவத்தின் முக்காட்டினுள் நுழைந்த இருள் அங்கிருக்கும் இருளைக் கண்டு வேகமாக தன்னிடம் திரும்புகின்றது.

மோட்டார் வண்டியின் கதவை மெல்ல திறக்கிறது அந்த உருவம். திறந்த கதவினூடாக உயிரற்ற விழிகளுடன் வனாந்தரவெளியை வெறிக்கின்றன வண்டியில் அடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள். அருகில் இருக்கும் பள்ளமொன்றில் சடலங்களை இழுத்து வந்து வீசுகிறது முக்காடு உருவம். வண்டியிலுள்ள சடலங்களை தள்ளி முடித்த நிலையில் கிளம்ப தயாராகிறது முக்காடு. அப்போது பள்ளத்திலிருந்து இருளின் ஒரு விழுதை பற்றிக் கொண்ட முணுமுணுப்பாக ஏறிவருகிறது நலிந்த ஒரு குரல். ஒரு பெண்ணின் மரணவாசல் முனகல். இரக்கம் காட்டுங்கள் நான் சாகவில்லை என ஒலிக்கிறது அக்குரல். குரல் வந்த பெண்ணின் உடலில் ஆழமான காயங்கள். துளையிட்ட, கடித்துக் குதறிய, ஆழமாகக் கிழித்த. அவள் கண்மணி வானத்தில் மிதக்கும் பிறைபோல தோற்றம் கொள்கிறது. வான்பிறையும், நட்சத்திரங்களும் அவள் குரலைக் கேட்காதவைபோல மெளனமாக விழித்திருக்கின்றன……

AV1இப்படியாகத்தான் ஆரம்பமாகிறது அமெரிக்கன் வம்பயரின் கதை. புது ரத்தம் என பிரெஞ்சுமொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அமெரிக்கன் வம்பயர் கதையின் முதல் ஐந்து இதழ்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் இரு கதைகள். ஒன்று 1925ல் நிகழ்வது. மற்றையது 1880ல் ஆரம்பமாகி 1925களை நோக்கி வேகமாக நகர்வது. இத்தொகுப்பின் முக்கிய பாத்திரங்களாக ஸ்கின்னர் ஸ்வீட்டையும், பேர்லையும் முன்வைக்க முடியும். புதிய வகை காட்டேரி ஒன்றின் தோற்றம், இருவகை காட்டேரிகளிற்கு இடையிலான வன்முறை, இவற்றின் மத்தியில் அகப்பட்ட நல்மனம் கொண்ட ஒரு சாதாரண துணைநடிகையின் வாழ்க்கையின் பிறழ்வு என்பவற்றை சுவையாக கதை விபரிக்கிறது.

இருளான ஆரம்ப பக்கங்கள் கடந்தபின் பிராகசமான விளக்குகள் ஒளிரும் தாரகையுலகமான ஹாலீவூட்டிற்குள் வாசகர்களை கதையின் பக்கங்கள் அழைத்து செல்கின்றன. பேர்ல், ஹாதி எனும் இரு துணை நடிகைகளின் வாழ்க்கை அப்பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. சினிமா அவர்கள் மீது செலுத்தும் கவர்ச்சி. ஒரு சிறுவேடத்திற்காகவேனும் காத்திருக்கும் அவர்கள் ஆர்வம். பிரபலமான நடிகர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் மையல். நாளாந்த வாழ்க்கையின் சுமைகளை இவற்றை தாண்டியும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என 1925களில் வாழ்ந்திருக்ககூடிய இரு துணைநடிகைகளின் வாழ்வின் ஒரு சிறியகூறை அதிக வேகமின்றி கதை கூறுகிறது. வேகமற்ற கதையின் முக்கிய திருப்பமாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல விருந்திற்கு பேர்ல் எதிர்பாராதவிதமாக அழைப்பு பெறும் நிகழ்வு அமைகிறது. இரவு விருந்திற்கு செல்லும் பேர்ல் அங்கு ரத்தவெறி கொண்டு காத்திருக்கும் சினிமா தயாரிப்பு பிரபலங்களிற்கு இரையாகிறாள். சினிமா தயாரிப்பில் இருப்பவர்கள் காட்டேரிகள் என்று சொல்லப்படுவதில் தவறேதும் இல்லையல்லவா.

இதன் பின்பாகத்தான் ஆரம்பப் பக்கங்களில் வரும் அந்தப் பிறை போன்ற கண்மணிகள் யாருடையவை என்பது தெரியவரும். அது அந்தக் கண்களினால் தெரியவருவதில்லை மாறாக பேர்ல் அவள் முதுகில் குத்திக் கொண்ட சூர்யகாந்தி மலர் பச்சையினால் அது வாசகர்களிற்கு புரியவைக்கப்படும். அந்த தருணம் கதையின் அருமையான திருப்பத் தருணங்களில் ஒன்று. ஆனால் பேர்லிற்கு அதிர்ஷ்டம் இன்னொருவன் வழியாக வருகிறது, அதை ஒருவர் அதிர்ஷ்டம் என அழைப்பது சரியாக இருக்குமேயெனில். அவன் தான் Skinner Sweet. அவன் தான் இப்பதிவின் தலைப்பு. அவன் தான் பேர்லையும் ஒரு காட்டேரியாக மாற்றுகிறான்.

ஆகவே ஸ்கின்னர் ஸ்வீட் எவ்வாறு ஒரு காட்டேரியாக மாறினான் என்பதை வாசகர்களிற்கு 1925லிருந்து 1880 க்கு காலப்பாய்ச்சல் மூலம் தாவி அவன் கதையைக்கூற ஆரம்பிக்கிறார்கள் கதாசிரியர்கள். கொள்ளை ,கொலைகளை தயங்காமல் செய்யும் ஒரு கூட்டத்தின் தலைவனான ஸ்கின்னர் காட்டேரியாக மாற வழிவகுத்த நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் கதையில் விபரிக்கப்படுகிறது. இப்பகுதியில் வெஸ்டெர்ன்களின் பாணியில் கதைகூறப்படுகிறது, இக்காமிக்ஸ் தொகுப்பின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உருக்கொண்ட முதல் காட்டேரியாக கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கின்னர் ஸ்வீட்டிற்கும், அவனை தற்செயலாக காட்டேரியாக மாற்றிவிட்ட, ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த காட்டேரிகளிற்குமான பகையும், வெறுப்பும் அங்கிருந்து காலாகாலமாக தொடர ஆரம்பிக்கிறது. 1880களில் காட்டேரிகள் வங்கி உரிமையாளர்களாகவும், புகையிரதப்பாதையின் சொந்தக்காரர்களாகவும், அதிகாரம், தங்கம், பணம், போன்றவற்றின் மீதான தீர்க்கவியலாத் தாகம் கொண்ட முதலாளித்துவ வர்க்கமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இக் காட்டேரி முதாலளித்துவத்திற்கு எதிரான வன்முறை அராஜகவாதியான ஸ்கின்னர் ஸ்வீட் அறிமுகமாகும் தருணத்திலிருந்து கதை வேகம் கொள்ள ஆரம்பிக்கிறது.

AV2கொள்ளை, கொலை, குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கி மோதல்கள், எதிர்பாரா திருப்பங்கள் என திகிலும் விறுவிறுப்பும் கதையில் கூடிக்கொள்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் காட்டேரிகள் தம்மை தூய குருதி கொண்ட இனமாக காண்கிறார்கள். ஸ்கின்னர் அவர்களை பொறுத்தவரையில் களங்கமான குருதி கொண்டவன். களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. அவன் பலவீனங்கள் வேறானவை. அப்பலவீனங்களை கண்டுகொள்ள பெரும் தேடல் கொள்கிறார்கள் தூயகுருதிக் காட்டேரிகள். ஸ்கின்னர் ஸ்வீட் காட்டேரிகளின் பரிணாமத்தின் முதல்படியாக கதையில் சித்தரிக்கப்படுகிறான்.

காலஓட்டத்தில் தொடர்ந்து செல்லும் காட்டேரிகளிற்கிடையான யுத்தத்தில் பேர்லை தன் யுத்தத்தில் பயன்படும் ஒரு சதுரங்க சிப்பாயாக உபயோகித்துக் கொள்கிறான் ஸ்கின்னர். அவன் கடந்து வரும் பாதைகளில் எல்லாம் அவன் எதிரிகளின் கல்லறைக் கற்கள் சிறு செடியாக முளைத்து நிற்கின்றன. அவன் எதிரிகளின் பெயர்கள் வாடா மலர்களாக அவற்றின் மேல் பூத்திருக்கின்றன. அவன் மனமெல்லாம் புது எண்ணங்கள் வியூகங்கள் கொப்பளிக்கின்றன. அவற்றின் நிறைவின் வழி வழிந்தோடப்போகும் குருதி அவனை அக்கணமே மேலும் தாகம் கொண்டவனாக்குகிறது. பில் பண்டிங் எனும் எழுத்தாளர் கூறுவதாக ஸ்கின்னர் ஸ்வீட்டின் கதை காமிக்ஸில் அமைந்திருக்கிறது. ஸ்கின்னரின் சாகசங்களை அல்லது கொடூரச் செயல்களை நேரில் பார்த்த சாட்சியமாக பில் பண்டிங் இருக்கிறார். பில் பண்டிங்கின் நண்பனான காவல்துறை அதிகாரி கிம் புக்கும் கதையில் வரும் சிறப்பான ஒரு பாத்திரமே. உனக்கு வயதாகி விட்டது, நான் நித்யத்திற்கும் இளைஞன், மெதுவாக, இயல்பாக மனிதர்கள் இறப்பது போலவே நீ இறந்து போ, இதைத்தவிர சிறந்த வஞ்சம் என் கண்களிற்கு தெரியவில்லை என்று குறிப்பெழுதி பில் பண்டிங்கை ஸ்கின்னர் உறைய வைக்கும் தருணம் காட்டேரிக் கவித்துவமான தருணம்.

1206416-american_vampire_02_cover_by_rafaelalbuquerqueart_super1பேர்ல் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தனக்கு பிடித்த சித்திரங்களை அருகே வரைந்து கொள்கிறது. ஓவியர் Rafael Albuquerque படு அட்டகாசமாக சித்திரங்களை படைத்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு இதழின் இறுதிப்பக்கத்திலும் வரும் சித்திரம் அசரவைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறார் என்று கூறிடலாம். அவள் எதிர்கொள்ளும் தருணங்கள் வழி தன் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னரை சுற்றியிருக்கும் மர்மங்கள் இக்கதை தொகுப்பில் முற்றிலுமாக கூறி முடிக்கப்படவில்லை. அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்கின்னர் தெருவொன்றில் நடந்து செல்கையில் இன்னுமொரு அசத்தலான திருப்பத்தை அறிமுகம் செய்து வைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர். இருப்பினும் பேர்ல் இயல்பாகவே ரத்த வெறி கொண்ட ஒரு காட்டேரியாக கதையில் சித்தரிக்கப்படுவதில்லை. அவள் காட்டேரியாக மாற்றம் கொள்ளும்முன் அவளிடம் இருந்த மனிதநேயம் அவளை விட்டு நீங்காமலே இருக்கிறது. தன் எதிரிகளை துவம்சம் செய்து தீர்த்தபின் அமைதியான ஒரு இடம் தேடி ஒதுங்கி கொள்ளவே விரும்புகிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னர் அழிவு என்பதை அறிமுக அட்டையாக வினியோகிக்கும் ஒரு வெறியன். இனத்துவேஷன். இப்படியாக பேர்லிற்கும் ஸ்கின்னரிற்குமிடையில் அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே இருந்திட்ட மனித இயல்புகள் இறந்த பின்னும் மாறிடவில்லை என்பதாக கதை நகர்கிறது.

பீற்றிக்கொள்ளும் முன்னுரையில் கிங், ஒரு ரத்தக் காட்டேரி ஒருபோதும் இவ்வாறு இருத்தல் ஆகாது என பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறார். ப்ளடிமேரிகளை சுவைத்துக் கொண்டு இரவில் மட்டும் பணியாற்றும் தோல் வெளிறிய ஒரு துப்பறிவாளனாக. நீயூ ஆர்லியன்ஸை சேர்ந்த துக்கத்தில் தோய்ந்த ஒரு ஆண்விபச்சாரியாக. மனவழுத்தம் கொண்ட ஒரு விடலையாக. ஒளிகடத்தும் தோலும் மான்களை போல் கண்களையும் கொண்ட ஒரு வாலிபனாக. ஸ்கின்னரில் இந்தப் பண்புகள் இல்லை என்பது உண்மை. கிங் யார் யாரை குறிவைக்கிறார் என்பதும் ஓரளவு புரிகிறது. ஆனால் கிங் தனித்துக் கதையை உருவாக்கி இருப்பேரயானால் கதை இவ்வளவு விறுவிறுப்புடன் நகர்ந்திருக்காது என்பது அணில் ரத்தம் அருந்தி வாழும் காட்டேரிகளிற்கும் தெரிந்த விடயம். ஐந்து காமிக்ஸ் இதழ்கள் கொண்ட முதல் தொகுப்பை படித்து முடிக்கையில் அடுத்த தொகுப்பையும் படிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர் ஸ்காட் ஸ்னைடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. சித்திரங்களும் தரமாக இருக்கின்றன. ஆங்கில மொழியில் மூன்று தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. காட்டேரி + வெஸ்டெர்ன் அதிரடி விரும்பும் வாசக உள்ளங்கள் இம்முதல் தொகுப்பிற்காக டவுன்லோட் அய்யானாரை தாராளமாக நாடுங்கள். கதை உங்கள் ரத்தத்தினை அதிகம் உறிஞ்சாது. [***]

Sunday, July 10, 2011

அரியணை ஆட்டம்


மாயப்புனைவு ஒன்றினது ஆரம்ப பக்கங்கள் அதனைப் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் மனதை விளைச்சலிற்கு தயாராகவுள்ள உள்ள ஒரு நன்னிலம் போல் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். வாசகன் மனதில் அந்த ஆரம்ப பக்கங்கள் விதைக்கும் எதிர்பார்ப்புகளே அவனை ஆர்வத்துடன் தொடரும் பக்கங்களை நகர்த்திட பெரிதும் உதவுகின்றன. பரந்த ஒரு வாசகப் பரப்பை கொண்டிருக்கும் மாயப்புனைவுவானது தன்னை ஏனைய மாயப்புனைவுகளில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அந்த வேற்றுமைகளை வாசகனிடம் சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டிய தன்மையை கொண்டதாகவும் இருத்தல் அதன் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். George R.R. Martin படைத்திருக்கும் A Song of Ice and Fire நாவல் தொடரின் முதல் புத்தகமான A Game of Thrones மாயப்புனைவொன்றின் பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

ஏழு ராஜ்யங்களின் மன்னனாக முடி சூடிக்கொண்ட ராபார்ட் பராத்தியோன் அகால மரணமடைந்துவிட, அவன் அரியணையை கைப்பற்றி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்ள பிரபுக் குடும்பங்களினிடையே நடக்கும் போட்டியே இம்முதல் பாகத்தின் பிரதான அம்சமாகும். ஆனால் அப்போட்டியானது மன்னன் ராபார்ட்டின் மரணத்தின் முன்பே ஆரம்பமாகி இருக்கிறது.

பனிக்காலமோ, வசந்த காலமோ எல்லைகள் இன்றி நீண்டு செல்லக்கூடிய ராஜ்யமொன்றின் வடக்குப் பகுதியில் பனிக்கட்டியாலான எல்லைச்சுவரிற்கு அப்பால் இருக்கும் அடர் வனமொன்றில் ஆரம்பிக்கும் கதை, அவ்வனத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் மூலமாக வாசகன் மனதில் மாயத்தின் மர்மத்தை மெல்லிய இழையொன்றால் முடிச்சாக்கி விடுகிறது. வழமையான மாயப்புனைவுகளில் காணக்கிடைப்பது போல் விந்தை மனிதர்களும், அதிசய சக்திகளும், வினோத சிருஷ்டிகளும் பக்கத்திற்கு பக்கம் ஜார்ஜ் மார்ட்டினின் கதையில் காணக்கிடைப்பதில்லை. ஆனால் மாயமும் மந்திரமும் உண்டு என்பதை வாசகன் மனதில் ஒரு சந்தேகமாக ஊன்றி விட்டு, யதார்தமாக கதையை நகர்த்த ஆரம்பித்து விடுகிறார் கதாசிரியர் மார்ட்டின்.

பிரபுக்களின் குடும்பங்கள் வழியாக நாவலில் கதையை நகர்த்தி செல்கிறார் மார்ட்டின். பாத்திரங்களின் பெயர்களே அத்தியாயங்களின் தலைப்பாக இடம்பிடித்துக் கொள்ள ஏழு ராஜயங்களின் ஆரம்ப வரலாற்றையும், அதன் ஆதிகுடிகளான வனக்குழந்தைகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதையும், வனக்குழந்தைகளின் அழிப்பின் பின்பாக ஏழு ராஜ்ஜயங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ராஜ குடும்பமான டார்காரெயன்களினது அழிப்பையும், ஏழு ராஜ்யங்களின் தற்கால மன்னனான ராபார்ட் பராத்தியோன் எவ்வாறு இறுதி டார்காரெயன்களை வெற்றி கொண்டு அரியணையைக் கைப்பற்றினான் என்பதனையும் தொய்வுகள் ஏதுமின்றி விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார் மார்ட்டின்.

வழமையாக மாயப்புனைவில் காணப்படாத குரூரமும், ரத்தமும், காமமும், அதிகாரத்திற்கான வெறியும் வெகு இயல்பாக கதையின் வரிகளில் குடியேறி வாசகன் ஆர்வத்துடன் பக்கத்தை திருப்ப செய்து விடுகிறது. வார்த்தைகளையும், வரிகளையும் கண்டிப்பான முறையில் கதையிலிருந்து விலகாதவாறு எழுதுவதில் மார்ட்டின் அபார வெற்றி விடுகிறார். மிக முக்கிய நாயகர்களாக அறிமுகமாபவர்களிற்கு அவர் வழங்கும் முடிவுகள் வாசகர்களிற்கு அதிர்ச்சியை எதிர்பாராச் சுவையாக வழங்குமெனில் அவையே அடுத்து நடக்கப்போவது என்ன எனும் ஆர்வத்தனலையும் அவர்கள் மனதில் உப்பி ஊதி விடுகின்றவையாக அமைகின்றன.

A_Game_of_Thrones_Genesis_Art01

கதையின் முதல் பாகத்தில் பலபாத்திரங்கள் அறிமுகமானலும் என் மனதைக் கவர்ந்த சில பாத்திரங்கள் குறித்து சில வரிகளை எழுதி விடுகிறேன். கதை ஆரம்பிக்கும் வடக்கு ராஜயத்தின் ஆண்டகையான ஸ்டாக் பிரபுவிற்கு திருமண பந்தம் இன்றி பிறந்த பையான ஜொன் ஸ்னோ, கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே என் மனதைக் கவர்ந்து விட்டான். திருமண பந்தமின்றி பிறக்கும் குழந்தைகளிற்கு குடும்ப பெயரிற்கு பதிலாக ஸ்னோ [ Snow ] எனும் பெயர் பொதுவான ஒரு பெயராக வடக்கு பகுதி ராஜ்யத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தன் தந்தையின் அருகில் வாழ்ந்தாலும் கூட தான் முழு உரிமைகளும் அற்ற ஒருவன் என உணர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் ஜொன் ஸ்னோ பாத்திரம் மனதில் இலகுவாக பதிந்து விடுகிறது. அதேபோல் கதையில் இடம்பிடிக்கும் அமானுடங்களை எதிர் கொண்டு வெல்லும் முதல் பாத்திரமாக ஸ்னோ சித்தரிக்கப்படுகிறான். கதையில் மாயத்தின் மந்திரத்தின் பங்கு சிறிதுதான் ஆனால் அவை பிரசன்னமாகும் தருணங்கள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மன்னன் ராபார்ட்டின் அகால மரணத்தின் பின்பாக நிகழும் அரியணைக்கான போட்டியில் நிகழும் யுத்தங்களில் கலந்து கொள்வதை தெரிவு செய்யாது பனியாலான நீண்ட எல்லைச் சுவரின் பின்பாக காத்திருக்கும் அடர்ந்த ஒரு குளிர்காலத்தையும் அது தன்னுடன் எடுத்து வரக்கூடிய அபாயங்களையும் அமானுடங்களையும் எதிர்த்துப் போராட தயாராகி நிற்கும் ஸ்னோ கதையின் சிறப்பான பாத்திரங்களில் ஒருவன் ஆவான்.

டார்காரெயன்கள் ராஜ வம்சத்தின் இறுதி இளவரசியாக அறிமுகமாகும் டேனி [Daenerys] , தன் சகோதரனுடன் ஒடுங்கிய கடல் தாண்டிய பென்டோஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வருபவள். தான் மூதாதையர் இழந்த ஏழு ராஜ்ஜயங்களையும் மீண்டும் வென்று மன்னனாக முடிசூட வேண்டும் என்பது டேனியின் சகோதரனான விசெரிஸில் ஒரு வெறியாகவே வளர்ந்து வருகிறது. பதின்மூன்று வயதான தன் தங்கையை குதிரைப் பிரபு ஒருவனிற்கு மணம்முடித்து வைத்து குதிரைப்பிரபுவின் வீரர்களையும் உதவியையும் பெற்று ஏழு ராஜ்யங்களை கடல் கடந்து சென்று வென்றிடும் வெறியோடு அலையும் இறுதி ட்ராகன் என தன்னைக் கூறிக் கொள்ளும் விசெரிஸ், அதற்காக தன் தங்கையை குதிரைப் பிரபுவோடும், அவன் வீரர்களோடும், அவ்வீரர்களின் குதிரைகளோடும் புணர வைக்க சிறிதும் தயங்காதவன். ஆனால் குதிரைப் பிரபுவை திருமணம் செய்து கொள்ளும் டேனி மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள். திருமணப் பரிசாக அவளிற்கு வழங்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் தம்மில் ஒரு ரகசிய மர்மத்தை வசீகர வண்ணமாக பொதித்து வைத்திருக்கின்றன. டேனி எதிர்பார்த்த எல்லாம் அவளிற்கு கிடைக்கிறதா என்பதை விட டேனி எவ்விதமான ஒரு ஆளுமையாக மாற்றம் கொள்கிறாள் என்பதுதான் இப்பாகத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். குதிரை பிரபுக்களை தொடரும் ஜனங்களின் வினோத பண்பாடுகள், பென்டோஸ் தேசத்தின் பல இன மக்களின் ஆச்சர்யமான வழக்கங்கள், கறுப்பு மந்திரம், காமம், ரத்தம் என அட்டகாசமாக செல்லும் இப்பகுதி கதையில் தனியாகவே கூறிச்செல்லப்பட்டாலும் நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அடித்துப் போட்டு விடும் சுவையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையில் ட்ராகன்கள் இருக்கிறதா என என் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார், படு அட்டகாசமான, நாவலின் இறுதி அத்தியாயத்தில் அதற்கு விடை இருக்கிறது என்பதுதான் அவரிற்கு என் பதில். இந்நாவலின் மிகச்சிறப்பான பாத்திரமாக டேனி உருப்பெற்று நிற்பதும் அந்த இறுதி அத்தியாயத்தில்தான்.

iron-throneமன்னன் ராபார்டின் மனைவி செர்ஸி, லேனிஸ்டர் எனும் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவள். லேனிஸ்டர் குடும்பம் கதையில் வீரமும், சதிக்குணமும் கொண்ட ஒரு குடும்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. செர்ஸியுடன் கூடப் பிறந்த சகோதரன்களில் ஒருவன் குள்ளன். அவன் பெயர் தியோன். குள்ளனாக இருப்பதால் தன் தந்தையால் ஒதுக்கப்படும் தியோன் கதை நெடுகிலும் வாசகன் மனதில் உயர்ந்தவனாகிக் கொண்டே செல்வான். ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவன், தனக்குரிய அங்கீகாரத்தை ஒதுக்கபட்ட இனத்தின் வழியாகவே வென்றெடுப்பான். நகைச்சுவையும், யதார்த்தமும், மனதை தொடும் உணர்வுகளுமாக இப்பாத்திரம் அருமையான ஒன்றாக கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் மார்டினின் எழுத்துக்கள் சற்று அவதானத்தை வேண்டும் வகையை சார்ந்தது. அவரின் வரிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் உணர்ந்து படிக்கையில் கதையைப் படித்தல் ஒரு சுகமான அனுபவமாக மாறி புத்தகத்தை பிரியமான ஒன்றாக மாற்றியடிக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே மான் கொம்புகள் வயிற்றில் புதைந்து உடைந்த நிலையில் இறந்து கிடக்கும் பனி ஓநாய் ஒன்றினதும் அதன் பரிதவிக்கும் குருளைகளையும் வைத்தே கதை எப்படி நகரும் என்பதை காட்டியிருப்பார் மார்ட்டின் [ ஓநாய் மற்றும் மான் ஆகியவை கதையில் இடம் பிடிக்கும் இரு பிரதான குடும்பங்களின் இலச்சினைகள் ஆகும் ]. யார் நல்லவர், யார் கெட்டவர் எனும் எண்ணங்களிற்கே இடம் தராத வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியின் முன்பாக எந்த மனிதனும் ஞானியல்ல என்பதை தெளிவாக்குகிறார் மார்டின். ஓற்றர்கள், தளபதிகள், யுத்தங்கள், யுத்த தந்திரங்கள், விலை மாதர்கள், சதிகள், எதிர்பாரா திருப்பங்கள், அமானுடங்கள், வேறுபட்ட கடவுள் நம்பிக்கைகள் என வாசகனை முழுமையாக திருப்திபடுத்தும் இந்நாவல் மாயபுனைவுகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று என்பேன். [****]

மார்டினை படித்து முடித்ததும் அவர் தொடர் நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்க மனம் விரும்பினாலும் மாயப்புனைவை படிக்காது வேறொன்றை படிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தேன். ஸ்டீபன் கிங்கை நான் தற்போது படிப்பது இல்லை. அவரின் சில நாவல்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் அவர் தற்போது எழுதும் நாவல்கள் என் ரசனையை தாண்டியுள்ளவையாக இருக்கின்றன என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்றும் அவர் நாவல்கள் பெஸ்ட் செல்லர்களாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும். நண்பர் ஒருவர் கிங்கின் Bag of Bones படித்துக் கொண்டிருக்கிறேன் அதன் ஆரம்ப பக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என அந்நாவலை எனக்கு பரிந்துரைத்தார். நல்ல நாவல் என ஒன்றை ஒருவர் பரிந்துரைக்கையில் அதனை முயற்சி செய்து பார்ப்பது எனக்கு பிடித்தமான காரியங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. எனவே அந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

9780340951422Bag of Bones நாவலின் கதை, தன் மனைவியை பறிகொடுத்த ஒரு கதாசிரியனின் உணர்வுகளை அதன் ஆரம்ப பக்கங்களில் விரிக்கிறது. தன் மனைவியின் மரணத்தின் பின்பாக அவள் தன்னிடம் கூறாது மறைத்திருந்த ஒரு விடயம் கதாசிரியன் மைக் நூனான் மனதை சந்தேகத்தால் அரித்தாலும் தன் மனைவியைப் பிரிந்த ஏக்கமும், அவள் மீதான அவன் அன்பும் அப்பக்கங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன. இந்நிலையில் கதாசிரியனான மைக் நூனானிற்கு கற்பனை தடை உருவாகி அவனால் புதிய படைப்புக்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ஓய்வை நாடும் மைக், தான் வாழும் நகரத்தை விட்டு தன் விடுமுறைக்கால வாசஸ்தலமான Sara Laughs எனும் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவ்வீட்டில் அவன் தனியாளாக இல்லை என்பதை நிரூபிக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறி விடுகின்றன.

இந்த முதல் திருப்பத்திற்கு வருவதற்கே வாசகன் ஏறக்குறைய 170 பக்கங்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது, அதன் பின்கூட வேகமாக சில தருணங்களிலேயே கதை நகர்கிறது என்பது வேதனையானதே. மனதை தொடும் சில பக்கங்கள் இருந்தாலும், குழந்தை ஒன்றின் மீதான ஏக்கத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் அருமையான சில தருணங்கள் இருந்தாலும், சாரா லாஃப்ஸ் எனும் அவ்வீட்டில் இருக்கும் மர்மங்கள் விடயத்திலும் திகிலிலும், அதற்கான காரணங்களிலும் சலிக்க வைத்து விடுகிறார் ஸ்டீபன் கிங். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி எம்மை அழைத்து செல்லும் ஒருவர் ஒரு மோசமான சிட்டை எமக்கு அறிமுகப்படுத்தும் போது உருவாகும் அந்த உணர்வு ஸ்டீபன் கிங்கின் பாக் ஆஃப் போன்ஸின் இறுதிப் பக்கங்களில் உத்தரவாதமாக கிடைக்கிறது. இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான். [*]

Monday, April 13, 2009

இருள் கோபுரம்

வணக்கம் அன்பு நண்பர்களே,

முதலில் அனைத்து நண்பர்களிற்கும், அவர்கள் குடும்பத்தினர்க்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இனிமையான கனவுகள் யாவும் இவ் வருடத்தில் நிறைவேறட்டும்.

வாழ்க்கையில் சில வேளைகளில் அதிர்ஷ்டம் தானாகவே வந்து உங்கள் முதுகில் அமர்ந்து விடுவதுண்டு. நீங்கள் முதுகில் அக்கறையாக சோப்பு போட்டுக் குளித்தால் கூட அது உங்களை விட்டு நீங்காது. அவ் வகையான மச்சக்காரரும், மன்மதனின் குளோனுமான கிங் விஸ்வா தன் பிறந்த நாளை சிட்டுக்கள், நிலவுகள் சகிதம் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். நண்பர் விஸ்வாவிற்கு அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க எனஅவரை வாழ்த்துகிறேன்[ வயதை அறிய விரும்பியவர்கள் என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.]

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. உங்கள் மேலான கருத்துக்களிற்கான பதில்களை நீங்கள் அப் பதிவுகளின் கருத்துப் பெட்டிகளில் காணலாம்.

காமிக்ஸ் வலைப்பூக்கள் பற்றிய சிறு பார்வை இதோ.

அரேபியாவில் ஆர்ச்சி, மற்றும் இரும்புக்கை மாயாவி ஆகியோரின் இரு கதைகளை தரவிறக்கம் செய்ய உதவியுள்ளார் நண்பர் லிமட். ஆர்ச்சி மற்றும் விச்சு & கிச்சுவின் வர்ணப் பக்கங்களும் உண்டு.

நண்பர் ஷேர் ஹண்டர், இரண்டு சினிமா விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். படிக்க வேண்டிய விமர்சனங்கள்.

பல நாட்களாக நீதியை எதிர்த்துப் போராடி வரும் தலைவர் டாக்.7, அவர்கள் முத்துக் காமிக்ஸின் கோடை மலர் பற்றி அரிய படங்களுடன் கூடிய சிறப்பானதொரு பதிவை வழங்கியுள்ளார். அவர் தந்துள்ள முன்னோட்டங்கள் ஏங்க வைக்கிறது.

ஜெஸ்லாங் எனப்படும் மறக்கடிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் நாயகரைப் பற்றி அருமையான பதிவினை தந்திருக்கிறார் நண்பர் விஸ்வா. நல்ல தேடலுடன் கூடிய பதிவு. தகவல் பிரியர்களிற்கு வாசிப்பதற்கு விடயங்கள் அடங்கிய ஜெஸ்லாங் ஸ்பெஸல்.[ மேற்கூறிய பதிவுகள் யாவும் புத்தாண்டு சிறப்பு பதிவுகளால் பின் தள்ளப்படக்கூடிய வாய்புகள் பெருமளவு உண்டு.]

இப் பதிவு நண்பர்களாகிய உங்களிற்கு என் புத்தாண்டுப் பரிசு. இது உங்களை மகிழ்விக்கும் என்றே எண்ணுகிறேன். கதையை தொடங்கலாம்....

வறண்ட, கண்களைக் கூசச் செய்யும், வெண்மனற் கடலாக விரியும் ஒர் பாலைவனத்தில், கரிய ஆடை அணிந்த தன் எதிரி ஒருவனைத் துரத்திச் செல்லும் இத்துப்பாக்கி வீரனின் தேடலின் கதை, அவன் இளைஞனாக இருக்கும் போது ஆரம்பமாகிறது. numérisation0045

dtpg3

ஜிலாட் எனும் நகரின், நெடிய கோட்டையின் முன்னே பரந்திருக்கும் பசுமையான புல்வெளி, அது பனித்துளிகளின் கவிதை வெளி. இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் போதும் என நிற்கும் மரங்கள். அங்கு குழுமியிருக்கிறது இளைஞர்கள் குழுவொன்று. அவர்கள் நிற்கும் தோரனையின் பிம்பம், மரணத்தை கெக்கலிக்கிறது. அவர்களின் கையுறை அணிந்த கரங்களின் மீது கம்பீரமாக, அரசர்கள் போல் வீற்றிருக்கின்றன ராஜாளிகள். ரோலண்ட், கத்பேர்ட், அலன் என்பவர்களுடன் இன்னும் சில இளைஞர்களும் தயார் நிலையில் நிற்கிறார்கள். அவர்களின் குருவான கோர்ட், உரத்த குரலில் அறிவுறுத்தல்களை உரைத்துக் கொண்டிருக்கிறான். தன் மாணக்கர்கள் போர் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தது போல், வேட்டையாடல் தந்திரங்களையும் கற்று தேர்ந்துள்ளார்கள் என்பதனை தனக்கு நீருபித்துக் காட்டும் படி இளைஞர்களை உறுத்துகிறான் கோர்ட். தனக்குச் சேர வேண்டியது தன்னை வந்தடையும் எனக் காத்திருப்பது முட்டாள்களின் நம்பிக்கை எனக்கூறும் கோர்ட், தன் அருகில் இருந்த , பறவைகள் நிரம்பிய கூடையொன்றின் மேல் மூடியை தன் நீண்ட கத்திக் கோலால் தட்டி விட, விடுதலையின் காற்றை சுவாசிக்க வேகமாக மேலே பறக்கின்றன வெண்புறாக்கள்- மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே-.

ரோலண்டின் கையில் இருந்த டேவிட் எனும் பெயர் கொண்ட ராஜாளி, மற்ற ராஜாளிகளைக் காட்டிலும் வேகமாகப் பாய்ந்து சென்று ஒர் வெண்புறாவைக் கொத்தி, பின் அதனை தன் கால்களில் அடக்கி தன் நண்பன் ரோலண்டை நோக்கி அம்பெனப் பாய்ந்து வருகிறது. ரோலண்டின் கைகளில் டேவிட் அமர்ந்து விட்ட பின்னும் கூட ஏனைய ராஜாளிகள் காற்றில் மேலே பறந்து கொண்டிருகின்றன. அந்த ராஜாளிகளின் எஜமானர்களாகிய இளைஞர்களைக் கடிந்து கொள்கிறான் கோர்ட். தங்களை இம்முறை மன்னித்தருளும் படி இளைஞர்கள் கோர்ட்டிடம் வேண்டுகிறார்கள். இரவுணவும், காலை உணவும் அவர்களிற்கு இல்லை என உத்தரவிடுகிறான் கோர்ட். இதன் பின் ரோலண்டைப் பார்க்கும் கோர்ட், நான் புழுக்களாகிய உன் நண்பர்களுடன் நடந்து கொள்ளும் முறை உனக்கு கடினமாக இருக்கிறதா? உன் அதிருப்தியை ஆண்மகன் போல் என்னிடம் வெளிப்படுத்த விரும்புகிறாயா என வினவுகிறான். அதற்கு நீ தயாராகி விட்ட தருணத்தில், எம் பரம்பரை வழக்கத்தின் படி நீ என்னுடன் மோதி என்னை வெற்றி கொள்வாய் எனில் நீ ஒர் துப்பாக்கி வீரன் ஆகலாம் இல்லையேல் இந் நகரை விட்டு, உறவுகளை அறுத்து நீ வெளியேறலாம் எனக் கூறியவாறே புல்வெளியை விட்டு விலகிச் செல்கிறான் கோர்ட்.

dtpg4

நகரின் நிழல் உறங்கும் வீதிகள் வழியே தன் வீடு திரும்புகிறான் ரோலண்ட். அவன் தந்தை ஸ்டிவன், துப்பாக்கி வீரர்களின் தலைவர்களில் ஒருவன், முக்கிய புள்ளி. அவன் நகரை விட்டு நீங்கி இரண்டு வருடங்களாகி விட்டது. எல்லா மனிதர்களிடமும் பலவீனங்கள் உண்டு. ஸ்டிவனிற்கு அவன் ஆலோசகனும், மாந்திரீகனுமான, மார்ட்டென். ஸ்டிவன் தன் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பதிலாக ரோலண்டின் தாயை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறான் மார்ட்டென். ரோலண்ட் தன் வீட்டு வாசலை நெருங்குகிறான், வாசல் கதவு திறக்கப் பட அங்கு நிற்கும் மார்ட்டென் ரோலண்டை உள்ளே அழைகிறான், ரோலண்டின் தாய் அவனுடன் பேச விரும்பியதையும் தெரிவிக்கிறான். தாயின் அறையில் நுழையும் ரோலண்ட், தாயின் நிர்வாணத்தைக் காண்கிறான், அவள் கழுத்தில் ரத்தம் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்டுள்ள தழும்புகளை அவதானிக்கிறான். ரோலண்டின் உள் மனதில் தாய் மீதான ஒர் வெறுப்பு எழுகிறது. தாய் அவனிடம் அன்பும் அக்கறையுமாக கேட்ட கேள்விகளிற்கு பதிலளித்து விட்டு அவ்வறையை விட்டு நீங்குகிறான் அவன். ரோலண்டிடம் மன்னிப்பு கேட்க விரும்பும் தாயை அடிக்க ஆரம்பிக்கிறான் மார்ட்டென்.

மார்ட்டென் மீதுள்ள வன்மம், தாய் மேல் கொண்ட வெறுப்பு ஆகியவையால் உந்தப்பட்ட நிலையில் கோர்ட்டின் வீட்டிற்கு செல்லும் ரோலண்ட், வீட்டின் கதவுகளை தன் காலால் உதைத்து உடைக்கிறான். தான் இது வரை கற்றது போதும் என கோர்ட்டிடம் கூறும் அவன், கோர்ட்டை தன்னுடன் மோதும் படி அழைப்பு விடுக்கிறான். ரோலண்ட் தனக்குரிய ஆயுதங்களை தெரிவு செய்து கொள்ளலாம் எனக் கூறும் கோர்ட், சரியாக ஒரு மணி நேரத்தில் அவனைச் சந்திப்பதாக கூறுகிறான்.

கோர்ட்டின் இல்லத்திலிருந்து ராஜாளிகளின் கூடு நோக்கி செல்கிறான் ரோலண்ட். கத்பேர்ட்டும், அலனும் அவனை தொடர்ந்து செல்கிறார்கள். ராஜாளிகளின் கூட்டை அடையும் ரோலண்ட், தன் ராஜாளியான டேவிட்டை தன் கையில் அமர்த்திக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடுகிறான். அவன் பேச்சை மெளனமாக கேட்கிறது விசுவாசமான அப்பறவை. ராஜளியைக் கையில் ஏந்திக்கொண்டு கோர்டை எதிர் கொள்ள கிளம்புகிறான் ரோலண்ட். உன் ஆயுதம் எங்கே, ஆயுதத்தை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாயா என அவனிடம் கேட்கிறான், கத்பேர்ட். என்னிடம் ஆயுதம் உண்டு என விடையளிக்கிறான் ரோலண்ட். நகரத்தின் வெளியிலிருக்கும் புல் வெளியில் கோர்ட்டை சந்திக்கிறான் ரோலண்ட். உன் ஆயுதம் என்ன என ரோலண்டிடம் கேட்கிறான் கோர்ட். தன் ராஜாளியே தன் ஆயுதம் எனக் கூறுகிறான் ரோலண்ட். கோர்ட் தன் நீண்ட கத்திக் கோலை தயார் படுத்திக் கொள்ள, மோதல் ஆரம்பமாகிறது.

கோர்ட் சகல போர் முறைகளையும் கற்றவன், தேர்ந்தவன். ஆனால் கற்றவை யாவும் புதிதான ஒன்றின் முன்பாக சில வேளைகளில் பலமிழந்து விடும் தருணங்கள் உண்டு. ராஜாளி தான் தன் ஆயுதம் என என ரோலண்ட் கூறிய போதே கோர்ட் உஷார் அடைந்திருக்க வேண்டும். மெளனமான ஒர் தோட்டாவைப் போல் கோர்ட்டை தாக்கியது ராஜாளி,அது அவன் முகங்களில் தன் கூரிய நகங்களால் கீறி ரத்தத்தை வரவழைக்க, ரோலண்டும் கோர்ட் மீது பாய்கிறான். தொடரும் உக்கிரமான மோதலில், கோர்ட்டின் காதொன்றினை பிய்த்தெடுக்கிறது ராஜாளி. ராஜாளியை தன் கரங்களினால் கிழித்துக் கொல்கிறான் கோர்ட், கோர்ட்டின் நீண்ட கத்திக் கோலின் மூலமாகவே, அவன் தோல்வியை ஒப்புக் கொள்ள வைக்கிறான் ரோலண்ட்.

numérisation0041 numérisation0040

கோர்ட்டினை வீழ்த்தியதன் மூலம் ரோலண்ட்டிற்கு துப்பாக்கி வீரன் தகுதி கிடைக்கிறது. காயமடைந்து கிடக்கும் கோர்ட்டின் மருத்துவ சிகிச்சைகளிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறான் ரோலண்ட். பின் தன் வீடு திரும்பும் அவன் தங்கள் பரம்பரையின் ஆயுதக்கிடங்கினுள் நுழைகிறான். தன் தந்தையின் சந்தன மரப் பிடி கொண்ட துப்பாக்கியை மெதுவாக தடவிப் பார்க்கும் ரோலண்ட் பின் தனக்கென சில துப்பாக்கிகளை எடுத்துக் கொள்கிறான். ஆயுதக் கிடங்கிலிருந்து வெளியேறும் ரோலண்ட்டை துப்பாக்கிகளுடன் காணும் மார்ட்டென், அவன் துப்பாக்கி வீரனாகி விட்டதை தெரிந்து கொள்கிறான். அவன் மனதில் சிறிய பயமும், ஆச்சர்யமும் ஒருங்கே எழுகின்றன. வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் ரோலண்ட், தன் நண்பனின் உதவியுடன் புதைகுழி ஒன்றில் தன் ராஜாளியைப் புதைக்கிறான். வரும் வருடங்களில் இதே நாளில் தன் ராஜாளியின் நினைவாக அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிப்பான். அது அவன் தன் நண்பனான ராஜாளிக்கு தந்த கடைசி வாக்கு.

நகர் நோக்கி திரும்பும் ரோலண்ட் வெற்றி இரவைக் கொண்டாட விலை மாதரை தேடிச் செல்கிறான். பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு, ஒர் பெண்ணுடன் நிம்மதியாக உறங்கிப் போகிறான். உறக்கத்தின் மத்தியில் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு விழிப்படைந்து விடும் ரோலண்ட் வேகமாக தன் துப்பாக்கியை கைகளில் எடுக்கிறான். கதவருகில் நிற்கும் உயர்ந்த உருவத்தை குறி பார்த்த தருணத்திலேயே அவன் துப்பாக்கி அவன் கைகளில் சிதறுகிறது. உன் தகப்பனின் முகம் உனக்கு மறந்து விட்டதா என வினவிய படியே ரோலண்ட்டை நெருங்கும் அவன் தந்தை ஸ்டிவன், ரோலண்ட் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக கடிந்து கொள்கிறான். ரோலண்டின் ஆத்திரத்தை சாந்தப்படுத்தும் ஸ்டிவன், அவனிடம் சில விடயங்களை விளக்க ஆரம்பிக்கிறான்.

dtpg5

numérisation0043

விஷப் பொருட்களினாலும், அகோரமான மனிதக் கருப் பிண்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தன் அறையில் இருந்து, ஒர் தீய சக்தியுடன் தொடர்பு கொள்கிறான் மார்ட்டென். அந்த தீய சக்தி வேறு யாருமல்ல சிலந்திகளின் ஆண்டகை எனப்படும் செவ்வேந்தன் [Crimson King]. அவனை சுற்றி சுழல்கின்றன ஆறு தரிசனக் கோளங்கள். அதில் அவனிற்கு அருகில் எப்போதும் காணப்படும் கரிய நிறக் கோளத்தில் மார்ட்டெனின் முகம் தெரிகிறது. ஸ்டிவன் நகரிற்கு திரும்பி விட்டதையும், துப்பாக்கி வீரர்களையும், பிரபுக்களின் கூட்டணியையும் ஒழிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளதையும், ரோஜா வண்ணத் தரிசனக் கோள் செவ்வேந்தனின் விருப்பத்திற்கிணங்க உரிய நபரிடம் சேர்பிக்கப் பட்டு விட்டதையும் மார்ட்டென் செவ்வேந்தனிடம் தெரிவிக்கிறான். ரோலண்ட் பற்றி கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனம் நிறைவேறாத படிக்கு செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கையாளும் படி மார்ட்டெனை மிரட்டி விட்டு மறைகிறான் செவ்வேந்தன். இவ்வேளையில் ஸ்டிவனின் வேண்டுதலை முன்னிட்டு மார்டெனின் துரோகத்திற்காக அவனைக் கைது செய்ய வரும் அதிகாரிகளை தன் மந்திர சக்தியால் நாய்களாக உருமாற்றி விட்டு, கற்பாறை ஒன்றில் மாயக் கதவு ஒன்றினை உருவாக்கி அதன் வழியே தப்பிச் சென்று விடுகிறான் மார்ட்டென்.



dtpg6

numérisation0042

ஹாம்ப்ரே எனும் நகரத்திற்கு, ரோலண்ட், கத்பேர்ட், அலன் ஆகிய மூவரையும் போலி அடையாள அட்டை, பொய்ப் பெயர் சகிதமாக பிரபுக்களின் கூட்டணிக்கு குதிரை வாங்குபவர்கள் போல் அனுப்பி வைக்க தயாராகிறான் ஸ்டிவன். கூட்டணியின் எதிரியான ஃபார்சனுடன் அந்நகரத்தின் அதிகார அமைப்பு இணைந்து செயற்படுகிறதா என்பதனை ஒற்றறிதலே இப் பயணத்தின் உண்மையான நோக்கம். டெல்காடோ எனும் பெயர் கொண்ட குதிரை வளர்ப்பவனை அணுகும் இளைஞர்கள், அவன் ஃபார்சனிற்காக பெட்ரோல் சுத்திகரிப்பு செய்கிறானா என்பதனையும் வேவு பார்த்தல் வேண்டும். ஃபார்சன் பெட்ரோலைப் பயன்படுத்தி முன்னோரின் ஆயுதங்களை பயன் படுத்த முயற்சித்தால், அப் பெட்ரோலியக் கிணறுகள் அழிக்கப் பட வேண்டும் எனவும் அவர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப் படுகிறது. தகவல்களை பரிமாறிக் கொள்ள புறாக்கள் பயன்படும் எனவும் தெரிவிக்கப் படுகிறது. பல ஆபத்தான சுழல்கள் நிறைந்த அப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் இளைஞர்கள்....




numérisation0044numérisation0024 கூஸ் எனும் பகுதியில் இருக்கும் சூன்யக்கார கிழவியிடம் செவ்வேந்தனின் ரோஜா வண்ணக் கோளம் ஏன் வந்து சேர்ந்தது?

ஹாம்ப்ரே நகர மேயர் தொரினின் ஆசை நாயகியான சூசானிற்கும், ரோலண்டிற்கும் இடையில் அரும்பு விட்ட காதலின் நிலை என்ன?

சவப் பெட்டி வேட்டையர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும், ஹாம்ப்ரே நகர ஷெரீப்களான ஜோனாஸ், டுபாப், ரெனோல்ட்ஸ், இவர்களிற்கும், அழிவையே தன் உயிர் மூச்சாக கொண்ட கூட்டணியின் எதிரியான ஃபார்சனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? நகரத்தில் இவர்களுடன் உரசிக் கொண்டு விட்ட இளைஞர்களின் கதி என்ன?

ஃபார்சனை சென்றடையும் மார்டெனின் புதிய திட்டங்கள் என்ன?

இக் கேள்விகளை எல்லாம் வாசகர் மனதில் எழுப்பி நிறைவடைகிறது The Gunslinger born எனும் தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை உள்ளடக்கிய தொகுப்பு. கதை, திகில் கதை மன்னனின் கதை. அவர் உருவாக்கிய ஒர் கற்பனை உலகு. அங்கு நிகழும் சம்பவங்களை தொய்வே ஏற்படாத வண்ணம் கொண்டு சென்றுள்ளார் காமிக்ஸின் கதை ஆசிரியர். கதை ஒர் புறமிருக்க, அக் கற்பனை உலகிற்கு உயிர் தந்து வாழ விட்டிருப்பவர்கள் ஓவியர்கள். ஒவ்வொரு பக்கமும் அற்புதமாக இருக்கிறது. சித்திரங்களை மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன ஒவியங்கள். ராஜாளி வேட்டை, கோர்டுடனான மோதல், கூஸ் சூன்யக்காரியின் பிரதேசம், ரோலண்ட், சூசான் ஆகியோரின் முதல் சந்திப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

dt002

இத்தொகுப்பை முதலில் பத்து பக்கங்கள் படிக்கலாம் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ஒரே வீச்சில் ஆல்பத்தினை படித்து முடித்தேன், ஆல்பம் என்னை மயக்கி விட்டது.

பிரபல திகில் நாவலாசிரியர் ஸ்டிஃபன் கிங்கின் The Dark Tower எனும் நாவல் தொடரினைத் தழுவி இக்காமிக்ஸ் கதை உருவாக்கப் பட்டுள்ளது. கிங் இக் காமிக்ஸ் தொடரின் படைப்பாக்க மற்றும் நிர்வாக இயக்குனராக செயற்படுகிறார்.

ஐந்து பாகங்களையும் மொத்தமாக 31 அத்தியாயங்களையும் கொண்டது இக் காமிக்ஸ் தொடர். ஆங்கில மொழியில் இதன் முதல் அத்தியாயம் பிப்ரவரி 7, 2007ல் நள்ளிரவு வெளியீடாக வெளி வந்தது. பிரென்ஞ்சு மொழியில் ஃப்யூசன்காமிக்ஸ் இத்தொடரை சிறப்பாக வெளியிடுகிறது.

கதையின் திட்ட அமைப்பை Robin Furth அமைக்க Peter David கதாசிரியராகச் செயல் படுகிறார். ஆளை அசத்தி அடிக்கும் ஒவியங்களிற்கு சொந்தக்காரர்கள், Jae Lee மற்றும் Richard Isonove ஆவார்கள். தொகுப்பின் பின் இணைப்பாக சில அத்தியாயங்கள் கதைக் களத்தினை மேலும் தெளிவாக்குகின்றன. இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்.

ஆல்பத்தின் தரம் *****

நண்பர்களே பதிவைக் குறித்த மேலான உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லும்படி வேண்டுகிறேன்.

ஆர்வலர்களிற்கு

மார்வல்

மார்வல் டிஜிடல் பக்கங்கள்