
தொலைமேற்கின் பெருவெளிகளை புகையை கக்கியவாறே ஊடறுத்து செல்கிறது ஒரு புகையிரதம். காவல்துறையால் கைது செய்யப்பட்ட, Mat Riders எனும் பிரபல கேடிக் குழுவின் தலைவனை பலத்த பாதுகாப்புடன் அந்த பயணிகள் ரயிலில் அழைத்து செல்கின்றனர் காவல் அதிகாரிகள். சட்டத்தின் மரணப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தங்கள் தலைவனை மீட்பதற்காக அந்தப் பயணிகள் ரயிலை யாரும் எதிர்பார்த்திராத வகையில் அதிரடியாக தாக்குகிறார்கள் மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர். அந்த மோதலில் வெடித்துச் சிந்தும் ரத்தம், அதன் வாடை, அதே புகையிரதத்தில் ரகசியமாக பெட்டிகளிற்குள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிக்கும் சிலவற்றை ரத்த வெறி கொண்டெழ வைக்கின்றன.
காவல் அதிகாரிகள், பயணிகள், மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர் என யாவரும் இந்த ரத்தவெறி பிடித்த கோரப் படைப்புக்களின் வெறிக்கு இரையாகி அழிய, அந்த புகையிரதத்தில் பயணிக்கும் ஒருவன் மட்டும் அந்த ரத்த வெறி கொண்ட குரூரங்களை தன் துப்பாக்கியாலும், நீண்ட கத்தியாலும், சல்லடையாக்கியும், கூறுகளாக்கியும் வழியும் குருதியில் அவன் கிண்ணத்தை நிரப்பி தன் ஆண்டகையின் பாதை செல்கிறான்.
அவன், ஏற்கனவே இறந்து போனவன். நரகத்தின் இருண்ட ஆழத்தில் தன் ஆன்மாவின் பாதியை தீமையின் ஆண்டகையிடம் தந்து மறுபிறப்பு கண்டவன். அவனில் ஊற்றெடுத்துப் பெருகும் வஞ்சம் எனும் தாகத்தை தணிக்க தன் எதிரிகளின் குருதி தேடி வெற்றுக் கிண்ணமான மனத்துடன் பயணிப்பவன். அவன் பெயர் இவான். இவான் இசாக்….
ஜப்பானிய காமிக்ஸ்களை மங்கா எனும் பெயர் கொண்டு அழைப்பது போல கொரிய காமிக்ஸ்களை Manhwa என அழைக்கிறார்கள். மேன்ஹ்வா என்பது கொரிய மொழியில் காமிக்ஸ், கேலிச்சித்திர வகைகள் மற்றும் அசைவூட்டம் என்பவற்றை குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக இருக்கிறது. Priest ஒரு கொரிய காமிக்ஸ் ஆகும். இக்கதையை எழுதி அதற்கு அசத்தலான சித்திரங்களையும் வரைந்திருக்கிறார் Hyung Min-Woo. ஜப்பானிய மங்காக்களை போல் அல்லாது மேன்ஹ்வா காமிக்ஸ்கள் இடமிருந்து வலமாக எமக்கு பழக்கமான வாசிப்பு முறையில் படிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. [ ப்ரீஸ்ட் கதையினை ஒரு மங்காவிலிருந்து அதிகம் வேறுபடுத்திக் காண என்னால் இயலவில்லை, சித்திர பிரயோகங்களும், கதை நகரும் பாணியும் மங்காவையே நினைவூட்டுகின்றன- நான் படிக்கும் முதல் கொரிய காமிக்ஸ் இதுதான், பதிவில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் யாவும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்து கையாளப்படுகிறது.]
கதையின் இருளான ஆரம்ப பக்கங்களில், நரகத்தின் ஆழத்தில் துன்புற்றிருக்கும் இவான், வஞ்சத்திற்காக தன் ஆன்மாவின் ஒரு பாதியை தீமையின் ஆண்டகை ஒருவனிடம் தந்து, நரகத்திலிருந்து வெளியேறி தன் எதிரிகளை தேடி பயணத்தை ஆரம்பிக்கிறான். Xavilon எனும் குருவையும், அந்தக் குருவின் விசுவாசிகளான ஸோம்பிகளையும் [zombie] கொன்றழிப்பது அவன் பயணத்தின் முதல் படியாகும். இவானின் இந்தப் பயணம் மேட் ரைடர்ஸ் கேடிக்குழு அதிரடியாகத் தாக்கும் அந்த புகையிரதத்திலேயே ஆரம்பமாகிறது.
இவான் அவன் கொன்றொழிக்க விரும்பும் கோரங்களை போன்ற ஒரு படைப்புத்தான். ஆனால் அவனில் எஞ்சியிருக்கும் பாதி ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிது மனிதம் அவனை அந்த கோரங்களை விட அபாயகரமானவனாக மாற்றி அடிக்கிறது. இவான் பாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் கதையில் உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் மின் வூ. வஞ்சமும், கொலைவெறியும் அவனை ஆக்கிரமிக்க அவனுள் ஒடுங்கியிருக்கும் ஒரு குற்றவுணர்வு அவனைக் கொல்வதை கதாசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். மோனநிலையில் அவன் உடலும், ஆன்மாவும் தீமையின் ஆண்டைகையான Vessiel ன் பிடியில் ஒரு கொலை எந்திரமாக மாறிவிட, இந்த உக்கிரமான போர்க்களத்தில் அவன் தொலைத்த காதல் அவனுள் அவனிடம் இல்லாத உயிராக எட்டிப்பார்த்து மண்டியிடுகிறது.
இவான் எவ்வாறு இறந்தான்? Xavilon எனும் குருவையும் அவன் விசுவாசிகளையும் ஏன் இவான் அழிக்க விழைகிறான்? தீமையின் ஆண்டகை Vessiel க்கும் Xavilon வழிபடும் ஆண்டவனான Temosare க்குமிடையில் நிலவும் வன்மத்திற்கான காரணம் என்ன ? அபரிமிதமான சக்திகளை தம்மகத்தே கொண்ட Vessiel, Temosare என்பவர்கள் யார் ? இவானின் காதலியான Zena விற்கு அவன் இழைத்த துரோகம் என்ன? முதல் பாகம் எழுப்பும் இவ்வகையான கேள்விகளிற்கு தொடரும் பாகங்கள் விடையை தரலாம். இக்காமிக்ஸ் தொடர் மொத்தம் 16 பாகங்களாக வெளியாகியிருக்கிறது. கதாசிரியர் மின் வூ வின் பிரபலமான தொடராக ப்ரீஸ்டே இன்றுவரை அறியப்படுகிறது.
ஆரம்பம் முதலே கதை மிக வேகமாக நகர்கிறது. காமிக்ஸ் வாசகர்களிற்கு மிகவும் பிடித்தமான தொலைமேற்கிலே கதை இடம்பெறுகிறது. மாடுகளை காணவில்லை ஆனால் ஸோம்பிகள் அதிகளவில் தென்படுகின்றன. ஆக்ஷன் பகுதிகள் கதையின் பக்கங்களை ஆரவாரமாக ஆக்கிரமிப்பு செய்ய குருதியும், வன்முறையும், இருளும் சித்திரங்களை போட்டி போட்டுக் கொண்டு நிரப்புகின்றன. கதையில் இடம்பிடித்திருக்கும் சித்திரத்தின் பாணி அபாரமாக இருக்கிறது. கதைக்கே அது ஓர் கூரிய தன்மையை வழங்கிவிடுகிறது. மட் ரைடர்ஸ் குழுவினர் புகையிரதத்தில் காவல் அதிகாரிகளுடன் ஆரம்பிக்கும் மோதல், இவான் கொடூரப் படைப்புக்களுடன் நிகழ்த்திச் செல்லும் உச்சக் கட்ட மோதல் வரை தொடர்ந்து அதிரடி செய்கிறது. பயங்கர திகில் ஆக்ஷன் ப்ரிய்ர்களிற்கு இக்கதை ஒரு அருமையான விருந்து என்பதில் சந்தேகம் இல்லை.
இக்காமிக்ஸ் தொடர் பெற்ற வரவேற்பையடுத்து இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. Evil Dead புகழ் பிரபல இயக்குனர் Sam Raimi படத்தை தயாரிக்க 300 புகழ் ஹீரோ Gerad Butler பிரதான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த முடிவை அறிந்த ப்ரீஸ்ட் மேன்ஹ்வா ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். கொரிய குட்டைப் பிள்ளையாரிற்கு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் விதி வலியது! 3D தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த வருடம் திரைக்கு வருகிறது ப்ரீஸ்ட். காமிக்ஸ் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல். ப்ரீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் உண்மையிலேயே ஆர்வத்தை தூண்டுகிறது. அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் ட்ரெயிலர்கள் மட்டுமே அட்டகாசமாக இருக்கும் திரைப்படங்கள் வரிசையில் ப்ரீஸ்டும் இடம் பிடித்திடாது இருக்க அந்த ஹாலிவூட் கருமாரி அம்மன் ப்ரீஸ்டிற்கு அருள் பாலிக்கட்டும். [***]
அசத்தல் ட்ரெய்லர்
