கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடும் பிரயத்தனங்களோடு கடலோடி, வரலாற்றில் தனக்காக சேர்த்து வைத்திருந்த நல்ல அபிப்பிராயங்கள் எல்லாம் இன்று தொலைந்துபோய் விட்டன எனலாம். அமெரிக்காவை அவர் கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்காவில் முதல் காலடி வைத்த ஐரோப்பியர் அவரில்லை, அவர் பயணங்கள் இன அழிவிற்கும், அமெரிக்க நிலத்தின் வளங்கள் பிறதிசைகள் நோக்கி பயணிக்கவும் காரணமாக இருந்தன என அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவாறாக உள்ளன. அமெரிக்காவை முதல் முதலாக வரைபடத்தில் பதிந்தவர் எனும் பெருமையாவது அவரிற்கு கிடைக்குமா எனில் 16ம் நூற்றாண்டில் காணாமல் போன அவரின் வரைபடம் இன்னம் யார் கைகளிற்கும் கிடைக்கவில்லை. ஆக கடலோடிகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் கொலம்பஸ் இழந்து கொண்டிருக்கும் பெயரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என கதறி ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஸ்டீவ் பெரியின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.
ஸ்டீவ் பெரி வரலாற்று மர்மக்கதைகள் எழுதுபவர். இதுவரை 10க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய The Columbus Affair சனி பகவான் அருளால் என் பார்வையில் பட்டது. கொலம்பஸ், நாஸ்ட்ராடமுஸ், டாவின்ஸி, மிக்கேல் ஏஞ்சலோ எனும் பெயர்களை கண்டவுடனேயே கவிழ்ந்துவிடும் எனக்கு இந்நாவலை படித்தேயாக வேண்டும் எனும் ஆசை வந்ததில் என்ன தவறு இருக்க முடியும். மேலும் என்னைப்போன்ற ஏமாளிகள் இல்லையெனில் ஸ்டீவ் பெரியின் நாவல்களை படிப்பது யார்? உண்மையில் ஏமாளிகளை தவிர்த்து ஸ்டீவ் பெரியின் நாவல்களை தொடர்ந்தும் படிப்பவர்கள் அவர் ஜீவிதம் நடாத்த வேண்டும் எனும் நல்லவுள்ளம் கொண்ட உயர்ந்தவர்கள் எனவே நான் எண்ணுகிறேன். அவர்கள் மட்டும் சற்று கல்மனம் கொண்டவர்களாகவும் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை இன்னம் மறக்காமலும் இருப்பவர்களாக இருந்தால் ஸ்டீவ் பெரி இன்று கொலம்பஸ் கண்டுபிடித்ததாக பீலா விட்டுக் கொண்ட நிலத்தில் புல்லு செதுக்கி கொண்டிருப்பார்.
கொலம்பஸ் செய்த பயணத்திற்கு காரணம் வணிகம் அல்ல எனவும் அதன் பின்பாக ஒரு இனம் அழியாது இருப்பது தங்கியிருக்கிறது எனவும் தன் கற்பனையால் கோலம் போடுகிறார் ஸ்டீவ் பெரி. கொலம்பஸ் உண்மையில் யார் என்பதையும் அவர் இனவடையாளம் என்ன என்பதையும் மிகவும் சிரமப்பட்டு சொல்ல விழைகிறார் அவர். இதற்கு சான்றாக சில வரலாற்று தகவல்கள் கூடவே தன் அபாரமான வறட்டுக் கற்பனையால் படைத்த தகவல்கள். இவ்வாறு கொலம்பஸ் செய்த அப்பயணத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இன்றைய நாளில் ஒரு முக்கிய ஸ்தலத்தை தேடி தேடலில் இறங்கும் ஒரு கொடியவன். அவனை எதிர்க்கும் ஒரு அல்லது சில மனிதர்கள்.
கொலம்பஸ் குறித்த வரலாற்று தகவல்கள் இல்லை எனில் இந்நாவல் சுண்டல் சுற்றக்கூட உதவிடாது [ இருந்தாலும் உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது]. ஆகவே கொலம்பஸ் குறித்த தகவல்களை அதிகம் தந்து சமாளித்து இருக்கிறார் ஸ்டீவ் பெரி. ஆனால் இந்நாவலில் வரும் கதாமாந்தர்கள் போன்ற அறிவிலிகளை நீங்கள் எங்கும் சந்திக்கப் போவது இல்லை. நம்ப இயலவில்லையா? நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு முன்னாள் பிரபல பத்திரிகையாளன், யூத செல்வந்தன், இஸ்ரேலிய தூதரக இயக்குனர், அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, ஜமைக்கா தாதா என ஒருவரிற்கு ஒருவர் யார் சிறந்த அறிவிலி என்பதற்கு கதையில் பெரும்போட்டியே நடக்கிறது. ஆனால் இப்போட்டியில் எளிதாக பரிசை வெல்வது பத்திரிகையாளன் மகளான ஆல். இப்படி ஒரு அறிவிலியை இக்கதையில் வரும் பாத்திரங்கள்கூட கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இவ்வகையான கதைகள் பல நாடுகளில் கதைக் களத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் வரைவிலக்கணப்படி அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜமைக்கா போன்ற நாடுகளில் இக்கதை சம்பவங்கள் நிகழ்கிறது. உல்லாச வழிகாட்டி தகவல்களை பார்த்து பிரதி செய்து எழுதியதைப் போல் தகவல்களை அள்ளி வீசுகிறார் ஸ்டீவ் பெரி. ஆஸ்திரியா, ஜமைக்கா, மற்றும் வார இறுதியில் க்யுபா செல்பவர்கள் தங்கள் வழிகாட்டி ஏடாக இந்நாவலை பயன்படுத்தலாம். தகவல்கள் சரியாக இல்லை எனில் ஸ்டீவ் பெரிக்கு சரியான தகவல்களை நீங்கள் அனுப்பி வைத்தும் உதவலாம்.
அவன் கைகள் நடுங்கின.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
துப்பாக்கியின் முனை அவன் நெற்றியை அழுத்தியது.
அவன் விரல்கள் விசையை அமுக்கின.
வீட்டின் கதவு தட்டப்பட்டது.
இதுதான் ஸ்டீவ் பெரியின் அட்டகாசமான கதை சொல்லும் பாணி. அது மட்டுமல்லாது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் உத்தி வேறு. வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிக்கு இதைவிட வேறுவழி இன்னம் வசப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
அவன் விரல்கள் துப்பாக்கி விசையை அழுத்தின.
துப்பாக்கி வெடித்தது.
இது நான் எழுதியது. வெடித்த துப்பாக்கியின் முனையில் இருக்கும் நெற்றி ஸ்டீவ் பெரியினுடையதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. ஸ்டீவ் பெரியின் எழுத்துக்களிற்கு ஒத்த சொல், மொக்கை!