Showing posts with label Jim Sheridan. Show all posts
Showing posts with label Jim Sheridan. Show all posts

Tuesday, March 16, 2010

சகோதரர்கள்


சாம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். அழகிய இளம் மனைவி கிரேஸ், இரு பெண் குழந்தைகளான இசபெல், மஹி எனச் சிறிய அன்பான குடும்பம் அவனுடயது. தன் காதல் மனைவியுடனும், மகள்களுடனும் ஆனந்தமாக தன் வாழ்வைக் கழிக்கிறான் சாம்.

சாமிற்கு டாமி எனும் சகோதரன் இருக்கிறான். சாமைப் போல் நேர்வழியில் நடக்கத் தெரியாதவன் டாமி. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் டாமி, நிபந்தனைக்குட்பட்ட விடுதலையில் சிறையிலிருந்து வெளியே வருகிறான்.

தன் சகோதரன் டாமி மேல் மிகுந்த பாசம் கொண்டவன் சாம். அவர்கள் தந்தையான ஹாங்ஸ், டாமியை அவன் செயல்களிற்காக வெறுப்பவராக இருந்தாலும் தன் சகோதரன் டாமிக்கு அன்பும், ஆதரவுமாக இருக்கிறான் சாம். அதே போல் டாமியும் தன் சகோதரன் சாமை அதிகம் மதிப்பவனாகவும், அவன் மேல் அன்பு கொண்டவனாகவும் இருக்கிறான். சிறையில் இருந்து விடுதலை பெறும் டாமியை நேரில் சென்று அழைத்து வரும் சாம், அவனிற்கு நல்ல வழியில் நடக்கும்படி ஆலோசனைகள் வழங்குகிறான்.

இவ்வேளையில் சாம் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனும் அழைப்பு அவனிற்கு விடுக்கப்படுகிறது. நல்லதொரு வீரனாக அந்த அழைப்பை ஏற்று, தன் அன்பான உறவுகளைப் பிரிந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்கிறான் சாம்.

ஆப்கானிஸ்தானில் சாம், தன் சக வீரர்களுடன் ஒரு ஹெலிஹாப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அக்ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. விபத்துக்குள்ளான ஹெலியில் பயணம் செய்தவர்களைத் தேடித் தீவிர தேடுதலை நடத்தும் அமெரிக்க ராணுவத்தினால், சாமையோ, அவன் உடலையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் சாம் இறந்து விட்டதாக கருதி, அமெரிக்காவில் இருக்கும் அவன் மனைவி கிரேஸிடம் அவன் இறந்து விட்டதான தகவலைத் தருகிறது அமெரிக்க ராணுவம்.

brothers-2010-15080-58759356 தன் அன்புக் கணவன் சாம் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாகிய கிரேஸ், இத்தகவலால் உள்ளே நொருங்கிப் போகிறாள். சாமின் இரு பெண் பிள்ளைகளின் மீதும் கூட தந்தையின் மரணம் குறித்த வேதனையின் துகள்கள் மெல்ல விழுந்து விடுகின்றன. சாமின் சகோதரன் டாமி இந்த செய்தியறிந்து துடித்துப் போகிறான்.

சாம் வாழ்ந்த நகரில் அவனிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சாம் மிகவும் சிறந்த வீரன், நல்லதொரு நண்பன் என அவனைப் பற்றி சக வீரர்கள் நினைவு கூருகிறார்கள்.

இளம் வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த கிரேஸ், கண்ணீரிற்கு மத்தியில் தன் வாழ்வைத் தேடுகிறாள். தன் கணவனின் மேல் சட்டைகளில் அவன் வாசனையை நுகர்கிறாள். சாமுடன் ஆனந்தமாக கழித்த தருணங்களை மனதில் மீட்டிப் பார்க்கிறாள். சாமின் பிரிவு மெல்ல அவளை உள்ளே கொல்கிறது.

சாமின் சகோதரன் டாமி, தன் சகோதரனின் மரணத்தின் பின் தன் நடவடிக்கைகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான். சாமின் மகள்கள் இருவரோடு தன் நேரத்தை செலவிடுகிறான். இஸபெலும், மகியும் டாமியை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். கிரேஸின் வசதிகளற்ற சிறிய சமையலறையை தன் நண்பர்களின் உதவியுடன் புதுப்பித்து தருகிறான் சாம். தன் சகோதரனின் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். கிரேஸின் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை மலர வைக்க முயல்கிறான் அவன்.

குழந்தைகளினதும், டாமியினதும் தொடர்ந்த முயற்சிகளால் கிரேஸ் தன் கணவனின் மரணத்தின் சோகச் சுழலிலிருந்து மேலெழ ஆரம்பிக்கிறாள். கிரேஸும், டாமியும் அவர்கள் அறியாமலே தங்களிற்குள் நெருங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

brothers-2010-15080-619381143 ஒரு நாள் இரவு, கிரேஸிற்கும், டாமிக்குமிடையிலான இந்தப் புதிய உறவானது அதன் எல்லைகளை சற்றுத் தாண்டிப் பார்த்து விட அவர்களை அழைத்து செல்கிறது. ஆனால் எல்லை தாண்டலின் ஆரம்ப நிலையிலேயே இருவரும் சுதாரித்துக் கொண்டு தங்கள் மரியாதையான உறவின் எல்லைகளிற்குள் திரும்பி விடுகிறார்கள். எல்லையை சற்றுத் தாண்டியதற்காக உண்மையிலேயே அவர்கள் உள்ளம் வேதனை கொள்கிறது.

இச்சம்பவத்தின் பின்னும் கிரேஸின் குழந்தைகளை வந்து சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்கிறான் டாமி. இப்போது கிரேஸிற்கும் டாமிக்குமிடையில் புரிந்துணர்வு கூடிய ஆரோக்யமான உறவு நிலவுகிறது. இந்நிலையில் கிரேஸிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பானது அவள் கணவன் சாம் இறக்கவில்லை உயிருடனேயே இருக்கிறான் எனும் தகவலை அவளிற்குத் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தன் வீட்டிற்கு திரும்பும் சாம் வேறொரு மனிதனாக மாறியிருக்கிறான். தாலிபான்களின் கொடூரமான சித்திரவதைகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு வரும் சாம்,மன அழுத்தங்களின் பயங்கரக் குவியலாக இருக்கிறான். அவன் மனதில் இருக்கும் ஒரு ரகசியம் அவனை அகச் சித்திரவதை செய்கிறது. வீடு திரும்பிய சாம், தன் மனைவிக்கும், சகோதரனிற்குமிடையில் நிலவும் உறவு குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறான்……

போர் அது நிகழும் இடத்தில் ஏற்படுத்தும் அழிவுகளை தாண்டி உருவாக்கக்கூடிய அழிவுகள் உண்டு. போர் உருவாக்கும் அவ்வகை அழிவுகளின் மாயக் கரங்களின் நீட்சி எல்லையற்றது. யுத்த முனையிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ அதிகாரி, எவ்வாறு தன் வாழ்வையும், தன் அன்பான குடும்பத்தின் வாழ்க்கையையும் நரகத்தின் வாயிலிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பிக்கிறான் என்பதை அதிர்ச்சியுடன் விரிக்கிறது Brothers திரைப்படம்.

டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் Susanne Bier இயக்கிய Brodre எனும் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படமிது. திரைப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Jim Sheridan.

brothers-2010-15080-852099240 திரைப்படத்தின் அதிர்வைத் தரும் ஆச்சர்யம், சாம் வேடத்தில் வரும் Tobey Maguire. ஸ்பைடர் மேனில் நாம் கண்ட அந்த இனிய ஹீரோவா இவர் என்று புருவங்களை வியப்பால் உயர வைக்கிறார் டாபி மாக்குவைர்.

படத்தின் ஆரம்பத்தில் சிரித்த முகமும், அன்பு நிறைந்த குடும்பத் தலைவனாகவும் வரும் சாம், ஆப்கானில் தாலிபான்களின் சித்திரவதைகளின் போது படிப்படியாக மாற்றம் பெற்று முற்றிலுமாக வேறொரு உருவம் எடுத்து விடுகிறார். வெறித்த பார்வையும், உயிரற்ற கண்களும், மெலிந்த உடலுமாக, பின் வரும் அவரின் தோற்றமே மிரட்டுகிறது.

சாம், தன் மனைவியின் மீதும், சகோதரன் மீதும் சந்தேகம் கொள்ளும் கணங்கள் நுன்னிய ஊசி முனையால் குத்தும் உணர்வை வழங்குகிறது. போர் ஒன்றின் விளைபொருளான சாம் பாத்திரம் தன் மனதில் அடக்கி வைத்திருக்கும் ரகசியத்தையும், அழுத்தங்களையும் சுமக்க முடியாது உடைந்து அமிழ்வது வேதனையானது.

சாமின் அழுத்தங்கள் அவன் கட்டை மீறி வெடிக்கும் இரு கணங்கள் படத்தில் உண்டு. முதலாவது கணம் சாமின் மகள் மஹியின் பிறந்த நாள் இரவுணவின் போது இடம் பெறுகிறது அந்த வெடிப்பின் தொடர்ச்சியாக சாமின் அன்பு மகள் இஸபெல், நீ ஆப்கானில் செத்துப் போனவனாகவே இருந்திருக்கலாம் என சாமைப் பார்த்துக் கதறுவது கனமானது.

brothers-2010-15080-510483742 இரண்டாவது கணம், டாமி புதிதாக திருத்தியமைத்த கிரேஸின் சமையலறையை சாம் அடித்து நொருக்கும் காட்சி. டாபி மாக்குவைரின் நடிப்பு மிகையானதா அல்லது அழுத்தங்கள் குவிந்த ஒரு மனிதனின் இயல்பு இதுதானா என்று பிரித்தறிய முடியாதவாறு வன்மம் பீரிடும் உக்கிரமான காட்சி அது. அன்பு, சந்தேகம், வன்மம், உடைதல் என டாபி மாக்குவைரின் சினிமாப் பாத்திரங்களில் மிகவும் பேசப்படும் ஒரு பாத்திரமாக சாம் பாத்திரம் அமையும். [ ஸ்பைடர் மேன் 4ல் டாபி மாக்குவைர் இல்லையாம்]

சந்தேகமும், வன்முறையும், அச்சமும் குடிகொண்ட ஒரு கணவனை அன்புடன் சகித்துக் கொள்ளும் கிரேஸ் பாத்திரத்தில் Natalie Portman. பித்துப் பிடித்த நிலையில் சந்தேக வெறி கொண்டாடும் கணவனை தன் அன்பால் அணைக்கத் துடிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் நத்தாலியின் திறமைக்கு இப்பாத்திரம் அதிக வாய்ப்பை வழங்கி விடவில்லை. திரைப்படத்தை பார்க்கும் யுத்த முனையிலிருக்கும் அமெரிக்க வீரர்கள் கிரேஸ் போல் ஒரு மனைவி தங்களிற்கும் வேண்டும் என்று ஏங்குவார்கள்.

கொஞ்சம் முரடனாக இருந்து, நல்ல வழிக்கு திரும்புவனாக டாமியின் பாத்திரத்தில் நடிகர் Jake Gyllenhall. ஆரம்ப காட்சிகளில் தன் தந்தையுடன் மோதுவதும், சாமின் மரணத்தின் பின் அவன் குடும்பத்தின் மீது அக்கறை எடுப்பதும், கிரேஸ் மீது கவரப்பட்டு பின் ஒதுங்குவதும், வீடு திரும்பும் சாம் தன் சந்தேக கேள்விகளால் தாக்கும் போது அதனை அமைதியாக எடுத்துக் கொண்டு தன் சகோதரனை எப்போதும் அன்பால் அணைத்துக் கொள்வதுமென மிக இயல்பாக நடிக்க வருகிறது ஜேக் ஜிலன்ஹாலிற்கு. டாமிக்கும் அவரது தந்தை ஹாங்ஸிற்குமிடையிலான உறவு சாமின் மறைவின் பின் மீண்டும் வலுப்பெற ஆரம்பிப்பது மிக மென்மையாக கூறப்பட்டிருகிறது.

இரு சகோதரர்களினதும் தந்தையான ஹாங்ஸ், வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். அப்பாத்திரம் வழியே வியட்னாம் போரிலிருந்து வீடு திரும்பிய போர் வீரர்கள் முகம் கொடுத்திருக்ககூடிய சில பிரச்சினைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குனர்.

brothers-2010-15080-1508556320 படத்தில் மஹி, இஸபெல் ஆகிய இரு சிறுமிகளின் நடிப்பும் அருமையானது. அன்பில் ஆனந்தமாய் மகிழ்வதும், தந்தையின் வெறியின் முன் பயந்து ஒடுங்குவதுமாக எப்படி இவ்வாறான பக்குவமான நடிப்பை இந்தச் சிறுமிகளால் வழங்க முடிகிறது என்று மனம் வியக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மென்மையான குடும்பக்கதையை ஒரு தளத்திலும், ஆப்கானில் சாம் சந்திக்கும் கொடிய நிகழ்வுகளை இன்னொரு தளத்திலும் காட்சிப்படுத்தி படத்தை வேகமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஜிம் ஷெரிடன். ஆப்கானிலிருந்து சாம் வீடு திரும்பிய பின் திரைப்படம் அழுத்தங்கள் நிறைந்த ஒரு துன்பியல் நாடகமாக மாறி விடுகிறது.

படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகளின் நீளம் சலிப்பைத் தருகிறது. இருப்பினும் உச்சக்கட்ட காட்சியின் மூலம் பார்வையாளர்களைப் பற்றிக் கொள்கிறார் ஜிம் ஷெரிடன். படத்தில் சில கேள்விகளை அவர் அதிகாரங்களை நோக்கி உறுதியாக முன் வைத்திருப்பார் எனில் படம் இன்னமும் வீர்யமாக இருந்திருக்கக்கூடும்.

போரில் மரணமுற்றவர்களே அதன் முடிவைக் காண்கிறார்கள். நான் போரின் முடிவைக் கண்டிருக்கிறேன் ஆனால் என்னால் மறுபடியும் ஜீவிக்க முடியுமா?” தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே, தன் மனைவியைக் கட்டியணைத்தவாறு, அவன் கண்களில் கண்ணீர் வழிய, சாம் தன் மனதிற்குள்ளே எழுப்பும் கேள்வி இது. கனமான இக்கேள்வி இலகுவாக பார்வையாளனின் தோளில் ஏறி உட்கார்ந்து விடுகிறது. இதற்கான விடை அன்பிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று! [**]

ட்ரெயிலர்