கடலால் சூழப்பட்ட மலைகளின் மீது அமைந்திருக்கும், வைகிங் மக்களின் கிராமமான பெர்க்கில் வாழ்ந்து வருகிறான் சிறுவன் கிக்கப். பெர்க் கிராமத்தின் தலைவராக கிக்கப்பின் தந்தையாகிய ஸ்டாய்க் பதவி வகித்து வருகிறார். தாயற்ற சிறுவனான கிக்கப் தாயின் அன்பு அறியாதவனாகவே வளர்ந்து வருகிறான்.
கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க் மிகுந்த பலசாலி. அவர் ஆகிருதியே எதிரிகளை அச்சம் கொள்ள வைக்கும் ஆனால் அவர் மகனான கிக்கப்போ தந்தைக்கு நேர்மாறான குணங்களை தன்னகத்தே கொண்டவனாக இருக்கிறான்.
துடுக்குத்தனம் நிறைந்த கிக்கப் ஒரு ஒல்லிப் பயில்வான். வீரத்திற்கும் கிக்கப்பிற்கும் இருக்கும் தூரத்தைக் கண்டு கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க் வேதனைப்படுகிறார். தன் மகன் மற்றவர்கள் போற்றும் வகையில் ஒரு வைகிங் வீரனாக உருவாகுவானா என்பதில் அவரிற்கு பெருத்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் கிக்கப்போ தான் ஒரு வீரனாகுவேன் என்று வாய்ச் சவடால்கள் விடுவதற்கு அஞ்சாதவனாகவே இருக்கிறான்.
பெர்க் கிராமத்தில் இருக்கும் கொல்லர் பட்டறையில் வேலை பழகுபவனாக தன் நாட்களைக் கழிக்கிறான் கிக்கப். அந்தக் கொல்லர் பட்டறையை நடாத்தி வரும் கொபெர், அனுபவம் மிகுந்த சிறப்பான வைகிங் வீரர்களில் ஒருவனாவான். கிராமத்தில் இருக்கும் சிறுவர்களிற்கு போர்ப் பயிற்சிகள் அளிப்பதையும் அவன் செய்து வருகிறான். தாயற்ற சிறுவனான கிக்கப் மீது அவன் அக்கறை கொண்டவனாக இருந்து வருகிறான்.
எல்லாக் கிராமங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும் [ அதனை தீர்த்து வைப்பதற்காக ஒரு நாட்டாமையும், ஒரு சொம்பும், ஒரு மரமும் கூடவே இருக்கும்] அதே போன்று பெர்க் கிராமத்திற்கும் ஒரு தொல்லை இருந்து வருகிறது. பெர்க் கிராமவாசிகளை உலுப்பியெடுக்கும் அந்த தொல்லையின் செல்லப் பெயர் ட்ராகன்கள் என்பதாக இருக்கிறது.
வைகிங்குகளிற்கும், ட்ராகன்களிற்குமிடையில் நிலவி வரும் பகைமை இன்றோ நேற்றோ பிறந்தது அல்ல. மூன்று நூற்றாண்டுகளிற்கு மேலாக, பரம்பரை பரம்பரையாக, இரு இனங்களும் தம்மை எதிரிகளாகவே உணர்ந்து வருகிறார்கள். இரவு நேரங்களில் பெர்க் கிராமத்தை சகட்டு மேனிக்கு தாக்கி அங்கிருக்கும் மந்தைகளை களவாடிச் செல்கின்றன ட்ராகன்கள். ட்ராகன்கள் விளைவிக்கும் நாசம் பெர்க் கிராமத்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ட்ராகன்களைக் கொல்லுதல் என்ற வார்த்தைகளைப் போல் இன்ப அனுபவம் தரும் வார்த்தைகள் பெர்க் கிராமத்தவர்களிற்கு வேறு கிடையாது.
வைகிங் இனத்தில் பிறந்த ஒருவன் உண்மையிலேயே வைகிங் என அழைக்கப்படும் தகுதியைப் பெற வேண்டுமானால் அவன் ஒரு ட்ராகனைக் வெல்ல வேண்டும். ஒல்லிப் பயில்வானான நமது ஹீரோ கிக்கப்பும் தான் ஒரு ட்ராகனை வென்றாக வேண்டும் என்ற ரகசியக் கனவை தன் மனதில் இருத்தி வருகிறான். ஆனால் அவன் நடவடிக்கைகளை பார்க்கும் கிராமத்தவர்கள் அவனை எள்ளி நகையாடுகிறார்கள், அவன் தந்தை உட்பட.
இந்த நிலையில் ஒரு இரவு வேளை பெர்க் கிராமம் பல வகையான ட்ராகன் ரவுடிகளை உள்ளடக்கிய ஒரு ட்ராகன் கூட்டத்தால் தாக்கப்படுகிறது. பெர்க் கிராமத்தவர்களும் ட்ராகன் ரவுடிகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். தமது வாயிலிருந்து உமிழப்படும் தீக் கற்றைகளால் பெர்க் கிராமத்து வீடுகளை புஸ்வாணம்போல் கொளுத்தி கும்மாளமிட்டு மகிழ்கின்றன ட்ராகன்கள். கிராமத்தவர்களின் மந்தைகளையும் அவை தம் கொடூரமான பிடியில் கவர்ந்து செல்கின்றன.
தன் தந்தையின் அறிவுரையைக் கேட்காது, ரகசியமாக ட்ராகன்களிற்கு எதிரான தாக்குதலில் கலந்து கொள்கிறான் சிறுவன் கிக்கப். தான் பணியாற்றும் கொல்லர் பட்டறையில் அவனாகவே தயாரித்த ஒரு பொறி ஆயுதத்தை வைத்து ட்ராகன்களை தாக்க விரும்புகிறான் அவன். ட்ராகன்களிற்கும், கிராமத்தவர்களிற்குமிடையில் கடுமையான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கிக்கப்பின் பொறி ஆயுதம் எதிர்பாராத விதமாக இயங்கி வானில் பறந்து கொண்டிருந்த ஒரு ட்ராகனைத் தாக்கி வீழ்த்துகிறது. ஆனால் இதனை கிக்கப்பை தவிர வேறு யாருமே அவதானிக்கத் தவறி விடுகிறார்கள்.
கிக்கப்பின் தாக்குதலிற்குள்ளாகிய அந்த ட்ராகன் இதுவரை வைகிங்குகளின் கைகளில் அகப்படாத ஒரு வகை ட்ராகன் ஆகும். வைகிங்குகளின் ட்ராகன் கலைக் களஞ்சியத்தில் அந்த ட்ராகனிற்குரிய பக்கங்கள் வெறுமையாக இருக்கிறது. வைகிங்குகளினால் அதிகம் அஞ்சப்படும், இரவின் இருளில் கலந்து, மின்னலெனத் தாக்கும் அந்த ட்ராகனின் பெயர் Night Fury. சிறுவன் கிக்கப்பின் பொறி ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ட்ராகன் இருளில் பெர்க் கிராமத்தை சூழவிருக்கும் மலைப் பகுதிக்குள் விழுகிறது.
கிக்கப், நைட் ஃப்யூரியை வீழ்த்தினான் எனும் தகவல் கிராமத்தில் நகைப்பிற்கிடமாகிறது. கிராமத்தை சுற்றியிருக்கும் மலைப்பகுதியில் உலாவச் செல்லும் கிக்கப், அங்கு தன் ஆயுதத்தால் வீழ்த்தப்பட்ட ட்ராகனைக் காண்கிறான். அந்த ட்ராகன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான்.
பொறிக் கயிறுகளில் மாட்டிக் கொண்ட நிலையில், அசைய முடியாதபடி தரையில் வீழ்ந்து கிடக்கும் அந்த ட்ராகனை தன் சிறு கத்தியால் கொன்று, அதன் இதயத்தை தன் தந்தையிடம் கொடுத்து வீரன் எனப் பெயரெடுக்க விரும்புகிறான் கிக்கப். இதற்காக தரையில் கிடக்கும் அந்த கறுத்த ட்ராகனை அவன் நெருங்குகிறான்.
தன் சிறு கத்தியை ட்ராகனை நோக்கி கிக்கப் உயர்த்துகிறான் இந்த நிலையில் ட்ராகனின் கண்களும், கிக்கப்பின் கண்களும் சந்திக்கின்றன. அந்தக் கண்கள் பேசிக் கொண்ட மொழிதான் என்ன? தன் கத்தியால் ட்ராகனைக் கொல்லாது அதனை விடுவிக்கிறான் கிக்கப். பறக்க முடியாத நிலையிலிருக்கும் அந்த ட்ராகன் தவ்வி தவ்வி பறந்து மலைகளில் மறைகிறது.
தொடரும் நாட்களில், ரவுடி ட்ராகன்களின் தொல்லைக்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட விரும்பும் கிராமத் தலைவர் ஸ்டாய்க், கிராமத்தில் இருக்கும் வீரர்களுடன் ட்ராகன்களின் கூட்டைத் தேடிப் பயணமாகிறார். கிராமத்தை விட்டு நீங்கு முன்பாக கொல்லன் கொபெரிடம் தன் மகன் கிக்கப், ட்ராகன்களுடன் மோதுவதற்கான பயிற்சிகள் பெறுவதற்கு சம்மதம் தருகிறார். கிராமத்தில் இருக்கும் இன்னும் சில வானரங்களுடன் பயிற்சிக்கு செல்வதற்கு அரை மனதுடன் சம்மதிக்கிறான் கிக்கப். ஆனால் பயிற்சியில் கலந்து கொள்ளும் அழகிய சிறுமியான ஆஸ்ட்ரிட் மீது கிக்கப்பிற்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
கிராமத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதி ட்ராகன்களுடான மோதல் பயிற்சிகளின் பின், மலைப் பகுதிக்கு வரும் கிக்கப், தன்னால் தாக்கப்பட்ட கறுத்த ட்ராகன் பறக்க முடியாது மலைப்பகுதியிலேயே தங்கியிருப்பதைக் கண்டு கொள்கிறான். மீன்களை அது உணவாக உட்கொள்ளும் என்பதனையும் அறிந்து கொள்கிறான்.
கிராமத்திலிருந்து மீனொன்றை எடுத்து வரும் கிக்கப், அதனை கறுத்த ட்ராகனிற்கு உண்ணத் தருகிறான். ஆரம்பத்தில் கிக்கப்பின் அருகில் நெருங்க தயங்கும் ட்ராகன், படிப்படியாக கிக்கப்பை நெருங்க ஆரம்பிக்கிறது. கறுத்த ட்ராகனிற்கும் கிக்கப்பிற்குமிடையில் பாசம் நிறைந்த நட்பு இயல்பாக உருவாக ஆரம்பிக்கிறது. கறுத்த ட்ராகனிற்கு பற்களை உள்ளிழுக்கும் இயல்பு இருப்பதால் அதற்கு பொக்கை [Toothless] எனச் செல்லப் பெயர் வழங்குகிறான் கிக்கப்.
பொக்கையின் வாலில் உள்ள, ஒரு பக்க துடுப்புச் சிறகு அழிந்து விட்டதாலேயே அது பறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறியும் கிக்கப், தான் பணியாற்றும் கொல்லர் பட்டறையில் தோலாலான ஒரு துடுப்புச் சிறகை பொக்கைக்காக வடிவமைக்கிறான். கிக்கப் அந்தச் சிறகை பொக்கையின் வாலில் இணைக்க, பொக்கை குஷியாகி கிக்கப்பையும் இழுத்துக் கொண்டு மேலே பறக்க ஆரம்பிக்கிறது.
பொக்கையுடனான தன் அனுபவங்கள் வழி அதன் மீது ஏறி இலகுவாகப் பறப்பதற்கு உபயோகமான அமைப்புக்களை கிக்கப் உருவாக்குகிறான். பொக்கையுடனான நட்பு ட்ராகன்களின் உணர்வுகள் குறித்து மனிதர்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்களை அவனிற்கு கற்றுத் தருகிறது. இதுவரை காலமும் ட்ராகன்கள் குறித்த தான் அறிந்திருந்த விடயங்கள் தவறானவை என்பது அவனிற்குப் புரிய ஆரம்பிக்கிறது.
ட்ராகன்களின் உணர்வுகள் குறித்து அறிந்து கொள்ளும் அனுபவம் கிடைக்கப் பெற்ற கிக்கப், கிராமத்து பயிற்சிசாலையில் இருக்கும் கைதி ட்ராகன்களை மோதலின்போது ஆயுதங்கள் இல்லாமலே மடக்குகிறான். இதனால் கிராமத்து மக்களிடையே அவன் பிரபலம் ஆகிறான். ஆனால் அழகிய சிறுமி அஸ்ட்ரிட்டிற்கு கிக்கப்பின் முறைகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.
இவ்வேளையில் ட்ராகன்களின் கூட்டைத் தேடிச் சென்ற கிக்கப்பின் தந்தை அந்தக் கூட்டை கண்டறிய முடியாது தோல்வியுடன் கிராமத்திற்கு திரும்பி வருகிறார். கிராமத்தில் தன் மகன் கிக்கப் புகழ் பெற்றிருப்பது அவரிற்கு மிகுந்த மகிழ்சியை தருகிறது. இதனைத் தொடர்ந்து கொடிய ட்ராகன் ஒன்றுடன் கிக்கப் மோதும் போட்டி ஒன்று ஏற்பாடாகிறது.
போட்டி நாள் அன்று தனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை பார்வையாளர்கள் முன்பாக தூக்கி எறியும் கிக்கப், தான் பொக்கையுடன் பெற்ற அனுபவங்கள் வழியாக தன்னுடன் மோத வந்த கொடிய ட்ராகனைக் கட்டுப்படுத்த விழைகிறான். கிக்கப்பின் தந்தை ஸ்டாய்க்கிற்கு இது பெருத்த அவமானத்தையும், ஆத்திரத்தையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த மைதானத்தில் எதிர்பாராது நிகழும் சில நிகழ்வுகள் கிக்கப் தன் மனதில் விரும்பியிருந்த அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகின்றன…..
கிக்கப் தன் தந்தையின் மனதை மீண்டும் வென்றானா? பொக்கைக்கும் கிக்கப்பிற்கும் இடையில் உருவான அந்த நட்பின் கதி என்னவாகியது? ரவுடி ட்ராகன்களின் ஹெட் குவார்டர்ஸை கிராமத்தவர்கள் கண்டுபிடித்தார்களா? ட்ராகன்களின் தொல்லை பெர்க் கிராமத்தை விட்டு நீங்கியதா? இவற்றை அறிய விரும்பினால், உடனடியாக, பார்ப்பவர் மனதை உவகை கொள்ளச் செய்யும் How to Train Your Dragon எனும் அருமையான இத்திரைப்படத்தை எவ்வழியிலாவது பார்த்திடுங்கள்.
இரு இனங்களிற்கிடையில் காலகாலமாக இருந்து வரும் பகைமையையும், புரிந்துணராமையையும் எவ்வாறு ஒரு நேசமிகு நட்பு முடிவிற்கு கொண்டு வருகிறது என்பதைச் சற்றுக்கூட தொய்வில்லாது, அருமையாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் Chris Sanders மற்றும் Den Deblois ஆகியோர். Dream Works, திரைப்பட ரசிகர்களிற்கு வழங்கியிருக்கும் குதூகலமான ட்ராகன் ட்ரீட் இது.
ஆரம்பக் காட்சியில் இடம்பெறும் பெர்க் கிராமத்தின் மீதான ட்ராகன்களின் தாக்குதலின் போதே அதகளம் ஆரம்பமாகி விடுகிறது. ஏதோ ஒரு இரவு நடன விடுதியில் மகிழ்சியாக நடனம் ஆடுவதுபோல் பெர்க் கிராமத்தை ட்ராகன்கள் புரட்டி எடுத்து துவம்சம் செய்யும் காட்சி செம ஜாலி. திரைப்படத்தில் வரும் ட்ராகன்களின் முகங்கள் சற்று நையாண்டித்தனம் கலந்து உருவாக்கப் பட்டிருப்பது சிறப்பு. ட்ராகன்கள் முரட்டுப் பார்வை பார்க்கும்போது ரசிகர்களிற்கு தானாகவே சிரிப்பு உருவாகி விடுகிறது.
ஆரம்பக் காட்சியில் இருந்து ரசிகர்களிடம் உருவாகிவிட்ட எதிர்பார்ப்பை இறுதிவரை ஏமாற்றாது கொண்டு சென்ற திறமையான இயக்குனர்களும், Dream Worksன் அனிமேஷன் அணியும் பாராட்டிற்குரியது. திரைப்படத்தில் உலா வரும் அளவில் சிறிய ட்ராகன்கள் மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அவற்றின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.
பொக்கைக்கும், கிக்கப்பிற்குமிடையில் படிப்படியாக நட்பு உருவாகும் காட்சிகள் மனக் குளத்தில் கல்லை வீசியெறிந்தது போல் மென் உணர்வு அலைகளை உருவாக்குகின்றன. பொக்கையின் தலையின் மீது கிக்கப்பின் கை முதன் முதலாக படும் தருணம், பொக்கையுடனான கிக்கப்பின் முதல் பறப்பு ஆகிய காட்சிகள் உள்ளங்களை மென்மையாக தம் வசப்படுத்துகின்றன, ரசிகர்களை இந்த இரு பாத்திரங்களையும் நோக்கி நெருங்கி வரச் செய்கின்றன. கிக்கப்புடன் நட்பான பின் பொக்கை அடிக்கும் செல்ல லூட்டிகளும், தன் கண்களின் வழியாக பொக்கை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அருமை. அஸ்ரிட்டுடன் தனது சிறு கோபத்தை பொக்கை காட்டும்போது அதனை ஒரு குழந்தையாகவே காணமுடிகிறது.
படத்தில் இசையின் பங்கு முக்கியமானது. Celtic இசையுடன், நவீன இசை கலந்து திரைப்படம் நெடுகிலும் வழியும் John Powellன் இசையானது அற்புதமான உணர்வை வழங்குகிறது. பொக்கையுடனான பறத்தல் காட்சிகளின் இசையும், மனதை மயக்கும் காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட நுட்பமும் சேர்ந்து எம்மை எங்கோ எடுத்துச் செல்கின்றன. பொக்கையின் மீது அஸ்ரிட்டும், கிக்கப்பும் உலாவரும் அந்தக் காட்சியின் ரம்யம் உன்னதம். பின்பு அதே காட்சியில் அவர்கள் ரவுடி ட்ராகன்கள் கூட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளும் தருணம் திக் திக் திகில் கணம்.
இறுதியில் ட்ராகன் கூட்டின் பிக் பாஸான ஆறு கண்கள் கொண்ட ராட்சத ட்ராகனுடன் இடம் பெறும் ஆக்ஷன் காட்சியைப்போல் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சியை சமீபத்தில் நான் திரையில் கண்டதில்லை. ரசிகர்களை இருக்கைகளில் இருந்து தூக்கிப் போடும் ஆக்ஷன் காட்சியாக அது அமைகிறது.
கண்ணைக் கவரும் காட்சிகள், அருமையான இசை போன்றவற்றுடன் சாகசம், காமெடி, செண்டிமெண்ட் என்பவற்றை சரியான அளவில் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மனதை இலகுவாக ஆக்கிரமித்து விடுகிறது. எந்தவித தயக்கமுமின்றி முழுக்குடும்பத்துடனும் பார்த்து ரசிக்க்கப்பட வேண்டிய அருமையான திரைப்படமாக இது அமைகிறது. உண்மையான நட்பும், ஆகாயத்தில் பறத்தலும் சில சமயங்களில் ஒரே உணர்வை வழங்கிச் செல்பவையாகவே அமைந்து விடுகின்றன இல்லையா! இத்திரைப்படம் அந்த உணர்வை உங்களிற்கு வழங்கும். இவை ட்ராகன்கள் இல்லை, எங்களைக் குழந்தைகளாக்கும் ஜாலியான ரவுடிகள். [****]
ட்ரெயிலர்