Sunday, June 14, 2009

பயணங்கள்


டோக்கியோவில் இசைக்குழுவொன்றில் Violoncellist ஆக இருக்கிறான் டாய்கோ (Masahiro Motoki). ஒரு நாள் இசை நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்த பின் அவன் பணியாற்றிய இசைக்குழு கலைக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்சியடைகிறான் அவன். இதனையடுத்து ஜப்பானின் மேற்குப் பகுதியிலிருக்கும் யமகட்டா எனும் தன் பிறந்த ஊரிற்கு தன் மனைவியுடன் திரும்புகிறான் டாய்கோ.

ஊரில் இறந்து விட்ட தன் தாய் தனக்கு விட்டுச் சென்ற வீட்டில் வசிக்கும் டாய்கோ, பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தனக்கு பொருத்தமாக ஏதாவது வேலை கிடைக்குமா என தேடுகிறான். ஒரு விளம்பரத்தில் வயது, முன்னனுபவம் எதுவும் தேவையில்லை, குறைந்த வேலை நேரம், நல்ல சம்பளம் பயண ஏஜென்சியில் வேலைக்கு ஆள் தேவை எனும் ஒர் அறிவிப்பைக் காணும் அவன் அந்த எஜென்சிக்கு வேலை தேடிச் செல்கிறான்.

ஏஜென்சியில் அதன் முதிய பாஸுடன்(Tsutomu Yamazaki) நிகழும் உரையாடலிலிருந்து அது உண்மையில் ஒர் பயண ஏஜென்சி அல்ல மாறாக ஜப்பானிய முறைப்படி இறந்தவர்களின் உடல்களை பெட்டிக்குள் வைக்கும் முன் அவ்வுடல்களை அவர்கள் நிகழ்த்தப் போகும் பயணத்திற்காக அலங்காரம் செய்து அழகுபடுத்தும் ஏஜென்சி என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

இவ்வேலையை ஏற்பதற்கு டாய்கோ சற்று சங்கடப்படுவதை உணர்ந்து கொள்ளும் முதியவர், டாய்கோவை சில நாட்கள் தன் உதவியாளனாக பணிபுரிந்து பார்க்கும்படி கேட்கிறார். அதற்கு அரை மனத்துடன் சம்மதிக்கிறான் டாய்கோ.

ஆரம்பத்தில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் வேலையை ஆரம்பிக்கும் டாய்கோ காலத்தின் ஓட்டத்தில் சிறந்த, அர்பணிப்பு மிகுந்த கலைஞனாக உருமாற ஆரம்பிக்கிறான்.

19076844 வேலையின் முதல் நாளில், ஒரு விவரண படத்திற்காக டாய்கோவையே ஒர் பிணமாக நடிக்க சொல்லி விடுகிறார் முதியவர். அதிலிருந்து ஆரம்பிக்கும் நகைச்சுவை, மரணத்தை சுற்றியிருக்கும் பிரிவு, வலி, ஏமாற்றங்கள், உடைந்த கனவுகள் என மெதுவாக மாற்றம் உற்று எங்களையும் சிரிக்கவும், நெகிழவும் வைக்கின்றன.

இறந்தவர்களின் வீடுகளில் அலங்கார நிபுணர்கள் எதிர் கொள்ளும், குடும்பத்தவர்களின் எதிர்பாராத செயல்களை, அவர்கள் தங்கள் தொழில் திறமையாலும், அர்பணிப்பாலும் வென்றெடுப்பது நெகிழ்வாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒர் சமயம் இறந்த வீட்டிற்கு ஐந்து நிமிடங்கள் தாமதாக முதியவரும் டாய்கோவும் வந்து சேர்வார்கள் அதற்காக அவர்களை கடிந்து கொள்வார் இறந்த மனைவியின் கணவர். நிகழ்வின் முடிவில் தன் மனைவியின் உடலை முதியவர் அவள் உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க அழகாக்கி விட்டதாக அவர் கூறி நெகிழும் காட்சி, மரணித்துவிட்ட திருநங்கை ஒருவரின் உடலை பெண் போன்று டாய்கோ அழகாக அலங்கரித்து முடித்து அவ்வீட்டை விட்டு வெளியேறும் போது, உங்கள் அலங்காரத்தில் என் பையனின் புன்னகையை கண்டேன் என அவர்களை தரையில் வீழ்ந்து வணங்கும் தகப்பன் என மனதை தொடும் காட்சிகள் நிறைய உண்டு.

ஆனால் இறந்த உடல்களை அலங்கரிக்கும் தொழில் சமூகத்தால் தீட்டுப்பட்ட வேலை என்று பார்க்கப்படுவதையும் காட்டி விடுகிறார் இயக்குனர். டாய்கோவின் நண்பன் அவனுடன் பேசுவதற்கே தயங்குகிறான், அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து சென்று விடுகிறாள். மரணம் பற்றி அல்ல அதனுடன் எப்போதும் அருகிலிருக்கும் வாழ்வையும் அதனை எப்படி வாழ்வது என்பதனையும் கண்டடைகிறான் டாய்கோ.

இவ்வருடம் சிறந்த அயல்நாட்டுப்படத்திற்கான ஆஸ்காரை வென்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் Yojiro Takita. அழகான காட்சியமைப்பு, [குறிப்பாக உடல்களை அலங்கரிக்கும் காட்சிகள் யாவும் ஓவியங்கள் போல் தீட்டப்பட்டிருக்கின்றன.] இனிய இசை, நடிகர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு – அதிலும் முதிய பாஸின் நடிப்பு என சிறப்பாக உள்ள ஒர் படத்தில், அதன் நீளம் சற்றே இடிக்கிறது. மிக மெதுவாகவே படம் நகர்வதால் இதனைப்பார்த்து முடிக்க சற்று பொறுமையும் தேவைப்படும். ஆனால் உங்கள் பொறுமை உங்களை நிச்ச்சயம் ஏமாற்றாது. சிறந்த ஒர் படத்தினை பார்த்த அனுபவத்தை அது உங்களிற்கு வழங்கும். டாய்கோவின் தகப்பனின் கைக்குள்ளிருக்கும் அந்தக் கூழாங்கல்லை போல.

( ***** )


படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது அதில் ஒரு சிறிய பகுதி கீழே, கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். இசையமைத்திருப்பவர் KITANAO, MIYAZAKI ஆகியோரின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள JOE HISAISHI.

ட்ரெய்லர்

12 comments:

  1. காதலரே,

    ஆஸ்கார் அவார்ட் லிஸ்டில் இந்த படத்தை பார்த்த நியாபகம் தான் இருந்தது, இப்போது உங்கள் பதிவின் மூலம் அதை பார்க்க தூண்டி விட்டீர்கள். ஜப்பானிய படங்களில் ஒரு அசாதாரண கலைநயம் குடி கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படத்தில் சவத்தை அடக்கம் செய்யும் குடும்ப பிண்ணயில் நகர்த்தி இருப்பதிலேயே பட கர்த்தா வித்தியாசமான அணுகுமுறைக்கு முத்திரை வைத்து விட்டார். படத்தை பார்த்து விட்டு என் கருத்தை பதிகிறேன்.

    காமிக்ஸ்களுடன் சேர்ந்து நீங்கள் பார்த்த படங்களை பற்றியும் உங்கள் சுந்தர நடையில் விளக்கும் பாணி அபாரம். கண்டிப்பாக தொடருங்கள்.

    ÇómícólógÝ

    ReplyDelete
  2. காதலரே,

    என்ன அதிசயம் இது? கடந்த வாரம்தான் என்னுடைய சினிமா பதிவுலக நண்பர் சர்வன் உடன் இந்த படத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தேன் (உங்களுக்கு அவரை தெரியும் என்று நம்புகிறேன், அவரின் பதிவுகளுக்கு உங்களுக்கு லிங்க் அனுப்பிய நியாபகம்). அப்போது அவர் கூறிய சில விவரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

    இந்த படத்தின் இயக்குனர் ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் மூலமே கமர்ஷியல் சினிமா உலகிற்கு வந்தவராம். அதற்கு முன்னர் பல சாப்ட் போர்ன் படங்களை எடுத்து குவித்தவராம் இவர்.

    இந்த படத்தை பற்றி கூறுகையில் இரண்டு காட்சிகளை அவர் விவரித்தார்.

    ஒன்று: இவரை விட்டு பிரிந்த இவர் மனைவி, கர்ப்பமாக இருப்பதை கூறி, வேறு வேலை தேடிக் கொண்டு சேர்ந்து வாழ திரும்பி அழைக்கும் போது, இவருடன் பேச மறுத்த இவரின் நண்பரின் தாய் இறந்த செய்தி வரும். அந்த தருணத்தில் இவரினது நடிப்பும் அதனால் இவரது மனைவியும், நண்பரும் மனம் திருந்துவதும் கவிதை கலந்த சோகம்.

    இரண்டாவது காட்சி: இறந்த இவரது தந்தையை இவர் பார்க்க மறுக்கும் காட்சியும் பிறகு மனம் மாறி சென்று பார்க்கும்போது அவர் ஒரே ஒரு பெட்டியும் கையில் கூழங்கல்லும், பின்னர் அந்த கூழாங்கல்லை இவர் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வைத்து பார்க்கும் காட்சி - அற்புதம்.

    சர்வன் அவர்களிடம் சிறப்பு என்னவென்றால் அவர் சொல்வதின் மூலமே பாதி படத்தை பார்த்தது போல ஆகி விடும். அவர் இந்த படத்தின் குறுந்தகட்டை தருவதாக ஒரு வாரம் முன்னர் சொன்னார். பயணம் அந்த சந்திப்பை தடைப் படுத்தியது. நாளையே மறுபடியும் அவரை சந்தித்து வாங்கி விடுகிறேன்.

    இந்த படத்தை பார்க்க தூண்டியதின் மூலம் உங்களின் பதிவு ஒரு சரியான திசையில் பயணிப்பதாகவே கருதுகிறேன்.

    ReplyDelete
  3. தலைவர் வருவதற்கு முன் நான் கமெண்ட் இட வேண்டும்.

    உங்களின் இது போன்ற பதிவுகளின் விவரங்களை "அந்த" டெலிபோன் கால் மூலம் அறிந்த நாள் முதல் இது போன்ற பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்.

    பார்க்க தூண்டும் பதிவு, நல்ல கான்சப்ட். தொடருங்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  4. சென்ற பதிவில்,

    //அவரிற்கென ஒரு பதிவு நிச்சயம் இடம் பெறும் அது வரையில் டீசராக இப்பதிவு// என்று கூறி இருந்தீர்களே, இது அந்த பதிவில்லையே?

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  5. கனவுகளின் காதலர்,

    முதன் முதலில் இந்த படத்தின் போஸ்டர்'ஐ பார்த்த உடனே எனக்கு சென்ற ஆண்டு வந்த தி விசிட்டர் என்ற படம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படத்தின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ஆனால்,இரண்டு படங்களையும் மனோதத்துவ ரீதியில் ஒரு இணைக்கும் புள்ளி உள்ளது.

    அந்த தி விசிட்டர் படத்தை பார்த்தது முதல் பொருளாதார பேராசிரியராகவும் சிடுமுஞ்சியாகவும் உள்ள வால்டர் வேல் (வால்டர் வெற்றிவேல் என்று வாசிக்காதீர்கள்) எனது பிடித்த பாத்திரம் ஆகி விட்டார். நேரம் கிடைத்தால் மறக்காமல் பாருங்கள் இந்த படத்தை.

    அப்படி நேரம் கிடைக்கா விட்டாலும் கூட பாருங்கள். அது ஒரு இன்டிபென்டன்ட் படம் என்பதால் ஆஸ்கர் பரிசுக்கு போட்டி இடக் கூடிய வலிமை அதற்க்கு இல்லை. இல்லையெனில் கண்டிப்பாக வென்று இருக்கும்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  6. ரஃபிக், ஜப்பானியர்களின் பண்பாடும், கலைகள் குறித்த அவர்கள் ஆர்வமும் மிகவும் சிறப்பானது. தவறாது இப்படத்தை பார்த்திடுங்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    அன்பு நண்பர் விஸ்வா, அந்த இரு காட்சிகளையும் நீங்கள் பாருங்கள். நீங்களே அதை உணர்வீர்கள். ஒர் ரசிகனை அவன் பார்வையில் ஒரு கலைப்படைப்பை உணர விட வேண்டியே நான் முக்கியமான காட்சிகளை குறிப்பிடவில்லை.

    இதனை விட டாய்கோவின் வாத்தியக் கலைஞன் ஆகும் கனவு இறந்து போவதையும் ஒர் இறந்து போகும் ஆக்டோபஸ் மூலம் இயக்குனர் சிம்பாலிக்காக காட்டியிருப்பார்.

    படத்தில் அந்தக் கூழாங்கல் காட்சி அபாரமாக வரும் அதனை எழுதி படத்தினை பார்க்க போகும் ரசிகர்களின் ரசனையை நான் உடைத்து விட விரும்பவில்லை.

    உங்கள் நண்பர் சர்வன் மிகச்சிறந்த ரசனை கொண்டவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. படத்தை பார்த்த பின் உங்களால் இயலுமானால் உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவியலுமா.

    தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கும், சிறப்பான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே, தலைவரிற்கான பதிவு இது அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன்.

    THE VISITOR எனும் அத்திரைப்படம் இங்கு நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படம் ஆகும். பல விருதுகளையும் அது வென்றுள்ளது. அமெரிக்காவின் சட்டவிரோத புலம்பெயர் அரசியலை மிகவும் நேர்மையாக விமர்சித்த திரைப்படம் என்ற பெயர் அதற்குண்டு.

    வழமை போன்று வாய்ப்புக்கள் இருந்தும் நான் அதனை பார்ப்பதை தவறவிட்டேன். ஆனால் நண்பரே RICHARD JENKINS சிறந்த நடிகர் விருதிற்காக ஆஸ்காரில் பரிந்துரைக்கப்பட்டார், கிடைக்கவில்லை.

    நிச்சயமாக இப்படத்தினை பார்த்து விடுகிறேன், நண்பர்கள் எடுத்துக் கூறும் போது அப்படங்களை நான் பார்த்து விட தவறுவதில்லை. நேற்று மாலை பார்த்த படம் SYMPATHY FOR MR VENGEANCE.

    வருகைக்கும், ஊக்கமூட்டும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே. இசை உங்களிற்கு பிடித்திருந்ததா? இக்கேள்வி எல்லா நண்பர்களிற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  7. ஆஹா,

    //நேற்று மாலை பார்த்த படம் SYMPATHY FOR MR VENGEANCE.//

    அந்த படமா? அதனை நான் பார்த்த விதமே ஒரு தனி கதை. அந்த படத்தினையும் அதற்க்கு அடுத்து வந்த இரண்டு படங்களையும் பார்க்க சொல்லி வேண்டப் பட்ட விரோதி ஒருவர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் (உண்மையை சொல்வதானால் டார்ச்சர் செய்து வந்தார்).அதனால் அந்த படத்தை (அதிகம் தெரியாததால், விருப்பின்றி) பார்த்தேன். பார்த்த வுடன் அந்த இயக்குனர் பார்க் சான் ரசிகன் ஆகி விட்டேன்.

    இங்கே, சென்னையில் அனைத்து உலக சினிமா ரசிகர்கள் ஒன்று கூடி மாதமிருமுறை ஒலக சினிமா காவியங்களை பார்க்க முயற்சி எடுத்துள்ளோம். அதன் முதல் கட்டமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கிம் கி டுக்கின் மாஸ்டர் பீஸ் ஒன்றை அனைவரும் ஒன்று கூடி கண்டு களித்தோம்.

    நடிகர் பொன்வண்ணன் ஒரு ஒலக சினிமா காதலன். வேறு எங்கும் கிடைக்காத படங்கள் அவரிடம் இருக்கும் என்பதால் நம்பிக்கையுடன் அவரை அணுகுவேன்.

    இசை உங்களிற்கு பிடித்திருந்ததா? = உயிர் வாழ உங்களுக்கு ஆசையா? என்பதை போல இந்த கேள்வி.

    நான் நுனிப்புல் மேயாமல் பதிவுகளை ரசித்து கமெண்ட் இடுபவன் என்பதால் ஒரு பதிவு வந்த உடன் அது குறித்த அனைத்தையும் படித்து விடுவேன்.

    இந்த படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை அனைவரும் கூறுவதால் நானும் எனக்கு பிடித்த காட்சியை கூறுகிறேன்: முதன் முதலில் தன்னுடைய வேளையில் ஈடுபடும் கதாநாயகன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இறந்த ஒரு மூதாட்டியை அடக்கம் செய்ய தயார் படுத்தும் அந்த காட்சியே என்னை மிகவும் கவர்ந்தது. அதுவரையில் பிடிக்காமல் வேலை செய்து வந்த அவருக்கு இதன் பின்னரே ஒரு வித பிடிப்பு ஏற்படும்.

    ReplyDelete
  8. ஒலக காமிக்ஸ் ரசிகரே, இரண்டு வாரங்களாக இறந்து கிடந்த மூதாட்டியை ஒரு வழி பண்ணி விட்டு, பஸ்ஸில் வரும் டாய்கோ மீது கெட்ட நாற்றம் அடிக்கிறது என்று ஒர் சிட்டு வெறுப்படைவதும், பொதுக் குளியல் நிலையத்திற்கு சென்று சோப்பை உடல் மீது தேய் தேய் என டாய்கோ தேய்க்கும் காட்சிகள் மென் நகைச்சுவை என்றால். உயிருள்ள உடல் ஒன்றின் வாசனை வேண்டி தன் மனைவியை சாப்பாட்டு மேஜைக்கருகில் நுகர ஆரம்பிப்பது மனிதம்.

    ReplyDelete
  9. காதலரே, சென்ற பதிவில் இசையை பற்றி கூறாமல் விட்டு விட்டதற்கு மன்னிக்கவும். அருமையான இசை என்று அதற்கு ஒரு வரைமுறை வைக்க முடியாத ஒன்று.

    சோக தொனியில் ஆரம்பிக்கும் இசையில் அவ்வப்போது உற்சாக தொனியும் தொற்றி கொள்வதும், பின்பு நிதானமாக பயனிப்பதும் என்று அமர்க்களபடுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். இசையை பற்றி அவ்வளவு ஞானம் எனக்கு இல்லை என்றாலும், அந்த மூல வாத்திய கருவி சாக்ஸாபோன் என்று நினைக்கிறேன்... சரியா ?

    இந்த படத்தின் இசையை ரசிக்க ஒரு முகாந்திரம் அமைத்து கொடுத்தற்கு நன்றி. இன்னும் சில காலத்தில் இந்த இசையை நம் கோலிவுட் அன்பர்கள் தங்கள் படங்களில் உபயோகிக் அத்தனை சாத்தியகூறுகளும் தெரிகிறது, வழக்கம் போல அனுமதி இல்லாமல் தான் :)

    ReplyDelete
  10. கனவுகளின் காதலரே,

    பணியிடத்தில் இருப்பதால் இப்போதைக்கு படம் பார்க்க முடியாது! அடுத்த முறை ஊருக்கு போகும் போது இப்படத்தை நிச்சயம் வாங்கிப் பார்த்து விடுகிறேன்!

    இந்தப் படத்தில் வரும் முதியவரை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்!

    வலையில் மேய்ந்ததில் அவர் அகிரா குரோசவா-வின் காவியங்களான HIGH AND LOW (யமசகி அறிமுகம் ஆன படம்) மற்றும் KAGEMUSHA ஆகிய படங்களில் நடித்துள்ளார் எனத் தெரியவந்தது!

    இதில் HIGH AND LOW எனக்கு மிகவும் பிடித்த படமாகும்! இப்படத்தில் யமசகி வில்லனாக வருவார்! க்ளைமாக்ஸ் வரை அவருக்கு வசனம் பேசி நடிக்கும் காட்சி ஏதும் கிடையாது! ஏன் முதல் பாதியில் அவர் திரையில் தோன்றவே மாட்டார்! ஆனாலும் அவரின் கதாபாத்திரத்தை வைத்துத்தான் திரைக்கதை நகரும்!

    க்ளைமாக்ஸில் அவரது நடிப்பை பாராட்டாத ஆட்களே கிடையாது எனலாம்! இத்தனைக்கும் அவருக்கு எதிராக ஜப்பானின் இரு உலகப்புகழ் சூப்பர் ஸ்டார்களாகிய டோஷிரோ மிஃபுனேவும், தட்சுயா நகடாயும் இனைந்து மிரட்டியிருப்பார்கள்!

    ஜப்பானின் குற்றவியல் சட்டத்தையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்திட்டது இந்தப் படம்! உலகெங்கிலும் இப்படத்தின் எடிட்டிங் போற்றப்படுகிறது!

    என்றாவது ஒரு நாள் இப்படத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்! அதற்கு முன் வாய்ப்பு கிடைத்தால் தவறாது பார்த்து விடுங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. ராம்போ ரஃபிக் அவர்களே, படத்தின் இசையில் பெரிய பங்கை வகிப்பது VIOLENCELLO எனும் இசைக்கருவியே என்று நம்புகிறேன். இரவின் அமைதியில் இவ்விசையை கேட்க விரும்புகிறேன். இன்றிரவே. [இப்படத்தை திரையரங்கில் இன்று தான் பார்த்தேன்.`

    அன்பர்கள் இசையின் தரம் கெடாது அதனை உபயோகித்துக் கொண்டால் அதுவே போதும். இல்லையா!!!

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

    நிச்சயமாக சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்கள் சொன்ன மாஸ்டர் பீஸ்களை பார்த்து விடுகிறேன். உங்கள் அறிமுகப் பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி தலைவரே.

    ReplyDelete