Sunday, March 25, 2012

விடைபெற நேரமில்லை விழியே!

1225261
இந்நாவலின் அட்டையின் அதன் தலைப்பின் மேலாகவுள்ள மூன்று வரிகளே போதும் நாவலின் கதைச் சுருக்கத்திற்கு. தன் பெற்றோருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தின் பின்பாக மிகையான போதையின் பீடிப்பில் உறங்க செல்லும் பதினான்கு வயதான சிந்தியா, மறுநாள் காலை அவள் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த பின்பாக அவள் வீட்டில் இருந்து அவள் பெற்றோரும், சகோதரனும் எந்த தகவலுமில்லாது மறைந்து போய்விட்டதை அந்நாளின் ஓட்டத்தில் அறிந்து கொள்கிறாள். அவர்கள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள், அவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் அறிந்து கொள்ளவியலா நிலையில் தன் வாழ்க்கையை தன் அன்னையின் சகோதரியுடனான டெஸ்ஸுடன் தொடர்கிறாள் சிந்தியா. வாசகனை நாவலின் மையமர்மத்தினுள் இழுக்கும் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பமாகும் No Time for Goodbye எனும் இந்நாவல் அதன் அடுத்த அத்தியாயங்களில் இருபத்தைந்து வருடங்களிற்கு பின்பாக சிந்தியாவின் வாழ்க்கையின் ஒரு முக்கியகணத்தை அவனிற்கு அறிமுகப்படுத்துகிறது.
காணாமல் போன மனிதர்களை குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் சிந்தியாவை அப்பக்கங்களில் வாசகன் கண்டுகொள்ள முடியும். இத்தருணத்திலிருந்து கதையானது சிந்தியாவின் கணவனால் கூறப்படுகிறது. சிந்தியாவுடன் நெருங்கி வாழ்பவன் எனும் வகையிலும், அவள் குடும்பம் காணாமல்போன விவகாரம் அவளை எவ்வாறு பாதித்தது, அது குறித்த அவள் உணர்வுகள் என்ன என்பதை அவன் அறிந்தவன் என்ற வகையிலும், அவன் மூலம் கதைசொல்லும் உத்தியானது உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. குற்றப்புனைவுகளின் வன்மையான நிகழ்வுகளிலிருந்து சற்று விடுபட்டு ஒரு குடும்பம் இவ்வகையான நிகழ்வு ஒன்றினால் எதிர் கொள்ளக்கூடிய சம்பவங்களை உணர்ச்சிகரமான நாடகமாக வாசகனிற்கு அளிக்கிறது Linwood Barclay ன் கதை.

இன்று ஒரு பரபரப்பான நிகழ்வானது காட்சி ஊடகங்களாலும் சரி, எழுத்து ஊடகங்களாலும் சரி, ஒரு கேளிக்கை பண்டமாக்கப்பட்டு, அதனை நுகர்வோரிடம் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. இவ்வகையான ஆக்கங்களிற்கும், படைப்புக்களிற்கும் அளிக்கப்படும் ரசிக ஆதரவே அவற்றின் வெற்றிக்கு சான்று. சிந்தியாவின் இருபத்தைந்து வருட வேதனையும் இவ்வாறான ஒரு பண்டமாகவே உருவாக்கப்படுகிறது. அதை சிந்தியா அறிந்திருந்தாலும் அந்நிகழ்ச்சியின் வழியாக தன் குடும்பம் குறித்த ஏதோ ஒரு தகவலேனும் கிடைத்து விடாதா எனும் ஒரு நம்பிக்கை அவளை கேளிக்கை பண்டமாக்க வைத்து விடுகிறது. காணாமல்போன குடும்பத்தில் சிந்தியா மட்டும் எஞ்சியது எவ்வாறு எனும் கேள்வி எழும்போது உருவாகும் சந்தேக வீச்சில் சிந்தியா பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதன் வழியாக அவள் மனதில் எழும் குற்றவுணர்வு அவளை விடாது தொடரும் ஒன்றாகவே இருக்கிறது. அவள் குடும்பம் குறித்த அவள் தேடலை குற்றவுணர்வும், சிந்தியாவும் இடைவிடாது நிகழ்த்த வேண்டியதாகவிருக்கிறது.

கதாசிரியர் லின்வூட் பார்க்லே நாவலின் இப்பகுதியில் இவ்வகையான நிகழ்வொன்றை எதிர்கொள்ளும் ஒரு நபரை குறிவைத்து லாபம் பார்க்க விரும்பும் மனிதர்களை கோடிட்டு காட்டுகிறார். அது தொலைக்காட்சி தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அல்லது ஆவியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உடைய பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குறிக்கோள் என்பது சிந்தியாவினுடையதிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பதை சிந்தியா கொள்ளும் பதற்றங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள் வழி பார்க்லே எழுதிச் செல்கிறார். இவ்வாறான நிகழ்வுகள் அவள் உளத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவ்வாறானைவை என்பதையும் அவர் விபரிக்க தவறவில்லை.

உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறும் சிந்தியா, அவள் மனதை அவரிடம் திறக்கிறாள். ஆனால் சிந்தியாவின் கணவர் டெர்ரியோ இவ்வகையான ஆலோசனைகள் எந்தப் பலனையும் வழங்கிவிடப்போவதில்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். அவன் வீட்டில் இருந்து மறைந்து போகும், வந்து சேரும் சில பொருட்களும் அதனைச் சூழ்ந்த சில சமபவங்களும் அவனை சிந்தியாமேல் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இவ்வகையான சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம் எவ்வாறு கண்ணிற்கு புலனாக காரணிகளால் சிதைய ஆரம்பிக்கிறது என்பதை தெளிவாக்குகிறது கதாசிரியரின் வரிகள். சிந்தியாவும், டெர்ரியும் தம் வாக்குவாதங்கள் தம் குழந்தையான கிரேஸ் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். குழந்தை ஒன்றின் உளநலத்தின் மீது பெற்றோர் செலுத்தவேண்டிய கண்டிப்பான அக்கறையானது நாவலின் பல தருணங்களிலும் முன்னிலைப்படுத்தபடுகிறது.

சிந்தியாவும், டெர்ரியும் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஒரு துப்பறிவாளனை அமர்த்திக் கொள்ளக்கூட இல்லத்தின் செலவுகளை கணக்குப் பார்க்கவேண்டிய நிலையிலுள்ள குடும்பம் அவர்களது. நிதிவசதிகள் அதிகம் கொண்டிராத ஒரு குடும்பம் எவ்வாறு இவ்வகையான செலவுகளை எதிர்கொள்ளவியலும் எனும் எதார்த்தமான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் நாவலின் உணர்ச்சிகரத்தை அதிகரிப்பதில் பங்கேற்பதுடன், உண்மைகளை கண்டடைவதற்கும் ஒரு விலையுண்டு என்பதை சொல்லிவிடுகின்றன. அதேபோல் பொலிஸ் இலாகா கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இவ்வகையான விவகாரங்களில் கடைப்பிடிக்கும் மந்தமான போக்கையும் தெளிவாக்குகின்றன. மத்தியதரவர்க்க குடும்பம் ஒன்றின் நாளாந்த வாழ்க்கையை பார்க்லே நாவலின் ஓட்டத்தினூடு மிகவும் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார்.

மிகவும் எளிமையான கதை சொல்லலால் சிந்தியாவின் வாழ்க்கையை எம்முன் கொண்டுவரும் பார்க்லே, அதே சமயத்தில் சிறு சிறு சம்பவங்களால் கதையின் மர்மத்தையும் அதிகரித்து செல்கிறார். அவர் நாவலின் மையம் என்பது அன்பான குடும்பம் ஒன்றிற்கான தேடலும் அது ஏற்படுத்தக்கூடிய சில எதிரான விளைவுகளுமே. நாவலில் வரும் பிரதான பாத்திரங்களில் பெரும்பாலானோர் தம் குடும்பங்கள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக போராடுபவர்களாகவே இருக்கிறார்கள். பொய்யில் கட்டப்படும் வாழ்விலிருந்து விடுபட விரும்பும் மனிதர்கள் சில சமயங்களில் தரவேண்டிய தொகை வலியாலும் பிரிவாலும் உயிராலும் கண்ணீராலும் வழங்கப்பட்டுவிடுகிறது. வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகமென மனித உள்ளத்தில் ஊற்றெடுத்து வருவது, அதன் தீர்தல் என்பது அழிவின் முடிவில்தான் அல்லவா.

நாவலின் பாத்திரப்படைப்புகள் சில குறிப்பிடப்பட வேண்டியவை. கிரேஸ் எனும் சிறுமி பாத்திரம் மிக இயல்பான ஒன்றாக படிக்கப்பட முடிகிறது. சிந்தியாவின் ஆண்டியான டெஸ் கூட சிறப்பான ஒரு பாத்திரப்படைப்பே. கதையை டெர்ரி கூறிச்செல்வதன் மூலம் அவன் தன் குடும்பத்தைக் காப்பாற்ற போராடுவதும், சிந்தியாவைக் காப்பாற்ற போராடுவதும் வாசகனை உணர்ச்சிகரமான விதத்தில் நெருங்கி வருகின்றன. சிந்தியா பாத்திரத்தை வாசகர்கள் நம்புவார்களா இல்லையா என்பதன் விடை கதாசிரியரின் திறமையை சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்! தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு மனிதன் எவ்வாறு போராடுகிறான் என்பதை ஆண்வாசகர்கள் சில சமயங்களில் குற்றவுணர்வுடனும், பெண் வாசகிகள் குற்றம்சாட்டும் உணர்வுடனும் படித்து செல்லலாம்! என்னதான் இருந்தாலும் இந்நாவல் பெண் வாசகிகளை குறிவைத்து எழுதப்பட்ட ஒன்றாகும் என எழும் உணர்வை வாசிப்பின்போது என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாவல் நெடுகிலும் அப்படி உருக வைக்கும் தருணங்கள் பல இருக்கின்றன. நாவலின் இறுதிப்பகுதி விறுவிறு என்றாலும் உச்சக்கட்டம் சென்டிமெண்ட் சுனாமியாக இருக்கிறது. எளிமையான சம்பவங்களை வைத்து , அதிக வன்முறை கலக்காது, குடும்பத்தை முன்னிறுத்தி, உணர்ச்சிகளை கரைத்து லின்வூட் பார்க்லே வழங்கியிருக்கும் இந்நாவல் இலகுவான வாசிப்பிற்குரியது. அவ்வளவே.

Sunday, March 18, 2012

டாய்லெட்டிலிருந்து டிவிலைட்வரை: போன் பீரோ, ஓவியம் வரைந்த கலைஞன்!

bee-on-yellow-flowerகண்ணீரும் கம்பலையுமாக எழுதியவர் ஜோஸ்ஷான்.

இன்று வழமைபோலவே என் சொம்பாருயிர்களிற்கு போட வேண்டிய பதிவை எழுதிடலாம் என முகட்டைப் பார்த்து என் எண்ணங்களை சாரைப்பாம்பின் லாவகத்துடன் ஊர விட்ட தருணத்தின்போதுதான் பிரான்சிலிருந்து என் நண்பர் எனக்கு அந்த மின்மடலை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் நிறுத்திவிடாது தொலைபேசிமூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு “ தல எனக்கு என்ன செய்றது ஏது செய்றதுன்னே தெர்ல, இப்படி ஒரு துக்கமான செய்திய கேட்க நான் ஏன் உயிரோட இருக்கணும், ஆனா ஒன்னு தல, நீங்க தமிழ்ல எழுதுற வரைக்காச்சும் நான் உசிரோட இருக்கனும், உங்க தமிழ் பதிவுகளப் பார்த்தப்புறம்தான் நான் என் தமிழ் வாத்திய நன்றியோட நெனைச்சுக்கிறேன், அப்டி சூப்பரா டோட்டல் லிட்டர்ரேச்சரா எழுதுறீங்க தல, அதுவும் லேட்டஸ்ட் நாஸ்டாலியா பதிவு, அழ வெச்சிட்டீங்க, இப்ப பாருங்க இந்த சேதி, எல்லாத்துக்கும் அழுறதுக்கு கண்ணீரிற்கு எங்கே போறதுன்னே தெரியல தல, சரி தல, நீங்க செய்திய பார்த்திட்டு போஸ்ட போடுங்க, தகவலைப் படிச்சிட்டு உடைஞ்சிடாதீங்க, அப்புறமா பேசலாம், பை தல” என்றான். அப்படி என்னதான் உயிர் போகும் செய்தி அதில் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என என் மின்னஞ்சல் பெட்டியை திறந்தேன். மடலின் மேல் சுண்டினேன். திரையில் விரிந்த மடலில், தல Bone Biraud எனும் Beer எம்மை விட்டு போய்ட்டார் தல… என்னும் ஒரு வரித் தகவல். அந்த இருள் தருணத்தின் மரணவிநாடியின் துடிப்பை என் இருதயம் சொல்லவியலாக் கவிதையொன்றின் லத்தீனமெரிக்க மொழிபெயர்ப்பாய் துடிக்க வைத்தது.

வண்டு மலர்களில் அமர்கிறது, ஈ மலங்களில் அமர்கிறது, அவரவர் அவரவர்க்கு இஷ்டமான இடங்களில் அமர்வதென்பது அவரவர் இஷ்டம்- போன் பீரோ

போன் பீரோ, சிறுவனாக இருந்த காலத்தில் கவ்பாய் கதைகள் மீது பிரியம் கொண்டவனாக இருந்தான். அவனிற்கு அப்பிரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவன் தந்தை. ஏனெனில் படிக்க வேண்டிய சிறுவனை கழுத்தில் மணிகட்டிய மாடுகளை பராமரிக்க வைத்த பெருமை அவரையே சாரும், இருப்பினும் கவ்பாய் கதைகள்மீது போன் பீரோ கொண்ட மோகம் அவனைப் படிக்க வைத்தது. அவனது பள்ளி ஆசிரியையான மேரி அவனைப் பற்றி நினைவுகூர்கையில் ரொம்பக் கட்டையா காற்சட்டை போட்டுக்கினு வருவான், ஏன்னு கேட்டா மாடுகள கலைச்சுப் பிடிக்க அதுதான் வசதிம்பான், ஏன்யா மாடுகள பிடிக்கப் போற, படி ராசான்னா, டீச்சரு பள்ளிக்கூடத்தில நீங்க பாடம் கற்று தாரீங்க ஆனா மாடுக எனக்கு ஒலகத்த கற்று தருதுங்கன்னு முத்தின பேச்சு பேசுவான், ஆனா ஒன்னு கரும்பலகைன்னா அவனிற்கு உசிரு, சாக்கை கைல எடுத்தான்னா வகுப்பறை ஒவியகூடம் ஆகிடும், அப்டி ஒரு தெறம….என கண்ணீருடன் நினைவுகளை மீட்கிறார். ஆனால் கரும்பலகையில் தன் திறமையின் உதயத்தை வரைந்த அந்தக் கலைஞனை ஒரு டாய்லெட் புரட்டிப் போட்டது.

redchassingcowபோன் பீரோ வசித்து வந்த கிராமம் நகரிற்கு சற்று தள்ளியே அமைந்திருந்தது. அக்கிராமத்திற்கு இரு பெருமைகளும் தேசிய மட்டத்தில் இருந்தது. ஊரை விட்டு ஓடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ள கிராமம் என அது புகழ் பெற்றிருந்தது. இந்த தகவலே பின்னாளில் பீரோ படைத்திட்ட ஊரை விட்டு ஓடிய பெண் காமிக்ஸ் கதை வரிசைக்கு மூலமாக இருந்தது. ஊரை விட்டு ஓடிய பெண் கதை வரிசை உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை எனினும் கணிசமான நாடுகளில் தடைக்குள்ளானது. பீரோவின் சொந்தக் கிராமத்தில் அப்புத்தகத்தை ஊரைவிட்டு ஓட இருந்த பெண்கள் தீயீட்டுக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். பீரோவின் கிராமத்தில் இன்றும் வசித்து வரும் முதியவரான ழான் ழார் ழாக், உண்மையை அதன் உணர்வுகளுடன் எடுத்து வந்து ஓவியங்களாக பரிமாறிய அக்கதையை இக்கிராம பள்ளியில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தன்னை தனியே விட்டு விட்டு ஓடிய தன் குடும்ப பெண்மணிகள் தனக்கு அதனால் நன்மையே செய்திருப்பதாக ழான் ழார் ழாக் தெரிவித்தார். ழான் ழார் ழாக் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் மறுமணம் செய்தவர் எனும் சாதனைக்குரியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ழான் ழார் ழாக்கிற்கு ஒரு புத்தகத்தை வாங்கி வருவதற்காக அருகிலிருந்த நகரிற்கு சென்ற சமயத்தில்தான் போன் பீரோவிற்கு அது நிகழ்ந்தது.

போன் பீரோ நகரிற்கு சென்று புத்தகத்தை வாங்கி விட்டு தன் கிராமம் திரும்புவதற்காக பஸ்தரிப்பில் தனியாக நின்றான். பெண்கள் விட்டு விட்டு ஓடும் கிராமத்திற்கு செல்ல பஸ்கூட விரும்பவில்லை போலும். அன்று குறித்த நேரத்திற்கு வரவேண்டிய பஸ், நடுவழியில் ஒரு பயணி மாயாவியும் மன்மதன் மாக்னோவும் கதையைப் படித்தநிலையில் மாரடைப்புக்குள்ளாகியதால் தாமதத்திற்குள்ளாகியது. பஸ் வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் ஆகலாம் என்பதை அறிந்த பீரோ, பஸ்நிலையத்தை சுற்றி வரலாம் என நினைத்தான். அருகில் இருந்த ஒரு பழக்கடையில் ஆப்பிள் ஒன்றை வாங்கிக் கடித்தபடியே சுற்ற ஆரம்பித்த பீரோவின் மனதில் அவனை சுற்றி விழுந்த காட்சிகள் இனம்புரியா ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.

மிக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த பீரோ அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே! சம்போகம் என்பதன் முதல் சித்திரம் தன் வரிகளை ஜன்னல் வழியாக பீரோவின் விழிகளிற்குள் ஏற்றியது. தன் கையிலிருந்த புத்தகத்தில் பீரோவின் விரல்கள் கோலமிட ஆரம்பித்தன. விரல்களின் வேகமும் சம்போகத்தின் வேகமும் கலை வேகம் கொண்டன. பஸ்நிலைய டாய்லெட்டை நோக்கி விரைவாக ஓடினான் பீரோ. அங்கிருந்த ஒரு கழிவறையில் உள்ளே நுழைந்து கதவை மூடினான். அவன் கண்கள் அந்தக் கழிவறையின் சுவரில் பார்வையை தெறிக்கவிட்டன. சற்று நேரத்திற்குமுன்பாக அவன் கண்ட காட்சியும், கழிவறை சுவரில் கிறுக்கப்பட்டிருந்த கலைக் கிறுக்கல்களும் வார்த்தைகளும் அவனை ஒரு மோன நிலையின் உன்மத்த உச்சத்திற்கு எடுத்து சென்றன. டாய்லெட்டில் கிடந்த சில கரித்துண்டங்களை கொண்டு தன் உணர்வுகளை அங்கிருந்த சுவர்களில் பதிக்க ஆரம்பித்தான் பீரோ. டாய்லெட்டை உபயோகிக்க வந்தவர்கள் பீரோவின் திறமையில் தம்மை தொலைத்தார்கள். அவன் விரல்களின் வேகம், அவன் கிறுக்கல்களில் ஒளிந்திருந்த உண்மை, அவன் கிறுக்கல்களில் புலப்பட்ட தனித்தன்மை என்பன அவர்களை ஆக்கிரமித்தன. தாம் செய்ய வந்த காரியத்தை அவர்களை மறக்கடிக்க வைத்தன பீரோவின் ஆரம்ப கிறுக்கல்கள். பின்னாட்களில் கழிவறை சுவர்களிலிருந்து பீரோவின் கிறுக்கல்களை துப்பரவு செய்து நீக்கியமைக்காக போக்குவரத்துதுறை பெரும்வருத்தம் தெரிவித்தது. போன் பீரோவை தம் பஸ்நிலைய கழிவறை சுவர்களில் கிறுக்கித்தரும்படியும் வேண்டுகோள் விடுத்தது. பெருந்தன்மையாக தன் ரசிகர் படையை அங்கு போய் கிறுக்க சொனனார் பீரோ. மீ த பஸ்டு, படித்து விட்டு வருகிறேன், பின்னிட்டீங்க தல, போன்ற பல வாசகங்கள் இன்றும் கழிவறைகளின் சுவர்களை கலைக்கூடங்களாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

thalaஇந்நிகழ்வின் பின்பாக கழிவறை சுவர்கள் எல்லாம் பீரோவின் சித்திரவாங்கிகளாகின. கிராமத்தின் ஒரு கழிவறைவிடாது கிறுக்கினான் பீரோ. கிராம மதகுருவின் கழிவறையில் சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள் என சில சித்திரங்களுடன் அவன் கிறுக்கிய கிறுக்கல்தான் அவர் கைதுக்கு காரணம் என்பதையும் கிராம முதியவர் ழான் ழார் ழாக் ஒரு மென்புன்னகையுடன் கசிய விட்டார். மேலும் பீரோ முன்னொருநாளில் அவரிற்காக வாங்கி வந்த புத்தகத்தில் பதிந்திருந்த விரல் கீறல்களை உலகின் பார்வைக்கு வைத்த அந்த முதியவர், கலையின் முதல் விரலடிப் படிமம் இந்நூல் என்றார். தல வங்கி கெரங்கு எனும் அந்த காமிக்ஸ் கதை இன்றும் மறுபதிப்புக்களை கண்டு கொண்டிருக்கிறது. விரைவில் கலைத்தாளில் கறுப்பு வெள்ளையில் பீரோவின் விரல் படிமங்களோடு வெளிவரவிருக்கும் அக்காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளாரிற்கு பீரோவின் மரணம் இன்னம் இரு மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாது வழமையாக அவர் இடவேண்டிய முகட்டை நோக்கும் பதிவையும் கண்ணீர் அஞ்சலிப் பதிவாக்கி காலம் ஓட்டிட உதவியது. செத்தும் கொடுத்தான் பீரோ எனும் வார்த்தை இவ்வாறாக நிறைவேறிற்று.

சுவர்களில் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருந்த பீரோ, இறுதிவரை சுவர்களிலே மட்டுமே கிறுக்கினார். பிரபலம் பெற்ற பல காமிக்ஸ் தொடர்களை அவர் தன் நினைவாக இந்தப் பாழுமுலகில் விட்டுச் சென்றிருக்கிறார். தனது அலுவலகத்தை டாய்லெட்போல் வடிவமைத்து அதன் சுவர்களில் கிறுக்குவதன் மூலமே தன் தொடர்களிற்கு சித்திரங்களை உருவாக்கினார் பீரோ. ஒரு முறை தன் அலுவலகத்தில் ஒரு கதையின் ஓட்டத்திற்கு இடம் போதாது போக அலுவலகம் இருந்த கட்டிடத்திலிருந்த கழிப்பறைகளின் சுவர்களில் எல்லாம் கிறுக்கி அக்கதையை முடித்து வைத்த பெருமை பீரோவிற்குண்டு. இருப்பினும் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று அவர் வரைந்த கிறுக்கல்கள் தங்களிற்கு சொந்தமானவை என கழிவறை உரிமையாளர்கள் முறையிட்டது அவரிற்கு ஒரு பெருத்த அடியாக அமைந்தது. புயல் தேடிய புற்று எனும் அக்கதையினை முழுமையாக பிரசுரிக்க பீரோ மிகவும் சிரமப்பட்டார். பிற கழிவறை உரிமையாளர்களிற்கு காப்பிரைட்டில் ஒரு கணிசமான தொகையை அவர் தர வேண்டியிருந்தது. இருப்பினும் புயல் தேடிய புற்றின் இறுதிப்பக்கம் இன்றுவரை வெளிவரவேயில்லை. அதற்கு காரணம் கலைக்குஞ்சாமணி Kickasso.

கிக்காசோவிற்கும் போன் பீரோவிற்கும் நிகழ்ந்து வந்த போட்டி சூரியனிற்கும் சூரியனிற்கும் இடையில் நிகழ்ந்த மோதல் ஒன்றிற்கு ஒப்பானதாகவே உதாரணம் காட்டப்படக்கூடும். கிக்காசோ மெழுவர்த்தியின் சுடரில் விரல்களை வைத்தால் மாயாமாகும் ஒரு நாயகனை உருவாக்கினால், பீரோ பசுக்களின் பிறப்புறுப்பில் உடலின் எந்தப் பாகங்களை நுழைத்தாலும் மாயாமாகும் ஒரு ஹீரோவை உருவாக்கினார். மேலும் அந்நாயகனின் கதை ஒன்றில் பசு ஒன்று சுடர் கொண்ட மெழுகுவர்த்திமீது சிறுநீர் கழிப்பது போல ஒரு கட்டத்தை வரைந்து மாபெரும் சர்ச்சையை உருவாக்கவும் பீரோ தவறவில்லை. இதுவே ஒளிரும் சிறுநீர் சர்ச்சை என இன்றும் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் கிக்காசோ சளைத்தவரல்ல ஒரு பசுவின் வடிவில் மெழுகுவர்த்தியை உருவாக்கிய அவர் அதன் பிறப்புறுப்பில் திரியை அமைத்தார், இன்றும் அவர் அலுவலக காட்சியறையில் அவ் அல்குல்திரிமெழுகுப்பசு பார்வைக்கு கிடைக்கும். தன் கதையின் நாயகனின் அபிமான துணைக்கருவியாக கிக்காசோ அம்மெழுகுப் பசுவை உருவாக்கினார். கிக்காசோவின் ரசிகர்கள் அம்மெழுகுப் பசுவின் மாதிரிகளை சளைக்காது வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே இருந்து வந்த தொழில் போட்டி எல்லை மீறியதற்கு முக்கிய காரணம், படைப்பூக்கத்தின் உன்மத்த நிலையில் தன்னை மறந்து கிக்காசோவின் அலுவலக கழிவறையில் புயல் தேடிய புற்றின் இறுதிப் பக்கத்தை பீரோ கிறுக்கியதுதான். கிக்காசோ எந்த சமரசத்திற்கும் உடன்படவில்லை. தன் கழிவறை சுவரில் பீரோ வரைந்த பக்கங்களை வெளியிட அவர் கண்டிப்பாக மறுத்தார். வெறுத்துப் போன பீரோ இறுதிப்பக்கம் இல்லாத நிலையிலேயே புயல் தேடிய புற்று கதையை வெளியிட்டார். புயல் தான் தேடிய புற்றைக் கண்டடைந்ததா, புற்றின் உள்ளே நுழைந்ததா என்பது இன்று சிலர் மட்டும் அறிந்த ரகசியமே. போனால் போகிறது இன்னொரு சுவரில் கிறுக்கி கதையை முடியுங்கள் என பதிப்பகத்தார் அவரை சற்று கடுமையுடன் கேட்டுக் கொண்டபோது, ஒரு குழந்தையைப் போல் என்னால் இன்னொரு குழந்தையை உருவாக்க முடியாது இது படைப்பு, அச்சிடுவது அல்ல என கண்டிப்பாக மறுத்து விட்டார் பீரோ. ஆனால் இறுதிப்பக்கம் இல்லாத பீரோவின் கதையான புயல் தேடிய புற்றுதான் இன்றும் வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைவிட சிறப்பான ஒரு முடிவை எந்தக் கிக்காசோவாலும் வழங்கிவிட முடியாது என்கிறார்கள் கதையைப் படித்தவர்கள்.

Munich_crash_tribut_431575aஎவ்வளவு புகழ் பெற்றாலும் பொதுக் கழிவறைச்சுவர்களில் கிறுக்குவதை போன் பீரோ நிறுத்தவேயில்லை. அவ்வகையான கிறுக்கல்கள் வாய்க்கபெற்ற கழிவறைகள் இன்று நல்ல பார்வையாளர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் டிவிலைட் திரைப்படம் காண்பிக்கப்பட்ட ஒரு திரையரங்கின் கழிவறையில் அவர் விரல்கள் கிறுக்கியவையே அவரின் அந்திக் கிறுக்கல்களாக அமைந்து விட்டன. டிவிலைட் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது படைப்பாக்க உன்மத்தம் தன்னுள் குடிகொண்ட நிலையில் திரையரங்க கழிவறையை நோக்கி சென்ற போன் பீரோ உன்மத்தநிலை கலையாது சுவர்களில் கிறுக்க ஆரம்பித்தார். ஆனால் அவரின் திறமை மீது பொறாமை கொண்ட ஒரு ரத்தக் காட்டேரி அவர் உயிரை அன்று எடுத்து சென்றது. அவர் கழுத்தில் இருந்த துளைகளும் மேலும் உடலின் பல பாகங்களில் காணக்கிடைத்த அறிகுறிகளும் அவரை தாக்கியது ஒரு ரத்தக் காட்டேரியாகவே இருக்க வேண்டும் என்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. திரையரங்கின் வாகனங்கள் தரிப்பிடக் காவலர் நடிகர் ராபார்ட் பேட்டின்சன் இந்த சந்தால் ஓடினார் எனத் தெரிவித்த தகவலை அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்று எவருமே பொருட்படுத்தவில்லை. பல கலைஞர்களின் மரணத்தின் மீது நீடிக்கும் மர்மம் போலவே பீரோவின் மரணத்தின் பின்பாகவும் ஒரு மர்மம் நீடிக்கும். பீரோவின் முற்றுப்பெறா இறுதிக் கிறுக்கல்களை பார்வையிட்ட கிக்காசோ வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறா கிறுக்கல், பீரோ அதன் உண்மை ரூபத்தை தன் கிறுக்கல்கள் வழி உணர்வின்றி விட்டுச் சென்றிருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் இந்நிலையில் சீனர்கள், ஜப்பானியர்கள் போலிருக்கிறார்கள் எனப் பீரோ கூறியதற்காக பீரோவின் நூல்களை பிரான்சு தடை செய்தது ஏன் எனும் கேள்வி ஏன் இப்போது என் நினைவில் வந்து சுடருகிறது என்றும் அவர் வருந்தினார். டாய்லெட்டில் தன் கலையை ஆரம்பித்த ஒரு கலைஞன் இன்று டிவிலைட்டில் அதனை நிறுத்திக் கொண்டான். அவன் உடல் அழிந்தாலும் ஆன்மாவான அவன் கலை அழியாது. பீரோ ஓவியங்களை வரைந்த கலைஞன் அல்ல ஓவியங்கள் வரைந்த கலைஞன் அவன். உலகெங்கிலும் இருக்கும் கழிவறைகளின் சுவர்கள் இன்று வழமையை விட ஈரலிப்பாக இருக்ககூடும். சுவர்களின் கண்ணீரை உணர்ந்த கலைஞன் நினைவுகள் ரசிகர்கள் மனதிலும் ஈரமாக இருக்கட்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என் கைகள் பதறின, உதடுகள் துடித்தன, கால்கள் டங்கு டங்கு என்று ஆடியது, என் உயிரே போய்விடும் போலிருக்கிறது. இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. பீரோவின் கிறுக்கல்களோடு நான் ஆழ்ந்திடப் போகிறேன். போன் பீரோவின் மறைவிற்காக உங்கள் உணர்ச்சிகரமான கண்ணீர் அஞ்சலிகளை நீங்கள் கீழே இருக்கும் கருத்துக் களத்தில் ஆற்றலாம். தமிழில் டைப் அடிக்க விரும்புவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பது நல்லது. இது ஒரு காட்சிப் பதிவே ஒரு மெகா கண்ணீர் அஞ்சலிப் பதிவை பீரோவின் மறைவு தந்த பாதிப்பு நீங்கிய பின்பாக எழுதி வெளியிடுகிறேன் அன்பு காமிக்ரேட்ஸ்சுகளே. பீரோவின் ஆன்மா சாந்தியடைவதாக. RIP BONE BIRAUD :( –!:/_!

Sunday, March 11, 2012

ஆபிரகாம் லிங்கன், காட்டேரி வேட்டையன்!!


Rhinebeck எனுமிடத்தில் பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனையாளானாக இருக்கும் செத் கிரஹாம் சிமித்திற்கு ஹென்ரி எனும் வாடிக்கையாளன் வழி சில நாட்குறிப்புக்கள் கிடைக்கின்றன. அந்நாட்குறிப்புக்களை படிக்க ஆரம்பிக்க முன்பாக ஹென்றி விதிக்கும் சில நிபந்தனைகளை செத் ஏற்றுக் கொள்ள வேண்டியாகிறது. ஹென்றியையும் அவன் வழங்கிய பட்டியலில் உள்ள 11 நபர்களையும் தவிர நாட்குறிப்புக்களில் உள்ள விடயங்களை செத் யாருடனும் கலந்து பேசக் கூடாது, மேலும் அந்நாட்குறிப்புக்களில் உள்ள தகவல்களை கொண்டு செத் ஒரு ஆவணத்தை தயாரித்தல் வேண்டும் என்பன இந்நிபந்தனைகளுள் அடங்கும். ஆர்வத்தின் உந்தலால் ஹென்றியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் செத், குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அன்றுவரை அவன் நம்பியிருந்த பல தகவல்கள் பொய்யாக மாறிக்கொள்ளும் ரஸவாதத்தை அந்நாட்குறிப்புகளின் வாசிப்பு உருவாக்குவதை உணர ஆரம்பிக்கிறான்.

பட்டியலில் உள்ள 11 நபர்களையும் சந்தித்து உரையாடும் செத், அமெரிக்க தேசத்தில் வாழ்ந்திருந்த!! ரத்தக்காட்டேரிகளின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். தேசத்தின் பிறப்பில், வளர்ச்சியில், அதனை நாசமாக்குவதில் ரத்தக் காட்டேரிகள் வகித்த பங்கு மற்றும் காட்டேரிகளின் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து தேசத்தை காக்கப் போராடிய ஒரு மனிதன் குறித்தும் அவன் தெரிந்து கொள்கிறான். ரத்தக்காட்டேரிகள் கட்டுக்கதையல்ல, நிஜம்! அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவன் காலத்தில் ஒரு சிறப்பான காட்டேரி வேட்டையன்! காலகாலமாக ஆப்ரகாம் லிங்கன் குறித்து சொல்லப்பட்டு வரும் தகவல்களால் கட்டப்பட்ட பிம்பம் நேர்மையற்றது! ஆப்ரகாம் லிங்கன் குறித்த நூல்கள் அவரின் உண்மையான போராட்டம் என்ன என்பது குறித்து பேசவேயில்லை! எனும் முடிவுகளை தன் ஆய்வுகள் மூலம் உருவாக்கி கொள்கிறான் செத்.

உண்மையில் ஹென்றி வழங்கிய ஆவணங்களை போலி அல்லது ஹென்றியின் உருவாக்கம் என்பதாகவே செத் கருதிக் கொள்கிறான் ஆனால் ஹென்றி தன் சுயரூபத்தைக் காட்டும்போது செத் தன் கருத்தை மாற்றியாக வேண்டியிருக்கிறது. ஆப்ரகாம் லிங்கன் நைனாவின் நாட்குறிப்பு என உங்களிடம் ஒரு நபர் சில பழைய குறிப்பேடுகளை தந்தால் உங்கள் மனநிலையில் உருவாகும் எண்ணங்களின் சித்திரங்கள் எவ்வாறானதாக இருக்கும்….எவ்வாறு பிரதி உருவாக்கப்பட்டது என்பதற்கு செத் வழங்கும் இந்த ஆரம்ப அறிமுகமே நாவலில் அவர் உட்பொதித்துள்ள கற்பனை வளத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது. செத் ரைன்பெக்கில் வாழ்ந்தாரா அவர் விற்பனையாளராக இருந்தாரா அவர் வாழ்க்கை ஹென்றி தந்த நாட்குறிப்புக்களால் சிதைக்கப்பட்டதா எனும் கேள்விகளிற்கெல்லாம் விடைகள் என்ன என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம், தன் கற்பனையின் நம்பகத்தன்மையை அங்கதமாக உறுதிப்படுத்த விழையும் செத்தின் நகைச்சுவை உணர்வு பின் தொடரும் வரிகளிலும் தனக்கென ஒரு இடத்தை சுவீகரித்து கொண்டிருக்கிறது. இதன் பின்பாக வரலாற்றில் எழுதப்பட்ட தகவல்களுடன் பதமாக குழைக்கப்பட்ட சுவையான கற்பனை எளிமையான ஒரு கதை சொல்லலில் பங்கேற்கையில் உண்மைகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடரப்போகும் கதையில் லயிப்பதில் என்ன தவறுதான் இருக்க முடியும்.

Abraham-Lincoln-Vampire-Hunter-4தான் திரட்டிய தகவல்கள், மற்றும் லிங்கனின் நாட்குறிப்புக்கள், கடிதங்கள், அவருடன் பழகியிருந்த மனிதர்களின் கூற்றுக்கள் என்பவற்றைக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் நாவலான Abraham Lincoln: The Vampire Hunter ஐ மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார் செத் கிரஹாம் ஸ்மித். முதல் பாகமான Boy, லிங்கனின் பிறப்பிலிருந்து அவன் 19 வயதை எட்டும் வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்திருக்ககூடிய சம்பவங்களை வாசகனிடம் எடுத்து வருகிறது. ஏழு வயதான லிங்கன், வான் கோழிகளை வேட்டையாடும் காட்சியில் ஆரம்பமாகிறது கதை. லிங்கன் வேட்டையாடிய வான்கோழியின் குரூரமான மரணம் அவன் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. தனக்கு தீங்கு நினைக்காத ஒரு உயிரைப் பறித்தது குறித்து சிறுவனான லிங்கன் மனதில் குற்றவுணர்வு உருவாகிறது. அவ்வான்கோழியின் மாமிசத்தை உண்ணாது விடுகிறான் லிங்கன். மேலும் தான் வேட்டையாடப் போவதில்லை என்பதில் உறுதியானவனாகிறான். அவன் தந்தை இதற்காக மரக்கட்டைகளை கோடாரியால் பிளக்கும் பணியை ஒரு தண்டனையாக லிங்கனிற்கு வழங்குகிறார். லிங்கனிற்கும் கோடாரிக்குமான நெருக்கத்தின் ஆரம்பம் இதுவே. மரக்கட்டைகளை பிளந்த அனுபவம் பின்னாட்களில் காட்டேரிகளின் இதயங்களை பிளக்க அவனிற்கு கைகொடுக்கும் என்பதை அவ்வயதில் லிங்கன் அறிந்தானில்லை.

1809ல் ஸிங்கிங் ஃபீல்டில் பிறந்த லிங்கனிற்கும் அவர் தந்தைக்கும் இடையில் மிகவும் ஒரு பெரிய இடைவெளி இருந்து வந்திருக்கிறது. எழுதப் படிக்க தெரியாத நபரான தாமஸ் லிங்கன், தன் குடும்பத்தின் ஆகக்குறைந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் ஒரு குடும்பத்தலைவனாகவே இருந்தார். இதுவே லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த பற்றற்ற தன்மைக்கு மூலமாக இருந்தது. காலம், லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த மெலிதான வெறுப்பை அதிகரிக்க அதிக வாய்ப்புக்களை எடுத்து வந்து கொண்டிருந்தது. தன் தந்தை தாமஸின் இறுதிச்சடங்கில்கூட லிங்கன் பங்கேற்கவில்லை எனுமளவிற்கு லிங்கனிற்கு அவர் முக்கியமற்றவராக மாறிப்போயிருந்தார். மாறாக தன் தாயாராகிய நான்சி லிங்கன் மீது பெரும் அன்பு கொண்டவராக இருந்தான் லிங்கன்.

கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லிங்கனிற்கு கதைகளைப் படித்துக் காட்டியும், கூறியும் வாசிப்பில் லிங்கனின் ஆர்வத்தை தூண்டினார் நான்சி. மேலும் லிங்கனை எப்போதும் எந்நிலையிலும் அன்புடன் வாரித்தழுவிக் கொள்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக 1818ல் Milk Sickness என அழைக்கப்பட ஒரு வியாதியால் அவர் மரணத்தை தழுவிக் கொள்கிறார். மரணப்படுக்கையில் நான்சியின் அருகில் விலகாது இருந்த லிங்கனிற்கு அவன் தாயார் கூறிய இறுதி வார்த்தைகள் அவன் மரணம்வரை அவன் வாழ்வின் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்காதிருக்க உதவின என்பதை நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. நேசம் கொண்ட ஒருவரின் மரணம் வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்க செய்கிறது அல்லது அதன் மீதான பிடியை நழுவச் செய்கிறது. லிங்கன் தன் தாயின் இறுதி வார்த்தைகளிற்காக வாழ்ந்து செல்பவனாக இருக்கிறான். அதேபோல் அவன் தாயின் மரணம் குறித்து பின் அவன் தெரிந்து கொள்ளும் உண்மைகளும் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு இலட்சியத்தை எடுத்து வருகின்றன. லிங்கன் எனும் ஆளுமையின் உருவாக்கத்தில் அவன் தாய் வகித்த பங்கு என்ன என்பதை நாவலின் இப்பகுதி சொல்லாமல் சொல்கிறது. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தைக்கூட தாண்டாது என்பது மிகவும் ஆச்சர்யத்தை எடுத்து வரும் ஒரு தகவலாக இருக்கிறது.

Abraham-Lincoln-Vampire-Hunter-1நான்சியின் மரணத்தின் பின்பாக சாரா எனும் பெண்மணியை மறுமணம் செய்து கொள்கிறார் தாமஸ். தன் சொந்தப் பிள்ளைகளைவிட ஆப்ராகம் லிங்கனில் பரிவு கொண்டவராக இருந்தார் சாரா. வாசிப்பின்மீது லிங்கனின் ஆர்வத்தை உணர்ந்த சாரா அதனை ஊக்குவிக்க தவறியதேயில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்த கதைகள் லிங்கனை பெரிதும் கவர்ந்தன. தன் தந்தையைப் போலவே கதைகள் கூறுவதில் சிறப்பான ஆற்றல் கொண்டவனாக லிங்கன் உருவாக ஆரம்பித்தது இக்காலப்பகுதியில்தான். அதேபோல் பப்டிஸ் மதப்பிரிவை சேர்ந்த தாமஸ் லிங்கன், அமெரிக்க மண்ணில் புழக்கத்திலிருந்த அடிமைமுறை குறித்து எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார், அதை தீமையின் ஒரு வடிவாகவே அவர் கருதினார். தன் தந்தையிடமிருந்து லிங்கன் வரித்துக் கொண்ட பண்புகளாக மேற்கூறிய இரண்டையும் கருதிக் கொள்ளலாம். இதை தவிர்த்து தன் தந்தைக்கு நேர் எதிரான பிம்பமாக உருமாறினார் லிங்கன். தன் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அவர்கள் நலன்களை சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் தந்தையுமாகவே அவர் இருந்தார்.

1820ல் லிங்கனின் 11வது பிறந்ததினத்திற்கு பரிசாக சாரா அவனிற்கு ஒரு நாட்குறிப்பை வழங்குகிறார். அதே வருடத்தில் இலைதுளிர்காலத்தின் இரவொன்றில் தன் தாயின் மரணம் குறித்த சில உண்மைகளை தன் தந்தை வழியாக அறிந்து கொள்கிறான் லிங்கன். Milck Sickness என்பது உண்மையில் என்ன என்பதும் அவனிற்கு அந்த இரவில் தெளிவாகிறது. அவன் அறிந்து கொண்ட உண்மைகள் தன் தந்தையையுடன் அவன் கொண்டிருந்த உறவின் இடைவெளியை மேலும் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டேரிகளை பூண்டோடு ஒழிப்பேன் எனும் சபதத்தையும் அவன் கொள்ள காரணமாகவிருக்கின்றன. கடவுள் என்பவர் மீது லிங்கன் கோபம் கொண்டவனாகிறான். தன் தாய்மீது அவன் கொண்டிருந்த பாசமும், அவன் இளரத்தமும் காட்டேரிகள் குறித்த அபாயங்களை அவன் கண்களிற்கு காட்ட தடையானவையாகவிருந்தன. காட்டேரி வேட்டை பற்றிய தன் அனுபவங்களை தன் நாட்குறிப்பில் பதிவது என்றும் அந்நாட்குறிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது எனவும் லிங்கன் தீர்மானிக்கிறான். ஆனால் லிங்கனின் இந்த தீர்மானமானது பிற்காலத்தில் உறுதியற்ற ஒரு தீர்மானமாக மாறிப்போவதை தொடரும் நாட்குறிப்புக்களின் பதிவுகள்வழி வாசகன் அறிந்து கொள்ளமுடியும். தனது பலதரப்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் லிங்கன் இந்த நாட்குறிப்புக்களில் பதிந்து வந்திருக்கிறார். இந்த வரிகள்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் எனும் பிம்பத்தின் மீதான உடைப்பை சிற்றுளிபோல் நிகழ்த்துகிறது. நாவலின் முக்கியமான தளமும் லிங்கன் குறித்த கற்பனையான மாற்றுப்பார்வைதான். அதுவேதான் லிங்கன் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரைபோல் நகரும் இந்நாவலின் வாசிப்பனுபவத்தை ஓரளவிற்கேனும் சுவையான ஒன்றாக மாற்றியமைக்கிறது.

காட்டேரி வேட்டையனாக மாறிவிட்ட லிங்கன் அபாயங்களை தேடிப் போகிறான். அபாயத்தில் மாட்டிக் கொள்கிறான். காட்டேரிகள் குறித்து அதிக தகவல்கள் தெரிந்திராத நிலையில் அவர்களை எதிர்த்துப் போராடுவது அறிவற்ற செயலாக லிங்கனிற்கு தோன்றுவதேயில்லை. ஒரு காட்டேரி வேட்டையின்போது வசமாக ஒரு காட்டேரியின் பிடியில் மாட்டிக்கொண்டு உயிர்போகும் நிலையிலிருக்கும் லிங்கனை காப்பாற்றுகிறான் ஹென்றி ஸ்டேர்ஜெஸ். லிங்கனை மிகவும் சிறப்பான ஒரு காட்டேரி வேட்டையனாக மாற்றுவது ஹென்றி அவனிற்கு அளிக்கும் பயிற்சிகளே. காட்டேரிகள் குறித்து நன்கு அறிந்தவனாக இருக்கும் ஹென்றி தரும் தகவல்களைக் கொண்டு தன் வேட்டைகளை வெற்றிகரமானதாக நிகழ்த்த ஆரம்பிக்கிறான் லிங்கன். ஹென்றிக்கும் லிங்கனிற்குமிடையில் உறுதியான ஒரு நட்பு உருவாக ஆரம்பிக்கிறது. மரணம் என்பதை அர்த்தமற்ற ஒன்றாக ஆக்குவதாக இந்நட்பு நாவலில் சித்தரிக்கப்படுகிறது.

3244545680காட்டேரி வேட்டை மும்முரமாக நடந்தாலும் அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் லிங்கன் தனக்கு கிடைக்ககூடிய வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவனாக இருக்கிறான். இதில் கிடைக்கும் வருமானத்தை அக்காலகட்ட வழக்கப்படி அவன் தந்தையிடம் லிங்கன் தந்தாக வேண்டும், இது லிங்கனிற்கு உவப்பான ஒன்றாக இருந்ததில்லை. தன் தந்தையிடமிருந்து தூர விலகி இருக்கலாம் எனும் காரணத்திற்காகவே ஜேம்ஸ் ஜெண்ட்ரி எனும் வணிகன் தரும் வேலையை ஏற்றுக் கொள்கிறான் லிங்கன். ஜெண்ட்ரியின் சரக்குகளான பதப்படுத்தப்பட்ட பன்றி மாமிசம், சோளம் போன்றவற்றை தானே உருவாக்கிய தட்டைப்படகொன்றில் மிசிசிபி ஆற்றின் வழியாக அமெரிக்க தெற்கின் ஆழங்களை நோக்கி கொண்டு செல்லும் நீண்ட பயணத்தை தொடக்குகிறான் லிங்கன். இப்பயணம் அமெரிக்காவில் புழக்கத்திலிருந்த அடிமைமுறையின் குரூரம் குறித்த ஒரு பார்வையை லிங்கனில் அழுத்தமாகப் பதிக்கிறது. காட்டேரிகள் போலவே அமெரிக்காவை பிடித்த மற்றுமொரு கேடு அடிமைமுறை என்பதாக அவன் எண்ணங்கள் இருக்கின்றன. அடிமைமுறையை புழக்கத்தில் கொண்ட மனிதர்களுடன் லிங்கனின் வியாபார தொடர்புகள் இருந்தாலும் அதுகுறித்த சலனங்களை லிங்கன் எங்கும் காட்டிக் கொள்வதில்லை. நீயூ ஆர்லியன்ஸ் நகரில் சுதந்திரமாக பயமற்று உலவும் காட்டேரிகள் லிங்கனிற்கு வியப்பை தருபவர்களாக இருக்கிறார்கள். தன்னை வேவுபார்க்கும் ஒரு காட்டேரியை தீர்த்துக் கட்ட தொடர்ந்து செல்ல்லும் லிங்கன் ஒரு வித்தியாசமான சந்திப்பை உருவாக்கி கொள்கிறான். அந்த சந்திப்பின் பெயர் எட்கார் ஆலன் போ!

காட்டேரிகள் குறித்த லிங்கனின் பார்வைக்கு எதிரான பார்வை கொண்டவராக இருக்கிறான் எட்கார் ஆலன் போ. மதுவை சுவைத்தபடியே தன் காட்டேரி நண்பன் ஒருவன் குறித்து லிங்கனிடம் பகிர்ந்து கொள்ளும் போவின் கருத்துக்கள் லிங்கனை வியப்படைய வைக்கின்றன. ஆலன் போ ஒரு வித்தியாசமான மனிதன் எனும் எண்ணத்தை தன் மனதில் லிங்கன் உருவாக்கி கொள்கிறான். ஆலன் போவின் கவிதைகளில் மயங்கிய ஒரு காட்டேரி, மரணத்தையும், அதன் இருள்மையையும் குறித்து இவ்வளவு நுட்பமான உணர்வுகளுடன் எழுத ஒரு காட்டேரியால் மட்டுமே முடியும் எனக்கருதி பின் ஆலன்போ ஒரு காட்டேரி அல்ல என்பதை அறியும்போது அடையும் வியப்பு நாவலின் வரிகளில் சுவையாக சொல்லப்படுகிறது. காட்டேரிகள் அதிசயமான , மேன்மையான படைப்புக்கள் எனும் கருத்தைக் கொண்டவராக இருக்கிறான் ஆலன் போ. ஆலன் போ இரு தடவைகள் லிங்கனை சந்தித்து உரையாடும் தருணங்கள் நாவலில் இடம்பிடிக்கின்றன, இவை இரண்டிலும் ஆலன் போ மீதான ஒரு அருமையான சித்திரத்தை ஒரு சில வரிகளில் உருவாக்கும் வித்தையை செத் சாதித்து இருக்கிறார். அமெரிக்க காங்கிரஸிற்கான தேர்தலில் வெற்றி பெற்று வாஷிங்டனில் வாழ்ந்து வரும் லிங்கனை 1849ன் பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பார் ஆலன் போ. அந்த சந்திப்பின்போது காட்டேரிகள் திட்டமிட்டுள்ள ஒரு சதி குறித்து லிங்கனிடம் பேசும் ஆலன் போ, அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் பால்டிமோர் நகரின் தெருக்களில் மனநிலை குழம்பியவராக நடந்து திரிந்து பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்து போகிறார். நாவலில் காட்டேரிகள் தாக்கி மரணமானவர்களின் நோய் அறிகுறிகளும் ஆலன் போவின் நோய் அறிகுறிகளும் ஒத்தவையாக இருக்கின்றன. ஆலன் போவின் மரணத்தின் மீது படிந்திருக்கும் மர்மத்தின் இருளை இந்தக் கற்பனை மூலம் இங்கு தெளிவாக்க விழைகிறார் செத். 1829ல் நீயூ ஆர்லியன்ஸில் ஆப்ரகாம் லிங்கன் காணும் அனுபவங்களுடன் நாவலின் முதல் பாகத்தை நிறைவிற்கு இட்டு வருகிறார் செத். சாதாரண வாசகன் ஒருவன் அதிகம் அறிந்திராத ஆப்ரகாம் லிங்கனின் இளமைக்காலம், மற்றும் அவர் வாழ்ந்திருந்த காலத்தின் மக்களின் வாழ்க்கை முறை என்பவற்றை சுருக்கமாக சொல்வதன் மூலம் இப்ப்குதியை விறுவிறுப்பானதாக செத் உருவாக்கியிருக்கிறார்.

abraham-lincoln-and-edgar-allen-poe-1311735603-8913செத்தின் நாவலின் இரண்டாம் பாகமான Vmpire Hunter, லிங்கனின் வாழ்வின் மிக முக்கியமான சில நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது. 1830களில் இலினாய்ஸிற்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்கிறான் தாமஸ் லிங்கன். தன் தந்தையுடன் இலினாய்ஸில் மேலும் இரு வருடங்களை கழிக்கும் லிங்கன், தன் இருபத்தி இரண்டாவது வயதில் தன் வழியில் தனித்து செல்ல ஆரம்பிக்கிறான். தான் ஏற்றுக் கொண்ட வேலைகளில் சிரத்தையுடன் உழைக்கும் அவனது திறமையை வியக்கும் டெண்டன் ஒஃபுட் எனும் வியாபாரி நீயூ சலேம் எனும் குடியேற்றத்தில் அவன் உருவாக்கும் பல்பொருள் அங்காடியில் லிங்கனை சிப்பந்தியாக பணிக்கு அமர்த்திக் கொள்கிறான். இங்குதான் லிங்கனிற்கு வில்லியம் மெண்டெர் கிரஹாம் எனும் பள்ளி ஆசிரியரின் நட்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு பேச்சாளனாக லிங்கன் திகழ்வதற்குரிய ஆரம்பகட்ட பணிகளிற்கு மெண்டெர் கிரஹாம் அதிக பங்களிப்பு செய்திருக்கிறார். அமெரிக்க மண்ணில் வாழும் காட்டேரிகள் குறித்த எண்ணங்கள் லிங்கனில் இருந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் காட்டேரிகள் எந்த பயங்களுமின்றி சுதந்திரமாக வாழ்வதையும், அவர்கள் ஆற்றும் உயிர்க்கொலைகள் மீதான தண்டனைகள் குறித்த அச்சங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை என்பதும் லிங்கனால் உணரப்படுகிறது. மேலும் காட்டேரிகளிற்கும் அடிமை வியாபாரிகளிற்கும் இடையில் உருவாகி இருக்கும் மெளனமான ஒரு புரிந்துணர்வும் லிங்கனால் அறியக்கூடிய ஒன்றாகவிருக்கிறது. அடிமைகளின் ரத்தம் மனிதர்களாலும், காட்டேரிகளாலும் உறிஞ்சப்படுவதில் அமெரிக்க மண்ணில் வேற்றுமை இல்லை எனும் உண்மையை செத் வாசகனிடம் இங்கு எடுத்து வர ஆரம்பிக்கிறார். காட்டேரி எனும் தீமைக்கு எதிரான போராட்டம் அடிமைமுறைமைக்கு எதிரான, அமெரிக்க மண்ணில் வாழும் மனிதனின் நிறம் எவ்வாறானதாக இருந்தாலும் அது அவன் சுதந்திரத்திற்கான போராட்டம் எனும் மாயவரிகளை வாசகன் இங்கு காண ஆரம்பிக்கிறான். இந்நிலையில் ஆப்ரகாம் லிங்கன் தன் அரசியல் வாழ்வின் முதல்படியில் காலடி எடுத்து வைப்பதையும் செத் நாவலிற்குள் இட்டு வருகிறார்.

1832ல் இலினாய்ஸ் மாநில தேர்தலில் நீயு சலேம் குடியிருப்பு பகுதி வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறான் லிங்கன். இக்காலகட்டத்தில் Black Hawk எனும் செவ்விந்திய உரிமைப் போராட்ட தலைவன், அமெரிக்க அதிகாரத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி கலகத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்தச் செவ்விந்தியப் போராளியையும் அவனது குழுவையும் எதிர்த்துப் போராட தன்னார்வ வீரர்களாக சேர்ந்து கொள்பவர்களில் ஒருவராக இருக்கிறார் லிங்கன். போர் மீது அக்காலத்தில் லிங்கன் கொண்டிருந்த மோகம், தலைவனாகி அமெரிக்கர்களை வழிநாடத்தி செல்வதில் அவரிற்கிருந்த பிரியம் எனபன நாவலின் இப்பகுதியில் புலனாக ஆரம்பிக்கின்றன. இப்பகுதியில் அதிர்ச்சி தரும் சில வரிகளை லிங்கனின் எண்ணமாக எழுதுகிறார் செத். காட்டேரிகளை விட வேகமும், வலிமையும் குறைந்த செவ்விந்தியர்களை எளிதாக அதிக எண்ணிக்கையில் கொன்று குவிக்க முடியும் என லிங்கன் கருதுவதாக அமையும் வரிகள் இங்கு அதிர்ச்சி தருகின்றன. அடிமைமுறையை கேடாக கருதும் லிங்கன் எவ்வாறு செவ்விந்திய மக்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க மண்ணிற்கு எதிரான ஆபத்தான ஒன்றாக விளங்கிக் கொண்டான் போன்ற கேள்விகளை வாசகன் எழுப்பாது இப்பகுதியிலிருந்து நகர முடியாது. அரசியல் வாழ்க்கையில் ஆப்ரகாம் லிங்கனின் முதல் வெற்றி 1834 ஆகஸ்டில் அவனை வந்தடைகிறது. இலினாய்ஸ் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுகிறான் லிங்கன். எதிர்காலத்தில் ஒரு வக்கீலாவதற்கும், வெள்ளை மாளிகையில் நுழைவதற்குமான முதல் படி இந்த வெற்றியில்தான் ஆப்ரகாம் லிங்கனிற்கு கட்டி தரப்படுகிறது. அது மட்டுமல்ல இக்காலகட்டத்தில்தான் தன் முதல் காதலையும் சந்தித்துக் கொள்கிறான் லிங்கன்.

இந்த உலகை பாழாக்கும் அனைத்து இருள்மைகளிற்கும் எதிரான ஒரு ஒளடதமாக அவள் இருந்தாள்.”என தன் காதலியான ஆன் ருட்லெட்ஜ் குறித்து தன் நாட்குறிப்பில் பதிகிறான் லிங்கன். இவ்வரிகளை லிங்கன் எழுதிய காலத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடனில் சிக்கியிருந்தான் லிங்கன். ஆன் ருட்லெட்ஜின் நினைவுகள் லிங்கனை கடன் தந்த அழுத்தத்திலிருந்தும், காட்டேரிகளின் மீதான அவன் வஞ்சத்திலிருந்தும் தூரத் தள்ளி வைத்திருந்தன. கதாசிரியர் செத் இங்கு லிங்கனை அசாதரணமான ஒரு பிறவியாக சித்தரிக்காது வழமையாக காதலின் கொடூர பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனாகவே காட்ட விழைகிறார். காதலியின் அருகாமையை எப்போதும் வேண்டும், அவள் தந்த முதல் முத்தத்தை தன் மரணமூச்சின்போதும் நினைவுகூரும், காதலியின் அழகை ஓயாது புலம்பும் ஒருவனாகவே லிங்கன் இருக்கிறான். ஆனால் லிங்கனின் சாபம் அவனை விடுவதாக இல்லை அவன் உயிர்க்காதலியான ஆன் ருட்லெட்ஜ் 1835ல் அகால மரணமடைகிறாள். லிங்கன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்த காட்டேரி வேட்டையை மீண்டும் முடுக்கி விடுவதாக இச்சம்பவம் அமைகிறது. தாய், காதலி எனும் இரு அன்புகளையும் தன்னிடமிருந்த பறித்த தீமைக்கு எதிரான போராட்டத்தை லிங்கன் தீவிரமாக நடாத்துவதின் வழி சாதாரண பழிவாங்கும் படல கதையமைப்புக்களை ஒத்ததாக நாவலின் கதையமைப்பு மயக்கத்தை உருவாக்கும் தருணமிது. ஆனால் லிங்கனை ஒரு காட்டேரியின் பிடியிலிருந்து முன்பொருமுறை காப்பாற்றிய ஹென்றி, ஆனின் இறுதிச் சடங்குகளின் பின்பாக லிங்கனிடம் சில உண்மைகளை விளக்க ஆரம்பிக்கிறான். லிங்கனை பிரதான பாத்திரமாக கொண்டு ஒரு தேசத்தை கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து மீட்க ஒரு குழு வகுக்கும் திட்டங்களை லிங்கன் இத்தருணத்தில் அறிந்து கொள்கிறான். காலம் அவனை காதலியை இழந்த வேதனையிலிருந்து மீட்டெடுக்கிறது. 1839ல் லிங்கனிற்கு அறிமுகமாகும் மேரி டோட்டை 1842ல் திருமணம் வாயிலாக கரம் பற்றுகிறான் லிங்கன். லிங்கனை சாதாரண ஒரு மனிதனின் உணர்வுகளோடும் குழப்பங்களோடும், சிக்கல்களோடும் இப்பகுதியில் வடித்திருக்கும் செத், ஆப்ரகாம் லிங்கன் மீது வாசகன் பார்வையை தன் கற்பனையால் மறுபுனைவு செய்கிறார். 1857 வரை தொடரும் இப்பகுதியில் செத், லிங்கனின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, வக்கீல் வாழ்க்கை போன்றவற்றை வாசகனிடம் எடுத்து வருகிறார். 1843ல் அவரிற்கு முதல் மகன் பிறக்கிறான், தன் மனைவிமீதும், குழந்தைமீதும் கொண்ட பற்றால் காட்டேரி வேட்டையை நிறுத்துகிறான் லிங்கன். ஆனால் 1857ல் ஹென்றி, நீயூயார்க்கிற்கு வருமாறு லிங்கனிற்கு ஒரு அழைப்பை விடுக்கிறான். அவன் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் லிங்கன் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை அறிந்து கொள்கிறான். அந்த உண்மைகள் தந்த பாதிப்பில் லிங்கன் எடுக்கும் முடிவானது அமெரிக்க வரலாற்றையே மாற்றியமைத்த ஒன்றாக அமைந்தது.

assassination-President-Lincoln-Ford-Theatre-April-14-18651858ல் ஆரம்பிக்கும் நாவலின் மூன்றாம் பகுதியான President ஆனது லிங்கனின் படுகொலைவரை தொடர்கிறது. லிங்கன் எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியானார் என்பதற்கு தன் கற்பனை வழி காரணங்களை புகுத்துகிறார் செத். ஹென்றியும் அவன் நண்பர்களும் எவ்வாறு லிங்கனிற்கு பின்னிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதை நாவலின் வரிகள் சுவாரஸ்யமாக வாசகனிடம் எடுத்து வர முயல்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாவலின் விறுவிறுப்பு குறைந்த பகுதியாக இந்த இறுதிப் பகுதி அமைந்து விடுகிறது. தேர்தல், அரசியல் வெற்றிக்கான காய்நகர்த்தல், காட்டேரிகளின் சதிகளை முறியடித்தல் என இருந்தாலும் வேகம் இந்தப் பகுதியில் காணாமல் போய்விடுகிறது. 1861ல் ஆரம்பமாகிய அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்பாகவுள்ள உண்மையான காரணங்கள் என்ன என்பதை செத் தன் கற்பனையில் வடிக்க விழைகிறார். அப்போரில் பங்கு பற்றியவர்களின் கடிதங்கள் வழி தன் கற்பனையின் நம்பகத்தன்மையை செத் இங்கு நிரூபிக்க முனைகிறார். அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக முனைப்புடன் போராடிய ஒரு மனிதனின் கதையை அவரால் நாவலில் சுவையாக தர முடிந்திருக்கிறது. லிங்கனின் மனைவியான மேரி டோட் மனநிலை சிதைந்த ஒரு பெண்ணாக நாவலில் இறுதிப் பகுதியில் சித்தரிக்கப்படுகிறார். இறந்துபோன தன் இரு புதல்வர்களின் ஆவிகளுடனும் அவர் தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பங்களும், லிங்கனிற்கும் அவரிற்குமிடையிலான உறவு சில சுமூகமான நல விசாரிப்புக்களுடன் தேங்கிவிட்டதும் மெலிதாக இப்பகுதியில் கோடிட்டு காட்டப்படுகிறது. லிங்கன்கூட உறுதி குலைந்தவராகவும், தளர்ந்து போனவராகவும், சிரிப்பை தொலைத்தவராகவுமே சித்தரிக்கப்படுகிறார். லிங்கனை படுகொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத் குறித்த சில நம்பவியலா தகவல்களை கதையின் இறுதிப்பகுதியில் சேர்த்து காட்டேரிகள் எனும் உருவகத்தினை உறுதிப்படுத்த விழைகிறார் கதாசிரியர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 ஆகஸ்டில் லிங்கன் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக ஆற்றும் உரையுடனும், மிகையான கற்பனை உண்மைகளுடனும் நாவல் நிறைவு பெறுகிறது.

மிக எளிதான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், வேகமான வாசிப்பை வழங்கக்கூடியது. இருப்பினும் நாவலின் தரம் சுமாரான ஒன்றே. நாவலின் பல பக்கங்களிலும் போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் நகைச்சுவையை மேலும் கூட்டும் தன்மையுடையவையாக இருக்கின்றன. ஸ்டார்பக் காப்பியகம், கூகிள், விக்கி என தன் நன்றியை செலுத்தும் செத்தின் எழுத்துக்கள் ஆன்மாவை உள்வைத்து இருக்கும் ரகத்தை சேர்ந்தவை அல்ல. பரபரப்பான மாத நாவல் ஒன்றை படிப்பது போல ஒரு அனுபவத்தை வழங்கும் இந்நாவல் லிங்கன் எனும் மனிதன் மீதும் அவர் எடுத்துக் கொண்ட அடிமைமுறையொழிப்பு போராட்டத்தின் மீதுமான மதிப்பை புதுப்பிக்க வைக்கும் பணியை சிறப்பாக நிகழ்த்தி விடுகிறது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் இந்நாவலின் திரைவடிவம் வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும் என்பது உபரித்தகவல். நாவலை படித்தால் டிக்கட் காசு மிச்சம் என்பது கூடுதல் தகவல்!!