Showing posts with label Cormac McCarthy. Show all posts
Showing posts with label Cormac McCarthy. Show all posts

Wednesday, December 9, 2009

சாம்பல் விதைத்த பாதை


இன்றிலிருந்து பத்து வருடங்களில் உலகில் ஏற்படும் நிகழ்வொன்றினால் உருவாகும் பேரழிவில் மனித குலமானது அதன் அழிவின் எல்லைக்குத் தள்ளப்படுகிறது. இந்த அழிவின் பிடியிலிருந்து மீண்டவர்கள் சிலரே.

அழிவின் பின்னான உலகில் மின்சாரம் கிடையாது. தாவரங்கள், விலங்குகள் அழிந்து போய்விட்டன. உணவுப் பொருட்களே இல்லை எனும் நிலையில் எஞ்சியுள்ள மனிதர்களின் வாழ்க்கையானது தம் உயிர்வாழ்தலிற்கான சாத்தியத்தின் எல்லா இழைகளையும் எவ்வழியிலும் தேடி ஓடுவதாக அமைந்து இருக்கிறது.

சிதைந்து போன மனித நாகரீகத்தில் நிலவும் கொடிய உணவுப் பற்றாக்குறையானது மனிதர்களில் சிலரை மனித மாமிசம் உண்ணுபவர்களாக மாற்றி விட்டிருக்கிறது. வன்முறை செறிந்த குழுக்களாக செயற்படும் இந்த நரமாமிச உண்ணிகள் சக மனிதர்களை உணவிற்காக தேடித் தேடி வேட்டையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, தங்களிற்கு தேவையான வேளைகளில் அவர்களை வெட்டிப் புசித்து தம் பசியை ஆற்றிக் கொள்கிறார்கள் இக்குழுவினர்.

நாளிற்கு நாள் உலகில் சூரியனின் ஒளி மங்கிக் கொண்டே செல்கிறது. கார்வண்ணத்தின் சாயல் வெளிச்சத்தை விழுங்க ஆரம்பிக்கிறது. உடலை உறையவைக்கும் குளிரோ புவியின் மீது தன் பிடியை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

மேற்கூறிய நிலைமைகளிலும் நாகரீக சமுகம் நிறுவிய ஒழுக்க நெறிகளிற்குள் தொடர்ந்தும் வாழ முற்படும் மனிதர்களின் நிலை பித்துப் பிடித்ததாகி விடுகிறது. அவ்வகை மனிதர்களிற்கு தற்கொலை என்பது அவர்கள் வாழ்வின் ஓர் இனிய அனுபவமாக இருக்கக்கூடியதான நிலையைப் பெறுகிறது.

G149571447989278அவனும், அவளும் தம்பதிகள். இதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அழிவின் பின் அவளிற்கு இஷ்டமில்லாமலேயே அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவலமான நிலையில் உள்ள ஓர் உலகில் தன் குழந்தை பிறக்கிறதே எனும் வேதனை அவளிற்கு.

அவன் நல்ல ஓர் கணவன். தன் மனைவியையும் குழந்தையையும் தன் உயிராக நேசிப்பவன். அவன் குழந்தைதான் அவனிடம் கடவுள் பேசிய வார்த்தை. தன் மனைவி தற்கொலை முயற்சிகளில் இறங்க விரும்பும் போதெல்லாம் அவளைத் தடுப்பதற்காக அவளிடம் கெஞ்சுகிறான். இந்தக் கொடிய நிலையை தாம் எவ்வாறாயினும் கடந்து சென்றுவிடலாம என அவளிற்கு நம்பிக்கை தருகிறான்.

அவர்கள் பையன் அவர்கள் அரவணைப்பில் வளர்கிறான். அழிந்த உலகில் பிறந்த குழந்தை அவன். அவன் தந்தை அவனிற்கு பாடங்களும், நற்போதனைகளும், கதைகளும் ஊட்டி வளர்க்கிறான்.

la-route-2009-14957-949688813 நரமாமிச உண்ணிகளிற்கு அஞ்சி மறைந்து, நாளிற்கு நாள் இருளும், குளிரும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உலகில் வாழும் அழுத்தம் மிகுந்த வாழ்க்கையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாத கணமொன்றில் அவள்; அவனையும் பையனையும் பிரிந்து குளிரான இரவொன்றினுள் நுழைந்து தொலைந்து போகிறாள்.

அவர்களை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் அவள் அவனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, அவன் வாழும் நாட்டின் தென்பகுதியை நோக்கி தன் மகனுடன் நீண்ட ஓர் பயணத்தை அவன் ஆரம்பிக்கிறான். அவர்கள் கண்டடையப் போவதும், விரும்புவதும் கிடைக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில், நம்பிக்கை எனும் காற்றுடன், அழிந்த உலகின் சாம்பல் விதைத்த பாதைகளில் ஆரம்பமாகிறது அந்தப் பயணம்…….

பின் உலக அழிவு குறித்து மிகையான கற்பனைகளுடன் உருவாகி வெளிவந்த திரைப்படங்கள் போலல்லாது உண்மையின் அருகில் பயணித்துச் செல்கிறது The Road எனும் இத்திரைப்படம். Cormac McCarthy எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2007ல் புனைகதைக்கான Pulitzer Prizeஐ வென்ற The Road எனும் நாவலைத் தழுவி திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவுஸ்திரேலிய இயக்குனர் Jhon Hillcoat.

G149571400247160 தந்தை, மகன், அழிந்து கொண்டிருக்கும் உலகில் நிகழும் ஓர் பயணம் எனும் பாத்திரங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் பார்வையாளனை தன்னுடன் ஒன்றவைக்க அதில் இடம்பெறும் இசை,உரையாடல்கள், அழிவுக்குட்பட்ட உலகின் காட்சிகள் என்பவற்றின் மூலம் கச்சிதமாக வழி தேடிக்கொள்கிறது. படத்தில் இடம்பெறும் உரையாடல்கள் எளிமையாகவும் அதேவேளையில் ஆழமான அர்த்தம் செறிந்தவையாகவும் அமைந்து பார்வையாளனை வசப்படுத்துகின்றன.

படத்தின் ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்திலேயே நகர்கிறது, நரமாமிசம் உண்ணும் குழுக்கள் வரும் காட்சிகள் வயிற்றைப் பிசைய வைக்கின்றன. பணம் என்பது காலில் மிதிபட்டுக் கிழியும் கஞ்சலாக காட்டப்படுகிறது. மனிதர்களின் இயல்புகள் உயிர்வாழ்தலை தொடர்வதற்காக கொள்ளும் மாற்றங்களின் உக்கிரம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

la-route-2009-14957-795861225 காட்டுமிராண்டித்தனம் ஓங்கிய உலகில் தன் மகனை ஒழுக்கம் நிறைந்தவனாக வளர்க்க நினைத்து அவனிற்கு நற்போதனைகளை வழங்கும் தந்தை அவற்றை தானே மீறும்போதும், மதிக்காதபோதும் சிறுவனிடமிருந்து வரும் எதிர்வினைகள் ரசிக்க வைக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக தந்தை கண்டெடுக்கும் ஒர் கொக்கோகோலா பானத்தை மகனிற்கு பருகத்தரும்போது முதல் தடவையாக அப்பானத்தை பருகும் சிறுவனின் உணர்வு வெளிப்பாடு அருமை. அதே போன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை கண்டுபிடித்த பின்னாக தந்தையும் மகனும் வாழும் அந்த மகிழ்வான கணங்களை இயக்குனர் பார்வையாளர்களையும் வாழச் செய்துவிடுகிறார். அவனும் அவளும் காதலுடன் வாசித்துக் களித்த பியானோ நெருப்பு உண்டாக்குவதற்காகக் கொத்திச் சிதைக்கப்படுவது மனதில் வேதனையின் நிழலை உருவாக்குகிறது.

roadspan.1212073042 தன் மகனை எவ்வழியிலாவது காப்பாற்றிவிட நினைக்கும் உறுதியான தந்தை வேடத்தில் Viggo Mortensen தன் திரையுலக பாத்திரப் பட்டியலில் கடினமான, அருமையான பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். சிறுவன் பாத்திரத்தில் வரும் Kodi Smit- McPhee தன் அப்பாவித்தனமான நடிப்பால் மனதைக் கவர்ந்து விடுகிறார்.

தன் உயிர்வாழ்தல் என வரும்போது நாகரீகமும், ஒழுக்க நெறிகளும், மனித நேயமும் அதன் முன் அர்த்தமிழந்து சிதறிப்போய்விடுவதை படம் தெளிவாக்குகிறது. திரைப்படத்தின் சில காட்சிகளின் முடிவுகளை பார்வையாளன் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. படைப்பின் முழுமையாக்கலில் பார்வையாளன் ஆற்ற வேண்டிய பங்காக இதை எடுத்துக் கொள்ளலாம்.

மனதைக் கனக்க வைக்கும் இறுதிக்காட்சிகள் கொண்ட இத்திரைப்படமானது களிப்புடன் நேரத்தைக் கடத்துவதற்கு உதவாது என்பது தெளிவு. ஆனால் படத்தை பார்க்கும்போது மனதில் மிக ஆழமான கேள்விகளை எழுப்பி, அரங்கின் வெளியேயும் சிந்திக்கவைக்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அவ்வகைப் படங்களை விரும்பும் ரசிகர்களிற்கு இது ஓர் குட்டிப் பரிசு.

எல்லாப் பயணிகளும் தங்கள் பயணங்களின் இலக்குகளை சென்றடைந்து விடுவதில்லை, இலக்குகளை கண்டடையச் செல்லும் பாதைகளிலேயே அவர்கள் பயணங்களும் முடிவடைவந்து விடுகின்றன. ஆனால் பாதைகளோ புதிய பயணங்களின் பிறப்பிற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதானிருக்கின்றன. [***]

ட்ரெயிலர்