Wednesday, August 1, 2012

ஜில்ஜில்லின் ஆரம்பகால சாகஸங்கள்


felixdupcouv01துப்பறிவாளர் Gil Jourdan அவர்கள் இரும்புக்கை மாயாவிக்கு முன்பாகவே தன் அறிமுகத்தை பிரெஞ்சு பெல்ஜிய காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி கொண்டவர் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்பிரு எனும் பெல்ஜிய காமிக்ஸ் சஞ்சிகையை நண்பர்கள் மறந்திருக்க முடியுமா! அல்லது அந்த சஞ்சிகையை ஆரம்பித்த ஜான் டுப்புயி தான் எமக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆளுமையா. இல்லை ஜான் டுப்புயின் பதிப்பகமான டுப்புயி வெளியீடுகளாக வெளிவரும் கதைகளான லார்கோ வின்ஞ் போன்றவற்றுடன்தான் எமக்கு அறிமுகம் கிடையாதா? இல்லை என்று நீங்கள் பதிலிறுத்தால் அதனால் ஒரு குடியும் மூழ்கிப்போய்விடாது. இருப்பினும் இரும்புக்கை மாயாவிக்கு மூத்தவர் ஜில்  என்பதை நாங்கள் அறிவதற்கு, 1956 ம் ஆண்டின் செப்டெம்பரில் வெளியான 962 ம்  ஸ்பிரு சஞ்சிகையில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் ஆரம்பமாகின என்பதை தெரிந்து கொள்வது நலம்.
Maurice Tillieux எனும் பெல்ஜியக் கலைஞரால் உருவாக்கப்பட்டவரே ஜில் ஜோர்டான். மாரிஸ் திலியூவின் இன்னுமொரு பாத்திரமான துப்பறிவாளர் Felix ஐ சார்ந்தே ஸ்பிருவிற்காக ஜில் ஜோர்டானை மாரிஸ் திலியூ உருவாக்கினார். மேலும் நம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் அபிமான துப்பறிவாளர்களில் ஒருவரான Jess Long ன் கதைகளிலும் கதாசிரியராக மாரிஸ் திலியூ பணியாற்றியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒரு சங்கதியே. ஆகவே இரும்புக்கை மாயாவியை விட ஜில்லு கொஞ்சம் ஓல்டு என்பதை மனதில் இருத்திக் கொள்ளத் தவறாதீர்கள். ஏறக்குறைய 56 வருடங்களின் பின்னாக தமிழில் அறிமுகமாகவிருக்கும் ஜில் ஜோர்டானை நாம் கண்டிப்பாக வரவேற்போம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. ஏனெனில் நாம் பழமையின் காவலர்கள், ரசிகர்கள், போராளிகள்.
1985 களில் ஜில் ஜோர்டான் சாகசங்கள் அவற்றின் முப்பதாவது வருட நிறைவை எட்டி சென்று கொண்டிருந்த வேளையில் டுப்புயி பதிப்பகமானது ஜில் ஜோர்டானின் சாகசங்களை சிறு சிறு தொகுப்புகளாக வெளியிட்டது. அந்த தொகுப்புகளை டுப்புயி Tout Gil Jourdan என தலைப்பிட்டிருந்தது. அத்தலைப்பின் கீழ் முதல் வெளிவந்த ஆல்பம்தான் Premieres Adventures. ஜில் ஜூர்டானின்  மூன்று ஆரம்பகால சாகசங்களையும், இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொன் அவர்களின் இரு கதைகளையும் கொண்ட தொகுப்பாக இத் தொகுப்பு அமைகிறது.
தொகுப்பின் முதல் கதையாக இருப்பது La Poursuite [ தேடல் வேட்டை ]. இக்கதையானது 1963ல் உருவான கதையாகவிருந்தாலும் ஜில்ஜில்லின் கதைகளின் பிரதான பாத்திரங்களான இன்ஸ்பெக்டெர் ஜூல்ஸ் க்ருட்டொனிற்கும் பிரபல திருடன் ஆண்ட்ரூ லிபெலூயுலிற்கும் இடையிலான அறிமுகத்தை விபரிக்கிறது. அவ்வகையில் தொகுப்பில் பின் வரும் மூன்று கதைகளிற்கும் சிறப்பான ஒரு அறிமுகமாக இக்கதை அமைகிறது. இக்கதையில் ஜில்ஜில் பங்கு வகிப்பதில்லை.
பிரபல பாடகியான லோலா மார்டினோவின் நகைகள் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து திருடப்பட்டுவிடுகிறது. இதை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் க்ருட்டொனிடம் தருகிறார் தலைமைப் பொலிஸ் அதிகாரி….. கதையில் இன்ஸ்பெக்டர் க்ருட்டொன் தன் திறமைமேல் அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் தேடல்களிலும், விசாரணைகளிலும் எதுவுமே அவரிற்கு சாதகமாக அமைந்து விடுவதில்லை. க்ருட்டொனின் மேலதிகாரிக்கு க்ருட்டொனைக் கண்டால் அன்றைய நாள் பாழாகி விடும் எனும் நம்பிக்கை இருக்கிறது. வேறு இன்ஸ்பெக்டெர்கள் இல்லாத நிலையிலேயே க்ருட்டொனிடம் அவர் குற்றங்களிற்கான விசாரணை நடவடிக்கையை வழங்குகிறார். இருப்பினும் பொலிஸ் பணியின் மாறாத சலிப்பிலும் அழுத்தங்களிலும் இருந்து அவரிற்கு கிடைக்கும் ஒரு விடுதலையாகவே க்ருட்டொன் இருக்கிறார். இதை மேலதிகாரியே க்ருட்டொனின் ராஜினாமவைத் தான் ஏற்றுக் கொள்ளாமைக்கு ஒரு காரணமாக கதையில் கூறுகிறார். கறுப்பு கோட், சூட், தொப்பி, நீலக் கழுத்து பட்டி, சிவப்பு மீசை, வழுக்கை ஆக்கிரமித்த தலை, கையில் ஒரு தடி, வாயில் புகையும் ஒரு சிகரெட் இவ்வாறான ஒரு அசத்தல் உடையலங்காரத்தோடு விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் க்ருட்டொனிற்கு தன் குரல் வளத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. இசைத்துறையில் ஒரு உச்ச இடத்தை தான் எட்டியிருக்கலாம் எனும் கருத்தை வாசகர்கள் மத்தியில் இக்கதையில் க்ருட்டொன் பகிர்ந்து கொள்ள தவறவில்லை. இருப்பினும் விசாரணையின் ஆரம்பத்தில் தேனாக இனித்த பாடகி லோலா மார்டினோவின் பாடல்கள் விசாரணை முடிவில் க்ருட்டொனிற்கு சகிக்க முடியாதவையாக மாறிவிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.
gj1குத்து ரம்யா, தொரசிங்கம், க்விக் போஸ்ட் ரஃபிக் என்பது போலத்தான் ஜூல்ஸ் க்ருட்டொன். குத்து, சிங்கம், க்விக் போஸ்ட் என்பதற்கு வாசகர்கள் அர்த்தங்களை உணர்ந்து கொள்வீர்கள் அதுபோலவே Crouton எனும் சொல் சற்று கடினமான மேற்பரப்பை குறிக்கும் ஒன்றாகும். உதாரணமாக மசால் வடையின் மேற்பரப்பு சற்று மொறுமொறு கடினத்தோடு இருப்பதை போல். அதற்காக ரஸ்க்கு ஜூல்ஸ் என க்ருட்டொனை நாம் அழைக்க முடியுமா என்ன. மேற்பரப்பில் சற்று கடினமாகவும் உள்ளே சுவையான குணங்களும் கொண்ட ஒரு பாத்திரம் அவர் என மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் பிரபல திருடன் ஆண்ட்ரு லிபெலூயுலில் இருக்கும் Libellule என்பது ஒரு வகை தும்பியைக் குறிப்பிடுகிறது. தும்பியின் லாவகத்தோடு பாதுகாப்பு பெட்டகங்களை திறக்கும் ஒரு திறமைசாலி என இதை இங்கு எடுத்துக் கொள்ள முடியும்!!! ஆண்ட்ரு லிபெலூயுலின் மூச்சுக் காற்று பூட்டுக்கள் மேல் பட்டாலே போதும் பூட்டுக்கள் தானாக திறக்கும் என ஒரு வதந்தி பிரான்சு மக்கள் மத்தியில் உலவி வருகிறது. நகைச்சுவை குணமும், சேஷ்டைகளும் கொண்ட ஆண்ட்ருவிற்கு மஞ்சள் வண்ண கோட் சூட், தொப்பி, டை, வாயில் ஒரு சிகரெட் என உடையலங்காரம் உண்டு. சுறுசுறுப்பாக இயங்கும் ஆண்ட்ரு இன்ஸ்பெக்டெர் க்ருட்டொனிற்கு தண்ணி காட்டுவதில் கில்லாடி. தேடல் வேட்டையில் நகைச்சுவை என்பது க்ருட்டொன், ஆண்ட்ருவை துரத்தும் காட்சிகளிலேயே அதிகம் காணப்படும். ஆண்ட்ரு வார்த்தை விளையாட்டுகளிலும் தேர்ந்தவன். ஆனால் இந்த வார்த்தை விளையாட்டுக்கள் வாசகர்களிற்கு நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம் இல்லை என்பதை கதை தெளிவாக்குகிறது. இறுதியில் ஆன்ட்ரு சிறைக்கு செல்கிறான் என்பதோடு கதை முடிகிறது. ஆனால் சிறையறையில் அவன் எல்லா பொலிஸ் அதிகாரிகளுமே க்ருட்டொன்போல் இருந்து விட்டால் இந்த வாழ்க்கை இனிமையாக இருந்துவிடும் என்று எண்ணுவதாக கதை நிறைவு பெறுகிறது.

தொகுப்பில் அடுத்து வரும் கதை Libellule S’ Evade [ தப்பியோடும் தும்பி!]. ஜில்ஜிலின் முதல் சாகசம் இது. எட்டு வருட சிறைத்தண்டனையின் பின்பாக பிரபல திருடனான தும்பியை இன்ஸ்பெக்டர் ரஸ்க் சிறைக்கு சென்று அழைத்து வருகிறார். பிரபல பாடகி லோலாவின் நகைகள் எங்கிருக்கின்றன என்பதை தும்பியிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் இன்ஸ்பெக்டர் ரஸ்க் ஆர்வமாகவிருக்கிறார். ஆனால் வழியில் தன் கால்கள் வலிக்கின்றன என ரஸ்க்கிடம் குறைசொல்லி தும்பி முறையிட, டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணமாகிறார்கள் ரஸ்க்கும், தும்பியும். செல்லும் வழியில் டாக்ஸி சாரதி ரஸ்க்கை நடுவழியில் லபோ என தவிக்க விட்டுவிட்டு தும்பியை காப்பாற்றிக் கொண்டு செல்கிறான். இவ்வாறாக தும்பியைக் காப்பாற்றி செல்லும் டாக்ஸி சாரதியாகவே ஜில்ஜில் வாசகர்களிற்கு தன்னை கதையில் அறிமுகமாக்கி கொள்கிறார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவரான ஜில்ஜில், துப்பறியும் துறைக்கு புதியவர். தன் கையிலிருந்த சொற்ப காசு அனைத்தையும் துப்பறியும் தொழிலில் இறங்குவதற்காக முதலிட்டவர். ஆறுமாத காலத்திற்குள் தன் பெயர்பெற்ற ஒரு துப்பறிவாளராக ஆகவேண்டும் என்பது அவரது இலக்கு.

GilJourdan1tl_06082008_225626
தான் பணியாற்றும் துறையில் மிகவும் உபயோகப்படக்கூடிய திறமைகளைக் கொண்ட தும்பியை அவர் தன் உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். ஜில்ஜில்லின் பாசமான மிரட்டல்களிற்கு பயந்தே தும்பி ஜில்ஜில்லிற்கு உதவியாளனாக சேர்ந்து கொள்கிறான். ஏனெனில் வேலை பார்ப்பது என்பது அவனிற்கு பிடிக்காத ஒரு விடயமாகும். ஜில்ஜில்லின் காரியதரிசியாக கதையில் Queue de Cerise எனும் இளம் பெண் அறிமுகமாகிறார். ஒரு ரயில் விபத்தில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்த செர்ரி [காம்பு] மிகவும் துடிதுடிப்பான, புத்திசாலியான, ஒன்பது மொழிகள் அறிந்த ஒரு இளம் பெண். ஜில்ஜில் ஜோர்டானின் அலுவலகம் ஒரு மதுவிடுதியின் மேல் ஒரு சிறிய அறையிலேயே அமைந்திருக்கிறது. ஆறுமாத காலத்திற்குள் பிரபலமாகிட விரும்பும் ஜில்ஜில் அதற்கான நடவடிக்கையாக தேர்ந்தெடுப்பது போதை மருந்து கடத்தல் பற்றிய விசாரணையையே. பிரான்சில் பெருகிவரும் போதை மருந்து விற்பனையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிந்துவிடத் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் ஜில்ஜில், இதேவேளை தும்பியை தப்பவிட்ட காரணத்திற்காக பொலிஸின் போதைமருந்து தடுப்பு பிரிவிற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டெர் ரஸ்க். நீலக் கோட் சூட், சிவப்பு கழுத்து பட்டி, மோஸ்தரான சிகையலங்காரம், எடுப்பான ஒரு மழைக் கோட் என அட்டகாசமான இளைமை ஜொலிக்கும் பாத்திரமாக கதையில் ஜில்ஜில் தென்படுகிறார். இன்ஸ்பெக்டெர் ரஸ்க் குறித்த ஒரு எள்ளல் மனப்பான்மையையே இக்கதையில் ஜில்ஜில் தன்னில் கொண்டிருக்கிறார்.

தொகுப்பில் இரு கதைகளை படித்துக் கொண்டு வருகையில் மாரிஸ் திலியூவின் சித்திரங்கள் மீது ஒரு தனி அபிமானம் வந்து விடுகிறது. தெருவில் நடக்கும் காட்சிகளில் எல்லாம் சிறு சிறு மாந்தர் வழி அப்பகுதியின் வாழ்க்கையின் கூறுகளை நகைச்சுவை வண்ணம் கலந்து வரைந்து தள்ளியிருக்கிறார் திலியூ. புகைப்பிடித்தல் என்பது அக்காலத்தில் எப்படியான ஒரு ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருக்கிறது என்பதை அவர் சித்திரமாந்தர்களின் வாயில் புகையும் சிகரெட்டுக்களையோ அல்லது சுருட்டுக்களையோ அல்லது சுங்கான்களையோ வைத்து அறிந்து கொள்ளலாம். பழைய மாடல் கார்களும், பழமை செறிந்த கட்டிடங்களும் என அது ஒரு தனி உலகமாகவே இன்று தெரிகிறது. குப்பைகளை வெளியே வைக்கும் தொழிலாளியோ அல்லது தன் நாயுடன் தெருவில் உலாவரும் சீமாட்டியோ அல்லது ரயிலில் பயணிக்கும்போது பன்றி வளர்பது எப்படி எனும் புத்தகத்தை படித்துக் கொண்டு செல்லும் பண்ணையாரோ யாராக இருந்தாலும் திலியூவின் சித்திரங்களில் நுழைந்து  அக்கதை நடந்த காலத்தின், சூழலின் ஆன்மாக்களை கதைக்குள் எளிதாக கொணர வைத்து விடுகிறார்கள். கதை நடந்த காலத்தில் ஒரு பகுதியின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அவர் சித்திரங்கள் தெளிவான கோடுகளால் வரையறுக்கின்றன. முகபாவனைகளிலும் உடல் மொழிகளிலும் உணர்வுகளை மிகச்சிறப்பாகவும் அதே வகையில் அந்த தருணத்திற்குரிய நகைச்சுவையை இழந்து விடாமலும் எதார்த்தமாக இயங்கியிருக்கிறார் மாரிஸ் திலியூ. பாரிஸின் அந்தகாலத் தோற்றத்தை திலியூவின் கைத்திறமையில் பார்ப்பது ஒரு தனியனுபவம் என்பதனையும், ஏன் ஜில்ஜில் கதைகள் ஐரோப்பிய காமிக்ஸ்களில் தலைசிறந்த வகையை சார்ந்தவை என்பதையும் என்னால் இப்போது சிறிது புரிந்துகொள்ள முடிகிறது.

gj2தொகுப்பின் மூன்றாவது கதையான Popaine et Vieux Tableaux [பொப்பேய்னும், பழைய ஓவியங்களும்] தப்பியோடும் தும்பி கதையின் தொடர்ச்சியே. அக்கதையில் ஜில்ஜில் ஆரம்பித்த விசாரணை இப்பாகத்தில் நிறைவுக்கு வருகிறது. காக்கெய்னையே இங்கு திலியூ பொப்பேய்ன் எனக் குறிப்பிடுகிறார். இதற்கு அக்காலத்தில் நிலவிய தணிக்கை காரணம் எனப் படித்தேன். கதையின் வேகம் மிகவும் மெதுவானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கதையில் பரபரப்பு என்பதன் அளவு மிகவும் சிறியதே. ஏன் அந்தப் பரபரப்பை இன்றையகால வாசகன் உணராமலே போய்விடக்கூடிய நிலையும் இருக்கிறது எனலாம். இருப்பினும் காதில் பூச்சுற்றும் கதை வகை அல்ல திலியூவுடையது. கதையின் நம்பகத்தன்மைக்காக அவர் மிகவும் எதார்த்தமான விளக்கங்களுடன் கதையை உருவாக்கி இருக்கிறார். ஜில் ஜோர்டான் பாத்திரம் தன் உதவியாளான தும்பி மேல் வன்முறையிலும் இறங்க தவறுவதில்லை என்பது இன்றைய நிலையில் சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது. பழைய ஓவியங்கள் கதையில் அவர் மாறு வேட திறமையும், மிமிக்ரி திறமையும் வெளியாகின்றன.  ஜில்ஜில்லின் காரியதரிசி செர்ரியும் இக்கதையில் சிறப்பான பங்கை வகிக்க ஆரம்பிப்பார்.

நவீன ஓவியப்பாணிகள், ஓவியங்கள், ஓவியர்கள் குறித்த சிலேடை கலந்த கிண்டல்கள் கதையில் அதிகம் இருக்கின்றன. இவ்வகையான ஓவியங்கள் மீதான மேல்வர்க்கத்தினரின் பாசாங்கு பார்வைகளையும் ரசனையையும் புரிதலையும் கடுமையான கிண்டலாக்கி எழுதியிருக்கிறார் மாரிஸ் திலியூ ஆனால் இவை சிரிப்பை இன்று வரவழைக்கும் சுவையுடன் இல்லை என்பது வேதனையானதே.

தன் சாகசங்கள் பற்றிய தகவல்களை ஒரு பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக விற்பதன் வழியாக இந்த போதைப் பொருள் விசாரணையில் சிறிது பணத்தையும், விளம்பரத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார் ஜில்ஜில். இறுதியில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கே விசாரணையின் வெற்றிக்கு காரணம் எனப் புகழ்ந்து கதையில் ரஸ்கிற்கு இழைந்த கொடுமைகள் எல்லாவற்றிற்கும் ஜில்ஜில் பரிகாரம் தேடிக் கொள்ள விழைகிறார். இதே சந்தர்பத்தில் தன்மீதும் இன்ஸ்பெக்டெர் ரஸ்க் சிறிது கருணை காட்ட வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொள்கிறான் தும்பி. இவ்வகையான சுபமான தருணங்களுடன் இக்கதை நிறைவு பெறுகிறது.

இன்னம் தொகுப்பில் எஞ்சியிருக்கும் இரு கதைகளில் இறுதியாக வழங்கப்பட்டிருக்கும் கதையான Les Vacances de Crouton [ரஸ்க்கின் விடுமுறை] , ஐந்து பக்கங்களில் இன்ஸ்பெக்டெர் ரஸ்க்கின் துரதிர்ஷ்டமான விடுமுறை ஒன்றை விபரிக்கும் ஒரு சிறு கதை ஆகும். இத்தொகுப்பில் இருக்கும் மிக மோசமான கதை இதுவே. இதை ஒரு பக்க நிரப்பியாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தொகுப்பின் பக்கங்களை சிறப்பாக நிரப்பிடும் இச்சிறு துணுக்குக்கதை வாசகர்கள்  மனதை எரிச்சலால் நிரப்ப  வைக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Couv_168372ஜில்ஜில்லின் மூன்றாவது சாகசமான La Voiture Immergé ஐ நான் படித்து முடித்தபோது எனக்கு மிகவும் வழக்காமான ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. ஜில் ஜோர்டானின் சிறந்த கதைகளில் தலையாயது இதுவே எனவே இக்கதை தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் ஜில்ஜில்லின் மூன்று சாகசங்களிலும் நான் பெற்ற வாசிப்பனுபவம் சுவை குறைவாகவிருந்தது [கடலில்] அமிழ்ந்த மோட்டார் வண்டி கதையே என்பேன்.

நிக்கிட்டா சிக்ஸ் எனும் அரும் கலைப்பொருள் சேகரிப்பாளர் தனக்கு வந்த அனானிக் கடிதம் ஒன்றை படித்த பின்பாக குஜால் குதிரை வீரன் கோட்டைக்கு பயணமாகி அங்கிருந்து திரும்பும் வழியில் எந்த தடயமுமில்லாமல் மறைந்து போய்விடுகிறார். அவர் மோட்டார் வண்டி மட்டும் கடலில் அமிழ்ந்த நிலையில் கண்டு பிடிக்கப்படுகிறது. இதையடுத்து நிக்கிட்டா சிக்ஸின் உறவினரான ஹென்ரி சிக்ஸ் இவ்விவகாரத்தை துப்பறியும்படி ஜில்ஜில்லிடம் பணியை வழங்குகிறார். ஜில்ஜில்லும் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்.

முதல் இரு ஜில்ஜில் சாகசங்களில் மதுவிடுதிக்கு மேல் அமைந்திருந்த ஜில் ஜோர்டானின் ஆலுவலகம் இக்கதையில் பாரிஸின் பரபரப்பானதும் கவுரவமானதுமான ஒரு பகுதியில் மிகப் பெரிய ஒரு அலுவலகமாக உருவெடுத்திருப்பதை வாசகர்கள் முதலில் அவதானிக்கலாம். ஜில்ஜில் கொஞ்சம் வசதி படைத்த துப்பறிவாளராக ஆகிவிட்டார் என்பதும், அவர் துப்பறியும் தொழில் அவரிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பதையும் ஒருவர் இங்கு உடனே உணர்ந்து கொள்ள முடியும். அதே போல் முன்னைய சாகசங்களில் பணத்தை எச்சிக்கையால் காக்காயை விரட்டாதவர் போல செலவிட்ட ஜில்ஜில் இங்கு தன் விசாரணைகளில் தனக்கு உதவுவர்களிற்கு ஆயிரம் பிராங்கு நோட்டு ஒன்றை படு சுளுவாகவும் ஸ்டைலாகவும் எடுத்து நீட்டுவது மலைக்க வைக்கிறது. இது எல்லாம் போதாது என்று ஜோரான மோட்டார் வண்டி ஒன்றையும் அவர் தன் சொந்தமாக்கி கொண்டிருப்பது அக்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் கண்டிப்பாக தாமும் ஒரு துப்பறிவாளராகி விடவேண்டும் எனும் ஒரு இனிய கனவை உருவாக்க உதவியிருக்கும்.

giljourdantout02gj3ஏளனமாகவும், கிண்டலுடனும் முன்னைய கதைகளில் நெருங்கப்பட்ட இன்ஸ்பெக்டெர் ரஸ்க்குடன் இக்கதையில் தனது விசாரணைகளில் ஜில்ஜில் இணைந்து செயல்படுகிறார். அதேபோல தும்பியும் பொலிஸ் கெடுபிடிகள் இல்லாத ஒரு நபராகவே கதையில் உலாவருகிறான். முன்னைய கதைகளை விட இக்கதை சற்று பரபரப்பாக நகரக்கூடியதாக இருந்தாலும் அக்கதைகளில் காணக்கிடந்த, சுவைக்க முடிந்த, உணரக்கூடிய நகைச்சுவை, சித்திரங்களின் உயிரோட்டம், சித்திரங்கள் வாசகன் மனதில் நிகழ்த்தும் அந்த அற்புத வேதியியல் மாற்றம் என்பன இக்கதையில் மிகக்குறைந்த அளவிலேயே உணரப்படக்கூடியதாக இருக்கிறது என்பேன்.

பரபரப்பாகவும், நகைச்சுவையுடனும் ஆரம்பமான கடலில் அமிழ்ந்த மோட்டார் வண்டி விசாரணைகளின் நகர்வுடன் வேகமெடுப்பதுபோல தோன்றினாலும் சலிப்பான வாசிப்பனுபவத்தையே தருகிறது. தும்பி பாத்திரத்தின் காரணமே இல்லாத கோபச்சீற்றங்களும், உளறல்களும் படிப்பவர் மீது தம் கனத்தை அழுத்தமாக பதித்து நகைச்சுவைக்கு பதிலாக எரிச்சலையும், சலிப்பையுமே தருகின்றன. திலியூ தன் எதார்த்தமான துப்பறியும் கதை நகர்வை கையாண்டு இருந்தாலும், கதை வெளியாகிய காலகட்டத்தில் பிரம்மிக்க வைக்கும் குற்ற நுட்பங்களை கதையில் உபயோகித்து இருந்தாலும் அவற்றின் பாதிப்பு என்பது இன்றைய நாட்களில் அதிகமான ஒன்றாக இருக்கவில்லை. ஜில்ஜில்லுடன் என்னால் நெருங்கி கொள்ள முடியவில்லை. வாசகன் ஒருவன் தொலைவில் நின்று பார்த்து விலகும் ஒரு கதைமாந்தரின் நெருக்கமே ஜில்ஜில்லிடம் இருந்து எனக்கு கிடைத்தது. மாறாக இன்ஸ்பெக்டெர் க்ருட்டொன் மனதைக் கவர்கிறார். மனதைக் கவர்ந்திருக்ககூடிய தும்பியும் தன் மேலதிக அலட்டல்களினால் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்.

இருப்பினும் ஜில் ஜோர்டான் வரவேற்கப்பட வேண்டிய ஒருவரே. ஐரோப்பிய காமிக்ஸ்களின் சிறந்த ஒரு கிளாசிக் வகை என்பதாலும். திலியூவின் சித்திரங்களிற்காகவும். ஜில்ஜில்லின் முதல் இரு சாகசங்களையும் படிக்கும் வாய்ப்பு உங்களிற்கு கிடைத்தால் அவற்றை கண்டிப்பாக படித்து அவரின் மூன்றாவது சாகசத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஜில்ஜில்லிற்கு வரவேற்பு ஜில் லாக இருக்குமா என்பதை இன்னம் சிறிது காலத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.

23 comments:

  1. ஜில்ஜில் ஜோர்டான் பதிவு ரெடி... படித்து விட்டு வருகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. டியர் ரஃபிக், ஏன் மீ த பர்ஸ்டு எனும் அற்புதமான வரிகளை நீங்கள் பதிய தவறினீர்கள்... :))

      Delete
  2. இல்லை என்று நீங்கள் பதிலிறுத்தால் அதனால் ஒரு குடியும் மூழ்கிப்போய்விடாது. //

    அண்ணே, உங்களுக்கு தமிழ்ல காமிக்ஸ் போட எல்லா தகுதியும் இருக்குண்ணே. அது திருட்டு காமிக்சா இருந்தாலும் சரி. உடனே பொட்டி படுக்க எல்லாத்தையும் கட்டிக்கிட்டு தமிழ்நாடு வந்திருங்க. கூடவே 'முக்கியமா' நாலு அண்டர்வேர் உருவிட்டு வாங்க. இங்க வந்த பின்ன நாங்க பாத்துக்கிறோம். ;)

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொட்டி நிறைய அள்ளிக்கிட்டு வந்துடுறேனுங்க... சந்தா கட்டுவானுங்களா இல்லையா... :)

      Delete
  3. //ஆகவே இரும்புக்கை மாயாவியை விட ஜில்லு கொஞ்சம் ஓல்டு என்பதை மனதில் இருத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.//

    ஏண்ணே, அப்ப பீசும் பழைய கடை வச்சிருக்கா? :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு வியாபாரமே பழையதை புதுசுபோல அடிச்சு விடுறதுதாங்க... ஆனா சேல்ஸு பிச்சிகிது ஆமா...

      Delete
  4. நமது முத்து காமிக்ஸில் வருவதற்கு முன் ஒரு அருமையான முன்னோட்டம்.
    பகிர்விற்கு மிகவும் நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கிருஷ்ணா வ வெ, கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

      Delete
  5. பழைய பாணிக்கு திரும்பிவிட்டார் காதலன் அவர்கள். காதலனின் கைவண்ணத்தில் இந்த மொழி பெயர்ப்பு நகைசுவையுடன் மிளிருது...(ஐஸ் ஐஸ்).. நீங்க ஏன் இந்த கதையை தமிழில் மொழிபெயர்த்து விஜயன் அவர்களுக்கு கொடுக்ககூடாது? (என்ன ஒரு வில்லத்தனம்?). ஒரு 5 பக்கம் மொழிபெயர்த்து கொடுங்கள், என்ன சொல்லறார் என்று பார்ப்போம். உங்களுடைய இந்த நகைசுவை, நையாண்டிதனம், உங்களை ஒரு சிறந்த மொழிபெயர்பாளராக மற்றும்.. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். (இது உனக்கு தேவையா ரமேஷ்?)

    ReplyDelete
    Replies
    1. நான் மிட்நைட் ஸ்டுடீயோஸுடன் ஒப்பந்தம் செய்துவிட்டபடியால் லயன் காமிக்ஸும் அதன் வாசகர்களும் தப்பித்து விட்டீர்கள்.. :))ஜாக்ரதை ஆமா :))

      Delete
  6. அருமையான அறிமுகப் பதிவு அண்ணா.

    //சஞ்சிகை// இது போன்ற வேற்று மொழி சொற்களைத் தவிர்த்தால் இன்னமும் நன்றாக இருக்கும் :) :)

    //ஏனெனில் நாம் பழமையின் காவலர்கள், ரசிகர்கள், "போராளிகள்".// ஏதோ நெருடுதே :)

    முழு புத்தகத்தையும் எனக்காக ரகசியமாக மொழி மாற்றம் செய்து அனுப்புங்கள் :) அல்லது எனக்கு பிரெஞ்சு கற்றுகொடுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. நெருடினால் அது புதிதான ஏதொவொன்றாகவே இருக்கும் அன்புத் தம்பி சவுந்தர்... :) பிரெஞ்சை கற்க நானே ஒரு இளம் ஆசிரியையை தேடிக் கொண்டிருக்கிறேன்... செட்டாகவில்லை.. :)

      Delete
    2. காதலரே அப்புடியே நமக்கும் சேர்த்து தேடுங்க ;-)

      வழக்கம் போல உங்கள் அதிரடிகளை துவக்கி விட்டீர்கள் ஹ்ம்மம்ம்ம்ம்
      .

      Delete
    3. நமக்கே இல்லீங்க... சரி ஒங்களிற்கும் சேர்த்தே தேடுறேன்... :)

      Delete
  7. முத்து 400ல் வருவதற்கு ஏற்ற கதை என்பது உங்களின் விரிவான பதிவில் தெரிகிறது. வரவேற்போம் இவரை.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் வருவது நல்லதுதான் ஆனால் கதைதான் அந்தக் காலத்துக்குரியதாக தெரிகிறது... அடப்போங்க இரும்புக்கை மாயாவியே ஸ்பெசலா வரும்போது இவரும் பொழைச்சுகிடட்டுமே...

      Delete
  8. இந்த முறை இந்தியா சென்றபோது கிடைத்த சொற்ப அவகாசத்தில் முத்து காமிக்ஸ் தேடினேன். கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன், அடுத்த பயணத்தில் தேட வசதியாக இருக்கும்.
    ப்ரெஞ்சில் இன்னும் இது போல் காமிக்ஸ் கிடைப்பது நன்று (பொறாமை).

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அப்பாதுரை உங்களிற்கு தமிழ் காமிக்ஸ் தேவை எனில் நீங்கள் இந்த வலைப்பூவை படியுங்கள்....

      http://lion-muthucomics.blogspot.fr/

      Delete
  9. இப்போதுதான் இந்த ப்ளாக்கிற்கு முதன்முதலாய் வருகிறேன். (இன்னும் முழுதாய் எல்லாப் பதிவுகளும் படிக்கவில்லையென்றாலும்) கனவுகளின் காதலரின் காமிக்ஸ் காதலும், தேடலும், கதை சொல்லும் விதமும் பிரம்மிக்க வைக்கிறது.
    நண்பருக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும்!

    ReplyDelete
  10. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    FadoExpress là một trong những top công ty chuyển phát nhanh quốc tế hàng đầu chuyên vận chuyển, chuyển phát nhanh siêu tốc đi khắp thế giới, nổi bật là dịch vụ gửi hàng đi nhậtgửi hàng đi pháp và dịch vụ chuyển phát nhanh đi hàn quốc uy tín, giá rẻ

    ReplyDelete