Showing posts with label Antonio Segura. Show all posts
Showing posts with label Antonio Segura. Show all posts

Saturday, March 9, 2013

தாக்குதல் தருணம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 9

அரிசோனாவிலுள்ள சிறு நகரமான சியரா விஸ்டாவின் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து கைதிகளை நீதிவிசாரணைக்காக ஃபீனிக்ஸ் எனும் இடத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு டெக்ஸ் தலைமையில் செயற்படும் ரேஞ்சர்களின் குழுவிடம் கையளிக்கப்படுகிறது. கைதிகளை ஃபீனிக்ஸ் நகர் நோக்கி பாதுகாப்புடன் இட்டுச் செல்லும் டெக்ஸ் குழுவினர் வழியில் எதிர்பாராதவிதமாக தாக்கப்படுகிறார்கள். டெக்ஸை தவிர மீதி ரேஞ்சர்கள் மரணத்தை தழுவ, ஐந்து கைதிகளையும் ரேஞ்சர்களின் பாதுகாப்பிலிருந்து மீட்டுச் செல்கிறது அந்த மர்மக்குழு. தன் எதிரிகளை நரகத்தின் குகைகள் வரை விடாது தேடிச்சென்று நீதி வழங்கும் டெக்ஸ், விசாரணைக் கைதிகளையும் அவர்களை மீட்டுச் சென்றவர்களையும் தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கிறார்…….
மாட்டுத்தோலை விட வலிதான மாமிசத்திற்கும், சூடான பீரிற்கும் பிரபலமான நகரம்தான் சியரா விஸ்டா. வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் சிறைக்கு டெக்ஸ் வந்து சேரும் தருணம் முதலே அவர் பாதுகாவலில் எடுத்து செல்லப்படவேண்டிய கைதிகளின் குணாதிசயங்களை TEX MAXI n° 15 ஆக வெளியாகியிருக்கும் L’Or du Massacre கதையில் விபரிக்க ஆரம்பித்து விடுகிறார் டெக்ஸ் கதைகளின் குறிப்பிடத்தக்க கதாசிரியரான அண்டோனியோ செகுரா. கைதிகள் யார், அவர்கள் செய்த குற்றம் என்ன, சிறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவை வழியே தல டெக்ஸிற்கு கதையில் அவர்கள் தரப்போகும் தலைவலிக்கோலத்தின் ஆரம்ப வளைகோடுகள் அந்தப் பக்கங்களிலேயே எழுதப்பட்டு விடுகின்றன. கைதிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட வாசகர்களும் ஆகா அடிதூள்பறக்கும் கதையாக அல்லவா இது இருக்கப்போகிறது எனும் ஆவலில் பக்கங்களை திருப்ப தவறமாட்டார்கள்.
மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றில் தன் காவலில் வந்த கைதிகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் இழந்து நிற்கும் டெக்ஸின் மனதில் எழும் கேள்விகள் எதற்காக இந்த தாக்குதல்? யார் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடாத்தி இருப்பார்கள்? ஐந்து கைதிகளில் இத்தாக்குதலோடு தொடர்புள்ளவர்கள் யார்? என நீளுகின்றன. இக்கேள்விகளிற்கு உடனடியாக விடை தருவதற்கு பதிலாக கைதிகளை மீட்டுச் சென்ற குழு ஒரு கைதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏனைய நால்வரையும் திசைக்கொருவராக தம்மை தொடரக்கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டி விடுகிறது. இங்கு வாசகர்களிற்கும் தாக்குதல் நடாத்திய குழுவிடம் தங்கிவிடும் கைதியின் அடையாளத்தை அறியத்தராவகையில் கதையின் மர்ம இழையின் வலிமையை சற்றே உறுதியானதாக்குகிறார் செகுரா. இதனால் டெக்ஸ் மட்டும் அல்லாது வாசகனும் டெக்ஸின் விசாரணைகள் இட்டு வரும் தகவல்களிற்காக வேகமாக கதையின் பக்கங்களினூடாக பயணிப்பவன் ஆகிறான். இந்தக் கதையில் டெக்ஸின் வழமையான சகபாடிகள் யாரும் கிடையாது. டெக்ஸ், டெக்ஸ் மட்டுமே. மொத்த அதிரடிக்குத்தகையும் டெக்ஸ் கரங்களில். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள், வெள்ளம் அதிசீற்றத்துடன் நடக்கும் ஆறுகள், அடித்துக் கொட்டும் பெருநிலமழை, உயிரைக் காயவைக்கும் சூரியன் என அவரின் தனித்த பயணம் இவை யாவற்றினூடாகவும் நீதியை நிலைநாட்டுவதில் பிடிவாதம் கொண்ட ரேஞ்சர் ஒருவனின் தேடலாக அமைந்துவிடுகிறது.
lor du m 1தன் குழுவின்மீதான தாக்குதலின் பின்பாக சியரா விஸ்டா திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்து கைதிகள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறார். சியரா விஸ்டா நகரின் பத்திரிகையாளரான நோர்ட்டனுடன் அவர் கைதிகளில் இத்தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடியவன் யார் என தரவுகளை வைத்து கணிக்கவும் செய்கிறார் இருப்பினும் அத்தரவுகள் வழி அவர் அடையும் விடையை விலக்கிவைத்து மனிதசாட்சியம் ஒன்றினதும் தன் உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையிலும் கைதிகளில் ஒருவனான Black Puma எனும் அப்பாச்சி செவ்விந்தியன் தஞ்சம் தேடியிருக்ககூடிய அவன் மக்கள் வாழும் குடியிருப்பை நோக்கி அவர் பயணிக்கிறார்.

சான் கார்லோஸிலிருக்கும் செவ்விந்திய குடியிருப்பின் ஏஜெண்டான சாமுவேல் க்ளோவரைக் கொலை செய்ய முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவன் ப்ளாக் புமா. அவன் இனமக்கள் குடியிருக்கும் பகுதியினுள் சில கிறிஸ்தவ துறவிகளின் உதவியின் மூலமே டெக்ஸால் எந்த சிக்கலுமின்றி நுழைய முடிகிறது. இங்கு ஒரு கிறிஸ்தவ துறவி, பூர்வகுடி சித்தர்கள் மீது கொண்டிருக்கும் பார்வை கிறிஸ்தவ அதிகாரபீடம் அந்நாளில் அவர்கள்மீது கொண்டிருந்த பார்வைக்கு முரணான ஒன்றாக காட்டப்படுகிறது. செவ்விந்திய மதகுருவான பியர் ஃபீட் மதிக்கத்தக்க ஒரு ஞானி என்பதாகவே அந்தக் கிறிஸ்தவ துறவி எண்ணுகிறார். இவ்வகையான ஒரு பார்வையை இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு முன்பாக இத்தாலியில் வெளிவரும் ஒரு வெகுஜனக் காமிக்ஸ் கதையில் கூறிட இயலுமா என நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் செகுரா, கிறிஸ்தவ மதம் பூர்வகுடிகள் மீது சிலுவையாக இறக்கிய ஒரு பார்வையிலிருந்து முரண்பட்ட துறவிகளும் இருந்தார்கள் என்பதைக் காட்ட இங்கு விழைந்திருக்கலாம்.

செவ்விந்தியக் குடியிருப்பில் தன் விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்பாகவே அங்கு வாழும் செவ்விந்தியர்களின் அவலநிலையும், அவர்களில் வாழ்ந்திருக்கும் வெறுப்பும் டெக்ஸால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அம்மக்களிற்காக ஒரு கணமேனும் நிஜமாக வருந்தும் டெக்ஸாக அவரை அங்கு அந்தக் கணத்தில் ஒருவர் காணமுடியும். செகுராவின் கதைசொல்லும் அம்சங்களில் இது ஒன்று எனலாம். வழமையாக மதிக்கப்படாத உணர்வுகள் குறித்த கண்ணியமான வரி ஒன்று அவர் கதைகளில் எங்காவது ஒரு முடுக்கில் அமைந்து இருக்கும். வெள்ளையினம் கட்டுவித்த எதிரான பிம்பங்கள் சிலவற்றையேனும் அவரின் அந்த வரிகள் இந்தக் கதைகளிலாவது பொய்யெனெக் காட்டக்கூடும். டெக்ஸ் தொடரும் தன் விசாரணைகளில் ப்ளாக் புமா கைது செய்யப்பட்டதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளை அறிகிறார். நீதியை தன் பாணியில் நிலைநாட்டவும் முயல்கிறார். கதையின் இப்பகுதியில் முக்கியமான ஒரு மனிதனின் இறப்பு குதிரைகளின் காலடியிலிருந்து பிறக்கும். அந்த இறப்பின் பின்னிருக்கும் தர்மத்தை இலகுவில் உதறி சென்றிட முடியாது. விலங்குகளும் ஆத்மாக்களே எனும் எண்ணம் கொண்ட நிலத்தில் நிகழும் அந்த நிகழ்வில் அதிக ஆச்சர்யத்தை நாம் கண்டிட முடியாது. செகுரா இங்கும் கதை நிகழும் மண்ணிலிருக்கும் ஒரு நம்பிக்கையின் வழியாக தீமைகளிற்கு எதிரான தீர்ப்பை எழுதுகிறார். டெக்ஸ் அதற்கு சாட்சியமாக இருக்கிறார். ப்ளாக் புமாவிடம் தன் கேள்விகளை கேட்டு அதற்கு அவன் தரும் பதில்களை பெற்றுக் கொண்ட பின்பாக அவரின் அடுத்த இலக்கு செடோனா எனும் நகராக இருக்கிறது.

lor du m 2சியரா விஸ்டா சிறையிலிருந்த ஐந்து கைதிகளில் ஒருவனான ஹூவான் அலமீடா அந்த நகரின் வங்கியின் இயக்குனராக இருந்தவன். அதே வங்கியின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி மாட்டிக் கொண்டவன். அப்படியான ஒரு மனிதன்மீது அந்நகர மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எப்படியாக இருக்கும் என்பது நகரில் டெக்ஸ் நுழைந்து அலமீடாவின் வீடு எங்கே என கேட்கும்போதே தெளிவாக கதையில் விபரிக்கப்படுகிறது. ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தவனிற்கு உலகெங்கும் ஒரே மரியாதைதான். இங்கு டெக்ஸ் அலமீடாவின் மனைவியிடமும், அவள் சகோதரனிடமுமே உரையாட முடிகிறது விசாரணையின் முடிவு அவரிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் விசாரணை என்பது எப்போதுமே திருப்தியான விடைகளின் வதிவிடமும் இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் வழியில் டெக்ஸ், பத்திரிகையாளனான நோர்ட்டன் தனக்காக வெளியிட்டிருக்கும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொண்டு தன் தேடலை Safford நகர் நோக்கி திசை திருப்புகிறார்.

சஃபோர்ட் நகரில் தங்கம் தேடி செல்வம் சேர்க்கும் மனித வாழ்வின் அவலநிலையை சுருக்கமாக ஆனால் சிறப்பாக எழுதுகிறார் செகுரா. வல்லவர்கள் வைத்ததே சட்டம், நினைத்தவுடன் அரங்கேற்றப்படும் தூக்கு தண்டனைகள், திருட்டு, மோசடி என பூலோக பாவபூமி ஒன்றின் வருத்தமான நிலமது. தங்கம் தேடி செல்வந்தர்களாக வேண்டும் என எண்ணம் கொண்ட மனிதர்களை ஏமாற்ற செய்யப்படும் தந்திரங்கள், அதில் தம்மை வீழ்த்தி தம் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கிடும் மனிதர்கள் வாழ்வு தங்கத்தைபோல பிரகாசமானதாக இருந்திருக்கவில்லை. கதையின் இப்பகுதியில் உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். கதையின் இப்பகுதியில் டெக்ஸின் தந்திரங்கள், அடிதடிகள், துப்பாக்கி பாவனைகள் எல்லாம் அவருடைய ஆக்‌ஷன் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் வகையில் இருக்கும். சஃபோர்டில் அவர் தன்னிடமிருந்து மீட்கப்பட்ட டிக் கிராமர் எனும் கைதியை விசாரிக்க முயல்கிறார். போலி தங்க சுரங்க உரிமைகளை விற்று மாட்டிக் கொண்ட வேளையில் ஷெரீஃபை கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டவன் டிக் கிராமர். அவனிடம் டெக்ஸ் விசாரணை நடாத்தும்போது பெரும்பாலும் அவர் துப்பாக்கியே பேசுகிறது. அவர் தேடிய கேள்விக்கான விடை கிடைக்காத நிலையிலேயே சஃஃபோர்டை விட்டு விலகுகிறார் அவர்.

lor du m 3மீண்டும் சியரா விஸ்டா செல்லும் வழியில் செவ்விந்தியர்களிற்கு பயந்து மறைந்திருக்கும் ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக கிறிஸ்தவ துறவிகள் மடம் ஒன்றில் கொண்டு சேர்க்கிறார். அங்கு அவர் தன்னிடம் இருந்து மீட்கப்பட்ட கைதிகளில் ஒருவனான அல்பேர்ட் டெக்கர் மீண்டும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டதை தெரிந்து கொள்கிறார். டெக்கரையும் அவன் கும்பலையும் தேடிச்செல்லும் ஷெரீஃப் குழுவினரோடு தன்னையும் டெக்ஸ் இணைத்துக் கொள்கிறார். டெக்கரிடம் இருந்தும் டெக்ஸ் தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்வது இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்தாவது கைதியான பால் லாருயூ குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அறிந்து கொள்கிறார்.. மொத்தத்தில் டெக்ஸின் கேள்விகளிற்கு அவர் விசாரணையும் தேடலும் விடையளிப்பது இல்லை. அப்படியானால் யார் கைதிகளை மீட்டது? எதற்காக? …. மீதியிருக்கும் பக்கங்களில் இதற்கான விடையை வாசகர்களிற்கு தருகிறார் கதாசிரியர் செகுரா.

செகுராவின் மர்ம முடிச்சு சுவாரஸ்யமானது ஆனால் தேர்ந்த வாசகன் ஒருவன் ஏன் இப்பெயர் டெக்ஸின் விசாரணைகளில் இரு இடங்களில் வருகிறது எனும் ஒரு கேள்வியை எழுப்பும் பட்சத்தில் சுவாரஸ்யம் பணால் ஆகிவிடும். ஐந்து கைதிகளின் வாழ்வின் சிறு கூறுகளை டெக்ஸின் விசாரணை வழி சுவையுடன் சலிப்பில்லாமல் எடுத்து வரும் கதை அதன் இறுதிப்பகுதியில் அதன் வீர்யத்தை சற்று இழந்தும் விடுகிறது. டெக்ஸ் மேக்ஸி கதைகளில் மிகச்சிறிய கதை இது எனலாம். 303 பக்கங்கள்தான். வேகமாக வந்து முடியும் இறுதிப்பகுதி, யார் குற்றவாளி எனும் விடை, அக்குற்றவாளியின் வழமையான வில்லத்தனங்கள் போன்றன கதை உருவாக்கி வைத்த எதிர்பார்ப்பை பூரணமாக்க தவறி விடுகின்றன. கதையின் ஓவியர் எனக்கு மிகவும் பிடித்தமானவரான ஹோசே ஒர்ட்டிஸ். கதையின் சில பகுதிகளில் தீர்க்கமற்ற கோட்டு சித்திரங்களின் தீவிரமான எல்லையை தொட்டு விடுவது என அவர் தீர்மானம் கொண்டிருக்கிறார். சில பகுதிகளில் சித்திரங்கள் பூர்த்தியாகாத நிலையிலேயே அச்சிற்கு வந்து விட்டனவோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது எனினும் ஓர்ட்டிஸின் சித்திரங்களை வெறுக்க முடியாது. கதாசிரியர் அண்டோனியோ செகுரா எழுதிய இறுதி டெக்ஸ் கதை இது. 2012 ஜனவரியில் அவர் காலமாகிவிட்டார். டெக்ஸின் கதைகளிற்கு இது ஒரு பேரிழப்பே என்பது செகுராவின் கதைகளின் ரசிகர்களிற்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று. கதையில் சஃபோர்டில் நடக்கும் துப்பாக்கி மோதலின்போது ஒரு வசனம் வரும் அது டெக்ஸிற்கு மட்டும் அல்ல செகுராவிற்கும் பொருந்தும்….. டேய் இவன் மனுஷன் இல்லேடா…. மிசின் கன்னுடா !!!!

Sunday, January 6, 2013

என்பு வேட்டையர்

வதனமோ சந்த்ரபிம்பமோ-7

நவஹோக்களின் T REX டெக்ஸ் அதகளம் 

வையோமிங் பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் Buffalo எனும் சிறுகிராமத்திற்கு குதிரை திருட்டு சம்பந்தமான விசாரணை ஒன்றிற்காக டெக்ஸும், கார்சனும் வருகை தருகிறார்கள். வஃபலோ கிராமத்தின் ஷெரீப்பான டாம் பாக்ஸ்டருன் உரையாடும் டெக்ஸ், விசாரணையை தொடர்வதற்காக Four Bears எனும் செவ்விந்திய இளைஞனை சந்திக்க விரும்புகிறார்…..
Tex Maxi  n°2ன் கதையாகிய Le Chasseur de Fossiles ஐ கதையின் கதாசிரியராகிய அண்டோனியோ செகுரா, லண்டனில் அமைந்திருக்கும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிர் படிமப் பிரிவிலேயே ஆரம்பிக்கிறார். கதையில் டெக்ஸ் வாசகர்களிடம் அறிமுகமாகும் முன்பாக டைனோசார் போன்ற தொல்விலங்குகளின் என்புருக்கள் வாசகர்களிடம் தம்மை அறிமுகமாக்கி கொள்கின்றன. அமெரிக்க மண்ணிலிருந்து லண்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பை வளமாக்க வந்து சேர்ந்திருக்கும் முற்சரித்திர விலங்குகளின் படிமவுருக்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருக்கும் மாசசூசெட்ஸின் செனெட்டரான தாமஸ் கரேயின் மனதிற்கு மகிழ்சி தருவதாக அமைந்திடவில்லை, மாறாக தன் தேசத்தின் படிமப் பொக்கிஷங்கள் அன்னியர் பெருமைக்கு துணைபோவதைத் தடுக்க அவர் எண்ணம் இழைகொள்கிறது. அமெரிக்காவிலும் சிறப்பானதொரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை உருவாக்கிட வேண்டுமெனவும் அவர் மனதில் ஒரு திட்டம் பிறக்கிறது.
தொடரும் கதையின் பக்கங்களில் செனெட்டர் தாமஸ் கரே அவர்களின் பணிப்பின் கீழ் தொல்லுயிர் எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்காக பயணிக்கும் தொல்லுயிரியலாளரான ED Cope கதையில் அறிமுகமாகிறார். அமெரிக்க தொல்லுயிர் எச்ச அகழ்வு வரலாற்றில் Edward Drinker Cope முக்கியம் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். எட் கோப்பிற்கும் அவரது போட்டியாளரான Othniel Charles Marsh க்கும் இடையிலான என்பு வேட்டை வரலாறு, டெக்ஸ் கதையைப் போன்றே சுவாரஸ்யமானது. ஆரம்ப நாட்களில் நண்பர்களாக இருந்து பின்பு பெயரிற்காகவும், புகழிற்காகவும் எதிரிகளாக மாறிய இந்த இருவரின் வரலாற்றில் ஒரு சிறு பகுதியை அண்டோனியா செகுரா தனது கதைக்கு கற்பனைமிகை சேர்த்து சாதகமாக்கி கொண்டிருக்கிறார். எட் கோப்பிற்கு போட்டியாளராக அவர் ஒரு கற்பனை பாத்திரத்தை கதையில் உருவாக்கி நடமாடச் செய்திருக்கிறார். எட் கோப்பின் பாத்திரப் படைப்பும் செகுராவின் கற்பனையை சார்ந்ததாக இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது.
எட் கோப் குழுவின் அறிமுகம் தாண்டிய பின்பாக கதை Raton எனும் சிறுகிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மதுவிடுதிக்கு நகர்கிறது. இங்கு அமெரிக்க மேற்கின் பல பகுதிகளிலும் அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட மனிதனான Red Barnum, தன்னை வேட்டையாட வரும் இரு வெகுமதி வேட்டையர்களின் கதைகளை முடிப்பதுடன் தன் கதையை ஆரம்பித்து வைக்கிறான். மேற்கூறிய அறிமுகங்கள் கதையின் பிரதான இழையுடன் இப்பாத்திரங்கள் நெய்யக்கூடிய சித்திரம் என்னவாகவிருக்கும் எனும் ஆர்வத்தை கதையை படிப்பவர்கள் மனதில் எளிதாக விதைத்து விடுகிறது. அந்த ஆர்வத்தின் துணையுடன் எஞ்சியிருக்கும் பக்கங்களை நகர்த்துவது சுகமான ஒன்று அல்லவா.
கதையில் வரும் எட் கோப், செவ்விந்தியர்களை ஆதிவாசிகளாக அல்லது கூர்ப்பில் பின்தங்கிய இனமாக அடையாளம் காணும் மனப்பான்மை கொண்ட ஒரு ஆய்வாளராகவே சித்தரிக்கப்படுகிறார். தன்கீழ் பணிபுரியும் கறுப்பனான Iron Cody, இரு பூர்வகுடிகளிற்கிடையிலான அங்கீகார ஏற்பை அவர்களிற்குரிய மரபு முறையில் செவ்விந்தியக் குழு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது அந்த மரபை எட் கோப்பால் காட்டுமிராண்டித்தனம் எனும் பண்பாகவே வரையறை செய்ய முடிகிறது. அறிவியலின் முன்னகர்விற்காக ஒரு இனம் போற்றும் பாரம்பரியங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் குறித்து எந்த அக்கறையுமற்ற நிலையில் தன் ஆய்வுகளையும், தேடல்களையும் அவர் மும்முரமாக நிகழ்த்துகிறார். முற்சரித்திர விலங்குகளின் எச்சங்களை தேடி அவர் அமெரிக்க பூர்வகுடிகளின் நிலங்களினூடாக பயணிக்கிறார், அந்த நிலம் குறித்தும், முற்சரித்திர விலங்குகளினது எச்சம் குறித்தும் பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பது குறித்த கரிசனங்கள் அற்ற ஒரு அறிவியலாளராகவே அவர் காணப்படுகிறார்.
cf1செவ்விந்திய இளைஞனான ஃபோர் பியர்ஸின் தாய் வெள்ளை இனத்தவன் ஒருவனுடன் வாழ்பவள். தனது மகன் வெள்ளை இனத்தவர்கள்போல கல்வியறிவு பெற்று தன் கரும்பாத செவ்விந்தியக் குடிகளின் நலனிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால் வெள்ளையினத்தவர்களின் குடியிருப்புக்களிலும், கல்விக்கூடங்களிலும் ஃபோர் பியர்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் அவனைப் பித்துக் கொள்ள வைக்கின்றன. எட் கோப் அமெரிக்க பூர்வகுடிகள் மீது கொண்டிருந்த மதிப்பீட்டிற்கும், ஃபோர் பியர்ஸ் வாழ்ந்திருந்த வெள்ளையின சமூகத்தின் நடவடிக்கைகளிற்கும் இடையே அதிக வேறுபாடுகளை ஒருவர் நிறுவிட முடியாது. நன்கு கல்வியறிவு பெற்ற ஒரு வெள்ளையனைப்போல தான் உருவாக வேண்டும் எனும் அவன் தாயின் அடையாளத்திணிப்பை ஃபோர் பியர்ஸால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இந்த இயலாமையும் தான் ஒரு பூர்வகுடி இந்தியன் எனும் உணர்வும் அவனை வெள்ளை இனத்தவர்கள் மீதான எதிர்மறை எண்ணங்கள் கொண்ட ஒரு இளைஞனாக மாற்றியடிக்கிறது. வன்முறைகளால் மட்டுமே செவ்விந்திய இனம் தன் உரிமைகளையும், இழந்தவற்றையும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனும் சித்தாந்தம் அவன் மனதில் ஆழ்நில வேர்களாக படர்ந்து உறுதி பெறுகிறது. அவன் வாழ்க்கை, அவன் தாய் அவனிற்காக உருவாக்க நினைத்த வாழ்வின் எதிர்முகம் கொள்கிறது. தந்திரமும், குரூரமும் நிறைந்த ஒரு செவ்விந்திய இளைஞனாக அவன் வடிவெடுக்கிறான்.

வஃபலோ கிராமத்தில் ஃபோர் பியர்ஸை தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கு டெக்ஸ் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சடார் என துப்பாக்கியை உருவி படார் என வெடிக்க வைத்து மடேர் என அவனை வீழ்த்த டெக்ஸால் இயலவில்லை என்பதாகவே கதையின் முன்பாதி நகர்கிறது. பள்ளத்தாக்குகள், மலைகள், கணவாய்கள் என டெக்ஸையும், கார்சனையும் அலைய வைக்கிறான் ஃபோர் பியர்ஸ். இருப்பினும் டெக்ஸ் அவனை மடக்குகிறார். ஆனால் அவன் கூண்டில் முடங்கி அடைபட்டுக் கிடக்கும் ஒரு இலகுவான பறவையல்ல. கதாசிரியர் செகுரா கதையின் பிரதான எதிர்நாயகனகாக ஃபோர் பியர்ஸை படிப்படியாக உருவாக்கும் விதம் சிறப்பானது. கதையின் முதற்பாதியில் ஃபோர் பியர்ஸ் மீது வாசகர்களை எதிரான எண்ணங்கள் கொள்ள வைக்கும் கதைப்போக்கை கையாளும் செகுரா, முக்கியமான ஒரு தருணத்தில் தரும் இருபக்கங்கள் மூலம் அந்த எதிர்மறை எண்ணங்களை எல்லாம் வாசகர்களை நீக்கி கொள்ள செய்துவிடுகிறார். பெருவெளி எருமைகளை அவற்றின் தோலிற்காக கொன்றுபோடும் மனிதர்களை ஃபோர் பியர்ஸ் தன் வன்குரூரத்தால் பலிகொள்ளும்போது அவன் பேசிடும் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவன் செயலின் குரூரத்திற்கு சார்பான வாதங்களை பெருவெளிப்புற்களின் நுண்வேர்நாக்குகள் குருதிச்சுவையுடன் அருந்தத் தருகிறது. இரு உயிரிகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன. இந்த சொற்கள் சாதராணமானவையாக தோன்றும். இரு உயிரிகளில் ஒன்று எருமை மற்றயது மனிதன் என்பது தெரியும்போதுதான் அச்செயலில் இருக்ககூடிய பாதகத்தன்மையை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும் அல்லவா! ஆனால் ஃபோர் பியர்ஸிற்கு எருமை, அதன் தோலை உரிப்பவர்களை விட ஆதாரமானது. தோலை உரிப்பவர்களிற்கோ எல்லாவற்றையும் விட தோலை உரிப்பது முக்கியமானதாக இருந்தது. இரு இனங்களின் அழிவுக்கு தோலும் ஒரு காரணமாக அமைந்தது என்பது ஆச்சர்யம்தான். தொடரும் கதையில் வெள்ளை இனத்திற்கு எதிரான தனது வெறியை அடக்கமாட்டாது, அர்த்தமிழந்த பெருங்கோபத்துடன் மனிதர்களை கொன்றுபோடும் ஒரு தந்திரனாக அவன் சித்தரிக்கப்பட்டாலும் வழமையான கதைகளில் செவ்விந்திய எதிர்நாயகர்கள் சித்தரிக்கப்படும் இழிவான பாணியிலிருந்து ஃபோர் பியர்ஸிற்கு விலக்கு அளித்த வகையில் செகுவராவின் கதைகூறல் சிறப்பான ஒன்றாக அமைகிறது எனலாம்.

ஃபோர் பியர்ஸை, வஃபலோவிலிருந்து மொண்டானாவில் அமைந்திருக்கும் கரும்பாத செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்புவரை டெக்ஸ் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பாதையில் நிகழ்ந்த இரு கொலைகள் குறித்த விசாரணைகளை நிகழ்த்தி அக்கொலைகளை ஆற்றிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையும் டெக்ஸ் இறகுத்தொப்பிபோல அணிந்து பயணிக்கிறார். தனது கால்களில் ஒன்று மரத்தாலான ஒரு மனிதனை ஃபோர் பியர்ஸின் தடத்தோடு அவர் தேடிச் செல்கிறார். வியப்பளிக்கும் விதமாக ஃபோர் பியர்ஸ், எட் கோப், மரத்தாலான கால் ஒன்றைக் கொண்ட சார்ல்ஸ் சட்டர் ஆகியோர் பயணிக்கும் தடங்கள் ஒன்றாகவே அமைகிறது. இந்த தடங்கள் யாவும் Crow Agency எனப்படும் காவல் கோட்டையை கடந்தே செல்கின்றன.

வஃபலோவில் ஃபோர் பியர்ஸ் நிகழ்த்தும் வன்செயல்களால் அவன் தலைக்கு 3000 டாலர்கள் வெகுமதி விதிக்கப்படுகிறது. இந்த தொகை ரெட் பார்னமை ஈர்க்கிறது. ரட்டோனின் மதுவிடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி மோதலில் ரெட் பார்னமின் இதயத்திற்கு அருகே புதைந்த தோட்டா காலத்துடன் காலனை அவன் உயிரிற்கு அருகே சிறிதுசிறிதாக அடிகொள்ள வைக்கிறது. வறள் நிலத்தின் காற்று ஊட்டும் புழுதிச்சோற்றையுண்ணும் வாழ்விலிருந்து தன் உயிர்போகும் முன்பாக ஒரு சிறு கணமேனும் விலகிட விரும்புகிறான் ரெட் பார்னம். எனவே அவனும் ஃபோர் பியர்ஸை வெகுமதிக்காகத் தேடிச் செல்கிறான். அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட ஒருவன் வெகுமதிக்காக பிறிதொருவன் தலையைத் தேடிச் செல்லும் வாழ்வின் விசித்திரமான ஆட்டம் அது. ரெட் பார்னம் எதார்த்தம் தெரிந்தவன். டெக்ஸை துப்பாக்கியால் எதிர்கொள்வதை அவன் தவிர்த்தே செல்கிறான். தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மரணத்தின் நெருக்கத்துடன் அவனிடம் அதிகரித்து விடுகிறது. ரெட் பார்னம் தன்னைப் பின் தொடர்வதை தடுக்க டெக்ஸ் முயற்சிகள் எடுத்தாலும் டெக்ஸை தொடர்வதை பார்னம் நிறுத்துவது இல்லை. தன் உயிர்போகும் முன்பாக ஒரு மனிதனாவது தன்னைப்பற்றிய நல்லபிப்பிராயம் கொண்டவராகிட வேண்டும் என ரெட் பார்னம் தன் இயல்புகளை மாற்றிக் கொள்வது போல நடிக்கவாவது முயல்கிறான். ஆனால் டெக்ஸ் இறுதிவரை பார்னம் ஒரு கேடி என அவர் கொண்ட எண்ணத்திலிருந்து விடுபடுவது இல்லை. ரெட் பார்னமும் டெக்ஸிடம் போலியாக நடந்து கொள்வது இல்லை. ஒரு மனிதனை அயோக்கியனாக பார்த்தாலும் மனிதநேயம் என்பதிலிருந்து அவனிற்கு தான் விலக்களிப்பது இல்லை என்பதாக டெக்ஸ் கதையின் இறுதிக் காட்சி ஒன்றில் நடந்து கொள்வார். ரெட் பார்னம் இக்கதையின் மிக முக்கியமான துணைப்பாத்திரம் என்பதை கதையை ஒருவர் படிக்கையில் உணரமுடியும்.

cf2க்ரோ ஏஜென்சியில் இருந்து எட் கோப் குழு, ரெட் பார்னம் அணி, டெக்ஸ், கார்சன் ஆகியோர் ஒரே குழுவாக கரும்பாத செவ்விந்தியர்கள் குடியிருப்பை நோக்கி பயணிப்பார்கள். அக்குழுவில் பயணிப்பவர்களின் நோக்கங்கள் ஒன்றல்ல. அந்நோக்கங்கள் யாவும் நிறைவேறி விடுவதுமில்லை, பயணித்தவர்கள் யாவரும் மீள வருவதுமில்லை. பல வாழ்க்கைகளின் தடங்களை கதாசிரியர் தன் கதை சொல்லலால் எதார்த்தமான நெகிழவைக்கும் முடிவுகள் நோக்கி நடாத்தி செல்கிறார். இதனாலேயே டெக்ஸ் கதைகளின் கதாசிரியர்களில் தன்னை தனித்த ஒருவராக அண்டோனியா செகுராவால் காட்டிக் கொள்ள முடிகிறது. இதுவரை நான் படித்த செகுராவின் கதைகளில் விறுவிறுப்பு குறைந்த கதை இது. டெக்ஸின் கதைகளில் சுமாரிற்கும் சிறிது மேல் என வகைப்படுத்தக்கூடிய கதை இது. ஆனால் கதையின் எதார்த்தமான போக்கு கதையைக் காப்பாற்றி விடுகிறது. அதற்காக டெக்ஸ்ஸின் வழமையான மசாலா இல்லை என அர்த்தம் செய்து கொள்ளத் தேவையே இல்லை. அடி தடி ரசிகர்களிற்கு விருந்து கதையில் விதம் விதமாக உண்டு.

கதையின் பிறிதொரு எதிர் நாயகனான சார்லஸ் சட்டர் ஒரு சாடிஸ்ட்டாகவே கதையில் காட்டப்படுகிறார். ஃபோர் பியர்ஸையும், சார்ல்ஸ் சட்டரையும் ஒரு தராசில் நிறுத்தினால் அவர்கள் தம்முள் கொண்டிருக்கும் குரூரத்தின் எடை சமமாக இருக்கும். சார்லஸ் சட்டரிற்கு கதையில் சவால்விடும் பாத்திரமாக அமைவது டெக்ஸ் அல்ல மாறாக ஒரு சிறுகுப்பி மதுவிற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் வித்தைகளையும் இயற்றக்கூடிய சாலமோன் எனும் முதிய தங்க வேட்டையனே. எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும்கூட தன் மனவுறுதியால் சார்ல்ஸ் சட்டரை எள்ளி நகையாடும் சாலமோனும், மதுவகைகளை ஆவலுடன் சுவைக்கும் சாலமோனின் கழுதை மதுசெலமும் செகுரா வழங்கும் நிறைவுப்பகுதி ஆச்சர்யங்கள். சாலமோன், கார்சன், மதுசெலம் ஆகியோர்க்கு இடையில் கதையில் உருப்பெறும் காட்சிகள் மனதை இலகுவாக்கிவிடும் சுவை கொண்டவை. டெக்ஸைவிட சாலமோனின் செல்லக் கழுதையாகிய மதுசெலம் இங்கிதம் தெரிந்த ஒன்று என கார்சன் புலம்பும் தருணம் அலாதியானது.

இறுதியில் டெக்ஸ், தொல்லுயிரியலாளர் எட் கோப்பிற்கு நடைமுறை எதார்த்தங்களை புரிய வைக்கும் இடத்தில் செவ்விந்திய சார்பு குணம் கொண்டவராக காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு இனத்திற்கும் இருக்ககூடிய நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து டெக்ஸ் ஆற்றும் விரிவுரை அது எனலாம். கதையின் சித்திரக் கலைஞர் ஹோசே ஒர்டிஸ் குறித்து முன்னைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஒட்டிஸ் பார்க்க சலிக்காத சித்திரங்களின் தந்தை என்பேன். முற்சரித்திர விலங்குளின் படிம எச்சங்களை தேடிச் சென்ற முன்னோடிகளின் ஆய்வில் டெக்ஸும் கலந்து கொண்ட பெருமையை செகுரா இக்கதையின் வழி டெக்ஸிற்கு அளித்திருக்கிறார். கதையின் ஒரு தருணத்தில் டெக்ஸ் கூறும் வரிகளுடன் இப்பதிவை முடித்தல் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் “எதிர்வரும் காலங்களில் டைனோசார்களும் சரி செவ்விந்தியர்களும் சரி ஒரே விதமாக வரையறை செய்யப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்………………………. அழிந்துபோன இனம். ”

Saturday, September 8, 2012

கொண்ட்ராஸ் தங்கம்

வதனமோ சந்த்ர பிம்பமோ- 4

நவகோசிட்டி ஸ்டேஷன் மாஸ்டர் டெக்ஸ் சாகசம்…

மெக்ஸிக்கோவின் எல்லைக்கு அருகாக இருக்கும் அரிசோனாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கின்றனர் சில மெக்ஸிக்க டெஸ்பராடோக்கள். இந்த தாக்குதலிற்கு காரணமான டெஸ்பராடோக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அக்கிரமங்களிற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காக அப்பகுதிக்கு விரைந்து வருகிறார் டெக்ஸ். அங்கு அவர் அறிந்து கொள்ளும் தகவல்கள் மெக்ஸிக்க ஜெனரலான கொண்ட்ராஸ் என்பவனின் இலட்சிய கனவு குறித்த பார்வையை டெக்ஸிற்கு வழங்குகின்றன…..
ரயில் என்பது பல மனிதர்களின் மனதின் ரகசியமான ஒரு ஓரத்தில் அவர்கள் கடந்தோடி வந்த பாதைகளின் நினைவுகளை ஏற்றிக்கொண்டவாறே நினைவின் மடிக்கப்பட்ட ஒரு ஜோடி தண்டவாளத்தில் எந்த சத்தமுமின்றி ஓடிக்கொண்டேயிருக்கும். ரயில் நிலையங்களின் அருகே வாழ்ந்திட சந்தர்ப்பம் கிடைத்த சிறுவர்கள் மனதில் ரயிலுக்கு என பெரும்பாலும் ஒரு பிடித்தமான இடம் பதிவாகியிருக்கும். அவற்றில் பலர் பாடசாலைகளில் ரயில் ஓட்டுனராதலே என் எதிர்கால லட்சியம் எனப் பதில் சொல்ல தயங்கியதே இல்லை. ஒரு ரயிலோட்டியின் வாழ்க்கை பெரிதும் பயணங்களால் ஆனது. ஆனால் அவன் பயணங்களில் பெரும்பாலானவை பிறர் வாழ்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கும்.
தனியார் போக்குவரத்துச் சேவைகளோ, அதிவேக பிரயாண வசதிகளோ இல்லாதிருந்த ஒரு காலப்பகுதியில் ரயில் என்பதும் ஒரு உச்ச நட்சத்திரமாகவே இருந்திருக்கிறது. ரயில் இன்று அதன் உச்சவேகங்களை எட்டி, செல்லுமிடங்களிற்கான பயணநேரத்தை வெகுவாக குறைத்து விட்டபோதிலும் அவ்வேகத்தில் ரயில் பயணம் என்பதன் நிஜமான ஆத்மா உருக்குலைந்து போய்விட்டது எனலாம். இந்த வேகப்பித்து என்பது நம் சமூகத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து விடுவதற்கு முன்பாக இருந்த நிதானமான ரயிலின் வேகத்தில் நிகழ்ந்த பயணங்கள் இன்றும் பல உணர்வுகளுடன் நினைவுமீட்க கூடியவைகளாகவே இருக்கின்றன. அம்மம்மா கட்டித் தந்த சோற்றுப்பொதியை கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து திறக்கையில் வாழையிலையின் சுகமான வேகலுடன் நாசியை வருடிய வாசம்போல ரயில் பயணம் குறித்த நினைவுகள் மனதை வருடிச்செல்ல தவறுவதேயில்லை. முதல் முத்தம், முதல் புணர்ச்சி, முதல் காதல் போன்றவற்றைக்கூட ஒருவர் மறக்கலாம். ஆனால் அந்த நிதானவேக காலத்தில் ஒருவர் தவறவிட்ட ரயில் குறித்த கதையை மறக்கமுடியுமா.
பெருமேற்கின் முடிவற்ற வெளிகளினூடாக தன் நீண்டவுடலை முன்னகர்த்தியவாறே சென்றிருக்ககூடிய ஒரு ரயில், அதனை முதன்முறையாகக் காணும் அமெரிக்க பூர்வகுடி ஒருவனிற்கு தந்திருக்ககூடிய உணர்வுகளை சற்றே கற்பனை செய்துதான் பாருங்களேன். அவன் உணர்ந்தவற்றின் ஏதோவொன்றின் ஒரு நுண்கூறாவது இன்றும் முதன்முதலாக ரயிலை கண்டிடும் ஒருவனிலும் உயிர்த்திட வாய்ப்புக்கள் உண்டல்லவா. ஆனால் அந்த இரும்புக்குதிரையின் வேகமான முன்னகர்வானது அமெரிக்க பூர்வகுடி நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பின் வெற்றிக்கும், அப்பூர்வகுடிகளின் இனவழிப்பிற்கும் சாதகமான ஒரு அம்சமாகவும் அமைந்திருந்தது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
tb1பண்டிகை காலங்களின்போது உங்கள் உறவினர்கள் வருகிறார்கள் என்றாலோ அல்லது உங்கள் அன்புக் காதலி ஜன்னலோரம் இருந்தவாறே உங்களிற்கு சைகை காட்டிச் செல்வாள் என்றாலோ அல்லது பிக்பாக்கெட் பாண்டி தன் கஸ்டமர்களிடம் லாவகமாக சுருட்டிய உடமைகளை வெளியில் காத்திருக்கும் உங்களிடம் எறிகிறான் என்றாலோ அல்லது ஸ்டீல் க்ளோ கதை இனி வராது என இந்த உலகமே வெறுத்து உங்கள் இன்னுயிரை ஓடிவரும் ரயிலிடம் நீங்கள் பலிதர நினைத்தாலோ அல்லது உங்களை விட்டு ஓடும் மனைவி ஒரு குறித்த ரயிலில்தான் பயணிக்கிறார் என்றாலோ அந்த ரயிலை ஒருவர் ஆர்வமுடன் பார்க்கவும், காதலுடன் நோக்கவும், செம வசூல் நைனா எனச் சொல்லி பாராட்டவும், குட்பை தமிழ் காமிக்ஸ் உலகமே என அணுகவும், விட்டதடா சனி என கையெடுத்து நிலத்தில் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்து வீட்டு பரிமளத்திடம் நாம இனி செட்டிலாகிடலாம் என மூச்சு விடாமல் கூறிடவோ முடியும். ஆனால் குதிரைகளில் பயணித்து பெருமேற்கின் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சாகசங்களின் தடங்களை பதித்த நவஹோ சீமானும், நற்பண்பாளருமான டெக்ஸை இரும்புக்குதிரையில் பாய்ந்து ஏறி சாகசங்களை செய்யக் கேட்டுக்கொண்டால் அதன் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை டெக்ஸின் வாசகர்களான குணசீலப் பெருந்தகையோர்க்கு நான் சொல்லிட வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் டெக்ஸ் ஏன் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்து அதிரடி சாகசங்கள் நிகழ்த்துகிறார் என்பதற்கு விடையாக அமைகிறது TEX MAXI 8 ன் கதையான Le Train Blindé [ கவச ரயில் ].
கதையின் ஆரம்பமே அதகளம்தான். மெக்ஸிக்கோ டெஸ்பராடோக்களினால் பாதிக்கப்பட்ட இடமொன்றை அடையும் டெக்ஸ், அந்த டெஸ்பராடோக்களின் தடங்களை தொடர்ந்து சென்று அவர்களுடன் மோதும் காட்சிகளின் துணையுடனேயே கதையின் முதல் பகுதி ஆரம்பமாகிறது. Caramba, Carai, Gringo எனும் தாய்மொழிச் சொற்களை உதிர்த்தவாறே அரிசோனாவின் மண்ணில் விழுந்து தம் இன்னுயிரை இழக்கும் அந்த மெக்ஸிக்க உயிர்களிற்காக நாம் ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்திப்போம். மெக்ஸிக்க எல்லைக்கருகே ஒரு கால்வாய்ப் பாலத்தினருகே நடைபெறும் அந்த மோதலிலேயே சித்திரக் கலைஞரான José Ortiz தன் திறமையின் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் சுவைத்திட வாய்பளித்து விடுகிறார். நவஹோ திலகமான டெக்ஸ் கடமையும் கண்ணுமாக டெஸ்பராடோக்களின் செயற்படுமுறை ஒழுங்கையும், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் வைத்து அவர்கள் வழமையானதொரு டெஸ்பராடாக்கள் குழு அல்ல என்பதை ஊகித்துக் கொள்கிறார். அவரின் ஊகம் பின் ஜெனரல் கொண்ட்ராஸின் லட்சிய கனவு குறித்து அவர் அறிந்திடும்போது ஊர்ஜிதமான ஒன்றாக மாற்றம் கொள்கிறது. இங்கு டெக்ஸ் தன்னிடம் உயிருடன் சிக்கிய ஒரு டெஸ்பராடோவிடமிருந்து உண்மையான தகவல்களை அறிந்திட உளவியல் வன்முறை அணுகலை பிரயோகிப்பார். துப்பாக்கியை மட்டுமல்ல மனிதனிற்குள் என்றும் இருந்திடும் உயிர் குறித்த பயத்தை வைத்தே டெக்ஸ் ஆடும் இந்த ஆட்டம் அவர் உளவியலிலும் வல்லவரே என்பதை தெளிவாக்குகிறது.
tb2tb3மெக்ஸிக்க ஜெனரல் கொண்ட்ராஸின் இலட்சியக் கனவுதான் என்ன! கொண்ட்ராஸ் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதானால் அவன் ஒரு தேசபக்தன். ஆனால் அதுவே பல இடங்களில் சர்வதிகாரி, எதேச்சதிகாரி, கொடுங்கோலன் எனும் அர்த்தங்களை கொண்டதாக திரிபுபட்டு விடுவதுண்டு. ஆனால் இந்த விடயமானது இலட்சியக் கனவு கொண்ட தேசபக்தர்களிற்கு புரிவதே இல்லை.அவர்களின் லட்சியக் கனவுகளே அவர்கள் கண்களில் இடப்பட்ட ஒரு திரையாக இருந்து விடுகிறது இல்லையா.
1846ல் இடம்பெற்ற அமெரிக்க மெக்ஸிக்க மோதலில் அமெரிக்கா கைப்பற்றிய மெக்ஸிக்க நிலங்களை 15 மில்லியன் டாலரை மெக்ஸிக்கோவிற்கு செலுத்தி தனதாக்கி கொண்டது. தான் பிறந்த மண்ணின் மீது அதிக பற்றுக் கொண்ட கொண்ட்ராஸ் அமெரிக்காவிடம் பறிபோன இந்த நிலங்களை மீண்டும் கைப்பற்றிட வேண்டும் எனும் கனவை கொண்டவனாகவிருக்கிறான். மெக்ஸிக்கோவின் வரலாற்று நாயகர்களில் ஒருவனாக தன்னை இந்த மனித குலம் நினைவு கூர்ந்திட வேண்டும் என்பது அவன் மனவிருப்பமாகும். இந்த இலட்சியத்திற்காக மெக்ஸிக்க அரசிற்குகூட தெரியாத வகையில் அவன் ஒரு ரகசிய புரட்சியை அமெரிக்கா கொள்வனவு செய்த மெக்ஸிக்க நிலங்களில் உருவாக்கி அதன் வழியாக அந்நிலங்களை மெக்ஸிக்கோவிற்குரியதாக மாற்றிட கனவு காண்கிறான்.
இந்த திட்டத்தை டெக்ஸ் அறிந்து கொள்ளும்போது தனி ஒரு மனிதனாக இதனை தன்னால் முறியடிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்கிறார். ஒரு நல்ல நாயகனிற்கு தன்னால் எத்தனை பேரை அடிக்க முடியும் என்பது தெரிய வேண்டும் அல்லது எத்தனை பேரிடம் தன்னால் அடிவாங்க முடியும் என்பதாவது தெரிய வேண்டும். டெக்ஸ் இதில் முதல் ரகம் எனவே அவர் ஜெனரல் தாமஸையும், செனெட்டர் டேவிஸையும் ரகசியமாக சந்தித்து உரையாடுகிறார்.
ரகசியமான இந்த சந்திப்பின்போது கொண்ட்ராஸ் தன் லட்சியக் கனவை நிறைவேற்ற தேவையான தங்கமும், ஆயுதங்களும் ரயிலொன்றில் அவனது தலைமையகம் நோக்கி எடுத்து செல்லப்படும் என்பதனையும் அந்த தங்கமும், ஆயுதங்களும் கொண்ட்ராஸின் கைகளிற்கு கிடைத்திடாதவாறு டெக்ஸ் தடுத்திட வேண்டுமெனவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சில அரசியல் காரணங்களிற்காக இதனை ஒரு ரகசிய உளவாளி நிகழ்த்தும் நிழல் நடவடிக்கை போலவே டெக்ஸ் செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். எனவே திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக மெக்ஸிக்கோவினுள் நுழைந்து கொண்ட்ராஸின் பகுதிகளிற்குள்ளும், தங்கம் கொண்டு வரும் ரயில் பயணிக்கும் பாதைகளிலும் ஒரு கள ஆய்வை மேற்கொள்ள மெக்ஸிக்கோவிற்கு செல்கிறார் டெக்ஸ்.
tb4tb5கதையின் இப்பகுதியில் டெக்ஸின் நடவடிக்கைகள் ரகசிய உளவாளிகளின் செயற்படுமுறை கையேடுகளில் இணைக்கப்படவேண்டிய கூறுகளை தம்முள்ளடக்கிய ஒன்றாகவே முக்கியத்துவம் பெறுகின்றன. துரோகிகளிற்கு கொண்ட்ராஸ் வழங்கும் தண்டனை முறைகளின் குரூரத்திலிருந்து டெக்ஸ் நிகழ்த்தும் கொண்ட்ராஸ் குறித்த உளவியல் அலசல், எதிரிக்கு எதிரியை உன் நண்பனாக்கு, அவனிடமிருந்து உன் எதிரி பற்றிய தகவலறி, அவனை உன் எதிரிக்கு எதிராக செயற்பட திருப்பு எனும் தத்துவம், தேசபக்தி எனும் பெயரில் நிகழும் அக்கிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்களை தன் ரகசிய திட்டத்திற்கு சாதகமான காரியங்களையாற்ற பயன்படுத்தல், தீவிர நடவடிக்கை அமுலாக்கப்பட வேண்டிய ஸ்தலத்தில் ஒரு உளவாளிக்கு இருக்க வேண்டிய அவதானச்செறிவு, அந்த அவதானங்களை தனக்கு சாதகமான வகையில் நடைமுறை செயற்பாடுகளாக மாற்றிடக்கூடிய நுட்பங்கள் அல்லது அந்த நுட்பங்களில் திறமைசாலிகளை கண்டடைந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் ஞானம். டெக்ஸின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெருமேற்கின் உன்னதமான உளவாளி அவர் என்பதை செவ்விந்திய புகைச்செய்திபோல வானில் எழுதுகின்றன.
டெக்ஸ், தங்கம் ஏற்றி வரும் ரயில் பயணிக்கும்பாதையை நோட்டமிடும் தருணங்களில் ஓவியர் ஹோசே ஒர்ட்டிஸ் தன் திறமையை சந்தைப்படுத்த தவறவே இல்லை. பறவைக்கோணச் சித்திரங்கள் வழியும், வானிலிருந்து கீழ்நோக்கி விழும் மழைத்துளிகள் வழியும், கறுப்பையும், வெள்ளையையும் கலந்து அவர் தேர்ந்த ஒரு வித்தைக்காரன்போல் தன் சித்திரங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். சில இடங்களில் சிறுவன் ஒருவனின் கிறுக்கல்கள் போல தோன்றும் ஒர்ட்டிஸின் சித்திரங்கள் அச்சித்திரங்களிலுள்ள பாத்திரங்கள் யார் என்பதை வாசகன் ஊகித்தறிய செய்யும் தன்மை கொண்டதாகவும் திடீரென அந்த கிறுக்கல் விடுபட்டு தெளிவான கோடுகளுடன் அசரவைக்கும் சித்திரங்கள் பாத்திரங்களில் உயிர்நடனமிடும் பாவங்களுடன் உருப்பெறுவதாகவும் ரசவாதம் நிகழ்த்தியவாறே கதை நெடுக நகர்ந்து செல்கின்றன. ஹோசே ஓர்டிஸ் டெக்ஸ் கதைகளில் பணியாற்றிய மிகத்திறமை வாய்ந்த ஒரு கலைஞர் என்பது தெளிவு. அவர் சித்திரங்களில் வாழும் இலகுதன்மை பார்த்து உணரப்படவேண்டிய ஒன்று.
tb6கதாசிரியர் Antonio Segura உருவாக்கியிருக்கும் கதை டெக்ஸின் கதைக்குரிய வழமையான பலவீனங்களை தன்னில் கொண்டிருக்கிறது இருப்பினும் அவற்றை ஒரு வாசகன் கடந்து வந்து டெக்ஸ் நிதானமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு அதனைக் கொண்டு கொண்ட்ராஸிற்கு எதிராக காய் நகர்த்துவதை படிப்படியாக சுவையுடனும் விறுவிறுப்புடனும் விபரிக்கிறது. கொண்ட்ராஸ், டெக்ஸ் ஆகியோரின் திட்ட உருவாக்கல்களில் சதுரங்க ஆட்டம் சித்திரங்களில் உள்ளவாறு கதை உருவாக்கப்பட்டு சதுரங்க ஆட்டம் குறியீடான ஒன்றாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு எதிராளியின் அடுத்த நகர்வு என்ன என்பதை முன்னமே ஊகித்து அதற்கு எதிராக சில காய் நகர்வுகளை தன் மனதின் ஓரத்தில் திட்டமிடும் தேர்ந்த ஒரு சதுரங்க ஆட்டக்காரன் போலவே டெக்ஸும், கொண்ட்ராஸும் தம் திட்டங்களை சதுரங்க காய்கள் போல நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் முறியடிக்கப்பட்டால் அதற்கான எதிர்திட்டம் என கதையில் விறுவிறுப்பு நிதானமான திட்டமிடலுடன் கைகோர்த்து வாசிப்பின் சுவையை தக்க வைக்கிறது.
பெருமேற்கில் இவ்வகையான சாகசங்களை நிகழ்த்தும் மனிதர்களிற்கு ஒரு நல்ல குளியல் வழங்ககூடிய களிப்பையோ, ஒரு நல்ல குளிர்ச்சியான பீர் மற்றும் வாட்டிய தடித்த இறைச்சி துண்டங்கள் தீர்க்கும் தாகங்களையோ அல்லது பசியையோகூட கதாசிரியர் தவறவிட்டார் இல்லை. பெருமேற்கின் வறண்ட பாலையில் அலைந்து திரிந்து நகரொன்றில் நுழையும் ஆணிற்கு அழகான நங்கை ஒருத்தி தரக்கூடிய உணர்வுகளையும் அவர் ஒதுக்கினார் இல்லை. அதிரடி, விறுவிறுப்பு, பின் அங்காங்கே இழையோடும் நகைச்சுவை என அந்தோனியா செகுராவின் கதை ஒரு ருசியான கலவை. கவச ரயில் என பிரெஞ்சு தலைப்பு இருந்தாலும் கவச ரயில் கதையில் அதிக முக்கியத்துவம் பெற்றிடவில்லை. மாறாக டெக்ஸ் இந்தக் கவச ரயிலின் பாதுகாப்பிலிருந்து எப்படி கொண்ட்ராஸின் தங்கத்தையும் ஆயுதங்களையும் கவர்கிறார் என்பதே கதையின் இறுதிப்பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது. தான் சேர்த்த மனிதர்களின் துணையுடன் டெக்ஸ் நிகழ்த்தும் இந்த சாகசம் உங்களை நீங்கள் இறங்க வேண்டிய தரிப்பை தவறவைக்கும் சக்தி கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. தேசபக்தி, நட்பு, காதல், பாசம், துரோகம் வீரம் அதிரடி என நகரும் கதை இறுதியில் ஒரு திருப்பத்தையும் டெக்ஸின் அதிரடியான் முடிவுடனும் நிறைவுறுகிறது. டெக்ஸ் டிக்கெட் இல்லாது ரயிலில் ஏறினாலும் அவர் தன் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறவே இல்லை.