Showing posts with label Lucky Luke. Show all posts
Showing posts with label Lucky Luke. Show all posts

Thursday, December 27, 2012

புல்வெளி முள்வேலி

bsp1கவ் கல்ச் எனும் நகரிற்கு அண்மித்த நிலத்தை அரசிடமிருந்து வாங்கும் வெரோன் பெல்ஃப்ஸ் அந்நிலத்தில் விவசாயம் செய்யும் விருப்பத்துடன் அங்கு தன் இல்லத்தை நிர்மாணிக்கிறான். ஆனால் அவன் விவசாய நிலமானது கவ் கல்ச்சின் கால்நடை கிங் என அழைக்கப்படும் காஸ் கேஸியின் மந்தைகள் பயணிக்கும் இடத்தில் அமைந்து விடுகிறது……

பிரெய்ரியின் பரந்த புல்நிலங்களிற்கு ஏகபோக உரித்தாளர்களாக கால்நடை வளர்ப்பாளர்கள் தம்மைக் கருதி வந்தார்கள். எல்லைகள் மறைந்த அப்புல்வெளியின் உபயோகத்தின் முன்னுரிமையின் ஜமீன்தார்களாக அவர்கள் தம்மை வரித்துக் கொண்டார்கள். கால்நடை வணிகம் வழி அவர்கள் அடைந்த செல்வம் அப்பகுதிகளில் அவர்களை அதிகாரமும், பலமும் கொண்டவர்களாக மாற்றியடித்தது. அவர்கள் வளர்த்த கால்நடைகளும் மிகவும் சுதந்திரமாக நடைபோட்டு அசைபோட்டு புல்வெளியில் காற்றாட காலாற நடந்து தம் இவ்வுலக வாழ்வில் இன்புற்றிருந்தன என்றால் அது மிகையல்ல. பிரெய்ரி புல்லின் செழுமை கால்நடைகளின் உடலில் தெரிந்தது. புல்வெளியின் மென்மை கால்நடைகள் போட்ட சாணத்தில் வீழ்ந்து பிரெய்ரியில் காதலுடன் கலந்தது. பிரெய்ரியினூடாக தம் வாழ்வின் இலட்சியப் பயணங்களை ஓயாது நிகழ்த்துபவைகளாக கால்நடைகள் இருந்தன. இந்த இலட்சியப் பயணங்களில் கால்நடைகளின் நலத்திற்கு கேடு வராத வண்ணம் காத்திடும் பொறுப்பை கவ்பாய்கள் என அழைக்கப்படும் முரட்டு ரவுடிகள் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறான தடையில்லா சுகவாழ்வு நீடித்திருக்க வாழ்க்கை அல்லது விதி அனுமதிப்பது இல்லை. முதல் இரவின் பின்பாக வெளிவரும் உண்மைகள் போல இன்பத்தின் பின்பாக அசெளகர்யங்களை மனிதர்கள் எதிர்கொள்ள பழகிட வேண்டி இருக்கிறது. கவ் கல்ச்சிற்கு விவசாயி வெரோன் பெல்ஃப்ஸ் குடியேறும் தருணத்தில் அவனிற்கும் சரி கால்நடை கிங் காஸ் கேஸிக்கும் சரி அசெளகர்யம் மார்கழிமாதக் கோலம் போல் அவர்கள் வாசலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.

கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே கதாசிரியர் கொஸ்ஸினியின் நகைச்சுவை கலந்த கதைசொல்லல் படிப்பவர்களை மேனிதொட்டும் உணரமுடியா சிறுகாற்றாக சிரிப்பூட்டக் கிளம்பி விடுகிறது. விவசாயிகள், கவ்பாய்களை விட காந்தர்வ ரூபம் கம்மியானவர்கள் என கொஸ்ஸினி எழுத அதற்கு மாரிஸ் வரையும் சித்திரங்களே போதும் கதையில் வாசகன் எதிர்பார்க்கும் நகைச்சுவையை அவனிடம் வாழையிலையில் பன்னீர் தெளித்து பரிமாறிட. கவ்பாய்கள் அருந்தும் காப்பி செய்முறை விளக்கம் மிக சிறப்பான அங்கதம். காப்பியை தயாரித்தபின்பாக அதனுள் ஒரு குதிரை லாடம் போடப்பட வேண்டும். லாடம் காப்பியில் மிதக்காவிடில் காப்பி பக்குவம் போதவில்லை என அர்த்தம். கவ்பாய்கள் அருந்தும் காப்பியின் தடிப்பு குறித்த இந்த அங்கத தகவலே இக்கதையை படிப்பவர்களிற்கு கிடைக்கும் பசும்புல்வண்ண சமிக்ஞையாக அமைந்து விடுகிறது.

bsp2வெரோன், கவ் கல்ச்சில் நிலத்தை வாங்கியது அவன் குற்றமல்ல. அவன் விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகள் அணிவகுப்பு நடாத்தியவாறே தம் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டது கால்நடைகளின் தப்புமல்ல. விவசாய நிலத்தின் மீதாக கால்நடைகளை ஓட்டிச்சென்றது கவ்பாய்களின் தவறுமல்ல; வெரோன் அதை எதிர்த்துக் கேள்விகளைக் கேட்கும்வரை. அவன் எதிர்த்துக் கேள்விகள் கேட்கும் நபர் கால்நடை கிங் காஸ் காஸியாக இருந்துவிடுவதுதான் ஒரே ஒரு குற்றம். கொஸினினியின் வரிகள் “அவன் மாமிசத்தை நினைத்தான், அவன் மாமிசத்தை புசித்தான், அவன் மாமிசமலையாக இருந்தான்” என காஸ் கேஸியைக் கதையில் வர்ணிக்கிறது. மதுவிடுதியில் காஸ் கேஸியை சந்திக்க வரும் வெரோன் நிற்கும் நிலையை காட்டும் கட்டமே இரு மனிதர்களும் குறித்த ஒரு முழுமையான பார்வையை இங்கு தந்துவிடுகிறது. காஸ் கேஸி போன்றவர்களிடமிருந்து பேசுவதன் மூலம் நியாயத்தை யாரும் பெற்றுவிட முடியாது அல்லவா. ஆகவே வன்முறை மதுவிடுதியில் துளி கொள்ளும்போது நாயகன் லக்கி லூக் கதையில் பிரசன்னமாகிறார்.

bsp3சாதாரண விவசாயியான வெரோனிற்கும், அதிகாரமும், செல்வமும் படைத்த கால்நடைவளர்ப்பாளனான காஸ் கேஸிக்கும் இடையில் உருவாகும் சிக்கல் கவ் கல்ச்சின் பிரச்சினையாக உருவெடுக்கிறது. விவசாயிகளா இல்லை கால்நடைவளர்ப்பளார்களா எனும் கேள்வியுடன் இரு பகுதியினர்கிடையேயான யுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. இந்த யுத்தத்தின் மிகமுக்கிய காரணியாக அமைவது முட்கம்பி வேலியாகும். எந்த தடைகளும் அற்று வானத்துப் புள்ளினங்கள் போல வாழ்ந்திருந்த தம் கால்நடைகள் முள்வேலியால் பாதுகாக்கப்படும் விவசாயநிலங்களை விலத்தி செல்லுவது என்பது காஸ் கேஸி போன்ற கால்நடைவளர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியா ஒரு செயலாகும். முள்வேலி என்பது கவ்பாய்களிற்கு மிகப்பெரிய அவமானம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவ் கல்ச்சிலிருந்து விவசாயிகளை விரட்டி அடிக்க சகல வழிகளையும் கையாள்வது என காஸ் கேஸி முடிவிற்கு வருகிறான். காஸ் கேஸியின் அராஜக செயல்களிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அவர்களிற்கு உதவ முன்வருகிறார் லக்கி லூக். கால்நடை வளர்ப்பாளர்கள், அவர்களின் அடியாட்களான கவ்பாய்கள், நிகழ்த்திடும் சதிகளையும், சூழ்ச்சிகளையும் விவசாயிகள் எவ்வாறாக சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை சிறப்பான நகைச்சுவையுடன் கதை விறுவிறுப்பாக விபரித்து செல்கிறது.

bsp4கால்நடை வளர்ப்பாளர்கள் எந்நேரமும் விடுதியில் உட்கார்ந்து சுருட்டைப் புகைத்தவாறே விடுதிச் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருக்க விவசாயி தன் மனைவியின் பக்குவத்தில் சுவையான உணவுகளை சுவைத்து மகிழும், இல்லம் இனிய இல்லம் எனும் தத்துவத்தை மிக அழகாக கொஸ்ஸினியும், மொரிஸும் காட்டியிருக்கிறார்கள். இல்லத்திற்கு அழகு சேர்ப்பவள் இல்லத்தரசி எனும் கருத்தை வெரொனின் மனைவியான ஆனபெல் காட்சிப்படுத்திக் கொண்டே இருப்பார். தனது இல்லம் தரைமட்டமாகிய பின் கண்களில் கண்ணீருடன் ஜன்னல் திரைச்சீலைக்கு லக்கி லூக் வாங்கிவர வேண்டிய துணியின் வண்ணத்தை அவர் சொல்லும் விதத்தில் உங்கள் மனைவிமார் உங்கள் கண்களின் பின்னே தோன்றி மறைவார்கள். கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகை செய்து கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை இது. சகல பிரதான பாத்திரங்களிற்கும் சமவுரிமை பாத்திரப்பிரசன்னத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது எனலாம். காஸ் கேஸியின் அடியாட்கள் டால்டன்கள் போல உருவாக்கப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன் ஆனால் இது என் பார்வை மட்டுமே. இந்த அடியாட்களில் ஒருவரின் பெயர் டெக்ஸ். கண்டிப்பாக இது நவஹோ சிங்கம் டெக்ஸை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாக இராது என நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் கொஸ்ஸினி வாழும் பேராத்துமா உலகை நோக்கி என் பாராட்டை திசைப்படுத்திவிடுகிறேன். லக்கி லூக் கதைகளில் வெண்தாடி வைத்த ஒரு கிழம் வந்து செமையான லொள்ளுப் பண்ணிக் கொண்டிருக்கும். வாசகர்களை இக்கதையில் அவ்வகையான ஒரு கிழம் தன் லொள்ளுகளால் குஷிப்படுத்த தவறவில்லை. லக்கிலூக்கிற்கும் ஜொலி ஜம்பரிற்கும் இடையே வரும் சம்பாஷனைகள் இயல்பாகவே சிரிப்பை வரவழைப்பவையாக இருக்கின்றன. கதையினூடே சைவ, அசைவ உணவு வேறுபாடு பற்றிய மெலிதான பார்வையும் உண்டு என்பது என் கருத்து.

உண்மையில் முள்வேலியின் வருகை கவ்பாய்கள் எனும் இனத்தின் அழிவின் காரணியாக அமைந்தது என நான் படித்திருக்கிறேன். குதிரைகளில் ஏறி கவ்பாய்கள் சுற்றி சுற்றி வந்து செய்த காரியத்தை, மரக்குற்றிளை சுற்றி சுற்றி தழுவி நீண்ட முட்கம்பி வேலி செய்து முடித்து விடுகிறது. முள்வேலிகளிற்குள் இட்டு வரப்பட்ட கால்நடைப் பரமாரிப்பிற்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை, வேலியற்ற கால்நடைகளின் பராமரிப்பிற்கான ஆட்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருந்தது. கதையில் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தமது உரிமைகளிற்காக போராட கவ்பாய்கள் தமது வாழ்க்கை குறித்த அக்கறை அற்றவர்களாக இருப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் கொஸ்ஸினியேகூட அது குறித்து சிந்திக்காது விட்டிருக்கலாம். போயும் போயும் இது ஒரு நகைச்சுவைக் கதைதானே இதில் போய் என்ன தீவிரமான சங்கதி என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கதையின் ஒரு தருணத்தில் முள்வேலிகளால் தம் நிலத்தை பாதுகாக்கும் விவசாயிகள், “ஒரு வழியாக விடுதலை” என்பார்கள். கால்நடைகள் மற்றும் கவ்பாய்கள் தொல்லையிலிருந்து. அதே முள்வேலி பின்பு சரித்திரத்தில் மனிதர்களை அடைத்து நின்று அவர்களை விலங்குகளை விட மோசமான இனமாக மனிதர்களே நடாத்தியதையும் வேடிக்கை பார்த்து நின்றது என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. மிக நீண்ட காலத்தின் பின்பாக படித்தாலும் ஏமாற்றாத நகைச்சுவை கொண்ட கதையாக அமைந்து விடுகிறது Des Barbelés sur la Prairie.

Monday, December 6, 2010

கலைத்தேவதைக்கு ஒரு கண்ணி


பிரான்சு தேசத்தின் ஒப்பற்ற நாடக நடிகையான ஸாரா பெர்ன்[ஹா]ஆர்ட், ஐரோப்பிய கலாரசிகர்களின் உள்ளக் கோவில்களில் குடியிருந்த ஒரு கலைத்தேவதையாவார். ஸாராவின் கலைச்சேவையின் எல்லைகளை விரிவாக்க விரும்பும் கலை ஏஜெண்டான ஜாரெட், அமெரிக்காவில் ஸாராவின் கலைச்சுற்றுப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறான். அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்கும் கலைப்புயலின் சூறாவளிப் பயணத்தில், அவளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை நியமிக்கிறார் ஜனாதிபதி ரதர்ஃபோர்ட் ஹேய்ஸ் [ ஆட்சிக்காலம்.. 1877-1881]….

sarah_bernhardt இப்பதிவின் முதல் வரிகளில் கூறியிருப்பது எவ்வளவு நிஜமானதோ அவ்வளவு நிஜமானது ஸாரா பெர்ன்ஹார்ட் எனும் பாத்திரமும். அவரது நடிப்புத் திறமையில் தம் மனதை பறி கொடுத்த இதயங்கள் ஏராளம் ஏராளம். 1844ல் பாரிசில் பிறந்தவர் ஸாரா. நடிப்புத் துறையில் பிரபலமாகும் முன்பாக தன் அழகையும் திறமைகளையும் சிருங்கார சேவைக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் அவர்.

ஸாராவிற்கு கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், இலக்கியவாதிகள், பிரபலங்கள் என எக்கச்சக்கமான காதல் உறவுகள் இருந்திருக்கிறது. விக்டர் ஹ்யூகோவிற்கும் ஸாராவிற்குமிடையில் காதல் இலக்கியம் ஓடியதாக ஒரு கிசுகிசு உண்டு. தன் காதல் உறவுகளில் அவர் ஆண், பெண் என்ற பேதம் பார்த்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிரேதப் பெட்டி ஒன்றினுள் உறங்குகிறேன் என்று கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஸாரா, அதனை போட்டோக்களாகவும், போஸ்டு கார்டுகளாகவும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியவர். அதேபோன்ற தீவிரம் அவரது கலைச்சேவையிலும் இருந்தது. நோயொன்றின் பின்னர் ஸாராவின் கால் ஒன்றை அகற்றியாக வேண்டிய கட்டாயம் உருவானது. மேடை நாடக கலைஞர்களிற்கு sb1 வதனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களின் கால்களும் முக்கியமானவையே. முடவன் வேடம் போடுவதானலும் கால்கள் வேண்டும் என்பதை நாம் இங்கு மறந்து விடலாகாது. சிகிச்சையின் பின்பாக ஒரு கால் அகற்றப்பட்டாலும் நாடக மேடைகளில் இருக்கைகளில் அமர்ந்த நிலையில் அம்மணி ஸாரா நடிப்பில் வெளுத்து வாங்கினார். அப்போது அவரின் வயது 71 ஆகும்.

ஒரு சமயம் அமெரிக்க கலைச் சுற்றுப் பயணத்தின்போது, அரங்கில் இருந்த கலாரசிகர்களின் கலையுணர்வுகள் சுனாமி அளவிற்கு சென்றுவிட அரங்கில் கலையுணர்வுகளின் இரைச்சல் அதிகமாகிவிட்டிருக்கிறது. இது நாடகத்தை தொடர்ந்து நடாத்த இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்த ஸாரா, இப்போது நீங்கள் அமைதியாகாவிடில், இரண்டாம் அங்கத்தில் நான் இறந்துவிடுவேன் என கலாரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஸாராவின் மேல் மயங்கியிருந்த அந்த கலைச்சுனாமி அமைதியானது. இது ஸாரா, தன் ரசிகர்கள் மீது கொண்டிருந்த பலமான கவர்ச்சிப்பிடிக்கு ஒரு சிறிய உதாரணமாகும்.

Sarah Bernhardt எனும் தலைப்புக் கொண்ட லக்கி லூக் சாகசமானது 1982ல் முதலில் வெளியாகியது. இது லக்கி லூக்கின் ஐம்பதாவது ஆல்பமாகும். சித்திரங்களை மொரிஸ் வரைய, கதை இலாகவை Xavier Fauche மற்றும் Jean Léturgie ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஸாரா பென்ஹார்ட்டின் அமெரிக்க விஜயமானது, கலாரசிகர்களின் அதீத வரவேற்பையும், அறக்காவலர்களின் அபாரமான எதிர்ப்பையும் கிளப்புகிறது. அறக்காவலர்களின் சீற்றம், ஏதேனும் விபரீதமான செயல்களாக உருவெடுத்துவிடலாம் எனும் அச்சத்தினாலேயே அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் லக்கிலூக்கை ஸாராவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கிறார்.

அமெரிக்க ஜானாதிபதி அஞ்சியது போலவே ஸாராவின் கலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்து சேர்கின்றன. ஸாரா பயணம் செய்யும் ரயில் பெட்டி கழற்றி விடப்படல், பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மாயமாதல், அவர் பயணம் செய்யும் ரயில் வண்டி குண்டு வைத்து தகர்க்கப்படல், ஸாராவை ஆற்றில் மூழ்கடிக்கும் முயற்சி, ஸாரா பயணிக்கும் படகில் தீ வைத்தல், ஸாரா குழுவினரை செவ்விந்தியர்களிடம் மாட்டி விடுதல்.. இவ்வாறான பல தடைகளை ஸாரா தன் கலைப்பயணத்தில் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவங்களில் எல்லாம் நகைச்சுவையின் அளவு ஸாரா sb2 பெர்ன்ஹார்டின் நடிப்புத் திறமையின் அளவிற்கு இல்லை என்பது வேதனையானது.

விளம்பரப் பிரியனும், செவ்விந்தியர்களிடம் கூட ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதில் விற்பனனுமான ஸாராவின் ஏஜெண்டான ஜாரெட், பழக்கேக்கு ஒன்றை பக்குவமாக உருவாக்கத் தெரியாமல் திணறும் சமையல்காரன் ச்சுய்னார், ஸாராவின் மீது மையல் கொண்ட நீராவிக் கப்பலின் காப்டன், தொழிலதிபர் ஸ்மித், குத்து டான்ஸ் புகழ் மேடை மேனகா [Pamela Podium], செவ்விந்திய பெருந்தலைவர் போன்ற பல பாத்திரப் படைப்புக்கள் வழி கதாசிரியர்கள் வாசகர்களை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி அதிக வெற்றி எதனையும் தந்து விடவில்லை. கதையில் சற்று சிரிப்பை வரவழைப்பது ஸாராவிற்கு உதவிகள் செய்வதாக கூறி அவள் பெயரை தன் நிறுவனம் தயாரிக்கும் பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்கு தந்திரமாக பயன்படுத்திக் கொள்ளும் ஸ்மித்தின் செயல்களே.

வழமை போலவே லக்கி லூக், ஸாராவின் கலைப்பயணத்திற்கு தடைகளைப் போடும் சூத்திரதாரியை அந்த தடைகளை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியில் கண்டுபிடிக்கிறார். கதையில் நகைச்சுவை இல்லாது போனாலும் கூட மொரிஸின் சித்திரங்கள் தனியாக கதை கூறி வாசகர்களை சிரிக்க வைக்கும். இந்த ஆல்பத்தில் அது காணாமல் போயிருக்கிறது எனலாம். லக்கிலூக் கதைகளில் சுமாரான கதை ஒன்றாகவே இந்த ஆல்பத்தை என்னால் கருத முடிகிறது. கலைத்தேவதையின் அமெரிக்க சுற்றுப்பயணம் லக்கிலூக்கின் விசிறிகளிற்கு சோளப்பொரி மட்டுமே! [*]

Saturday, November 28, 2009

டெய்சி டவுன் மாட்டுக்காரன்


வறண்டு கருகிய காற்றும், கொளுத்தும் சூரியனும் முத்தமிட்டுக் காயவைக்கும் நிலமான அமெரிக்காவின் மேற்கில் தனது விடுமுறையை, தன் குதிரையும், உற்ற துணைவனுமான ஜொலி ஜம்பருடன் ஜாலியாக கழித்துக் கொண்டிருக்கிறான் லக்கி லூக்(Jean Dujardin).

ஹீரோக்களின் விடுமுறைகளில் வழமையாக நிகழ்வதுபோல், அமெரிக்க ஜனாதிபதி அனுப்பி வைக்கும் இரு வீரர்கள் லக்கியின் விடுமுறைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பகுதியில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியை விரைந்து சென்று சந்திக்கிறான் லக்கி லூக்.

lucky-luke-2009-17240-594467851 தன்னையே மீண்டும் அமெரிக்க மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. அவரும் அவரது சகாக்களும் புகைக்கும் சுருட்டுக்களின் புகை வெண்மேகம் போல் அவர்கள் மேல் நழுவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மக்களின் அபிமானத்தையும், வோட்டுக்களையும் வெல்லும் நோக்கில் அமெரிக்காவின் கிழக்கையும், மேற்கையும் இணைக்கப்போகும் ரயில்பாதையை தேர்தல் நடைபெறுவதற்கு முன் திறந்து வைக்க விருப்பம் கொண்டவராக இருக்கிறார் ஜனாதிபதி.

நியூயார்க்கையும், சான்பிரான்சிஸ்கோவையும் இணைக்கும் ரயில்பாதையை டெய்சி டவுன் எனும் (Daisy Town)சிறிய நகரில் தங்க ஆணி அடித்து இணைத்து வைப்பதில் ஆவல் கொள்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் மிகப் பெரிய பிரச்சனை ஒன்று அங்கு அவரிற்கு முன்பாக ஆணி அடித்து குத்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது.

lucky-luke-2009-17240-1245766717 டெய்சி டவுன் எனப்படும் புழுதிப் பழுப்பேறிய அந்த சிறிய நகரம், ரவுடிகளினதும், சட்டவிரோதிகளினதும் பிடியில் சிக்கித்தவிக்கிறது. பதினாறு ஷெரீஃப்களின் சமாதிகள் அதற்கு சாட்சியம் பகர்கின்றன. நகரிலிருக்கும் ஒரே ஒர் பிரேதப்பெட்டிக் கடையானது அதன் கதவுகளை வாடிக்கையாளர்களிற்காக எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறது. பிரேதப் பரிசாரகர் ஓயாத வேலையால் ஓர் நடைப்பிணம்போல் உலாவுகிறார். குதிரைகளை உள்ளே வைத்து அடக்கம் செய்வதற்காக குதிரை வடிவில் குதிரைகளிற்கான பிரேதப் பெட்டி மாடல்கள் விற்பனையிலிருக்கின்றன. நகரில் குடியிருக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை நற்பிரஜைகளின் எண்ணிக்கையை பெருமளவு தாண்டி நிற்கிறது. [ ஸ்கோர்- ரவுடிகள்-156/ நற்பிரஜைகள்-28]

இவ்வகையான ரவுடிப்பூங்காவான டெய்சி டவுனில் ரவுடிகளை ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டும்படி லக்கி லூக்கைக் கேட்டுக் கொள்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ஜானாதிபதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் லக்கி 48 மணி நேரத்திற்குள் டெய்சி டவுன் சகஜ நிலைக்கு திரும்பும் என்று கூறிவிட்டுக் கிளம்புகிறான்.

lucky-luke-2009-17240-1643741448 எங்கள் அபிமான ஹீரோ லக்கி, டெய்சி டவுனை நோக்கிச் செல்லும் வேளையில் நாங்கள் ஒர் சிறிய ப்ளாஷ்பேக்கை பார்க்க செல்வோம். டெய்சி டவுன் லக்கி பிறந்த மண். தன் சிறு வயதை பெற்றோர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் மகிழ்ச்சியாக லக்கி கழித்த நகரம் அது.

திரிஷ்ஷர் எனும் படுபாதக கோஷ்டியால் லக்கியின் பெற்றோர் கொன்று குவிக்கப்பட, அக்கோஷ்டியிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவிடுகிறான் சிறுவன் ஜான் லூக். அந்தக் கொடிய கோஷ்டியின் கைகளில் அகப்பட்ட எவருமே உயிர் தப்பியதாக வரலாறு இல்லை. ஜான் லூக் அவர்களிடமிருந்து உயிர்தப்பி வந்ததால் அவனிற்கு லக்கி எனும் பட்டப் பெயர் சேர்ந்து கொள்ள லக்கி லூக் ஆகிறான் அவன்.

தன் பெற்றோரின் மரணத்தின் பின் டெய்சி டவுனை விட்டு நீங்கியிருந்த லக்கி, மீண்டும் தன் பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான். நகரின் எல்லையில் இது லக்கி லூக் பிறந்த ஊர் என எழுதி இருக்கும் அறிவிப்பு பலகையின் கீழ் ஒர் எலும்புக்கூட்டிற்கு ஆடை அணிவித்து அமர்த்தியிருக்கிறார்கள் ரவுடிகள்.

டெய்சி டவுனில் தான் காலடி வைத்த சில நிமிடங்களிலேயே தன் நிழலை விட வேகமாக சுடக்கூடிய ஹீரோவான லக்கி, நகரில் ரவுடிகள் மழையைப் பொழிய வைக்கிறார். சிற்றீசல்கள் போல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் கொடிய ரவுடிகள். புதிய ஷெரீஃபான லக்கியின் வரவால் நகரில் இனி என்ன நடக்குமோ என அச்சம் கொள்ளும் அப்பாவி நகர மக்கள், தங்கள் உடல்களை பீப்பாக்களிற்குள் மறைத்துக் கொண்டு நடமாடுகிறார்கள்.[வெளியில் நடப்பதை வேடிக்கை பார்க்கவும், வம்பு பேசவும் பீப்பாயில் ஒர் ஓட்டை போடப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது]

lucky-luke-2009-17240-200181119 டெய்சி டவுனில் தனிக்காட்டு ரவுடியாக ஆட்சி செய்து வரும் Pat Poker ( Daniel Prévost), தன் ஆட்சியைக் கவிழ்க்க வந்திருக்கும் லக்கியை கடுமையாக எதிர்க்கிறான். அவன் எதிர்ப்புக்களை தூசி போல் தட்டும் லக்கி, பட் போக்கரை உடனடியாக நகரை விட்டு நீங்கச் சொல்லி எச்சரிக்கிறான். வேறு வழி தெரியாத பட் போக்கர், லக்கியை தீர்த்துக் கட்டுவதற்காக மேற்கின் புகழ் பெற்ற ரவுடிகளில் ஒருவனான Billy The Kid (Michael youn)ஐ டெய்சி டவுனிற்கு வரவழைக்கிறான்.

ஏழு வயதில் தன் பெற்றோர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த ஒர் அற்ப செயலிற்காக தன்னை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்து தனக்கு கிடைத்திருக்க வேண்டிய இனிமையான குழந்தைப் பருவத்தை தன்னிடமிருந்து பறித்த லக்கி லூக்கை தீர்த்துக் கட்ட பணம் வாங்காமலே தயாராக இருக்கிறான் பில்லி த கிட்.

ஆனால் பில்லி, லக்கி லூக்கை தீர்த்துக் கட்ட எடுக்கும் அதிரடி முயற்சியும் படு தோல்வியில் முடிகிறது. ரவுடிகளின் தலைமைச் செயலகமாக செயற்படும் ஹாட் டாக் சலூனை (HOT DOG SALOON) டெய்சி டவுனின் சாதாரண “குடி” மக்களின் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க விரும்பி அங்கு செல்லும் லக்கி லூக், சலூனில் கவர்சிப் பாடகியாக சேவை செய்யும் Belleன்(Alexandra Lamy) கவர்ச்சியில் மயங்க ஆரம்பிக்கிறான்.

சலூனில் சூடான ஓர் பாடலைப் பாடியபடியே லக்கியின் மீது அதிகமாக உரசுகிறாள் பெல். இதனால் கோபம் கொள்ளும் பட் போக்கர் அவளைக் கன்னத்தில் அறைகிறான். போக்கரை தடுத்து நிறுத்தும் லக்கி லூக் தன் பெற்றோர்களின் கொலைகளிற்கு காரணம் பட் போக்கரே என்பதனை அறிந்து கொள்கிறான்.

lucky-luke-2009-17240-587102663 லக்கியின் மனம் வஞ்சம் வேண்டித் துடிக்கிறது. பட் போகரை உடனடியாக தன்னுடன் ஒண்டிக்கு ஒண்டியாக துப்பாக்கி மோதலிற்கு அழைக்கிறான் அவன். இடம்பெறும் ஒண்டிக்கு ஒண்டியில் பட் போக்கரை சுட்டுக் கொன்று விடுகிறான் லக்கி லூக்.

தன் பெற்றோர்களின் மரணத்தின்பின் அவர்கள் சமாதிகள் முன்பாக தன் வாழ்நாளில் எந்த உயிரையுமே பறிக்க மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்ட லூக்கின் மனம், பட் போக்கரை கொன்ற காரணத்தால் கலங்கித்தவிக்கிறது. பிரமை பிடித்தவன் போல் அலைகிறான் லக்கி. தன் வாழ்வை முடித்துக் கொள்ளவும் முயல்கிறான்.

செல்ல வேறு இலக்கின்றி தான் வாழ்ந்த வீட்டிற்கு திரும்புகிறான் லக்கி. தன் பெற்றோர்களின் சமாதிகளிற்கு முன்பாக நின்று கலங்கும் அவன் தன் மனதில் கேள்விகளை எழுப்புகிறான். இது நாள் வரை தான் செய்து வந்த தீரச்செயல்கள் யாவும் தன் ஆழ்மனதில் ஒளிந்து கிடந்த வஞ்சத்தின் வேடமே எனும் தீர்மானத்திற்கு வரும் அவன், இனி துப்பாக்கியை தன் கைகளில் ஏந்தப்போவதில்லை எனும் முடிவிற்கு வருகிறான். தன் துப்பாக்கியை பெற்றோர்களின் சமாதிமேல் வைத்து விட்டு நகரம் நோக்கி திரும்புகிறான் அவன்.

lucky-luke-2009-17240-1340731662 ஹாட் டாக் சலூனிற்குள் நுழையும் லக்கி, அங்கு கூடியிருப்பவர்களிடம் நகரின் ஷெரீஃப் பதவியை யாராவது ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறான். லக்கியிடம் துப்பாக்கி இல்லை என்பதை அறிந்து கொள்ளும் ரவுடிகள் அவனை இஷ்டத்திற்கு அடிக்க ஆரம்பிக்கிறார்கள். மயங்கி விழும் லக்கியை பில்லி த கிட்டின் தலைமையில் நகரின் மத்தியில் தூக்கில் போடுகிறார்கள் அவர்கள்.

தூக்குக் கயிறு கழுத்தில் இறுகி பரலோகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துவிட்ட லக்கியை அவ்வேளையில் நகரிற்குள் நுழையும் Calamity Janeம்(Sylvie Testud), Jesse Jamesம்(Melvil Poupaud) காப்பாற்றுகிறார்கள். லக்கி ஒரு சரித்திரம், அவன் என் கையால்தான் இறக்க வேண்டும், வரலாற்றில் என் பெயர் இடம்பெற வேண்டும் என முழங்குகிறான் ஜெஸி ஜேம்ஸ். இதனைக் கேட்கும் பில்லி தானும் வரலாற்றில் இடம்பிடிக்க விருப்பம் தெரிவிக்கிறான். கேடிகள் இருவரும் டெய்சி டவுனின் ஷெரீஃப் பதவியை லக்கிக்கு நல்ல புத்தி திரும்பும்வரை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானிக்கிறார்கள்.

அரை மயக்கத்தில் கிடக்கும் லக்கியை அவன் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கலாமிட்டி ஜேன். லக்கியின் வீட்டிற்கு அவனைத்தேடி வரும் பெல், அவனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஜேனிடமிருந்து அபகரித்துக் கொள்ள, லக்கியின் வீட்டிற்கு காவலாக இருக்க ஆரம்பிக்கிறாள் ஜேன்.

lucky-luke-2009-17240-1037213346 படிப்படியாக உடல் நலம் தேறும் லக்கி லூக், ஹீரோ வாழ்வை உதறிவிட்டு சாதாரண மனிதன் ஒருவன் போல் வாழ ஆரம்பிக்கிறான். லக்கி, குளிக்கிறான்!!!! வயலை உழுகிறான், ஜேனுடன் முஷ்டி சண்டை போடுகிறான், பெல்லுடன் காதலில் வீழ்கிறான், கிதார் இசைத்து காதல் பாட்டு பாடுகிறான். பெல்லை கட்டியணைத்துக் கொண்டு ம்ம்ம்ம் தூங்குகிறான். பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட அவன் மனம் ஆவல் கொள்கிறது.

லக்கியின் மனதில் தனக்கு இடமில்லை என்பதை அறியும் கலாமிட்டி ஜேன் கோபத்துடன் அவனை விட்டு பிரிந்து செல்கிறாள். தன் மாமா தனக்கு வழங்கிய டிக்கட்டுகளுடன் ஜரோப்பிய உல்லாச பயணத்திற்கு பெல்லுடன் கிளம்புகிறான் லக்கி. செல்லும் வழியில், ஒர் மழை இரவில் அவன் அறிந்து கொள்ளும் ஓர் உண்மை அவனை மீண்டும் துப்பாக்கியை தன் கையில் ஏந்த வைக்கிறது…..

சர்வதேச காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளம் கவர் காமெடிக் கவ்பாய் லக்கி லூக்கின் சாகசங்களை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியிருக்கும் LUCKY LUKE எனும் பிரெஞ்சுத்திரைப்படமானது அசர வைக்கும் ஸ்டைலுடனும், ரசனை மிகுந்த நுண்ணிய நகைச்சுவை நிறைந்த சம்பவங்களுடனும் கலக்கலான வெஸ்டர்ன் சினிமா பாணியில் திரைப்படுத்தப்பட்டிருகிறது.

வெள்ளித்திரை வரலாற்றில் இவ்வளவு அழகான, ஸ்டைலான லக்கி லூக்கை ரசிகர்கள் கண்டிருக்க முடியாது. Jean Dujardinக்கு அளவெடுத்து தைத்தாற்போல் கனகச்சிதமாக பொருந்திப்போகிறது லக்கிலூக் பாத்திரம். அவரின் தொப்பியிலிருந்து காலணிகள் வரை மிக அக்கறையுடன் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். தன் திறமையான நடிப்பால் இதுவரை நாம் கண்டிராத ஒரு லக்கி லூக்கை ரசிகர்களிற்கு வழங்குகிறார் நடிகர் ஜான் டுஜார்டான்.

lucky-luke-2009-17240-1323946251 லக்கி லூக்கிற்கு எதிராக மோதும் வில்லன் பாத்திரங்கள் காமிக்ஸ் புத்தகங்களில் லக்கியை பெருமளவு ஓரம் கட்டிவிடும் பாணியில் படைக்கப்பட்டிருப்பார்கள். திரைப்படத்தில் லக்கிக்கு போட்டியாக சீட்டுக்கட்டுகளில் ஜிகிடிஜிக் வித்தை காட்டும் பட் போக்கர், நிலத்தில் தவழும் தன் நீண்ட மேல் கோட்டுடன் ஷேக்‌ஷ்பியரின் நாடக வசனங்களை மேடை நடிகன் போல் அள்ளி உதிர்க்கும் ஜெஸி ஜேம்ஸ், வாயைத்திறந்தால் நல்ல வார்த்தைகளே வெளியே வராத பெண்சிங்கம் கலாமிட்டி ஜேன், தன் சிறுபிள்ளைத்தனமான கேடித்தனங்களால் சிரிக்க வைக்கும் பில்லி த கிட் எனும் அட்டகாசமான கூட்டணி. இவர்களில் பில்லி த கிட் தன் குறும்புகளால் ரசிகர்களிடம் நெருங்கிவிடுகிறார்.

lucky-luke-2009-17240-377408915 ஜொலி ஜம்பர் இல்லாத லக்கியா! ஜொலி ஜம்பர், முதல் முதலாக லக்கி லூக்குடன் பேச ஆரம்பிக்கும் அந்தக் காட்சி மனதை நெகிழ வைக்கும். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இத்திரைப்படத்தின் சிறந்த காட்சியும் அதுவே. ஜொலியை படம் முழுவதும் வளவளவென்று பேசவைக்காது அளவுடன் அழகாக அட்டகாசமான கிண்டல்களுடன் பேசவைத்திருக்கிறார்கள். காமிக்ஸ் கதைகளில் ஜொலி செய்யும் நம்ப முடியாத ஸ்டண்ட்கள் எதுவும் படத்தில் கிடையாது என்பது ஓர் நிம்மதி.

இவ்வளவு நல்ல தருணங்கள் இருந்தும் லக்கி லூக் சாதாரண வாழ்வில் குதிக்கும் போது, திரைப்படம் ரசிகர்கள் மேல் கொண்ட பிடி தளர ஆரம்பிக்கிறது. எதிர்பாராத திருப்பத்துடன் ஆரம்பிக்கும் படத்தின் இறுதிப்பகுதிகூட அதற்குரிய போதிய உப்பு, காரம் மற்றும் மந்திரப் பற்றாக்குறையால் ரசிகனை தன் பிடிக்குள் முழுமையாகப் பற்றிக் கொள்ள தவறி விடுகிறது.

lucky-luke-2009-17240-1638186746 படத்தின் இயக்குனர் James Huth, காமிக்ஸ் ஆல்பங்களில் வாசகர்கள் கண்டு மகிழ்ந்த லக்கி லூக்கை தவிர்த்து விட்டு, தனக்கே உரிய ஓர் புதிய லக்கியை பார்வையாளர்களிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். புகழ் பெற்ற கவ்பாயான லக்கியை, சாதாரண வாழ்வில் தள்ளி விட்டு அவன் உள்மன அவாக்களினை ஆழமாக அலசிப் பார்த்திருக்கிறார். லக்கி லூக் காமிக்ஸ் ஆல்பங்களில் நினைத்தே பார்க்க முடியாத செயல்களை திரையில் தோன்றும் லக்கியை செய்ய வைத்திருக்கிறார்.

அவரது துணிச்சலான இந்த முயற்சி லக்கியின் தீவிர ரசிகர்களை திருப்திப்படுத்தாது ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும். கண்ணிற்கு விருந்தான அழகான காட்சிகள், காமெடி, இசை, அலங்காரங்கள், ஆக்‌ஷன் என முற்றாக ஓரங்கட்டி விட முடியாத கலவையுடன் இருக்கிறது திரைப்படம். எதிலும் ஒர் புதுமையையும், மாற்றத்தையும் வேண்டி விரும்பும் உள்ளங்களை இத்திரைப்படம் அதிகம் ஏமாற்றாது சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும். இந்த டெய்சி டவுன் மாட்டுக்காரன், காமிக்ஸ் லக்கி லூக் போல் இல்லாவிடிலும் கூட அவன் ஸ்டைலே தனிதான். (***)

பிரெஞ்சு ட்ரெயிலர்