Showing posts with label நியாயப் படை. Show all posts
Showing posts with label நியாயப் படை. Show all posts

Sunday, April 26, 2009

நியாயப் படை- 2

அத்தியாயம்- 2 : லுங்கி லுக்

எழுதுபவர்- எழுத்து எவரெஸ்ட், ஜோஸ் சான்.

நியாயப்படை கதாநாயகர்களை பற்றி ஒருவர் ஒருவராக பார்ப்போம்

கேப்டன் கே என்கிற கபாலி .


இவரே முக்கிய கதாநாயகன். கையில் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. வாரக்கடைசிகளில் மற்றவர்கள் சரக்கு வாங்க இவரைத்தான் எதிர்பார்ப்பதால் முக்கிய முடிவுகளை வகிப்பதில் முக்கியத்துவம் பெற்றவர். முதலில் கேப்டன் கே ( பதிப்பாளருக்கு குறிப்பு : பெயரை போல்ட்டாக போடவும். கதாநாயகர்கள் சமயத்தில் போல்டாக இல்லையென்றாலும் பெயர் போல்டாக இருக்கட்டுமே). முதலில் அவர் எவ்வாறு இருப்பார் என பார்ப்போம். சந்தன கலரில் ஒரு சட்டையும், பச்சைக் கலர் லுங்கியும் கட்டியிருப்பார். ஆனால் உள்ளே போட்டிருக்கும் பனியனில்தான் விஷயமே இருக்குது. அந்த பனியனில் ‘கேப்டன் கே ’ என எழுதியிருக்கும். அதற்கு கீழே ‘தரமான சலவைக்கு பொண்வண்டு சோப்’ என எழுதியிருக்கும்.

உச்சா பாபு

இவருக்கு ஏன் இந்த பெயர் என்பதை தனியாக ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதாக சங்குண்ணி சொல்கிறார். வெள்ளைச் சட்டையும், கத்தரிப்பூ கலர் லுங்கியுமே இவர் அடையாளம். உள் பனியனில் ஆட்டின் சிம்பல் இருக்கும். கீழே ‘சுகமான சவாரிக்கு எம் ஆர் எப் டயர்’ என்ற வார்த்தை இருக்கும்.

சில்பா குமார்

முதல் பெயர் வந்த காரணம் மிகவும் அந்தரங்கமானது. இவரின் அடையாளம் மஞ்சள் சட்டை மற்றும் ஆரஞ்ச் கலர் லுங்கி. உள் பனியனில் ‘சமையலுக்கு தேவை எல் ஜி கூட்டு பெருங்காயம்’ என எழுதியிருக்கும்.

ரகளை ரகோத்தமன்

இவருக்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்பது இவருக்கே தெரியாது. நண்பர்களால் செல்லமாக கோத்து என அழைக்கப்படுபவர். இவரின் அடையாளம் நீல சட்டை மற்றும் சிகப்பு லுங்கி. உள் பனியனில் ‘சுகமானது உடும்பு மார்க் உள்ளாடைகள்’ என எழுதியிருக்கும்.

ஆப் ஆரோக்கியம்

இவரின் அடையாளம் கருப்பு சட்டை மற்றும் வயலட் கலரில் லுங்கி. உள் பனியனில் ‘நல்ல விளைச்சலுக்கு பாக்டம்பாஸ் 18 18 18’ என எழுதியிருக்கும்.

முக்கிய வில்லன் காஸ்மோஸ் கனகராஜ்

நிறைய உப வில்லன்கள் எல்லாம் வந்தாலும் மெயின் வில்லன் இவர்தான். இவர் வெறும் லுங்கி மட்டுந்தான். சட்டை எல்லாம் போட்டு அவரு தொப்பையை மறைக்க மாட்டார். இவர் பகலில் மளிகைக் கடை வைத்திருப்பார். இரவில் பக்கத்தில் ஒரு புரோட்டாக் கடை நடத்துவார். புரோட்டா கடை வைச்சுருக்கவரு எப்படின்னு சிலர் கேள்வி எழுப்புவார்கள். அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது, புரோட்டா கடை ஒனரு புவியை நசுக்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?

இந்த கதாநாயகர்கள் எல்லோருமே பொதுவாக பட்டாபட்டி அன்டர் வேர் அணிந்திருப்பார்கள். ஆபத்து வரும்போது சட்டையையும், லுங்கியையும் வீசிவிட்டு பனியன், பட்டாபட்டியுடன் பாய்ந்து விடுவார்கள்.




ஜோ : சங்குண்ணி சார், என்ன பெயர்கள் இப்படி இருக்கின்றன?

சங்குண்ணி : பேரு ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. கதாநாயகனின் பேர் இப்படிதான் இருக்க வேண்டுமா? செய்யற வேலையை வைச்சுதானே பேர் வரும். கதவுன்னு ஒராள் பேரு வைச்சுக்கிட்டாரு. பள்ளிக்கொடத்துதல அவர போட்டு எல்லோரும் பயங்கரமா கலாய்ச்சுருப்பாங்க. ஆனா அவரு மட்டும் ஜன்னலை கண்டுபிடிச்சு பெரிய பேர் வாங்கிட்டாரு. அது போல தாங்க. பேர் ஒரு பெரிய விஷயமே இல்ல.

ஜோ : அதுக்காக கதாநாயகர்களின் உடைகள் இவ்வளவு லோக்கலாக உள்ளதே?

சங்குண்ணி : அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் குளிர் தேசம். அங்கல்லாம் கொட்ட தெறிக்கிறா மாதிரி ஒரு பேண்ட போட்டு அதுமேல ஒரு ஜட்டிய போட்டுட்டு குதிக்கலாம், ஒடலாம். இங்க அந்த மாதிரி பண்ண முடியுமா? உஷ்ண பிரதேசம்பா. கட்டி வந்துடாது? நம்மூர்ல ட்ரெஸ்ல்லாம் இப்படிதான் இருக்குன்னும். வெளிநாட்டு காரன்களையே பார்த்து காப்பியடிக்கக் கூடாதுங்றேன்.

ஜோ : ஏதாவது ஒரு தனித்திறமை இருக்குற மாதிரி கூட காட்டலேயே?

சங்குண்ணி : சித்திரக் கதைகளில் வருகின்ற கதாநாயகர்கள் எல்லாமே ஒரே மாதிரியா இருக்காங்க. ஆனா பாருங்க, இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. எக்ஸ்ட்ரா ஜட்டி போட்டவன்லாம் சூப்பர் ஹீரோன்னு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்குது. நம்ம ஊரு சூப்பர் ஹீரோ ஒரு அடிமட்டத்து ஆளு. ஏழை. துட்டுக்கு சிங்கியடிக்கிறவன். வேலை இல்லாத தண்டச் சோறு. உடையால ஒரு கதாநாயகன் உருவாகக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிதான் இவர்கள உருவாக்கினேன். லுங்கியில கூட்டத்துல கலந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு சாதாரண ஆளு மாதிரி தான் இருக்குணும்னு உருவாக்கினேன்.

அவர்களுக்கு தனித் திறமைகள் போக போகத் தான் வரும். கதையின் ஆரம்பத்திலேயே இவரால் பறக்க முடியும். அவர் கையிலிருந்து கத்தி வரும். தெரியாமதான் கேட்கிறேன். கத்தி வைக்கிற இடமாங்க அது. அவசரத்துக்கு தொடையில சொறியும்போது கத்தி வெளியே வந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தீங்களா? தனித் திறமைகள் வில்லன்களை ஒடுக்க பயன்படுறமாதிரி இருக்கணும்.

நம்ம கதையில இப்படிதான் ஒரு காட்சி வரும். வில்லன் துப்பாக்கி வைச்சு மிரட்டுவான். நம்ம கதாநாயகன் பட்டாபட்டியிலிருந்து கத்திய எடுக்கும்போது கத்தியானது நாடாவை வெட்டி பட்டாபட்டி கழண்டு கீழே இறங்கிடும். வில்லன் அதிர்ச்சியடையும்போது, கதாநாயகன் அவன் கையிலிருந்து துப்பாக்கிய புடுங்கிப்பான். இது பாருங்க, எப்படி நம்புற மாதிரி இருக்குது? கதை இப்படிதாங்க
இருக்கணும். என்ன சொல்றீங்க.

இன்னொருத்தர் பாருங்க. இரும்புகை வைச்சுருப்பாராம். கரண்ட பிடிச்சதும் மொத்த ஆளும் மறைஞ்சுடுவாராம். ஆனா அவரு கைமட்டும் அப்படியே இருக்குமாம். அவரு போட்டுகிற பெல்ட் மொதக்கொண்டு மறைஞ்சுடுமாம். ஆனா அவரு இரும்புகை அப்டியே இருக்குமாம். எந்த ஊரு நியாயங்க இது.

நம்ப ஆளு கரண்ட புடிச்சா அவனுக்கு ஷாக் தான் அடிக்கும். அதான் நியாயம். இல்லீங்களா?

கனவுகளின் காதலன்: (உற்சாகமாகி) சரியா சொன்னீங்கண்ணே. மேலச் சொல்லுங்க.

ஜோஷ் திகிலடைகிறார்




படையின் அதிரடி தொடரும் …………


Monday, April 6, 2009

நியாயப் படை-1

எழுதுபவர்- இளமை வேங்கை ஜோஸ் சான் 
கதையின் கதை!
அமெரிக்க மற்றும் பிரன்ஞ் சித்திரக் கதைத் தொடர்களை தற்போதுள்ள சித்திரக் கதை இரசிகர்கள் போற்றி புகழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழில் வந்துள்ள சித்திரக் கதைகளை பற்றி எதுவுமே எழுதக் காணோம். ஏனென்றால் மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்துதான் படிக்க வேண்டும். ஆனால் அதில் சில வைரங்கள் உள்ளன. 
இதுபோன்று பிரென்ஞ் சித்திரக் கதைகளை பற்றியே எழுதிக் கொண்டிருந்த டாக்டர் கனவுகளின் காதலன் என்னிடம் தொடர்பு கொண்டு தமிழில் இது போன்ற கதைகள் உள்ளதா என கேட்டார். நான் பல நாள் அலைந்து கண்டுபிடித்த ஒரு சித்திரத் தொடரை பற்றிய உண்மையை சொன்னேன். அந்த சித்திரக் கதை இலக்கியம் வரலாற்றிலிருந்து கிட்டத்தட்ட மறைந்தே விட்டது என்றுக் கூடச் சொல்லலாம். உடன் பரபரப்பான கனவுகளின் காதலன் தன்னுடைய தனி விமானத்தில் நாலைந்து பிகர்களை அழைத்துக் கொண்டு உடன் இந்தியா கிளம்பினார்.

அவரும் நானும் தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து அந்த சித்திரக் கதை இலக்கியத்தின் சுவட்டினை கண்டுபிடிக்க கடுமையான முயற்சிகள் செய்தோம். கடுமையான உழைப்புக்கு பலன் உண்டு என கழிப்பறை வாசலில் எழுதி வைத்திருந்த வாசகத்தின் பலன் பொய்க்குமா என்ன?

கண்டுபிடித்து விட்டோம்.அந்த சித்திரக் கதை இலக்கியம் மற்றும் அதன் ஆசிரியர் சங்குண்ணி அவர்களை பேட்டியெடுக்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. தள்ளாமையை நெருங்கியிருந்த சங்குண்ணி தனது நியாயப்படை அனுபவங்களை எங்களுக்கு விவரித்தார். இந்த சித்திரத் தொடர் வெளிவந்தால் அமெரிக்க சித்திரக் கதை கம்பெனிகளே அழிந்துவிடும் என சி ஐ ஏ இதனை தடுக்க முயற்சித்தாகவும் குறிப்பிட்டார். அவருடன் பேசியபோது எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள். இதன் மூலம் பெற்ற பல அரிய தகவல்களை முதல் முறையாக இந்த வலைப்பூவில் தொடராக பதிய போகிறோம். 


முதலில் கதாசிரியரின் வரலாற்றுக் குறிப்புகளை பார்ப்போம். 

அவர் பெயர் சங்குண்ணி. 1961-ம் ஆண்டே எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவர் ஒரு மிகச் சிறந்த கதையை எழுத முயன்றதாக அவர் ஜோஷ் மற்றும் கனவுகளின் காதலனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், அந்த கதை முதல் வரியில் இருக்கும்போதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் பள்ளித் தலைமை ஆசிரியரால் தான் கடுமையாக கண்டிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். தன்னுடைய முதல் வரிக்கே உலகம் இவ்வளவு கடுமையாக எதிர்வினை ஆற்றியது குறித்து பெருமிதமும் அடைந்தார். 

இவ்வளவு காலத்திற்கு பிறகும் அவர் கரும்பலகையில் எழுதிய கதையின் முதல் வரிகளை சரியாக நினைவு கூர்ந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

‘கணக்கு டீச்சரும், தமிழ் வாத்தியாரும் பள்ளிக்கொடத்துல ஜின்ஜின்..... ’

1983-ம் வருடம். ஜுலை மாதம். 13-ம் நாள். ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த சங்குண்ணியை மேலாளர் கூப்பிடுவதாக தகவல் வந்தது. மேலாளர் அறைக்கு சென்று அரை மணி நேரத்திற்கு பிறகு திரும்பிய சங்குண்ணியின் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. ஆம், அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். ஐயகோ, எவ்வளவு குரூரமான உலகம் இது! 

அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்பட்டன

1) அந்த கம்பெனி பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயை அவர் தன் கணக்கில் போட்டுக் கொண்டது

2) கம்பெனி சரக்ககத்திலிருந்த சரக்குகளை ஏழை எளிய மக்களிடம் குறைந்த விலைக்கு விற்றது.

3) கம்பெனி மேலாளர் மனைவியுடன் இருந்த சிநேகம்

அவர் அந்த கம்பெனியில் சேரும் போது நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி என மேலாளர் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தும், அந்த கல் நெஞ்சம் கொண்ட மேலாளர் அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கி விட்டார். 

இந்த இடத்தில் மற்ற மனிதர்கள் எல்லோரும் அழுது புலம்புவார்கள். வாழ்க்கையை, விதியை நொந்து கொள்வார்கள். சராசரி மனிதர்களின் அணுகுமுறையே அதுதான். 

ஆனால் மனதில் இலட்சியம் கொண்ட சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் இங்கே தான் மற்றவர்களுடன் மாறுபடுகிறார்கள்.

அப்பாவியான தனக்கு நேர்ந்தது போல இந்த நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணிய சங்குண்ணியின் மனதில் இது போன்ற அநீதிகளை தடுக்க ஒரு படை உருவாக வேண்டுமென கற்பனை செய்தார். அந்த கற்பனையின் விளைவாகதான் உருவானது நியாயப் படை அல்லது நியாயக் கும்பல் அல்லது ஜஸ்டிஸ் கேங் பேங்.(ஆசிரியர் குறிப்பு: கனவுகளின் காதலனுக்கு பேங் என்ற வார்த்தையை எடுத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
[நான் எவ்வளவு முயன்றும் அவ்விலக்கிய தேனூறும் சொல் அழிய மறுத்து விட்டது, எனவே பேங் என்பதனை வாசக உள்ளங்கள், இங்கு வங்கியென அர்த்தம் கொள்ளவும்-காதலன்.]

அவர்களின் ஆரம்ப கால இலட்சியம் : நீதி, நேர்மை, தர்மம் நியாயம் மற்றும் நிஷா ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். நிஷா அவருடைய அப்போதைய சிநேகிதி. 

காலப்போக்கில் அந்த இலட்சியமானது நீதி, நேர்மை, தர்மம் மற்றும் நியாயம் என ஆனது.

இந்த நியாயப்படையில் உள்ள கதாநாயகர்கள் மொத்தம் ஐந்து. சராசரி மனிதர்களை ஒற்றி உருவாக்கப்பட்ட நாயகர்கள் அவர்கள். அவர்களின் சாகசங்கள் அடங்கிய சித்திரத் தொடரானது ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் சில சாகசங்களை மட்டும்தான் உங்களுக்கு இந்த தொடரில் அளிக்க விரும்புகிறோம்.

அவர்களின் அறிமுகங்களை அடுத்த பகுதியில் காணலாம்.
படையின் ராஜ நடை தொடரும்....