
எழுதுபவர்- இளமை வேங்கை ஜோஸ் சான்
கதையின் கதை!
அமெரிக்க மற்றும் பிரன்ஞ் சித்திரக் கதைத் தொடர்களை தற்போதுள்ள சித்திரக் கதை இரசிகர்கள் போற்றி புகழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழில் வந்துள்ள சித்திரக் கதைகளை பற்றி எதுவுமே எழுதக் காணோம். ஏனென்றால் மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்துதான் படிக்க வேண்டும். ஆனால் அதில் சில வைரங்கள் உள்ளன.
இதுபோன்று பிரென்ஞ் சித்திரக் கதைகளை பற்றியே எழுதிக் கொண்டிருந்த டாக்டர் கனவுகளின் காதலன் என்னிடம் தொடர்பு கொண்டு தமிழில் இது போன்ற கதைகள் உள்ளதா என கேட்டார். நான் பல நாள் அலைந்து கண்டுபிடித்த ஒரு சித்திரத் தொடரை பற்றிய உண்மையை சொன்னேன். அந்த சித்திரக் கதை இலக்கியம் வரலாற்றிலிருந்து கிட்டத்தட்ட மறைந்தே விட்டது என்றுக் கூடச் சொல்லலாம். உடன் பரபரப்பான கனவுகளின் காதலன் தன்னுடைய தனி விமானத்தில் நாலைந்து பிகர்களை அழைத்துக் கொண்டு உடன் இந்தியா கிளம்பினார்.
அவரும் நானும் தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து அந்த சித்திரக் கதை இலக்கியத்தின் சுவட்டினை கண்டுபிடிக்க கடுமையான முயற்சிகள் செய்தோம். கடுமையான உழைப்புக்கு பலன் உண்டு என கழிப்பறை வாசலில் எழுதி வைத்திருந்த வாசகத்தின் பலன் பொய்க்குமா என்ன?
கண்டுபிடித்து விட்டோம்.அந்த சித்திரக் கதை இலக்கியம் மற்றும் அதன் ஆசிரியர் சங்குண்ணி அவர்களை பேட்டியெடுக்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. தள்ளாமையை நெருங்கியிருந்த சங்குண்ணி தனது நியாயப்படை அனுபவங்களை எங்களுக்கு விவரித்தார். இந்த சித்திரத் தொடர் வெளிவந்தால் அமெரிக்க சித்திரக் கதை கம்பெனிகளே அழிந்துவிடும் என சி ஐ ஏ இதனை தடுக்க முயற்சித்தாகவும் குறிப்பிட்டார். அவருடன் பேசியபோது எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள். இதன் மூலம் பெற்ற பல அரிய தகவல்களை முதல் முறையாக இந்த வலைப்பூவில் தொடராக பதிய போகிறோம்.
முதலில் கதாசிரியரின் வரலாற்றுக் குறிப்புகளை பார்ப்போம்.
அவர் பெயர் சங்குண்ணி. 1961-ம் ஆண்டே எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவர் ஒரு மிகச் சிறந்த கதையை எழுத முயன்றதாக அவர் ஜோஷ் மற்றும் கனவுகளின் காதலனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், அந்த கதை முதல் வரியில் இருக்கும்போதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் பள்ளித் தலைமை ஆசிரியரால் தான் கடுமையாக கண்டிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். தன்னுடைய முதல் வரிக்கே உலகம் இவ்வளவு கடுமையாக எதிர்வினை ஆற்றியது குறித்து பெருமிதமும் அடைந்தார்.
இவ்வளவு காலத்திற்கு பிறகும் அவர் கரும்பலகையில் எழுதிய கதையின் முதல் வரிகளை சரியாக நினைவு கூர்ந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
‘கணக்கு டீச்சரும், தமிழ் வாத்தியாரும் பள்ளிக்கொடத்துல ஜின்ஜின்..... ’
1983-ம் வருடம். ஜுலை மாதம். 13-ம் நாள். ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த சங்குண்ணியை மேலாளர் கூப்பிடுவதாக தகவல் வந்தது. மேலாளர் அறைக்கு சென்று அரை மணி நேரத்திற்கு பிறகு திரும்பிய சங்குண்ணியின் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. ஆம், அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். ஐயகோ, எவ்வளவு குரூரமான உலகம் இது!
அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்பட்டன
1) அந்த கம்பெனி பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயை அவர் தன் கணக்கில் போட்டுக் கொண்டது
2) கம்பெனி சரக்ககத்திலிருந்த சரக்குகளை ஏழை எளிய மக்களிடம் குறைந்த விலைக்கு விற்றது.
3) கம்பெனி மேலாளர் மனைவியுடன் இருந்த சிநேகம்
அவர் அந்த கம்பெனியில் சேரும் போது நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி என மேலாளர் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தும், அந்த கல் நெஞ்சம் கொண்ட மேலாளர் அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கி விட்டார்.
இந்த இடத்தில் மற்ற மனிதர்கள் எல்லோரும் அழுது புலம்புவார்கள். வாழ்க்கையை, விதியை நொந்து கொள்வார்கள். சராசரி மனிதர்களின் அணுகுமுறையே அதுதான்.
ஆனால் மனதில் இலட்சியம் கொண்ட சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் இங்கே தான் மற்றவர்களுடன் மாறுபடுகிறார்கள்.
அப்பாவியான தனக்கு நேர்ந்தது போல இந்த நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணிய சங்குண்ணியின் மனதில் இது போன்ற அநீதிகளை தடுக்க ஒரு படை உருவாக வேண்டுமென கற்பனை செய்தார். அந்த கற்பனையின் விளைவாகதான் உருவானது நியாயப் படை அல்லது நியாயக் கும்பல் அல்லது ஜஸ்டிஸ் கேங் பேங்.(ஆசிரியர் குறிப்பு: கனவுகளின் காதலனுக்கு பேங் என்ற வார்த்தையை எடுத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
[நான் எவ்வளவு முயன்றும் அவ்விலக்கிய தேனூறும் சொல் அழிய மறுத்து விட்டது, எனவே பேங் என்பதனை வாசக உள்ளங்கள், இங்கு வங்கியென அர்த்தம் கொள்ளவும்-காதலன்.]
அவர்களின் ஆரம்ப கால இலட்சியம் : நீதி, நேர்மை, தர்மம் நியாயம் மற்றும் நிஷா ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். நிஷா அவருடைய அப்போதைய சிநேகிதி.
காலப்போக்கில் அந்த இலட்சியமானது நீதி, நேர்மை, தர்மம் மற்றும் நியாயம் என ஆனது.
இந்த நியாயப்படையில் உள்ள கதாநாயகர்கள் மொத்தம் ஐந்து. சராசரி மனிதர்களை ஒற்றி உருவாக்கப்பட்ட நாயகர்கள் அவர்கள். அவர்களின் சாகசங்கள் அடங்கிய சித்திரத் தொடரானது ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் சில சாகசங்களை மட்டும்தான் உங்களுக்கு இந்த தொடரில் அளிக்க விரும்புகிறோம்.
அவர்களின் அறிமுகங்களை அடுத்த பகுதியில் காணலாம்.
படையின் ராஜ நடை தொடரும்....