Showing posts with label Eric Henninot. Show all posts
Showing posts with label Eric Henninot. Show all posts

Sunday, December 5, 2010

ஜோன்ஸு குட்டி


XIII மிஸ்டரி காமிக்ஸ் கதை வரிசையின் மூன்றாவது ஆல்பத்தின் அட்டைப்படத்தையும், அதன் தலைப்பையும் காணும் XIII ரசிகர்கள், இந்த ஆல்பமானது கனவு+ கவர்ச்சி சிட்டு மேஜர் ஜோன்ஸின் கதையை கூறுவதாக எண்ணிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. நானும் அவ்வாறே எண்ணி வியந்தேன். ஏனெனில் கடந்த ஆல்பமான இரினாவில், அடுத்த கதை ஜோன்ஸ் குறித்தது என்று இருக்கவில்லை.

ஆல்பத்தின் ஆரம்ப பக்கங்களை செக்ஸ்பீர் தாடிவைத்த ஆடு மேய்வதுபோல் மேய்ந்தாலும்கூட, மேஜர் ஜோன்ஸ் ஒரு சிறுமியாக தன் அண்ணன் மார்க்கஸுடன் கறுப்பின மக்கள் அடர்ந்து வாழும் புறநகர்ப் பகுதியொன்றின் சீர்கெட்ட தெருக்களில் நடமாடுவதையே அங்கு காணமுடியும்.

ஆனால் Little Jones எனத் தலைப்பிடப்பட்ட இந்த ஆல்பம் பிரதானமாக James Elroy Wittaker குறித்தே பேசுகிறது. அதேவேளையில் அது சிறுமி ஜோன்ஸின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியையும் முன்வைக்கிறது. விட்டேக்கரின் வாழ்வின் இப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களின் ஒரு சாட்சியாக சிறுமி ஜோன்ஸ், விட்டேக்கரை நிழல்போல் தொடர்வதை கதையில் காணக்கூடியதாக இருக்கிறது.

அனாதைகளான ஜோன்ஸும் அவன் சகோதரன் மார்கஸும் பொலிசாரால் துரத்தப்படும் ஆரம்ப பக்கங்களிலேயே, கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்களிற்கிடையிலனான பரஸ்பர இனத்துவேஷமானது காட்சிகள் வழியாகவும், உரையாடல்கள் வழியாகவும் கதையில் கூறப்பட்டு விடுகிறது. கதை 1960களில் இடம்பெறுகிறது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் காயப்படும் ஜோன்ஸ், அவ்வழியாக காரில் வரும் கறுப்பின ராணுவ அதிகாரி ஒருவரால் பாதுகாப்பாக அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, காயத்திற்கு சிகிச்சையும், பசிக்கு உணவும் அளிக்கப்படுகிறாள். அந்த இளம் ராணுவ அதிகாரி வேறுயாருமல்ல, மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர்தான் அவர்.

lj1 ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும்கூட வெள்ளையர்களின் இனத்துவேஷக் கிண்டல்களிலிருந்து அவரிற்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. வயதான தாய், சகோதரி ஏஞ்சலா, சகோதரன் ஃபீனிக்ஸ் என்பவர்களை கொண்ட சிறிய குடும்பம் விட்டேக்கரினுடையது. விட்டேக்கரின் தந்தையாக கதையில் காட்டப்படுபவர் மார்ட்டின் கால்வின் X என்பவராவார். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் X ஆகியோரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாத்திரம், கறுப்பின மக்களின் நியாயமான உரிமைகளிற்காக அமைதி வழியில் போராடி கொலை செய்யப்பட்ட மதிப்புமிகு தலைவராக கதையோட்டத்தில் சித்தரிக்கப்படுகிறது. இது போதாது என்று “நான் ஒரு கனவு கண்டேன்” எனும் சொற்றொடரும் விட்டேக்கரின் தந்தையின் புகழ் பெற்ற கூற்றாக கதையில் இடம்பிடித்திருக்கிறது.

தாயினால் மிகவும் அன்பு செய்யப்படும் விட்டேக்கர், தன் சகோதரி ஏஞ்சலாவின் கோபத்திற்குள்ளாகி இருப்பவனாக காட்டப்படுகிறான். இதற்கு காரணம், விட்டேக்கர் தன் தந்தையின் வழியில் கறுப்பின மக்களிற்காக போராடாமல் வெள்ளை தேசியத்தின் தேசபக்தி கொடியை தூக்கச் சென்றதே.

Black Panthers எனும் கறுப்பின தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து, கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு விட்டேகரை கேட்கிறாள் ஏஞ்சலா. ஆனால் ப்ளாக் பன்தர்களின் வன்முறைச் சித்தாந்ததிலும், நடவடிக்கைகளிலும் வெறுப்புற்ற விட்டேக்கர், ஏஞ்சலாவின் வேண்டுகோளை முதலில் மறுத்து விடுகிறான். ஆனால் இதே விட்டேக்கர், ப்ளாக் பன்தர்களின் தலைவனான Booby Snake [பாம்பு பாபி], வன்முறை வழிகளை கைவிடுவதாக வாக்குறுதி அளித்ததும் கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல சம்மதிப்பவனாக கதையின் பிறிதொரு பகுதி ஆச்சர்யப்படுத்துகிறது.

விட்டேக்கரின் தம்பியான ஃபீனிக்ஸ், தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விட்டேக்கரைப் போலவே உயரிய பதக்கங்களை வென்று, பிறர் மதிக்கும் திறமையான ராணுவ அதிகாரியாக ஆகிவிட வேண்டுமென்பது அவன் ஆசை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் இனத்துவேஷத்திற்கு அவன் பலியாகிவிடுகிறான். தன் மீதான கிண்டல்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஃபீனிக்ஸ், ஒரு வெள்ளையின ராணுவ அதிகாரியை தாக்கிவிடுகிறான். இதனால் அவன் அமெரிக்க ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறான். இந்த தோல்வியும் தன் சகோதரனின் வெற்றியும் அவனை அழுத்துகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்வையும் தன் சகோதரன் வாழ்வையும் ஒப்பிட்டு மருகி வாழ்கிறான் அவன். வாழ்வின் புன்னகைக்கும் பக்கத்தில் இடம்பெற வாய்ப்பும் அதன்கூடவே வரும் அதிர்ஷ்டமும் இன்றியமையாதது என்பதை ஃபீனிக்ஸ் பாத்திரம் கதையோட்டத்தில் மெலிதாக உணர்திக்கொண்டே செல்கிறது.

lj2 வியட்நாமில் போரிட்ட விட்டேக்கர், அங்கு அவன் ஆற்றிய தீரச் செயல்களிற்காக உயரிய மதிப்பிற்குரிய பதக்கங்களை வென்ற ஒரு கறுப்பின அதிகாரியாக சித்தரிக்கப்படுகிறான். விட்டேக்கர் தன் இனத்தையே வெறுக்கும் ஒருவனாகவும், வெள்ளையர்கள் விரும்பும் கறுப்பினத்தவனாக இருப்பவனாகவும், அவர்களின் பிருஷ்டதுளைகளை நக்குபவனாகவும் கதையோட்டத்தில் பிற கதை மாந்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறான். போர் முனையில் கறுப்பின இளைஞர்கள் அதிகம் பலியானது வெள்ளை முதலாளித்துவ யுக்தி என்பதும், கறுப்பின மக்களின் வறுமையே அந்த சமூக இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தில் அதிகம் இணைந்து கொள்ள தூண்டியது என்பதும் ப்ளாக் பன்தர் குழுவின் கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன.

வியட்நாம் போரில் விட்டேக்கரால் காப்பாற்றப்பட்ட ஜெனரல் பேட்டின் மகளான ஷரோன் மீது விட்டேக்கரிற்கு இன்னமும் காதல் இருக்கிறது. சரோனும் அவனை தன் மனதில் இன்னமும் நேசிக்கிறாள். ஆனால் ஷரோன் திரைப்பட இயக்குனர் நார்மன் பால்டான்ஸ்கியை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறாள். சர்ச்சைக்குரிய இயக்குனரான நார்மன் பால்டான்ஸ்கி, கறுப்பின புரட்சிக்குழுவான ப்ளாக் பன்தரை மையமாக கொண்டு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஷரோன் தேர்வாகி இருக்கிறாள். இந்நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஷரோன் பேட்டின் உடல் அவள் வீட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது..

இக்கொலையை உண்மையில் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன ? இக்கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது யார்? இக்கொலையின் பின் மறைந்திருக்கும் சதித்திட்டம் என்ன ? அதன் சூத்திரதாரிகள் யார் ? மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், கறுப்பின மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பானா இல்லை வெள்ளை அதிகாரத்தின் சதியை எதிர்த்துப் போராடுவானா? இவற்றிற்கான விடைகளையெல்லாம் விறுவிறுப்பாகவும் சீரான வேகத்துடனும் கூறிச் செல்கிறது இக்காமிக்ஸின் கதாசிரியர் Yann le Pennetier வழங்கியிருக்கும் சிறப்பான கதை.

சர்ச்சைக்குரிய இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியை நண்பர்கள் அறியாமல் இருக்க வாய்புக்கள் இல்லை. அவரிற்கு Sharon Tate எனும் மனைவி இருந்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் 1969ல் தன் வீட்டில் சில நண்பர்களுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கதாசிரியர் இயான் தகுந்த முறையில் கற்பனை கலந்து கதையில் இணைத்திருக்கிறார். மேலும் கதையில் வரும் இயக்குனர் நார்மன் பொல்டான்ஸிக்கும் நிஜ இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கிக்கும் உருவத்திலும் சரி, செயல்களிலும் சரி ஒற்றுமைகள் அதிகமாகவே உள்ளன. நிஜ சம்பவங்களையும், பாத்திரங்களையும் கற்பனை கலந்து கதையில் இணைத்தன் மூலம் XIII ன் மரபான கதை சொல்லல் முறையிலிருந்து விலகி புதிய பாதைக்கு தன் கதையை இட்டுச் சென்றிருக்கிறார் கதாசிரியர் இயான்.

lj3 காரிங்டன், மங்கூஸ், ஜியோர்டினோ என XIII ன் பிரபல பாத்திரங்கள் கதையில் கவுரவ வேடங்களில் [ நட்பிற்காக] இடம் பிடித்திருக்கிறார்கள். கதையின் இறுதியில் வரும் அந்த இரு அட்டகாசமான திருப்பங்களும் கதையின் மிகப் பெரிய பலமாக அமைந்து விடுகின்றன. அதில் ஒரு திருப்பத்தின் பின்பாக விட்டேக்கரை நாம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கும். அந்த திருப்பத்தை XIII தனமான ஒரு திருப்பமாக நிச்சயம் வகைப்படுத்த முடியும். அந்த விதத்தில் ஜான் வான் ஹாமிற்கு சிறிது கிச்சு கிச்சு காட்டியிருக்கிறார் இயான்.

அதேபோல் ஜோன்ஸின் உண்மையான பெயர் என்ன என்பதை அறியும் தருணமும் அருமையே. ஜோன்ஸின் உண்மையான பெயரிற்கு பொருத்தமானவள்தான் அவள். அவள் பெயர் ஒரு கவிதையாக அந்த தருணத்தில் ஒலிக்கும்.சிறுமியாக இருக்கும்போதே ஆண்களின் ஆணாதிக்க கருத்துக்களை எதிர்க்கும் ஒருத்தியாகவும், ராணுவத்தில் சேர விரும்புபவளாகவும், தன் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து தகவல்களை கிரகிக்கும் இயல்பு கொண்டவளாகவும் ஜோன்ஸ் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ப்ளாக் பன்தர் போஸ்டரை பின்னணியாகக் கொண்டு விரல்களை துப்பாகியாக்கி சிரிக்கும் அட்டைப்பட ஜோன்ஸை பாருங்கள். ஒரு ஆபத்தான அழகி உருவாகிறாள் என்பதற்கு சான்றல்லவா அது.

கதையின் சில பக்கங்களில் வரும் சித்திரங்கள் இக்கதை வளர்ந்தவர்களிற்கானது என்று நிரூபிக்கிறது. ஓவியர் எரிக் ஹெனானோவின் சித்திரங்கள் கதைக்கு சிறப்பாக துணை நிற்கின்றன. இருப்பினும் அவர் அடக்கி வாசித்திருப்பதாக எழும் உணர்வை அடக்க முடியவில்லை. ஹெனானோவின் சித்திரத்திறமையை நாம் கார்த்தகாவோவில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த தரம் இக்கதையில் இல்லை என்பதே உண்மை. வில்லியம் வான்ஸின் சித்திரங்களை வேறு யாரும் தாண்டி சென்று விடக்கூடாது என்பது XIII மிஸ்டரி கதைவரிசையின் எழுதப்படாத நியதியாக இருக்கும் போல் தெரிகிறது.

விட்டேக்கரின் வாழ்க்கையினூடாக நிழல்போல் நகர்ந்து அனாதையாக விடப்படும் சிறுமியான ஜோன்ஸை, காரிங்டன் தத்தெடுத்து ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அழைத்து செல்வதோடு ஜோன்ஸுடன் ஆரம்பித்த விட்டேக்கரின் கதை ஜோன்ஸுடன் ஒரு முடிவிற்கு வருகிறது.

தேசப்பற்று, இனப்பற்று, காதல், பாசம், சதி, அளவான ஆக்‌ஷன், அதிர வைக்கும் முடிவுகள் என இதுவரை வந்த XIII மிஸ்டரி கதைகளில் சிறப்பான இடத்தை எட்டிப் பிடிக்கிறது லிட்டில் ஜோன்ஸ். ஆனால் அட்டைப்படமும், தலைப்பும் விட்டேக்கரை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஜோன்ஸ் பாத்திரத்தை பயன்படுத்தி அதிக ஆல்பங்களை விற்றுத்தள்ள பதிப்பகம் உபயோகித்திருக்கும் ஒரு வணிக யுக்தி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கரின் கதையை பிரதானமாக கூறும் இக்காமிக்ஸ் ஆல்பத்தின் அட்டையில் அவர் பெயரும், உருவமும் இல்லாதது பொருத்தமற்ற ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. இல்லை அதிலும் கூட ஏதேனும் மர்மத்தை பதிப்பகத்தார் வைத்திருக்கிறார்களா என்பது கடவுளிற்கே இருட்டான ஒன்றுதான். [***]

Thursday, April 9, 2009

கார்த்தாகோ

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் உங்களிற்கு என் நன்றிகள். தோழர், எழுத்து எரிமலை ஜோஸ் சான் அவர்களின் காவியத் தொடரிற்கு அன்பர்களின் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. அனைத்துப் பதிவுகளிலும் நீங்கள் பதிந்து சென்ற கருத்துக்களிற்கான பதில் கருத்துக்களை, அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம். எம் அன்பு நண்பர்களின் காமிக்ஸ் வலைப் பூக்கள் பற்றி பார்ப்போம்.

சிறுவர் மலர் நாயகர்கள் குறித்து ஒர் சிறப்பான பதிவை இட்டிருக்கிறார் நண்பர் லக்கி லிமட். பரட்டைத் தலை ராசாவின் ஒர் பக்க கிறிஸ்மஸ் புடிங் சாகசம் அருமையாக உள்ளது.

நண்பர்களின் மனதில், அவர்களின் சிறு வயது ஞாபகங்களை மீண்டும் அலை அடிக்க வைத்திருக்கிறார் நண்பர் விஸ்வா.விளம்பரங்கள் மூலம் ஒர் காலப் பின்னோட்டம். அருமையான பதிவு . தஞ்சாவூர் குமரேசன் கேட்டிருக்கும் சந்தேகம் சூப்பரோ சூப்பர்.

மேத்தா காமிக்ஸில் வெளியான ரத்த பூதம் எனும் தொடர் பற்றியும், அதன் மூலங்கள் பற்றியும் தனக்கே உரிய பாணியில் இனிய பதிவொன்றினை சிறப்பாக இட்டிருக்கிறார் நண்பர் ரஃபிக், வழமை போன்றே நாளிற்கு நாள் பதிவில் படங்களும், தகவல்களும் அப்டேட் ஆகின்றன. அவர் ஒர் அப்டேட் அரசு.

வித்யார்த்தி மித்ரன் எனும் காமிக்ஸ் இதழில் வெளியான கானகக் காதலன் டார்சானின் ஒர் கதையினை சிறப்பான ஸ்கேன்களுடன் வெளியிட்டு இருக்கிறார் நண்பர் புலா சுலாகி. அந்த இதழ் ஒர் பொக்கிஷம் சந்தேகமேயில்லை.

சிறு வயது முதலே ஆழ் கடல் என் ஆர்வத்தை தூண்டுவதாகவே இருந்து வருகிறது. ஆழ்கடல் சம்பந்தமான கதைகள், விபரணங்கள், திரைப்படங்கள் என்பன என்னை எப்போதும் கவர்ந்திழுப்பவை. சிறு வயதில் நான் பார்த்த THE DEEP எனும் திரைப்படம் என் மனதில் சிறு ஞாபகமாய் இன்றும் இருக்கிறது, அதன் பின் என்னைக் கவர்ந்த திரைப்படம் ஜேம்ஸ் கமரொனின்THE ABYSS ஆகும். காப்டன் குஸ்டோவின் ஆழ்கடல் விபரணங்களை மறக்கத் தான் முடியுமா. அவர் குழுவில் சேர்ந்து கொள்ளக் கூட கனவு கண்டிருக்கிறேன்[ பள்ளி நாட்களில்]. எனவே இக் காமிக்ஸ் கதையை நான் ரசிப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. படித்து முடித்ததும் பதிவாகவும் நண்பர்களிற்கு வழங்கி விட்டேன். இனி கதைக்குள் செல்வோம்.



1993. தென்பசுபிக், டொங்கா கடலடிக் குழி, அருங்குள்டா கடலடிப்பாறைத் திட்டுக்கள்.

சமுத்திரத்தின் ஆழத்தில் ராட்சதர்களாய் நிற்கும் கற்பாறை மலைத்திட்டுக்களின் மேல், துளையிடும் எந்திரத்தின் துணையுடன், பாறைகளில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது கார்த்தாகோ பெற்றோலியக் கம்பனியின் சண்டமரியா அணி. சமுத்திரத்தின் ஆழத்தின் இருளில், எந்திரத்திலும், அணியின் 3 உறுப்பினர்களின் தலைக்கவசங்களிலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் இருந்து நீந்தும் ஒளி, அவர்களை கடலடி மின்மினிகளாக ஒளிரச்செய்கின்றது. இடையிடையே தம் அழகு காட்டி நீந்திச் செல்கின்றன சில மீன் கூட்டங்கள். மின்சார துண்டிப்பினால் துளை போடும் எந்திரம் செயலற்று விட அதனைச் சரி பார்க்கிறது மூவரணி. அணியின் தலைவன் நைட், கட்டுப்பாட்டு அறையிலிருந்து , சமுத்திரத்தின் ஆழத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை, அவர்களின் தலைக்கவசங்களினுள் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவி வழியாக தொடர்பு கொள்கிறான். வேலை தாமதமாகிறது எனவும், 25 மீற்றர் ஆழம் ஒர் பாறையில் தோண்டி முடித்தாலும் இன்னமும் அவர்கள் செய்ய வேண்டிய 3 மணி நேர வேலையுடன் சேர்த்துக் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் படியாகவும் கேட்டுக் கொள்கிறான். கார்த்தாகோ கம்பனியைத் திட்டியபடியே நைட்டின் வேண்டுகோளிற்கு சம்மதிக்கிறார்கள் சண்டமரியா அணியினர். பாறை கடினமாக இருப்பதால் துளையிடும் எந்திரத்தினை அதன் முழு விசையில் முடுக்கி விடச் சொல்கிறான் நைட். இதனை அடுத்து துளையிடும் எந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 20000 சுற்றுகளாக உயர்த்தப்படுகிறது. எந்திரத்தின் வேகம் அதிகரிக்க, துளையிடப்படும் பாறையிலிருந்து கிளம்பும் துகள்கள் மூவரணியைச் சூழ்கிறது. தீடிரென ஏற்பட்ட ஒர் பெரிய அதிர்வுடன் கூடிய அதிர்ச்சியால் எந்திரத்தின் துளையிடும் பகுதியின் அருகில் இயங்கிக் கொண்டிருந்த இருவரும் சற்று விலக்கி தள்ளப்பட, எந்திரத்தினை இயக்குபவன் அதனை நிறுத்திவிடுகிறான். துளையிடும் முனைப்பகுதி சேதமாகி விட்டதா என்பதனை அறியவேண்டி அதனை வெளியில் எடுத்துப் பரிசோதிக்கும் அணி, துளையிடும் முனைப்பகுதி எவ்வித சேதமுமின்றி இருப்பதைக் காண்கிறார்கள். துளையிடும் எந்திரத்தின் முனை கடினமானப் பாறையின் பகுதியைத் தாண்டி ஒர் வெளியில் சுழன்றதால் அதிர்ச்சியும், ஆட்டமும் ஏற்பட்டிருக்கலாம் என நைட் கருத்து தெரிவிக்கிறான். 25 மீற்றர் ஆழம் தோண்டப்பட்ட பாறையினுள் இறங்கி எந்திரத்தின் முனை முடிவடைந்த இடத்தைப் பார்த்து விடுவது என தீர்மானித்து, பாறையினுள் கீழே இறங்க ஆரம்பிக்கிறது சண்டமரியா அணி. துளையிடும் முனை முடிவடைந்த இடத்தை நெருங்கும் அவர்கள் முன்னால் விரிகிறது ஒர் இருண்ட கடலடிக் குகை. குகையின் இருளில் அணியினரிற்கு கண்களில் எதுவும் தெரியவில்லை என்பதால் குகையின் பரிமாணத்தை அறிய வேண்டி ஒளிக்குண்டு ஒன்றை மேல் நோக்கி சுடுகிறான் ஒருவன். அந்த ஒளிக் குண்டு 100மீற்றர் உயரம் மேல் நோக்கி சென்றும் குகையின் மேற்பகுதி கண்ணிற்கு தெரியவில்லை என்பதினால் குகையின் அளவு மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதனை ஊகிக்கிறார்கள் அணியினர். மேலிருந்து கீழே விழும் ஒளிக்குண்டின் பிரகாசத்தில் குகையின் அடிப்பகுதியானது ஒரு பத்து மீற்றர்களிற்குள் இருக்ககூடும் எனவும் கணிக்கும் அணியினர், குகையின் நீளம் எவ்வளவாக இருக்கும் என்பதை அறிய வேண்டி குகையினுள் நீந்த ஆரம்பிக்கிறார்கள், சிறிது தூரம் நீந்திய பின் அவர்களின் முன்னால் முழு வெண்மையான ஒர் சிறிய மீன் நீந்திச் செல்கிறது. அம்மீனைப் பிடிப்பதற்காக தன் கரங்களை அதன் அருகே மெதுவாக கொண்டு செல்கிறான் ஒருவன். கண்ணிமைப்பதிலும் குறைவான நேரத்தில் அவன் உடல் மறைந்து விட, துண்டிக்கப்பட்ட கரம் ரத்தம் கசிய குகையின் அடித்தளத்தில் விழுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியில் விறைத்துப் போய்விடும் எஞ்சியுள்ள இருவரின் பின்னாலும் இருளாகப் படர்கிறது ஒர் பிரம்மாண்டமான உருவம். அதன் பற்களின் கூர்மைகளிற்கிடையில் சதையும், ரத்தமும் கசிந்து கொண்டிருக்கிறது. குகை நீரில் குமிழிகளும், ரத்தமும் கலக்க ஆரம்பிக்கின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று குகையின் தரையை வந்தடைகிறது. வெள்ளை மீன் தூரத்தில் ஒடி மறைகின்றது. சிலிண்டரிலிருந்து வெளியேறும் குமிழ்கள் தோண்டப்பட்டுள்ள துளையை நோக்கி மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

2007, பிரான்ஸ், சரான் அணைக்கட்டு.

பனி மூடிய சிகரங்களைக் கொண்ட மலைகள், சுவர்கள் என நிற்க, விரிந்து கிடக்கிறது அவிரொன் ஏரி. அவிரொன் ஏரியின் ஆழத்தில், ஒர் சிறிய நீர்முழ்கியின் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டு விட்டு, நீரை விட்டு வெளியேறும் கிம் மகிழ்சியால் துள்ளுகிறாள். தன் துணைவன் மார்ட்டினை தழுவிக் கொள்ளுகிறாள். காப்டன் பெர்ட்ராண்ட் கூறியது சரியே எனக் கூறும் கிம், ஏரியின் உயிர்ச்சூழல் ஒர் அதிசயம் என்கிறாள். இனங்களின் கூர்ப்பு வீதம் உயர்வாக இருக்கும் என பெர்ட்ராண்ட் கூறிய போது, அவனை ஒர் பைத்தியம் என பிறர் எள்ளி நகையாடியதையும் நினைவு கூர்கிறாள். ஏரியின் ஆழத்தின் பலமான நீரோட்டம் தங்களை நிரந்தரமாக ஏரியின் அடியிலேயே புதைத்திருக்கும் என்கிறான் மார்ட்டின். ஒரு மீற்றர் நீளத்திற்கு வளர்ச்சி அடந்துள்ள நன்னீர் சிங்க இறால்கள் [CrayFish], மூன்றரை மீற்றர் வரை நீளமான ஊளா மீன்கள்[Pike] என ஏரியில் அசாத்திய வளர்ச்சி கண்டுள்ள உயிரினங்கள் பற்றி வியக்கும் கிம்மிடம், தாங்கள் இவ்வகையான ஆய்வுகளினால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இயங்குவதாகவும், அப்படி ஒர் தியாகத்திற்கு இத்தொழில் தகுதியானதா என தனக்குஒர் ஐயம் உண்டு எனவும் தெரிவிக்கிறான் மார்ட்டின். இவ்வாறாக உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் தீடிரென கிம்மிற்கு தன் மகள் லூ பற்றி ஞாபகம் வர அவளைத் தேட ஆரம்பிக்கிறாள். லூ ஏரிக்கரையினருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக கிம்முடன் பணியாற்றும் லொக் தெரிவிக்கிறான். ஏரிக்கரையை நோக்கி ஓடும் கிம் , லூ ஏரி நீரிலிருந்து வெளியேறுவதைக் கண்டு கொள்கிறாள். ஒடிச்சென்று அவளைத் தன் கரங்களில் அணைத்துக் கொள்ளும் கிம் ஏரியின் அபாயங்கள் பற்றி லூவிற்கு எச்சரிக்கிறாள். மறுபடியும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி அவளைத் தழுவிக் கொள்கிறாள். லூ, கிம்ம்மிடம் தான் ஏரி நீரில் மூழ்கிய போது ராட்சத ஊளா மீன்களைக் கண்டதாகத் தெரிவிக்கிறாள். இதனைக் கேட்கும் மார்ட்டின் திகைத்துப் போகிறான். கிம்மும், அவனும் நீரில் மூழ்கியபோது அவர்கள் கண்களில் தென்பட்ட முதல் ஊளா, ஏரியின் ஐம்பது மீற்றர் ஆழத்தில் காணப்பட்டது என்பதனைக் கூறி வியக்கும் அவன், லூ ஊளா மீன்கள் பற்றி தெரிந்து கொண்டதையிட்டு ஆச்சர்யமும், திகைப்பும் கொள்கிறான். அப்போது ஏரியின் அமைதியைக் கிழித்துக் கொண்டுஅவர்கள் காதுகளில் விழும் மோட்டார்களின் சத்தத்தினால் வியப்புறுகிறது கிம் குழு. அவர்கள் இருந்த பகுதி நோக்கி சீறி வருகின்றன சில பனிச்சறுக்கு மோட்டார்கள். ஓட்டத்தை நிறுத்திய மோட்டார் ஒன்றிலிருந்து இறங்குகிறான் ஃபால்கோ. தான் அடோம் அமைப்பைச் சேர்ந்தவன் எனவும், கிம் குழுவினரின் ஆர்வத்தினை தூண்டக்கூடிய விடயம் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அவன்.

அடோம், க்ரீன் பீஸின் ஒர் ரகசியக் கிளை. தனி நபர்களிடமிருந்தும் எங்களிற்கு நிதி கிடைக்கப் பெறுகிறது. களத்தில் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் எங்கள் செயல்கள் பொதுமக்களின் பார்வையில் நல்ல அபிப்பிராயங்களை பெறுவது இல்லை. ஆனால் நாங்கள் அரசுகளிற்கு எதிராகவும், பல தொழில் நிறுவனங்களிற்கு எதிராகவும், நாம் வாழும் பூமியை மேலும் அழிவிலிருந்து காப்பாற்ற போராட வேண்டியிருக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் கிம் குழுவினரிற்கு அடோம் குறித்து சுருக்கமான விளக்கம் தருகிறான் ஃபால்கோ. அடோமிற்கும் தனக்கும் எவ் வகையில் தொடர்பு உண்டு என கேட்கும் கிம்மிடம் அவள் கணணியைத் திறக்கச் சொல்கிறான். கணணியின், உயிர்பெற்ற திரையில் தன் வாயை அகலமாகத் திறந்தபடி உள்ள ஒர் ராட்சத சுறாவின் படம் தெரிகிறது. தன் கணணியிலுள்ள ஒர் மென்பொருளின் உதவியுடன், சுறாவின் தாடையின் அகலத்தினைக் கொண்டு , சுறாவின் நீளத்தினைக் கணிக்கிறாள் கிம். அது 22 மீற்றர் நீளமுடைய சுறா என்பதினை அறியும் போது அதனை நம்ப முடியாதவளாக, கடலில் உயிர் வாழக் கூடிய எந்த சுறா இனமும் இவ் வளர்த்தியை எட்ட முடியாது என்கிறாள்.

அவளிற்கு பதிலளிக்கும் ஃபால்கோ, கார்த்தாகோ பெட்ரோலியக் கம்பனியில் பணியாற்றிய அடோமின் ஒற்றர்களால் கம்பனியின் ரகசிய ஆவணங்களிலிருந்து திருடப்பட்டது அந்த போட்டோ. 1993ல் அப் போட்டோ எடுக்கப்பட்டது, 14 வருடங்களிற்கு மேலாக கார்த்தாகோ முன்வரலாற்றுக்[Prehistoric] காலத்தை சேர்ந்த ஒர் ஆழ்கடலடிக் குகையின் இருப்பை உலகின் கண்களில் இருந்து மறைத்து வருகிறது. அக்கடலடிக் குகையினுள் எடுக்கப்பட்டதே இந்த ராட்சத சுறாவின் போட்டோ. கார்த்தாகோவின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த இருபது வருட காலமாக அதன் பங்குகளின் விலை இறங்கு முகமாகவே உள்ளது. இந்நிலையில் முன்வரலாற்றுக் கடலடிக் குகை காணப்படும் செடெனா பெட்ரோலிய தளத்தையும் கார்த்தாகோ இயக்க முடியாது போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என விளக்குகிறான்.

பற்களின் தன்மையையும், சுறாவின் அளவையும் வைத்துப் பார்க்கையில் வெள்ளைச் சுறாவின் மூதாதையான MEGALODON வகையை சேர்ந்ததாக ராட்சத சுறா இருக்ககூடும் எனவும், 5.3 மில்லியன் வருடங்களின் முன்பாக ஏற்பட்ட சமுத்திரங்களின் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக உருவான பனி ஊழிக் காலகட்ட பகுதியில் அவ்வினம் முற்றாக அழிந்து போனதாகவும் கூறுகிறாள் கிம். மெகாலோடொன்கள் அழிவு குறித்த இத்தகவல் பிழையானது எனவும், பதினைந்து வருடங்களிற்கு மேலாக தங்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறான் ஃபால்கோ. ஜுராவில் [JURA] 1991ல் கண்டுபிடிக்கப்பட்ட பனி ஊழிக்கால மம்மி ஒன்றின் மீதிருந்து எடுக்கப்பட்ட மெகாலோடொனின் பல்லில் நிகழ்த்தப்பட்ட கார்பன்14 பகுப்பாய்வு தரும் முடிவுகளை பார்க்க சொல்கிறான். அம்முடிவுகளைப் பார்வையிடும் கிம், அந்தப் பல் 1.8 மில்லியன் வருடங்கள் வயதுடையது எனக்கண்டு ஆச்சரியப்படுகிறாள். மம்மியும், மெகாலோடொனின் பல்லும் தற்போது ஆஸ்திரியாவைச் சேர்ந்த செல்வந்தன் கார்பாட் கிழவனின் மாளிகையில் உள்ளது எனத் தெரிவிக்கிறான் ஃபால்கோ. அருங்குள்டா பாறைத்திட்டு வலயத்தில், முன் வரலாற்றுக் குகையில் யாரும் இனி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதவாறு கார்த்தாகோ அப்பிரதேசத்தினைக் கண்காணிக்கிறது. ஆனால் இக்குகை தனிமைப்பட்டுவிடவில்லை, இக்குகையுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய வேறு சில ஆழ்கடல் குகைகள் உள்ளன. ஒர் சிறிய நீர் மூழ்கி, மற்றும் ஒர் நீரில் மூழ்குபவர்கள் அணி எங்களிற்காக போர்த்துனா எரிமலைத்தீவில் காத்திருக்கிறது என்கிறான் ஃபால்கோ.

கார்பாட் மாளிகை, ருமேனியா.
மலைகளின் உச்சியில், கழுகுக் கூடொன்றைப் போல் எழுந்து நிற்கிறது அம்மாளிகை. மாளிகையின் உள்ளே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆதிகால விலங்குகளின் எலும்புருவங்களை பார்வையிட்டவாறே நடந்து செல்கிறான் லண்டன் டொனவான். டொனவான் தாமதமாக வந்ததாக சற்று விசனப்படும் கார்பாட் கிழவன், ஒர் கண்ணாடிப் பெட்டியினுள், தானியங்கி சக்கர நாற்காலி வண்டி ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான். அவனால் நடக்க முடியாது என்பது தெளிவாகிறது. அவன் மூக்கின் ஒர் துவாரத்தில் ஒர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. கிழவனிற்கு வயது அதிகம் தான். இருந்தாலும் கிழவன் கடலின் பெருமை பற்றி உற்சாகமாக பேசுகிறான். "டொனவான், காலம் தோன்றிய காலம் முதல் மனிதன் சமுத்திரங்களின் ஆழத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறான் சமுத்திரங்களின் ஆழத்தின் 5% மட்டுமே அவனால் ஆராயப்படமுடிகிறது. ஒவ்வொர் பத்து வருடத்திலும் இப்பகுதியில் நாம் இதுவரை அறிந்திராத உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன, எனவே மிகுதியுள்ள 95%ல் நாம் என்னென்ன அதிசயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை சற்று எண்ணிப்பார். கடல் பிரம்மாண்டமானது. மனித குலத்திற்கு அது பிரம்மாண்டமானது. தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டால் கூட கடலின் ஒர் சிறிய பகுதியையே அவர்களால் ஆராய முடியும். பூமியில் உள்ள காடுகள் போலவே, கடலிலும் உண்மைகள், விஞ்ஞானக் கதாசிரியர்கள் கற்பனையாக எழுதியுள்ளதை விட ஆச்சர்யத்தை தருவதாக அமையும் ". கிழவனின் இயற்கை வரலாற்று உரைக்கு நன்றி தெரிவிக்கும் டொனவான், கிழவன் தன்னை மாளிகைக்கு வரவழைத்த காரணத்தினைக் கேட்கிறான். டொனவான் தனக்காக ஒர் மெகாலோடொனைப் பிடித்து தர வேண்டும் என்கிறான் கிழவன்.

போர்த்துனா எரிமலைத்தீவை வந்தடைகிறது கிம்+ஃபால்கோ குழு. பிரான்சுவா தூர்னோ எனும் புவியியலாளன் எரிமலைத்தீவுகளின் தோற்றம் பற்றியும், போர்த்துனா தீவின் கடலின் ஆழத்திலுள்ள குகைகளிற்கும், கார்த்தாகோவின் சண்டமரியா அணியினர் கண்டுபிடித்த குகைக்குமிடையில் தொடர்பு இருப்பதையும் விளக்குகிறான். எனவே பெரும்பாலான உயிரினங்கள், குறிப்பாக ராட்சத உயிரினங்கள் போர்த்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தில் வாழக்கூடிய சாத்தியங்களையும் விபரிக்கிறான். தாங்கள் நீரில் மூழ்கித்தேட வேண்டியது மெகாலோடொன்களையா என வினவுகிறாள் கிம்.
ஆம் எனப் பதிலளிக்கிறான் ஃபால்கோ.

சிட்னியில் அமைந்துள்ள கார்த்தாகோவின் தலைமையகத்தில் , கம்பனியின் முக்கிய பங்குதாரர்களின் அவசரக்கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறான் அதன் இயக்குனனான டக்ளஸ். அடோம் அமைப்பு பற்றி அவர்களிடம் விளக்கும் அவன், சுறாவின் போட்டோ மற்றும் கடலடிக்குகையின் இருப்பு பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்தால் செடெனா தளத்தை இயக்க முடியாது போகும் எனவும், இதனால் கம்பனிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்கிறான். அடோமை ஒழித்துக்கட்ட தான் சில சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் கூறும் டக்ளசின் முடிவுக்கு பங்குதாரர்கள் தங்கள் சம்மதத்தினை தருகிறார்கள்.

ரஷ்யாவின் லப்டெவ் கடலில் நீண்ட பயணத்திற்கு தயாரான நிலையிலுள்ள நீர்மூழ்கியில் தன் சக்கர நாற்காலியுடன் நுழைகிறான் கார்பாட் கிழவன். அவனுடன் விரைவில் இணைந்து கொள்வதாகக் கூறி, காமாண்டோ வீரர்களுடன் தனக்காக காத்து நிற்கும் ஹெலிகாப்டரில் ஏறுகிறான் டொனவான்.

போர்துனா தீவின் கடல்நீரின் ஆழத்தினுள்ளே ஓளியைப் பாய்ச்சியவாறே சென்று கொண்டிருக்கிறது கிம், ஃபால்கோ குழுவினரின் சிறிய நீர் மூழ்கி. 300 மீற்றர் ஆழத்தில் நீர்மூழ்கியின் ஒர் பாட்டரி செயலிழந்துவிட, சிறிது தடுமாறுகிறது நீர்மூழ்கி. தன் திறமையால் நீர்மூழ்கியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான் கசின்ஸ்கி. 550 மீற்றர் ஆழத்தில் கடலடி மலைப்பாறைகள் அருகே பயணிக்கிறது நீர்மூழ்கி. எந்தவோரு புதிய உயிரினமும் அவர்கள் கண்களிற்கு தட்டுப்படவில்லை. நீர்மூழ்கியின் வட்டமான கண்ணாடி வழி வெளியே பார்கும் கிம், அங்கு காணப்படும் கடற்பஞ்சு வகைகளின் அளவும், நிறங்களும் வழமைக்கு மாறானவை எனத்தெரிவிக்கிறாள். தாங்கள் சரியான பாதையிலேயே சென்று கொண்டிருப்பதாகக் கூறி தன் அணியினை ஊக்கப்படுத்துகிறாள். சிறிது நேரத்தில் இரண்டாகப் பிளந்த ஒர் கடலடி எரிமலையின் வாய்ப்பகுதியினூடாக பயணிக்கிறது நீர்மூழ்கி. கண்ணாடி வழி வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் கிம்மின் கண்கள் ஆச்சர்யத்தாலும், திகிலாலும் விரிகிறது. நீர் முழ்கியை நோக்கி வேகமாக, வெகுவேகமாக நீந்தி வந்து கொண்டிருக்கிறது ஒர் ராட்சத உருவம்...

பிறகு நடந்தது என்ன என்பது விறு விறு விறு.... CARTHAGO எனும் இவ்வால்பம் 2007ல் வெளியானது. இக் கதைத் தொடரில் மொத்தமாக எட்டு ஆல்பங்கள் வெளியாக உள்ளது. 2009 பிப்ரவரியில் இதன் இரண்டாவது ஆல்பம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கி.மு க்கு 24 மில்லியன் வருடங்கள் முன்பாக சமுத்திரத்தின் ஆழத்தில், திமிங்கலங்களை மெகாலோடொன் ஒன்று வேட்டையாடும் ஆரம்பக் காட்சி முதல். 2007ல் பிரான்சின் மேற்குகரை கடல் ஓரங்களில் கூட்டமாக கரை ஒதுங்கி மரணமடையும் திமிங்கலங்கள் வரை விறுவிறுப்பான தகவல்களையும்,வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் மர்மங்களையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த சூழலியல் த்ரில்லர்.

காப்டன் பெர்ட்டராண்ட் உலகிற்கு தெரியாது மறைத்து வைத்துள்ள ரகசியம், சிறுமி லூவில் புதைந்துள்ள ஒர் மர்மம், என்ன காரணத்திற்காக அடோமும் ,கார்பாட்டும் மெகாலோடொனைத் தேடுகிறார்கள், ஆஸ்திரேலிய ஆதி குடிகள் உலகத்தின் முடிவை எதிர்பார்ப்பது ஏன், இக்கண்டுபிடிப்பால் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் விளைவுகள் என்ன, இவ்வகையான கேள்விகளிற்கு இனி வரும் ஆல்பங்களே விடை தரும் என்கையில் இக்கதையின் தொடர்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு பற்றி ரசிகர்களிற்கு கூறத்தேவையில்லை.

மர்ம முடிச்சுக்கள், மற்றும் சுவையான தகவல்கள் தெளிவான கதைசொல்லல் என விறுவிறுப்பான கதையை தந்திருப்பவர் CHRISTOPHE BEC.1969ல் பிரான்சின் ரொடெஸ் எனும் ஊரில் பிறந்தவர். 11 வயதிலேயே விளையாட்டாக 46 பக்க ஆல்பங்களை உருவாக்கியவர். ஜான் ஜிரோட்டின் ஓவியப் பாணியால் உந்தப்பட்டவர். ஆரம்பத்தில் பல கதைகளிற்கு சித்திரக்காரராகப் பணியாற்றியவர். சேவியர் டாரிசன் கதை எழுத இவர் சித்திரம் வரைந்தSANCTUAIRE எனும் ஆல்பம் வெற்றிக்கதவை இவரிற்கு சலாம் போட்டு திறந்து விட்டது. அக்கதையில் சில அமெரிக்க நடிகர்களின் சாயலில் கதையின் முக்கிய பாத்திரங்களை பெக் வரைந்திருப்பார். இக் கதை மூன்று ஆல்பங்களாக வெளியாகியது. முதலாவது ஆல்பம் இதுவரை 10 பதிப்புக்கள் கண்டு விட்டது. இக்கதையின் மொத்த பிரதிகளின் விற்பனை 150 000 தை தாண்டி சாதனை படைத்தது. DC காமிக்ஸ் SANCTUM எனும் பெயரில் இக்கதையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இக்கதையின் முடிவு எனக்கு திருப்தி தராதது ஆகும்.சுட்டிகளைப் பயன்படுத்தி பெக்கின் சித்திரங்களை தவறாது பாருங்கள்.பெக் தன் முதல் கதையை 2004ல், டிஸ்னியில் பணியாற்றிய இத்தாலிய சித்திரக்காரரான PAOLO MOTTURA சித்திரங்களினை வரைய, CAREME எனும் பெயரில் வெளியிட்டார். இன்று ஒர் சுறுசுறுப்பான காமிக்ஸ் கலைஞராக தன் வாழ்கையை கொண்டு செல்கிறார் பெக்.

ஆல்பத்தின் பக்கங்கள் முழுவதிலும் எங்களை வியக்க வைக்கும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருப்பவர் ERIC HENNINOT. கடலடிக் காட்சிகளிலும், ராட்சத விலங்குகள் தோன்றும் காட்சிகளிலும், குறிப்பாக பிளவுண்ட எரிமலையின் வாயினூடாக நீர்மூழ்கி செல்லும் காட்சியிலும் அந்தந்த தருணங்களில் எம்மை ஆழ்த்தி விடுகிறார் ஓவியர். மெகாலோடொன் வரும் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம் திகில் உத்தரவாதம். கெனானோ பிரான்சின் ருவென் எனும் நகரில் 1974ல் பிறந்தவர். கணிதத் துறையில் உயர்படிப்பு. ஓவியத்தினால் மட்டும் வாழ்க்கை நடத்த முடியாது என அஞ்சி பொறியியல் துறைக்கு வந்தவர். 2004ல் STEPHANE BETBEDER கதையெழுத ALISTER KAYNE எனும் தொடர் இவர் சித்திரங்களோடு வெளியாகியது. இன்று கார்த்தாகோவின் முதலாம் ஆல்பம் வழியாக தன்னை ஒர் வளர்ந்து வரும் நம்பிக்கையாக நிலை நிறுத்திக் கொண்டார் கெனானோ. சித்திரங்களிற்கு சிறந்த முறையில் வண்ணமளித்துதிருப்பவர் DELPHINE RIEU. சூழ்நிலைக்கு தகுந்த யாதார்த்தமான வண்ணத் தெரிவுகளிற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

முதல் ஆல்பத்தில் உள்ள விறுவிறுப்பு, சித்திரங்களின் தரம், விஞ்ஞானம் எனும் பெயரில் தலையைக் கிறுகிறுக்க வைக்காத கதை சொல்லல், வரும் ஆல்பங்களிலும் தொடர்ந்தால் கார்த்தாகோ கதை தொடர் நிச்சயம் வெற்றியடையும்.
ஆல்பத்தின் தரம் *****
நண்பர்களே பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு